சசிகலா திருமால் கவிதை

சசிகலா திருமால் கவிதை




காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்…

ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த
நம் உறவின் நடுவே
அர்த்தமற்ற புரிதல்களால்
மனதில் உண்டான விரிசலினூடே…
புதிதாய் முளைத்தெழுகிறது
பிரிவின் கோடொன்று…

மௌனம் எனும் கோடரி கொண்டு
மனதினைப் பிளக்கின்றாய்
நிராகரிப்பு எனும் ஆயுதமேந்தி
நிற்கும் உன்னிடம்
என் இதயத்தின் வலியுணர்த்த இயலாமல்
வெற்றுச் சடலமென
வீழ்ந்து கிடக்கிறேன் நான்…

உயிர் கொண்ட உறவுகள் ஓர்நாள்
நம்மை உயிரோடு கொல்லும் என்பதை
உணர்த்திச் செல்கிறாய்..
நீ கொடுத்த காதலை ஏற்றுக் கொண்டவள்
நீ கொடுக்கும் காயங்களையும்
ஏற்கத் துணிகின்றேன் இன்று…

என்றேனும் என்நிலை உணர்வாய்
என்ற நம்பிக்கையில்…
காத்திருக்கிறேன் நான்..
உன் மனகசப்புகள் தீரும் வரை
கண்ணீரோடும் கனத்த மனதோடும்…

சசிகலா திருமால்
கும்பகோணம்.

அந்த நொடி கவிதை – சுதா

அந்த நொடி கவிதை – சுதா




நான் சாக மாட்டேன்…
எனச் சொன்னவள் கருவிழி இரண்டும்
காணாது போய்க் கண்ணீர் கன்னம்
தாண்ட என் கைவிரல்களைப் பிடித்தபடி
காற்றோடு காணாதுபோன நொடி…

பெயர் வைத்தவள் பிணம் என்ற பெயரோடு
செல்கையில் என்னைச் செல்லமாய்
அழைத்த வார்த்தை மட்டும்
என் காதுக்குள் நுழைந்த நொடி…

நான்கு சுவற்றுக்குள்
சூழ்ந்த இருட்டின் மத்தியில்
சத்தமாகக் கதறி அழுத அந்த நொடி…

அன்பு சொந்தம் நட்பு
நம்பிக்கை இப்படியான வார்த்தைகள்
அர்த்தமிழந்து போக…அந்தரத்தில்
நூல் இழையில் தொங்கிய அந்த நொடி…

இங்கு அனைத்திற்கும் பிரதானம் பணம்
என்று உணர்ந்த நொடி…
பலரின் பற்கள் ,
மகிழ்ச்சியில் சிரிப்பதற்கு மட்டுமல்ல…
என்னைக் கொரிப்பதற்கும் காத்திருக்கிறது
என்று உணர்ந்த நொடி…

என் தோளில் கை போட்டு
என் தோல்வியை ரசிக்கும் மனிதரை
அடையாளம் கண்ட அந்த நொடி…

என்னைக் குத்திக் கிழித்துக் கூறு போட்டது
நான் கொடுத்த ஊன்றுகோலால்…

என அறிந்த அந்த நொடி…

இப்படியான நொடிகள் பல
நான் இறந்து இறந்து பிறந்த நொடி…
இப்போதும் பிறந்து விட்டேன் மீண்டும்
இறக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்…
இன்னும் எத்தனை நொடிகள் நான்
இறுதியாக இறப்பதற்குள்
இறந்து பிறப்பேன் என்பதுதான் புதிர்…

ஆனால் ஒவ்வொரு இறப்பும்
என்னை மீண்டும் பிறக்க வைத்தது
ஒவ்வொரு விழுதலும் மீண்டும் எழவைத்து…
அட…இதைவிட சுகம் என்ன…என்ற இந்த நொடி…

– சுதா

சக்திராணியின் கவிதைகள்

சக்திராணியின் கவிதைகள்




அன்பு
********
எப்போதும் என் வீட்டிற்கு
விருந்தாளியாக வரும்
குழந்தை…
இப்போதெல்லாம் வருவதே இல்லை…

ஏன் என்ற கேள்வி என் உள்ளம்
கேட்ட போதும் விடையெல்லாம்
கண்டுபிடிக்க முடியவில்லை…
என் அகக்கண்களுக்கு…

இருந்தும்…அவள் விரும்பி சாப்பிடும்
நொறுக்குத்தீனியும்…
விளையாட்டு பொம்மைகளும்
உயிரற்று கிடக்கின்றன…
என்னைப்போல்…

ஊருக்கு சென்றிருந்தால் கூட…
கைபேசியில் உரையாடிடுவாள்…
உள்ளம் மகிழ புன்னகையில்…
உறவை ஒன்றாகச் சேர்த்திடுவாள்…

விடையற்ற வினாவுக்கு…விடை
தேடும் முயற்சியில் நாட்கள் நகர்ந்து…
வருடங்களான போதும்…
காத்திருப்பதும்…அழகாகத்தான்
இருக்கின்றன…அன்பு மனதிற்கு…

பிடித்தவர்களை…பிடியில் வைத்திருப்பதல்ல…அன்பு…

அவர்களின்
அர்த்தமற்ற…செயல்களிலும்…
அன்பாய் வாங்கும் பொருட்களிலும்…
நினைவுகளாய் வாழ்ந்து கொண்டிருப்பதே அன்பு…

நம்பிக்கை
****************
தோல்வியால்…துவண்டபோது…
எக்கரமும் ஆறுதலாய் இல்லா வாழ்வில் …
என் மீது
நான் கொண்ட நம்பிக்கை…

அன்பை மட்டும்…கண்ட
விழிகள்…சுயநல உபயோகம்
எண்ணி அழுத நொடியில்
எனக்காக நான் கொண்ட நம்பிக்கை…

இயலா செயலென…பலர்
சொன்ன போதும்…இயன்றதை
செய்து சில வெற்றிகளை
அனுபவித்த போது…எனக்காக
நான் கொண்ட நம்பிக்கை…

மாற்றம் எதிர்பார்த்த…வாழ்வில்
ஒட்டு மொத்த மாற்றமும்…
எதிர்மறையாய் அனுபவித்த போதே
எனக்காக நான் கொண்ட நம்பிக்கை…

பேசிய வார்த்தைகளில்…
பொய்யிருந்தும்…எதிர்த்துப் பேச முடியா நிலையில்…
மௌனமாய்
என் மனதில் நான் கொண்ட நம்பிக்கை…

எனக்கான நம்பிக்கை அனைத்தும்…
எனக்குள்ளே புதைந்திருக்க…
வேறென்ன நம்பிக்கை …என் வாழ்வின்
பயனாய் அமைந்துவிடப்போகிறது…
என்றே…என் நம்பிக்கை எனக்காய்…

முகமூடி
**********
நான் நானாக இருக்கிறேன்…என்பதில்
தொடங்கிய எண்ணம்…
ஏறக்குறைய…என் வயதிற்கேற்றாற்போல்
என்னுடனே…தொடர்கின்றன… வார்த்தைகளில்…

எனினும்…என் முகம் கொண்ட மாற்றம்
மனதில் பல எண்ணங்கள் புகுத்த…
பல முகமூடிகளை
விழித்ததும்…
அணிந்து கொள்கிறேன்…

குட்மார்னிங் சொல்ல முடியா
தருணம்…சொல்லியே ஆக வேண்டிய
கட்டாயத்தில் ஒரு முகம்…

புன்னகைக்க இயலா மனிதரிடம்…
போலிப் புன்னகை டோக்கன்
போட்டே…புன்னகை பரிசாய் ஒரு முகம்…

சினம் கொண்ட மனம்…
சிரிக்காமல் சென்றதில்லை ஒருபோதும்…

எச்செயலும் பிடிக்கவில்லை…
செய்வதற்கே…எனினும் எல்லாம் பிடித்தது போல் செய்யும் கரங்களுக்குள்
ஒழியும்…உண்மை முகம்…

தகுந்த நேரத்தில் தகுந்த…முகம்
அணிந்தே…பிறர் போற்றும்…
ஒப்பற்ற வார்த்தைகளில்…என்
நன்றி உரித்தே என்பதில்…
கடந்து விடத்துடிக்கும் ஒரு முகம்…

எண்ணற்ற முகங்கள் முகமூடியாய்
இருந்தும்…முகம் சுளிக்காமல்
பேசுவதில்…முகமூடிகள்…
கிழிக்கப்படுவதில்லை…இங்கே…

எனினும்…முகத்திற்கான…
அகங்கள் தவிர்க்கப்படுகின்றன…
தெரிந்தும் தெரியாதது போல்…

நடிப்பு
*********
கதறி அழும்…
நான்கு சுவர்களுக்கு
மத்தியில்… யாருக்கும் தெரியாமல்…அழுது விட்டு
வெளியில் வந்து புன்னகைப்பதில்
கலந்து விடுகிறது நடிப்பு…

பிடிக்காத விஷயங்களும்…
பிடித்ததாய் செய்யும் போதே…
பிடித்தலுக்குள் பிடித்துப்போய்விடுகிறது நடிப்பு…

காரசாரமான விவாதங்களுக்காக…
காத்திருக்கும் நபரிடம்…கை குலுக்கி
கடந்து விடும் போது…
கலந்து விடுகிறது…நடிப்பு…

உண்மை விளக்கும் உன்னத உரையில்
சுயநலமான சொற்களுக்கு மத்தியில்
சுயம் தேடி அழைவதில்…சுயமாய்
நடிக்கிறது நடிப்பு…

உயிரானவனின் உதவி வேண்டலில்…
எல்லாம் இருந்தும்…இல்லை என்றே…
ஒற்றை வார்த்தையில் உண்மை
மறைப்பதில்…உறைந்து கிடக்கிறது நடிப்பு…

எல்லாம் நடித்து விட்டு…ஏதும் அறியாதவனாய்….கண்ணாடி பார்த்தே…
நானும் நல்லவன் தான் என்றோ…
எனக்குள் நல்லவன் இருக்கிறான்
என்பதோ…ஆகச்சிறந்த நடிப்பு…

இல்லத்தரசி
***************
இவள் இல்லாமல்
ஓர் அணுவும் அசையாது இல்லத்திலே…இல்லை என்ற சொல்லும் கண்டதில்லை இவள்
ஞாலத்திலே…

காலையிலே…டீயில் துவங்கிய
வேலை ஒவ்வொன்றாய்…
அடுக்கடுக்காய்…இவள் உயரம்
தாண்டிய போதும்…
ஒருபோதும்…இவள் சலிப்பை
வேலையில் காட்ட எண்ணியதில்லை…விடுமுறை
கொடுங்கள் என்றோர்…
வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை…

சட்டை…எங்கே…ஷூ..எங்கே
எனக் கேட்கும் கணவனுக்கு…
கண் முன்னே இருக்கும் பொருள்
தேட…நேரமில்லா பொழுதில்
இவள் நேரம் செலவழிக்க
தவறியதில்லை…

படுக்கையில் புரளும் குழந்தைக்கு
இல்லா அக்கறை…பள்ளியில்
என்னவெல்லாம் கேட்பார்களோ…என
பலமுறை புத்தகப்பைகளை சரிசெய்து…எடுத்து வைப்பதில்
இவள் அக்கறைக்கு ஈடு இணை
எதுவுமில்லை…

இட்டலி அவிப்பதிலும்…சாம்பாரின்
சுவையை இரசிப்பதிலும்…
யாருக்கெல்லாம் இவை பிடித்திருக்கும் என்பதில் இவள்
போடும் கணக்குகளில்…இவள்
பிடித்தம் என்னவோ…என்பதை
மறந்தே…ருசிக்கிறாள்

குக்கர் இசை…ஒருபுறம் இருக்க
பிடித்த பாடல் எங்கோ ஒரு முனையில் காதுகளைத் துளைக்க…
மனம் லயித்து கேட்க துடிக்கும்
இசையில்… குக்கர் இசைக்கே
முன்னுரிமை அளித்து காரியம்
சாதிக்கிறாள்…

விடைபெறா குழந்தையின் அழுகையை நிறுத்தி பள்ளிக்கு
அனுப்பி…டாட்டா காட்டி…கணவனுடன் அனுப்பி
வைத்தே… வேலையெல்லாம்
முடிந்தது என்ற எண்ணத்திற்கு
முட்டுக்கட்டையாய்…

பாத்திரங்கள்…ஒருபுறம்…
துணி மூட்டைகள் … மறுபுறம்…
பயன்படுத்திய பொருளெல்லாம்…
ஆங்காங்கே…என வீடு முழுதும்
நிறைந்திருக்க… அனைத்தும்
சுத்தம் செய்தே…வீட்டை முறைப்படுத்தில்
முறைதவறியதில்லை…இவளது
செயல்கள்…

எல்லாம்..முடித்த பின்னே…
சற்றே அமர்வோம் என சிந்திக்கும் வேளையிலே…ஏம்மா…டீ போடுறீயா…என்ற மாமனாரின்
குரலுக்கு செவிசாய்த்தே… மீண்டும்
அடுக்களைக்குள் நுழைந்தே
இல்லா வேளையை…இழுத்துப் போட்டு செய்வதில் இன்னல் கண்டதில்லை இவள் ஒருபோதும்…

மாலை நேரத் தேநீரும்…மதி மயக்கும்
இசையும்…ஒருபுறம் கேட்டாலும்…
குழந்தைகள்…இசையும்…தேடலும்
ஆங்காங்கே சிந்தனைக்கோர்
விருந்தாய் காலம் கடத்த தவறுவதில்லை…இவள்
வாழ்க்கையிலே…

இல்லம் முழுதும் வெளிச்சமாய்…
இன்முகம் எனும் வருகையாய்…
இரவை வரவேற்று… மீண்டும்
அடுத்த விடியலுக்கு காத்திருந்து…
நகர்வதில் இவள்…போல்
சிறப்புடையோர்…யாருமில்லை…

இல்லத்தரசி என்றோர் பெயருக்கு
பொருத்தமாய்…இல்லம் காக்க
வேறொரு… உறவுமில்லை…

– சக்திராணி

நூல் அறிமுகம்: மாலினி சீதாவின் வகுப்பறை மொழி – தி. தாஜ்தீன்

நூல் அறிமுகம்: மாலினி சீதாவின் வகுப்பறை மொழி – தி. தாஜ்தீன்

நூல் : வகுப்பறை மொழி ஆசிரியர் : மாலினி சீதா விலை : ரூ.₹80/- வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/ விற்பனை : 24332924 புத்தகம் வாங்க : www.thamizhbooks.com [email protected] வகுப்பறை மனிதநேயம்…
துரோகம் கவிதை – வளவ. துரையன்

துரோகம் கவிதை – வளவ. துரையன்




இந்தத் துரோகம்
எனக்கானதே
என்னைக் கொண்டுபோய்
வாழ்வின் எல்லையில்
வைத்து வேடிக்கை பார்க்கிறது.

ஆதரவெனக் கை போட்ட
தோள்களில் இருந்த
அழகான முள்ளெல்லாம்
அழுத்திக் குத்தின.

வந்த குருதியைத்
துடைத்துக் கொண்டு
சற்று முன்னேறினால்
கண்ணிவெடி வைத்துக்
காலைக் காயப்படுத்துகிறது.

அளவுக்கு மீறி நான்
நம்பி விட்டேனென்று
அவமானப் படுத்துகிறீர்

என் நம்பிக்கையால்
வரும் அவதூறுகளை
எதிர்கொள்கிறேன்
எள்ளலோடு.

துரோகத்தை வரவேற்கக்
காத்திருக்கிறேன்
தூள்தூளாக்குவேன்
எனும் தன்னம்பிக்கையுடன்.

– வளவ. துரையன்

நூல் அறிமுகம் : யெஸ். பாலபாரதியின் மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ன? ’ கட்டுரை – ஆர்.உதயலஷ்மி

நூல் அறிமுகம் : யெஸ். பாலபாரதியின் மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ன? ’ கட்டுரை – ஆர்.உதயலஷ்மி



மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ன?

ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் பாதுகாப்பு உணர்வைத் தந்துகொண்டுதான் இருக்கின்றனர். அதையும் தாண்டி குழந்தையின் பாதுகாப்புணர்வை பலப்படுத்தக் குழந்தைகளின் அருகிலேயே இருக்க,

பெரிய பெரிய பொம்மைகளைப் பரிசாக தருகிறோம். 1970, அவர்களின் மரப்பாச்சி இருந்தன. 80-களில் பிறந்தவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் பொம்மைகளே உற்ற தோழியாக மரப்பாச்சி பொம்மையை குழந்தைகளிடம் விளையாடத் தந்தது அறிவியல் பார்வையுடனான செயல். ஏன்? எப்படி? என்பதை மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம் நமக்கு விளக்கும். பார்பி பொம்மைகளுடனான தற்போதைய தலைமுறையினரில் ஒருவளான ஷாலி ளிக்கு, அவளுடைய பாட்டி, தான் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்த மரப்பாச்சி பொம்மையை பரிசாகத் தருகிறார்.

பேசும் பொம்மை!

மரப்பாச்சி பொம்மை ஷாலினி தனியாக இருக்கும்போது, பேசத் தொடங்குகிறது. பொம்மை பேசுவதைப் பார்த்து முதலில் அச்சமடையும் ஷாலினி, மரப்பாச்சியின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்கிறாள். பொம்மை பேசுகிறதா? ஆமாம். நாம் கற்பனையில் கதைகளில் பார்த்த ஒன்றுதானே! எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், மரப்பாச்சி மற்றும் ஷாலினியின் நட்பு மலர்கிறது.

ஷாலினியின் உடன் பயிலும் பூஜாவுக்கு தோன்றும். வெளிப்படையாகச் சொல்ல இயலாத ஏதோ ஒரு பிரச்சினை. அத்தகைய சூழலில் மரப்பாச்சி பொம்மை தைரியத்தையும், ஆறு தலையும் தந்து பூஜாவைப் பேசவைக்கிறது.

மனக்குழப்பத்தால் தெளிவின்றி, அதிர்ந்துபோயிருக்கும் பூஜாவுக்கு யதார்த்தத்தை சொல்லி அம்மா, அப்பாவிடம் வெளிப்படையாகப் பேச வேண்டியதன் அவசியத்தைப் புரியவைக்கிறது மரப்பாச்சி. பூஜாவின் பிரச்சனை தீர்கிறது.

மரப்பாச்சி என்ன ரகசியம் சொன்னது?

எந்த ரகசியமும் சொல்லவில்லை. மாறாக ஒவ்வொரு குழந்தையிடமும் அதன் பெற்றோரும், பெற்றோரிடம் குழந்தைகளும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ள வேண்டிய அவசியத்தை பூஜாவின் கதாபாத்தி வேண்டிய ரம் வழி புத்தகத்தின் ஆசிரியர் பேசியிருக்கிறார். நாள்தோறும் எண்ணற்ற குழந்தைப் பாலியல் சீண்டல்கள் குறித்த செய்திகளை நாளேட்டில் படிக்கிறோம்.

மனம்விட்டு பேசுகிறோமா?

குழந்தையின் இத்தனை மனகக்ஷ்டமும் எப்படி பெற்றோருக்குத் தெரியாமல் இருக்கும், குழந்தையின் அன்றாட்ச் செயல்பாடுகளை பெற்றோர் கவனிக்க மாட்டார்களா என்றெல்லாம் நாளேட்டை படிப்பவருக்கு தோன்றும்

அடிப்படைப் பிரச்சினையே பெற்றோரும் குழந்தைகளும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளாததே. மரப்பாச்சி இந்த தகவலைத்தான் நமக்கு சொல்கிறது. தனக்கு பிடித்தவருடன் மட்டும். பேசவும், விளையாடவும் செய்யுமாம். மரப்பாச்சி,

ஷாலினியுடன் பேசி விளையாடி விடழ்ந்திருந்த மரப்பாச்சி இரு நாள் அவளைவிட்டு பிரிகிறது. ஏன் பிரிகிறது? எப்படி அந்தத் துன்பத்தை ஷாலினி பொறுத்தாள் என்பதை இந்த சிறுநாவலைப் படித்துப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

இந்தக் கதையை குறும்படமாக எடுக்க தேவையும் உள்ளதாக தோன்றுகிறது, ஏனெனில் ஆர்வமூட்டும் கதாபாத்திரங்கள் வழி, சமுதாய விழிப்புணர்வை விதைக்கும் இந்தச் சிறிய நாவல், வாசிக்க அறியாதவரிடத்தும் காணொலியாகச் சென்று சேர வேண்டும். குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள். குழந்தையை பயமுறுத்தி வைக்கிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையிடமும் அதன் பெற்றோரும். பெற்றோரிடம் குழந்தைகளும் வெளிப்படையாகப் பேசிக்கொள்ள வேண்டிய அவசியத்தை பூஜாவின் கதாபாத்திரம் வழி புத்தகத்தின் ஆசிரியர் பேசியிருக்கிறார்.

அதனால் குழந்தை தனக்கு நடந்ததை வெளியே சொல்ல யோசிக்கிறது.

குழந்தையுடன் பேச நேரம் ஒதுக்காத பெற்றோரின் பிள்ளைகளும், தனக்கு நடைபெறும் துன்பத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். வாசிக்கத் தெரிந்த எல்லாக் குழந்தைகளுமே மரப்பாச்சி சொல்லும் ரகசியத்தை படித்தால், தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வழியை அறிவார்கள்.

சில ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாலியல் சீண்டல் குறித்தும், பாதுகாப்பான தொடுதல் எது எனவும், குழந்தையுடன் அச்சப்படலாம். குழந்தைகள், பெற்றோர்கள். ஆசிரியர்கள் என்ற மூவரும் சமுதாயத்தின் வேர்கள். நாளைய விழுதுகள். சிறு வயது மனக்காயத்தால் சில குழந்தைகளின் வேர்களில் நஞ்சு இறங்கியிருக்கும். வந்த பின்னர் காப்பதை விட வரும் முன்னர் காப்பதே சிறந்தது.

ஒவ்வொருவர் இல்லத்திலும் மரப்பாச்சி சொல்லும் ரகசியத்தை கேட்டுவிட்டால், நாம் ரகசியமாய் மறைத்துக் கொள்ள எந்த நிகழ்வும் இல்லாமல் போகும். `மரப்பாச்சி சொன்ன ரகசியம்” புத்தகத்தில், பெட்டிச் செய்திகளாய் சில அரிதான ஆர்வமூட்டும் செய்திகள் உள்ளன. மரப்பாச்சியுடன் பேசிப் பார்க்கிறீர்களா நீங்களும்!

கட்டுரையாளர்;
ஆர்.உதயலஷ்மி

குழந்தை நேய செயற்பாட்டாளர்,
பள்ளி ஆசிரியை,
காஞ்சிபுரம்,
சிறந்த சிறார் இலக்கியங்களின் சுருக்கம்
‘கதை கேளு கதை கேளு’ பகுதியில் இடம்பெறும்

நூல்: மரப்பாச்சி சொன்ன ரகசியம்
ஆசிரியர்: யெஸ். பாலபாரதி
வெளியீடு: வானம் பதிப்பகம்
விலை: 60/-

டிராகுலா கவிதை : தமிழில் – நா.வே.அருள்

டிராகுலா கவிதை : தமிழில் – நா.வே.அருள்




உதடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து
முன் துருத்தியபடியிருக்கும்
நீண்ட, கூரான, மோசமான கோரைப்பல்
(அதை மறைக்கத் தர்மசங்கடாமாக முயன்ற போதிலும்)
என்னை முறைத்தது.

வாலிபப் பார்வைகளைத் திருடியபடி
என்னை ஊடுருவி
என் கழுத்தின் அடிப்பகுதியை
ஆழமாகத் தள்ளியதில்
அதன் வலைவீச்சில் நாணம் கொண்டபின்
கீழ் உதட்டைக் கடித்து முகம் சிவந்தேன்

நேற்று,
நேற்று அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபோது,
பற்கள் மிகச் சரியான சீரமைப்பில் இருந்தது
(பல் மருத்துவம் அற்புதங்களைச் செய்யும் அல்லவா?)
என் நம்பிக்கைகளைக் கைவிட்ட முகத்தைத் திருப்பிக் கொண்டேன்
கண்சிமிட்டியபடி போவோர் வருவோரைப் பார்ப்பதுபோல்
நடித்தேன்.

சல்வா அல்–நீமி (SALWA AL-NEIMI)
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஷாகேத் எம். தூரவா ( SHAWKAT M. TOORAWA )
தமிழில் – நா.வே.அருள்

பின்குறிப்பு :–
(125 ஆண்டுகளுக்கு முன்பு டிராகுலா என்கிற திகில் நாவலை பிராம் ஸ்டோக்கர் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அதையொட்டி எழுதப்பட்ட கவிதை இது. கலையம்சத்தில் மறைந்திருக்கும் உள்ளடக்கத்தின் வீரியத்தை எண்ணி எண்ணி வியந்ததால் இதைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறேன். )

பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்

பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்




நிஜத்தினில் சாதித்தேன்
நீ என்
கனவினைக் கலைத்ததால் !

கலைகளில் தேர்ந்தேன்
நீ எனைக்
காலடியில் கிடத்தியதால் !

உரிமைக்குரல் எழுப்பினேன்
நீ என்
உணர்வை உதாசீனப் படுத்தியதால் !

நிமிர்ந்து நின்றேன்
நீ எனை
நிலம் பார்க்கச் சொன்னதால் !

பேச்சாளரானேன்
நீ எனை
மௌனிக்கச் செய்ததால் !

உயர்கல்வி பயின்றேன்
நீ எனை
அடுக்களையில் அடைத்ததால் !

மேடை ஏறினேன்
நீ எனைப்
படியேற விடாததால் !

முன்னேற்றம் அடைந்தேன்
நீ எனைப்
பின்னுக்குத் தள்ளியதால் !

தன்னம்பிக்கை கொண்டேன்
நீ எனைத்
தனித்து விட்டதால் !

தைரியம் கொண்டேன்
நீ எனைத்
தாழ்த்த நினைத்ததால் !

பன்முகத்தன்மை கொண்டேன்
நீ என்
முகவரியை மறைத்ததால் !

சிகரம் தொட துணிந்தேன்
நீ என்
சிறகை ஒடித்ததால் !

சரித்திரம் படைத்தேன்
நீ எனைச்
சதி ஏற்ற துணிந்ததால் !

பேராண்மை கொண்டேன்
நீ என்
பெண்மையைப் பழித்ததால் !

நீ எனை
வார்த்தை உளிகளால்
சிதைக்கச் சிதைக்கச்
சிற்பமானேன்.

பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
மின்னஞ்சல்: [email protected]

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




காதலைப் புரிந்து கொள்ளுங்கள்
**************************************
புரிந்து கொள்ளாதவர்கள்
தாமாகவே
பிரிந்து விடுவார்கள்!

புரிந்து கொண்டவர்களை
புரிந்து கொள்ளாமல்
பிரித்து வைக்க
பிரயத்தனப்படாதீர்கள்!

காதல்
ஒரு மலரின்
தேன் சுரப்பைப் போன்றது!

காதல்
காமமும்
கவர்ச்சியும்
கலந்ததுதான்!

பொய்கள்
ஊடுறுவ முடியாத
காதல் கோட்டைக்குள்
சாதி, மத, மொழி, இனச்
சாத்தான்களா?

எதனையும்
எதிர்க்கும்
வலிமை உடையதுதான்!

அவ்வளவு
எளிதாக
வசப்பட்டு விடாதது காதல்!

ஈர்ப்பு இல்லாமல்
இணைவதில்லை
இதயங்கள்.

காதலுக்கான
முக்கியமானது
சூழல்!

காதல்
வன்முறையை
ஒருபோதும் நாடாதது!

காதலுக்கு
கல்வியறிவு முக்கியமல்ல!

காதல்
தாவுகின்ற தன்மை இல்லாதது!

கலந்துவிட்ட பிறகு
குற்றவுணர்சசி கொள்வதில்லை காதல்.

தவறு செய்துவிட்டோமென்று
பின்னோக்கித் திரும்புவதில்லை
பிரியமான காதல்.

ஆயுதத்திற்கும்
அச்சப்படாதத்
தீவிரம்தான் காதல்!

நாடகக்காதல்
நடிப்புக்காதல்
என்பதெல்லாம்
வெறுப்பின் விதைகள்.

காதலை
குற்றமென்று
சொல்வதற்கு
எந்த நீதிபதியும்
சட்டம் பயிலவில்லை!

காதலில்
கருப்பு சிவப்பு என
பிரித்துச் சொல்லும்
மருத்துவம் இல்லை!

காதலுக்கு
எந்த சாயம் பூசினாலும்
ஒட்டிக் கொள்ளாது!
அது
சுயமரியாதைக் குருதி!

ஐயம்தான் ஐயனே…’!
**************************
நம்பிக்கை என்பது
அவரவர்
நம்பிக்கை!

உருவம் வைத்துப் பார்ப்பதா
உருவமற்றுப் பார்ப்பதா

உருவமென்றால்….
மலை போன்றா
மரம் போன்றா
விலங்கு போன்றா
பறவை போன்றா
மனிதன் போன்றா?

அவரவர் நம்பிக்கை….
ஆடைகளை, அணிகலன்களை
அணிவித்துப் பார்ப்பதா?

இயக்கும்
இயக்குநரை
மண், மரம்,கல், உலோக
உருவங்களுக்குள்
அடக்க முடியுமா?
அறியாமை கேள்வியென
நினைத்தாலும்…
ஆம். இல்லை.
மழுப்பலான பதில்தான்!

சரி…
உருவத்தில்
அடங்கிவிடும்
உலக இயக்குநருக்கு;
நுதலில்தான்
குறியீடுகளை
குறிக்கின்றீர்!

அதே
குறியீடுகளை
மனிதரும்
தம்தம் நுதலில்
குறித்துக் கொள்வது எப்படி?

மனிதரும்,
இயக்குநர் சிலையும் ஒன்றா?

மனிதரின் மனநிலை
சிலைக்கு உண்டா?

சிலைதான்
புனிதமென்றால்
குறியீடுகளை
சார்த்திக்கொள்ளும்
மனிதனும்
புனிதனா?

சிலை போன்றே
குறியீடுகளை
போட்டுக்கொள்ளும்
மனிதன்
ஆசையற்றவனா?

சிலைகளை வணங்கும் மக்கள்
சிலைகளைப் போன்று
குறியீடுகளை
அணிந்து கொள்ளும்
மனிதனையும்
வணங்குதல் வேண்டுமா?

உலக இயக்குநர்
சிலையிலிருந்து,
மனித உருவங்கள்
காப்பியடிக்கப்பட்டனவா?

மனிதன்
தன்னுருவத்தில்
உலக இயக்குநர் உருவத்தை
வடித்தானா?

ஏன்டா சாமி
பகுத்தறிவைக் கொடுத்தாய்?

சாமி….
நான் கேட்கும்
ஐயங்களெல்லாம்
உங்களையல்ல;

என்னைப் போன்ற
மனிதனை!

உலகின் உன்னதம் நீ
*************************
உணவுக்கும் உடுத்துதற்கும்
உழைப்பதனைக் கொடுத்தவன் நீ
உலகத்தார் வாழ்வதற்கு
ஓடாகத் தேய்ந்தவன் நீ!

நிலமுழைத்து நீர்கொடுத்து
நிம்மதியைத் தந்தவன் நீ
நிழல்கொடுக்கும் மரமதனை
நிலத்தினிலே நட்டவன் நீ!

மண்குடிலோ மாளிகையோ
மணக்கின்ற மலர்வனமோ
மாநிலத்தை வளம்செய்ய
மாசின்றி உழைப்பவன் நீ!

அலைகடலே யானாலும்
ஆகாய மானாலும்
சாலைகளே யானாலும்
சளைக்காமல் உழைப்பவன் நீ!

மலையுடைத்து மண்சுமந்து
காடுதனில் தினமுழைத்து
சுமைசுமந்து உனையிழந்து
பிறர்வாழ உழைப்பவன் நீ!

கணினியினை இயக்குபவன்
கழனியிலே இறங்குபவன்
சாக்கடையை அள்ளுபவன்
சரக்குமூட்டை தூக்குபவன்;

கனரகங்கள் இயக்குபவன்
கட்டைவண்டி ஓட்டுபவன்
கரமுழைக்கும் அனைவருமே
கடவுள்நிகர் உன்னதமே!

– பாங்கைத் தமிழன்