Vannangalin Kuzhanthaigalin Vedhanai Poem By Adhith Sakthivel. ஆதித் சக்திவேலின் வண்ணங்களில் குழந்தைகளின் வேதனை கவிதை

வண்ணங்களில் குழந்தைகளின் வேதனை கவிதை – ஆதித் சக்திவேல்




ஊட்டச் சத்தில் கிடைக்கா
உலோகங்களின் துகள்கள்
உலைக்களத்து கந்தக வெப்பத்தில்
வழிந்தோடிய வியர்வையில் கரையாது
சிறுவர் உடலெங்கும் மின்னின

சாவை வயிற்றில் கட்டி
வாழ வழி காட்டுகிறது
பாஸ்பரஸ் மகுடம் சூடிய
பட்டாசுத் தொழில் – குழந்தைகளின் வயிற்றை மட்டுமே நிரப்பி

வானில்
சில மணித்துளிகள் ஒளிரும் அவை
வாழ்வை
முழு நேரம் ஒளிர வைக்கும் முயற்சியில் முற்றிலுமாய்
அணைந்து போகின்றன
ஒரு சிறு விளம்பர இடைவேளை…..

ஒரு சர்வதேச பள்ளி
குதிரைச் சவாரி
நீச்சல் குளம்
மலை ஏற்றம்
வெளி நாட்டுச் சுற்றுலா என
கல்வி சாரா செயல்பாடுகள்
குளிர்ப் பதன வகுப்பறைகளில்
தரப்படும் கல்விக்கு இணையாய்
வெய்யில் படா குழந்தைகளின் முகம்
மின்னியது காலை இளம் வெய்யிலில்
நிகழ்ச்சி தொடர்கிறது……

பத்து வரை
எண்ணத் தெரிந்திருக்கிறது
எழுதப் படிக்கத் தெரியா
அக்குழந்தைகளுக்கு
பட்டாசுகளை
பத்துப் பத்தாய் அடுக்கி
பாக்கெட்டுகளாய்க் கட்டுவதால்

பல வண்ண ஒளியினை
வானில் தெளிக்கும் பட்டாசைப் போல
சில நிமிடக் கனவுகளை- அவர்களது
இரவுகளில் தெளிக்கும் உறக்கம்
ஒளி மறைந்து சாம்பலாவதைப்போல்
கண்ட கனவுகள் காணாது போயிடும்
துளிர்த்த ஆசைகள் கருகி உதிர்ந்திடும்
மறு நாள் காலையில்
தொழிற்சாலைப் பேருந்து ஏறுகையில்
நிகழ்ச்சி முடிகிறது…….

பார்க்க வேண்டியவர்கள்
குழந்தைகளின் வேதனையை
வண்ணக் காட்சிகளாய்த்
தொலைக்காட்சியில் பார்த்திருப்பர்
குறித்து வைத்திருப்பர் மனதில்
அப்பள்ளியின் முகவரியை
தம் குழந்தைகளை அதில் சேர்க்க