நூல் அறிமுகம்: சு.உமாமகேஸ்வரியின் ‘உரையாடும் வகுப்பறைகள்’ – இரா.சண்முகசாமி
நூல் : உரையாடும் வகுப்பறைகள்
ஆசிரியர்கள் : சு.உமாமகேஸ்வரி
விலை: ரூ.80/-
பக்கம் : 88
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் , (பாரதி புத்தகாலயம்)
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
பேராசிரியர் #சமாடசாமி அவர்களின் மிகவும் அருமையான அணிந்துரையே தோழர் உமா அவர்களின் நூலுக்கு சிறந்த அங்கீகாரம்.பேராசிரியரின் சிறப்பான பாராட்டுரையுடன் மிகவும் சிறப்பாக நூல் தன் பயணத்தை தொடங்கியது.
ஆசிரியர் என்பவர் தொடர்ந்து வாசிக்கும் பண்புடையவராக இருக்கவேண்டும். அப்போதுதான் உலகை தன்முன் கொண்டு வந்து தன்னிடம் கற்றுக்கொள்ள வரும் குழந்தைகளுக்கு காண்பிக்க முடியும். இங்கே ஆசிரியர் தோழர் உமா மகேஸ்வரி அவர்கள் குழந்தைகளின் உலகில் நுழைந்து தானும் குழந்தையாகி சக குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து வருகிறார் தன் வாசிப்பாலும், தன் எழுத்தாலும், தன் குழந்தைகளிடம் கற்றுக்கொண்டதாலும்.
குழந்தைகளிடம் கற்கும் ஆசிரியரே குழந்தைகளின் நெஞ்சினில் குடிபுக முடியும்.
அப்பப்பா எவ்வளவு கற்றல் அனுபவங்களை கொண்டுள்ளார் ஆசிரியர்! மனம் திறந்து உரையாட ஏங்கும் குழந்தைகளுக்கு அவ்வாறே நடக்கிறார்.
‘நீங்க ட்ரெயினிங் மிஸ்ஸா?’
‘ஏம்பா கேட்கிற?’
‘இல்ல மிஸ் ட்ரெயினிங் எடுக்கிற மிஸ்ஸூங்க தான் எங்களோடு சகஜமாக பேசுவாங்க. நீங்களும் அப்படியே பேசறீங்களே அதான் கேட்டேன் மிஸ்’. எவ்வளவு ஏக்கம் குழந்தைகளிடம்.
‘மிஸ் எங்க கிளாசுக்கே வரமாட்டேங்கிறீங்க’ என ஏங்கும் மாணவர்கள், ‘நீங்கள் எம் பொண்ணுக்கு வகுப்பாசிரியராக வராததால் பள்ளிக்கூடம் வரமாட்டேங்கிறாள்’ குழந்தையின் அழுகையால் பெற்றோரின் புலம்பல், பள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவரை விடுப்பு எடுக்க வைக்க ரகசியமாய் ஆசிரியருடன் பேசும் பெற்றோர், மாதம் ஒருமுறை புதிய மாணவர் தேர்தல் அடடா என்ன அற்புதமான சம வாய்ப்பு உண்டாக்கல்! இப்படி ஏராளமான அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்.
இந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் ஆசிரியர் நுழைந்துவிட்டால் சிலபஸ் எல்லாம் தூசு. அதாவது சிலபஸை கட்டிக்கொண்டு அழவேண்டாம் என்பதே.
குழந்தைகள் வேறெந்த ஆசிரியரிடமும் செல்லாமல் தனக்கு பிடித்த ஆசிரியருடனே சுற்றிச் சுற்றி வருகிறார்கள் என்றால் அங்கே பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் கூறுவது போல் ‘ஒரு வாய் பல காது’ என்பது மறைந்து பல வாயும், பல காதுகளுமாய் பிறந்து உற்சாகமாய் உறவாடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
ஆசிரியர் உமா அவர்கள் குழந்தைகளுடன் அரசியல் பேசுகிறார், வாசிப்பு உலகை விரிக்கிறார், வகுப்பறையில் மாணவர்களை ஆசிரியர்களாக மாற்றி மாணவராக வகுப்பறையில் உட்கார்ந்து கற்கிறார், சோகமான உள்ளங்களுக்கு மருந்திடுகிறார், மனம் திறந்து பேச தன் ஆசிரிய உலகை மிக அகலமாக திறந்து வைத்திருக்கிறார். இப்படி ஏராளம் ஏராளம் அவருடைய கல்வி உலகம்.
இந்நூலை படித்தவுடன் ஆசிரியர் உமா அவர்களின் மாணவராக அவருடைய வகுப்பில் உட்கார்ந்து படிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக எழுந்தது.
பள்ளியில் குழந்தைகளுடனும், சமூகத்தில் கல்விமுறையில் இருக்கும் சிக்கலை அவிழ்க்க தயக்கமின்றி தன் வாதத்தை சமூக ஊடகம் மற்றும் பல்வேறு ஊடகங்களின் வழியில் வெளிப்படுத்துவது என அவர் அயராது இயங்குகிறார்.
ஆசிரியர்களுக்கு இருக்கும் அற்புதமான வாய்ப்பு வாசிப்பு. வாசிக்க தெரிந்த ஆசிரியர்களால் மட்டும்தான் மாணவர்களின் உள்ளங்களில் வாடகையின்றி நிரந்தரமாக தங்க முடியும்.
மாணவர்களுக்கு பாடப் புத்தகமும், நோட்டும் தற்காலிக குடியிருப்பே. அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பை அதாவது பரந்து விரிந்த இவ்வுலகில் எங்கும் பறந்து திரிய நிரந்தர சிறகை உருவாக்குவதற்காகவும், நமக்காகவும் நாம் வாசிக்க வேண்டும் ஆசிரிய நண்பர்களே!
தோழர் உமா மகேஸ்வரி அவர்களே, உரையாடலால் உண்டான வகுப்பறை அனுபவங்களை நூலாக தந்ததற்கு தோழமையுடன் தங்களின் கைகளை குலுக்கி நன்றி தெரிவிக்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
– இரா.சண்முகசாமி