கலர் கோழிக்குஞ்சு சிறுகதை – சக்தி ராணி
விடியலின் உற்சாகமாய் வேலைக்குச் செல்லும் நோக்கில். “காலை டிபன் ரெடியா?” என கேட்டுக்கொண்டே மாடிப்படிக்கட்டிலிலிருந்து இறங்கி வந்தார் குமார்…
“இதோ அஞ்சு நிமிஷம் ரெடியாயிடும்” என்று குரல் கொடுத்தாள் லக்ஷ்மி…
“நாற்பது வருஷம் ஆனாலும் உன்கிட்ட இருந்து வேற பதில் வராதுன்னு நல்லாத் தெரியும் “என்று கூறிக்கொண்டே வெளியில் சென்று மிதிவண்டியை எடுத்தார்.
‘வயசு திரும்பல நமக்கு…எழுபதுக்கும் மேலாச்சு. எல்லா வேலையும் ஒத்தையால செய்ய முடியல’ என்று மனக்குமுறலை கொட்டித் தீர்த்தாள் லக்ஷ்மி…
“சரி சரி…நான் கடையில சாப்பிட்டுப்பேன். நீ சாப்பிடு” என்று தூரக்குரலில் கூறிவிட்டு கையசைத்து நகர்ந்தார்.
மெதுவாக வேலைகளை முடித்த லக்ஷ்மி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு சற்றே கண் அயர்ந்தாள்.
“லக்ஷ்மி…லக்ஷ்மி…” என்று குமார் கூப்பிடும் குரல் கேட்க,
“என்னங்க, இப்போ தான் வேலைக்கு போனீங்க, அதுக்குள்ள வந்துட்டீங்க?” எனக்கேட்டாள்.
“நேத்து சம்பளம் போடும் நாள்,.அந்தக்கணக்குல நான் தவறா தொகையை மாத்தி எழுதிட்டேன், அதனால என்னை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்று குரல் தாழத் தலை குனிந்தவராய்ப் பதிலுரைத்தார்.
“முப்பது வருஷத்துக்கும் மேல அந்தக் கம்பெனியில் கணக்குப் பிள்ளையா வேலை பார்க்குறீங்க,.எப்போதும் இப்படி ஒரு தவறு வந்ததே இல்லேயே… இப்போ பண்ண இந்த ஒத்த பிழைக்கா இப்படி சொல்லிட்டாங்க !”என கண் கலங்கி பேசினாள் லஷ்மி.
“ஆமா லக்ஷ்மி, வயசாகுதுல… எழுதும் போது கண்ணு வேற சரியா தெரியலை.ஏற்கனவே சில பிரச்சனைகள் வந்தது.அதெல்லாம் காரணமாக வச்சு இப்போ போக சொல்லிட்டாங்க”
“சரி… நீங்க எதும் கவலைப்படாதீங்க.ஏதாவது வேலை செய்து பொழச்சுக்கலாம்” என்று கூறிக்கொண்டே மெதுவாக எழுந்து, ‘டீ போட்டுக் கொண்டு வாரேன்’ என்று உள்ளே சென்றாள்.
டீ குடித்து விட்டு குமார், “கிருஷ்ணாவைப் போய்ப் பார்த்துட்டு வாரேன்.மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. வெளியில போனா கொஞ்சம் மாறும்”என்று கூறியபடி வெளியேறினார்.
குமாரின் பள்ளிப்பருவ நண்பர் கிருஷ்ணா… கோழிக்குஞ்சு வாங்கி விற்பனை செய்வார். வியாபார உத்தியில் கை தேர்ந்தவர்.
குமாரைக் கண்டதும், “வாடா குமார்… இந்தப்பக்கம் வருவதுக்கெலாம் உனக்கு நேரம் இருக்கு போல என கேட்டுக்கொண்டே உள் அழைக்கிறார்.
குமாரும் நடந்தவற்றை எல்லாம் நண்பரிடம் மனத்தைத் திறந்து கொட்டுகிறார்.
“என்ன செய்வதென்றே தெரியல, கிருஷ்ணா….வயசானதால கண்ணில் பிரச்சனை. இதை யாரிடமும் சொல்ல முடியலைடா” என்று கண்ணீர் வடிக்கிறார்.
“என்ன குமாரு, இவ்வளோ வயசாச்சு ….இதெல்லாம் எல்லாத்துக்கும் வரும் பிரச்சனைதான். நான் உனக்கு கொஞ்சம் கோழிக்குஞ்சு தாரேன். நீ அதை வித்து வியாபாரத்தைத் தொடங்கு. வேலைக்கு வேலையும் ஆச்சு…நேரமும் போயிடும்… சும்மா இருக்கோம்னு சிந்தனையும் வராது” என்று அவரை சமாதானப் படுத்தினார் கிருஷ்ணா.
ஒரு மனதாய் எல்லாம் கேட்டுக் கொண்ட குமார் மறுநாளே கோழிக்குஞ்சு வாங்கிக்கொண்டு வியாபாரம் தொடங்கினார். சிறார் முதல் பெரியவர்கள் வரை பலர் கோழிக்குஞ்சு வாங்கி மகிழ்ந்தனர்…
அவர்கள் கேட்கும் வண்ணங்களுக்குத் தான் விடை கொடுக்க முடியாமல், குமார் தட்டுத்தடுமாறி கையில் கிடைக்கும் கோழிக்குஞ்சுகளுக்கு கலர் தேடிக் கொண்டிருந்தார்.