Machapuriswarar in Chola history by Ko. Thillai Govindarajan book review by Dr.Jumbulingam கோ.தில்லை கோவிந்தராஜனின் சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர் நூல் மதிப்புரை முனைவர் பா.ஜம்புலிங்கம்

நூல் மதிப்புரை: சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர் – கோ.தில்லை கோவிந்தராஜன் | முனைவர் பா.ஜம்புலிங்கம்



கோ.தில்லை கோவிந்தராஜன் எழுதியுள்ள சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர் என்னும் நூல் கோயிலின் அமைப்பு, சிற்பக்கலை, கல்வெட்டுக்களால் அறியப்படுகின்ற சமூகப் பொருளாதார நிலை என்ற துணைத்தலைப்புகளைக் கொண்டுள்ளது.

நூலாசிரியர் இந்நூலில் வரலாற்றுப் பின்னணியில் ஊர்ப் பெயரின் பழமையான காரணம், கோயில் அமைவிடம், அரசர்களின் கல்வெட்டில் காணும் தானங்கள், கட்டடக்கலையில் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் எனப் படிநிலை வளர்ச்சி, சிற்பக்கலையில் கருவறை, தேவகோட்ட, அர்த்தமண்டப, மகாமண்டப, முகமண்டபப்படிமங்கள், சப்தமாதர்கள், திருகாமக்கோட்டம், அருங்காட்சியகப்படிமங்கள் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கிறார். மேலும், கல்வெட்டினால் அறியப்படும் சமூகப் பொருளாதார வாழ்க்கை என்ற தலைப்பில் வளநாடு, கோட்டம், கூற்றம், மங்கலம், சேரிகள், வாய்க்கால்கள், நில வகைப்பாடுகள், அளவைகள், நாணயங்கள், கல்விநிலை, குற்றமும் தண்டனையும், உலோகப்படிமங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறார். இந்நூலில் குறிப்பிடத்தக்க செய்திகளில் சிலவற்றைக் காண்போம்.

“பாபநாசம் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பண்டாரவாடை என்ற ஊரைச் சேர்ந்த திருச்சேலூர் என்கிற பழைமையான கோயில் இன்று மச்சபுரீஸ்வரர் எனும் பெயரால் தேவராயன்பேட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது…. திருஞானசம்பந்தர் திருப்புள்ளமங்கையிலிருந்து திருப்பாலைத்துறை தலத்திற்குச் செல்லும் வழியில் உள்ள இத்திருக்கோயிலை வணங்கிச்சென்றமையை சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். சேல் என்பது கெண்டை மீனாகும். இம்மீன் இறைவனை வழிபட்டதால் திருச்சேலூர் உடையார் என இவ்வூர் வழங்கப்பட்டது.” (ப.3,)
“கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் திருக்கோயில் முதலாம் ஆதித்தன் (கி.பி.870-907) காலத்தில் கட்டப்பட்ட முற்கால சோழர் கலைப்பாணியைச் சேர்ந்ததாகும்.” (ப.32)

“கோயிலின் வளாகத்திலேயே திருக்காமக் கோட்டம் (அம்மன் கோயில்) அமைந்துள்ளது. திருக்காமக் கோட்டம் என்ற தனிக்கோயில் (கட்டுமானம்) கட்டும் மரபினை முதன் முதலில் தோற்றுவித்த அரசன் முதலாம் இராஜேந்திர சோழன் ஆவான் .” (ப.40)

“தொடக்ககால சோழர் கோயில்களில் மேற்குபுறத் தேவ கோட்டத்தில் அர்த்தநாரியும், லிங்கோத்பவர் எனப்படும் அண்ணாமலையார் படிமங்களில் எவையேனும் ஒரு படிமத்தினை அமைப்பதுண்டு. ஆதித்தனால் திருமால் படிமம் திருக்கட்டளையில் அமைக்கப்பட்டது. இத்திருக்கட்டளையின் சமகாலத்தைச் சார்ந்த இக்கோயிலில் மேற்குப்புற கோட்டத்தில் திருமால் நின்ற கோலத்தில் படிமம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கவொன்றாகும்.” (ப.46)

“ஆதித்தனுக்குப் பின் வந்த அரசர்கள் சண்டிகேசுவரர் படிமத்தினை வட திசையில் தெற்கு நோக்கிய வண்ணம் அமைத்தனர்.” (ப.52)

“மச்ச அவதார விஷ்ணு (திருமால்) நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் சிவனை வழிபடுவதாக அர்த்த மண்டபத்திலுள்ள தேவகோட்டத்து பிள்ளையார் படிமத்திற்கு மேலே தேவகோட்ட இரு தூண்கள் பலகைக்கு இடையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது..முகமண்டப நுழைவாயிலின் வலப்புறச் சுவற்றில் மீன் வடிவில் திருமால் சிங்கத்தை வழிபடுவதாக புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே காட்சியினை முகமண்டபத்தூண் ஒன்றிலும் காணமுடிகிறது”. (ப,57)

“விஜயாலயன் காலம் தொடங்கி உத்தமசோழன் காலம் வரை கற்றளிகளில் சிற்பங்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவும், தேவ கோட்டங்கள் மற்றும் கோட்டங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்து வரையே அமைக்கப்பட்டன. இவற்றால் கருவறையில் மூன்று தேவ கோட்டங்களும், அர்த்தமண்டபத்தில் இரண்டு தேவ கோட்டங்களும் அமைக்கப்பட்டன”. (ப.66)

“இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் அரசர்களும், அரசமாதேவிகளும், அரசியல் அதிகாரிகளும் வழங்கிய கொடையினையும் அறியமுடிகிறது. அவை மக்களின் சமூக பொருளாதார நிலைகளை எடுத்து இயம்புவனவாக உள்ளன”. (ப,68)

ஓர் அருமையான கோயிலைப் பற்றி காலவாரியாக விரிவாக ஆராயும் இந்நூலை வெளியிட்ட ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நூல்: சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர்
ஆசிரியர்: கோ.தில்லை கோவிந்தராஜன்
பதிப்பகம்: எம்.ஜே.பப்ளிஷிங் ஹவுஸ், 9, செ.ஜான் சர்ச் வணிக வளாகம், ராக்கின்ஸ் சாலை, திருச்சி 620 001, 0431-4038994/99434 28994, [email protected]
பதிப்பாண்டு: 2019
விலை ரூ.100