பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள். பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் – 26ஆவது செய்திக் கடிதம் (2022)
விஜய் பிரசாத்

சலௌவா ரௌடா சௌகேர் (லெபனான்), கோரஸ், 1948
அன்பு நண்பர்களே,
ட்ரைகாண்டினண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனத்திலிருந்து வாழ்த்துகள்.
ஐ.நா.சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதி (UNICEF)யானது, உலகளாவிய உணவு நெருக்கடியால் கிழித்தெறியப்பட்டுள்ள பதினைந்து நாடுகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை பட்டினியில் தள்ளப்படுவதாகக் கூறுகிறது. இந்தப் பதினைந்து நாடுகளில் பன்னிரண்டு நாடுகள் ஆப்பிரிக்காவில் (பர்கினோ ஃபாசோவிலிருந்து சூடான் வரை) உள்ளன, ஒன்று கரீபியனில் (ஹைதி) உள்ளது, இரண்டு ஆசியாவில் (ஆஃப்கானிஸ்தானும், ஏமனும்) உள்ளன. முடிவே இல்லாத போர்கள் இந்த நாடுகளிலுள்ள அரசு நிறுவனங்களை உயர்ந்து வரும் கடன், வேலையின்மை நெருக்கடிகள், பணவீக்கம், வறுமை ஆகிய நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளன. அதில் தற்போது ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியைச் சேர்ந்த இரண்டு நாடுகள் (குறிப்பாக மாலியும், நைகரும்) சேர்கின்றன. அங்கு பட்டினியின் நிலைமை ஏறத்தாழ கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டது. இந்த நிலைமை போதாதென்றோ என்னவோ, கடந்த வாரம் ஆஃப்கானிஸ்தானை ஒரு பூகம்பம் தாக்கி, ஆயிரம் மக்களுக்கு மேல் கொன்று விட்டது. இது ஏற்கனவே 93% மக்கள் பட்டினியில் வீழ்ந்து விட்ட நிலையில் இன்னொரு அடி.
நெருக்கடியால் தாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளில் அரசுகள் மற்றும் ஐ.நா. உலக உணவுத் திட்டத்திலிருந்து உணவு உதவி வரும். இந்த நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் ஐ.நா. அமைப்புகளிலிருந்து வரும் உதவியை நம்பியே இருக்கிறார்கள். உலக உணவுத் திட்டமானது உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய உணவை வழங்கும். அது எண்ணை, நிலக்கடலை, பால் பவுடர், சர்க்கரை, தாவர எண்ணை, வைட்டமின்கள் அடங்கியது. அடுத்த ஆறு மாதங்களில் இவற்றின் விலைவாசி 16% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஜூன் 20 அன்று, தனது ரேஷனை 50% குறைக்கப் போவதாக அறிவித்தது. இந்த ரேஷன் குறைப்பானது, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நான்கு அகதிகளில் மூவரை பாதிக்கும். அங்கு சுமார் 50 லட்சம் அகதிகள் வசிக்கிறார்கள். ”குழந்தைகளை வீணடிக்கும் தீவிர நிலைமைகள் தீப்பற்றும் நிலைமை இருப்பதை இப்போது நாங்கள் காண்கிறோம்” என்கிறார் யூனிசெஃப்பின் செயல் இயக்குனர் கேதரின் ரசல்.

ஊசோ இகோனு (நைஜீரியா), நாடற்ற மக்கள், ஒரு கூட்டம், 1982
உணவுப் பொருள் விலையேற்றம் பட்டினி கிடப்போரின் அதிகரிப்புடன் தொடர்புடையது என்பது தெளிவு. இது உக்ரைன் மோதலால் மேலும் அதிகரித்துள்ளது. பார்லி, சோளம், பலாப்பழம், சூரியகாந்தி விதை, சூரியகாந்தி எண்ணை, கோதுமை, உரம் ஆகியவற்றை மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் ரஷ்யாவும், உக்ரைனும் ஆகும். உலக அளவில் உணவுப் பொருள் விலையில் போர் பேரழிவை உண்டாக்கியுள்ளது என்றாலும், அதுதான் விலையேற்றத்துக்குக் காரணம் என்று பார்ப்பது தவறானது. உலக உணவுப் பொருள் விலையேற்றமானது இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. 2021 இல் அது கீழ்க்கண்டவை உட்படப் பல காரணங்களால் கைமீறிச் சென்றது:
1) பெருந்தொற்றுக் காலத்தில், நாடுகளுக்குள்ளும், அவற்றின் எல்லைகளிலும் இருந்த கடுமையான ஊரடங்குகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நகர்வுக்குக் கடுமையான தடைகளை ஏற்படுத்தின. இப்போது அகதிகள், அடைக்கலம் கேட்டு வருவோர் உள்ளிட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவசாய உற்பத்தியில் முக்கியமான பங்கை வகிக்கிறார்கள். அகதிகளுக்கு எதிரான மனப்பான்மையும், ஊரடங்குகளும் நீண்ட காலப் பிரச்சனையை பெரும் பண்ணைகளில் ஏற்படுத்தி விட்டன.
2) கோவிட் 19 பெருந்தொற்றின் விளைவாக விநியோகச் சங்கிலி உடைந்து விட்டது. உலக உற்பத்தியில் பெரும் அளவின் மையமான சீனா பூஜ்யத் தொற்றுக் கொள்கையைக் கடைப்பிடித்ததால், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் தொடர் பிரச்சனையை உருவாக்கியது. துறைமுகங்கள் மூடப்பட்டு, மாதக்கணக்கில் கப்பல்கள் கடலிலேயே இருந்தன. சர்வதேச கப்பல் போக்குவரத்தும், உரம், உணவு உள்ளிட்ட தொழில் உற்பத்தி சாதாரண நிலைக்கு வருவது மிகவும் மந்தமாக நடந்தது. உணவு விநியோகச் சங்கிலியானது ஏற்பாட்டுப் பிரச்சனையாலும், உணவு பதப்படுத்தும் இடங்களில் ஊழியர்கள் குறைவாகக் கிடைத்ததாலும் மோசமானது.
3) உணவு முறையில் தீவிரமான காலநிலைகள் பெரிய பங்கை வகித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், வறட்சி, வெள்ளம், கடுமையான புயல் ஆகியவற்றால் 80லிருந்து 90% இயற்கைப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தப் பூமியானது ஒவ்வொரு ஆண்டும், வறட்சியாலும், பாலைவனமாதலாலும் ஒரு கோடியே இருபது லட்சம் நன்செய் நிலத்தை இழந்துள்ளது; இந்தக் காலத்தில் நில அரிப்பாலும், மாசுபாட்டாலும் நாம் மூன்றில் ஒரு பங்கு விவசாய நிலத்தை இழந்துள்ளோம்.
4) கடந்த நாற்பது ஆண்டுகளில், உலக அசைவ உணவு நுகர்வு (பெரும்பாலும் கோழி) நாடக பாணியில் அதிகரித்தது. ‘உச்சகட்ட இறைச்சி நுகர்வை’ எட்டி விட்டோம் என்று சில அறிகுறிகள் காட்டினாலும், அது தொடர்ந்து உயர்கிறது. மிகப்பெரும் சுற்றுச்சூழல் தாக்கத்தை இறைச்சி உற்பத்தி உருவாக்குகிறது: விவசாயத்தின் மொத்த வெளிப்பாட்டில் 57% இறைச்சியிலிருந்து வருகிறது. (உலக கலோரி விநியோகத்தில் இறைச்சி வெறும் 18%ஐயே வழங்கினாலும்) பூமியின் விவசாய நிலத்தில் 77%த்தை கால்நடை உற்பத்தி எடுத்துக் கொள்கிறது.

யோலண்டா வால்டிஸ் ரெமெண்டெரியா (மெக்சிகோ) (பன்முகத்தன்மை), 2009
உலக உணவுச் சந்தையானது உக்ரைன் மோதலுக்கு முன்பாகவே நெருக்கடியில் இருந்தது. நோய்த்தொற்றுக் காலத்தில் விலைவாசியானது பல நாடுகள் முன்பு பாத்திராத அளவுக்கு உயர்ந்தது. எனினும், போரானது ஏற்கனவே பலவீனப்பட்டுப் போன இந்த உணவு முறையை ஏறத்தாழ நொறுக்கி விட்டது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க பிரச்சனை உலக உரச் சந்தை. அது பெருந்தொற்றுக் காலத்தில் மீட்சியில் இருந்தது, ஆனால் இப்போது நெருக்கடியில் உள்ளது: ரஷ்யாவும் உக்ரைனும் நைட்ரஜன், பாஸ்பரஸ் உரங்களில் 28%த்தையும், உலக ஏற்றுமதியில் பொட்டாஷில் 40%
ஏற்றுமதி செய்கின்றன. மேலும் ரஷ்யா உலக அம்மோனியம் நைட்ரேட்டில் 48%ஐயும், உலக யூரியாவில் 11%ஐயும் ஏற்றுமதி செய்கிறது. விவசயிகளும், விவசாய நிறுவனங்களும் உயிரியல் உரத்துக்கு மாற விரும்பினால் தவிர, விவசாய நிபுணர்கள் உரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்தால் மகசூல் கடுமையாகக் குறையும். உணவுச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், பல நாடுகள் தமது ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை வித்து விட்டன. இது உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத நாடுகளில் உணவு நெருக்கடியை மேலும் அதிகரித்து விட்டது.
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது குறித்து நிறைய உரையாடினாலும், செயல்பாடு பெரிய அளவில் இல்லை என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலகில் 141 நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இருக்காது எனவும், உலகில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கும் 15.6 பில்லியன் மக்களில் 9.8 பில்லியன் மக்களுக்குத் தேவையான சத்துணவு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. உலக நாடுகளில் 14%தான் தன்னிறைவுடன் இருக்கும். ரஷ்யா, தாய்லாந்து, கிழக்கு ஐரோப்பா அகியவை உலகின் தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும். இத்தகைய இருண்ட முன்கணிப்பானது, நாம் உலக உணவு முறையை விரைவாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது; ட்ரைகாண்டினண்டல் வெளியிட்டுள்ள ‘பூமியைக் காக்க ஒரு திட்டம்’ என்ற கட்டுரையில் தேவையான கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சுருக்கமாக, ஐநாவின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடிரெஸ் உக்ரைன் மோதலும், ரஷ்யாவுக்கெதிரான தடைகளும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு உலகச் சந்தையில் உணவு, உரத்தின் முக்கிய உற்பத்தியாளர்களான அந்நாடுகள் உற்பத்தியைத் தொடங்க வேண்டுமென்று தெளிவுபடுத்தியுள்ளார்.

உணவு மற்றும் சத்துணவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு (ரெடே பென்சான்) பற்றிய பிரேசிலிய ஆய்வு வலைப்பின்னல் சமீபத்தில் நடத்திய ஆய்வானது, 60% பிரேசிலியக் குடும்பங்களிடம் தேவையான உணவு இல்லை என்பதை கவலையுடன் பதிவு செய்துள்ளது. 2 கோடி 12 லட்சம் மக்கட்தொகை கொண்ட நாட்டில் உண்ண எதுவுமில்லாதவர்களின் எண்ணிக்கை 2020க்குப் பின் 1.9 லட்சத்திலிருந்து 33.1 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு தேர்ந்தெடுத்த பொருளாதாரக் கொள்கைகளும், பெருந்தொற்றை மிக மோசமாகக் கையாண்டதும் நம் நாட்டில் இன்னும் அதிகமாக அவப்பெயருடன் கூடிய சமத்துவமின்மைக்கு இட்டுச் சென்றது’ என ரெடே பென்சானின் ஒரு மருத்துவப் பெருந்தொற்று நிபுணரான ஆனா மரியா செகால் கூறுகிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.நா.வானது பட்டினியையும், வறுமையையும் நாடக பாணியில் குறைத்த பிரேசிலின் ஃபோம் ஜீரோவையும், போல்சா ஃபாமிலியா திட்டங்களையும் ஆதரித்தது. முன்னாள் அதிபர்கள் லூலா டி சில்வா
(2003-10), டில்மா ரூசூஃப் (2011-16) ஆகியோரின் தலைமையில் பிரேசில் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து மிக்கேல் டெமர் (2016-18), ஜேர் பொல்சொனாரோ (2019 முதல் இப்போது வரை) ஆகியோரின் ஆட்சியில் கிடைத்த பலன்கள் இழக்கப்பட்டு பிரேசில் பழைய பட்டினி நிலைக்குப் பின்னடைவைச் சந்தித்து விட்டது. கவிஞரும், பாடகருமான சொலானோ ட்ரிண்டாட் பாடுகிறார், ‘டெம் ஜெண்டே காம் ஃபோமே” (பட்டினியுடன் மக்கள் இருக்கிறார்கள்)
பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்
பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்
பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்…
பட்டினியுடன் மக்கள் இருந்தால்
உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்
பட்டினியுடன் மக்கள் இருந்தால்
உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்
பட்டினியுடன் மக்கள் இருந்தால்
உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்
அன்புடன்
விஜய்
தமிழில்: கி.ரமேஷ்