குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? – தமிழில்: தா. சந்திரகுரு
தனது அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்தார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆவணங்கள் இல்லாமல் வந்த புலம்பெயர்ந்தோருக்கு – அவர்கள் முஸ்லீம்களாக இல்லாத வரை – இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த சட்டத் திருத்தம் இருந்தது. அத்தகைய சட்டத்தை இயற்றித் தருவதற்கான வாக்குறுதி பாரதிய ஜனதா கட்சியின் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த சட்டத்திருத்தம் இந்திய முஸ்லீம்களைக் குறிவைக்கும் வகையில் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் அடிக்கடி இணைக்கப்பட்டு பேசப்பட்டது.
அவர்கள் விளக்கிடாத தர்க்கம் மிகவும் எளிமையாக இருந்தது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடுபடுகின்ற முஸ்லீம் அல்லாதவர்கள் ‘அகதிகள்’ என்று தங்களைக் கூறிக் கொள்வதன் மூலம் குடியுரிமையைப் பெறுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகிய இரண்டு முயற்சிகளின் கலவை அனுமதிக்கும். மறுபுறத்தில் பதிவேட்டில் உள்ள சிவப்பு நாடாத்தனம், முஸ்லீம்களைத் துன்புறுத்துவதற்கான கருவியை அரசுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 2019ஆம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பாஜகவிடமிருந்த உந்துதலைப் பொய்யாக்குகின்ற வகையிலே அந்தச் சட்டத்திருத்தம் இன்னும் செயல்படுத்தப்படாமலே இருக்கிறது. மக்களவையின் 2021ஆம் ஆண்டு குளிர்கால அமர்வில் ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தின் கீழ் வருபவர்கள், அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஒரு சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களாக அதற்கென்று உருவாக்கப்படுகின்ற விதிகள் அமையும். நாடாளுமன்ற வழிகாட்டுதல்களில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வெளியிடப்பட வேண்டும் என்றிருக்கிறது. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், மோடி அரசு அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகளை இதுவரையிலும் வெளியிடவில்லை. குடியுரிமைக்கு ஒருவரால் கூட விண்ணப்பிக்க முடியாத நிலைமையில், அந்த்ச் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உரியவர்களைச் சென்றடைய முடியாத வெற்றுக் காகிதமாகி விட்டது.
பாஜகவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு பிரச்சனையில், அவர்களுக்கு இதுபோன்று திடீரென்று ஆர்வமின்மை தோன்றக் காரணம் என்ன?
தெருக்களில் குவிந்த போராட்டக்காரர்கள்
தெருக்களில் நடந்த போராட்டங்களே புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான முதல் எதிர்வினையாக இருந்தன. வங்கதேச ஹிந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வரக்கூடும் என்ற அச்சத்தில் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கின. தேசிய குடிமக்கள் பதிவேட்டை அடிக்கடி குடியுரிமை சட்டத் திருத்தத்துடன் அமித் ஷா இணைத்துப் பேசி வந்ததால், தங்களுடைய குடியுரிமை நிலைமை குறித்து இந்திய முஸ்லீம்களிடம் அச்சம் உருவாகியிருந்த நிலையில் பிற மாநிலங்களுக்கும் போராட்டங்கள் விரைவில் பரவின.
போராட்டத்தின் வீச்சு மிகப் பெரிய அளவில் இருந்தது. போராட்டக்காரர்கள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான ஆர்வலர்கள், அரசு தரப்பு என்று சில இடங்களில் அது வன்முறைக்கு வழிவகுத்தது. அசாமில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். வங்காளத்தில் போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீ வைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் இருபது பேர் கொல்லப்பட்டனர். மங்களூரில் நடத்தப்பட்ட காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த கொந்தளிப்பு தேசிய தலைநகரான தில்லியில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. பாஜக அரசியல்வாதியான கபில் மிஸ்ரா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை தெருக்களிலிருந்து அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்ததைத் தொடர்ந்து மிகப் பெரிய அளவிலே வகுப்புவாதக் கலவரங்கள் மூண்டன.
குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன என்று பயந்த இந்தியர்களிடமிருந்து தரவு கணக்கீட்டாளர்கள் அச்சுறுத்தல்களையும், வன்முறையையும் எதிர்கொள்ளும் வகையிலான பல நிகழ்வுகளுக்கு வரப் போகின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம் வழியேற்படுத்திக் கொடுத்தது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றின் விளைவாக மக்களிடம் உருவாகியிருக்கும் நம்பிக்கையின்மை, மனக்கசப்பின் காரணமாக மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்பாளர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநில காவல்துறை மற்றும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலுக்கு கடிதம் எழுதியதால் பிரச்சனை தீவிரமானது.
மாற்றிக் கொள்ளப்பட்ட திட்டங்கள்
பரவலாக ஏற்பட்டிருந்த அமைதியின்மை பாஜகவால் கிட்டத்தட்ட உடனடியாக மீட்டமைக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 10 அன்று நாடாளுமன்றத்தில் விவாதித்த போது ‘எங்களுடைய தேர்தல் [2019] அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததால், தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டில் நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத்ய் தேவையில்லை’ என்று அமித் ஷா மிகக் கடுமையாகக் கூறினார். ஆயினும் அதிலிருந்து பன்னிரண்டு நாட்களுக்குள் ‘இது காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்டது. நாங்கள் அதை உருவாக்கிடவில்லை. அதை பாராளுமன்றத்திற்கு நாங்கள் கொண்டு வரவில்லை, அறிவிக்கவில்லை’ என்று தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைகழுவுகின்ற வகையிலே பேரணி ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
2019ஆம் ஆண்டில், குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் அமித் ஷா அடிக்கடி இணைத்து பேசி வந்திருந்த நிலையில், கடும்எதிர்ப்புகளுக்குப் பிறகு சற்றே பின்வாங்கிய பாஜக உண்மையில் அவை இரண்டும் இணைக்கப்படவில்லை என்ற வாதத்தை முன்வைக்கத் துவங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பாஜக கூட்டணி கட்சிகளே அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரும் அளவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான உணர்வு மிகவும் வலுவாக உள்ளது. திடீரென இப்பகுதியில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மோடி அரசைப் பொறுத்தவரை அது மிகவும் வலுவான பிரச்சனையாகவே உள்ளது. ‘எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் பிராந்தியத்தில் பிரச்சனையைத் தூண்டுவதற்கு சீனா சதித்திட்டம் தீட்டுகிறது’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகின்ற அதே நேரத்தில் மியான்மரும் அதுபோன்று ஈடுபடக்கூடும் என்று ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா குறித்த பிம்பத்தின் மீது ஏற்பட்ட தாக்குதல்
குடியுரிமை சட்டத் திருத்தம் உள்நாட்டு அளவில் மட்டுமே சிக்கலை ஏற்படுத்தியதாக இருக்கவில்லை. வெளியுறவு விவகாரங்களிலும், குறிப்பாக தன்னுடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றாக உள்ள வங்கதேசம் தொடர்பான விவகாரங்களில் இந்தியாவிற்கு அது அதிக குழப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குடியுரிமை தொடர்பாக ஏற்பட்டிருந்த அரசியல் வங்கதேசத்தின் மீது கடுமையான வாய்மொழித் தாக்குதல்களை பாஜக அரசியல்வாதிகள் உருவாக்கிட வழிவகுத்துக் கொடுத்தது. புலம்பெயர்ந்தோரைக் கொண்டு கிழக்கு அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நிரப்பி வருகிறது என்று பாஜகவினர் பலரும் குற்றம் சாட்டினர். 2018ஆம் ஆண்டில் வங்கதேசத்தவரை ‘கறையான்கள்’ என்று அழைக்கும் அளவிற்கு அமித் ஷா சென்றிருந்தார்.
அதுபோன்ற பேச்சுகள் வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினையைத் தூண்டியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. 2020ஆம் ஆண்டில் மோடி வங்கதேசத்திற்குச் சென்றிருந்த போது வெடித்த வன்முறையில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு 2015ஆம் ஆண்டு மோடி சென்றிருந்த போதுகூட இதுபோன்ற எதிர்வினைகள் எதுவும் காணப்படவில்லை என்பது வங்கதேசத்தில் சில பிரிவினர் இந்தியாவை எந்த அளவிற்கு இப்போது எதிர்மறையாகப் பார்க்கின்றனர் என்பதையே குறிக்கிறது.
பிரச்சனைகளை இன்னும் மோசமாக்குகின்ற வகையில் இந்தியாவின் உறுதியான கூட்டாளியாக இருந்து வரும் வங்கதேசப் பிரதமர் ஹசீனா, வங்கதேசத்தில் பரவலாக ஹிந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து 2021 அக்டோபரில் புதுதில்லியை எச்சரித்திருந்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஹசீனா ‘அங்கே [இந்தியாவில்] நம் நாட்டைப் பாதிக்கின்ற, நமது ஹிந்து சமூகத்தைப் புண்படுத்துகின்ற எதுவும் செய்யப்படாமல் அவர்கள் [புதுதில்லி] பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத் திருத்த இந்திய-வங்கதேச உறவுகளைச் சீர்குலைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்று ஃபாரின் பாலிசி என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தின் வகுப்புவாத அம்சம் வங்கதேசத்தில் மட்டுமல்லாது இந்தியாவை தாராளவாத ஜனநாயக நாடாகக் கருதி வந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் வருடாந்திர ஜனநாயகக் குறியீட்டில், 2020ஆம் ஆண்டில் இந்தியா பத்து இடங்கள் சரிவைக் கண்டுள்ளது. சரிவிற்கான மற்ற காரணிகளுடன் குடியுரிமை சட்டத் திருத்தமும் ஒரு காரணியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் அமெரிக்க சிந்தனைக் குழுவான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்பு இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் இருந்த பாரபட்சமான திருத்தங்களை மேற்கோள் காட்டி இந்தியாவிற்கான தகுதியை ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து ‘ஓரளவிற்கு சுதந்திரம்’ என்று தரமிறக்கியிருந்தது.
பாஜகவிற்கு முற்றிலுமாக இழப்பு
ஒருபுறத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் அறிமுகம் எதிர்மறையான விளைவுகளை – உள்நாட்டு அமைதியின்மையிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேர்வுகளைக் குறைப்பது வரை – ஏற்படுத்தியது. அது பாஜகவுக்கு மிகக் குறைவான நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்திக் கொடுத்தது.
ஹிந்துத்துவாவின் தெற்காசியப் பார்வை மீது கவனம் செலுத்துகிற வகையிலேயே குடியுரிமை சட்டத் திருத்தம் இருந்தது. பாஜகவின் முக்கிய கருத்தியல் அடித்தளத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்ததிர்வு கொண்டதாக இருந்த இஸ்ரேல் வடிவமைத்த ‘திரும்பி வருவதற்கான சட்டத்தின்’ மறுபதிப்பாக பிராந்தியத்தில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் இந்தியாவிற்குச் செல்வதற்கான உரிமையை ஏற்படுத்தித் தருவதாகவே சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தலில் அது நமத்துப் போனது. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மேற்கு வங்கம் – வங்கதேசத்துடன் அதிக தொடர்பு கொண்ட மாநிலம் – ஆர்வத்துடன் இருந்த நிலைமையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் அதையொரு பிரச்சினையாக்காமால் கைவிடுவது என்று பாஜக முடிவு செய்தது, அதற்குப் பதிலாக உள்ளூர் ஊழல் போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தவே அது விரும்பியது.
கூடுதலாக குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டாலும், அது பலனளிக்குமா என்பது குறித்தும் மிகப்பெரிய அளவிலே சந்தேகங்கள் இருந்து வருகின்றன. சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக நடந்த விவாதங்களின் போதே இந்திய உளவுத்துறை குடியுரிமை சட்டத் திருத்தத்தால் மிகக் குறைவான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் மட்டுமே – சுமார் முப்பதாயிரம் பேர் மட்டுமே – பயனடைவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் ஏற்கனவே இந்திய குடியுரிமையை சட்டவிரோதமான முறையில் பெற்றிருப்பார்கள் என்றும் கணித்திருந்தது.
உண்மையில் இந்திய உளவுத்துறையின் அந்தக் கணிப்பை ஏற்கனவே இருந்து வரும் நீண்ட கால விசாவின் செயல்பாட்டிலிருந்து நம்மால் காண முடியும். குடியுரிமை சட்டத் திருத்தத்தைப் போன்று 2015ஆம் ஆண்டில் மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட கால விசா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கிடைத்து வருகிறது என்றாலும் 2015ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் முஸ்லீம் அல்லாத 25,782 பேர் மட்டுமே இந்த நீண்ட கால விசாவைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் வசித்து வருகின்ற ஹிந்து, சீக்கிய பாகிஸ்தானியர்கள் இந்த வகையான விசாவைப் பெறுவதில் இருந்து வருகின்ற சிவப்பு நாடாத்தனத்தால் விரக்தியடைந்து தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்வதைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் 2020 நவம்பரில் செய்தி வெளியிட்டது.
ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகவே குடியுரிமை சட்டத் திருத்தம் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பல கொள்கைகளை மிகவும் தீவிரமாக முன்வைத்து வந்துள்ள போதிலும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அக்கறை மிகக் குறைவாகவே அதனிடம் இருந்திருக்கிறது. அதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டாக, நிச்சயமாக வேளாண் சட்டங்களைக் கூறலாம். பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, 2021 நவம்பர் மாதத்தில் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் மோடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
பாஜகவின் அடிப்படை ஹிந்துத்துவா சித்தாந்தத்திற்கு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கும் போது குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது என்பது அவர்களைப் பொறுத்தவரை மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். இரண்டு பாறைகளுக்கு நடுவே வெளிவர இயலாமல் சிக்கியுள்ள மோடி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்திருக்கிறார்.
https://scroll.in/article/1012561/protests-bangladesh-and-north-east-why-modi-hasnt-implemented-caa-two-years-after-it-was-passed
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு