பாலினம் குட்டி கதை – இரா.கலையரசி
குளிர் உயிரைக் குத்தியது. மார்கழி பனி மல்லுக்கு நின்றது.
மணி இரண்டு. டீ போட்ட டின்னை எடுத்துக் கொண்டு மிதிவண்டியில் ஏற்றினாள் வசந்தா.
சூடு குறைவதற்குள் விற்று தீர்த்து விட வேண்டும். இரவு வேலை பார்ப்போர் வசந்தாவிடம் தான் தேயிலை பருகுவார்கள்.
முன்னும் பின்னும் கால்கள் பெடல் அடிக்க, குளிரும் சேர்ந்து அடிக்க ஆரம்பித்தது.
வாம்மா…ஒரு டீனு கேட்டார் காவலாளி கரீம்.சூடான மசாலா டீயை கோப்பையில் தந்தாள். நைட் ஷிஃப்ட் முடித்து கிளம்பியவர்கள் வந்து வாங்கிக் கொண்டனர்.
டேய்! நம்ம வசந்த்டானு சொல்லி ஒருவன் தோளை தட்டினான். “மாறிட்ட போல” னு சொல்லி ஒருவன் கண் அடித்தான்.
வசந்தாவை சீண்டினர். அருகில் வந்த கரீம் “நீங்கள் தான்டா மாறனும் அவங்க இல்ல” னு சொல்லி கம்பை உயர்த்த, விலகி போனார்கள்.
அப்பா! னு திருநங்கை வசந்தா கண் கலங்க, ஆதரவாக அணைத்துக் கொண்டார் கரீம்.