நிழலில்லாத நினைவுகள்…!!!! கவிதை – ச.சக்தி
ஒரு குட்டி சுவரில் வண்ணத்துப்பூச்சியை
வரைய ஆரம்பிக்கும்
சிறுவனின் கையில் படிந்திருக்கிறது
எப்பொழுதோ பறந்து போன
பட்டாம்பூச்சியின் சிறகு ,
யாரென்று
தெரியாத ஒருவரின்
அறுந்த செருப்பை
தைத்துக் கொண்டிருக்கும் அப்பாவின் விரல்களின்
இடுக்குகளில் படிந்திருக்கிறது
மூன்று காலங்களான
அவர் நடந்த. அவர் நடக்கிற.
அவர் நடக்கப்
போகிற பாதைகள்,
மணல்
வீடொன்றை
குடிசையின் கீழே கட்டி வைத்து விட்டுத்
தூங்கிக்கொண்டிருக்கும் சிறுமியின் கனவில்
அலை அலையாக
வந்து போகின்றது கடலில் சத்தம்,
மரத்திலிருந்து
பழுத்து விழுந்த
சருகுகளிடம் பேசிக்கொண்டிருக்கும்
மணல் மேடுகளும்
சிறிது
நேரத்திலே
நனைந்துவிடுகிறது
எப்பொழுதோ
விழுந்த மழையின் நீர் துளி,
கூரையின்
கீழே அமர்ந்து
மழையோடு பேசிக்கொண்டிருக்கும்
மழலையின் மனதில் பூத்துக்குலுங்குகிறது
சிரிப்பு அலைகள்,
தனக்குப்
பிடிக்காத
அப்பாவுக்காக
பிடிக்குமென்று கைக் கடிகாரம் வாங்கிக்கொண்டு
வரும் மகனின்
சிந்தனை முழுவதும்
முட்களாக
குத்திக்கொண்டு நிற்கிறது அப்பாவிடம் கடிகாரம்
கேட்டு அழுது
புலம்பிய பழைய நினைவலைகள்,
வெகு தூரமாக
பேருந்தில் பயணமாகும் பொழுதெல்லாம்
பயணச்சீட்டு வாங்காமலே நிழலாகவே
பயணத்தை தொடங்குகிறது எப்பொழுதோ
அப்பாவோடு பயணமாகிற
பழைய நினைவு,
கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,