புனிதனின் கவிதைகள்
தனிமை வெளி
******************
குளிர் பனிக் காலம்
அணைந்த சிம்னி அடுப்பை
சிலந்தி பூச்சி கடந்து செல்கையில்
அரசியல் வகுப்பைக் கற்றவன்
கிராமத்துக்குத் திரும்பிச் செல்கையில்
கிளை முறிந்த மரத்தில்
பூ பூத்த இடத்தில்
வண்ணத்துப் பூச்சி அமர்ந்து இருப்பதைப்
பார்க்கையில்
மனம் ஏனோ பதறுகிறது!
அரசியல் பேசுகிறேன் நான்
*********************************
எனக்கு மூன்று மாடுகளும்
ஐந்து ஆடுகளும் உள்ளன
இனக் குழு அரசியல் செய்கிறேன்
நான்
ஆழ்துளைக் கிணறு
உள்ளது எனக்கு
நான் தண்ணீர் அரசியல் செய்கிறேன்
மொண்டு ஊத்த
மொண்டு குழி தண்ணீர் தான்
உள்ளது என்னிடம்
இரண்டு வேப்ப மரங்களும்
பத்துத் தென்னை மரங்களும்
உள்ளன
நான்
உலக வெப்பமயமாதல்
அரசியல் பேசுகிறேன்
ஜென்னும் சூஃபியும் பிடிக்கும் எனக்கு
மத அரசியல் செய்கிறேன்
நான்
சமையல் கட்டில் தேநீர் போடுகிறேன்
என் வட்டலை சாப்பிட்ட பின்
நானே கழுவுகிறேன்
பெண் அரசியல் பேசுகிறேன் நான்
உடல் வன்மம் இல்லாத
வெள்ளந்தி மனிதர்கள்
என்னிடம் உள்ளனர்
கவிதை அரசியல் பேசுகிறேன் நான்
விளையாட்டு
***************
புல்லாங்குழல் வாசித்தபடி
ஆநிரை மேய்த்த
மாயோனை போலவும்
இளைத்த குட்டியை
தோள் மீது போட்டு கொண்ட
தேவனின் அன்பை போலவும்
கொழுந்து புல் தரும் போது
ஆட்டுக்குட்டி மேல் தட்டானையும்
ஆநிரைக்கு
நீர் காட்டும் போது
தாழியில் வானத்தையும் ரசிக்கும்
மகனின் விளையாட்டையே
தாயும் விரும்புகிறாள்
பனி தேசம்
*************
ஒரு ஊரில் பொற் கொல்லர்கள் அதிகமாக இருப்பது போல்
கவிஞர்கள் நிறைய இருந்தார்கள்
ஒரு காலத்தில்
அரச வம்சமாய் இருந்த
அவர்கள் இன்று அடிமைகளாக இருந்தார்கள்
காடு தீப்பிடிக்கும் போது
பூக்களைக் கொள்ளையடித்துப்
போவது போல
அவர்கள் கனவைக் கொள்ளையடித்துப்
போனார்கள்
வேனல் புற்களால் ஒரு பறவை
கூட்டை வேய்வது போல
அவர்கள் தன் சொற்களால்
தன் தேசத்தை வேய்ந்தார்கள்
அவர்கள் அச் சொல்லை
தன் வாழ்வில் இருந்து எடுத்தார்கள்
கணங்கு புல்லின் பனி எச்சிலில் வாழும்
பனிப் பூச்சியைப் பார்த்து
அவர்கள் தங்கள் தேநீர்ப் பறவையின்
தேசத்துச் சொல்லைக் கண்டெடுத்தார்கள்
சுய யாகம்
***************
நீ வைத்தால்
காஃபி சூடு ஆகாதா
நீ வைத்தால்
உலை கொதிக்காதா
நீ பெருக்கினால்
வீடு சுத்தம் ஆகாதா
நீ துவைத்தால்
துணி வெளுக்காதா
நீ சுத்தம் செய்தால்
கழிவறை சுத்தம் ஆகாதா
அம்மா கேள்வி கேட்டபடியே
இருக்கிறாள்
பெரியார் எனக்குள்
சிரித்தபடியே இருக்கிறார்
மாற்று
*********
தாழ்வு மனப்பான்மை
என்னுள்
வரும் போதெல்லாம்
பழங்கள் சாப்பிடுவேன்
பழம் சாப்பிட்டதும்
பறவைகள் போல்
உயர்ந்து பறக்கும் உணர்ச்சி
தோன்றும்
பூச்செடிகளுக்கு
நீர் ஊற்றுவேன்
வண்ணப் பூக்கள்
பூத்து குலுங்குவதைப்
பார்த்து மகிழ்வேன்
ஒரு தாய்
*************
ஒரு தாய்
தன் மகனை
கழுதை போல் கனைக்கவும்
பல குரலில் பாடும்
மிமிக்ரி பறவை போலவும்
கழுதை
வண்ணத்துப் பூச்சி போல்
ஆடவும்
பொச பொசக்கும்
சருகுத் தீயைப் போலவும்
அதிரும் பறையைப் போலவும்
மணம் தரும்
சின்ன பூவைப் போலவும்
நினைத்து நெகிழ்கிறாள்
மறதி காகம்
*****************
ஒரு காகம் தன்
கூட்டிற்குக்
காய்ந்த சருகு
கொண்டு வந்தது
பூக்கள் கொண்டு வந்தது
இரை
கொண்டு வந்தது
மின்மினி வெளிச்சம்
கொண்டு வந்தது
கனவைக்
கொண்டு வந்தது
மறதியில்
தன் கூட்டையே
வேறு ஒரு பறவையின்
கூடு என ரொம்ப நாளாய்
நினைத்து இருந்தது
அதன் கூட்டில்
வெளிச்சம் பூக்கள்
பூத்திருந்தது
கூட்டின் ஜன்னல் வழியே
வானம் நன்கு தெரிந்தது
ஒரு காலை பொழுதில்
அதுவே தன் வீடு என
அறிந்து மகிழ்ந்தது.
போனால் போகட்டும்
*****************************
போனால் போகட்டும் என்று
சாலையில் தேங்கிய
மழை நீரை அள்ளி
தொட்டிப் பூச்செடிக்கு
ஊற்றி விட்டு போகிறான்
விவசாயி
போனால் போகட்டும் என
பேருந்தில் எழுந்து
முதியவருக்கு
இடம் தருகிறான் விவசாயி
போனால் போகட்டும் என
குறைந்த விலைக்கு
தன் தானியத்தை
விற்று விட்டு வீடு
திரும்புகிறான் விவசாயி
அம்மாவின் குரல்
************************
வெளி
மழை
வாசனை
துளிர்
இருள்
சோலை
நதியோசை
பூப்பூக்கும் மெல்லிய
இசை
ஒளிந்து கொள்ளும்
தவளை சப்தம்
குறளி பிசாசு மறு அவதாரம்
கசாப்பு ஆட்டின் ஈன குரல்
அம்மாவின் குரலில்
அத்தனையும்
ஒளிந்து உள்ளது
ஒரு நிலா
பல நினைவுகள்
**********************
நிலவைப் பார்த்ததும்
அறைக்குள் வைத்து
பூட்டிக்கொண்டேன்
அறை முழுவதும்
நறுமணம் பரவியது
குளிர்ந்த நிலவை
விளக்காய் ஏற்றி கொண்டேன்
தரையில் டைல்ஸாய்ப்
போட்டு கொண்டேன்
கை விசிறியாய்
வைத்து கொண்டேன்
வெள்ளை பன்னீர் புஷ்பம்
பூக்கள் மீது
தெளித்து வைத்தேன்
புட்கள் குரலோசைக்கு
இரவல் தந்தேன்
பிக்பாக்கெட் திருடன் போல்
சட்டை பைக்குள்
மறைத்து வைத்தேன்
ஆசை இல்லை
********************
புத்தர் அரண்மனையில்
பசுங்கன்று கத்தவில்லை
பசு இல்லை
தொழுவத்தை வழிக்கவும்
பால் கறக்கவும்
பெண் இல்லை
மிச்சப் பாலை குடிக்கும்
பூனை இல்லை
புத்தர் பற்றற்று இருந்தார்
புத்தர் அரண்மனையில்
பசுங்கன்று கத்தவில்லை
திருவிழாக் காலம்
************************
இலந்தைப் பழம்
பழுக்கும் காலம்
திருவிழா வரப் போகிறது
சின்னச் சின்னக் கோபங்களை
விட வேண்டும்
சின்னச் சின்னப் பொய்களை
விட வேண்டும்
சின்னதாய்
ஒரு புத்தர் சிலை
வாங்க வேண்டும்
சின்னச் சின்னப் பூச்செடிகளை
நடவேண்டும்
சின்னச் சின்னக் கவிதைகளை
எழுத வேண்டும்
சின்னச் சின்ன இனிப்புகளைச்
செய்ய வேண்டும்
சின்ன சின்ன அகங்காரங்களை
விட வேண்டும்
– க. புனிதன்

