வேட்டை நாய் கவிதை – சுதா
வலி நிறைந்த
இரவுகளின் வலி உணராக் குடிமகன்…
நிறை மாதத்திலும்
அடிவயிற்றின் அசைவுகள்
அறியாத ஆண்மகன்…
கடுகுக்கும் கணக்குப்
பார்த்து…ஒதுக்குப்புறமான
கடைக்கு உழைக்கும் உத்தமன்…
தள்ளாடும் வயதில்லை…
தள்ளாடி வருபவனைத்
தடியில் அடித்துத் தரையில்
போட பலம் உண்டு மனம் இல்லை…
கெரகம் புடிச்சு ஆட்டுது
காதுல கழுத்தில கிடக்கிறது கழட்டு,
எனும் சொல்லை நம்பி
தொலைத்தது போக மீதி
மஞ்சள் கயிறு மட்டும்…
மரம் வச்சவன் தண்ணி
ஊத்துவான், என்று ஓட்டை
விழுந்த ஓட்டின் வழியே
உலகைப் பார்ப்பவனை
நம்பி மூன்று குழந்தைகள்…
வயிற்றுக்கும்,அரைஞாண்
கயிற்றுக்கும் இடையே
இருக்கும் சிறு இடைவெளியை
பாலமாக மனமின்றி ஓடுகிறேன்…
வார்த்தைகள் படக் கடந்து…
பார்வைகள் பல கடந்து…
பசி என்னைத் துரத்துகிறது…
பயமின்றித்தான் ஓடுகிறேன்…
பலத்தோடு தான் ஓடுகிறேன்…
வேட்டைநாயென வெறியோடு
தான் ஓடுகிறேன்…
வேறு என்ன செய்ய முடியும்..?
-சுதா