ஆர்.எஸ்.எஸ் தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டதா? – ஸ்ரீகுமார் சேகர்
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்: கம்யூனிச சகோதரத்துவத்தின் அழியாத அடையாளம்
அரசியல் வானில் மின்னும் பொதுவுடமை கவிஞர் தமிழ் ஒளி – முனைவர் எ. பாவலன்
கட்டுரை: தோழர் முசாபர் (காக்கா பாபு) – இரா.பாரி
‘தோழர்கள்’ – ஜி.ராமகிருஷ்ணன்
தொழிற்சங்க தலைவரும், எழுத்தாளருமான ரமேஷ் அவர்களின் ‘தோழர்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதுவதே பெருமகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. இந்த நூலை எழுதுவதற்காக அவர் குறிப்பிட்டுள்ள காரணம், மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. கம்யூனிசம் பற்றிய உண்மையான கருத்துக்கள் சென்று சேர்வதற்கு முன்பே, பொய்யான பிரச்சாரங்கள் சென்று மக்களை குழப்பிவிடும். இந்த அனுபவம் மாமேதை காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. இப்போதும் அது தொடர்கிறது. அதனை தன்னுடைய பாணியில் சுட்டிக்காட்டியுள்ள ரமேஷ், தலைவர்களின் வாழ்க்கையை அற்புதமாக விவரிப்பதன் மூலம் அந்த தவறான பிரச்சாரத்தை எதிர்கொள்ள முயற்சிப்பதாக கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் களப்பணிகள் ஒவ்வொன்றுமே, பொய்யான பிரச்சாரங்களுக்கு எழுதப்படும் மறுப்புரைகள்தான். நான் எழுதி இதுவரை 3 தொகுதிகளாக வெளியாகியிருக்கும் ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற தொடர், அதே பணியை வேறு விதத்தில் செய்கிறது. அன்புத்தோழர் ரமேஷின் தந்தையும் அந்த தொகுப்பில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளார். வாழையடி வாழையாக மக்களுக்கு உழைப்போம் என்பதை நிரூபிக்கும் விதத்தில் மகனும் செயல்படுகிறார்.
இந்தியாவின் முதல் மோதின கொடி ஏற்றப்பட்டு, பட்டொளி வீசிப் பறந்த சென்னை மண்ணில், தோழர் சிங்காரவேலர் வாழ்க்கையை விவரிப்பதில் இருந்து தொடங்குகிறது இந்த நூல். தோழர் சிங்காரவேலர், கம்யூனிச கருத்தியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில், மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். அதன் பிறகு தோழர் அமீர் ஹைதர் கான் பற்றி விவரிக்கிறது. அவர் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேர் பிடிப்பதில் முக்கிய பங்காற்றினார். அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும், பொட்டல் காட்டை திருத்திப் பயிர் செய்யும் உழவுப் பணிக்கு ஒப்பானவை. அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் புடம்போடப்பட்ட களப்போராளிகளான சுர்ஜித்தும், இன்றும் நம்மோடு வாழும் நூற்றாண்டு கண்ட நாயகர் என்.சங்கரய்யாவும் வருகிறார்கள். இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாழ்க்கையும், பல்வேறு ஒத்த அம்சங்களையும், தனிச்சிறப்பான வரலாற்று பங்களிப்புகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன. எல்லோருமே ‘தோழர்கள்’ என்ற சொல்லுக்கு தமது வாழ்க்கையே பொருள் என்ற அளவில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இந்தியாவின் கடைக்கோடி மனிதர்களுக்கும் விடுதலையை உறுதி செய்திட வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம். எத்தனையோ நிகரில்லாத தலைவர்களை உருவாக்கியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம், எந்த ஒரு தனிநபர் பிம்பத்தையும் கட்டமைப்பதில்லை. வாழும் காலத்திலேயே தமது தனிப்பட வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றி யாரும் பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டை தலைவர்கள் மேற்கொண்டார்கள். தொழிலாளி – விவசாயி ஒற்றுமை, புரட்சிகர இலக்கை நோக்கிய வர்க்கப் போராட்டம், அதற்காக இன்னுயிர் ஈந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களின் வடிவமான செங்கொடி, இதைத்தான் நமது முன்னுதாரண தலைவர்கள் தம் வாழ்நாளெல்லாம் முன்னிருத்தி வாழ்ந்திருக்கிறார்கள். மறைவுக்கு பிறகுதான் ஒருவரின் வரலாற்று பங்களிப்பை மதிப்பிட வேண்டும் என்பதில் சமரசமில்லாத உறுதிகாட்டி வாழ்ந்துள்ளார்கள். அதற்கு நியாயம் சேர்ப்பதாக இந்த நூல் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இதுவரை பல்வேரு மொழியாக்க நூல்களுக்காக விருதுகள் பெற்றும், வாசகர்களின் பாராட்டைப் பெற்றும் வலம் வந்த கி.ரமேஷ், இந்த அற்புதமான கட்டுரைகளின் மூலம் தனது இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்து வன்மையையும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இந்த நூல் இன்றைய இளைய தலைமுறையை சென்றடைய வேண்டும். தமிழ் வாசகர்களின் பரவலான அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தோழர்கள் இன் நூல் முன்னுரையில் இருந்து
– ஜி.ராமகிருஷ்ணன்
நூல் : தோழர்கள்
ஆசிரியர் : கி.ரமேஷ்
விலை : ரூ.₹170/-
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
தோழர் பகத்சிங் – சிவவர்மா | தமிழில்: ச. வீரமணி
(பகத்சிங்குடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் சிவவர்மா, ‘நாட்டில் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி – சபேகார் முதல் பகத்சிங் வரை’ என்னும் தன்னுடைய நூலில், மாபெரும் நவம்பர் புரட்சி எந்த அளவிற்கு தோழர் பகத்சிங்கையும், தங்கள் இயக்கத்தையும் உருக்குபோன்று மாற்றி அமைத்தது என்பதையும் விளக்குகிறார்.)
“மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் – விவசாயிகள் – படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியானது மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். அது ரஷ்யாவிலிருந்த ஏகாதிபத்திய ஆட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்ததோடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் திகிலூட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் முறைக்கு நவம்பர் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது.
சோவியத் மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் எஜமானர்களாக மாறினார்கள். அது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது, தங்களுடைய லட்சியப் போராட்டமும் வெல்லும் என்கிற நம்பிக்கையை விளைவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தியாவில் விடுதலைக்கான போராட்டமும், உலகத்தில் நடைபெற்று வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், பாதிக்கப்படாமலிருக்க முடியவில்லை.
இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் உதயம்
பொதுவாக 1920களிலும், குறிப்பாக 1928 – 1930களிலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், இடதுசாரி சக்திகள் அமைப்புரீதியாக வலுவான சக்தியாக உருவாகத் தொடங்கியிருந்தன. பெரிய அளவில் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.
அமைப்புரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காகவும், கூடுதல் ஊதியத்திற்காகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கியது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பு வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதன்முறையாக, அமைப்புரீதியாக விரிவான முறையில் இடதுசாரி அரசியல் இயக்கம் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது.
நாங்கள் சோசலிச சிந்தனையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான், எங்களுக்கு நிறைய நேரமும், புத்தகங்களும் கிடைத்தன. அவற்றைப் படித்தோம், விவாதித்தோம், கடந்த காலங்களில் நாங்கள் செய்தவற்றைத் தீர ஆய்வுசெய்து, சரியான முடிவுகளுக்கு வந்தோம். முதலாவதாக, நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், நாங்கள் மார்க்சியத்தை முறையாக ஆழ்ந்து கற்றதன் அடிப்படையில் அமைந்திடவில்லை.
நம் நாட்டில் அன்றைக்கு மேலோங்கியிருந்த சமூகச் சூழ்நிலைமையில், மார்க்சியத்தைக் கசடறக் கற்பது என்பது அப்படியொன்றும் அவ்வளவு எளிதல்ல.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கைகளில் மார்க்சியத்தை அதன் தத்துவமாகவும், சோசலித்தை அதன் இறுதி லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டதை மிகப்பெரிய முதல் நடவடிக்கை என்று கூற முடியும்.
விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தை நோக்கி …
பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மார்க்சையும் லெனினையும் கற்க வேண்டும் என்றும், அவர்கள் போதனைகளை செயலுக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் – விவசாயிகள் – படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார். மக்களின் கட்சி ஒன்று இல்லாமல் அது அனைத்தும் சாத்தியமல்ல என்றும் அவர் மேலும் கூறினார். கட்சி குறித்த அவரது சிந்தனையை மேலும் விளக்கும் வகையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
‘‘தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் ‘புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே’ நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.’’ அவர் மேலும், ‘திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.
அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். … கட்சி வெகுஜனப் பிரச்சாரப் பணியுடன் தொடங்கப்பட வேண்டும். … விவசாயிகள் – தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்திடலாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும், இவ்வாறு பகத்சிங், மார்க்சிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் வெளிப்படையாகவே வந்து விட்டார்.
பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com