நூல் அறிமுகம்: இடைப்பாடி அமுதனின் தமிழ் நாட்டில் சர் தாமஸ் மன்றோ – மருத்துவர். இரா. செந்தில்
சென்னை அண்ணா சாலையில் தீவுத்திடலுக்கு எதிரே உயரமான மேடையின் மேல் வெண்கலக் குதிரையில் அமர்ந்துள்ள ஒரு வெள்ளைக்காரனின் சிலையை பலர் பார்த்திருப்பார்கள். அவர்தான் தாமஸ் மன்றோ. இந்தியாவின் சிறந்த கலெக்டர் என்று திரு உதயசந்திரன் ஐஏஎஸ் குறிப்பிட்ட ஆங்கிலேய அதிகாரி. சர் தாமஸ் மன்றோவைப் பற்றிய வரலாற்று நூல் இது.
இந்நூலை எழுதுவதற்காக 45 நூல்களிலிருந்து தகவல் திரட்டியிருக்கிறார். இவற்றில் 17 நூல்கள் 150 ஆண்டுகளுக்கும் முந்தியவை. தமிழ்நாடு ஆவண காப்பகத்துக்குச் சென்று பழைய ஆவணங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார்.
மன்றோ பிறந்தது 27. 5. 1761. சிறுவயதில் மன்றோவுக்கு பெரியம்மை நோய் வந்தது. முகமெங்கும் அம்மைத் தழும்புகள். செவித்திறன் கொஞ்சம் குறைந்து விடுகிறது. அதனால் தனிமையை விரும்புபவராக இருந்தார். அவருடைய மிக நெருங்கிய நண்பர்களாக நூல்கள் தான் இருந்தன. அவருடைய வளர்ச்சிக்கு இதுவே அடித்தளமாக இருந்தது.
இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் பிறந்தவர். மன்றோ வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாத்தா அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் புகையிலை வணிகம் செய்து வந்தார். தாத்தாவுக்குப் பிறகு தந்தை அந்த வணிகத்தைத் தொடர்ந்தார். ஒரு தளபதியாக இந்தியாவுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு மன்றோவைத் தேடி வந்த போது அவருடைய தந்தை அந்த வேலை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். ஆனால் 1766 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க விடுதலைப் போரில் மன்றோவின் குடும்ப வணிகம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இழப்புடன் இங்கிலாந்து திரும்பி விட்டார் மன்ரோவின் தந்தை. 300 பவுன் சம்பளம் கிடைக்கும் தளபதி வேலையை வேண்டாம் என்று சொன்னவர் வெறும் ஐந்து பவுன்ட் சம்பளம் கிடைக்கும் சிப்பாய் வேலைக்காக 1780 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். கப்பல் பயணத்துக்குத் தேவைப்படும் பணம் கூட இல்லாத நிலையில் அந்தக் கப்பலில் பணியாளராக பணிபுரிந்து பயணம் செய்ய ஒப்புக்கொண்டு தான் கப்பல் ஏறுகிறார் மன்றோ.
1780 ஆம் ஆண்டு ஜனவரி 15, பொங்கல் நாளன்று சென்னைக்கு வருகிறார் 19 வயதான இளைஞர் மன்றோ. இம்மண்ணில் 66 ஆண்டு காலம் வாழ்ந்த மன்றோ அதில் 47 ஆண்டுகளை இந்தியாவில் கழித்தார். அவ்வகையில் இந்தியாவில் மிக நீண்ட காலம் பணியாற்றிய ஆங்கிலேய அலுவலர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார்.
ராபர்ட் கிளைவ் போன்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களை மிகக் கீழானவர்களாகப் பார்த்தார்கள். ஆனால் மன்றோ இந்திய மக்கள் மீது பேரன்பு கொண்டவராக இருந்தார். தருமபுரியில் பணியாற்றிய போது இங்குள்ள வேளாண் மக்களின் துயரங்களை நன்கு உணர்ந்தவராகப் பணியாற்றினார். கடப்பா பகுதியில் பணியாற்றியபோது மன்றோலப்பா என்று பாசத்தோடு அழைக்கப்பட்டார்.
தருமபுரியில் இருந்த காலத்தில் அவர் கட்டிய 100 அடி நீளம் 100 அகலம் கொண்ட மன்றோ குளம் இன்றைக்கும் இருக்கிறது. தொப்பூர் மலைப்பாதையில் ஏறும் போது இடது பக்கம் இருக்கும் மன்றோ கிணறு 230 ஆண்டுகளுக்கு முன்பு மன்றோ வெட்டியது. அது இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.
தருமபுரியில் இருந்து குதிரையில் தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வருவார். அவர் பிறந்த கிளாஸ்கோ நகரில் உள்ள கெல்வின் ஆறு போல தென்பெண்ணை ஆறு இருப்பதாக தன் தங்கைக்கு கடிதம் எழுதினார்.
திருமணமே வேண்டாம் என்று இருந்தவர் தன்னுடைய 53வது வயதில் 26 years ஜெயின் கேம்பில் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூட்டி என்ற ஊருக்கு ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. 1827 ஆம் ஆண்டு, ஜூலை ஆறாம் தேதி சாதாரண வயிற்றுப்போக்கினால் இறந்து விட்டார். அவருடைய உடல் முதலில் கூட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவி இங்கிலாந்திலிருந்து வந்து ஏற்பாடு செய்ததன்பேரில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மன்றோ காலத்தில் செய்யப்பட்ட புரட்சிகரமான நிர்வாகச் சீர்திருத்தம் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியதுதான்.
1792 ஆம் ஆண்டு முதல் 1799 ஆம் ஆண்டு வரை தருமபுரியில் உதவி கலெக்டராக ஆட்சி புரிந்த காலத்தில் தான் மாவட்ட கலெக்டராக இருந்த ரீட் என்பவரின் வலியுறுத்தல் பேரில் ரயத்துவாரி முறையை செயலாக்குவது பற்றிய ஆய்வைத் தொடங்கினார். அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் மக்களிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்வதில்லை. அவர்களுடைய தளபதிகளுக்கு நாட்டின் பகுதிகளைக் கொடுத்து அவர்கள் வாயிலாகவோ அல்லது அந்த ஊரில் ஏற்கனவே அதிக நில உடமை உள்ளவரிடமுமோ கொடுத்து அவர்கள் வாயிலாகத்தான் வரி வசூல் செய்து வந்தார்கள். இந்த இடைத்தரகர்களால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதையும் வேளாண் மக்களுக்கு பெரும் துயரம் ஏற்படுவதையும் உணர்ந்து நேரடியாக வேளாண் மக்களிடம் இருந்து வரி வசூல் செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த கர்னல் ரீடு கருதினார். உழுபவர்களுக்கு பட்டா வழங்க விரும்பினார் அவர். தொடக்கத்தில் மன்றோவுக்கு இந்த முறையில் விருப்பமில்லை. ஆனால் இன்று வரை தொடரும் இந்த முறையை சித்தூர் பகுதியில் வெற்றிகரமாக அமலாக்கி அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் மன்றோ.
சேலம் ஜில்லாவில் பணியார்றிய போது 66 பள்ளிக்கூடங்களைத் திறந்தார் மன்றோ. பின்னர் இது 300 பள்ளிக்கூடங்களாக மாறியது. மெக்காலே கல்வித்திட்டத்திற்கு அடித்தளம் இட்டது மன்றோவின் கல்விக் கொள்கை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
சில சுவையான செய்திகள்:
1. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மன்றோ செல்கிறார். ‘இந்து அல்ல‘ என்ற காரணம் காட்டி அவருக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இருந்தாலும் அந்த பூசாரிகளிடம் பேசி அவர்கள் கேட்டது போல நைவேத்தியம் செய்வதற்கான பாத்திரங்களைக் கொடுத்தார். கோவில் பூசாரிகளுக்கு நிலம் கொடுத்தார். இந்நூல் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முதல் பூசையில் மன்றோ பெயரிலேயே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
2. ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த மந்திராலயத்துக்குச் சென்ற பொது . ராகவேந்திரர் அவருக்குக் காட்சி தந்ததாகவும் மன்றோவுடன் உரையாடியதாகவும் சொல்லப்படுகிறது.
3. அக்காலத்தில் கோயம்புத்தூரில் ஆட்சியராக ஹார்கிரேவ் என்பவர் இருந்தார். அவருக்குக் கீழ் பணியாற்றிய நரசையர் என்பவர் அந்தக் காலத்தில் 8.5 லட்சம் ரூபாய் கையாடல் செய்து விடுகிறார். இந்த ஊழலை ஆய்வு செய்து நேர்மையான அறிக்கையை அளித்தார் மன்றோ. வயது முதிர்ந்த காலத்தில் தன் பாவத்துக்கு பிராயச்சித்தமாக நரசையர் தருமபுரியில் அவர் வெட்டிய நரசையர்குளம் இன்றளவும் இருக்கின்றது.
4. திப்பு சுல்தானிடம் போரிடுவதற்காக 1790 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று தொப்பூர் கணவாய் வழியாக மன்றோ வந்த போது அவருடன் வந்தவர் சர். ஆர்தர் வெல்லஸ்லி. ஐரிஷ் கோமகனான அவர் பின்னாளில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர் லூ போரில் ஆங்கிலப் படைகளை நடத்திய கேப்டன்களில் ஒருவர். தருமபுரியையும் மாவீரன் நெப்போலியனையும் இணைக்கும் புள்ளி ஒன்றும் இருந்தது என்பது பெருமிதம் தரும் செய்தியாக இருக்கிறது.
4. தகடூர் என்ற பெயர் தருமபுரி என்று பெயர் மாற்றம் பெற்றது விஜயநகரப் பேரரசின் காலத்தில் என்பது தான் பொதுவான கருத்தாக இருக்கிறது. இந்நூல் தரும் தகவலின்படி விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இப்பகுதியை ஆட்சி செய்த ஜகதேவர்களின் காலத்தில்தான் (1578 – 1669) தகடூர், தருமபுரி ஆனது.
அரிய தகவல்களைத் தாங்கிய வரலாற்று நூல் தமிழ் நாட்டில் சர் தாமஸ் மன்றோ. குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும்.
மருத்துவர். இரா. செந்தில்
நூல் : தமிழ் நாட்டில் சர் தாமஸ் மன்றோ
ஆசிரியர் : இடைப்பாடி அமுதன்
விலை : ரூ.₹275
பக்கங்கள்: 336
பதிப்பகம் : ஈரோடு அனுராதா பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]