கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்
1964 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டது. அது தனது திட்டத்தில் ‘மக்கள் ஜனநாயக’ புரட்சி என்ற தெளிவான தொலைநோக்கினை முன்வைத்தது என்பதை நாம் அறிவோம்.
உண்மையில், 1951 ஆம் ஆண்டில், முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற இலக்கினை கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துக் கொண்டது என்பதை இ.எம்.எஸ் தனது நூலில் விளக்குகிறார். 1964 ஆம் ஆண்டில் கட்சி பிளவுற்ற பிறகு சி.பி.ஐ ‘தேசிய ஜனநாயகம்’ என்ற புதிய கோட்பாட்டினை உருவாக்கியது. உண்மையில் அதுவொரு வர்க்கப் போராட்ட திட்டமாக இல்லை. வர்க்க சமரசத்திற்கே வழிவகுத்தது. மார்க்சிஸ்ட் கட்சியோ ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற சரியான இலக்கையே தொடர்ந்து முன்னெடுத்தது.
இந்த இலக்கு, 1951 அக்டோபரில் கல்கத்தாவில் நடந்த சிறப்பு மாநாட்டில் ஏற்கப்பட்ட ஒன்றாகும். அப்போது ஏற்கப்பட்ட ஆவணத்தில் 53 பகுதிகள் இருந்தன.’நாட்டின் அனைத்து கனிம சுரங்கங்களும், கப்பல் கட்டும் தளங்களும், ஆலைகளும், பண்ணைகளும் தேசியமயமாக வேண்டும்’ என்ற புரட்சிகரமான அறைகூவலை விடுத்த அந்த திட்ட ஆவணத்தின் பகுதிகளை விளக்கி இ.எம்.எஸ் குறிப்பிடும் கருத்துக்களை பார்ப்போம்.
மக்கள் ஜனநாயகம் என்றால் என்ன?
அ) மக்கள் அனைவருக்கும் உண்மையான – நம்பகமான – விரிவான ஜனநாயக உரிமைகளை, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எதிர்பார்த்தது போல பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் உறுதிப்படுத்துவது;
ஆ) அந்த ஜனநாயக அமைப்பில் தொழிலாளி மற்றும் விவசாயி மக்களின் தலைமையை உறுதிப்படுத்த வேண்டும்;
இ) அரசு மற்றும் அரசியல் அமைப்பின் தலைவனாக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும்
‘முதலாளிகளுக்குக் கூட விதிவிலக்கு இல்லாமல் பெரும்பான்மை மக்களாகிய தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துகிற ஒரு அரசு அமைப்பைத் தான்’ மக்கள் ஜனநாயகம் முன்வைக்கிறது. இந்த முடிவு நமது நாட்டின் வரலாற்று சூழலை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.
தேர்தல்களில் பங்கேற்பு
மேலும் அந்த ஆவணம் தேர்தல்களை பற்றியும் பேசியது. ‘கம்யூனிஸ்ட்டுகள் தேர்தல்களைப் பயன்படுத்தி, பெரும்பான்மை பெற்று, ஆட்சியதிகாரத்தில் நீடிக்க முதலாளித்துவ வர்க்கம் அனுமதிக்கும் என்று முடிவு செய்து விடக் கூடாது. மாறாக, நாடாளுமன்ற அமைப்புகளையும் நிர்வாக ஏற்பாடுகளையும் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் அமைப்புகளையும், இயக்கங்களையும் பலப்படுத்திட கம்யூனிஸ்ட்டுகள் முயல்கிறார்கள் என்பதை முதலாளித்துவ வர்க்கத்தினர் காண்பார்களானால் அதைத் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் – பலப்பிரயோகம் உட்பட – அவர்கள் மேற்கொள்வார்கள். அப்படியரு கட்டம் வருமானால், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் கட்சி அதைச் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்திட வேண்டும்’
இது ஒரு எச்சரிக்கை. இதன் பொருளை கீழே காணும்படி விளக்குகிறார் இ.எம்.எஸ்., “நாடாளுமன்ற அமைப்புகளின் மூலம் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மக்கள் ஆதரவை வென்றெடுப்பதற்கான போராட்டங்களும் – இந்த போராட்டங்கள் மற்றும் ஆதாயங்களின் மூலமாக ஒரு புரட்சிகர இயக்கத்தை வலுவாகக் கட்டுவதும் – இந்தியப் புரட்சிப் பாதையின் துவக்கமாகும். ஆனால் முதலாளித்துவ படைபலத்துக்கு எதிராக புரட்சிகர வழிமுறைகள் மூலமாகப் போராட வேண்டிய அவசியம் ஏற்படுமானால் அதையும் செய்தாக வேண்டும்.”
தேர்தல்களில் பங்கேற்பது மட்டுமல்ல, பெரும்பான்மை பெறுகிற நேரங்களிலும் இடங்களிலும் அரசுப் பொறுப்பை ஏற்பதும் கூட கம்யூனிஸ்ட்டுகளின் பணியாகும். சோவியத் யூனியனிலோ, சீனாவிலோ, இருந்திராத, இந்தியாவுக்கே உரிய நிலைமையாக இது உள்ளது.
உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கிடைத்த பல்வேறு அனுபவங்களை சுட்டிக்காட்டும் இ.எம்.எஸ், “இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கமும் முயற்சிகளும் சோவியத்தைப் போலவோ சீனாவைப் போலவோ இதர சில சோசலிச நாடுகளைப் போலவோ பிரதியெடுத்தார்ப் போன்ற அரசு அமைப்பை ஏற்படுத்துவது அல்ல” என்பதையும் தெளிவாக்குகிறார்.
மேற்சொன்ன ஆவணம் கொடுத்த பார்வையின் அடிப்படையிலேயே 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத்தேர்தலிலும், பிற தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுகள் பங்கெடுத்தார்கள். விடுதலைக்கு முன்பும் கூட காங்கிரஸ் கட்சியின் பகுதி என்ற முறையிலும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்தப் பெயரிலும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
இடது, வலது திரிபுகள்:
மேலே குறிப்பிட்ட ஆவணம், சில திரிபுகளைப் பற்றிய எச்சரிக்கையையும் முன்வைத்தது. பிற்காலத்தில் அத்தகைய திரிபுகளை எதிர்த்து போராட வேண்டி வந்ததை நாம் அறிவோம்.
‘தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் கட்சி என்பது அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்’ ‘கோடிக்கணக்கில் உழைக்கும் மக்கள் பங்கேற்கிற தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் அன்றாடப் போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்தான் உழைக்கும் மக்களின் ஜனநாயக இயக்கத்தின் ஆற்றல்மிகு அடித்தளமாகும்.’ என்பதை ஆவணம் தெளிவாக குறிப்பிட்டது.
· அவ்வாறு அல்லாமல், மக்கள் போராட்டங்களில் உறுதியாகக் காலூன்றாமல், முதலாளித்துவ நாடாளுமன்ற நிர்வாக அமைப்புகளில் செயல்படுவதும் தேர்தல்களில் பங்கெடுப்பதையும் மட்டுமே முன்னெடுத்தால் அது ஒரு வலதுசாரி திரிபு நிலைமையில் கொண்டு போய் தள்ளிவிடும்.
· மக்களைத் திரட்டாமல் அவர்களது போராட்டங்களுக்குத் தலைமை ஏற்காமல் முதலாளித்துவ ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிவந்தால் அது இடது சாரி திரிபுவாதமாக சுருங்கிப் போகும்.
· அதே போல வர்க்கங்களின் சக உறவுகள் மற்றும் அரசியல் கூட்டணிகள் தொடர்பான பிரச்னைகளிலும் ஏற்படக்கூடிய வலது-இடது திரிபுகள் பற்றிய எச்சரிக்கைகளும் அதில் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, மக்கள் ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக்கூடிய முதலாளித்துவ பிரிவினரும் உட்படுத்தப்படுகிறார்கள் என்றாலும் கூட, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்களும், குழுக்களும் தொழிலாளி வர்க்கத்தின் மீது பகைமை கொண்டவர்கள் தான் என்பதை மறக்கக் கூடாது. எனவே முதலாளித்துவ பிரிவினர் தம்முடைய சொந்த வர்க்க நலன்களுக்காக ஜனநாயக லட்சியத்துக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற வாய்ப்பு உள்ளது. இது குறித்து பாட்டாளி வர்க்கமும் அதன் அரசியல் கட்சியும் தொடர்ந்து விழிப்புடன் இருந்ததாக வேண்டும்.
இதனை இ.எம்.எஸ் விளக்கும்போது சில உதாரணங்களையும் தருகிறார். “விவசாய அரங்கில், பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடக்கூடிய மக்கள் இயக்கத்தை நடத்துவதற்குக் கட்சி முயல்கிறது. ஆனால், பணக்கார விவசாயிகளில் ஒரு பிரிவினர் சில நேரங்களில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக மாறக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. இது குறித்தும் விழிப்புடன் இருப்பது கம்யூனிஸ்ட்டுகளின் பொறுப்பாகும். ஆனால் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயி மக்களின் ஒற்றுமையை பாதுகாத்துக் கொண்டே, கட்சி இதனைச் செய்ய வேண்டியுள்ளது.”
சுருக்கமாக, நிலவுடைமை சக்திகளையும், ஏகாதிபத்திய சக்திகளையும், ஏகபோக பெருமுதலாளிகளையும் எதிர்த்து ஜனநாயகத்துக்கு ஆதரவான நிலை எடுக்கக்கூடிய எல்லாரோடும் ஒத்துழைக்க வேண்டும்; அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும், கூட்டாளிகளின் சமரச முயற்சிகளை எதிர்த்திட வேண்டு. இதுதான் மக்கள் ஜனநாயகத் தொலைநோக்குப் பார்வையின் பொருள் ஆகும்.
ஆம்‘நமது புரட்சிப் பாதை… இந்தியாவின் சொந்தப் பாதை, அதன் வடிவத்தை இந்திய மக்களே முடிவு செய்வார்கள்’
முந்தைய தொடர்களை வாசிக்க :
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்