‘நிலா பேச்சு’ கவிதை – பாங்கைத் தமிழன்

‘நிலா பேச்சு’ கவிதை – பாங்கைத் தமிழன்




கர்வப்பட வேண்டாம்;
ஆம்ஸ்ட்ராங்கை
அனுப்பி வைத்த
அமெரிக்காவே!
மனிதன்
காலடி பட்டவுடன்
என்
பொன்னிற மேனியை
மண்ணிறமாக
ஏன் மாற்றிக்கொண்டேன்
தெரியுமா?
ஆசையுள்ள மனித இனம்
என் பொன்னிற மேனியை
புரட்டிக்கொண்டு
இந்நேரம் பூமிக்கு
வந்திருக்கும் அல்லவா?
அம்புலி என்னைக் காட்டி
அன்னையர்
தம் குழந்தைகளுக்கு
சோறூட்டாமல்
எத்தனை குழந்தைகள்
ஏங்கி அழுதிருக்கும்?
குழந்தைகள் குதூகலிக்க
வடை சுடும்
பாட்டியைக்கூட
மறைத்து வைத்துக் கொண்டேனே!
இப்போது….
அண்ணாந்து பார்,
மனிதக் காலடி பட்டு
என்ன மாற்றம் கண்டீர் என்னில்?
குழந்தைகளை
வளர விடுங்கள்;
ஆனந்தமாக!

பாங்கைத் தமிழன்

இரா.கலையரசியின் கவிதைகள்

இரா.கலையரசியின் கவிதைகள்




எட்டிப் பார்க்கிறது
***********************
வெந்து போன
உடலின் சதைகளில்
ரத்தம் வழிகிறது.
அழகிய கருவிழிகள்
குழைந்த சேறாய்
நட்டுக் கொண்டிருக்கிறது.
கருங்கூந்தல் கருகி
மொட்டைத் தலைக்கு
வழி விடுகிறது.
உருகிய ரப்பர்
வளையல்கள்
கைகளைக் கிழித்து
எலும்புகளை உரசுகிறது.
குவிந்த வயிறு
தணலாய்த் தகிக்கிறது.
குவளைக் கண்கள்
ஒளியைச் சிந்தியபடி
பட்டாம்பூச்சி வருடலுடன்
உலகை எட்டிப் பார்க்கிறது
அவள் “குழந்தை.”

வரிக்கி
**********
வறண்ட நிலத்துப் பிரதேசமாக
இறுகிப் போய்த்தான்
இருக்கிறாய்.
காலத்தின் கொடுமைகளை
மெல்ல மனதில் தேக்கி
சிறு துளைகளாக
வடுக்களை சேமித்து
வைத்து இருக்கிறாய்.
கடுகடுத்த உன் மேல்
காதல் பெருகியது.
சூடான குளம்பியை
துணைக்கு அழைக்கிறேன்.!
மெல்ல இதமான, நீ
தாங்கும் சூட்டில் உன்னை மூழ்கடிக்கிறேன்.!
கரைந்த உப்பாய்
மெதுவடைக்குப் போட்டியாய் இளகுகிறாய்.
உன்னை என்னுள்
கரைத்துக் கொள்கிறேன்.
நாவில் பதிந்து இதயத்தில்
சிம்மாசனம் போட்டுக்
கொள்கிறாய்.

இரா.கலையரசி.

ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி

ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி




1
உணவைத் தேடி அலையும் பொழுது இல்லை, மனிதர்களையும்
நல்ல மனங்களையும் தேடி அலையும் கடின வேளைகளில்….

2
சக்திமிகுந்த தெய்வமென
கோவிலின் கற்பக்கிரகத்தைப்
பார்த்து கையெடுத்து
வணங்கிய குழுந்தைக்கு
அன்னையை விட
ரொம்ப அழகாக தெரிந்துவிடவில்லை
இருளில்
சிலையாக அமர்ந்த
அம்மனின் அமர்வு…

3
வீட்டில் அமர்ந்தபடியே
கொட்டும் மழையில்
நனைய விரும்பினேன்
அவசர அவசரமாக
மழையைப் பற்றி கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன்…..

4
கழுத்தணைத்து
தலை கோதி
இடையமர்ந்து
தோளேற்றி
அப்படியே
துயில் கொள்ளும்
தேவதையைத்தான்
மகளென்பார்களோ
தாயுமகளென்பார்களோ
தத்தக்கா புத்தக்கா
தடுக்கல்களில்
இதோ
தேடலில் ஓர்
பட்டாம்பூச்சி…

5
பதப்படுத்தப்பட்ட
மண்ணின் ஆசைதான்
பழங்கள் குலுங்கும்
விதையை எச்சமிடச் செய்தது…
சரியாகத்தான்
அமர்ந்துவிட்டான் புத்தன்
ஆசை இல்லையென
ஞானத்தை வழங்கத் தயாராக
இந்த இலையுதிர்க்கும்
போதிமரங்களின் நிழலில்….

6
பிறப்பைப் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
காது கிழிய கூக்குரலிடுகிறது
நேற்று வீசிய மா விதையின் அருகே குழந்தை

7
காலங்களுக்குப் பின்னே
கடிவாளங்களும் உள்ளன
கரைகின்ற நொடிகளுக்கு
யாராலும் பூட்டிட இயலாது
அவசரமாக
உணவு தேடியும்
இணைதேடியும்
செல்கின்ற அணிலுக்கு
அகல விரிந்து
காத்திருக்கின்றன
காலக்கண்கள்……!

8
சாயங்களை பூசிக்கொள்கிறேன்
முகமூடி வழங்குகிறது
குழந்தை
முகமுடி அணிந்து கொண்டேன்
புன்னகைக்கச் சொல்கிறது
வாழ்க்கை
பயணிக்கத்தொடர்கிறேன்
சாயங்களின் வடிவில்
ஓர் கற்றை நூலால் கட்டிய பாதைகளில்……

9
செருப்பு தைக்கும் தொழிலாளி
ஒருபோதும்
நிமிர்ந்து பார்த்ததில்லை
உயரமெனப்படுபவை அனைத்தும்
இவன் காலடியிலே
கிடக்கின்றன என்பதால்….

10
ஒரு போதும்
உனக்கு பிடித்ததை மறைத்து வைக்காதே
பட்டாம்பூச்சிகள்
பூவிற்கு பிடித்தமாதிரியும்
தேனை
உண்டு மகிழும்…

11
நடனமாடிய பின்பு
காலில் வலியையும்
கைத்தட்டல்களில் ஏற்பட்ட குறையையும்
வெற்றி ஒருபோதும் பார்த்ததில்லை
புன்னைகைக்கு வெற்றி தானே புன்னகையால் மகுடம் சூடும்…..

12
சிறகு
சிறியதோ
பெரியதோ
ஆசைகளைக் கற்றைகளாக
கொண்ட நேரத்தில்
தானாகவே முளைத்துவிடுகிறது
காற்றே இல்லாத இடத்தில்
பறவையாய் மனங்கள்
என்ன
கால்களும் கைகளும.
கூடுதலாக முளைத்துவிடுகின்றன….

13
எட்டாம் வகுப்பில்
புட்டங்களில் ஒட்டுகள் போட்ட கால்சட்டையுடன்

கை உயர்த்தி வணக்கங்கள் செய்கிறேன்
ஒட்டிய வண்ணங்களை கண்டு கொள்ளாமலே
பறக்கிறது
எல்லோர் மத்தியிலும் சுதந்திரக் கொடி

கவிஞர் சே கார்கவி
நாகப்பட்டினம்
(Er.Prof.சே கார்த்திகேயன்.ME)
SWD.Chennai

மாற்றம் கவிதை- சக்தி ராணி

மாற்றம் கவிதை- சக்தி ராணி




மறைவாய் நின்றே…
எட்டிப்பார்க்கும் குழந்தையின்
ஏக்கம்…புரிவதில்லை…
கற்பனையும்…எதிர்பார்ப்பும்
கலந்த வாழ்வில்… ஏமாற்றம்
சந்திக்கும் தினசரி வாடிக்கையாளர்…
நான் என்றே…

கடைவீதியில்…வானுயர்ந்த கட்டிடம்…
குளிரூட்டப்பட்ட…அறைகளூடே
நகரும் படிக்கட்டுடைய…நிலையில்

நம் வாழ்க்கை இங்கே..
நகரப்போவதில்லை என்றே…பார்வையில்
பதில்கள் சொன்னாலும்..

பசிக்கும் பசிக்கு…விடை தெரியாமலும்
வியாபாரம் இல்லா வாழ்வில்…தன்
வாழ்க்கையை வியாபாரமாக்கி…அமர்ந்திருந்தே

விற்பனையாகும்… ஒன்றிரண்டு
ஆடைகளில்…ஒட்டாமல் எட்டிப் பார்க்கிறது
என்…வறுமை…

சாலையோரம் கடந்து செல்பவர்களும்…
சாலையிலே வாழ்வை நகர்த்துபவர்களையும்…அன்றாடம்
பார்க்கிறேன்…இயலா வாழ்வில்…
இயன்றதை செய்தே…
வாழ்வு நடத்தும் அருமையை…

நீளா பாதையில்…நீண்ட எண்ணங்களோடு
பயணிக்கிறேன்…மேற்பார்வை பார்க்கும்
கண்கள்… கொஞ்சம் கீழ் வசிக்கும்
எங்களையும் பார்த்து செல்லுங்கள்…

எங்கள் ஏக்கங்கள்…தீராத தீயாய்…
தொடர்ந்தாலும்… தீர்க்கும் மருந்தாய்…
இளைப்பாற வையுங்கள்…இன்றியே
ஏக்கம் குறைக்க ஏற்றி வையுங்கள்…
வளமை வாழ்வை கண்ணாரக்காண…

– சக்தி ராணி

பிச்சுமணியின் கவிதைகள்

பிச்சுமணியின் கவிதைகள்




குழந்தை மனசென்பது
வேறொன்றுமில்லை
தான் விரும்பிய
எல்லாவற்றிற்கும்
உயிர் தருவதுதான்.
—-
உதிரும் இலைகள்
காற்றின் மீது கோபப்படுவதே
இல்லை..
அது அழைக்கும் இடங்களுங்கெல்லாம்
கூடவே செல்கின்றன.
—-
மொழியின் எழுத்துக்களை
முதன் முதலில் அறியும்
குழந்தையிடம்
“பார்க்காமல் எழுது” என்றால்
கண்களை மூடிக் கொண்டு எழுதுவது
இலக்கணப் பிழை இல்லைதானே.‌.

– பிச்சுமணி

நூல் அறிமுகம்: விளாதீமிர் கொரலேன்கோவின் ”கண் தெரியாத இசைஞன்” தமிழில்: ரா.கிருஷ்ணையா – சுதா

நூல் அறிமுகம்: விளாதீமிர் கொரலேன்கோவின் ”கண் தெரியாத இசைஞன்” தமிழில்: ரா.கிருஷ்ணையா – சுதா




நூல் : கண் தெரியாத இசைஞன் சுதா
ஆசிரியர் : விளாதீமிர் கொரலேன்கோ தமிழில்: ரா.கிருஷ்ணையா
விலை : ரூ. ₹240/-
பக்கங்கள் : 270

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

எந்தக் குறையும் இல்லாத மனிதன் குறையுள்ள மனிதர்களைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. அவர்களின் உலகத்தினுள் எண்ணற்ற இருள்களும் அமைதியும் இருப்பதை நாம் எள்ளளவும் நினைத்துப் பார்ப்பதில்லை.

ஒரு பணக்கார வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அது அழும் சத்தத்திலே தாய் கண்டு கொள்கிறாள் குழந்தைக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று. தாயிடமும் மருத்துவரிடமும் விசாரித்த போது அப்படி எந்த பிரச்சனையும் குழந்தைக்கு இல்லை என்றே சொன்னார்கள் இருந்தும். குழந்தையின் தாய்க்கு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே வரும் சூரிய கதிர்கள் குழந்தையின் கண்களை எட்டுவதில்லை. ஜன்னல் ஓரத்தில் இருந்த புங்க மரத்தின் இலை அசைவுகள் குழந்தையின் கருவிழியை சட்டை செய்யவில்லை. மீண்டும் அந்த குழந்தையின் தாய்க்கு சந்தேகம் எழுந்தது. அக்கம்பக்கத்து அனுபவசாலியிடமும் மருத்துவரிடமும் மீண்டும் ஓடினாள். சில ஆய்வுகளுக்கு பின்னே தெரிந்தது அந்த குழந்தைக்கு கண் தெரியாது என்று.

இந்த செய்தி ஒரு தாயின் மனதிற்கு எத்தனை காயங்களை ஏற்படுத்தும் என்பது நாம் கொஞ்சம் அனுமானம் பண்ணிக் கொள்ள இயலும். ஆனால் எந்த நிலையிலும் இருந்து நாம் அடுத்த நிலையை தானே யோசிக்க வேண்டும். அந்தக் குழந்தையின் அடுத்த நிலை என்னவாக இருக்கும். சிறு சிறு சத்தங்கள் கூட அந்த குழந்தையை மிரளச் செய்கிறது. நாம் இசை என நினைக்கும் சில சப்தங்கள் அந்த குழந்தைக்கு அமானுஷ்யமாக தெரிகிறது. அலையின் ஓசை அருவியின் சத்தம் குயிலின் பாடல் சருகுகளின் ஓசை என அனைத்துமே இந்த குழந்தைக்கு அமானுஷ்யமாக தான் இருக்கிறது. உலகம் அன்னியப்பட்டு இருப்பதை அந்தக் குழந்தையின் முகம் அப்பட்டமாக விளக்குகிறது.

இந்த குழந்தை தன்னிச்சையாக எப்படி செயல்படும். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் யாரோ ஒருவரை சார்ந்து இருக்க முடியுமா. இவற்றை நினைத்து அழுது புலம்பி தான் என்ன ஆகப்போகிறது. அடுத்த அடியை எடுத்து வைக்கிறாள் அந்த குழந்தையின் தாய். ஒவ்வொரு ஓசையையும் அறிமுகம் செய்கிறாள். தாயின் காலடி சத்தம் தந்தையின் காலடி சத்தம் தனது மாமாவின் காலடி சத்தம் என அனைத்தையும் அந்த குழந்தை அனுமானிக்க கற்றுக்கொண்டது. செவியே ஒலியும் ஒளியாகவும் மாறியதால் அவன் பார்வை அனைத்தும் ஓசைகள் மட்டுமே.

அவன் பாதையில் வந்து சென்ற மனிதர்கள் யார் யார் அவர்களால் இந்த குழந்தை கற்றுக்கொண்டது என்னென்ன… இது அத்தனையும் அலுப்புத் தட்டாமல் நம்மை அடுத்தடுத்த நகர்வுக்கு கொண்டு செல்கிறது இந்த புத்தகம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை ஒரு துளி நாம் அறிந்துகொள்ள இந்த புத்தகம் பேருதவி செய்யும்.

பல நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் நமது உலகத்துக்குள் இருப்பதில்லை அவர்களும் நம்மோடு பயணிப்பவர்கள் இந்த உலகுக்கு சொந்தக்காரர்கள் என்பதை நினைவுபடுத்தி சொல்கிறது இந்தப் புத்தகம்.

– சுதா

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்




குழந்தை கைக்கு
அகப்படாமல்
விளையாடுகின்றன ஈக்கள்!

*********

பௌர்ணமி நாளில்
கடற்கரை மணலில்
தவமிருக்கும் படகு

********

நிழலாக படகுகள்
கடலலை மேலே
நிலவின் ஒளியில்!

********

கதை சொல்கிறது
பழைய வீட்டு திண்ணை
அம்மா இல்லை!

********

கிணற்றடியில்
கதை பேசும்
சிட்டுக்குருவிகள்!

********

தூளியில் ஆடும்
பிள்ளைச் சத்தம்
அம்மாவின் சீலை!

*******
சக்கரமில்லா நடைவண்டி
பரணில் இருக்கிறது
பழைய வீட்டில்!
********
சிட்டுக்குருவி கிரீச்சிட்டது
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு!
கவிதா பிருத்வி
தஞ்சை

விரலின் தடயம்….!!!! கவிதை – சக்தி

விரலின் தடயம்….!!!! கவிதை – சக்தி




ரேகைகள்
கிழிந்த விரல்களால்
சோற்றைக் குழைத்து
குழைத்த சோற்றை
உருண்டை பிடித்துக்
குழந்தைக்கு
சோற்றை
ஊட்டிக்கொண்டிருக்கிறார் அப்பா

வாய் நீட்ட
வாங்கிய குழந்தையின்
தொண்டைக் குழியில்
அடைப்பட்டு நிற்கிறது ஒரு உருண்டை சோறு
நேற்று
இரவெல்லாம்
சேற்றையும் தன் வியர்வையும்
ஒன்றாக பிசைந்து சூளையில்
செங்கல் அறுத்த
அப்பாவின்
தேய்ந்த விரல்களில்
ஒரு விரலின்
முள்ளாகிய தடயம் ,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

மனிதம் த(பி)ழைக்குமா? கவிதை – மரு உடலியங்கியல் பாலா

மனிதம் த(பி)ழைக்குமா? கவிதை – மரு உடலியங்கியல் பாலா




சாலையில் விழுந்தோரை
சட்டென தூக்கும் கரங்கள்!

கைவிடப்பட்ட முதியோருக்குக்
கைகொடுக்கும் இளைஞர்கள்!

வாலைக் குழைத்துவரும் நாய்க்கு
வாங்கிக்கொடுக்கும் டீ பன்!

சில்லரைக்காக இறக்கபடுவோர்க்கு
சில்லரைகொடுத்து இரக்கபடுவோர்!

கர்ப்பிணியின் கடுஞ்சுமைதூக்கும்
கண்ணியமாய் உடுத்தும் யுவதிகள்!

மனநலம் குன்றிய “பைத்தியம்”மீது
குணநலம் கொண்டு உதவுமீகை !

அனாதை குழந்தை தத்தெடுத்து
ஆதரவுக்கரம் நீட்டும் அறவோர் !

மானுடம் தழைக்க,
தன்னுயிர் போன்று
மன்னுயிர் காக்கிற
படமாடும் கோவில் நிகர்த்த..
நடமாடும் கோவிலாம்
மானுடர் போற்றி போற்றி!

– மரு உடலியங்கியல் பாலா