நூலகாலஜி – 1 தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல… – ஆயிஷா. இரா. நடராசன்
சமீபத்தில் மூன்று வெவ்வேறு மாவட்ட கல்லூரிகளில் நான் ஓக்.மாண்டினோ-வை பற்றி பேசியபோது பெரிய வாசிப்பு அலையையே அது உருவாக்கியதை உணர்ந்தேன். சுய– முன்னேற்ற நூல்கள் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயமே கிடையாது. ஓக்-மாண்டினோ எழுதிய எல்லா 32 நூல்களுமே சுய-முன்னேற்றம் எனும் வகை சார்ந்தவைதான். ஒரு புத்தகமாக, டிஜிட்டல் நூலாக, ஆடியோவாக என லட்சக்கணக்கில் அவை இன்னமும் அசுர சாதனை படைத்து – 1996லேயே இறந்துபோனவருக்கு தற்போதும் கடிதம் எழுதி, மெயில் அனுப்பி, சந்திக்க அனுமதிகேட்டு….. சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் தான் வாசித்த நூல் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு உலகெங்கும் வாசகர்கள்.
‘உலகின் தலை சிறந்த விற்பனையாளன்’ (The greatest salesman in the world) புத்தகம் வெறும் சுய-முன்னேற்ற பிதற்றல்கள் மட்டுமல்ல. ஒரு ஃபேண்டசி-ரகத்தில் புனையப்பட்ட மகா இலக்கிய நீரோட்டம். நான் ஓக்.மாண்டினோவை மட்டும் குறிப்பிட்டு தேர்வு செய்து வாசிக்க பல காரணங்களில் இந்த புனைவு இலக்கிய மயக்கமும் ஒன்று. பிரெயின் டிரேசி, ஜாக் கான்ஃபீல்டு, டி.ஜே.ஹாய்சிங்டன் என்று பெரிய கூட்டமே இந்த சுய – முன்னேற்ற நூல் வகையறாவின் பெருவெற்றி பெற்ற பட்டியலில் இருந்தாலும் ஓக்.மாண்டினோ-வை நான் தனித்தெடுத்ததற்கு வேறு ஒரு சிறப்புக் காரணம் எதுவாக இருக்கும் என்று நானே யோசித்து இருக்கிறேன். உண்மையில் அவனிடம் நான் வசமாக சிக்கிக் கொண்டேன். அவன் என்னை உறங்க விடாதுசெய்த இரவுகளும் உண்டு.
‘உங்களால் முடியும்’, ‘ஒரே வருடம் ஒன்பது வழிகள்’ அது இது என்று (தற்போது தமிழிலும் கிடைக்காதது இல்லை) ஒரு ஆயிரம் ‘விற்பனையில் சாதனை’ வகையறா நூல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நம்ம நாட்டில் ‘ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி’ ராபின் சர்மா, ஷிவ்கேரா போல இவை இல்லாத புத்தகக் கடையே இல்லை. எந்த புத்தகக் கண்காட்சியிலும் சமையல் புத்தகங்களுக்கு இணையான விற்பனை ஆதரவு இந்த சுய-முன்னேற்ற ‘படியுங்கள் – தேடி அடையுங்கள் கோடி’ என்று போய்க்கொண்டிருக்கிறது. ஒருவரின் உழைப்பை ஒட்டச் சுரண்டி தனிமனித ‘அந்தஸ்து’ வகையறாக்களை குறுக்கு வழியில் ‘முதலாளி’ ஆவது எப்படி என்று ஒரு அறிவியலைப் போலவே-முன்வைக்கும் முதலாளித்துவ உலகின் பகடிகளை அறிய மக்கள் அதீத எதிர்பார்ப்போடு இந்தப் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறார்கள் இது ஒரு புறம்.
காலே இல்லாமல் இமயமலை ஏறியவர், எய்ட்ஸ் நோய் வந்த பிறகும் கின்னஸ் சாதனை படைத்தவர்… சாகஇருப்பதாக அடுத்தநாள் வரை மருத்துவரால் கெடு நிர்ணயிக்கப்பட்டவர் ஒலிம்பிக் பதக்கம் பெற்றது என ‘நம்பிக்கை’ துளிர்க்க வைக்கும் சாதனை மனிதர்கள் அவர்களது வழிகள் வலிகள் வாழ்க்கை என பல நூறு புத்தகங்கள். எல்லாமே நம்ப வேண்டியதில்லை. போலிகள் உண்டு. ஆனால் நான் சொல்ல வருவது வேறு. அவற்றின் அட்டையை கிழித்து விட்டால் போதும் நூலாசிரியர் யார் என்பதை கண்டுபிடிக்கமுடியாது. எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். இதுபோன்ற புத்தகங்களின் அமைப்பு கூட மாறாது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு போல படி எங்கே லிப்ட் அங்கே என்று சொல்லி விட முடியும். ஆனால் ஓக்.மாண்டினோவின் புத்தகங்கள் அப்படி அல்ல. அவன் ஒரு வித்தியாசமான கட்டமைப்பாளன். வகைப்படுத்த முடியாத வனவாசி போல ஆகாமல் அவனது புத்தகங்களுக்குள் நுழைய முடியவில்லை என்பதே உண்மை.
டி.ஜே. ஹாய்சிங்டன் என்ற எழுத்தாளருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் சொல்கிறேன். ‘நீங்கள் நினைத்தால்… நீங்கள் வெல்ல முடியும்’ (If you think you can win) என்று பல லட்சம் பிரதிகள் விற்ற ஒரு பிரதியை நான் வாசிக்க நேர்ந்தது. பள்ளிக் குழந்தைகளை சந்திக்கப் போகும்போது நிறைய சவால்கள், சரித்திரங்களை அறிந்துகொண்டு சென்று கொட்டித் தீர்ப்பதற்காக நான் எதை வேண்டுமானாலும் வாசிப்பேன். அப்படி வாசித்தது இந்த நூல். அதே அடுக்குமாடி…. பாணிதான். ஆனால் பிரான்சின் பிரபலமான டூர்-டி-பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் தொடர்ந்து ஏழாண்டுகள் தங்கம் வென்ற லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் பற்றி இரண்டு பக்கம் எழுதி இருந்தார். 25 வயதில் புற்றுநோய் தாக்கியும் அதை வெற்றிகரமாக கடந்து ஆம்ஸ்ட்ராங் சாதித்த கதை. ஆனால் ஆம்ஸ்ட்ராங் ஊக்க மருந்து எடுத்ததையும் அதனாலேயே புற்றுநோய் வந்ததையும்- நான் குறிப்பிட்டு டி.ஜே.ஹா-வுக்கு- இப்படி செய்யலாமா என்று கண்டித்து ஒரு கடிதம் எழுதினேன் (இ-மெயிலில்…) புதிய பதிப்பில் மாற்றி விட்டோம் என்று இரண்டு மாதம் கழித்து பதில் வந்தது. இப்படி பல வித தவறுகள்; ஆனால் அவற்றைக் குறிப்பிட்டு எழுதினால் டி.ஜே.ஹா போல எல்லோரும் பதில் சொல்வது இல்லை என்பதும் உண்மை.
ஓக்.மாண்டினோவிடம் அப்படி ஒன்றையும் காணமுடியாது. காரணம் அவரது நூல்களின் கதையாடல் அம்சம். இண்டு இடுக்குகளில் கூட அரேபியப் பாலைவனங்களின் வரட்டுமனமும் மனித மனங்களின் மனிதநேய தூறலும்.. துயரங்களைக் கடக்கும் துணிச்சலும் சேர்ந்து கொத்துக்கொத்தாக அடுக்கப்படும் அத்தியாயங்கள் அவை. தனது ஒட்டகசாலை முதலாளி விற்றுவரக் கொடுத்த விலையுயர்ந்த கம்பளியை ஆட்டு கொட்டகையில் பசித்த தம்பதிகளின் பிஞ்சு மழலை குளிர்போக்க கொடுத்துவிட்டு இரவோடு இரவாக முதலாளியிடம் வந்து ‘தேவை எனில் ஒட்டகம் மேய்த்து பராமரித்துக் கழிக்கிறேன்’ – என்று வாதாட முடிவு செய்யும் ஹாபீது போன்ற கதாபாத்திரங்களை விட்டு உங்களால் மீளவே முடியாது.
ஆனால் ஓக்.மாண்டினோ எனும் எழுத்தாளனின் சொந்த வாழ்க்கை வரலாறை நான் படித்து அறிந்தபோது அவரது நூல்களைவிட அது என்னை ஓங்கி அறைந்தது. இத்தனை காலம் வாசிக்காமல் விட்டோமே என்று என்னைப் பதற வைத்த வாழ்க்கை அது. எல்லோரும் ‘உயரச் செல்லுங்கள்‘ (Grow Higher) என்று எழுதும்போது அவர் ‘கீழ்நோக்கி செல்லுங்கள்’ (Go Below the surface) என்று எழுதியவர். எத்தனை துயரமான வாழ்க்கை எத்தனை அற்புதமான செய்தி.
‘ஓக்.மாண்டினோ என் உண்மையான பெயரல்ல’ எனும் தலைப்பில் தனது புத்தகங்களில் ஒன்றில் ஒரு முன்னுரையை அவர் எழுதுகிறார். ஆமாம்; அவர் பெயர் அகஸ்தியன். அமெரிக்காவில் பர்மிங்ஹாம் என்கிற கிராமத்தில் பிறந்தவர். பிறகு ‘இல்லை, ஊர் பெயர் நாடிக்’ என்று எழுதினார். பிறகு ‘வருடம், நாள் எல்லாம் மறந்துவிட்டது’ என்று எழுதினார். அம்மா மட்டும்தான். அப்பா தெரியாது, இத்தாலியில் இருந்து புலம்பெயர்ந்த ஒற்றைத்தாய், ஊர் இத்தாலி, பேசியது ஐரிஷ் மொழி, வாழ்ந்தது அமெரிக்கா, அம்மாவின்- ஒரே கேளிக்கை பொழுதுபோக்கு நூலகம். விபரம் தெரிந்த நாளில் இருந்தே குட்டி அகஸ்தியனுக்கு புத்தக வாசிப்பு ஒட்டிக்கொண்டது. இருவரும் சேர்ந்து முடிவு செய்த அவரது எதிர்கால விருப்பம் எழுத்தாளர் ஆவது. பள்ளி இறுதி ஆண்டின் சிறப்பான மதிப்பெண் கடந்து மிசோரிப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை ஊடக படிப்பில் இடம் கிடைத்தவரை எந்தச் சலனமும் இல்லை. கல்லூரியில் சேர வேண்டியதற்கு முந்தின நாள் சமைத்தபடியே சுருண்டு விழுந்து மாரடைப்பால் அவரது தாய் இறந்தபோது சிதைத்தது கல்லூரிக் கனவு மட்டுமல்ல எழுத்தாளர் ஆவது, வாசிப்பு எல்லாமே.
இரண்டாம் உலகப்போர் காலமான அப்போது ‘ஆள் எடுக்கிறார்கள்’ என்று அறிந்து அமெரிக்கப் படை போர் விமானி ஆவதற்கு முன் கொஞ்ச காலம் ஒரு காகித உற்பத்தி தொழிற்சாலையில் பளு தூக்கும் வேலை. உலகப்போரில் நேசப்படைகள் சார்பில் பி 24 ரக குண்டு வீசும் விமானத்தில் வெற்றிகரமாக முப்பது முறை ஜெர்மனியின் மேல் பறந்து குண்டு மழை பொழிந்து, போருக்குப் பிறகு ஒரு காப்பீட்டு நிறுவன சிப்பந்தி வேலை. விமானியாக இருந்தபோதே பழகிய ஒருத்தியோடு திருமணம்- அவள் ஏற்கனவே மணமாகி மணமுறிவு பெற்றவர் என்றாலும் மகள் பிறந்து இயல்பாய் போன நாட்களின் ஊடாக அவரது மகள் இத்தாலிய சாகச போர் வீரன் நினைவாக அப்பாவை அழைத்த புது பெயரால் மாண்டினோ ஆனார் அவர். நாள் தவறாமல் சாகசக் கதைகள் பல சொல்வார் செல்ல மகளுக்கு.
அப்படிப்பட்ட மகளுக்கு ஆறே வயதானபோது புதுவிதமான மன-உளைச்சல் நோய் – அவரை- மாண்டினோவை தாக்குகிறது. ஒருலட்சம் போர் வீரர்களில் ஒருவரை தாக்கும் குற்ற உணர்வு நோய். ஜெர்மனியில் தன்னால் குண்டு வீசப்பட்டு எத்தனை குழந்தைகள் மரித்திருக்கும். எத்தனை தாய்மார்கள் அலறியபடி இறந்திருப்பார்கள் என நினைத்து நினைத்து பதறியபடியே உடல்நடுங்க வைக்கும் மனச்சோர்வு நோய் அவரை செயலிழக்க வைத்தது. ரத்த நிறத்தில் எதைப் பார்த்தாலும் திடீர் திடீரென்று சித்தம் கலங்கி ‘நிறைய பேரைக் கொன்றுவிட்டேன்’ என்று ஓலமிட்டவரைத் துறந்த மனைவியோடு மகளும் அவரைத் தவிக்கவிட்டுச் சென்றுவிட எத்தனித்தபோது மாண்டினோ தனது மகளது காலில் விழுந்து ‘போக வேண்டாம்’ என்று கதறினார். என்ன புரியும் அந்தக் குழந்தைக்கு.
ராணுவ-மருத்துவ-உளவியலாளர்கள் அவரை விரைவில் ஜெர்மனிக்குப் பறக்க வைத்தார்கள். எங்கெங்கும் சுற்றி யார் யாரையோ சந்தித்து பள்ளி கல்லூரி உணவு சாலை மருத்துவமனை என ‘மன்னித்து விடுங்கள்’ ‘மன்னித்து விடுங்கள்’ என கதறியபடியே மனச்சுமை இறக்கிட முயன்ற ஆண்டுகளை அவர் எப்படிக் கடந்திருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு வழியாக சிகிச்சை முடிந்து ஒரு உணவு விடுதியில் இழப்புகளை எண்ணி பரிதவித்தபடியே பில் போடும் வேலை. மாலை முழுதும் துயரம் போக எல்லாரையும் போல குடிபோதை. வீதியில் இருக்கிறோமா விடுதியில் இருக்கிறோமா என்று தெளிவற்ற போதைக்கால உலாவின்போது ஒரு கல்லூரி வாசலில் தன்னைக் கடந்து சென்ற கல்லூரியுவதிகளில் ஒருத்தி தன் கையில் பெரிதாக ஓக்.மாண்டினோ என்று பச்சை குத்தி இருந்ததைக் கண்டார். சந்தேகமே இல்லை. அது அவரது மகள்தான். பதற்றம் தெளிந்து அழைத்தும் தன்னை அடையாளமே காணாமல் அவள் கடந்து போய்விட்டதுதான் அவரை இறுதியாக வீழ்த்தி இருக்கவேண்டும். ஓக்.மாண்டினோ என்றால் ‘எங்கே மாண்டினோ’ என்று அர்த்தம்.
இரவுமுழுதும் கதறிஅழுது குடித்துக் குடித்து மறுநாள் விடிந்தபோது தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவெடுத்தார். பலவாறு யோசித்து அலைந்து திரிந்தவர் கண்ணில் அந்த துப்பாக்கி விற்கும் கடைபட்டது. அமெரிக்காவில் தடுக்கிவிழுந்தால் துப்பாக்கிக் கடைகள் இருபத்திநான்கு மணி நேரமும் திறந்திருக்கும். சட்டைப்பையில் இருந்த மொத்தக் காசையும் போட்டு ஒரு கைத்துப்பாக்கியும் இரண்டு தோட்டாக்களும் வாங்க முடிந்தது. அருகே தென்பட்ட ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்தார். மேசை நாற்காலிகள்… அடுக்கப்பட்ட அலமாரி முழுதும் புத்தகங்கள். அது ஒரு நூலகம். ஒரு இருக்கையில் அமர்ந்து துப்பாக்கியைப் பிரித்து வெளியே எடுத்து தோட்டாவை நிரப்பிக் கொண்டிருந்தபோது கவனித்தார்…. அவர் அமர்ந்து இருந்த மேசையில் அவர் கண் முன் அந்தப் புத்தகம். யாரோ பாதிபடித்து அப்படியே போட்டுவிட்டுப் போய் இருக்க ‘நான் இறந்து போவதற்கு முன்…. (Before I die) என்கிற அந்தப் புத்தகத் தலைப்பு அவரைக் கவர்ந்திழுத்தது. துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அந்தப் புத்தகத்தை எழுதியவர் கிளமெண்ட் ஸ்டோன். நூலகம்…. கிளேவ்லாந்து பொது நூலகம். அதை வாசிக்கத் தொடங்கியவர் பிறகு வெறித்தனமாக அந்த குட்டி நூலகத்தின் ஏறக்குறைய எல்லா புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினார் அந்த நூலகத்திலேயே வாழத் தொடங்கி ஓக்.மாண்டினோ என்னும் பெயரில் தன் மகளுக்கு தான் கதை சொல்வது போலவே எழுதத் தொடங்கினார் அவர்… விரைவில் கிளமெண்ட் ஸ்டோன் நடத்தி வந்த சக்சஸ் அன்-லிமிடெட் என்னும் இதழில் அவை வெளிவரத் தொடங்கின… அப்புறம் ஒருநாள் அதே இதழ் ஆசிரியரானார் ஓக்.மாண்டினோ.
ஓக்.மாண்டினோ கிளைவ்லாந்து பொது நூலகத்தை லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட பிரம்மாண்டமாக்கியது வரலாறு. அவரது புத்தகங்கள் ராபின் சர்மா, ஷிவ் கேரா போன்றவர்கள் உட்பட யாவரிடமிருந்தும் வேறுபடுவதற்கு காரணம். எல்லா புத்தகங்களிலும் தனது மகளோடு பேசுவது போலவே அவர் அமைக்கும் நெஞ்சைப் பிழியும் ஒரு தொனி.
தன் தொழிற்சாலையை தன் தொழிலாளர்கள் பெயருக்கே எழுதிவைக்கும் ரேனேவும், தனது உறுப்புகளை தன் நோயாளிகளுக்கே தானம் செய்யும் மருத்துவர் பால் வெரேன்-னையும் எழுதி அதை சுய-முன்னேற்ற நூல் என அழைக்க வேறு யாருக்கு தைரியம் வரும்.
தலைசிறந்த எழுத்தாளராக பல லட்சம் பிரதிகள் கடந்து எழுத்து ஜாம்பவானாக பல கோடிகளுக்கும் பல கோடி வாசகர்களுக்கு தகுதியானவராக பிற்காலத்தில் உயர்ந்த ஓக்.மாண்டினோ, புத்தகங்கள் பற்றிய வெறித்தனமான பேச்சாளராக, நூலக மேதையாக, உயர்ந்து சர்வதேச பேச்சாளர் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ உறுப்பினர் ஆனது உட்பட யாவும் அந்த கிளைவ்லாந்து நூலக ‘தற்கொலை மேசையில்’ தொடங்கியதுதான்.
இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள், வாசகர்கள் கிளைவ்லாந்து நூலகத்தை நாடி வந்த வண்ணம் இருக்கிறார்கள் யாராக இருந்தாலும் ஓக்.மாண்டினோவின் கல்லறையைக் கடந்து தான் அந்த பிரமாண்ட நூலகத்திற்குள் நுழைய முடியும். ஓக்- மாண்டினோ வின் வாழ்க்கைக் கதையை விட பெரிய சுய-முன்னேற்ற நம்பிக்கைப் பாடம் வேறு இருக்க முடியுமா என்ன?.
– ஆயிஷா. இரா. நடராசன்