நூல் அறிமுகம் : தாழை. இரா. உதயநேசனின் விடை தேடும் விடியல் – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம் : தாழை. இரா. உதயநேசனின் விடை தேடும் விடியல் – பாரதிசந்திரன்




விடியலை- வெளியிலும் உள்ளுமாகத் தொடர்ந்து உலகம் வெகு காலமாய்த் தேடிக்கொண்டே இருக்கிறது. சிலர் எண்ணத்தில் விடியலைத் தேடுகின்றனர். சிலர் நிகழ்வுகளில் விடியலைத் தேடுகின்றனர். சிலர் பொருளாதாரத்தில் விடியலைத் தேடுகின்றனர். இதிலிருந்து மாறுபட்டு தம் கவிதைகளில் தமக்கானதாய் விடியலைத் தேடாமல், மானுட முன்னேற்றத்திற்கான விடுதலையைத் தேடுகிறார் கவிஞர் தாழை இரா. உதய நேசன்.

“விடை தேடும் விடியல்” நூல், தொண்ணூற்று ஆறு சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வகையினதாக அமைந்திருக்கிறது. சமூகத்தின் மாற்றங்களை உணர்ந்து மேன்மைக்கான விதைகளை ஒவ்வொரு கவிதைகளிலும் பதியமிட்டு சென்றிருக்கின்றன கவிஞனின் எழுத்துக்கள்.

எந்த எல்லையையும் தொட்டுச் சென்று மிகப்பெரும் சாதனைகளைச் சாதிக்கும் என்பதைக் கவிஞர் உதயநேசனின் அனைத்து கவிதைகளும் சான்று பேசுகின்றன.

குறிப்பாகக் கவிஞர் உதயநேசனின் கவிதைகள், எளிமையான சொற்களையும், ஆழமான பொருள் வீச்சையும் கொண்டவை. உளவியல் சார்பானவை. சமூகப் பிரச்சனை சார்பானவை, அழகியல் சார்பானவை, தனி மனித ஒழுகலாறுகள் சார்பானவை, பெண்ணியம் சார்பானவை என பல நிலைகளில் கவிதையின் நிஜங்களை நாம் பாகுபாடு செய்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

எல்லையற்ற வெளியெங்கும் பறந்து திரியும் பறவை போல் கவிதை உலகின் எல்லா திசைகளிலும் இவரின் பார்வைகள் அலைமோதித் திரிகின்றன. இவரின் இலக்கியப் பார்வை வேறு வேறு கோணங்களில் படிப்போர் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றன.

இலக்கியப் பார்வை குறித்து ‘வில்பர் ஸ்காட்’ (Wilbur Scott) கூறும்பொழுது, இலக்கியப் பார்வைகளை ஐந்தாகப் பிரிப்பர். அது உலகளாவிய தரமான இலக்கியத் திறனாய்வு அமைந்த ஒன்றாகும். அல்லது இலக்கியப் பார்வை குறித்த வெளிப்பாடாகும். அந்த வகையில் இலக்கிய பார்வைகளை,

1.அறநெறி சார்பானது

2.சமுதாயப் பார்வை சார்பானது

3.உளவியல் பார்வை சார்பானது

4.வடிவ இயல் பார்வை சார்பானது

5.தொன்ம மூல படிவ பார்வை சார்பானது

என ஐந்து பார்வைகளில் காணலாம்.

இவ்வகைகளில் இலக்கியத்தை ஒவ்வொருவரும் அணுகும் பொழுது படைப்பாளனின் படைப்புத்திறனை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். கவிஞர் உதயநேசனின் கவிதைச்சோலையில் உள்ள கவிதைகள் இந்த ஐந்து வித பார்வைக்கும் தீனி போடுகின்றன. பலப் பல ஆயிரம் சிந்தனைகளுக்கு வழி விடுகின்றன. தீராத பசியுடன் உள்நுழைய வருபவருக்கு வயிறு முட்ட உணவு அளிக்கின்றன.

96- தலைப்புக்களின் பெயர்களிலேயே கவிதைகள் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றன. பல தலைப்புகள் கவிதைகளாகவும் அடையாளப்படுத்தி நிற்கின்றன. முழுக் கவிதையின் உள்ளார்ந்த பொருளை அதன் தலைப்பிலேயே உணர்த்தி விடுகின்றன. இவ்வாறான தலைப்புகள் சில இடங்களில் தீயாய் சுடுகின்றன. காதல் மேடையமைத்துச் சில தலைப்புகள் குளிர் காற்றாய் இதம் வருடுகின்றன. உதாரணமாய்,

’மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை’

’அந்தந்த நேரம் மாறும் முகங்கள்’

‘நினைவுகளில் நனையும் காகிதக் கப்பல்’

‘விடியலே வந்துவிடு’

‘ஏர்முனையும் எதிர்முனையும்’ எனும் தலைப்புகளும் அதன் கவிதைகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன

“கனாக் கால நினைவுகள்” எனும் தலைப்பிலான ஒரு கவிதையில்,

கனவுகள் எனும் அரூபம் மனதைத் தாக்கும் பொழுது ஏற்படும் உணர்வுத் துடிப்புகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது இக்கவிதை. கவிஞர் மிக சிறப்பாக இக்கவிதையை உணர்த்திச் செல்கிறார். மக்கள் அனைவரும் இதை உணர்கின்றனர். ஆனால், கவிஞர் உதயநேசன் மட்டும் அதை கவிதையாக மாற்றுகின்றார்.

”மறக்க நினைத்து

மறைந்து போனேன்

ஞாபகங்கள் தென்றலாய்த்

தீண்டிச் செல்கிறதே

பேசாத வார்த்தைகள்

புரவிபோல் சீறிட்டுச்

செப்புச்சிலையாகச்

செதுக்கிடச் சொல்கிறதே” (ப-90)

‘மதம் என்னும் மதம் ஏனோ’ எனும் எனும் கவிதைக்குள் சமூகத்தின் தலை விரித்தாடும் கோலத்தைக் கோபக்கனலோடு, சுட்டெரிக்கப் பார்க்கின்றார். பார்த்ததோடு மட்டுமல்ல அதற்கான தீர்வையும் தருகின்றார் கவிதையில்,

”அவனியில் உதித்தவர்

அடித்தளம் மறந்தார்

ஓடுகின்ற உதிரத்தின்

நிறமும் மறந்தார்

மானிடராம் நமக்குள்

பிரிவினை வளர்த்துச்

சிந்தனைகள் குறுகவிட்டுக்

குறுக்குச் சுவர் எழுப்பி

சாதியும் பேதமும்

இல்லையென முழங்கி

நல்லிணக்கம் பேணி

மானுடம் காப்போம்”

என்கின்றார். பிரச்சினைகளும், தீர்வுகளும் ஒரே கவிதையில் நமக்குக் கிடைக்கின்றன. மேலும், ’இவள் பெண்தானே என்று நினைத்தாயோ’ எனும் கவிதையில், பெண் இனத்திற்கான பதிலைத் தருகிறார். அக்கவிதை,

“ஆணும் பெண்ணும்

நிகரெனக் கொண்டால்

வையகம் தழைக்கும்

அறிவில் சிறக்கும்

அவளின் கனவுகள்

அடுப்பில் எரிந்து

கேலியாய் மாறிட

பாவம் என்ன செய்தாயோ

வார்த்தையில் பெண்ணியம் பேசிடும் வர்க்கமே

தடைகள் நீங்கும் காலம் வருமே”

தாழை இரா. உதயநேசனின் கவிதைகள், சிந்தனைகளின் கொடையாகக் கவித்துவத்தோடு வீரியமான எழுச்சியைத் தருகின்றன. மலரின் மணமும், தீயின் சுடலும், காற்றின் வருடலும், மழையின் சுகமும், உளியின் செதுக்களும், ஆணியின் குத்தலும், சூறாவளியின் சுழலும் ஒரு நூலுக்குள் சாத்தியப்பட்டு நிற்கின்றன.

’விடைதேடும் விடியல்’ கவிதைநூல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்க் கவிதைகளை எளிமையாகவும், அதே நேரம் ஆழமாகவும் படிக்க விரும்புபவர்கள் கவிஞர் உதயநேசனின் அனைத்துக் கவிதை நூல்களையும் வாங்கி இன்புறலாம்.

காலத்தின் தேவையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கவிஞரின் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
9283275782
[email protected]

நூல் : விடை தேடும் விடியல்
ஆசிரியர்: தாழை. இரா. உதயநேசன்
பதிப்பகம் : வசந்தா பதிப்பகம், சென்னை
விலை: ரூ.150
பக்கம்: 140

நூல் அறிமுகம் : மாதவராஜின் இரண்டாம் இதயம் – ஆன்டோ கோல்பர்ட்

நூல் அறிமுகம் : மாதவராஜின் இரண்டாம் இதயம் – ஆன்டோ கோல்பர்ட்




நூல் : இரண்டாம் இதயம்
ஆசிரியர் : மாதவராஜ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 150.00
தொடர்பு எண் ; 044 24332924

புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

நம் தோளில் கைக்போட்டபடி உரையாடுவதைப் போன்ற ஒரு நடையில் தன் ‘இரண்டாம் இதயம்’ நூலை எழுதியுள்ளார் எழுத்தாளரும் என் அன்பு அண்ணனுமான ஜா.மாதவராஜ் அவர்கள். பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

எப்போதும் அவரது எழுத்து நடை தனித்துவமானது. வாசக மனங்களுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து சொற்களைக் கோர்ப்பதில் வல்லவர். இந்த நூல் அவரது
”தீராத பக்கங்கள்” என்னும் வலைப்பூவில் அவர் எழுதிய பதிவுகளின் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பாகும்.

தான் வாழ்வில் எதிர்கொண்ட சுவையான சம்பவங்கள், சுவாரஸ்யமான மனிதர்கள், தன் படைப்புலக அனுபவங்கள், இழப்புகள், நெகிழ்வான தருணங்கள், மறுக்க முடியாத நினைவுகள் என பலவற்றின் சுவாரஸ்யமான தொகுப்பு தான் இந்நூல்.

அவரே எழுத்தாளராகவும், தொழிற்சங்க வாதியாகவும், ஆவணப்பட இயக்குநராகவும், பேச்சாளராகவும், முற்போக்கு சிந்தனை கொண்ட களப்பணியாளராகவும் இருப்பதால் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்வைக் காட்டிலும் அதிக மனிதர்களோடு பழகியவராகவும், சமூகத்தின் அறியப்பட்ட ஆளுமைகளோடு நெருங்கிப் பழகியவராகவும், எதையும் ஒரு கலைப்பார்வையோடு பார்க்கும் பழக்கமுடையவராகவும் இருப்பதால் இந்நூலில் அவர் எழுதும் பல சம்பவங்கள் வெறும் வாழ்வியல் அனுபவங்களாக மட்டும் இல்லாமல் நமக்கு புதிய சுவையான தகவல்களாகவும் இருக்கிறது.

டெஸ்டிமோனா, சண்முகவள்ளியக்கா, அழியாத கோலங்கள், டார்க் ரூம் போன்ற பல பதிவுகள் ஒரு சிறுகதைக்கானது. அவர் தன் நினைவுகளை மீட்கும் போது நமக்கு அது காட்சியாகிறது. இந்த நூலின் மற்றொரு சிறப்பான அம்சம் தன் அனுபவங்களை எந்தவித போதனைகளும் இன்றி மிக இயல்பாக நம் முன் விவரிக்கிறார். எங்கேயும் அவர் எதற்கும் எத்தீர்வையும் முன்வைத்து ஒரு தனித்த உரையாடலை நிகழ்த்தவில்லை!

எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுசாமி, உதயசங்கர், கோணங்கி, எஸ்.ரா போன்ற பலரோடு அவர் பயணித்த அனுபவங்களைச் சுவாரஸ்யமாகப் பதிவு செய்கிறார்.

அதிலும் குறிப்பாகத் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமையான எழுத்தாளர். ஜெயகாந்தனின் மூத்த மருமகன் என்பதால் அவர் தன் காதல் அனுபவங்களைக் கோர்த்த விதமாகட்டும் அதன் தொடர்ச்சியாக அவருக்கும், ஜெயகாந்தனுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் ஆகட்டும், பின்னர் அவர் ஜெயகாந்தனுக்கு எழுதிய கடிதத்தின் சாரமாகட்டும் இவைகளை அவர் விவரிக்கும் போது அது அத்தனை சுவாரஸ்யமாக வாசக மனதிற்குக் கடத்தப்படுகிறது.

இந்த நூலில் பல ஊர்களை அவர் குறிப்பிட்டு எழுதினாலும் சென்னையும், சாத்தூரும் தவிர்க்கவே முடியாத கதாபாத்திரங்களாக நூலெங்கும் உலா வருகிறது. தன் பால்ய கால அனுபவங்களில் துவங்கி ஒரு தொழிற்சங்க வாதியாகப் பரிணமித்து, ‘மண்குடம்’ என்னும் சிறுகதை மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமாகி, ‘பள்ளம்’ , ‘இது வேறு இதிகாசம்’ போன்ற குறும்படம், ஆவணப்படங்கள் மூலம் அவர் எடுத்த பல பரிணாமங்களை தன் அனுபவங்களாக நினைவுகளைப் பதிவு செய்த விதம் தனித்துவமானது. ஏனெனில் அதில் தன் மகிமைகளைப் பிரதாபங்களைப் பேசாமல் அவைகளின் மூலம் அவர் சமூகத்தை எப்படி உள்வாங்கி உள்ளார் என்பதையே அவைகள் பேசுகிறது. ஒரு தனிமனிதனின் வாழ்வென்பது அவனைப்பற்றியது மட்டுமல்ல; அவன் வாழும் காலத்தின் மனிதர்களைப் பற்றியது அவர்களின் பண்பாட்டை, வாழ்வியல் முறையைப் பற்றியது. மொத்தத்தில் சமூகத்தை ஒரு சமுத்திரமாகக் கொண்டால் ஒரு தனிமனிதனின் வாழ்வென்பது ஒரு துளி கடல்!

எல்லா மனிதர்களுக்கும் தன் வாழ்விலிருந்து எடுத்துச் சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அதனை எப்படி சக மனிதனிடம் சுவாரஸ்யமாகக் கடத்துவது என்பது தான் பெரும் சவால்! அந்தச் சவாலை மிக எளிதாக தன் எழுத்தின் ஆளுமையால் இந்நூலின் ஆசிரியர் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்.
தன் கடந்த காலத்தை நமக்குள் கடத்திவிட அவர் இதயம் துடித்ததை அவர் எழுத்தில் உணர முடிகிறது! நமக்காகத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த இதயத்தை ஒருமுறையேனும் வாங்கி படித்துவிடுவதே நாம் அதற்குச் செய்யும் கைமாறு!

– ஆன்டோ கோல்பர்ட்

Tribe Girl Nagu Shortstory by Maru udaliyangiyal bala. மரு. உடலியங்கியல் பாலாவின் இருளர் மகள் நாகு சிறுகதை

இருளர் மகள் நாகு சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா



ராஜலிங்கம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் சீனியர் மேனேஜர். மிகவும் நல்ல குணம் கொண்ட, பரோபகாரி. பரந்த மனப்பான்மை கொண்ட பண்பாளர். குழந்தை குட்டி ஏதும் இல்லை. உலகமே தன் சுற்றம் என நேசிக்கும் அன்புள்ளம் கொண்டவர். வேலையில் சுறுசுறுப்பு, சக ஊழியர்களுடன் நேசபாவம், கடைநிலை சிப்பந்திகளுக்கு உதவும் மனப்பான்மை ஆகிய நற்குணங்களால், அவரை எல்லோரும் “நைனா” (அவர் ஒரு நாயுடுகாரு) என்றே பாசத்துடன் அழைப்பர்!

சீனியர் அதிகாரி என்பதால் பெரிய குவார்ட்டர்ஸ் கிடைத்தது. அவர் மனைவி ஈஸ்வரி, மிகவும் சாது, எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர். குழந்தை இல்லாத குறையால் மிகவும் வருந்தி நிற்பவர்! இருவருக்கும் அந்த வீடு அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அவர் மனைவியிடம் பலமுறை தத்தெடுப்பது பற்றி பேசியிருக்கிறார்.. ஆனால் இன்றுவரை சுமூக தீர்வு ஏற்படாததால், அத்திட்டம் நிறைவேற்ற படவில்லை. ஆனாலும் இருவரும் மனமொத்த தம்பதியினராய் இன்றளவும், சந்தோசமாகவே வாழ்ந்து வந்தனர். அக்கம்பக்கம் இருப்பவர்களின், குழந்தைகள், அந்த வீட்டில் குழுமி விளையாடி , பிளே ஸ்கூல் போல் அந்த வீடு எப்போதும் கலகலப்பாய் காட்சி அளிக்கும். சாக்லேட், பிஸ்கட், கேக், இனிப்புகள் என்று குழந்தைகளுக்கு தாராளமாய் கிடைப்பதால், அவர்களும் காலை முதலே, நைனாவின் வீட்டுக்கு படையெடுக்க தொடங்கி விடுவர். அந்தம்மாவுக்கும் குழந்தைகள் என்றால் உயிர்.

அங்கு, பாம்பு தொல்லை மழைக்காலங்களில் அதிகம் வருவதால், நிலக்கரி நிறுவனத்தினர்.. இருளர் இன ஆண் பெண்களை, அழைத்து பாம்புகளை பிடிக்க செய்வது அடிக்கடி நடைபெறும் வழக்கம். “பாம்புக்கடிக்கு”அவ்வப்போது அவர்கள் சிகிச்சை அளித்தும் வந்தனர்.

சில பல வருடங்களுக்கு முன், ஒரு முறை ஈஸ்வரியை பாம்பு, பின்னிரவில் கடித்துவிட, நாகு எனப்படும் “நாகராணி” என்ற இருளர் இனத்து இளம்பெண் கூட்டிவரப்பட்டாள். பாம்புகடியை ஆராய்ந்து கருநாகம் போல் தோன்றியதால், அனைவரும் பயந்தனர். நாயுடு மிகவும் ஆடிப்போய் விட்டார், அவர் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்த வண்ணம் இருந்தது.

ஆனால் அந்த அழகிய இளவயசு பருவ பெண்ணோ, தைரியமாக செயல்பட்டு, ஈஸ்வரியின் கால் கெண்டை சதையை ஆழமாக கீரி, வாயில ஓரு வினோதமான பச்சிலையை அடக்கிய வண்ணம், விஷத்தை, லாவகமாக உறிஞ்சி எடுத்து, வெளியேற்றினாள். பின்பு சுண்ணாம்புடன் கலந்த ‘மலைஉப்பை’ கடிவாயில் அழுத்தி பன்டாஜ் போல் கட்டினாள். ஏதோ சில நாட்டு மருந்துகள் கொண்டு ஒரு “கஷாயம்” தயாரித்து, மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்தம்மா வாயில் புகட்டினாள். அன்று இரவு முழுதும், ஈஸ்வரி அம்மாள் தூங்கி விடாதபடி, அவளை உசுப்பி உசுப்பி, “அம்மா அம்மா” என்று கூப்பிட்டு, குரல் கொடுத்து கொண்டே இருந்தாள்.

இருளர் கூட்ட பெரியவரும், அந்த பெண்ணின் தகப்பனுமான “கோடன்” என்பவர், நாயிடுவிடம் “ஐயா, எங்க கூட்டத்திலேயே இவ தாங்க எப்பேர்ப்பட்ட ராஜநாக விஷத்தையும் முறித்து உயிரை காக்கும், வித்தை தெரிந்த, கைராசிக்காரி! நிச்சயம் எங்க நாகலிங்க சாமி சத்தியமா அந்த அம்மாவை காப்பாத்திடுவா!. தைரியமா இருங்க சாமி”. என்று ஆறுதல் கூறி, அவரை கட்டாயப்படுத்தி காப்பி குடிக்க வைத்தார்.

அன்று இரவு முழுக்க, அந்த இருளர் கூட்டமும், தொழிற்சங்க காம்ரேடுகளும், அவர் வீட்டை சுற்றி அமர்ந்து அவருக்கு தைரியம் கொடுத்து துணை நின்றனர். அந்த 9 அடி நீள, கருநாகத்தையும் சற்று நேரத்தில் பிடித்து விட்டனர். அதை கண்ட அந்த கூட்டமே, பயத்தில் நடுநடுங்கி, விக்கித்து போய் நின்றது !..

பொழுது புலர்ந்ததும், மெல்ல மெல்ல கண்விழித்தாள் ஈஸ்வரி. நாகுவை எல்லோரும் பாராட்டி வணங்க, நாயுடு, அவள் கரம் பிடித்து கண்ணீர் உகுத்து நன்றி கூறினார். பத்தாயிரம் ரூபாய் கட்டு ஒன்றை அவளுக்கு கொடுக்க, அவளோ “நாங்கள் பாம்பு கடிக்கு வைத்தியம் செய்யும் போது, பணம் வாங்குவதை தெய்வ குத்தமாக நினைக்கிறோம். அது எங்கள் குல வழக்கம்! உயிருக்கு எந்த பணமும் ஈடாகாது. வேண்டாம் ஐயா!”என்று கூறி மறுக்க, “நீ மகராசியா! தீர்க்காயுசா வாழனும்மா” என வாழ்த்தி வணங்கி வழி அனுப்பினார்.

அன்று முதல்… நாகுவை தன் சொந்த மகளாக பாவித்து, தங்களுக்கு உதவி செய்ய அவளை நியமித்து கொண்டார். நாகு அறிவும் அழகும் நிறைந்த யுவதி! அந்த கூட்டத்திலேயே எஸ் எஸ் எல் சி. வரை படித்த ஒரே ஆள் அவள்தான். தினம் தினம், மாலை வேளைகளில், வந்து அவர்களுக்கு வேலைகள் செய்வாள்.
பக்கத்து வீட்டு என்ஜினீயர் மகன் “ரவி” அவள் பேரழகில் மயங்கி, காதல் கொள்ள, அவர்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது. ஒருநாள் இருவரும் ஓடிப்போய் பதிவு திருமணம் செய்துகொள்ள ஊரே, அல்லோல கொல்லோல பட்டது. நாயுடுவோ மிகவும் சந்தோஷப்பட்டார். நாகு இவருக்கு போன் செய்து, “அப்பா எங்களை நீங்கதான் எப்பிடியாவது காப்பாத்தணும்! எங்களை கைவிட்றாதீங்க அப்பா” என் அழுது புலம்பினாள்..

நாயுடு, தன் நண்பரான பக்கத்து வீட்டுகாரரை அழைத்து பேச… ரவியின் அம்மாவோ “போயும்போயும் அந்த இருளர் குலத்து பெண்ணை, எப்படி நாங்கள் ஏற்பது.. அதுவுமில்லாம, அவங்க குடும்பமே அடுத்த வேளை சோத்துக்கே லாட்டரி அடிக்கும் பரம ஏழைகள்” என கோபாவேசத்துடன் மறுக்க… நாயுடு பொறுமையாக “அம்மா! நாகு! எச்சில் உதட்டால் என் மனைவியின் விஷ ரத்தத்தை, உயிரை பணயம் வைத்து உறிஞ்சி எடுத்து காப்பாற்றினாளோ! அன்றே அவள் எனக்கு மகளாகிவிட்டாள்! இல்லை இல்லை தயாகிவிட்டாள்! குழந்தை இல்லாத நாங்கள் அவளை “சுவீகார புத்ரியாக” தத்தெடுத்து, சட்டப்படி வாரிசாக ஏற்று கொள்கிறோம்.. நாங்கள் மேல்ஜாதி நாயுடு வகுப்பு, நீங்களும் நாயுடு வகுப்பை சேர்ந்தவர் என கேள்வி பட்டிருக்கிறேன். இப்போதே எங்கள் லட்சக்கணக்கான சொத்து முழுதும் அவளுக்கு உயில் எழுதி கொடுத்து விடுகிறேன்.!. தயவு செய்து, அந்த இளசுகளை பிரிக்காதீர்கள்! “என கெஞ்சி, அந்த தம்பதியர் கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்டனர்.

பக்கத்து வீட்டு நாயுடம்மா, இவர்களுக்கு இருக்கும் ஏராளமான சொத்துபத்துக்கள் பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருந்ததால், “சரி சரி நீங்க மணவாடு என்பதாலும், இவ்வளவு கெஞ்சி கேட்பதாலும். நாங்க சம்மதிக்கிறோம். சீக்கிரம் சட்டபூர்வமாக அவளை சுவீகாரம் எடுத்து கொள்ளுங்கள்!! அதன் பிறகு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கோ” என்று, மனதின் குதூகலத்தை மறைத்தபடி, வேண்டா வெறுப்பாக கூறுவது போல் நடித்தாள்.

அடுத்த வாரம் நெய்வேலியே. அதிரும் படி, இருளர் கூட்டமும், நெய்வேலி தொழிலாளர் கூட்டமும் இணைந்து, திருமணம் ஜோராக, நெய்வேலி கம்யூனிட்டி ஹாலில், ஜாம் ஜாம் என்று நடந்தேரியது. நாயுடுவுக்கு மகள் கிடைத்த சந்தோஷத்துக்கு அளவே இல்லாததால், திக்கு முக்காடி போனார்.
(முற்றும்)