பரவசமூட்டும் பறவை வாழ்வியல் – என். மாதவன்
வானவாசிகள் (பறக்கும் நுட்பம் குறித்த அறிவியல் பார்வை)
முனைவர் பெ. சசிக்குமார்
பாரதி புத்தகாலயம்
விலை: ₹120.00
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/
வேடந்தாங்கலுக்குப் பலமுறை செல்லும் வாய்ப்பைப் பெற்றவன் நான். அந்த ஏரியிலிருந்து அங்கிருக்கும் மரங்களிலெல்லாம் ஒரு போர்வை போர்த்தியது போன்ற நெருக்கமாகப் பறவைகள் அமர்ந்திருக்கும். அருமையான அந்தப் பறவைகளுக்கு அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் என நாம் வைத்திருக்கும் கரடுமுரடான பெயர்களைப் பார்க்கப் பார்க்க பரிதாபமே மிஞ்சும். காலை நேரங்களில் உணவுக்காக அவை புறப்படும் நேரமாகட்டும், மாலை நேரங்களில் அவை திரும்பும் நேரமாகட்டும் எப்போதும் ஒரே மாதிரியான பரவசத்தை அவற்றிடம் காணமுடியும். இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனநிலையை,சமூக வாழ்க்கையை,கூட்டுறவு மனப்பான்மையை அவைகள் கற்பித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம்தான் கற்பிக்கவே பிறந்தவர்கள் என்ற மனநிலையோடு வாழ்ந்து மடிகிறோம்.
கதைகளில் மட்டும் பறவைகளைச் சிலாகித்துப் பேச நாம் தயங்கியதே இல்லை. கூட்டுறவுக்கும், ஒற்றுமைக்கும் சின்னமாகப் பஞ்சதந்திர கதைகளில் பறவைகள் பல இடங்களில் பாராட்டப்பட்டிருக்கின்றன. சித்திரகிரீவன் கதையில் தலைவன் சொல் கேளாமல் இன்னலுக்கு ஆளாகும் பறவைகள் மீண்டும் தலைவன் சொல் கேட்டு உயிர்பிழைக்கும். ஆனால் நம்மில் பலரும் எந்தத் தலைவன் சொல்வதையும் கேட்கமாட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தானே.
பறவைகள் எப்போதாவது உணவுக்காகச் சண்டையிட்டுப் பார்த்திருக்கிறோமா? வீடுகளில் வளர்க்கப்படும் கோழி,சேவல்,வாத்து போன்றவையும் வீடுகளை அண்டிவாழும் காகம்,குருவி,மைனா போன்றவையும் உணவுக்கான சண்டையின்றித் தத்தம் உணவை எவ்வளவு நேர்த்தியாகக் கண்டு உண்டு மகிழ்கின்றன. சமூக வாழ்வில் கூட்டுறவின் அவசியத்தை இதனைவிட வேறு எவ்வாறு விளக்கிவிடமுடியும். ஊருக்கு ஒதுக்குப் புறங்களில் பெரும் மரங்களில் வாழும் பறவைகளை உற்றுநோக்குவோம். காலை எழுந்தவுடன் கூடுகளைவிட்டு பறந்து எங்கெங்கோ சென்று கிடைக்கும் இரையினைத் தின்று திரும்புகின்றன. காலையில் அது செல்வதும்,மாலையில் திரும்புவதும் எத்தனை அழகானது. கிராமங்களில் நடைபயிற்சி செய்யும்போது வானின் குறுக்காக அவைகள் பறக்கும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
தேவையான காலங்களில் இறக்கைகளை உதிர்த்து வெப்பத்தைக் குறைத்துக்கொள்ளவும் அவைகளுக்குத் தெரியும். இறக்கைகளின் மூலம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவைகளுக்குத் தெரியும். நாம்தான் குளிருக்கேற்ற ஆடை,கோடைக்கேற்ற குளிர்பதனம் என இயற்கையிலிருந்து எவ்வளவு விலக இயலுமோ அவ்வளவு தூரம் விலகி சூழலுக்கு மாசு சேர்க்கிறோம்.
தமது கூடுகளை அவை அமைக்க அவை எடுக்கும் முன்முயற்சிகளைப் பாருங்கள். ஒரு பொறியாளர் தோற்றுவிடுவார். குறைவான வெளிச்சம், நிறைவான காற்று. மனிதர்களால் தொந்தரவின்மை போன்றவற்றை மதிப்பீடு செய்கின்றன. பின்னர்க் கிடைக்கின்ற நார், குச்சி, பஞ்சு போன்றபொருட்களைக் கொண்டு நேர்த்தியான கூடுகளைக் கட்டுகின்றன. பின்னர் அதில் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொறிக்கின்றன. பின் அவற்றிற்கு உணவூட்டி அவை பறக்கும் வரை உடனிருந்துவிட்டு நீ யாரோ நான் யாரோ எனப் பிரிகின்றன. ஒரு ஆதார் கார்டோ, குடும்ப அட்டையோ நமக்குத் தான் தேவை. கடவு சீட்டில்லாமல், விசா இல்லாமல் கண்டம் தாண்டும் சாதுக்கள் அவை. அவைகள் எளிமையின் சிகரங்கள்.
புதிய ஏற்பாடும் இதனாலேயே பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை எனச் சிலாகிக்கின்றது. விதைக்காமல் அறுக்காமல் சாப்பிடுவது மட்டும் சரியா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவைகள் தானியங்களை மட்டும் சாப்பிடுவதில்லை. தானியங்களை உண்ணும் பூச்சி புழுக்களையும் உண்டு, உணவுச் சங்கிலியினைப் பராமரிக்கின்றன.
பறவைகளை அழித்துவிட்டு வெட்டுக்கிளிகளால் சேதப்பட்ட தேசங்களின் உதாரணங்கள் வரலாறு நெடுகிலும் உண்டு. கடந்த ஆண்டு ராஜஸ்தான் போன்ற வடமேற்கு மாநிலங்கள் பட்ட இன்னல்களை அவ்வளவு விரைவில் மறக்கமுடியுமா என்ன? பூச்சிகொல்லி தெளிப்பால் ஏற்படும் இரசாயன மாற்றங்களால், முட்டை ஒடுகள் மெலிதாகி முட்டை குஞ்சாகப் பொரியாமலேயே அழியும் உதாரணங்களும் உண்டு.
உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளை இவ்வளவு எளிமையாக நிறைவு செய்துகொள்ளும் வாழ்வியல் கல்வி அவை பெற்றுள்ளன. அவற்றின் மொழி நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் அவைகள் ஒன்றோடு ஒன்று பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுதான் இருக்கின்றன. உணவு கிடைத்தவுடன் காகம் கரையத் தொடங்கி அழைப்பது இதற்கான உதாரணம். நிசப்தமான நேரத்தில் சட்டெனத் தோன்றும் ஒலியைக் கேட்டு அவைகள் புறப்படும்போது அவை எழுப்பும் ஒலிக்கும், இயல்பான மாலைநேர இளைப்பாறலில் அவை வெளிப்படுத்தும் ஓசையயும் ஆய்ந்து பாருங்கள். அவற்றின் மொழி நாம் அறியாமலிருப்பதன் சோகம் விளங்கும்.
இப்படிப்பட்ட பறவைகளின் வாழ்வியல் அறிவியலைப் புரிந்துகொள்வது எவ்வளவு அவசியமானது. இந்நூலின் நோக்கமே அதுதான். பறவைகள் எத்தனை விதங்களில் காணப்படுகின்றன, அவற்றின் இறகுகளிடையே காணப்படும் வேற்றுமைகள்,அவை எவ்வாறு பறக்கின்றன, பறப்பதற்கு உதவியாக உள்ள அதன் உடலமைப்பு என்ன? கண்டம் விட்டுக் கண்டம் பறப்பதற்கான தேவை அவற்றிற்கு ஏன் உண்டாகிறது, பறவையைக் கண்ட மனிதன் எவ்வாறு விமானம் படைத்தான், விமானத்தின் அறிவியல் பின்னணி என்ன? பறவைகளைப் பற்றிய இப்படியான ஒவ்வொரு கூறுகளும் ஆச்சரியமூட்டுவன.
அவற்றை அறிவியல் பூர்வமாக விளக்க எவ்வளவு உழைப்புத் தேவைப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் சுவைபட எழுதுவது இன்னும் எவ்வளவு சவாலான பணி. இத்தகைய அரிய பணியை நண்பர் சசிக்குமார் செய்துள்ளார். சிறுவர்கள் மேற்கொள்ளும் களப்பயணம் போல இதனை வடிவமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. அறிவியலை புனைவு போலச் சொல்வது மிகவும் சவாலானது. அறிவியலும் தெரிந்திருக்கவேண்டும், படைப்பாற்றலும் வேண்டும், குழந்தைமொழியும் கைவரவேண்டும். இவை அனைத்தும் சசிக்குமாருக்கு வாய்த்திருப்பது சிறப்பே.
திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) பணியாற்றும் இவரது முந்தைய வெளியீடான “விண்வெளி மனிதர்கள்” பரவலான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத் தக்கது. சசிக்குமார் தொடர்ந்து பல வெற்றிகரமான படைப்புகளும் படைத்துப் படைப்புலகில் தொடர்ந்து சிறகடிக்க மனமார வாழ்த்துகிறேன்.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
என்.மாதவன்
ஆசிரியர் குழு உறுப்பினர்,
துளிர் (சிறார் அறிவியல் மாதஇதழ்),
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
புத்தகத்தின் அணிந்துரையில் இருந்து….