கட்டுரை: போதையாக மாறும் கைப்பேசி பயன்பாடு – இல.சுருளிவேல்
சிவஞானம் கவிதைகள்
நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -விஜய் ராஜ். அ
மழலைக் கதைப் பாடல்கள்: ஏமாந்த காக்கா – கே.என்.சுவாமிநாதன்
மயிர்தான் பிரச்சினையா? : நூல் அறிமுகம் – இரா.சண்முகசாமி
Book day
Puthagam Pesuthu
‘மயிர்தான் பிரச்சினையா?’
(கல்விசார் கட்டுரைகள்)
மாதொருபாகன் புத்தகம் உள்ளிட்ட ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கிய பேராசிரியர் பெருமாள்முருகன் (Perumalmurugan) அவர்களின் 2022 டிசம்பரில் முதல் பதிப்பாகவும், 2023 பிப்ரவரியில் இரண்டாம் பதிப்பாகவும் காலச்சுவடு பதிப்பகத்தில் வந்த புத்தகம் தான் ‘மயிர்தான் பிரச்சினையா?’ கல்வி சார்ந்த கட்டுரைகள் கொண்ட நூல்.
இதில் 2009 முதல் 2022 வரை கல்வியில் நிகழ்ந்த முரண்பாடுகளை குறிப்பாக மாணவர்களை கல்வி வியாபாரப் பண்டமாக, சூதாட்டக் கருவியாக வைத்து விளையாடிய விளையாட்டு பொம்மைகளாக குழந்தைகள் ஆட்டுவிக்கப்பட்ட கொடுமையான வரலாற்றைத்தான் நமக்கு கட்டுரைகளாக வழங்கியிருக்கிறார். இதில் ஊடகங்களின் பங்கு மிகுந்து இருப்பதையும் சுட்டிக்காட்டி நம்மை ஊடகங்களை எவ்வாறு மூன்றாவது கண் கொண்டு பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருப்பார்.
அது குழந்தைகளின் முதல் மதிப்பெண்ணாகட்டும், மாநில அளவில் இடம் பிடிப்பதாக இருக்கட்டும், “தம் குழந்தைகளின் புகைப்படங்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களில் வராதா” என்று பெற்றோர்கள் ஏங்குவதாக இருக்கட்டும். இன்னும் இது போன்ற பல மாய்மாலத் தோற்றத்தை திட்டமிட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்கி தனது கல்வித்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான மூலதனக் கருவிகள் தான் குழந்தைகள்.
அதேபோன்று பெற்றோரின் பணம் காய்க்கும் மரங்கள் தான் குழந்தைகள் என்று பொதுப்புத்தியாய் கட்டமைக்கும் நிலையில் தான் இன்றைய கல்வி நிலை இருக்கிறது என்று 2009லேயே நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதி தனியார் கல்வி நிறுவன தொழிற்சாலையில் நடைபெற்ற அவலங்களை புட்டு புட்டு வைத்திருப்பார் 2009லேயே.
இன்று 9,10,11,12 நான்கு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்று வைக்கப்பட்டதற்கு காரணமே மேற்கண்ட நாமக்கல் கோழிப்பண்ணை கல்வி நிறுவனங்களே.
இன்று எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்று ஒன்றிய அரசு புகுத்தியதால் கோழிப்பண்ணை கல்வி நிறுவனங்கள் அடுத்த அடியை அதாவது ‘கோச்சிங் செண்டர்’ என்னும் தொழிற்பண்ணைக்குள் நுழைந்துள்ளார்கள். மாணவர்களுக்கு புதுவிதமான நெருக்கடி. எப்படியிருந்தாலும் குழந்தைகளுக்குத்தான் மனஉளைச்சல். சாமானிய பெற்றோருக்கு பண உளைச்சல். விடிவு அனைவருக்கும் கல்லூரிக்கல்வி வரை பணமில்லாக் கல்வி என்னும் நிலை வரும்போதுதான்.
*’மயிர்தான் பிரச்சினையா?’அடடா இது மிக முக்கியமான கட்டுரை. எல்லாமேதான். ஆனால் இதற்கு நாம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டும்.
“பறவைகள் தம் இனத்தின் சோடியை கவர்வதற்கு பல இறகு விரிக்கும் தந்திரங்களைச் செய்கிறது. மயில் தோகை விரிக்கிறது, இன்னும் பல பறவைகள் கேரள கதகளி நடனம் போல கழுத்தை அந்தத் திருப்பு திருப்பி இணையைக் கவரும். அதுபோன்று சிங்கம் தன் பிடரியை சிலிர்க்கும். பறவை, விலங்குகளுக்கே தமது மயிர்களை கூச்செரியும்போது நாம் மனிதர்கள் தானே நமக்கும் முடி மீது கவனம் இருக்காதா?” என்பது போன்று மிகவும் எதார்த்தமான உரையாடல்களுடன் இக்கட்டுரையை எழுதியிருப்பார். இதில் கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா கலைஞர்கள் வரை தமது முடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அலங்கார சலூன்களில் விளம்பரங்கள் இப்படி போகும் கட்டுரை 1970, 80 வாக்கில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தலை முடியை அலங்காரம் செய்த கலைகளை திரைப்படமாக இன்றும் இருக்கிறதே. அப்படி இருக்கும்போது “கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் கையில் கத்தரிக்கோல் இருப்பது சரியா?” உச்சித் தலையில் கொண்டை, பின் மண்டை கொண்டை, நீண்டு முதுகில் தொங்கும் கொண்டை என உயர் சாதி முதல் ஒடுக்கப்பட்ட மக்கள் வரை முடியப்பட்ட கொண்டை முடி மறந்துவிட்டதா? மாணவனின் தலை உச்சியில் முடி தூக்கி நின்றால் அது ஆசிரியருக்கு சவாலாகத் தெரிகிறது. ‘உலத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்கிற திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி இன்றைய உலக வழமைக்குள் அன்றாடம் நடக்கும் நடப்புக்குள் ஆசிரியர்கள் தம்மை புகுத்தி மாற்றத்தை ஏற்று “மயிரை மாணவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் கற்பித்தலில் நாம் கவனம் செலுத்துவோம்” என்று ஆசிரியர்களைக் கேட்டு கட்டுரையை முடித்திருப்பார்.
நான் கூறியது அவருடைய ஒன்றிரண்டு துண்டுகள் தான். இதுபோன்று 25 நறுக்குத் தெறித்த கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஆகச்சிறந்த எழுத்தாளருக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
|
ReplyForward
|
விழியனின் “குறுங்…“ அனுபவ பகிர்வு – மு.ஜெயராஜ்
நான் ஆசிரியராக இருந்தபோதிலும் சரி தற்போது தலைமையாசிரியராக இருக்கும் போதும் சரி கடந்த இருபது வருடங்களாக நான் பழகிக் கொண்டிருப்பது வளரிளம் பருவ மாணவர்களோடு தான்.
எட்டாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களை கையாளுவது எளிது. எந்த எதிர் கேள்வியும் இல்லாமல் சொல்படி நடப்பார்கள். ஆனால் ஒன்பது, பத்து, மற்றும் அடுத்த இரண்டு வருடங்களில் மாணவர்களின் நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
நல்லது-கெட்டது, சரி-தவறு, வேண்டியது-வேண்டாதது போன்ற அனைத்திலும் குழப்பமே எஞ்சி நிற்கும்.
நமது சமூக கட்டமைப்பில் வளரிளம் பருவ பெற்றோரில் பெரும்பாலானோர் பிள்ளைகள் சிறப்பாக படித்து மதிப்பெண்களை வாரி குவிக்க வேண்டும், எதிர்கேள்வி எதுவும் இன்றி சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று அவர்களின் வயதுக்கான இயல்புகளுக்கு முரணாக எதிர் பார்க்கிறார்கள். இந்த முரண்கள் நெகிழ்வுத்தன்மை இன்றி முற்றும் இடங்களில் எல்லாம் பிரச்சனைகள் முளைவிடுகின்றன.
பெற்றோர்கள் வளரிளம் பருவ குழந்தைகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயல்வதோ தோழமையோடு அனுகுவதோ மிக மிக அரிது.
ஆகவே, அவர்களுக்கான விஷயங்களை சினேகமான மொழியில் தோளில் கைபோட்ட படி உரையாடும் தொனியில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. விழியன் அவர்கள் எழுதியுள்ள “குறுங்…“ என்கிற இந்த நூல் நான் மேற்கூறியிருக்கும் அந்த தேவையை நூறு விழுக்காடு முழுமையாக நிறைவு செய்கிறது.
இந்த நூல் வளரிளம் பருவத்தினருக்கு மட்டுமன்றி வளரிளம் பருவத்தினரோடு தொடர்பில் உள்ள அனைவருமே வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.
விழியன் அவர்கள் தொடர்ந்து மாணவர்களோடு உரையாடி வருபவர். பள்ளி மாணவர்களை சந்திக்க தொடர்ந்து பயணித்த வண்ணம் உள்ளார். மாணவர் மையக் கற்பித்தல் சார்ந்து தொடர்ந்து களமாடி வருகிறார். அவரது பேச்சிலும் சரி எழுத்திலும் சரி ஒரு சினேகமான மொழி இழைந்தோடும்.
இந்த நூல் தொடராக “ தி இந்து தமிழ் வெற்றிக்கொடி “ மாணவர் நாளிதழில் வந்த போதே சில பகுதிகளை வகுப்புகளில் வாசித்து காண்பிக்குமாறு ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டேன்.
அறிவியலை மாணவர்கள் அனுகும் விதம் பற்றி அழகாக கூறியிருந்தார் ஆசிரியர். சக்கரம் உருண்டோடி சைக்கிளாக மாறி நமது தோள்களில் சுதந்திரம் என்கிற சிறகை பொருத்துவதை எல்லாம் தொட்டுக் காட்டி கூர்ந்து கவனிப்பதன் தேவையையும் அறிவியல் கற்பதன் அவசியத்தையும் அழகாக உணர்த்தி இருப்பார். தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டியது பற்றி எல்லாம் அழகாக கூறியிருந்தது “மலைப்பூ“வாக மணத்தது.
வரலாறை கண்டு பெரும்பாலானோர் அச்சம் கொள்ள காரணம் அதில் வரும் ஆண்டுகள் தான் என்று சரியாக கணித்து கூறியுள்ளார். வரலாறு என்றால் முதலில் “உள்ளூர் வரலாறு“ பற்றி அறிவதில் துவங்குங்கள் என்கிறார். வரலாறு படிப்பதோடு நில்லாமல் வரலாறு படைக்க வேண்டுமானால் “அரசியல் பழகு“ என்கிறார். “அய்யய்யோ அரசியலா?” என்று அலறும் பெரியவர்களே இருக்கும் காலத்தில் வளரிளம் பருவ குழந்தைகளுக்கே அரசியல் அறிவு வேண்டும் என்கிறார்.
அனைவருக்குமான உலகம் என்கிற பகுதியில் Inclusiveness பற்றி சிறப்பாக கூறியுள்ளார். எனது மாணவர்களில் ஒருவர் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க இயலாதவர். அவரை மாலை வேளைகளில் தூக்கி கொண்டு செல்வதற்கு பசங்க மத்தியில் அவ்வளவு போட்டி இருக்கும். உண்மையாகவே Inclusiveness ஐ சரியாக உணர்ந்து பரஸ்பர உதவி புரிபவர்கள் பள்ளி மாணவர்கள் தான்.
நூலாசிரியர் கணிதம் பற்றி வெற்றிக் கொடியில் தொடர் எழுதுவதோடு கணிதம் சார்ந்து குழந்தைகளோடு ஆன்லைன் உரையாடல் நடத்தி வருகிறார். எனவே கணிதம் பற்றி எழுதாமல் இருப்பாரா? கணக்கோடு சில மாணவர்களுக்கு ஏற்படும் பிணக்கை தீர்க்க ”பஞ்சாயத்து” பண்ணி இருக்கிறார்.
கேள்விகள் கேட்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்பாக கூறி உள்ளார். சில கேள்விகளுக்கு உடனே பதில் கிடைத்துவிடும் சில கேள்விகளுக்கு காலப்போக்கில் பதில்கள் கிடைக்கும். சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேட்பட்ட விடைகள் வரலாம் என அவர் அடுக்கிக் கொண்டே போவது சுவாரசியமாக இருக்கிறது.
புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க செல்வது பற்றி ஒரு பகுதி எழுதியுள்ளார். அவர் கூறியுள்ள சில நுணுக்கங்கள் மாணவர்களுக்கு நிச்சயமாக பயன்படும்.
நூறு தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட பயிலரங்கில் மேடைக்கு அழைத்த உடனேயே கைதூக்கியபடி நான் எழுந்து கொண்டேன். அங்கு என்னை CEO வாக (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) நடிக்க கூறினார்கள். அடுத்த இரண்டு நாட்களும் அனைத்து சக தலைமையாசிரியர்களும் வணக்கம் CEO சார் என்று சினேகமுடன் பேசினார்கள். ஒரு வினாடியில் அனைவருக்கும் தெரிந்தவனாகிப் போனேன். இதற்கு காரணம் உள்ளபடியே நூலாசிரியர் எழுதிய “மேடைக்கு முந்து” பகுதி தான்.
மாணவர்களை அறிவுத்தேடல் சார்ந்து முடுக்கிவிட்டு அந்த அறிவின் வடிகாலாக அவர்களை எழுதவும் ஊக்குவிக்கிறார். ஆம், பள்ளிகளில் “சிறார் இதழ்“ தொடங்குவது பற்றியும் அதில் எந்த எந்த பகுதிகள் இருந்தால் சிறப்பாக அமையும் என்பது பற்றி எல்லாம் அழகாக கூறி உள்ளார்.
எனவே இந்த நூல் குழந்தைகள் அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் நிறைந்தது. இந்த நூலை குழந்தைகள் வாசித்து முடிக்கும் போது அவர்களின் நடத்தையில் நிச்சயமாக விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என அடித்துக் கூறுவேன்.
மு.ஜெயராஜ், தலைமை ஆசிரியர்,
தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 18 – டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
மகனுக்குத் தாய் எழுதிய வாழ்த்துக் கடிதம்
அன்பு மகனே!
நம் வீட்டு மருமகள் பிள்ளை பெற்று இப்போது வீடு வந்து சேர்ந்திருக்கிறாள். அவளின் துயரோ ஒருகாலமும் நீ அறியாதது. வாழ்வின் கிடைத்தற்கரிய இக்கணத்தில் பிள்ளை பெற்று, பாலூட்டி வளர்ப்பதற்கான துயரத்தில் நீயும் அவளோடு துணை நிற்க வேண்டும் மகனே! காலங்காலமாய் இது பெண்களின் விசயம், இதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது, பெரியவர்களே பார்த்துக் கொள்வார்கள், பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கே அச்சமாக இருக்கிறதென்ற உப்புக்குப் பெறாத காரணங்களையெல்லாம் இனி நீயும் பழைய ஆண்களைப் போல சொல்லிக் கொண்டிருக்க முடியாது. உனக்குக் கர்ப்பப்பை இல்லை, பாலூட்ட மார்புகள் இல்லை என்பதற்காக எதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது.
இப்பெருமைக்குரிய பொழுதில் நீ உன் தந்தையைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் மகனே! எப்போதும் எவரையும் கடிந்து கொள்ளாத, வெள்ளந்தியான சிரிப்பை மட்டுமே எல்லாவற்றிற்கும் பதிலாகத் தருகிற, உன் மீதான பேரன்பையெல்லாம் ஒரு சொல்லில் வார்க்கத் தெரியாத உனது அப்பாவைப் பற்றி புரிந்து கொள்வதற்கு இக்கணமே பொருத்தமானது. மகப்பேற்றில், பிரசவத்தில், பாலூட்டும் காலத்தில் ஆண்களின் பங்கு என்னவென்று விளங்காமலே இத்தனையாண்டு காலம் ஆண்கள் கடந்து வந்துவிட்ட போதிலும் உன் தந்தை உனை எப்படியெல்லாம் போற்றி வளர்த்தார் என்பதையெல்லாம் இப்போது தந்தையாகிவிட்ட நீயும் அறிந்து கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது மகனே!
எனக்கு மெல்ல பிரசவ வலியெடுக்கத் துவங்கிய அந்த உயிர்த்துடிப்பான நாட்களின் துவக்கத்திலிருந்தே உன் அப்பாவும் திட்டமிட்டு ஒருமாத கால நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டார். குமரிக் கடலின் சூரியோதயத்தின் போது அக்கணத்தில் இருக்க வேண்டியதன் பரவசத்தைப் போலவே நீ பிறக்கப் போகிற தருணத்தின் நித்திய கணத்தில் இருக்க வேண்டுமென்ற பேரன்பின் பொருட்டு அவர் வேலையைத் துறந்திருந்தார். எனது மகப்பேறு காலத்தில், பிரசவத்தின் போதான பயத்தில், தனிமையில் என அம்மா, அத்தையென்று பெண்கள் உடனிருக்க வேண்டிய அத்தனை இடத்திலும் அவரே உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்டார். இதையெல்லாம் வேறெவரும் சொல்லியோ, கட்டாயப்படுத்தியோ, அறிவுறுத்தலின் பேரிலோகூட அவர் செய்யவில்லை. அடிவயிற்றிலிருந்து எழுகிற பெண்மையின் பெருவலியை எப்படியேனும் ஆணாய்ப் பகிர்ந்து கொண்டுவிட வேண்டும் என்கிற உள்ளன்பினால் எழுந்த பேருணர்ச்சி தான் அது.
பெருவலியில் பற்களைக் கடித்து கைகளை முறுக்கி அலருகிற போதெல்லாம் என் கைகளைப் பற்றி வயிற்றைத் தழுவி என்னை ஆறுதல்படுத்தபடி இருப்பார். அவரது கைகளில் பத்திரமாய் இருக்கிற ஓருணர்வே எனக்கு அவ்வலியைக் கடக்க பேருதவியாய் இருந்தது மகனே! அப்போதெல்லாம் நான் அழாதிருப்பதற்கு அவர் அருகாமையில் இருந்த ஒற்றை கணமே போதுமானதாயிருந்தது. பிரசவத்திற்கு முந்தைய பத்து நாட்களும், நீ பிறந்த பின்னால் இருபது நாட்களுமாக அவர் என்னோடிருந்த முப்பது நாட்களும் உளப்பூர்வமான குடும்பத்தின் இன்பத்தில் திளைத்திருந்தேன். பிரசவித்த கட்டில் விளிம்பில் ஒருபுறம் கட்டியணைத்தபடி நீ துயில் கொண்டிருக்க மறுபக்கமாக நாற்காலியில் அமர்ந்து என்னை அரவணைத்தபடியே மருத்துவமனையின் ஊழிக் காலங்களில் நம் இருவருக்காக அவர் தூங்காமலே சாய்ந்திருப்பார்.
வீடு வந்துவிட்ட காலங்களில் உன் பாட்டி அருகாமையில் இருந்தாலும்கூட நீ பசியென்று அழும் போது உனைத் தூக்கி மடியிலே கிடத்திப் பாலூட்ட வைப்பதற்காக உன் தந்தையே உடனிருந்து பார்த்துக் கொண்டார். உனக்குப் பாலூட்டிய பின்னால் உள்ளங்கையில் வாங்கி அவரின் நெஞ்சில் போட்டு முதுகையத் தட்டிக் கொடுத்தபடி எந்நேரமும் வீட்டிற்குள் பூனையைப் போல் நடந்தபடியே இருப்பார். உடல் அயர்ச்சியில் நான் கண்ணசருகிற போதெல்லாம் உனக்கென நான் சேமித்து வைத்திருந்த தாய்ப்பாலினை குடுவையில் எடுத்து உன் பசிதீரப் புகட்டி உனை அவரேதான் துயில் கொள்ள வைத்திருக்கிறார். அவரால் ஒரு தந்தையாக மட்டுமின்றி தாயாகவும் கூட எல்லா தருணங்களிலும் இருக்க முடிந்தது உனக்கும் எனக்கும்கூட வாய்த்த பேரதிர்ஷ்டம் தான்.
உனக்குத் தாய்ப்பாலினை எடுத்து பாட்டிலின் வழியே புகட்டுகிற போது வயிற்று வலியில் அடிக்கடி உடம்பை முறுக்கிக் கொண்டிருப்பாய். உனக்கு வலியென்று வந்தால் உரக்கவும் அழ மாட்டாய். அச்சமயம் உடம்பைப் பிழிகிறது போல முறுக்குவாய். பிறந்த குழந்தைகளுக்கு குடல் வளர்ச்சி முழுமையடையாத காரணத்தினால் சரியாகச் செரிமானமாகாத பாலானது குடலிற்குள் காற்றாய் நிறையத் துவங்கிவிடுமாம். அப்படி உருவாகிற காற்றை வெளியேற்றுவதற்கு வயிற்றிலிருக்கிற தசைகளே உதவுகிறதாம். ஆனால் வயிற்றின் தசைகள் முழுவளர்ச்சி கொள்ளாத பிள்ளைப் பருவத்தின் காரணமாக காற்றைச் சரியாக உன்னால் வெளியேற்ற முடியவில்லை. அச்சமயத்தில் நெஞ்சுக்கும், வயிற்றுக்குமிடையே மூச்சுவிடுவதற்கு உதவுகின்ற உதரவிதான தசையைப் பயன்படுத்தி உந்திதான் முக்கியபடி காற்றையும் நீ வெளியேற்றிக் கொண்டிருப்பாய்.
இதையெல்லாம் நீயும் முக்குவது போலே ஏனோ அடிக்கடி செய்து கொண்டிருந்தாய். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து முறுக்கிக் கொள்ளத் துவங்கி பொழுது விடிகிற ஆறுமணி வரையிலும் இதையே தான் தூங்காமல் விழித்திருந்து செய்தபடி இருப்பாய். அப்போதைய நிலையில் குடற்காற்றை வெளியேற்றி உனை ஆசுவாசப்படுத்துவதற்கு உன்னைக் குப்புற படுக்க வைக்க வேண்டும். அப்படிப் படுக்க வைப்பதன் வழியே உன் வயிற்றுக்கான ஒத்துழைப்பினை வெளியிலிருந்து கொடுக்கும் போது உனது முக்குவதெல்லாம் குறைந்து நீயுமே அப்போது இயல்பாகிவிடுவாய்.
ஆனால் நீயோ அப்போது தான் பிறந்த சிறுபிள்ளையாய் இருந்தாய்! உன்னைத் தரையில் கீழே படுக்க வைப்பதற்கு தந்தையின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அதிகாலையில் அலாரம் போல் அழுகிற குரலுக்கு எழுகிற உன் அப்பா உன்னோடிருக்கிற அத்தனை நாட்களும் நெஞ்சின் மேல் போட்டு அள்ளியணைத்துக் கொள்வார். உனக்கு என் கதகதப்பையும் தாண்டி அப்பாவின் கதகதப்புதான் அப்போது தேவையாய் இருந்தது. இதனால் நீயோ உடலின் முறுக்கம் குறைந்து நல்லபடியாக துயில் கொண்டிருப்பாய். ஆனால் அப்படி உனைக் கிடத்திக் கொண்டே அப்பாவால் படுக்க முடியாது. அந்நிலையில் முன்தாழ்வாரத்தில் போடப்பட்ட நாற்காலியில் சாய்ந்து உனை சேர்ந்தணைத்தபடி அமர்ந்து கொள்வார். இரவின் பூரண நிலவோடும் நட்சத்திரங்களோடும் துவங்குகிற இத்தூக்கம் நான் விடிய கண்விழித்துப் பார்த்து உனை நான் அள்ளிக் கொள்கிற வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் மகனே!
சிசேரியன் வலியும் தழும்பும் காரணமாக துவக்க காலத்தில் என்னால் அமர்ந்து உனைக் குளிக்க வைப்பதற்கு முடியவில்லை. உனைத் தொட்டுக் கால்களில் கிடத்தி நீரள்ளி உனைப் பூஜிப்பதற்கான பேறு எனக்கு அப்போது கிடைக்கவில்லை மகனே! கனிந்த பழத்தின் மிருதுவாகிய உனைத் தூக்கி காலில் கிடத்திக் குளிக்க வைப்பதற்கு எங்களுக்கே அப்போது அச்சமாயிருக்கும். ஆனாலும் உனை பேரன்போடு தூக்கி இருகால்களையும் தரையில் பரப்பியபடி உனை அதன் கால்வாயில் இருத்தி பொற்சிலைக்கு பாலபிஷேகம் செய்விப்பதைப் போல பொறுமையோடு குளிப்பாட்டிக் கொண்டிருப்பார். உனை வாங்கி நாங்கள் எண்ணெய் தேய்த்து, கண்ணத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து கூச்சத்தில் நெளிந்து நீ பொங்கிச் சிரிக்கிறவரையிலும் உடன் உதவியபடிதான் இருப்பார். அச்சமயத்தில் உன் பாட்டி அருகிலிருந்தும்கூட எவ்வித கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் உன்னை வளர்ப்பதென்பது தனக்குரிய ஒரு அங்கமாகவே அவர் நினைத்துச் செய்தபடி இருப்பார்.
இரவு நேரங்களில் சிறுநீர், மலம் கழிப்பதற்கென்று உனக்குப் பருத்தித் துணியிலான ஆடைகளையே உபயோகப்படுத்தினேன். உனது அசைவுகளின் அசௌகரியத்தைக் கவனத்தபடியே உன் அப்பா எழுந்து வந்து அவராகவே உனைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். உனக்குப் புத்தாடை அணிவிப்பதிலிருந்து அத்துணிகளை துவைத்து உலர வைப்பது வரையிலுமாக அவராகவே விரும்பி அதைச் செய்து கொண்டிருப்பார். இது என் வேலை, உன் வேலை என்கிற பாகுபாடெல்லாம் இதுவரை அவர் எவ்விசயத்திலுமே துளியும் நடந்து கொண்டதுமில்லை. ஆக, உனது மனைவி, மகள் விசயத்திலும்கூட நீ அப்பாவைப் போல அல்லது அதற்கும் மேலாகவே இருப்பாய் என்று நம்புகிறேன் மகனே!
நீ பிறந்த தருணத்திலிருந்து ஒரு தாயாக நான் எந்த அளவிற்கு உன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவளாக இருந்தேனோ அதற்குத் துளியும் குறைவில்லாத உன் தந்தையின் இருப்பின் அன்பின் மகத்துவமும் வாய்ந்த்து தான் மகனே! உனையள்ளி தோளில் துயில் கொள்ள வைப்பது, தாலாட்டுப் பாடுவது என அவரது அன்பின் வாசம் எப்போதும் உன் மீதே கமழ்ந்தபடியே இருக்கும். மகனே, இதையும்விட மகத்தான ஓரிடத்தை உன் பிள்ளைக்கும் மனைவிக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென நான் உன்னிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இப்படியாகத்தான் என்னால் உனக்கு தந்தைக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள முடிகிறது மகனே! அன்பு வாழ்த்துக்கள்.
டாக்டர் இடங்கர் பாவலன்
நூல் அறிமுகம்: லட்சுமி பாலகிருஷ்ணனின் ’எழுத்துப் பிழை’ – MJ பிரபாகர்
கற்றல் குறைபாடு
( Learning Disability ) உள்ள குழந்தைகளுக்கான கதை அம்சம் உள்ள அருமையான நூலைப் படைத்துள்ளார் எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன்.
பள்ளியில் பயிலும் மாணவர் மதிப்பெண் குறைவாக பெறுவதும் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையும் உள்ளது.
குறிப்பாக எழுத்து பிழையின்றி அம் மாணவரால் எழுத முடியாத சூழல்.
மாணவரின் தந்தை கடுமையாக தனது மகனை திட்டுகிறார்.
மாணவரின் நிலையை அறிந்து தாய் பள்ளிக்குச் சென்று தனது மகன் குறித்து வகுப்பு ஆசிரியர்களும் விசாரிக்கிறார்.
தனது மகன் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுப்பதும் எதைப் பற்றியும் கவலை இல்லாது ஆடி, பாடி சுற்றித் திரிகிறான் என தெரிவிக்கிறார்.
குழந்தைகள் மனதில் எப்போதும் நிறைய மதிப்பெண்கள் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்காதீர்கள் என்று தாயை கண்டிக்கிறார் வகுப்பு ஆசிரியர்.
அத்தோடு எழுத்துப் பிள்ளைகள் நிறைய உள்ளது என்பதோடு கற்றல் குறைபாடு உங்கள் மகனிடம் தெரிகிறது என விளக்குகிறார்.
உங்கள் குழந்தைக்கு தான் இப்படி வந்து விட்டது என கருதாதீர்கள்.
உலகில் மிகப்பெரிய அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் கூட இது மாதிரி கற்றல் குறைபாடு உள்ளவர்கள் தான்.
கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு அறிவில் எந்த குறைபாடும் இருக்காது. கற்றுத்தரும் முறையில் தான் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மாணவரின் தாயை புரிய வைக்கிறார்.
மாணவரை மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கற்றல் குறைபாடு தான் என்ற காரணத்தை கண்டறிகிறார்கள்.
அதன் பின் மாணவர் புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பு ஆசிரியர் பாடம் கற்பித்ததன் விளைவாக மாணவர் நல்ல மதிப்பெண் எடுப்பதோடு பல திறமைகளையும் வளர்த்துக் கொள்கிறார் என்பதை விவரிக்கும் நூல்தான் இது.
பொதுவாக மூன்று விதமான கற்றல் குறைபாடு உள்ளது.
அதற்கான தீர்வு மற்றும் சிகிச்சை முறைகள் சென்னையில் உள்ள NIEPMD – National Institute of Empowerment with Multiple Disabilities மத்திய அரசு நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது.
தொடர்புக்கு :
மின்னஞ்சல் niepmd@gmail.com
இணையதளம்:
www.niepmd.tn.nic.in
இதுபோன்ற நூல்களை சிறந்த முறையில் அச்சிட்டு வெளிக்கொணர்ந்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு மிக்க நன்றிகள்.
இந்நூலை மிகவும் அழகாக வடிவமைத்த ஓவியர் சூர்யா ராஜ் மற்றும் மாணவர்களுக்கான எளிய கதையாக படைத்த எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
MJ. பிரபாகர்
நூல் : எழுத்துப் பிழை
ஆசிரியர் : லட்சுமி பாலகிருஷ்ணன்
விலை : ரூ.₹40/-
பக்கம் : 16
வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com








