வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




பெயரற்ற காலம்
********************
என் பெயர் சொல்லி…சொல்லி
யார் யாரோ அழைக்கிறார்கள்
அழைத்தவர்களை இன்னும்
யாரென்று அறிய முடியவில்லை
என் பெயர்
எனக்கு மறந்து
போய்க் கொண்டிருக்கிறது
ஆளற்ற காடுகளில்
காருண்யத்தின் பெரு மழை
பெருக்கெடுத்துப்
பாய்கிறது நதியாய்…
பள்ளத் தாக்குகளில்
நேசத்தின் எதிரொலிகள்
மனிதரோடு கலந்து வாழ்வதில் தான்
அன்பின் அர்த்தம் பிரதியாகிறது
பூ பூவா பறந்து திரியும்
பட்டுப் பூச்சிகளின் கோலாகலத்தில்
மலையைத் தாண்டி எட்டிப் பார்க்கிறது
நிறங்கள் இணைந்த வானவில்
அலைகளின் மீது நுரைகள் போல
சிறு சிறு நண்டுகள்
படகுத் துறையில் கூடிக்கிடக்கும்
படகுகளின் மீது கடற் பறவைகள்
கனவுகளைத் தொட்டுப் போகின்றன
தீராத துக்கங்களின்

குளம்படிச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
மனதுள் தேடிப் பார்க்கிறேன்
யுத்தமெனும் மாயரக்கனின்
அழியாத காலடிச்சுவடுகள் ஒளிர்கின்றன
குருதி வண்ணத்தில்….
சிதைந்து கிடக்கும்
மனித உறுப்புகளின் சிதிலங்கள்
வாழ்வின் கரைகளில்..
காற்று வருகிறது
காற்று போகிறது
இலைகள் நடுங்குகின்றன
வானத்தில் பறவைகள்
பறந்து எங்கோ போகின்றன.

பூஜ்யக் கனவுகள்
*********************
பனிக்குடம் உடலின் கவசக்கூடு
மெல்லத் தளும்பித்தளும்பி அலைகிறது
பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை
முகிழ்த்துகிறது
நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தானது
ஆட்கள் ஓடி வந்தார்கள்
உடல்கள் தவிர எல்லாம் களவு போனது
சொல் விஷம் பருகினாள்
நாக்கில் பாம்புகள் துள்ளின
வானத்தைப் பிடிக்க வலை வீசினேன்
சில மேகங்கள் மட்டும் சிக்கின
கையில் எடுக்கையில் பறந்து போய்விட்டன
போனது வாழ்க்கை
காட்டுக்கிழங்கைத் தேடி அலைந்ததில்
புளிச்சிப்பழங்கள் கிட்டின வேட்டையாடுகின்றன மணிப்புறாக்கள்
பசி பிடுங்கித் தின்ன
வேடிக்கை பார்க்கிறான்
புன்முறுவல் காட்டினால் புன்னகைப்பேன்
வணக்கம் சொன்னால் வணங்குவேன்
எளிய மனிதனுக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை
போராளி போராளி என்று பீற்றுகிறான்
போராட்டமென்றால் பதுங்கு குழி தேடுகிறான்
பதுங்கித்தான் புலி பாயுமாம்
தனிமையைக் குறித்து வருத்தப்படுகிறேன்
என்னை நினைத்து தனிமை ஆதங்கப்படுகிறது
எங்களைப் பற்றி எவரும் வேதனைப்படவேண்டாம்
முகத்தில் பல முகமூடிகள்
தலையில் கனத்த கிரீடம்
பத்துகாசுக்கு பிரயோஜனமில்லை என புலம்பும் எழுத்தாள சக்கரவர்த்தி(னி)கள்
தேவதைகள் அரக்கர்களிடம் சிக்குகிறார்கள்
தேயும் நிலவாய் சிதைக்கப்படுகிறார்கள்
திடீரென்று காணாமலாக்கப்படுகிறார்கள்.

இறகு நடனம்
****************
மேகத்தில் என் உயிர்
பூமியில் என் உடல்
மழையாய் உயிர்த்து நடனமாகிறேன்
உன் சமாதானங்கள் ஆறுதலாயில்லை
உன் தேற்றல்கள் வலியை தீர்க்கவில்லை
முறிந்த கிளையாய் துவள்கிறேன்
சட்டென்று விலகிப் போனாய்
பட்டென்று உதிர்ந்து வீழ்ந்தேன்
மண்ணாவதைத் தவிர வேறு வழியில்லை
நதி என்ற ஒன்று இருந்ததாம் ?
நிரம்பித் ததும்பி நீரென்பது ஓடியதாம் !
நான் படிக்கிற புத்தகத்தில் இன்னும் என்ன என்னவோ…
வனம் கேவுகிறது
மலைகள் கசிகின்றன
சுடு காற்றாய் பெருமூச்செறிகின்றன மரஞ்செடி கொடிகள்.

தீராத கவலை
*****************
பல்லிளித்து எச்சில் வடிய சிரிக்கும்
கடைவாய் நக்கி சப்புக்கொட்டும்
பெண் கண்ட ஆண் நாய்
ஆண்மை என்பது பெண்மையைப் போற்றுவதாகும்
பெண்மை என்பது ஆண்மையை நேசிப்பதாகும்
போற்றுதலும் நேசித்தலும் வாழ்வை பூஜிப்பதாகும்
எங்கிருந்தோ வருவார்கள்
எதிர்பாராமல் உதவிடுவார்கள்
வந்த சுவடு தெரியாமல்
வந்த வழி போவார்கள்
என் படகை மிதக்க விட்டிருக்கிறேன்
இதயம் லேசாகிப் பறக்கிறது
பயணத்தை தொடங்க வேண்டும்
தடுமாறித் தடுமாறி விழுகிறேன்
கைதூக்கிவிட தனிமை பதறி ஓடிவருகிறது
மனசெல்லாம் தவிப்பு
ஜன்னலருகே அமர்ந்திடணும்
ஓடிச்செல்லும் காட்சிகளோடு பறக்கணும்
வாகனப்பயணத்தில் நான் பறவையாகணும்
என்னை அறிந்தவர்களுக்கு புரியவைக்கமுடியவில்லை
என் நட்பு சுற்றத்தினருக்கு விளங்க வைக்க முடியவில்லை
கவிதை எழுதுவது நானல்ல என்று.

வசந்ததீபன்

சாந்தி சரவணனின் கவிதை

சாந்தி சரவணனின் கவிதை



இயற்கையிடம்  ஒரு கேள்வி? 

வானம் கண்டு நீல நிறமறிந்தேன்

சூரிய உதயம் கண்டு மஞ்சள், ஆரஞ்சு நிறமறிந்தேன்

சூரிய அஸ்தமனம் கண்டு கருஞ்சிவப்பு நிறமறிந்தேன்

நிலவு கண்டு வெண்மை நிறமறிந்தேன்

இருட்டைக் கண்டு கருமை நிறமறிந்தேன்—

புல்லைக் கண்டு இளம் பச்சை நிறமறிந்தேன்

இலையைக் கண்டு கரும்பச்சை நிறமறிந்தேன்

யானையைக் கண்டு வெள்ளி நிறமறிந்தேன்

மானைக் கண்டு வெண்கல நிறமறிந்தேன்

குயிலைக் கண்டு பழுப்பு நிறமறிந்தேன்

வானவில்லிருந்து , ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ மற்றும் வயலட் என ஏழு வண்ணங்களை அறிந்தேன்.

மலர்களின் வாசத்தில் அதன் மனமறிந்தேன்!

கனிகளின் சுவையில் அதன் ருசியறிந்தேன்!

மிருகங்களின் உருவத்தில் அதன் குணமறிந்தேன்!

எண்ணற்ற  வண்ணங்களையும், வாசத்தையும்,

குணத்தையும் கற்றுக்  கொடுத்த இயற்கையே!

நீ மனித எண்ணங்களின்

வண்ணத்தையும்  வாசத்தையும்

குணத்தையும் மட்டும் மறைத்தது ஏன்?

நன்றி   

திருமதி. சாந்தி சரவணன்
Orumurai Karuppagu Poem By Pangai Thamizhan ஒருமுறை கருப்பாகு கவிதை - பாங்கைத் தமிழன்

ஒருமுறை கருப்பாகு கவிதை – பாங்கைத் தமிழன்




ஒரு செய்தி படித்தேன்
வறுமையான மூளையில் இருந்து
வந்த செய்தியாகத்தான்
அது இருக்க வேண்டும்!
மூளையில் வறுமையா?

ஆம்.
செழிப்பான மூளை
செழிப்பான மண்ணுக்குச் சமம்;

செழுமையான மண்ணில்தானே
சிவந்த ரோஜா மலரும்!
செழிப்பற்ற மண்ணில்
புல் பூண்டும் முளைப்பதுண்டோ?

இப்போது சொல்வோம் செழுமையும், செழுமையின்மையும்
மண்ணிலும் உண்டு
மண்டையிலும் உண்டு!
செழிப்பற்ற நிலைதானே
வறுமை!

சாதியைப் பார்த்து
உதவாமல்
வறுமையைப் பார்த்து
உதவுதல் வேண்டுமாம்!

ஆம்.
உண்மையில் நூறு!
இந்திய மண்ணுக்கு
இந்தக் கருத்தில்தான்
சிக்கல்!

இங்கே….
உங்கள் சாதியைச் சொல்லுங்கள்
உங்கள் பொருளாதார
நிலமைத் தெரியும்
சமுதாய அந்தஸ்துத் தெரியும்!
மனித உறவுகள் தெரியும்!

வெள்ளையான சாதிக்கும்
மாநிறமான சாதிக்கும்
வறுமை என்றால்….

வெள்ளை மாநிறத்தைத் தாங்கும்;
மாநிறம் வெள்ளையைத் தாங்கும்!
கருப்பான சாதியென
ஒன்றுண்டு;

வெள்ளையும் வெறுக்கும்
மாநிறமும் மிதிக்கும்
கருப்பை!
கருப்புக்கு வறுமையே
பூர்விகம்;

கருப்பு தன் பசிக்கு
வெள்ளையின்
மாநிறத்தின் கழிவுகளை
சுமந்தால்தான் கஞ்சி!

வெள்ளையே….
மாநிறமே….
ஒரே ஒருமுறை
கருப்பாகப் பிற….
உணர்வாய்!

Kuyil Muttai Poem By V Kamaraj குயில் முட்டை கவிதை - வ. காமராஜ்

குயில் முட்டை கவிதை – வ. காமராஜ்




நிறத்தால்
குயிலும் காக்கையும்
ஒன்றுதான்!

குரலால்
ஒன்றுபடுவதில்லை!

குயிலின் குரல்
இனிமையென்கிறோம்;
காக்கையின் குரலைக்
கரைச்சல் என்கிறோம்;
அதனதன்
மொழி அறிந்ததைப்போல!

இரண்டும்
பறவைதான்!
காகம்
மிகவும் நெருக்கமான பறவை….
மனிதருக்கு!

நம் வீட்டு மரங்களில்
கூடு கட்டுவதும்
விருந்தினர் வருகையை
அறிவிப்பதும்;
மறைந்துவிட்ட
முன்னோர்கள் காகமாகக்
கற்பனைக் கொள்வதும்….
கைகளில்
உணவு வைத்துப்
பழகி அழைத்தால்
பாசமுடன் வருவதும்!

காகத்தைப்போல
எளிமையாக
எல்லோராலும்
அதன் குரல் எழுப்புவதும்….
தன்னையழைக்கும்
அழைப்பை உணர்ந்து
பறந்து வந்து
பாசம் காட்டுவதும்….
காலையில் கரைந்து எழுப்புவதும்;
காகம் தவிர
வேறெந்தப் பறவை?

குயிலை
கூப்பிட்டுப் பாருங்கள்
முதலில்….
அதன் குரலில்!
குரலும் வராது….
குயிலும் வராது!

காகம்
அப்படியென்ன
கெடுதல் செய்தது?
குயில் கொட்டிக் கொடுத்துவிட்டது?

முள்ளோ…. சுள்ளியோ…
காக்கை
தனக்கான மாளிகையை
தானே கட்டிக்கொள்ளும்!
அதற்குத் தெரிந்த வழியில்.

காக்கையின் கூட்டில்
குயில் முட்டையிடுவதால்
பிடிக்கிறது….

அப்படியான
மனநிலை உலகம்!
குயிலை
கொண்டாடலாம்…

காகத்தை வெறுக்காதீர்கள்.
காகமும் பறவைதான்…
குயிலும் பறவைதான்!
பறவைகளை
பறவைகளாகப் பார்க்கப்
பழகிக் கொள்ளுங்கள்…