Punai Vilakkiya Nathiyil Neenthi Book By P. Vijayakumar Bookreview By Jananesan நூல் அறிமுகம் - பெ. விஜயகுமாரின் புனைவிலக்கிய  நதியில் நீந்தி - ஜனநேசன்

நூல் அறிமுகம் – பெ. விஜயகுமாரின் புனைவிலக்கிய  நதியில் நீந்தி – ஜனநேசன்




பேராசிரியர் . பி.விஜயகுமார்  ஆங்கில இலக்கியம் முப்பதாண்டு களுக்கு மேலாக  கற்பித்தவர். சமூக அக்கறையும் ,நாட்டுப் பற்றும் மிக்க கல்வியாளர். ஆங்கிலம் வழியாக  உலக இலக்கியங்கள்  அறிந்தவர் மட்டுமல்லாமல் தமிழார்வத்தால்  பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன தமிழ் இலக்கியங்கள் வரை வாசித்து  தன்னையும்  தமிழ்மொழி  நடையையும் புதிப்பித்து வருபவர். செம்மலர், புக்டே  இணைய இதழிலும்  தொடர்ந்து புத்தக அறிமுகக் கட்டுரைகளையும், விமர்சனங்களையும்  செய்து வருபவர். கொரோனா பெருந்தொற்று அலையலையாய்  தாக்கி  மானுடர்க்கு மட்டுமன்றி  சக உயிரிகளுக்கும்  பற்பல கேடுகளும், சிற்சில நன்மைகளும்  செய்திருக்கிறது. 

கொடுந்தொற்று முடக் ககாலத்தில், புத்தகத்தின் பால் தீண்டாமை கொண்டவர்களும், ஊர்முடக்கத்தில் வெளியே போக இயலாமல், புத்தகங்களை தூசுதட்டி வாசித்த  அதிசயங்கள்  நடந்தது. இத்தகு மனிதர்களை  ஆற்றுபடுத்தும் விதமாகமாகவும்  தனது முடக்க காலத்தை  இயங்கும் காலமாக்கவும்  பலநூல்களைத்தேடி தேடி வாசித்து, உடனுக்குடன்   புக்டே இணைய தளத்தின் வாயிலாக நூலார்வலர்களுக்கு அறிமுகம் செய்தார். இப்படி அறிமுகம் செய்த 15 நூல்களைப் பற்றிய  அறிமுகக்கட்டுரைகள் அடங்கிய  தொகுப்புதான்  “புனைவிலக்கிய நதியில் நீந்தி…” எனும் இந்நூல்.

கொடுந்தொற்று முடக்ககால இலக்கியசான்றுகளையும் ,மக்கள் எதிர்கொண்ட விதம்பற்றியும்  வாசகர்களுக்கு பகிரும்விதமாக  பிரஞ்சு இலக்கியமேதை  ஆல்பர்ட் காம்யு  எழுதிய ,”தி பிளேக் “ நாவலை  அறிமுகப்படுத்துகிறார்.  அல்ஜீரியாவில் ஓரான் எனும் கடற்கரை நகரில் பிளேக் நோய் எப்படி தாக்குகிறது, அரசு நிர்வாகத்தின்  அக்கறையின்மையும், மக்களின் அலட்சிய மனோபாவமும், சரியான மருத்துவ வசதியின்றியும், தற்காப்பு உணர்வின்றியும்  மாயும் அப்பாவி மக்கள்  குறித்தும் ,  ஆல்பர்ட் காம்யு நெஞ்சைத் தொடும் வண்ணம்  சொல்ல பயன்படுத்திய உத்திகளையும் பேரா. விஜயகுமார் அறிமுகப் படுத்துகிறார்.  

இதேபோல் நமது ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “தி போஸ்ட்ஆபிஸ்“ நாடகத்தில், கொடும் நோய்வாய்ப்பட்ட அமல் எனும்  சிறுவன் ஊர்முடக்கம் செய்யப்பட்டு அவன்படும் பாடுகளையும், ஜன்னல் வழியே, அவன் இயற்கையோடும், தெருவில் போகும் மனிதர்களோடு கொள்ளும் உறவாடல்களையும், தத்துவச் செறிவோடு  தாகூர் வாசகர்மனத்தில் கிளர்த்தும் தாக்கத்தையும் எடுத்து இயம்புகிறார் விஜயகுமார். இவ்விரு  படைப்புகளும் கொடுந்தொற்றில்  முடங்கிப்போன  மனங்களுக்கு தெம்பையும், ஆறுதலையும் தருகின்றன.

இன்றைய உலகுதழுவிய சூழலில் , நிறவெறியும், பாலியல்வன்ம வெறியாட்டங்களும் மனிதர்களை பீடித்த நோயாக ஆட்டுவித்தலையும் , இவற்றிலிருந்து  மீளும் வழிகளை ஆற்றுப்படுத்தும் விதமாக, ரிச்சர்ட் ரைட் எழுதிய “நேடிவ் சன் “ஆலிஸ் வாக்கர் எழுதிய  “தி கலர் பர்பிள் “ ,சாமன் நஹல் எழுதிய “ஆஸாதி”; பிரியா விஜயராகவன் எழுதிய “அற்றவைகளால் நிரம்பியவள் “ போன்ற படைப்புகளை இந்நூலாசிரியர்  அறிமுகம் செய்கிறார். 

இக்காலத்தில் நம்மை தொற்றிவரும் கொடுந்தோற்றுகளில்  ஒன்றான, மதவெறியின் தாக்கங்களையும், எதிர்கொள்ளும்  முறைகளையும், தோப்பில் முகமது மீரான்  எழுதிய,” அஞ்சுவண்ணம் தெரு “ மு.இராமசாமி எழுதிய , “விடாது கருப்பு” எனும் பெரியாரிய நாடக நூல்கள் மூலம் பேரா. விஜயகுமார் உணர்த்துகிறார். பாசிஸ்ட்களின் அடக்குமுறைகளையும், புத்தகங்களுக்கு எதிரான  நடவடிக்கைகளையும் அவற்றின்  எதிர்விளைவுகளையும், ரே பிராட்பரி எழுதிய “பாரன்ஹீட் -451” நாவல் வழி  சொல்லுகிறார். 

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, அவர்களது  வீரஞ்செறிந்த எதிர்வினைகளைக் கூறும் ,மஹா சுவேதாதேவி  எழுதிய “1084 இன் அம்மா” ,”காட்டில் உரிமை” போன்ற நாவல்கள் மூலம்  தமிழ் வாசகர்களுக்கு  இந்நூலாசிரியர்  அறிமுகம்  செய்கிறார்.

இவற்றோடு சுற்றுச்சூழல்களுக்கு கேடுவிளைவிக்கும் விதமாக, சிலப்பதிகார பின்னணியில்  இரா. முருகவேள் எழுதிய “மிளிர் கல்” நாவலையும், மணல்கொள்ளையின்  விளைவுகளைச் சொலலும் .பா.செயப்பிரகாசம் எழுதிய ,”மணல்” இத்தொகுப்பில் பேராசிரியர் அறிமுகப்படுத்தும் நூல்களின் ஆசிரியர்களின் ஆளுமைச் சிறப்புகளையும், அப்படைப்புகள் உருவான சமூகச் சூழல்களையும், அப்படைப்புகள்  இலக்கிய உலகிலும், சார்ந்த சமூகத்திலும்   ஏற்படுத்திய தாக்கங்களையும், அப்படைப்புகளில் படைப்பாளிகள் கையாண்ட  உத்திகளையும் வாசகமனதில் எளிதில் பதியும், சரளமான நடையில் பேரா. விஜயகுமார்  சொல்லுவது இந்நூலின் சிறப்புகளுள் ஒன்று..!  இந்நூல் வாசிப்புமட்டதை உயர்த்துவது மட்டுமல்ல; ஒரு நூலை வாசகனுக்கு  எப்படி அறிமுகப்படுத்தவேண்டும் என்பதையும் கற்பிக்கிறது.. ஆகவே  இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகின் வாசகர்கள் கையில்  இருக்கவேண்டிய  அவசியத்தையும்  வலியுறுத்துகிறது.

புனைவிலக்கிய நதியில் நீந்தி… என்ற நூல் தலைப்புக்கு  பொருத்தமான, ஈர்ப்பான அட்டைப்படமும், அச்சும், கட்டமைப்பும் இந்நூலுக்கு கூடுதல்  சிறப்பு.

நூல்: புனைவிலக்கிய நதியில் நீந்தி
ஆசிரியர்: பேரா.பெ..விஜயகுமார்.
வெளியீடு: கருத்துப் பட்டறை
பக்கங்கள்: 152
விலை: 170
தொடர்பு எண்; 9500740687

Vara mudindhal Vandhuvidungal Thozhar Book By Sirajudeen Bookreview By Sekaran நூல் மதிப்புரை: சிராஜூதீனின் வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் - பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை: சிராஜூதீனின் வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் நினைவுக் கட்டுரைகள் – பெரணமல்லூர் சேகரன்




நூல்: வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் நினைவுக் கட்டுரைகள்
தொகுப்பு: சிராஜூதீன்
பக்கங்கள்: 232
விலை: ₹225
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

“மனிதனுக்கு மிகவும் பிரியமானது அவனுடைய வாழ்க்கை! மனித வாழ்க்கை வாழ்வதற்கே! ஆனால் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டால், பயந்தாங் கொள்ளி யாகவும், பயனற்றவனாகவும் வாழ்ந்தேன் என்று வெட்கத்துடன் தலைசாயும் நிலைமை வரக்கூடாது. அர்த்தமற்ற மனவேதனையுடன், சித்ரவதையுடன் வருடங்கள் உருண்டோடி விட்டனவே என கழிவிரக்கம் கொள்ளும் பிழைப்பு வேண்டாம்! என் வாழ்க்கை பூராவும் என் திறமைகள் அனைத்தையும் மனித சமுதாய விடுதலையென்னும் உலகிலேயே மகோன்னதமான இலட்சியத்திற்கே அர்ப்பணித்தேன் என்று கண்ணை மூடும் போது நினைக்கும்படி வாழ்வதுதான் மனித வாழ்க்கைக்குப் பெருமை அளித்திடும்”..ஆஸ்த்ரோவ்ஸ்கி

ஆஸ்த்ரோவ்ஸ்கியின்அர்த்த அடர்த்தி மிக்க வார்த்தைகள் கறுப்பு கருணாவுக்குப் பொருந்தியதால்தான் தான் இறப்பதற்கு முன் ” ஐ ஆம் எஸ்.கருணா, மெம்பர் ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா மார்க்சிஸ்ட்” என்னும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மறைந்தார் கறுப்பு கருணா. இவர் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்ததால்தான் ‘வர முடிந்தால் வந்துவிடுங்களேன் தோழர் கருப்பு கருணா’ என்று உளப்பூர்வமான அஞ்சலி உரையை வழங்கியுள்ளார் இ.பா. சிந்தன். இதையே நூலின் தலைப்பாக்கி கறுப்பு கருணா குறித்த அஞ்சலி உரைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளார் சிராஜூதீன்.

இந்நூலில் 34 தோழர்கள் கறுப்பு கருணாவுடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இரங்கல் செய்திகளும் தொகுப்பாளர் சிராஜூதீனின் தொகுப்புரையும், சில கவிதைகளும் முத்தாய்ப்பாய் கறுப்பு கருணாவின் ‘ஒரு பெரும் கனவின் வெளிப்பாடு’ எனும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

இந்நூல் கறுப்பு கருணாவின் இறுதி வார்த்தைகளில் இழைந்த பெருமைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“நான் சுயமாக நிற்கவும் செயல்படவும் கற்றுக் கொண்டேன். கருணா தன்னை முழுமையாக பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டதால் மொத்த குடும்ப பொறுப்புகள், முடிவுகள் என நானே எடுக்க அவர் கற்றுத் தந்தார்.” என்னும் கருணாவின் துணைவியார் செல்வியின் வார்த்தைகள் கருணாவுக்குப் புகழ் சேர்ப்பதோடு ஆண் கம்யூனிஸ்டுகள் தங்கள் வீட்டுப் பெண்களைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே உள்ளன.

திருவண்ணாமலை மலைமேடுகளில் போலித் திருட்டு சாமியார் நித்யானந்தா தனது அடிப் பொடிகளைத் தூண்டிவிட்டு குடில்கள் அமைத்து மலையை ஆக்கிரமிக்க இருந்த திட்டத்தைத் தனது தோழர்களுடன் தவிடுபொடியாக்கியிருக்கிறார் என்பதையும் சமூக ஊடகங்களில் கருணா குறித்தும் அவரின் மகள் குறித்தும் மிரட்டல் பதிவுகள் இடுவதும், கொலை மிரட்டல்கள் விடுப்பது எனவும் வழக்கம் போல ஆட்டங்கள் ஆடிய நித்யானந்தா கும்பலிடமிருந்து மலையை மீட்டு அண்ணாமலையாருக்குத் திருப்பித் தந்த கருணா ஒரு நாத்திகர் என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது.

பாப்பம்பாடி ஜமாவின் அதிரும் பறையொலியில் எப்போதும் கருணா எழுப்பும் ஒலியும் கலந்திருக்கும் என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இரங்கல் உரையில் காணமுடிகிறது.

கருணாவின் இன்னொரு முகமாக நகைச்சுவை ததும்பும் நடவடிக்கைகள் இருந்துள்ளன. சான்றாக தமுஎகச மாநிலப் பொருளாளர் ராமச்சந்திரன் நாடகச் சூழல் ஒன்றை விவரிக்கிறார்.

பிரளயன் டாக்டர்..
கிராம ஆஸ்பத்திரி சூழல்..
டாக்டர் ரூமுக்குள் நுழைவார்..

எஸ்…பேஷண்ட்..
ஒரு கையில் கட்டுடன் பேஷண்டாக கருணா…
டாக்டர்..என்னய்யா..
டாக்டர், என் கையில் அடி பட்டிடுச்சி சார்,
எங்கய்யா காமி,
கட்டுப்போடாத கைய காண்பிப்பார் பேஷண்ட்.
ஏன் அந்தக் கையில கட்டுப் போட்டு இருக்க?
அந்தக் கையிலும் அடிபடாமல் இருக்கத்தான் சார்,
பார்வையாளர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம்.

இப்படி கருணாவின் பிரசன்ஸ் ஆஃப் மைன்டும் நகைச்சுவையுணர்வும் நூலின் பல இடங்களில் காண முடிகிறது. “காவியற்ற தமிழகம், சாதியற்ற தமிழர், கீழடி நம் தாய்மடி” போன்றவை கருணாவின் மூலமாகவே உருவானவை என்பதை இந்நூலைப் படிப்பதன் மூலம் மட்டுமே உணர முடிந்தது.

கோட்டைப்பட்டி கிராமத்தின் கலை இரவுக்காக திருவண்ணாமலையிலிருந்து கிளம்பும்போது பணமில்லாத கையறு நிலையில் சமயோசிதமாய் கருணா பஸ்சில் மேளத்தை அடித்தபடியே மக்களிடமிருந்து பணம் வசூலித்த பாங்கினை இலட்சுமிகாந்தன் தனது அனுபவப் பகிர்வால் உணர்த்தும்போது கருணா கள செயல்பாட்டாளராய் ஜொலிக்கிறார் எனின் மிகையன்று.

இறப்பிற்குப் பின் தன் உடலை மருத்துவமனை ஆய்விற்குக் கொடுத்தது; உறவினர்கள் யாரும் எந்தச் சடங்குகளையும் தன் உடல்மீது செலுத்திவிடாதபடி தன் குடும்பத்தை அவ்வளவு துயரத்திலும் உறுதியுடன் இருக்க வைத்தது; அவரின் சவ ஊர்வலம் புறப்படும் முன்பு “யாரும் பூக்களைத் தூவி சாலையை மாசுபடுத்த வேண்டாம். அது கருணாவிற்குப் பிடிக்காது” என்று அந்தக் குடும்பம் அறிவித்தது, போன்றவைகள் எல்லாம் ஒரு நாளில் நடந்துவிட்ட ஒன்று அல்ல. அது தனது குடும்பத்தை ஒரு தோழர் எவ்வாறு உறுதியுடன் தயார் செய்துள்ளார் என்பதன் வெளிப்பாடுகள்தான் அவை என்று பிரளயன் கூறியிருப்பது பொருத்தமானதே.

இந்நூலில் சில ஆளுமைகள் கருணாவின் இயல்பான முரண்களைச் சுட்டிக் காட்டினாலும் “முரண்களோடு வாழ முடியும், தோழமை சேர முடியும், முன்னேறிக் காட்ட முடியும்-நோக்கம் உயர்வானதாக, சமுதாயத்துக்காக இருக்காமானால். அதற்கு நம்மோடு ‘வாழும்’ சாட்சிதான் கருணா” என்னும் அ.குமரேசனின் வார்த்தைகள் கருணாவின் யதார்த்த வாழ்வின் வெற்றியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

“முகநூல் வெளியில் தனக்கென பல்லாயிரக்கணக்கில் பின்தொடர்பவர்களை, கிட்டத்தட்ட 26000 பேர் வரை கொண்டிருந்தவர் கருணா. அவரது கூர்மையான எழுத்தும், பேச்சு பாணியிலான நகைச்சுவையும், எதையும்
இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வைகளோடு வழங்குகிற பாங்கும் அவருக்கென தனித்த வகையிலான பின் தொடர்பவைகளை அதிகரித்தன” என்னும் சிரீரசாவின் வார்த்தைகளிலிருந்து கருணாவின் முகநூல் மேன்மையை உணர முடிகிறது.

“பொது நிகழ்வுக்கு வசூல் பண்றப்போ கூச்சமே படக்கூடாது தோழா.. மக்கள் கிட்ட காசு வாங்கிதான் தோழா நிகழ்ச்சி நடத்தனும்” எனும் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு மூலம் உண்டி குலுக்கிககள் கம்யூனிஸ்டுகள் என்பதை கருணா நினைவுபடுத்தியுள்ளார்.

பவாவின் ‘ஏழுமலை ஜமா’ வை கருணா படமாக உருவாக்கினார் என்பதை விட மு. பாலாஜி கூறியுள்ளதைப் போல மக்களிடம் வசூலித்து உருவாக்கப்பட்ட படம் நாமறிந்த வகையில் இது ஒன்றுதான் என்னும்போது மெய் சிலிர்க்கிறது.

“அமைப்பைக் குடும்பமாகவும்
குடும்பத்தை அமைப்பாகவும்
கலைத்துப் போட்டு கொண்டாடிய
சமகாலச் சித்தன் அவன்”
என கவிஞர் வெண்புறா குறிப்பிட்டுள்ளதன் அர்த்தம் கருணாவைக் கொண்டாடும் அவரது துணைவி செல்வி கருணாவை பொக்கிஷம் என்பதிலிருந்தும் அவரது மகள் “எங்கப்பா எங்களுக்கு எதையும் போதிக்கவில்லை. சுயசிந்தனையோடு வாழக் கற்றுக் கொடுத்தார்” என்பதிலிருந்தும் புலனாகும்.

“இப்போது வரை ஒன்றை எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எப்படி ஒரு மனிதனால், தன் வாழ்வின் இறுதி நொடிகளில் தன் நிலை குறித்தோ, தன் குடும்பத்தார் குறித்தோ ஒரு வார்த்தையையும் உச்சரிக்காமல், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று பெருமையோடு அறிவித்துக் கொள்கிறபடி ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டினார். நம்மால் வாழ்ந்துவிட முடியுமா?” என் வினவும் வசந்துக்கு..

“போய் வா கருணா! உன் தொடர்ச்சியில் தமிழகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அதுபோதும். ஒரு களப்பணியாளனின் மரணத்தை மதிப்பிட..சமூகம் பெருமிதத்தால் நிறைய” என்ற பவாவின் கூற்றே பதிலாக உள்ளது.

இந்நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் புகழுரைகள் சிறப்பு மிக்கவை.

அற்புதமான தோழரின் இழப்புக்குக் காரணமான புகைக்கும் பழக்கத்தை முன்னிறுத்தி “ஓர் இலட்சியத்துக்காக நம் உடல், பொருள், ஆவியை இயக்கத்துக்கு அளித்துவிட்டவர்கள் தம் உடலைப் பேணுவது ஓர் ஸ்தாபனக் கடமை என்று நம் முன்னோடிகள் சொல்லுவார்கள். இந்த உடல் உனக்கானதில்லை. இயக்கத்துக்கானது என்பார்கள். அச்சொற்களை தோழர்கள் மதிக்க வேண்டும். உடலைப் பேண வேண்டும். கருணாவின் பாதியில் முடிந்த வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம் அது” எனும் ச. தமிழ்ச்செல்வனின் வார்த்தைகள் முக்கியமானவை.

இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டியதும் தத்தம் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து முன்னேற வேண்டியதும் முற்போக்காளர்களின் மகத்தான கடமை.