நூல் அறிமுகம்: சு.வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம்! – இரா.சண்முகசாமி 

நூல் அறிமுகம்: சு.வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம்! – இரா.சண்முகசாமி 
அணிந்துரை : தமுஎகசவின் மிகப்பெரிய ஆளுமை தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

நிறைய தொல்லியல் ஆவணங்களை வரலாற்றுத் தரவுகளுடன் 19 தலைப்புகளில் மிகவும் அருமையாக பதிவு செய்துள்ளார் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள்.

இறுதியாக ஒன்றிய அரசு கீழடியை மூடி மறைக்கிற வேலைகளை செய்த தகிடுதத்தங்களை அம்பலப்படுத்திய எழுதிய கட்டுரைகள் பகீர் என்கிறது. வடமாநில ஆய்வுகளுக்கு, இல்லாத சரஸ்வதி நதியை தேடுவதற்கு, ராமாயண கண்காட்சிக்கு என அதிக நிதியை ஒதுக்கிய ஒன்றிய அரசு கீழடியில் கிடைத்த பொருட்களை கரிம ஆய்வு செய்வதற்கு கிடைத்த நிறைய பொருட்களில் இரண்டே இரண்டை மட்டும் அமெரிக்காவுக்கு ஏனோ தானோ என்று அனுப்பியது இப்படி நிறைய பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

‘கீழடியை மூடி மறைக்கிறான் அநியாயமய்யா
வந்தேறி நாட்டை கெடுக்கிறான் அவமானமய்யா’ என்கிற சங்கத்தலைவனின் பாடல் வரிகள் தான் உடனே நினைவுக்கு வந்தது.

வைகை நதிக்கரையின் நகர நாகரிகத்திற்கு மிகுந்த எடுத்துக்காட்டுகளை வழங்கிய விதம் அப்பப்பா அருமை!

கண்ணகி வாழ்ந்த ஊர் கடை சிலம்பு ஏந்தல் (கடைச்சநேந்தல்), தேனூர், அந்த நரி (அந்தனேரி), வெம்பூர் (குத்துக்கல்), புலிமான்கோம்பை (புள்ளிமான்கோம்பை), அழகன்குளம் இப்படி ஏராளமான தரவுகளை வாரி வழங்கியிருக்கிறார்.

அரசியல் காரணங்களால் வடஇந்திய தொடர்புகள் அறுபட்ட நிலையில் ரோமானியர்கள் கடல்வழியைக் கண்டறிந்து மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் யவனர்களாக வாணிபம் செய்தது, அதற்கான சான்றுகளாக நிறைய ரோமானிய நாணயங்கள் வைகை நதிக்கரை ஓரம் கிடைத்தது இப்படி ஏராளம் அரிய காட்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறார்.

தமிழரின் நாகரிகம் இன்னும் பல நூறாண்டுகள் பின்னோக்கி போவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட பொருட்களில் ஒன்றுகூட கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்ட தகவல்கள் இல்லையென்பதால் ஒன்றிய அரசு கீழடியை கைகழுவும் வேலையை செய்கிறது என்று ஒன்றிய அரசின் சூழ்ச்சியை போட்டு உடைக்கிறார். அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மிகச்சிறப்பாக கீழடியை ஆய்வு செய்த நிலையில் அவரை ஏன் மாற்றவேண்டும். அவருக்குப் பதிலாக வந்த ஸ்ரீராமன் என்பவர் மண்ணின் அடி ஆழத்தில் ஆய்வு செய்யாமல் திட்டமிட்டு மேலோட்ட கிடைத்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி ஆயிரம் ஆண்டுகள் குறைத்துக் காட்டுவதற்கான வேலையை ஒன்றிய அரசின் சூழ்ச்சி வேலையை செய்தார். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒருநாளைக்கு சராசரியாக 80 நபர்கள் வரை ஆட்களை வைத்து ஆய்வு செய்த நிலையில், ஸ்ரீராமன் ஒரு நாளைக்கு 20 ஆட்கள் வரையே பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தை திட்டமிட்டு ஒன்றிய அரசு கீழிறக்கப் பார்க்கிறது என்றே தெரிகிறது.

தமிழ்ச் சமூகம் விழித்திருந்து கீழடியை பாதுகாக்க வேண்டும் என்று மக்களின் ஊழியர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். 2017ல் வெளியான போது இந்நூல் கண்ணில் படவில்லை. 2022ல் திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கப்பெற்றேன். நிறைய தரவுகளைக் காண இதுவரை வாசிக்காத தோழர்கள் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூல் : வைகை நதி நாகரிகம்!
ஆசிரியர் : சு.வெங்கடேசன்
விலை : ரூ.210

வெளியீடு : விகடன் பிரசுரம்
ஆண்டு : 2017ல் முதல் பதிப்பு, ஜூன்2022ல் இரண்டாம் பதிப்பு.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டாவின் கவிதை – தமிழில்: ரமணன்

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டாவின் கவிதை – தமிழில்: ரமணன்
நதியும் நாகரீகமும் மரணிக்கும் நேரம்
பிராணவாயு வற்றிய
நதிகள் இறந்து போயின.
ஆயினும்
உயிரற்ற நீரில் மிதந்துகொண்டிருக்கும்
அவற்றின் சடலங்கள் குறித்து
எவரும் கவலைப்படவில்லை.
ஜீவனற்ற நதி மேல்
மனித உடல்களை வீசியெறிவது
யாருடைய குற்றங்களையும்
அந்த நீரோடு அடித்து செல்லாது.
நதியோடு மிதந்து கொண்டிருக்கும்
சடலங்கள் போல்
அவையும் செத்துப் போன நீரில்
மிதந்து கொண்டுதானிருக்கும்.
ஒரு நாள்
ஆக்சிஜன் இல்லாமையால்
அனைத்து நதிகளும் இறக்கும்போது
நாகரீகத்தின் எலும்புக் கூடுகள்
அவற்றில் மிதக்குமோ?
தம் மரணத்தை
நதிகள் அறியும்.
நாகரீகமும் அவற்றின் பின்னே.

தமிழில்: ரமணன்

************

ஜார்கண்ட் மாநில கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா ஓரோன் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்.இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர்.’anger’ மற்றும் ஜடோன் கி ஜமீன் என்கிற இரு மொழி கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளையம் அவர்களது போராட்டங்களையும் சித்தரிக்கின்றன. இந்தக் கவிதை ‘beacon’ என்கிற இதழிலிருந்து எடுக்கப்பட்டது

Time for Civilizations to Die
Many rivers died
due to lack of oxygen
but nobody paid heed
to their corpses
still floating
in the dead water
dumping human corpses
on top of lifeless rivers
does not make anyone’s crimes wash away in the water
they all keep floating
like with the rivers
human bodies are still floating
in the dead waters.
one day when all rivers die
due to the lack of oxygen
then in the dead rivers
will there be skeletons of civilizations afloat.
rivers know
when they die
civilizations are not far behind.

© Jecinta Kerketta

ஆடை அரசியல் கட்டுரை – மணிமாதவி

ஆடை அரசியல் கட்டுரை – மணிமாதவி
ஆதிகாலத்துல மனுசன் ஆடை அணிந்தது கிடையாது. உடையில்லாம தான் காடுகள்ல சுத்தி திரிஞ்சான். அதுல ஆண் பெண் பேதம்ங்குறது கிடையாது. யாருமே உடையணிஞ்சது இல்ல… அடுத்து ஒவ்வொரு நாகரீக மாற்றத்தின் போதும் உடை நவீனத்துவம் பெற்றுகிட்டே வருது.இலை, தழை அணிஞ்சு திரியுறான்… அடுத்து தான் துணி நெய்ய கண்டுபிடிக்கான்… துண்டு துணியை மேலையும் கீழயும் சுத்தினது தான் முதல் ஆடை வடிவமைப்பு… இப்படித்தான் உடை நாகரீகம் படிப்படியா வந்துட்டே இருந்தது….

உடைங்குறது நமக்கு மிக நெருக்கமானது … அது கொடுக்கும் பார்வை தான் இங்க நம்மோட வெளிப்பாடு. ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்றத கேட்ருக்கோம்… தெருல நடந்து போகுறப்ப ஆடையில்லாம ஒருத்தர பார்த்தா நமக்கு தோன்ற முதல் எண்ணம் அவர் மனபிறழ்சி உள்ளவரா இருக்கக்கூடும்ங்குறது தான்….. இல்ல பிச்சைகாரரா இருப்பாங்களோன்னு தான் நினைப்போம்…. உடைங்குறது உடலை மறைக்கவும், சுற்றுசூழல் மாற்றத்துலயிருந்து நம்ம பாதுகாக்கவுங்குற நிலை மாறி உடைதான் நம் உடல் மொழியாகவே பார்க்கப்படுது.

உடைக்குக்குறது இங்க சாதி,மதம் வெளிப்படுத்தும் அங்கீகாரம் … கபாலி படத்துல ஒரு வசனம் வரும் காந்தி ஏன் கதர் அணிந்தார்ன்னும், அம்பேத்கர் ஏன் கோட்டுபோட்டார்ன்னும் காரணம் இருக்குன்னு.. அதற்கு பின் பெரிய அரசியலே இருக்கு…..

இத்தனை அரசியல் பின்புலம் இருக்குறப்ப பெண்களோட உடை மட்டும் ஆண்களுக்கு கிளர்ச்சி தந்தே ஆகணும்ங்குற நோக்கத்துலயே இங்க வடிவமைக்கப்படுது. ஆடை அணியாத போது பெண்களோட உடல் அடிமைப்படுத்தபடல… ஆடைகளுக்கு பின் மனிதநாகரீகத்துல மதம் புகுத்தப்படுது… அது எப்படி பெண்களின் மாதவிடாய் தீட்டுன்னு ஒதுக்குச்சோ அதே போல பெண்களோட உடலையும் அருவறுப்பாய்,அவமானமாய் சித்தரிக்கத்தொடங்குது….

இந்த உடைதிணிப்பை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய சூழல்ல இருக்கோம்…. ஒரு பெண் சேலை உடுத்திருக்கப்போ இடையோ, மார்போ உடை விலகி தெரிஞ்சாலும் அது கண்ணியமான உடைன்னு சொல்ற நாம …. ஒரு பேண்ட், டாப் போட்ருக்கப்போ கைய தூக்கும் போது வெளிதெரியுற இடுப்பு அந்த உடையை கவர்ச்சியா காட்டுதுன்னு சொல்றோம்.‌‌ ஒரு சுடிதார்க்கு சால் போடலைனாலே துப்பட்டா போடுங்க தோழின்னு சொல்ற அளவு பெண்களோட உடை கொச்சைப்படுத்தப்படுது… இங்க கொச்சைப்படுத்தப்படுறது பெண்ணோட உடையில்ல உடல்…..

ஆண்,பெண் உடலீரப்புங்குறது இயற்கை.. ஆனால் பெண்களுக்கான உடையமைப்பு இப்ப பெரும்பாலும் உடலீர்ப்புக்காக பயன்படுத்தப்படும் சாதனமாதான் பெண்களோட உடலை பயன்படுத்துது….

சமீபத்துல ஒரு பெண்கள் உடையகத்துக்கு போனேன்…. நான் அங்க பார்த்த உடைல 75% சதவீதத்துக்கும் மேல உள்ள பெண்கள் அணியுற டாப்ஸ், சுடி எல்லாமே ,மார்பு பகுதிக்கு தனியா ஒரு பகுதியும் கீழ்பாத்தை தனியா பிரிக்கும் மாதிரியான வடிவமைப்பு…. மார்பு பகுதி எல்லா பெண்ணுக்கும் இருக்கும்… ஆனால் அதை ஏன் எடுப்பா காட்டி தனியா‌ பார்ட்டீசன் கொடுத்து பிரிக்கனும்…. ஆண்கள் யாரும் அப்படி தனியா பிரிக்குற மாதிரி உடையணிந்து பார்த்துருக்கோமா….

ஏன் மார்பை அப்படி காட்டணும்….75% க்கு மேல உடை அப்படித்தான்…. ஏன்னு கேட்டப்ப ட்ரெண்டுன்னு சொன்னாங்க… ட்ரெண்ட் வரும் … ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி… ஆனால் ஆடை தேர்ந்தெடுப்புல கொஞ்சம் கவனம் வைங்க மக்கா…. நமக்கு மட்டும் இல்ல நம்ம குழந்தைகளுக்கும்…. எடுப்பா காட்டி அழகு பார்க்க நம்ம உடல் சாதனம் இல்ல…..

நவீனம், உடை சுதந்திரம்ங்குறது வேற….  காலசூழலுக்கு ஏற்ப உடை மாறும்… ஆனால் இங்க பெண் உடைசுதந்திரம்ங்குறது ஆண் எதை பார்க்கணும்ங்குறத பொறுத்து அமைய கூடாது….

பெண் உடைசுதந்திரம்ங்குறத பத்தி பெரியார் அழகா சொல்லிருப்பார்….”எது உனக்கு உடுக்க ஏதுவா இருக்கோ அதை உடுத்து…. ஆண்கள் மேல்சட்டையும், பேண்ட்டும் போடுறப்போ கண்ணியமா தெரியுதா அதே போல உனக்கு எது இலகுவோ அதை கண்ணியமா உடுத்துன்னு”

பெண்கள் உடலை முழுசா மூடியிருக்கனும்னு சொல்றதும் …. எது வெளிதெரியணும், எது எடுப்பா காட்டனும்னு பெண்களை போகபொருளாய் காட்டுறதும், அலங்கார கருத்தாக்கங்கள் தான்…

நாகரீகம்ங்குறது அதிகாரத்தின் கட்டமைப்புங்குற மார்க்ஸ் கூற்றை நினைவில் வைங்க. அடிமைத்தனம் வேற வேற வடிவுல வருதே தவிர அடிமைத்தனம் அப்படியே தான் இருக்கு. பொண்ணுங்க நம்ம நமக்கான உணர்வு, சுதந்திரம், உடைன்னு நமக்கானத சிந்திக்க தவறுறப்ப அதை ஆண் கைல எடுக்காங்க. நமக்கானது நம்மளோட சுயதேர்வா இல்ல திணிக்கப்பட்டதான்னு நாம தான் முடிவு பண்ணணும்.

ஆடை அரசியல் அதிலும் பெண் ஆடை அரசியல் அதிகம் இங்க…. எதை நாம் தேர்வு செய்யணும்ங்குறது நம்ம கைல…. எல்லாருக்கும் இருக்குற அதே மார்புதான் நமக்கும் என்ன பாலூட்டிங்குறதால அதன் வளர்ச்சி அதிகம். அதை எடுப்பா காட்டி தான் தீரணும்ங்குற அவசியமில்லை….‌ பெண் ஆடை சுதந்திரம் வேற….. இரண்டையும் குழப்பாம கண்ணியமான ஆடை தேர்வை எடுப்போம்.

-மணிமாதவி

Civilization and the history of clothing Article By Sindhuja Sundaraj. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏட்டில் வரலாறு பதியப்படாத காலத்திலும் மனிதன் வாழ்ந்தானே. இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் மனிதன் தோன்றியபோது மேற்கூறிய பேதங்கள் எதுவும் இல்லையே.

முதன் முதலில் தென் ஆப்பரிக்காவில் மனித இனம் தோன்றியது. அந்த ஆரம்ப காலகட்டங்களில் ஆடை பற்றிய சிந்தனையெல்லாம் யாருக்கும் எழவில்லை. அதற்கு அங்குள்ள தட்பவெட்ப நிலையும் கூட ஓரு காரணம். அதன் பின் அங்கிருந்து இடம்பெயரந்த மக்கள் ஐரோப்பா, சைபீரியா போன்ற குளிர் பிரதேசத்தில் குடியேறினர்.

கடும் வெப்பத்தை பார்த்தவர்களுக்கு – குளிரை எதிர்கொள்ள – உடலைத் தயார் படுத்த வேண்டிய தேவையிருந்தது. மனித உடலை இயற்கையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே ஆடைகள் தோன்றின.  விலங்கை வேட்டையாடி மாமிசத்தை உட்கொண்டவர்கள், அதன் தோலை கடும் குளிரில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள தோலை உடுத்திக் கொண்டனர். இப்படி தான் உலகின்  முதல் ஆடை உருவானது.

இதனை மனிதன் எவ்வாறு கண்டுபிடித்தான். குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகள் எப்படி அந்த குளிரை தாக்கிக் கொள்கின்றன என்பது பற்றி சிந்திக்கையில், அவற்றின் தோலும் அதன் மேல் இருந்த அடர்த்தியான ரோமங்களும் குளிரிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளவை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்கிறான். கூர்மையான கற்கள், மரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றில் துளையிட்டு தனது  உடல்பாகங்களுக்கு ஏற்றவாறு நார்கள், கொடிகள் மூலம் இறுக்கிக் கட்டி ஆடையாக்கிக் கொண்டான்.

ஆடை பற்றிய வரலாறு என்ன சொல்கிறது? ஆடையை வடிவமைக்க மனிதர்கள் எந்த பொருளை பயன்படுத்தினர் என்ற கேள்விக்கு நாம் துருக்கியிலுள்ள கட்ல்ஹோக் செல்ல வேண்டும். கட்ல்ஹோக் உலகின் மிகப் பழமையான மனித நாகரிகங்களில் ஒன்று. கிமு 7100 முதல் கிமு 5700 வரை மக்கள் வாழ்ந்த நாகரிகம் அது. கட்ல்ஹோக் மக்கள் ஆளி(Flax) செடிகளை விளைவித்து அதிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அது தான் நாம் இன்று பயன்படுத்தும் கைத்தறி ஆடையான லினன்(Linen).

ஜார்ஜியாவின் காகசஸ் மலைகளில் உள்ள ஒரு பழங்கால குகையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் 34,000 வருடங்களுக்கு மேல் பழமையானதாகக் கருதப்படும் ஆளி இழைகளைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு தான் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட துணி மற்றும் நூலின் பழமையான மாதிரிகளைக் குறிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அர்மேனியாவில் கண்டெடுக்கப்பட்ட வைக்கோலாலான பெண்கள் உடை

உலகில் முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய ஆடை ஆர்மீனயாவில் அரேனி குகையில் கண்டு எடுக்கப்பட்ட ஓரு பெண்ணின் பாவாடை. இது சுமார் 5900 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கோலால் (Straw) பின்னப்பட்ட இந்தப் பாவாடைதான் இதுவரை நடந்த அகழாய்வில் கிடைத்த தொன்மையான ஆடை. இதைப் போன்றே உலகின் பழமையான கால்சட்டை சீனாவிலுள்ள யாங்காய் கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் குதிரை சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட கால்சட்டை என ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.

அப்படியே வரலாற்றை இன்னும் புரட்டினால் அது நம்மை எகிப்து நோக்கி பயணிக்க வைக்கிறது. எகிப்தியர்கள் ஆடை வடிவமைப்பில் முன்னோடிகளாக திகழ்ந்து உள்ளனர். எகிப்தியர்கள் நாணல், பாப்பிரஸ், பனை போன்ற செடிகளிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை கண்டுபிடித்தனர். எகிப்தியர்கள் கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்கான ஆடைகளைப் பயன்படுத்தினர். உலகில் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட ஆடை எகிப்தில் உள்ள தார்கன் என்று இடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ஆடைக்கு “தார்கன் ஆடை”என்று பெயர். கடந்த 2015ம் ஆண்டு கார்பன் டேட்டிங் செய்ததில் இதன் வயது கிமு 3482-3102 வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆடைகளின் வரலாற்றில் நாம் ஆசியா நோக்கி நமது பயணத்தை தொடரலாம். ஆசியா என்றதும் சீனா தான் முதலில் கண்ணிற்கு தெரிவது. சீன வரலாற்றின் படி , கிமு 27-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசி ஹிஸ் லி ஷி தான் பட்டு நூலை (silk) நெசவு நாராக கண்டுபிடித்த முதல் நபர்.அந்தக் கதை கொஞ்சம் சுவாரசியமானது.

பேரரசி ஒரு நாள் மல்பெரி மரத்தின் கீழ் தேநீர் குடிக்கும் போது, ​​ஒரு பட்டுப்பூச்சிக் கூடு (cocoon) அவரது கோப்பையில் விழுந்து. அது மெல்ல பிரிந்து நூல் அவிழத் தொடங்கியது. அதைப் பார்த்த ராணி அரண்மனையில் உள்ளவர்களை அது குறித்து ஆராய உத்தரவிட்டார்.

இப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான், பட்டாடைகள் ஆசியா முழுவதும் உள்ள பிற பகுதிகளை சென்ற அடையத் தொடங்கின. பட்டு நூல்கள் மிக வலுவாகவும், பளப்பாகவும், விலையுயர்ந்தாகவும் இருந்தது. இதை அறிந்த சீனர்கள் பட்டுடன் செடி ,கொடிகளிலிருந்து இயற்கை சாயத்தை கண்டுபிடித்து பல வண்ணங்களான பட்டு ஆடைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பட்டும், சாயமும் உலகம் முழுதும் அறியப்பட்டது.

இந்திய துணைக் கண்டத்தில் ஆடைகளின் வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தையது. இந்தியர்கள் உள்ளூரில் வளர்க்கப்பட்ட பருத்தியால் ஆன ஆடைகளை அணிந்துள்ளனர். ஹரப்பா காலத்தில் கிமு 2500-ல் கூட பருத்தி பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்ட முதன்மையான இடங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அருகிலுள்ள தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்கள் மற்றும் கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் காணப்படும் மனித கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம். ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்திய வேதாகமங்களில் (Scripture) உடைகளை மனித உடலைச் சுற்றி போர்த்தக்கூடிய உருவங்களே காணப்படுகிறது. பாரம்பரிய இந்திய உடைகள் பெரும்பாலும் உடலைச் சுற்றி பல்வேறு வழிகளில் கட்டப்பட்டன.

தென் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் நெசவு செய்ததும் சாயம் ஏற்றுவதும் நம் முன்னோருக்கு தெரிந்து இருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் பயன்படுத்தியத்தன் சான்று கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான நூற்புக்கதிர்கள்,அரிக்கமேட்டில் கிடைத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட நூற்புக்கதிர்கள், கொடுமணலில் கிடைத்த நூற்பு உருளைகள் போன்றவை தமிழகத்தில் பண்டைக்காலத்தில் நெசவு செய்யப்பட்டதற்கான ஒரு மிகப் பெரிய சான்று.

இப்படி ஒவ்வொரு மனிதச் சமூகங்களிலும் ஒவ்வொரு நாகரிங்களிலும் அந்தச் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப ஆடைகள் மற்றும் நாகரிகங்களின் வளர்ச்சி நடைபெற்றது. நாகரிக வளர்ச்சியையும் சமூக மாற்றங்களையும் இன்றும், நமக்கு ஆடைகள் அடையாளம் காட்டுகின்றன அல்லவா ?

சிந்துஜா சுந்தர்ராஜ்