நூல் அறிமுகம்: ஜனநேசனின் எலோ..லம் நாவல் – விசாகன்
நூல்: எலோ..லம்
ஆசிரியர்: ஜனநேசன்
விலை: ₹384
பக்கங்கள்: 384
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
தமிழகத்தில் “மாபெரும்” அல்லது “ஒட்டுமொத்த – தலைகீழ்” அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்த வருடமான 1969ல், தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கேரள மலை வனப்பகுதியில், தேனி மாவட்டத்திலிருந்தும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏல விவசயாக் கூலியாகப் போய், அங்கேயே தங்கி தலைமுறைகளைக் கழித்த ஒரு கூட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் அங்கு சற்றேறக்குறைய பத்தாண்டுகாலம் கழித்த, கனத்த, அடர்ந்த, வறண்ட பொழுதுகளையும், பாடுகளையும் இண்டு இடுக்கு விடாமல் அங்குலம் அங்குலமாக அலசியாராய்ந்து எழுதி அதை *“ஏலோ…லம்” என்ற பெயரில் நமக்குப் புதினமாகத் தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.
கணவன் இறந்தபின்பு பிழைப்புக்காக ஏல விவசாயியாகச் செல்ல முடிவெடுக்கும் பொன்னுத்தாய், அவளது சிறார் வயதுப் பையன் ரவியை அழைத்துக்கொண்டு வட்டப்பாறை ஏலத் தோட்டத்திற்கு இடம்பெறும் இடத்திலிருந்து துவங்குகின்றது கதை. இடைச்சாதியனருடன், கீழ்ச்சாதியாகக் கருதப்பட்டிருந்த சக்கிலியர், பள்ளர், பறையர் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் பஞ்சம் பிழைக்க ஏல மலை ஏறிவரும் காலமாக அது இருந்தது. ஆண்பள், பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள் என பாரபாட்சமின்றி, பணிப்பாதுகாப்பற்ற, உயிர்பாதுகாப்பற்ற, உழைப்புக்கேற்ற கூலியற்ற, அரைவயிற்றுக் கஞ்சி மட்டுமே உறுதியாகத் தென்படுகின்ற, குருதி உறிஞ்சும் அட்டைக்கடி, பெரும்பெரும் கொசுக்களின் கடி, காட்டு யானைகளின் அச்சுறுத்தல், பாலியல் சுரண்டல் இவைகளுக்கிடையே ஒரு முறைசாரா தொழிலாளர்களாகவும், கடும் உழைப்பினைக் கோருகின்ற இடத்திலும் இவர்கள் தங்கள் வாழ்வை ஒப்புக் கொடுக்கிறார்கள்.
ஓய்வற்ற அடக்குமுறைகளுக்கிடையே அந்த குளிர்மிகு அடர்ந்த வனப்பகுதியில் இறுக்கமாக நகரும் இவர்களின் வாழ்க்கையின் பின்னணியிலும், உழைப்பின் ஆதாரத்திலும் வட்டப்பாறை ஏலத் தோட்டத்தின் ராஜபாளையத்து முதலாளியின் சொகுசு வாழ்க்கை பொதிந்துகிடந்தது என்பது அந்த கேட்பாறற்ற கூலிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பணி நேரத்தின்போது மலை யானையைக் கண்ட கோட்டிநாயக்கம் மிரண்டு விழுந்து காயம் பட்டு இறந்து போகும் சமயத்தில் அந்தோட்டத் தொழிலாளர்களின் ஆழ்மனத்தில் அவர்களையறியாது பற்றிக்கொண்ட எதிர்ப்பு அரசியல், குரங்கு விரட்டியின் அலட்சியத்தால் குரங்கு மேலெ விழுந்து இறந்துபோகின்ற மாரியம்மாள் என்ற ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பின்னர் அவர்கள் அறிந்தே வெளிப்படத் தொடங்குகிறது.
அந்த சமயத்தில், அத்தோட்ட முதலாளி, சர்வதேச ஏல விவசாயியாக மாற வேண்டும் என்பதால், தொழிற்சங்கம் தனது விவசாயப் பகுதியில் இருக்க வேண்டும் என்ற அதற்கான நிபந்தனையின் படி, காங்கிரஸ் தொழிற்சங்கத்தை தனது தொழிலாளர்கள் மத்தியில் ஊடுறுவச் செய்திருந்ததால், இவ்விரண்டு மரணப் பிரச்சனையையும் அத் தொழிற்சங்கம் கையாள்கிறது.
சிறுசிறு அளவிலான போராட்டங்கள், சமரசம், போதாமை, மீண்டும் பேச்சுவார்த்தை என்று சங்கத்தாருக்கும், தொழிலாளர்களுக்கும், முதலாளிக்குமிடையே நடந்து வருகின்றது.
எதிலும் தீர்வற்ற, பிரச்சனைகளையும், தேவைகளையும் தள்ளிப்போடுகின்ற நிலையே தொடர்கிறது.
இதனுடாக தொழிலார்களின் வாழ்வு நகர்கிறது என்பதை கதை அதன் போக்கில் சொல்லிச் செல்கிறது.
தொழிற்சங்கம் இருந்தும் பிரச்சனைகள் தீர்வதில் இருக்கின்ற சுணக்கத்தைக் கண்டுகொண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்க, அவர்கள் தங்களுக்குத் தரப்படுகின்ற அரசியல் நெருக்கடியை தொழிலாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லி, அவர்களை சிஐடியு சங்கத்தில் சேந்து செயல்பட வலியுறுத்துகிறார்கள்.
தொழிலாளர்களும், தோழமை உணர்வு கொண்ட சிஐடியு சங்கத்தில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறார்கள்.
அதன்பின்னர் அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை அருகில் வரத் தொடங்குகிறது.
வேலை நிறுத்தம், பேரணி, கலவரம், உயிரிழப்பு எனத் தொடரும் நாட்கள், ஒரு கட்டத்தில் அரசின் உதவியோடு முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.
இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகை, தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம், குளிர்காலப் படி, மழைக்காலப் படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வரையறுக்கப்படுகிறது. இதற்கிடையில் முதலாளி மற்றும் அவருக்குக் கீழே பணியாற்றுகின்ற மேலாளர், கணக்குப்பிள்ளை போன்றோரின் சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் முயற்சிகளிலும் தொழிலாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
தொழிலாளர்களை மிரட்டுவதற்காக முதலாளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாண்டியன் வகையறா ரவுடிகளின் தொல்லைகளிலிருந்தும் தொழிலாளர்கள் தங்களைத் தற்காக்கின்றார்கள்.
இதுபோன்ற எச்சரிக்கை உணர்வுகள் தொழிற்சங்கம்தான் கற்றுத் தந்தது என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கிடையிலும், தொழிலாளர்கள் குடும்பத்திற்குள் நடக்கின்ற காதல் உணர்வுகள், காமக் களியாட்டங்கள், உறவுமுறைக் கொண்டாட்டங்கள், குலதெய்வ வழிபாடுகள் என அனைத்தும் வந்து கடக்கிறது அவர்களுடைய அந்த வாழ்வில்.
ஒருக்கட்டத்தில், ரவுடியான பாண்டியன் வகையறாக்கள் கஞ்சாச் செடிகளை சட்டவிரோதமாக வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்ப்ப்படுகின்றார்கள்.
அதனால் வந்துவிட்ட விசாரணைக் கிடுக்கிப்பிடிகளைக் காரணம் காட்டி, ஒரு சில கூலித் தொழிலாளர்களைத் தவிர அனைவரையும் 200 ரூபாய் பொங்கல் பணம் கொடுத்து, பொங்கலைக் கொண்டாடிவிட்டு வருமாறு அனுப்புகிறார் முதலாளி.
ஏமாந்த கூலிகள், பணம் கிடைத்த மகிழ்ச்சியில் தங்களது ஊரைப் பார்க்கக் கிளம்புகிறார்கள். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி முதலாளி தன்னுடைய பெரும்பகுதி நிலங்களை விற்றுவிடுவதால் ஊருக்கு வந்திருந்த கூலித் தொழிலாளிகள் மீண்டும் ஏலமலை விவசாயப் பகுதிக்குத் திரும்ப முடிவதில்லை என்பதோடு முதல் அத்தியாயம் முடிகிறது.
294 பக்கங்களைக் கொண்ட முதல் அத்தியாயத்தின் பலம் தேனி மாவட்டத்து வட்டார மொழி.
அக்காலத்து மக்களின் அதுவும் கடைநிலைக் கூலித் தொழிலாளர்களின் வாய்மொழி அப்படியே அச்சு அசலாக எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வகையில் ஒவ்வொரு வரியுமே வட்டார மொழியின் மணத்தைப் பரப்புகிறது.
வாசிக்க வாசிக்க அத்தனை இன்பம்.
மேலும், “இருண்ட காட்டில் பொழுது பார்ப்பது என்பதே மகிழ்ச்சியான விசயம்! தங்கத்தினால் உருக்கிண தண்ணி மாதிரி பொழுது மரக்கிளைகளுக்கிடையே விழும்! அது விடும் இடத்தில் நிற்கும்போது உடல் சிவந்து சூடேறி உடம்பெல்லாம் பரவுவது இதமாக இருக்கும்.
ஈரத்தில் பத்தத மேனியில் வெயில்படும்போது சுருங்கிய தோல் எல்லாம் விரிவது தொட்டாச்சினுங்கி இலை விரியறதைப் பார்க்கிற மாதிரி இருக்கும்” மற்றும் “வானத்தில் மறைக்க மறைக்க வரும் கருமேகக் கூட்டத்தில் நழுவி நழுவிவரும் நிலவின் விளையாட்டு அவர்களின் நடப்பு வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒத்துப்போவதாக இருந்தது” என்பது போன்ற இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை, அந்த தருணத்தை விளக்குவதாகட்டும், “ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேயிலைப்புதர்கள் தீண்டுவாரில்லாமல் சிலிர்த்துக் கிடந்தன” என்று உவமைப்படுத்துவதாகட்டும், இதுபோன்றவைகள் நாவல் முழுமைக்குமே விரவிக்கிடக்கின்றதைப் பார்க்கும்போது மனதுக்கு அத்தனை நெருக்கமான உணர்வை அம்மக்கள் மீது கொண்டு வருகிறது.
தொழிற்சங்க வரவிற்குப் பின்னர் தொழிலாளர்கள் மனதிலும், நடைமுறை வாழ்விலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அழகாக விளக்கியிருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.
“சிதறி பரவலாக இருக்கின்ற சூரிய வெளிச்சத்தைக் கண்ணாடி வில்லை வழியா ஒன்று சேர்த்தால் தீப்பத்த வைக்க முடியும்னா சிதறிக் கிடக்கிற நாம ஒன்றுசேர்ந்தா நாம ஜெயிச்சிடலாமில்ல” என்ற ரவியின் கருத்தினை புரிந்து உள்வாங்கிய தொழிலாளர்களாக அவர்கள் மிளிர்வதை நாம் காணமுடிகிறது.
ரத்தம் தோய உழைப்பது, ஏமாற்றப்படுவது, போராடுவது, முதலாளிகளின் சூழ்ச்சிக்குப் பலியாவது, மீண்டும் போராடுவது, தனது இருப்பை அந்தப் போராட்டத்தின் மூலம் தெளிவுப்படுத்துவது என இவர்களின் வாழ்க்கை நீள்கிறது என்பது கண்கூடு.
சிவனம்மா, பங்கஜம் போன்றவர்களின் நெஞ்சைக் கிழிக்கின்ற கதைகளினுடாகவும், சித்திரக்கிழவன், ரவியின் உறவு மற்றும் உரையாடல்களாளும் புதினத்தை மெருகேற்றியிருக்கிறார் ஆசிரியர்.
எளிய மனிர்களின் வாழ்க்கை எண்ணிப் பார்த்துவிட முடியாத அளவிற்கு எத்தனை கடுமையானது என்பதன் காலத்தின் கண்ணாடியாகக் காட்டுகிறது இந்த ஏலோ…லம் என்கிற புதினம்.
ஏலத் தொழிளார்களின் வாழ்கையுடன் தொடங்கும் இப்புதினத்தில் இம்மியளவுகூட அவர்களின் வாழ்வைத் தாண்டிய வரிகள் வந்துவிடக்கூடாது என்பதிலும், எழுத்தாளரின் மூக்கு உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதிலும் மிகப்பிடிவாதமாகக் கவனம் செலுத்தியிருக்கும் எழுத்தாளர் ஜனநேசன்,
எந்தவொரு இடைச்செருகலும் இல்லாது அவர்களின் அந்தக் குறிப்பிட்ட கால வாழ்க்கையை அப்படியே தனது எழுத்துகளின் வாயிலாக நமக்கு உரித்துக்
காட்டியிருப்பதன் மூலம் வாசிக்கும் நமக்கும் அதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் வரவிடாமல் தடுப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
அந்த வகையில் இது ஒரு அசாத்தியமிக்கதும், பொறுமையின் உச்சத்திலிருந்தும் உருவாகியிருக்கின்ற படைப்பு என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.
ஏமாந்து தனது ஊரிலேயே தங்க நேருகின்ற பொன்னுத்தாய் மற்றும் அவளது மகன் ரவியின் அடுத்தக்கட்ட வாழ்க்கையையும், ரவி படித்து அரசின் உயர் அலுவலராகப் பொறுப்பேற்று பணிபுரிந்து ஓய்வு பெறுவதையும் நமக்கு உணர்த்திவிட்டு, 2016 வாக்கில் ஓய்வைப் பெறும் அவர், மீண்டும் தான் சிறார் பருவத்தில் கழித்த வட்டப்பாறை ஏலத் தோட்டப் பகுதிக்குச் சென்று பார்வையிடுவதையும், அங்கிருக்கின்ற மனிர்களைச் சந்தித்து உரையாடுவதையும், தற்போதைய தொழிற்சங்க நிலையை அலசியாராய்வதினுடாக, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கி இரண்டாவது அத்தியாத்தை ஒரு 85 பக்கங்களில் சொல்லி புதினத்தை முடிக்கிறார் ஜனநேசன்.
ஆனால், ஏலத்தோட்ட கூலிகளின் பாடுகளைச் சொல்லிவரும் உயிர்ப்பான பகுதிகளினூடாக, பணமதிப்பிழப்பு அரசியலைச் சேர்த்திருப்பது உணர்வுப்பூர்வமாக அதனுடன் ஒட்டவில்லை என்பதை மறுக்கமுடியாது.
இருப்பினும், பிரதி வெளிவந்தபின்பு அதை நாம் புறக்கணிக்க முடியாது என்பதால், அன்றைய கால அரசியல் நிலைமையைப் பதிவு செய்கின்ற ஒரு பகுதியாக நாம் அந்த விசயத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது.
ஏலச் செடி நடுவது, களை எடுப்பது, பழமெடுப்பது என ஒவ்வொன்றும் துளயளவிறகும் விட்டுவிடாமல் அது குறித்த செய்திகளை சிரத்தையோடு பதிவு செய்திருப்பது அந்த ஏல மணத்தைவிட வாசிக்கும்போது நாம் அனுபவிக்கின்ற அற்புத மணம் ஒப்பற்றது. அதிகாரவர்க்கத்தின் வரலாறு மட்டுமே பதியப்படுகிறது என்ற நிலையில், சமகாலத்தில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளும், வரலாறும் ரத்தமும் சதையுமாக அப்படியே பதிவு செய்யப்பட்டு வருகிறதன் வரிசையில் இந்த ஏலோ…லம் நாவலும் மிக முக்கியமாக கவனத்தை ஈர்க்கிறது.
“நம்மில் தோன்றும் நிறபேதங்கள் தற்காலிம், கற்பிதமானவை! இயற்கையில் சமத்துவமானவை! பேதத்தைக் கைவிடுவோம் என்ற ஞானம் வந்தால் மோதலில்லை! சாதலுமில்லை! இதை எப்போது புரிவோம்! எப்போது தெளிவோம்!” என்ற ஆசிரியரின் ஏக்கப் பெருமூச்சு கொண்ட வாக்கியம் நம்முள் சிந்தனையைக் கிளர்த்துகிறது.
வாசகனின் சிந்தனையைக் கிளர்த்துவதுதானே படைப்பிலக்கியத்தின் ஆகப்பெரும் செயல்.
எழுத்தாளரின் செயல் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு!
எழுத்தாளர் விசாகன்