புனிதனின் கவிதைகள்
கணிதன் என்றொரு பெயரன்
*********************************
மரத்தடியில்
பழம் பொறுக்கும் கிழவி
திரும்பிப் பார்த்தாள்
வரலாறு திரும்பி பார்த்தது
போலிருந்தது
குருவிகளின் சத்தம்
சட்ட சபையாக
அவள் மௌனத்தில்
உறைந்து இருக்கலாம்
கணிதன் என பெயர்
கொண்ட பெயரன்
அவளுக்கு இருக்கலாம்
கவிதை எழுதுவதும்
அகங்காரம் இல்லாததும்
அவனுடைய தகுதியாக
இருக்கலாம்
துல்லிய வேகத்தில்
அவன் இரண்டு சக்கர
வாகனத்தில் செல்கையில்
வண்ணத்து பூச்சி நிழல் போல்
வரலாறு குறுக்கிடலாம்
புத்தர் மேல் ஆசை
*********************
புத்தர்
மாட மாளிகை
நவரத்தினங்கள்
சேனை படைகள் என
அரண்மனையில் வாழ்ந்தவர்
என்பதற்காகவே
இன்று வசதியை விரும்பும்
மாலில்
பீசா பர்கர்
ஐஸ் க்ரீம் சாப்பிடும்
தனி வில்லாவில்
வசிக்க விரும்பும்
தன் பிள்ளையை பெரிய பள்ளியில்
சேர்க்க விரும்பும்
உயர்தர வாகனத்தில்
போக விரும்பும்
எல்லோரும்
அவர் கதையை கேட்கிறார்கள்
பூ
***
இவ்வளவு அழகான
பூக்கள் தந்த
வேர்களுக்கு
இளநீர் ஊற்றுகிறேன்
கருப்பு வெள்ளைக் கனவில்
பூக்கள் மட்டும்
நிறங்களாய் பூக்கின்றன
டேலியா பூ வைத்த உடன்
நடிகை ஆகிறாள்
பழங்குடிச் சிறுமி
நாடோடிகளின் கூடாரம்
புதிதாக பூத்த
மலர் போலிருக்கிறது
இவ்வளவு அழகானவன
சித்திரத்தை
வரைந்தது ஒரு சிட்டுக்குருவி
உதிரி பூக்கள் சிந்திய
சாலை மரம் ஓரம்
என் மரணம் நிகழ்த்தப் பட்டு விட்டது
எறும்பின் பாதை
*******************
எறும்பின் பாதை
என்றும் புகழின் பாதை
வழி செல்கிறது
ரோஜா இதழ்கள்
இலை சருகு
தேநீர் துளி
சில சொற்கள் என
சுவர்க்கம் வழி செல்கிறது
அதன் பாதை
குயில் மொழியில்
சில ஞானிகளும்
எறும்பின் மொழியில்
சில ஞானிகளும்
பேசிக்கொள்கிறார்கள்
எரிமலை
பூகம்பத்திலும்
சில எறும்புகள்
பிழைத்து வருகின்றன
மனிதர்கள் போல்
பிதாமகன் சேவல்
*********************
பிதாமகன் விக்ரம் போல
ஓடி வருகிறது சேவல்
நெல்லு கொத்த
வந்து பாரு
உன் மண்டை உடைச்சு
குழம்பு வைச்சு சாப்பிடுறேன்
அம்மா வையும் போது
அதே படத்தின் இடைவெளியில்
ஸ்பானரில் மண்டை ஒடைஞ்சு
சாகிற சூர்யாவின் ஞாபகம் வந்தது
இறைச்சி மலர்களாகும்
அன்பும்
முடிவில் பித்தாகும்
விக்ரமின் செம்மட்டை தலை
சேவலின் அழகியலாகவும்
தோன்றியது
மரணம் இல்லாத வீடு
*************************
வெளியே போய் விட்டு
வந்தேன்
அம்மா வீட்டில்
மரணத்தை எங்கும்
ஒளித்து வைக்கவில்லை
தூசி இல்லாத
அலமாரியில்
மழை பெய்த அமைதியுடன்
பாத்திரம் அடுக்கி
வைக்கப் பட்டிருந்தது
இறந்த கரப்பான் பூச்சியை
இழுத்து செல்லும்
எறும்புகள் இல்லை
பல்லிகள் இல்லை
முகப் பூச்சு இல்லை
பறித்த மல்லிகை அரும்புகள்
பூச்சாடியும்
நிலவும் பூனையும்
மட்டும் இருந்தன
வீட்டில்
பழைய சினிமா காணும் அம்மா
************************************
அழுத்து போன
வசனங்கள் தான்
ஓட்டை டேப் ரிக்கார்டில்
கேட்டுச் சலித்த பாடல்கள் தான்
திரும்ப கேட்கும்
போர் தீம் மியூசிக் தான்
வயதான கதாநாயகன்தான்
மரத்தைச் சுற்றும் நடனம்தான்
கீறலான ஒளி பரப்பு தான்
வாழ்க்கையில்
நெறைய போராட்டங்கள்
இன்னல்கள் என
நெடிய பாதை கடந்து வந்தவள்
அம்மா
அப் பழைய திரைப்படத்தை
காணட்டும்
இரை நம்பிக்கை
************************
கோழி மேய்க்கும்
பாப்பாவின் கையில்
அட்சயப் பாத்திரம்
தானியம் போடும்
அவள் பிஞ்சு விரல்கள்
பிரபஞ்சத்தின் பேரழகு
நீல வானம் கீழ்
அவள் போடும்
ஞானம் எனும் தானியத்தை
இழுத்துச் செல்லும்
எறும்புகள்
அவள் பார்வையில்
எல்லா உயிர்களும்
இரை நம்பிக்கை உடையது
பசும் புல் தரையின் மேல் மேயும் பசு
******************************************
ஆங்காங்கே
மேய்ந்த மேகத்தை
இழுத்து வந்து
ஒரு இடத்தில் கட்டி வைத்தேன்
சோவென மழை பெய்தது
மழை பெய்து
வளர்ந்த பசும் புல் தரையில்
மேயும் பசு
மேயும் மாட்டின் மேல்
கருங்குருவியின் அலை வரிசை
ஒரே மாதிரி இருந்தது
தாழி பருகும் மாடு உடல்
மேகம் போல் உடைந்து இருந்தது
மாட்டிற்கு
புல் சேகரிக்கும் அம்மாவின்
சோடி செருப்பு
பருத்தி செடி நிழலில்
இரு மேகம் போலிருந்தது
-க. புனிதன்