தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 6 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம்-3
தாய்மைக்கால தூய்மையும் ஆடையும்

பெற்றோர்களே, தாய்ப்பால் பற்றிய ஆரம்பகட்டப் பயிற்சியில் மிகவும் முக்கியமானது சுத்தமும், ஆடைகள் பற்றியும் தான். ஏற்கனவே நாம் கர்ப்பகாலத்தில் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றியும், அதேசமயத்தில் பிரசவித்த பின்பாக தாய்ப்பாலூட்டுவதற்கென்றே உடுத்த வேண்டிய உடைகளைப் பற்றியும் பேசியாயிற்று. இப்போது நாம் பிள்ளையைத் தூக்கி பாலூட்டத் துவங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டிய சில பொதுவான விசயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

துவக்கத்திலேயே நாம் பிரசவத்திற்குப் பிந்தைய வார்டு பகுதியில் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், அதேசமயத்தில் பிள்ளை பெற்ற தாய்மார்கள் படுப்பதற்கு இலகுவாக அமைத்துத் தர வேண்டிய படுக்கைகளையும் அதன் சுத்தபத்தம் பற்றியும் பேசிக் கொண்டோம் அல்லவா! அதேசமயத்தில் நம்முடயை தன்சுத்தத்தைப் பற்றியும் நாம் இப்போது விலாவாரியாகப் பேச வேண்டியிருக்கிறது.

ஆம், நாம் பிரசவித்து பிள்ளை வெளியே வந்தவுடனே இரட்டைக் குழந்தை போல அடுத்ததாக நஞ்சுப்பையும் உருண்டு திரண்டு வெளியே வந்துவிடுகிறது. அத்தோடு நஞ்சுப்பை பிரிந்து வந்த கர்ப்பப்பையின் உள்பகுதியிலே புண்ணாயிருக்கிற இடத்தின் காயமாறுகிற நாள் வரையிலும் இரத்தம் மெல்ல மெல்லக் கசிந்தபடியே இருக்கும். அத்தோடு பிரசவித்துத் தையலிட்டுப் புண்ணை ஆற்றுப்படுத்துகிற நாள் வரையிலும் அங்கே அவ்வப்போது பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வெளியேறியபடியேவும் இருக்கும். இப்படியாக பிரசவித்த பின்னால் நம் உடலில் பனிக்குடத் தண்ணீரும், இரத்தம் உறைந்த திட்டுகளும் ஆங்காங்கே படிந்திருக்கும். இதையெல்லாம் கறைபோகத் தேய்த்து வெந்நீர் ஊற்றிக் குளிப்பாட்டுவிடுவார்கள். அச்சமயத்தில் உடலின் வாதையெல்லாம் தண்ணீரின் வெதுவெதுப்போடு கரைந்துவிட்டு, நம் இறுக்கமாகிப் போன உடலும்கூட தளர்ந்துபோய் வலியும் மட்டுப்பட்டுவிடும்.

நம் பிள்ளை வயிற்றுக்குள் பனிக்குடத்தினுள் இருக்கிற போதே அந்தப் பனிக்குட நீரைக் குடித்து விழுங்கி அதை சிறுநீராக வெளியேற்றப் பழகியிருப்பார்கள். இதனால் பிறந்தவுடன் பார்வை சரியாக பிள்ளைக்குத் தெரியாவிட்டாலும்கூட மார்பிலிருந்து கமழுகிற ஏரியோலா சுரப்பியின் வாசமும், சீம்பாலின் மணமுமாக சேர்ந்து பிள்ளையை பாலருந்துவதற்கு ஈர்த்து அழைப்புவிடுக்கிறது. ஒருவேளை இரத்தத்திட்டுகளும், பனிக்குட நீரும் சரியாகக் குளித்து நீக்கப்படாவிட்டால் வெறுமனே வாசத்தை மட்டுமே வைத்து காம்பைத் தேடுகிற அதன் நாசியில் குழப்பத்தை உண்டு பண்ணி அவர்கள் மார்பில் போய் காம்பைக் கவ்வி பாலருந்தத் தூண்டுவதற்கான ஆவலைக் குறைத்துவிடும். இதனால் தான் பிரசவித்த உடனேயே வெந்நீரில் கறை நீங்குமளவிற்கு குளித்து வார்டுக்குள் புகு வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்கள்.

அதேசமயத்தில் ஆடைகள் விசயத்திலும் அப்படித்தானே! பிரசவித்த இரத்தம் நாம் அணிந்திருக்கிற ஆடை முழுவதுமாக உறைந்து ஒரு காகிதத்தைப் போலேவே மாறியிருக்கும். அப்படியான ஆடைகளை முழுவதுமாக நீக்கிவிட்டு நன்கு துவைத்து வெதுவெதுவாக்கப்பட்ட இளஞ்சூட்டுடன் கூடிய ஆடைகளையே நாம் அணிய வேண்டியதிருக்கும். பிறந்த குழந்தையை எப்படி நீலவர்ணப் பெட்டியில் வைத்து சூடுபண்ணித் தருகிறார்களோ, அதேபோல பெற்றவளுடைய உடலையும் வெதுவெதுவாக்கும்படியாக சூடான காப்பித் தண்ணியையோ, குளிக்க வெந்நீரையோ, உடுத்த இளஞ்சூட்டில் ஆடையையோ தருவது தானே சரியாக இருக்கும்? மேலும் இரத்தம் வெளியேறி வெளுத்துப் போய் குளிர்ந்த உடம்பிற்கு இதுதானே இதமானதாவும் இருக்கும்.

இன்னும்கூட சொல்ல வேண்டுமென்றால் தாய்ப்பால் ஊட்டுவதற்கென்றே இருக்கிற ஆடைகளையும், நைட்டிகளையும், உள்ளாடைகளையும் வாங்கி வைத்து பிரசவிக்கும் முன்னரே பத்திரப்படுத்தி இருந்தால் இப்போடு வார்டில் இதை அணிந்து கொண்டே நாம் பாலூட்டுவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் தானே? ஆதலால் தான் நாம் பிரசவத்திற்கு மருத்துவமனை வருகிற போதே பாலூட்டுவதற்குத் தேவையான பொக்கிஷங்களோடும் வர வேண்டும் என்றும் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தாய்மார்களே! நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் இருக்கிறது. பிரசவித்த உடனேயே இரத்தக்கசிவு இருக்குமென்று ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா! அதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் தொடையிடுக்குப் பகுதியில் நாப்கின் போன்ற துணையை வைத்திருக்கச் சொல்லி அறிவுறுத்துவார்கள். ஆனால் இந்தத் துணியென்பது நாம் கடைகளில் வாங்கி அணிகிறதைப் போன்றதான நாப்கின் அல்ல, தாய்மார்களே!

எப்போதும் மாதாமாதம் வருகிற மாதவிடாயின் குறைவான அளவிற்கு ஏற்றவாறே சராசரி நாப்கின்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இரத்தப் போக்கு அதிகமாயிருக்கிற பிரசவித்த காலத்தில் இதைவிட பெரிதாய் பிறப்புறுப்பை முழுவதுமாக போர்த்தியிருக்கும்படி அணிவதற்கென்று மருத்துவமனையிலேயே தயார் செய்கிற சுத்தமான நாப்கினை அணியத் தருவார்கள். அது தொடையிடுக்கில் வைத்தபடி இடுப்பைச் சுற்றிலும் அரைஞாண் கயிற்றைப் போலக் கட்டிக் கொள்ளலாம். இதனால் சாதாரணாக நாப்கினை அணிவதற்கு உள்ளாடை அணிய வேண்டிய அவசியமிருக்காது. அதேசமயத்தில் அப்படி அணிவதால் பிறப்புறுப்பை அழுத்தி காயப்படுத்துகிற பாதிப்பிலிருந்தும் தற்காலிக பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது. ஒருவேளை இரத்தக்கசிவு அதிகமாகி மாற்ற வேண்டியிருந்தால் அதை செவிலியர்களிடம் சொல்லி மாற்று ஒன்றையும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்ல தாய்மார்களே, பிரசவித்தவர்களுக்கென்றே ‘மெட்டர்னிட்டி நாப்கின்’ என்று ஆன்லைன் மற்றும் கடைகளிலும் இப்போது கிடைக்கிறதே!

அடுத்ததாக மார்பைக் கையாள வேண்டிய, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு கவனமாக இருந்தாலும் மார்பிலிருந்து ஏதேனும் ஒருவகையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தாய்ப்பாலூட்டுவதற்கு முன்பே மருந்து கட்டுகிற வெள்ளைத் துணியில் வெந்நீரை நனைத்து காம்பு மற்றும் மார்பகத்தை சுத்தமாக துடைத்தெடுப்பர். இப்படி நிதானமாகச் சுத்தம் செய்ய வேண்டிய வேலையை முதன்முதலாகச் செவிலியரே முன்னின்று செய்வார்கள். பின்பு ஒவ்வொரு முறை பாலூட்டும் முன்பும் பின்பும் நாமே செய்து கொள்ள வேண்டியதுதான். இவ்வாறு செய்கிற போது முதலில் காம்பிலிருந்து துவங்கி அதனைச் சுற்றிய கருவளையத்தையும், அதன் பின்பாக ஒரு வட்டமடிக்கிற வாக்கில் மார்பை சுற்றிலுமாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வெளிப்பகுதியிலருந்து காம்பை நோக்கி கிருமியை சுத்தம் செய்கிறோம் என்று இழுத்து வருவது தடுக்கப்பட்டுவிடும். இந்தச் சமயத்தில் தான் செவிலிருமே தாயவளின் காம்பில் ஏதேனும் புண்கள் தெரிகிறதா, காம்பு உள்ளிழுத்தபடி இருக்கிறதா என்பதையெல்லாம் கவனமாகப் பார்த்து தாய்ப்பால் புகட்டுவதற்கான பச்சைக் கொடியைக் காட்டித் துவக்கி வைக்கிறார்கள்.

ஆனால் இப்படி தாய்ப்பால் புகட்டுவதற்கு தாய்மார்கள் தயாராவது எல்லாம் சரிதான், அதைக் குடிக்க பிள்ளையை நாம் கவனிக்க வேண்டாமா? ஆம், அவர்களுக்கும் ஆடை விசயத்தில் கொஞ்சம் கவனம் தேவை தானே? ஏற்கனவே குழந்தைகளின் உடலில் தன்னைத் தானே வெதுவெதுவாக்கிக் கொள்ளுகிற தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காரணத்தால் அவர்களை வெளியே நீலவண்ணப் பெட்டியில் வைத்து உடலைச் சூடேற்றியோ, அம்மாவின் தோலோடு தோலோடு வைத்தோ பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம் அல்லவா! ஆகையால் குழந்தைகள் இருக்கிற அறைகள் எப்போதுமே வெதுவெதுவாக இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு அவர்களது உடலை வெதுவெதுப்பான துணியால் போர்த்தியபடியே கவனமாகப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். அதேசமயத்தில் தாயோடு அருகாமையில் இருக்கிற சமயத்தில் அம்மாவின் தோலோடு தோலோக ஒட்டியிருக்குமாறும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

நாம் பாலூட்டுவதற்கு அமருகையில் குழந்தைக்கு வெறுமனே உள்ளாடையை மட்டும் அணிவித்தே பாலூட்ட வேண்டியிருக்கும். அப்போதுதான் அவர்களை நெஞ்சோடு அணைத்துப் புகட்டுவதால் முழுக்க முழுக்க குழந்தையின் உடல் அம்மாவின் மேல் வயிற்றோடு நெருக்கமாகிக் கூடுதலான கதகதப்பும் கிடைக்க ஏதுவாகிறது. அட, பிள்ளைகள் பிறக்கிற வரையிலும் அடிவயிற்றில் கிடந்து, இப்போது பால்குடி மறக்கிற காலம் வரையிலும் இனி மேல் வயிற்றில் தான் பிள்ளைகள் கிடக்கப் போகிறார்களா, சரிதான்!

சரி, சரி இப்போது எல்லா முன்னேற்பாடுகளும் தயாராகிவிட்டதல்லவா! இனிமேலாவது நாம் பாலூட்டத் துவங்கிவிடலாம் இல்லியா? ஆம், இத்தகைய அற்புதமான தருணத்திற்காகத் தானே நாமும் இதுவரை புத்தாண்டை வரவேற்பதற்குக் காத்துக்கிடப்பதைப் போல பொறுமையோடு நிற்கிறோம். வாருங்கள் தாய்மார்களே, நம்முடைய பள்ளிக்கூடத்தில் போய் இரண்டாம் வகுப்பில் நம் பிள்ளைக்குப் பாலூட்டுவதற்கான பாடத்தைப் படித்து நேரடியாக நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம்.

-டாக்டர் இடங்கர் பாவலன்