நூல் மதிப்புரை : ஒங்கூட்டு டூணா  – தேனிசீருடையான்

நூல் மதிப்புரை : ஒங்கூட்டு டூணா – தேனிசீருடையான்



ஒங்கூட்டு டூணா.

(வகுப்பறைக் குறிப்புகள்)

தேனிசுந்தர்.

பாரதி புத்தகாலயம்.

முதல் பதிப்பு ஜனவரி 2023

பக்கம் 88 விலை90/

குழந்தைகளே நடித்து குழந்தைகளே இயக்கும் கலைக்காவியம்.

“உனக்குத் தெரியும்; ஒரு குழந்தை ஒரு வார்த்தையைச் சொல்லும்போது அது உனக்குத் தெரியும் என்ற உண்மை உனக்குப் புரியும்.”

நான் ஆறாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்தும் லண்டனில் இருந்தும் வெளிவந்த பிரைல் வடிவப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவற்றில் குழந்தைகளுக்கான பருவ ஏடு ”சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட்” முகப்பு அட்டையில் மேற்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். (you know that truth when a child says it in her language.)

ஒரு குழந்தை அனுதினமும் பேசும் மொழிதான் என்றாலும் அது புதிய திசையில் இருந்து புறப்பட்டு புதிய இலக்கு நோக்கிப் பயணிப்பதை உணரமுடிகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக் கொள்வதுபோல நமக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது. அனுதினமும் கண்டு கேட்டவை என்றாலும் ஓர் குழந்தைநல விரும்பியால்தான் அதை ஆவணப் படுத்த முடிகிறது.. தேனிசுந்தர் அதைச் செய்திருக்கிறார். “குழந்தை இயலின் ஆவணக் காப்பகம் தேனிசுந்தர்” என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதி அதை நிரூபித்திருக்கிறார். அவற்றின் பரிணாமக் கோடாய் இந்த மூன்றாவது நூல் வந்திருக்கிறது.

இந்த ஆண்டு (2023) தேனியில் நடந்த முதல் புத்தகத் திருவிழாவின்போது வெளிவந்தன முக்கியமான இரண்டு சிறார் இலக்கிய நூல்கள். ஒன்று ச க முத்துக்கண்ணனும் ச. முத்துக்குமாரியும் இணைந்து எழுதிய “கேள்விகேட்டுப் பழகு.” இன்னொன்று தேனிசுந்தர் எழுதிய ”ஒங்கூட்டு டூணா.” இது இவரின் மூன்றாவது நூல் என்பதைத் தமிழ்நிலம் நன்கு அறியும்.

நாம் அனைவரும் வாசித்து அறிந்து வைத்திருக்கிற கதை சிங்கம்-மாடு கதை. நான்கு மாடுகள் ஒன்றாக ஒற்றுமையோடு மேய்ந்துகொண்டிருக்கும்போது சிங்கத்தால் அவற்றை வேட்டையாட முடியவில்லை. அவற்றுடன் ;பேசி அவற்றைப் பிரித்து, அவை தனித்தனியாய் மேயும்போது ஒவ்வொன்றாய் வேட்டையாடுகிறது. காலங்காலமாய்ச் சொல்லப்பட்டு வரும் இந்தக் கதை ஒரு குழந்தையின் மன அரங்கத்துக்குள் புகுந்து வேறொரு வடிவமெடுத்து வெளிவரும்போது அது ஒரு புதுக்கதை ஆகிறது. வாசிப்பின் வழியே இன்னொன்றைப் படைக்க முடியும் என்பது இலக்கிய எழுத்தாளர்களின் அனுபவம். அப்படி ஓர் அனுபவத்தின் வழியே  அனிச்சையாய் ஒரு குழந்தை உருவாக்குகிறது என்றால் அது எத்தனை பெரிய படைப்பாற்றல்.

“சார்!

ஒரு ஊருல

ஒரு பெரிய மலை இருந்துச்சாம்.

அங்க ஒரு பெரிய சிங்கம் இருந்துச்சாம்;

நாலு மாடு இருந்துச்சாம்.”

“மாடு பெரிசா சிறிசா?

சொல்லவே இல்ல.”

”பெருசுதான் சார்.”

 

“எவ்வளவு பெரிசு?”

 

“ரெம்பப் பெரிசுசார்;

அதோட கொம்பு

வா………..னத்து வரைக்கும் இருக்கும்.”

“ம்ம்.”

“அப்ப ஒருநாஃ

அந்த மாடு

சிங்கத்த ஒரே முட்டு முட்டுச்சாம்.

அப்படியே சிங்கம் போயி

வானத்துல விழுந்துச்சாம்.”

“அப்பறம்?”

 

”மாடு செத்துப் போயிருச்சு.”

இந்தக் கடைசிவரிதான் குழந்தை மொழியிலான கதையின் மையம். வானம்வரை நீண்ட கொம்புகளால் முட்டும்போது முட்டு வாங்கிய சிங்கம்தான் செத்திருக்க வேண்டும். ஆனால் “மாடு செத்துப் போயிருச்சு” என்ற மொழி அற்புதமானது.

மாடு முட்டி சிங்கம் வானத்தில் விழுந்துவிட்டது என்பது புதுக்கதை. மாடு செத்துப் போச்சு என்பது பழைய கதை. பழமையின் சாரத்தில் புதுமை கட்டப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் குழந்தைக் கதையைவிட குழந்தைகளே சொல்லும் மழலைக் கதைதான் இன்றைய குழந்தை இலக்கியத்தின் அச்சாக இருக்க முடியும். கேட்டு உள்வாங்கிச் சேமித்த பாலில் இருந்து புதிய நெய் உருவாக்கப்படுகிறது.

ஆசிரியருக்குப் புலனாகாத ஒரு கேள்வியை ரெண்டாப்பு மாணவன் கேட்கிறான். மலைகளின் அரசி உதகமண்டலம்; இளவரசி கொடைக்கானல்; அப்படியானால் அரசன் எங்கே?

அரசி இருந்தால் அரசன் இருக்க வேண்டும்தானே? தமிழ் நிலத்தின் சகல மனிதர்களும் அரசி, இளவரசி என்ற சொல்லாடல்களைக் கேட்டுத்தான் வந்திருக்கிறோம். நம் சிந்தைக்கு எட்டாத கேள்வி குழந்தைகளுக்கு எப்படி எட்டுகிறது? சாம்பல் மூடாத நெருப்பு குழந்தையின் மனசில் கனன்றுகொண்டிருக்கிறது. அந்த வெளிச்சத்தின் வழியே குழந்தைகளுக்கு ஏராளமான சங்கதிகள் புலனாகின்றன. குழந்தை வாழ்வியல் யதார்த்தத்தின் ஒரு பகுதி அது. அவற்றைக் கேள்வியாக்கி வெளியிடும்போது ஆசிரியர் திணறுகிறார்.

 

“ரெண்டாம் வகுப்பு

அனிருத் கேட்டான்;

அப்போ மலைகளின் ராஜா

எது சார்?”

அந்தக் கேள்விக்கு விடைசொல்லத் தெரியாமல் ஆசிரியர் திணறுகிறார்.

”புத்தகத்துல அதுபற்றி இல்லியே;

என்ன செய்வேன்?”

இன்றைய நிலையில் புத்தக வாசிப்பு இல்லாத ஆசிரியர்கள்தான் அதிகம். வாசிக்கும் ஆசிரியர்களுக்கே விடைதெரியாத போது வாசிப்பறிவில்லாத ஆசிரியர்கள் என்ன செய்வார்கள். புத்தகப் புழுவாய் இயங்கும் ஆசிரியர்களுக்கும் வாசிப்பறிவில்லாத ஆசிரியர்களுக்கும் ஒரு குட்டு வைக்கிறார் சுந்தர்.

“மதிய உணவு,” “சத்துணவு,” போன்ற சொல்லாடல்களும் நடவடிக்கைகளும் நடுத்தர மக்களுக்கு லேசான சங்கதியாய் இருக்கக் கூடும். கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை மட்டும் உண்டு படுக்கப் போகும் அவலம் இன்றும் இந்தியப் பெருநிலத்தில் இருப்பதைப் பலரும் உணர்வதில்லை. வெறும் கடுங்காஃபி குடித்துவிட்டு, முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் இன்றும் கிராமப் புறங்களில் ஏராளம். மதியம் அந்த ஒருவேளை உணவுக்காக ஏழைக் குழந்தைகள் ஏக்கத்தோடு காத்துக்கிடப்பதை தேனிசுந்தர் போன்ற ஒருசிலரால் மட்டுந்தான் உணர முடிகிறது.

“மணி பத்தாச்சு;

வருகைப் பதிவெல்லாம்

முடிச்சாச்சு.”

 

”அப்பத்தான்

ஆடி அசஞ்சு வந்தாங்க

யோகா.

ஒண்ணாம் வகுப்பு.”

“இவன்

பள்ளிக்கூடம் வார நேரமா;

ஒனக்கு ஆப்சென்ட் போட்டாச்சு

ஒக்காரு போயி.”

”எப்பவும்போல

அதே சிரிப்பு.”

“சமயல் பண்ற

செல்வியக்காதான் வந்து சொன்னாங்க.

இவுக தாத்தாவுக்கு

நேத்து ராத்திரி ஆக்சிடெண்டு;

அதப் பாக்கப் போன

இவுக அப்பாவுக்கும் ஆக்சிடெண்டு;

       குடும்பமே ஆஸ்பத்திரியில கெடக்கு.”

       ”அதே சிரிப்போட வந்து நிக்கிறா

       யோகா.

       சார். இன்னும் சோறாக்கலையா?”

இந்த வார்த்தைகளில் இருந்து எழும் உணர்ச்சியலைகள் நமது இந்திய வறுமையின் பூதாகர உருவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. விபத்து நடந்த வீட்டில் சமயல் செய்யாத நிலையில் குழந்தையாவது சாப்பிடட்டும் என்று பெற்றோர் நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்புவது இருள்வெளிப் பரப்பின் நட்சத்திர ஒளிப்பரலாய் மின்னுகிறது.

பொதுவாக ஆசிரிய மாணவ உறவு என்பது அன்யோன்யமாய் இருப்பதில்லை. பிரம்பும் கையுமாய் அலையும் சிங்கம் போல ஆசிரியரும் பயந்து எங்குசென்று ஒளிவது என்ற பதட்டத்தோடு மாணவர்களும் வகுப்பறைகளை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரம்பு வீச்சின் வழியாகத்தான் பாடம் நடத்தப் படுகிறது. ஒருசில ஆசிரியர்களைப் பார்த்தாலே தொடை நடுக்கம் உண்டாகி படிப்பின்மீதான வெறுப்பு கூடுகிறது. ஞாபகசக்தி மெலிவடைந்து மூளை குழம்புகிறது.

ஆனால் சுந்தர் சார் மாணவர்களை வேறுமாதிரி  கையாள்கிறார். அவரின் பெயர் சொல்லி அழைத்துவிட்டு ஓடி ஒளியும் அளவுக்கு மாணவர்களுக்கு சுதந்திரம் தருகிறார். கடைசியாக யோகாவும் பவுனியாவும்தான் அழைக்கிறார்கள் எனக் கண்டுபிடித்து, “நான் ஜெய்ச்சுட்டன்ல” எனப் பெருமிதம் கொள்கிறார். யார் தன் பேர் சொல்லி அழைக்கிறார்கள் எனக் கண்டுபிடிப்பதே இங்கு ஆசிரியப் பெருமிதமாய் மலர்கிறது. வாசக உதடு குறுநகை புரிகிறது. இப்படி ஒரு சுதந்திர வெளியை அனைத்து ஆசிரியர்களும் பின்பற்றினால் படிப்பு ஆணியைப் போல் அறையப்படாமல் விதையைப் போல் தூவப்படும் என்பதில் ஐயமில்லை.

“வாசல்ல எட்டி எட்டிப் பாக்க வேண்டியது;

சுந்தர் சார்; சுந்தர் சார்ன்னு சத்தம் போடுறது;

திரும்பிப் பாத்தா மறஞ்சுக்கிறது!”

“நாலு தடவ தப்பிச்சுட்டாய்ங்க.”

”இந்த முறை

 நான் திரும்பவே இல்ல;

பாத்துக்கிட்டே இருந்தேன்;

சிக்கிட்டாய்ங்க.”

ஒரு தடவ

நானும் ஜெயிச்சுட்டேன்.”

இவரல்லவா உண்மையான ஆசிரியர்! குழந்தைகளின் வெகுளித்தனமான நடவடிக்கையில் தன்னை ஐக்கியப்படுத்தி  தோற்றுப் போவது மாணவர்களைப் பாடங்களை நோக்கி ஈர்க்கும் மிகச்சிறந்த உத்தி. சுந்தருக்கு அது கைவந்திருக்கிறது.

 

ஆசிரிய மாணவ உறவின் சுதந்திர நெருக்கம் இன்னோர் அத்தியாயத்திலும் பிரிதிபலிக்கிறது.

“ஏய்

வாங்க; எல்லாரும்

சார சுத்தி நின்னு

மொறச்சுப்பாப்பம்.

–இது பால்வாடி கேப்டன்

ரஞ்சித் உத்தரவு.”

உடனே

குட்டீஸ் எல்லாம்

டேபிள சுத்தி நின்னு

மொறச்சுப் பாப்பாய்ங்க

நம்மள………

“டேய்

வேணாம்டா ரஞ்சித்து;

பயம்மா இருக்குடா.”

“நாங்க அப்படித்தான்

பாத்துக்கே இருப்பம்.”

“ப்ளீஸ்டா;

சாருக்கு பயமா இருக்குடா.”

“எம்மே ஹர்சிகா!

சாரு இதுக்குப் போயி

பயந்துட்டாரும்மே.”

ஆசிரியர் பிரம்புடன் அமர்ந்திருந்தால் இந்தக் குழந்தை மனம் வெளிப்ப்ட்டிருக்குமா? குழந்தைக் குறும்பு உள் அமுங்கி அவிந்து போனால் காய்க்காமல் உதிரும் பூவைப்போல் ஆகிவிடும். குழந்தைகளின் வளர்ச்சி அவர்களின் சுதந்திரச் சொல்லாடலில் இருக்கிறது. அன்னியத் தன்மையற்ற அன்யோன்யம் மனசில் படியும்போது படிப்பு இயல்பானதாய் மாறிவிடுகிறது.

பால்வாடியில் இருந்து மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களே இந்த நூலின் கதா நாயகர்கள். அவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான உறவுமுறைதான் பாடுபொருள். குழந்தைகள் தங்கள் சொல்லாடல்மூலம் அலாதியானதோர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறார்கள். “ஒங்கூட்டு டூணா” குழந்தைகளால் படைக்கப்பட்டுள்ள மகத்தான இலக்கியப் பனுவல். இந்நூலில் ”நகையே உவகை, இளிவரல், மருட்கை” எனத் தொல்காப்பியம் வரையறை செய்திருக்கிற நவரசங்களும் வருகின்றன. பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய குழந்தை உளவியல் வருகிறது. மூட நம்பிக்கைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது.

தேனிசுந்தர் இயக்கத்தில் குழந்தைகள் நடிக்கும் அற்புத இலக்கிய…….திரைக் காவியம் இந்த நூல். குழந்தைகளுக்கான அறிவுரையாக இல்லாமல் குழந்தைகளே அறிந்தும் புரிந்தும் வாசிக்கக் கூடிய குழந்தைகளுக்கான கலைக் களஞ்சியம் “ஒங்கூட்டு டூணா.”

இந்நூலின் இன்னொரு நல்ல அம்சம் ஹைக்கூ மேதை மு முருகேஷ் எழுதியுள்ள அணிந்துரை.

வாங்கி வாசியுங்கள். புதிய அனுபவம் கிடைக்கு..

நூல் அறிமுகம்: மாலினி சீதாவின் வகுப்பறை மொழி – தி. தாஜ்தீன்

நூல் அறிமுகம்: மாலினி சீதாவின் வகுப்பறை மொழி – தி. தாஜ்தீன்

நூல் : வகுப்பறை மொழி ஆசிரியர் : மாலினி சீதா விலை : ரூ.₹80/- வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/ விற்பனை : 24332924 புத்தகம் வாங்க : www.thamizhbooks.com bharathiputhakalayam@gmail.com வகுப்பறை மனிதநேயம்…
நூல் அறிமுகம்: கலகலவகுப்பறை சிவாவின் ”மெல்ல மலரும் ஆசிரியர்” – சுதா

நூல் அறிமுகம்: கலகலவகுப்பறை சிவாவின் ”மெல்ல மலரும் ஆசிரியர்” – சுதா




நூல் : மெல்ல மலரும் ஆசிரியர்
ஆசிரியர் : கலகலவகுப்பறை சிவா
விலை : ரூ.₹80/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

வகுப்பறை நிகழ்வுகளை தொகுக்கப்பட்ட புத்தகம் இது.
வகுப்பறை என்றால் அமைதியாக இருப்பது என்பதை மறுபரிசீலனை செய்ய வைத்த புத்தகம். குழந்தைகள் வாசிப்பு திறன் குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை இதை மீட்டெடுக்க என்ன வழி.

வகுப்பறை வாசிப்புச் சாலையாய் மாற்றுவதே இதற்கு சிறந்த வழிமுறை. நோட்டுக்கு அட்டை போடுவது என்பது ஒரு கலை அதோடு அதை யார் போடுவது என்பதில் ஒரு போரே நடக்கும் ஆனால் இப்போது அப்படி எல்லாம் அல்ல அந்தந்த நோட்டுக்கு தக்கவாறு அட்டைகள் ரெடிமேட் ஆகவே கிடைக்கிறது.

பேனாவுக்கு மை ஊத்துவது என்பது ஒரு கலை அதிலும் ஒரு சொட்டு கீழே சிந்தாமல் ஊற்றுவது அத்தனை சுலபம் இல்லை ஆனால் இப்போது காட்ரேஜ் வாங்கிக் கொள்கிறோம்.இப்படி ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் நாம் குழந்தைகளை விடுவித்து சோம்பேறிகள் ஆகிக் கொண்டிருக்கிறோம் அல்லது அவர்களின் மன அழுத்தத்தை நாம் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றால் செயல்பாட்டு முறைகளில் இல்லாத எது ஒன்றையும் கற்பித்து வழக்கமாக முடியாது.

வாசிப்பு ஒரு மனிதனை என்ன செய்துவிட முடியும்.

மன அழுத்தத்தை தீர்க்க முடியும். அறிவை விரிவு செய்ய முடியும்.

இன்று நிறைய செயலிகள் நம் கைக்குள். இருந்தும் வாசிப்பின் அவசியம் என்ன. புத்தகம் வாசிப்பது என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது.

லேண்ட்லைன் போன் இருக்கும் பொழுது 50 தொலைபேசி எண்கள் கூட மனதில் இருக்கும் ஆனால் இப்போது கணவரின் இன்னும் மனைவியின் இன்னும் குழந்தைகளின் இன்னும் கூட நினைவில் இருப்பதில்லை. அதுபோல்தான் அலைபேசியில் நாம் தேடும் விஷயங்கள்.

இப்படி எண்ணற்ற ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது இந்த புத்தகம். ஜன்னலில் வரும் வெளிச்சம் கட்டாயம் நம்மை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

– சுதா

நூல் அறிமுகம்: சு.உமாமகேஸ்வரியின் ‘உரையாடும் வகுப்பறைகள்’ – வே.சங்கர்

நூல் அறிமுகம்: சு.உமாமகேஸ்வரியின் ‘உரையாடும் வகுப்பறைகள்’ – வே.சங்கர்




நூல் : உரையாடும் வகுப்பறைகள்
ஆசிரியர் : சு.உமாமகேஸ்வரியின்
விலை : ரூ. ₹80
பக்கங்கள் : 88
வெளியீடு :
பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

ஒரு அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் நிகழும் ஆரோக்கியமான உரையாடலை மிகைப்படுத்தாமல் செறிவான முறையில் பதிவுசெய்யப்படிருக்கும் நூல்தான் இந்த ‘உரையாடும் வகுப்பறைகள்’

பரிட்சார்த்தமுறையில் ஏராளமான செயல்பாடுகளை வகுப்பறைக்குள் புகுத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் சு.உமாமகேஸ்வரி.

சுமார் 24 தலைப்புகளின்கீழ் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் பதின்பருவப் பெண்குழந்தைகள் எதிர்கொண்ட அல்லது எதிர்கொண்டு வரும் ‘எதார்த்தங்களை’ அப்படியே பதிவுசெய்திருப்பது போற்றத்தக்கது.

திட்டமிடப்பட்ட வகுப்பறைதான் என்றபோதும், அவற்றைத் தாண்டி குழந்தைகளின் எதிர்பார்ப்பை, ஏக்கத்தை, உளவியல் சிக்கலை, பாதுகாப்பு உணர்வை, அவர்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் திறமையை மையமாகக் கொண்டு எல்லாக் கட்டுரைகளும் நகர்ந்து செல்கிறது.

இதற்கு முன் இவர் எழுதிய ‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ மற்றும் ‘இன்றைய சூழலில் கல்வி’ ஆகிய நூல்களில் காணப்பட்ட தொனியும் அறச்சீற்றமும் அப்படியே இருந்தபோதும், கொஞ்சம் மென்குரலில் அன்பைக்குழைத்துச் சொல்லவேண்டியதை நீட்டி முழக்காமல் கணக்கச்சிதமாககச் சொல்லியிருக்கிறார்.

எல்லா வகுப்பறையிலும் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். மாறவேண்டியது ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமுதாயமும் என்பதைக் குழந்தைகள் வாயிலாகவே பேசி அதை மிக அழகாக ஆவணமும் படுத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்குள் நீளும் உரையாடல்களில் ஒரு வீண் விவாதமோ, ஊடகவெளியில் வெளிப்படும் வறட்டுச் சண்டையின் பாதிப்போ இல்லாமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவர்களை நெறிப்படுத்துவதற்குச் சிறந்த மனிதமும், தேர்ந்த அனுபவம் வேண்டும். அவற்றை எல்லாக் கட்டுரைகளிலும் காணமுடிகிறது.

ச.மாடசாமி அவர்களின் அணிந்துரையும், சுந்திரபுத்தனின் வாழ்த்துரையும் நூலைப் பலப்படுத்தியிருக்கிறது. இந்நூல் பொதுவாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் கைகளிலும் தவழவேண்டிய ஒன்று.

பாடத்திட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து உரையாடல்களைப் புறக்கணிக்காத வகுப்பறைகளைத் திட்டமிடுவது அவசியமாகிறது என்பதை உணர்ந்திருக்கிறார். இந்நூலின் ஆசிரியர்.

வாய்விட்டுப் படிக்கும் அவசியத்தை, வகுப்பறை அமைதி மயானத்திற்கு ஒப்பானது என்பதை, மாணவர்களின் புரிதலில் உள்ள குறைபாட்டை, வகுப்பறைச் சந்தேகங்களைத் தீர்க்காமல் பாடம் மட்டுமே கற்றுத்தரும் எந்திரங்களாக இல்லாமல் பாடவேளையை எப்படிக் கையாளுவது என்பதை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் அதற்கான அனைத்து தீர்வுகளும் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே எழுதப்பட்ட கரும்பலகையில் அதைச் சுத்தம் செய்யாமல் மேலும் மேலும் எழுதுவது எவ்வாறு குழப்பத்தை உண்டுபண்ணுமோ அதைப்போல குழந்தைகளின் சந்தேகங்களைத் தீர்க்காத சூழலில் பாடம் என்பதும் வீண் என்பதில் அழுத்தம் திருத்தமாக இருக்கிறார் ஆசிரியர்.

வகுப்பறைக்குள், வாசிப்பின் அவசியத்தை, உற்சாகத்தை, வாய்ப்புகளை, தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு செயல்படுத்தும் போக்சோ மற்றும் குழந்தைகளின் உதவிமையத்தின் செயல்பாட்டை, அரசுப்பள்ளியில் பயில்வதால் பெறும் சிறப்பைப் பெருமையை, ஆதாயத்தைக் கட்டுரைகளினூடே தரத்தவறவில்லை.

”பாடத்திட்டம் மட்டுமே நமக்கு இலக்கு அல்ல. குழந்தைகளின் ஏக்கங்களை (கதைகளின் மூலமாகவும் ஓவியங்கள் மூலமாகவும்) விரல்களின் வழியே மனதை வெளிப்படுத்தும் அற்புதமான தருணங்களை வரவேற்க நாம் தயாராக இருக்க வேண்டும். நமது ஓய்வு நேரங்களை அவர்களது ஏக்கப்பர்வைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற புரிதலோடு இந்நூல் அனைவரின் மனதையும் அசைக்க வந்திருக்கிறது.

உண்மையில், இவருக்கு வாய்த்த பள்ளிக் குழந்தைகள் வரம்பெற்றவர்கள். இனியும் இவரிடம் பயிலக் காத்திருக்கும் குழந்தைகளும் வரங்கள் பெற்று வர வாழ்த்துவோம்.

நூல் அறிமுகம்: ந.பெரியசாமியின் கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள் – வே.சங்கர்

நூல் அறிமுகம்: ந.பெரியசாமியின் கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள் – வே.சங்கர்




நூல் : கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள்
ஆசிரியர் : ந.பெரியசாமி
விலை : ரூ. ₹30
வகை : கவிதை
பக்கங்கள் : 32

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

எந்தவித விகல்பமும் இல்லாமல் ஓடியாடித் திரியும் பெண்பிள்ளைகளின் குழந்தைப் பருவம் எதிர்பாராத தருணத்தில் பதின்பருவத்திற்குள் உந்தித்தள்ளப்படுவது, இயற்கைதானே என்று எல்லோரும் நினைத்தாலும் அது அப்படியல்ல என்பதை ”கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள்” என்ற நூல் உரக்கச்சொல்கிறது.

பதின் பருவத்தினரைக் குறிவைத்து எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட கவிதைகள் எல்லாமே ஏதோ ஒரு இடத்தில் ‘பாலியல் வேட்கையை மனதிற்குள் வெளிப்படும் உளவியல் சிக்கலைக்’ கோடிட்டுக்காட்டும். ஆனால், அதற்கு மாறாக ந.பெரியசாமியின் கவிதைகள் பதின்பருவத்தினரின்மேல் இச்சமூகம் கொண்டுள்ள வன்மத்தை, எதார்த்தத்தை, எதிர்வினையை போகிறபோக்கில் சொல்ல முயன்றிருக்கிறது.

அது ஆணோ பெண்ணோ, பதின் பருவத்தினரின் உள்ளத்தில் தோன்றும் ஆர்வக்கோளாறு, அளவுகடந்த ஆசைகள், நீண்டு செல்லும் கனவுகள், பதற்றத்தோடு கூடிய பரவசம், குழப்பத்தில் துளிர்க்கும் கண்ணீர்த்துளிகள் மாறிமாறி முளைவிடும் விருப்பு வெறுப்புக்கள் ஆகிய எல்லாமே இயற்கை தூவிச்செல்லும் விதைகள்தானே என்று ஆறுதலாய் சொல்லித் தலைகோத ஒரு ’மாயக் கை’ வேண்டுமல்லவா! அது மொத்தமாய்க் கவிதைக்குள் ஒளித்துத் தரப்பட்டதுதான் கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள்.

மொத்தம் 25 கவிதைகளைக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் இளையோருக்கானதாகவும் சிலகவிதைகள் வளர்ந்த இளையோருக்கானதாகவும் புனையப்பட்டுள்ளது. இது உண்மையில் கவிதையா? அல்லது உரைநடையா? என்ற கேள்வி அவ்வப்போது எழுத்தான் செய்கிறது. இருக்கட்டுமே!, சொல்லவேண்டியதைச் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லத்தக்க சமயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதாலேயே கவிஞர் பெரியசாமி வெற்றிபெற்றிருக்கிறார்..

செல்போனைப் பார்த்தால் கண் கெட்டுவிடும் என்று சொல்லும் பெற்றோரே ஆன்லைன் வகுப்பிற்கு வந்து .செல்போனைக் கொடுத்துப் பார்க்கச்சொல்வதும், யார் யாரோ இட்டுச்செல்லும் ’லைக்’ கிற்காக பதின் பருவக்குழந்தைபடும் ஆனந்தத்தையும், தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுவதைச் சகித்துக்கொள்ள இயலாத மனதையும், கவிதையில் சாதுரியமாகச் சொல்லிச் செல்வதற்கு அசாத்தியத் துணிச்சல்வேண்டும்.

அதுமட்டுமல்ல, வலிய வரும் அன்பைக்கூட இனி அடையாளம் காணவேண்டும் என்று சொல்லும் கரிசனமான வார்த்தைகளையும், வகுப்பறையில் ரகசியமாய் கைமாறும் நாப்கின்னின் மகத்துவத்தையும், பெற்ற தாயே சிலசமயங்களில் மகளுக்கு ஆதரவாகவும், பலநேரங்களில் சந்தேகக் கண்கொண்டு பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனிப்புக்கு உள்ளாக்கிக் கவிதையாக்கப்பட்டிருக்கிறது.

கடிதம் தரும் உயிர்ப்பை இன்றைய செல்போனில் வரும் குறுஞ்செய்திகள் தரத்தவறிவிட்டதை ஏக்கத்தோடு பதிவுசெய்கிறது ஒருகவிதை.

கொரானா காலத்தில் எதிர்கொண்ட அனுபவத்தைச் சிலகவிதைகளும், வகுப்பறையில் கவனக்குறைவாய் இருந்ததற்குத் தண்டனை இன்னும் வாழ்வில் முன்னேறாமல் இருக்கும் போதாமையையும் தன் வயதொத்த குழந்தைகள் செய்யும் சேட்டையையும் ரசிக்கும்படி கவிதைகள் ஒளித்துவைத்திருப்பது சிறப்பு.

ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு எல்லா கவிதைகளும் இல்லை என்பது வாசிப்பாளருக்கு ஏமாற்றம்தான் என்றபோதும், இப்படிப்பட்ட கவிதைகளும் இடையிடையே தேவைதான் என்பதை வாசித்து முடித்தபிறகுதான் உணரமுடிகிறது.

சில கவிதைகள் இன்னும் செப்பப்பட்டுத் திரும்பவும் எழுதப்படவேண்டும் அல்லது மெல்லிய மொழி நடையை அழகியல் வார்த்தைகொண்டு புனையவேண்டும் என்பதே என்போன்ற வாசகரின் கருத்தாக இருக்கமுடியும்.

அழுத்தமாகச் சொல்லவேண்டிய கருத்தைப் பட்டும் படாமல் சொல்வதால் பயனேதும் இருக்கப்போவதில்லை.  எதார்த்தமான விசயங்களை ஏனோதானோ என்று எழுதிச்செல்வதால் எந்தவித எதிர்பார்ப்பையும் கூட்டிவிடப்போவதில்லை என்பதை மனதில் கொண்டு இனிவரும் கவிதைகள் எல்லா கோணங்களிலும் எதிரொலிக்கட்டும்.

வாழ்த்துகளும் பேரன்பும். நன்றி. 

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 2 – டாக்டர் இடங்கர் பாவலன்





தாய்ப்பால் வகுப்பறை பாடத்திட்டம்

 

மருத்துவமனைப் பள்ளியறையில் வீடுகளில்
வகுப்பறை I. பிரசவ மேசையில் II. பிரசவத்திற்குப் பின்பான வார்டில் III. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு
சுகப்பிரசவம் சிசேரியன்
படிப்புக் காலம் பிரசவித்த முதல் இரண்டு மணி நேரத்தில் 0 முதல் 3 நாட்கள் 0 முதல் 7 நாட்கள் 3-7 முதல் 42

நாட்கள் வரை

பாடமுறை மருத்துவ பள்ளிப்பாடம் வீட்டுப்பாடம்
கற்றல் பாடங்கள் பிரசவித்த உடனேயே மார்பில் பிள்ளையைப் போட்டுத் தவழவிட்டு தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றி கற்றுத் தேர்தல் 1.தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல்.

2.தாய்ப்பால் புகட்டுவது பற்றி நேரடி பயிற்சி எடுத்துக் கொள்ளுதல்.

3.தாய்ப்பால் புகட்டும் பலதரப்பட்ட முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

4.வீடு செல்லும் முன்பாக முழுவதுமாக கற்றுத் தேர்தல்.

1.சிசேரியன் செய்தும் அதன் சிரமமின்றி தாய்ப்பால் குடுக்கும் முறையைக் கற்றுத் தேர்தல்

2.சிசேரியன் கால மருந்துகள், மயக்கநிலை, தாமதமாகும் முதல் தாய்ப்பால் பாலூட்டல் நிகழ்வுகளைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ளுதல்.

1.மருத்துவமனையில் கற்றுக் கொண்டதை, எவர் உதவியுமின்றி சுயமாக பிள்ளைக்குப் புகட்டி வீட்டிலேயே பயிற்சி எடுத்தல்

2.குழந்தைகள் தொடர்பாக, தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பாக எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு உடனடியாக அதைக் களைந்து கொள்ளுதல்.

3.வீட்டில் உள்ளோரின் மூடநம்பிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் குழந்தைகளை வளர்த்தெடுத்தல்.

4. நாற்பது நாட்கள் முடிந்த பின்பு அல்லது முதல் தவணைத் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வருகையில் தாய்ப்பால் புகட்டிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்தல்.

நூல் அறிமுகம் : பேரா ச.மாடசாமியின் ’மனச்சாட்சியின் குரல்கள்’ – தேனி சுந்தர்

நூல் அறிமுகம் : பேரா ச.மாடசாமியின் ’மனச்சாட்சியின் குரல்கள்’ – தேனி சுந்தர்




நூல்: மனச்சாட்சியின் குரல்கள்
ஆசிரியர்: பேரா ச.மாடசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 150
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

பேரா ச.மாடசாமி அவர்கள் எழுதிய *மனச்சாட்சியின் குரல்கள் :
நெருப்பு வார்த்தைகளின் தோரணம்..!*

அன்புத் தோழர் பேரா.மாடசாமி அவர்களின் புதிய நூல்.. மனச்சாட்சியின் குரல்கள்..!

அவசரத்தில் மனதின் குரல் என்று வாசித்து விடக் கூடாது.. அவை பிரதமர் சொல்லும் மாதாந்திர பொய்கள் என முகப்பிலேயே பெயர்க் காரணம் சொல்லி நம்மை எச்சரிக்கிறார்..

அவ்வப்போது முகநூலில் வாசித்த பதிவுகள் தான் என்றாலும் தொகுத்து படிக்கையில் ஒரு சுவாரசியமாக, விறுவிறுப்பாக இருக்கிறது..

நூலில், குழந்தைகள் குறித்த பதிவுகள் தெவிட்டாத இன்பம் என்றால்.. அறிவொளி அத்தியாயம் சிலிர்ப்பூட்டும் தென்றல்.. இரண்டையும் கடந்தால் அனல்..! கத்தரி வெயில்..!

ஆம், பழமைவாதமும் போராட்டமும் என்கிற அத்தியாயம் முழுவதும் அனல்.. அதிகாரம், ஆணாதிக்கம், மதவாதம் குறித்த பதிவுகள் அனைத்திலும் நெருப்பு வார்த்தைகள்.. தெறிக்க விட்டிருக்கிறார்.. வாசிக்க வாசிக்க சுடுகிறது.. நமக்கு சொரணை இருக்கிறதா இல்லையா என்று ஒவ்வொரு பதிவும் சோதிக்கிறது.. கைகள் நடுங்க.. கண்கள் சிவக்க.. உடல் முழுவதும் உஷ்ணம் ஏற்றும் அத்தியாயம் அது..!

மதம் என்றால் எல்லாம் மதமாகி விடுமா.. இல்லை, ஆதிக்கவாதிகளின் மதம் வேறு.. அப்பாவி மக்களின் மதம் வேறு..!

போகிற போக்கில் இந்து அமைப்புகள் என்று சொல்கிறார்களே.. அது சரியா..? அப்படிச் சொல்லலாமா? இந்து அமைப்புகள் வேறு.. அடிப்படைவாத, இந்துத்வா அமைப்புகள் வேறு இல்லையா..?! தெளிவு படுத்துகிறார்..!

மதத்தில் அன்பு ஒரு பகுதி.. பழமைவாதமும் பிரிவினை, வன்முறை இன்னொரு பகுதி.. மக்கள் மனதில் இருப்பது அன்பு எனும் பகுதி.. இந்துத்வா கும்பல் முன்னிறுத்துவது..!?

மதங்களின் ஒரிஜினல் முகம் பழமைவாதம்.. அது போட்டிருக்கும் முகமூடி வேண்டுமானால் மாறிக் கொண்டே இருக்கலாம்.. அவர்களின் ஒரிஜினல் முகம் ஒன்றுதான்.. அது மாறாது..! அது தாலிபானாக இருந்தாலும் சரி.. இந்துத்வா கும்பலாக இருந்தாலும் சரி..!

மேற்கே நிறம்.. இந்தியாவில் “வர்ணம்”.. இரண்டும் ஒன்று தான்..!

பாரபட்சமான கடவுள், பாகுபடுத்தும் சாதி, பெண்ணைக் குற்றவாளி ஆக்கும் ஆணாதிக்கம்.. பெண்ணை இச்சைப் பொருளாக பார்த்த திருட்டு புத்தியின் தொடக்கம்.. அருவருப்பு.. பதுங்கி இருக்கும் ஆபத்து என மனுஸ்மிருதியை வெளுத்து வாங்குகிறார்..

ஏன் இந்த அத்தியாயம் இப்படி கொதிக்கிறது.. மீண்டும் முன்னுரையை வாசித்தேன்.. அவரே சொல்லி இருக்கிறார்.. “இந்துத்துவ வெறியையும் அரசியல் சர்வாதிகாரத்தையும் எதிர்ப்பதே இப்போதைய என் பதிவுகளின் இலக்கு..!”
இலக்கு தப்பவில்லை தோழர்..!

மூளையில் திணிப்பது எளிது. இதயங்களை திறப்பது தான் கடினம்.. ஆனால் அது தான் அவசியம்..!

மாணவர்கள் கும்பல் அல்ல.. வகுப்பறை – ஒரே முகம் அல்ல..!

வகுப்பறை எதைத் தான் மறுத்துப் பேசியது..? எதைத் தான் கேள்வி கேட்டது..?

குளிர்ந்து உறைந்த வகுப்பறைகள் எதற்கு..? பகிரும் வகுப்பறைகள் வேண்டும்.. தொழில்நுட்பமும் உத்திகளும் மட்டுமே புதுமை ஆகி விடுமா..? உள்ளடக்கம் பற்றி பேச வேண்டாமா..? என்று கொதிக்கிறார்.. பாடநூல், கல்விக் கொள்கை, வகுப்பறை, பாகுபலி திரைப்படம் என கல்வி குறித்த அத்தியாயம் விரிகிறது..

நிறைவாக ஆளுமைகள் எனும் அத்தியாயம்.. அதுவும் சிறப்பாக உள்ளது.. நிகழும் போதே எழுதப்பட்ட வரலாறு போல தான் இந்நூலும்..

சமூக, அரசியல் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகள்.. அதற்கு வந்த பின்னூட்டங்கள் என இது ஒரு புதிய முயற்சி..!

106 பதிவுகள்.. கிட்டத்தட்ட 250 பேரின் பின்னூட்டங்கள் உள்ளன. முரண்பட்டவர்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளனவா என்று அறிய ஒரு ஆர்வம். தேடிப் பார்த்தேன்..

பிரதமர் மோடி குறித்த ஒரு பதிவில் “உங்கள் மீது எங்களுக்கு அன்பு உள்ளது. ஆனால் நீங்கள் எல்லாருக்குமான பொது மனிதராக மாற வேண்டும்” என்று எழுதி இருக்கிறார்.. அதற்கு ஒரு பின்னூட்டம் இப்படி வருகிறது.. “அன்பு காட்ட தகுதியில்லாத நபர் அவர் என்பதற்கு குஜராத் சம்பவங்களே சாட்சியம்..!”

தோழரின் வீட்டில் இருந்தே.. அவருக்கு அருகில் இருந்தே பதிவு செய்யப் பட்டிருக்கிறது அந்த பின்னூட்டம்.. ஆம், அது தோழரின் இணையர் லைலாதேவி அம்மா எழுதியது..!

இது போல வேறு சில நண்பர்களின் மாற்றுக் கருத்துகளையும் இடம்பெறச் செய்திருக்கிறார்.. என்னுடைய சில பின்னூட்டங்களும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது நான் பெற்ற பேறு..!

இந்நூல் ஒரு காலக் கண்ணாடி.. ஒவ்வொருவரின் கைகளிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்..!

-தேனி சுந்தர்

வகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன்

வகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன்

  2004 ம் வருடம் லண்டனில் நடந்த ஒரு வர்த்தகர் தலைமை பயிற்சியின்போது அமெரிக்க பிசினஸ் குரு (இன்று அப்படி சொல்வதுதான் பாஷன்) டாம் பீட்டர்ஸ் இங்கிலாந்தின் டாப் வர்த்தக குழும தலைவர்களிடம் மூன்று கருத்துக்களை முன்வைத்தார். மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று…