காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையைப் பிரதிபலிக்கிறதா?
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 12 தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (அடல் பிஹாரி வாஜ்பாய்) வேளாண்மைக்கான கிராமப்புற உள்கட்டமைப்பும் – பேரா.பு.அன்பழகன்
பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் தொடர் குண்டு வெடிப்பு, மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப் படுத்தப்பட்டது போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கிடையே 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தனித்து 161 இடங்களில் வெற்றிபெற்றது இதனைத் தொடர்ந்து அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு மே 16,1996ல் பதவி ஏற்றது ஆனால் அரசுக்குப் போதுமான எம்.பிகளின் ஆதரவு இல்லை என்பதால் மே 31,1996ல் ஆட்சியினை இழந்தது. இவர் மொத்தமாக 13 நாட்கள் மட்டுமே இக்காலகட்டத்தில் பிரதமராக இருந்துள்ளார். அடுத்து பிரதமராகப் பதவி ஏற்ற எச்.டி.தேவ களொடா, ஐ.கே.குஜரால் ஆட்சிகள் அரசியல் நெருக்கடியினால் குறுகிய காலமே நீடித்தது. மீண்டும் 1998ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 182 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது (காங்கிரஸ் 147 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது). தெலுங்கு தேசம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க), திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அடல் பிஹாரி வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். அ.இ.அ.தி.மு.க தன்னுடைய ஆதரவை விளக்கிக் கொண்டதால் ஏப்ரல் 1998ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாஜ்பாய், மார்ச் 1998 முதல் ஏப்ரல் 17,1999முடிய 13 மாதங்கள் பிரதமர் பதவியில் இருந்தார். இதன் பின் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயன்றும் தோல்வியடைந்ததால் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் செப்டம்பர்-அக்டோபர் 1999ல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க கூட்டணி 296 இடங்களைப் பெற்றது, காங்கிரஸ் கூட்டணி 134 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வாஜ்பாய் தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டு அதற்குத் தலைமையேற்று பிரதமராக அக்டோபர் 13, 1999 முதல் மே 2004வரை பதவி வகித்தார். மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி வகித்தபோது முழு காலத்தையும் நிறைவு செய்தார் மேலும் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் முழு கால அளவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது (Biban Chandra 2000).
வாஜ்பாய் ஆட்சி பெரும் சவால்களின் காலமாகும். ஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகளின் வேறுபட்ட கொள்கைகள், மற்றொரு பக்கம் வலதுசாரிகளின் கடும் நெருக்கடி என்று ஆட்சிக் காலம் முழுக்க பயணித்தார். 1999ல் இந்து ராஷ்டிரா அமைத்திடவும், ராமர் கோவில் கட்டவும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். அணு குண்டு சோதனை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தள்ளிப் போடப்பட்டதை வாஜ்பாய் அரசானது மே 1998ல் ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் உடனுக்குடன் மூன்று முறை சோதனையை நடத்தியது. இது இந்தியாவிற்குள் பெரிய அளவிற்கு வரவேற்பினைப் பெற்ற அதேவேலையில் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் அணு குண்டு சோதனையைத் தொடர்ந்து பாக்கிஸ்தானும் அணு குண்டு சோதனையினை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு வாஜ்பாய் இருநாடுகளுக்கிடையே பேருந்து போக்குவரத்தை 1999ல் துவக்கிவைத்தார். ஆனால் பாக்கிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தொடர்ந்து ஊடுருவி வந்தனர். இந்தியாவின் கார்கில் பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால் இந்தியா-பாக்கிஸ்தான் கார்கில் போர் உண்டானது. நூற்றுக் கணக்கான இந்தியப் படைவீரர்கள் இதில் வீர மரணம் அடைந்தனர். இந்தியா கடுமையாகப் போர்புரிந்ததாலும், பன்னாட்டு அழுத்தத்தின் காரணமாகவும் பாக்கிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. அரசியல் காரணங்களுக்காகவே பா.ஜ.க இதனைக் கையாண்டது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது (Biban Chandra 2000).
டிசம்பர் 1999ல் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாருக்கு இந்தியப் பயணிகள் விமானம் நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவிலிருந்து 179 பயணிகள், 11 விமான ஊழியர்களுடன் தீவிரவாதிகள் கடத்தினர். 36 போராளிகளை விடுவிக்க நிபந்தனை முன்வைக்கப்பட்டது. கடைசியில் மூன்று முக்கியப் போராளிகளை விடுவித்து பயணிகளை மீட்டனர். அமைதியை ஏற்படுத்த ஆக்ரா பேச்சுவார்த்தை ஜூலை 2001ல் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும் பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷ்ரப்பிற்கும் இடையே நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001ல் இரட்டை கோபுரங்கள் அல்-கொய்தா தீவிரவாதிகளால் விமானம் மூலம் மோதி தாக்குதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவை அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இந்தியா மீது விதிக்கப்பட்ட அணு ஆயுத சோதனையின்போது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது (Biban Chandra 2000).
1999 மற்றும் 2000ல் இரு பெரும் புயல், 2001ல் குஜராத்தில் நில நடுக்கம், 2001ல் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல், 2002-2003ல் கடுமையான பஞ்சம், 2002ல் குஜராத்தில் வன்முறையினால் படுகொலைகள் வரை நடந்தது. 2001ல் தெஹல்கா என்ற ஊடகம் பல்வேறு அரசியல் (பா.ஜ.க உட்பட), உயர் பாதுகாப்பு அலுவலர்களின் ஊழல் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 2001ல் இந்திய யூனிட் டிரஸ்ட் ஊழல் நடைபெற்றது. இதனால் லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பினை இழந்தனர். இதற்குப் பிரதமருக்கு நெருக்கமானவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் பெட்ரோல் நிலையங்கள், எரிவாயவு முகவர், மண்ணெண்ணெய் வியாபாரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் போன்றவை தொடர்ந்து வாஜ்பாய் அரசை அச்சுறுத்தி வந்தன. மாநிலச் சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று வந்தன.
2003ல் எரிபொருள் நெருக்கடி சவாலை வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தபோது எதிர் கொண்டார். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து துணிவுடன் மேலும் பல சீர்திருத்தங்களை (புதுப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்) நடைமுறைபடுத்தினார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். 1999ல் 4.7 விழுக்காடு என்றிருந்த பணவீக்கம் 2004ல் 3.8 விழுக்காடாக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1999ல் 6.7 விழுக்காடாக இருந்தது 2004ல் 8 விழுக்காடாக அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது, அந்நியச் செலாவணி கையிருப்பில் கணிசமான இருப்பு, பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது போன்ற சாதகமான போக்கும் காணப்பட்டது.
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டமானது வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைமுறைப்படுத்தப்பட்டது. இத் திட்டமானது வறுமை ஒழிப்பு, வேலையின்மையினைப் போக்குதல் ஆகியவற்றை வேளாண் வளர்ச்சியினை முடுக்கிவிடுவதன் வழியாக அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே வேளாண் வளர்ச்சி ஆண்டுக்கு 4.5 விழுக்காடு என்ற இலக்கினை முன்னிறுத்தியது. உணவு தானியம், எண்ணெய் வித்துக்கள், சர்க்கரை, போன்றவை 1980களில் வளர்ச்சியின் அளவில் ஒப்பிடும்போது 1990களில் குறைந்து காணப்பட்டது. ஆனால் பழவகைகள், காய்கறிகள் போன்றவை வளர்ச்சியில் மேம்பட்டிருந்தது. இந்தியாவில் வேளாண்மையானது வட்டார ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளான கிழக்கு உத்திரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் போன்றவை அதிக வளங்கள் உள்ள பகுதியாகும். ஆனால் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் (utapped) இருந்தது. உண்மையில் இந்த பகுதி சரியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் நாட்டின் 50 விழுக்காடு உணவு உற்பத்தியினைப் பெற்றிருக்க முடியும். எனவே ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டமானது இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டது. வேளாண்மையில் சில அறைகூவல்கள் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன. அதில் குறிப்பாக மாநிலங்களில் பாதிக்கு மேற்பட்ட விளைநிலங்கள் சிறு, குறு விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வந்தது, குத்தகைகுப் பயிரிடுபவர்கள் பற்றிய சரியான விவரங்கள் பெறப்படுவதில்லை, குத்தகை தாரர்கள் அதிக அளவில் விளைபொருட்களை நில உடைமையாளர்கள் பங்கிட்டுக்கொள்ளும் முறை புழக்கத்திலிருந்தது, விளை நிலப்பரப்புகள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகிறது, நிறுவனக் கடன் முறை மிகவும் பலவீனமாக இருந்தது, பல்வேறு காரணங்களினால் மண்ணின் தன்மை குறைந்து காணப்பட்டது, நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. இது போன்ற நிலைமையினை மாற்றி அமைத்து வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க வாஜ்பாய் அரசு முயன்றது. இதற்காக வேளாண் உள்கட்டமைப்பினை உருவாக்குவது, குளிர்பதன கிடங்குகளைக் கட்டமைப்பது, ரயில், துறைமுகம், தகவல் தொடர்பினை வலுப்படுத்துதல், கிராமப்புறச் சாலை இணைப்பினை ஏற்படுத்தித் தருதல் பொன்றவை வாஜ்பாய் அரசு முன்னெடுத்த முக்கிய முயற்சிகள் ஆகும் (Chandra Shekhar Prasad 2009).
1980களின் பிற்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதிவரை அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் வேளாண் துறை தகுந்த பலனைப் பெற இயலவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரையில் எந்த ஒரு பெரிய சீர்திருத்தங்களும் வேளாண்மைக்காகத் தனிப்பட்டுச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1990களின் பிற்பகுதியில் வேளாண்மையினை நோக்கிய சிறப்புச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமானது, உர விலையினைப் பகுதி அளவில் கட்டுப்பாட்டை நீக்குதல், வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் தடைகளைக் களைவது, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 கட்டுப்பாட்டில் தளர்வு செய்தல், முக்கிய வாணிபப் பயிர்களின் முன்னோக்கிய வர்த்தகத்தை நடைமுறைப்படுத்துதல், இலக்கின் அடிப்படையில் பொது விநியோக முறையினை நடைமுறைப்படுத்துதல், கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை உண்டாக்குதல், வர்த்தக அளவுக் கட்டுப்பாட்டிற்குப் பதில் வரிகளை விதிப்பது போன்றவை ஆகும் (Malrika Singh 2017).
விவசாயிகள் இயற்கைச் சீற்றங்களினால் வேளாண்மையில் தோல்வி ஏற்பட்டு இழப்பினைச் சந்திக்கின்றனர். இதனைப்போக்க ஒருங்கிணைந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 1985 தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மைக் காப்பீட்டுத் திட்டம் (National Agricultural Insurance Scheme) என்பது 1999-2000ல்; தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் 1999-2000லிருந்து 2015-16ஆம் ஆண்டுவரை 2691 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் (https://agricoop.nic.in). 2002-03ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் இந்திய வேளாண்மைக் காப்பீட்டு வரையறுக்கப்பட்ட நிறுவனம் தொடங்கப்படுவதை அறிவித்தார். அதுவரை வேளாண்மைக்கான காப்பீட்டுத் திட்டங்களை இந்தியப் பொது காப்பீட்டுக் கழகம் நடைமுறை படுத்திவந்தது. இந்த புதிய அறிவிப்பினால் அனைத்து வேளாண் காப்பீட்டுத் திட்டங்களையும் இது நடைமுறைப்படுத்துகிறது.
வாஜ்பாய் அரசானது 2000ல் தேசிய வேளாண் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன்படி,
- வேளாண்ஆராய்ச்சி, மனித வள மேம்பாடு, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப் படுத்துதல், தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்துவது.
- வேளாண்வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரிக்கச் செய்தல்.
- நாட்டின்பல்வேறு பகுதிகளுக்கு வேளாண் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கானக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததை நீக்குதல்.
- விவசாயிகளின்மேம்பாட்டிற்கு வேளாண்மைக்கு வெளியே முறைப்படுத்துதல் மற்றும் வரி வசூல் செய்யும் முறைக்குச் சரியான அளவீடுகளை உருவாக்குதல்.
- வேளாண்வளர்ச்சிக்கான அடிப்படையான கிராமப்புற மின்சாரத்திற்கு முன்னுரிமை அளித்தல்.
- விவசாயக்கடன் தகுந்த நேரத்திலும், போதுமான அளவிலும் விவசாயிகளுக்குக் கிடைக்கக் கிராமப்புறங்களில் நிதி நிறுவன முறையினை கட்டமைப்பது போன்றவையாகும்.
2000-01ல் வேளாண்மைக்கான பேரியல் மேலாண்மை திட்டம் (Macro Management of Agriculture Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதன்மை நோக்கமாக உணவு தானியம் மற்றும் இதர வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது ஆகும். இத் திட்டம் 17 கூறுகளை உள்ளடக்கியது. இதன்படி ஒருங்கிணைந்த தானிய மேம்பாட்டுத் திட்டம் நெல், கோதுமை, சிறுதானியங்கள் விளைவிக்கும் பகுதிகளில் மேற்கொள்வது, சிறப்புச் சணல் மேம்பாட்டுத் திட்டம், சரியான கரும்பு சாகுபடி செய்யும் திட்டம், ஒருங்கிணைந்த மற்றும் சமமான உரம் பயன்படுத்துதல், சிறு விவசாயிகள் வேளாண் இயந்திரப் பயன்பாட்டிற்கு உட்படுத்துதல், வானம் பார்த்த விளைநிலங்களில் தேசிய நீர் மேம்பாட்டுத் திட்டம், விதை உற்பத்தி, மண் வளப் பாதுகாப்பு, கலர்-உவர்ப்பு நிலங்களை மேம்படுத்துதல், நிலப் பயன்பாட்டுக் கழகம், நலிந்தவர்களுக்குக் கடன் வழங்கக் கூட்டுறவு, கூட்டுறவு மூலம் பெண்களுக்குக் கடன் உதவி, வேளாண் கடன் நிலைப்பு நிதி, ஆதிதிராவிடர்-பழங்குடியினர்களுக்குச் சிறப்புத் திட்டம் போன்றவை இதன் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய விதைக் கொள்கை 2002: வேளாண்மையில் விதை ஒரு முக்கிய இடுபொருளாகும். தரமான விதைகளைப் பயன்படுத்தப்பட்டதால் இன்று வேளாண்மையில் தன்னிறைவினை அடைந்துள்ளோம். 1950ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 50 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது பசுமைப் புரட்சியின் விளைவால் மேம்படுத்தப்பட்ட, அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளைப் பயன்படுத்தப்பட்டதால் 200 மில்லியன் டன்னிற்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டது. எனவே உணவு உற்பத்தியினை எதிர்காலத்தில் சிறந்த அளவிற்கு அடையவும், புதிய உணவு தானிய வகைகளை உருவாக்கவும் தேசிய விதைக் கொள்கை 2002 நடைமுறைப்படுத்தப்பட்டது (https://seednet.gov.in/).
2004ஆம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் குழு (National Commission on Farmers) அமைக்கப்பட்டது. இக்குழுவானது விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை டிசம்பர் 2005 முதல் அக்டோபர் 2006வரையில் ஐந்து முறை அறிக்கையினை அரசுக்கு அளித்தது. இதன்படி,
- நிலம், நீர், கால்நடைகள்மற்றும் உயிரிய வளங்கள் (Bioresources) குறித்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
- விவசாயிகளின்நண்பன் என்ற அடிப்படையில் சாகுபடி விரிவாக்கம், பயிற்சி மற்றும் அறிவாற்றல், இணைப்பு, கடன் மற்றும் காப்பீடு போன்ற சேவைகளை வழங்குதல்.
- வேளாண்விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்தல்.
- இடுபொருட்கள்மற்றும் விநியோகச் சேவைகள் அளித்தல்.
- வேளாண்பல்கலைக் கழகங்களில் உள்ள பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதல்.
- வேளாண்மையைப்பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவருதல்.
- தேசியஉணவு பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக் குழு அமைத்தல்.
- அனைவருக்குமானப்பொதுவிநியோக முறை.
- இந்தியவர்த்தக அமைப்பை நிறுவுதல்.
- வேளாண்மைச்செலவு மற்றும் விலைக் குழுவை தன் அதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்றி அமைத்தல்.
- வேளாண்விளைபொருட்களுக்கு அதன் செலவிலிருந்து கூடுதலாகக் குறைந்தது 50 விழுக்காடு குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தருவது.
- கிராமப்புறவேளாண் சார் வாழ்வாதார முயற்சியினைத் தொடங்குவது.
இந்த அறிக்கையினை மாநிலங்களுடன் விவாதித்து அரசு தேசிய விவசாயக் கொள்கை 2007க்கு ஒப்புதலுக்காக சமர்ப்பித்தது.
வேளாண்மைக்கு மிக முக்கியமானது வேளாண் பொருட்களைச் சந்தைப் படுத்துதல் ஆகும். இதற்காக வாஜ்பாய் அரசானது வேளாண் சந்தைத் தகவல் வலைப்பின்னல் (Agricultural Marketing Information Network – AGMARKNET) என்ற திட்டம் 2000ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய வேளாண் சந்தைகளுடன் இணைப்பினை ஏற்படுத்துவது, இந்திய இணையவழிப் பொருட்கள் பரிமாற்றத்துடன் இணைப்பினை ஏற்படுத்தி, தேசியத் தகவல் மையத்தின் வழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய அளவில் சந்தை நிலவரங்களை உடனுக்குடன் விவசாயிகளுக்குத் தெரிவிப்பது, புதிய அறைகூவல்கள் பற்றி விவசாயிகளுக்குப் புத்தாக்கம் செய்வது, வேளாண் சந்தையைத் திறம்படச் செயல்பட வைப்பது, சந்தை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் வேளாண் தொடர்பான திட்டங்களை விவசாயிகளுக்குத் தெரிவிப்பது போன்றவை ஆகும் (www.indiafilings.com/learn/agmarknet/).
தேசிய இயற்கை வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் (National Project on Organic Farming) பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இயற்கை வேளாண்மையினை மேம்படுத்தத் தொழில்நுட்பத் திறனை உருவாக்குவது, அறிவியல் அறிவினை வளர்த்தெடுப்பது, தடைகளைக் கண்டு அவற்றைக் கடந்து வருவது போன்ற நிலைகளில் உதவுவதற்காக அமைக்கப்பட்டது. இதற்காக பத்தாவது திட்டக் காலத்தில் ரூ.57.04 கோடியும் பதினோராவது திட்டக் காலத்தில் ரூ.101 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1998-99ல் கிசான் கடன் அட்டைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன்படி விவசாயிகளுக்கு நீக்குப் போக்குடன் கடன் அளிக்கவும், செலவு-திறனுடைய முறையில் வழங்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது. இதனை வணிக வங்கிகள், கிராமப்புற வட்டார வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மத்தியக் கூட்டுறவு சொசைட்டி, பொன்றவை வழியாகக் கடன் அளிக்க வசதியை ஏற்படுத்தித் தந்தது. இதன்படி 1989-99ல் 7.84 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது இது 2001-02ல் 93.4 லட்சமாக அதிகரித்தது. சிறு, குறு விவசாயிகள் பயன்பெறவும், மத்திய மாநில அரசுகள் 1997-98ல் சோதனை அடிப்படையில் பயிர்க் காப்பீட்டு என்ற புதிய திட்டம் 8 மாநிலங்களில் உள்ள 24 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் 1999-2000ல் இந்த திட்டம் புதிய வடிவமாகத் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜனவரி 21, 2004ல் விவசாயிகளின் சந்தேகங்களைப் போக்கவும், வழிகாட்டவும் விவசாயிகள் தொலைப்பேசி மையங்கள் அனைத்து வாரநாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்க அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டது. மே 18, 2001ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு முதன் முதலில் அவர்களின் சமூகப் பாதுகாப்பையும், நலனையும் அடிப்படையாகக் கொண்டு விவசாயத் தொழிலாளர் பீமா யோஜனா (Khethihar Mazdoor Bima Yojana) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேளாண் விளைபொருட்களில் அழுகக்கூடியது (காய்கறிகள், பூக்கள்), அழுகாமல் குறிப்பிட்ட காலம் வரை பயன்பாட்டுக்கு உடையது (தானியம், பருப்பு வகைகள்) என்று பிரிக்கலாம். வருடத்தில் சில சாகுபடிக் காலங்களில் இவை மிதமிஞ்சிய அளவில் உற்பத்தியாகி அளிப்பு அதிகரிப்பதால் விளைபொருட்களை மிகவும் குறைந்த விலையில் விற்று பெரும் இழப்பினை விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே இதனைப் போக்க 2001-02ல் கிராமப்புறச் சேமிப்புக் கிடங்கு திட்டம் (Gramin Bhandaran Yojana) தொடங்கப்பட்டது. இதன்படி தனிநபர், நிறுவனங்கள், உழவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், மற்றும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கிராமப்புறங்களில் வேளாண் சேமிப்புக் கிடங்குகள் கட்டவோ அல்லது சீரமைக்கவோ அரசு நிதி அளிக்கிறது. இதனால் வேளாண் விளைபொருட்கள் வீணாகுவதை தவிர்க முடியும் (Saumitra Mohan 2017).
வாஜ்பாயின் முக்கியப் பொருளாதாரச் சாதனைகளாகத் தங்க நாற்கரச் சாலை, பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டம், அரசு தொழில் மற்றும் வாணிப நிலைகளில் முதலீடு விலகல் (disinvestment), நிதிப் பற்றாக்குறையினைக் குறைக்க நிதி பொறுப்புச் சட்டம், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan போன்றவை ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்தும் கிராமப்புறங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான முக்கியக் கரணம் முதன்மைச் சாலைகளுடன் கிராமங்கள் இணைப்பினைப் பெற்றிருக்கவில்லை என்பதாகும். எனவே 2000ல் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் இணைப்பு திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana) தொடங்கப்பட்டது. இதன்படி அனைத்துக் காலநிலையினைத் தாங்கக்கூடிய கிராமப்புறச் சாலை இணைப்பினை 1000 பேர் வசிக்கக்கூடிய சமதளக் குடியிருப்புப் பகுதிகளிலும் (பின்னால் 500 நபர்கள் என்று 2007ல் மாற்றி அமைக்கப்பட்டது), மலை மற்றும் வனப் பகுதிகளில்; 500 நபர்கள் வசிக்கக்கூடியக் குடியிருப்புகளுக்கு (பின்னால் 250 நபர்கள் என்று 2007ல் மாற்றியமைக்கப்பட்டது) சாலை இணைப்பினை உறுதி செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. இதனால் கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வேளாண் உற்பத்தி பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனைக்குக் கொண்டுசெல்லவும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டது (Saumitra Mohan 2017). தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்பு திட்டம் வழியாக 1997-2002ஆம் ஆண்டுகளுக்கிடையே 23814 கி.மீ நீளத்திற்குத் தேசிய நெடுஞ்சாலை கூடுதலானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் 60 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. 2002ல் இந்தியா பெரும் வறட்சியினை சந்தித்தது. இதற்குக் காரணம் இயல்பான மழையைவிட 19 விழுக்காட்டுக்குக் குறைவான மழைப்பொழிவு இருந்ததாகும். இதனால் 38 மில்லியன் டன் உணவு உற்பத்தி குறைந்தது (Amitabh Tiwari 2021).
1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்தின் கீழ் 2002ல் விரைவு செயலாற்றும் திட்டம் துவக்கப்பட்டது. 2003-04ஆம் ஆண்டு முடிய 18 நீர்ப்பாசன திட்டங்களுக்குக் கடன் அளிக்கப்பட்டது. பாசனப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம் (Command Area Development and Water Management Programme) மறுசீரமைக்கப்பட்டு ஏப்ரல் 2004ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி 133 நீர்ப்பாசன திட்டங்கள் இதன் மூலம் பயன் பெற்றது. விவசாயிகளுக்கானக் கடன் அளவு 1999-2000ல் ரூ.46268 கோடியாக இருந்தது 2004-05ல் ரூ.85686 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 1998-99ல் தொடங்கப்பட்ட விவசாயக் கடன் அட்டை திட்டம் டிசம்பர் 2004 முடிய 435 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு ரூ.111459 கோடி கடன் கொடுக்கப்பட்டது. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்படி 1999-00ல் ரபி பருவத்திலிருந்து 2004 காரீப் பருவம் முடிய 5.89 கோடி விவசாயிகள் பயன் அடைந்தனர். இத்துடன் 2003-04ல் முன்னோட்ட அடிப்படையில் விவசாயிகள் வருமானக் காப்பீடு திட்டத்தினால் (Farm Income Insurance Scheme) 2004 காரீப் பருவத்தில் 2.22 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். இதுபோல் விதை உற்பத்தி மற்றும் பகிர்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
விவசாயிகள் அதிக உரங்கள் பயன்படுத்தக் குறைந்த விலையில் மானியத்துடன் வழங்க அரசு நடவடிக்கையை மேற்கொண்டது. உர மானியம் 2000-01ல் ரூ.13800 கோடி வழங்கப்பட்டது இது 2003-04ல் ரூ.11847 கோடியாகக் குறைந்தது. வேளாண்மையை இயந்திரமயமாக்கலுக்கு அரசு முன்னுரிமை அளித்தது. இதன்படி இயந்திரமயமாக்கல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டின் பங்கானது 1971-72ல் 40 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 84 விழுக்காடாக அதிகரித்தது. 1999-2000க்கும் 2003-04க்கும் இடையில் 11.17 லட்சம் டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டது, இது ஆண்டுக்குச் சராசரியாக 223333 விற்பனை அளவாக இருந்தது. இதுபோல் விசைக் கலப்பைகள் (power tillers) இதே காலகட்டத்தில் 68034 விற்பனையானது, இது ஆண்டுக்குச் சராசரியாக 13606 விற்பனையானது. அதேசமயம், வேளாண்மையின் மீதான பொதுத்துறை முதலீடுகள் குறைந்து வந்தது. 1990களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைக்கான மூலதன ஆக்கமானது 1.92 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 1.3 விழுக்காடாகக் குறைந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் பங்கானது 2002-03ல் 12.8 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 11.8 விழுக்காடாகக் குறைந்தது. எனவே வேளாண் ஏற்றுமதியினை ஊக்குவிக்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2004-2009ல் வேளாண்மைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன்படி சிறப்பு வேளாண் உற்பத்தி திட்டம் (Vishesh Krishi Upaj Yojana) தொடங்கப்பட்டு பழவகைகள், காய்கறிகள், பூக்கள், சிறிய வகைக் காடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. இத்துடன் வேளாண் ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்திய வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற அதே வேலையில் சில வகைப் பொருட்களை (சமையல் எண்ணெய், உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள், பருப்பு வகைகள்) இறக்குமதி செய்கிறது. இதன்படி மொத்த இறக்குமதியில் சராசரியாக ஆண்டுக்கு 4.6 விழுக்காடு வேளாண் பொருட்கள் பங்கெடுத்துக்கொள்கிறது.
அட்டவணை: வாஜ்பாய் ஆட்சியில் இந்திய வேளாண் உற்பத்தி
வேளாண் உற்பத்தி | 1998-99 | 2003-04 | ||||
பரப்பு (மில்லியன் ஹெக்டேர்) | உற்பத்தி (மில்லியன் டன்) | உற்பத்தி திறன் (கி/ஹெ) | பரப்பு (மில்லியன் ஹெக்டேர்) | உற்பத்தி (மில்லியன் டன்) | உற்பத்தி திறன் (கி/ஹெ) | |
நெல் | 44.80 | 86.08 | 1921 | 42.41 | 88.28 | 2051 |
கோதுமை | 27.52 | 71.29 | 2590 | 26.62 | 72.11 | 2707 |
எண்ணெய் வித்துக்கள் | 26.23 | 24.75 | 944 | 23.44 | 25.29 | 1072 |
சர்க்கரை | 4.05 | 288.72 | 71203 | 4.00 | 237.31 | 59119 |
பருப்பு வகைகள் | 23.5 | 14.91 | 634 | 24.45 | 14.94 | 623 |
சிறுதானியங்கள் | 29.34 | 31.34 | 1068 | 30.76 | 38.12 | 1228 |
அனைத்து உணவு தானியங்கள் | 125.17 | 203.61 | 1627 | 124.24 | 213.46 | 1707 |
தலா உணவு (தானியங்கள் + பருப்புகள்) | — | — | 447.0 கிராம் | 462.7 கிராம் |
Source: Government of India (2005, 2007): “Economic Survey2004-05 & 2006-07,” Ministry of Finance, Government of India.
அட்டவணை: இந்தியப் பொருளாதாரப் போக்கு (விழுக்காட்டில்)
காரணிகள் | 1950-1964 | 1965-79 | 1980-1990 | 1991-2004 | 1980-2004 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி | 3.7 | 2.9 | 5.8 | 5.6 | 5.7 |
தொழில் வளர்ச்சி | 7.4 | 3.8 | 6.5 | 5.8 | 6.1 |
வேளாண் வளர்ச்சி | 3.1 | 2.3 | 3.9 | 3.0 | 3.4 |
மொத்த முதலீட்டிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள விகிதம் | 13 | 18 | 22.8 | 22.3 | 22.5 |
Source: Atul Kohli (2006): “ Politics of Economic Growth in India 1980-2005,”Economic Political Weekly, 41, (14).
Source: Atul Kohli (2006): “ Politics of Economic Growth in India 1980-2005 Part II: The 1990s and Beyond,”Economic Political Weekly, 41, (15).
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திப் பொருளாதாரம் உச்ச அளவான 8 விழுக்காடு வளர்ச்சியினைத் தக்க வைத்துக்கொண்டிருந்தது. அதே சமயம் பணவீக்கம் 4 விழுக்காட்டுக்குக் குறைவான அளவிலும், அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாகவும் இருந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் ஆண்டு பொருளாதார வளர்ச்சி வீதமானது ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் 3.2 விழுக்காடும், எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் 4.7 விழுக்காடும், ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 2.1 விழுக்காடுமாக இருந்தது. இது 2003-04ஆம் ஆண்டு 9.6 விழுக்காடாக அதிகரித்தது.
இந்திய அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணமாக்கத் திகழ்கிறது. 1970-71ல் இந்தியாவின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் 59 விழுக்காடாக இருந்தது, 1977-78ல் 51.3 விழுக்காடாகவும், 1983ல் 44.5 விழுக்காடாகவும், 1993-94ல் 36 விழுக்காடாகவும், 1999-2000ல் 26.1 விழுக்காடாகவும், 2004.05ல் 22.1 விழுக்காடாகவும் குறைந்தது. ஆனால் தற்போதும் உலக அளவில் வறுமையின் கீழ் வாழ்பவர்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக பங்கினை இந்தியா பகிர்ந்துகொள்கிறது. இதற்கு முக்கியக் காரணம் தேவைக்கு அதிகமான தொழிலாளர் ஆற்றல் வேளாண்மையினைச் சார்த்திருப்பதாகும். வட்டார நிலையில் பார்த்தால் வறுமையில் வாழ்பவர்களில் பெரும் பங்கினைக் கிராமப்புறங்கள் பகிர்ந்துகொள்கிறது. குறிப்பாக விவசாயிகள் பாதிக்குமேல் வறுமையில் வாழ்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், கிராமப்புறக் கைவினைஞர்கள் அதிகமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அது பெருமளவிற்குக் கைகொடுக்கவில்லை. 1970களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வறுமையை ஒழிப்பதில் சிறப்பான பலனை அளிதது. எனவே 2000களின் இடையில் இத்திட்டத்தைத் தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்து மட்டுமல்ல உலக அளவில் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னனி நாடாகவும் உள்ளது. இருந்தும் அதிக அளவிலான மக்கள் உணவின்றி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதற்காக உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி குறைந்த விலையில் உணவு தானியம் பொது விநியோக முறையின் மூலமாக வழங்கப்பட்டது. இதனால் 800 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர். வேளாண்மையில் முக்கிய உற்பத்தியாகப் பருத்தி திகழ்கிறது. 1950-51ல் தலா துணியின் அளவு 9 மீட்டராக இருந்தது 2002-03ல் 31.4 மீட்டராக அதிகரித்தது. பல மாநிலங்கள் ஏழை மக்களுக்கு இலவச துணி அளிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுவருகிறது. இது போன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வறுமை, பாக்கிஸ்தானிலிருந்து அதிக அளவில் அகதிகள் வருகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. இதனால் வீடற்றவர்கள் பெருமளவிற்கு காணப்பட்டனர். இத்துடன் கிராமங்களில் பெருமளவிற்கு மண்-குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இதனைப் போக்க அரசு ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டங்களைப் பல்வேறு பெயர்களில் அவ்வப்போது நடைமுறைப்படுத்தியது. இதன் விளைவு வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 0.15 விழுக்காடு மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கத் தொடர்ந்து அரசு பல்வேறு உத்திகளை இன்றும் கடைப்பிடித்து வருகிறது.
டியாகோ மயோரானோ (2014) என்பவருடைய ஆய்வுக் கட்டுரையில், கிராமப்புற பொருளாதாரம் மோசமான பாதிப்பினை அடைந்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார். அதன்படி 1) விவசாயிகள் கடன் பெறுவது மிகவும் கடினமாகிக் கொண்டுவந்தது, 2) பன்னாட்டுப் போட்டியிலிருந்து விவசாயிகளை போதுமான அளவிற்குப் பாதுகாக்கப்படாதது, 3) பொதுத் துறை முதலீடு வேளாண்மை மீது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது போன்றவை ஆகும். இவை அனைத்தும் வேளாண் துறையின் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணமாக இருந்துள்ளது என்கிறார். இந்த பாதிப்பினால் 1995-2011ஆம் ஆண்டுகளுக்கிடையே 2.7 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 1980களில் வேளாண்மைக்கு அளித்த முக்கியத்துவம் ஒப்பீட்டு அளவில் 1990களில் அளிக்கப்படவில்லை. குறிப்பாக மொத்த முதலீட்டில் வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான முதலீட்டு விகிதமானது தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. 1980ல் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்திற்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 1989ல் 19 விழுக்காடாகக் குறைந்தது, 2008ல் 18 விழுக்காடாக மேலும் குறைந்தது. ஆனால் இந்த முதலீட்டு இடைவெளியைத் தனியார் மற்றும் பொது-தனியார்-கூட்டேற்பு (PPP) வழியாக நிறைவடையச் செய்தது. இதுபோல் மொத்த முதலீட்டு ஆக்கத்தில் வேளாண்மையின் மொத்த முதலீட்டு ஆக்கமானது 1980ல் 16.1 விழுக்காடாக இருந்தது 1999ல் 11.5 விழுக்காடாகவும், 2005ல் 7.3 விழுக்காடாகவும் குறைந்தது (Diego Maiorano 2014).
உணவு மற்றும் உரங்களுக்கு அளிக்கப்பட்ட மானியம் 1980 மற்றும் 2004க்குமிடையே மாறுபட்டு இருந்தது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் உரத்திற்கான தலா மானியம் 600 விழுக்காடு அதிகரித்தது ஆனால் உணவிற்கான தலா மானியம் 202 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1990களில் உரத்திற்கான தலா மானியமானது 160 விழுக்காடும், உணவிற்கான தலா மானியம் 308 விழுக்காடும் அதிகரித்திருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உரத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அளவு 0.40 விழுக்காடாக 1980ல் இருந்தது. 1989ல் 1.11 விழுக்காடாக இது அதிகரித்தது. இதுபோல் உணவிற்கு இதே காலகட்டங்களில் 0.53 விழுக்காட்டிலிருந்து 0.9 விழுக்காடாக அதிகரித்தது. இந்திய உணவுக் கழகம் நெல் மற்றும் கோதுமைக்கானக் கொள்முதல் விலையானது 1980களில் குறைந்திருந்தது ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தக் காலங்களில் அதிகரித்துக் காணப்பட்டது (Diego Maiorano 2014). பொதுவாகப் புதுப் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதில் வேளாண்மைக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் சார்ந்த உள்கட்டமைப்புகள் (சாலைகள், சேமிப்புக் கிடங்குகள்) வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவு கிராமப்புற மேம்பாடு, வேளாண் வளர்ச்சி போன்றவற்றில் நேர்மறை விளைவுகள் தோன்றியது. ஆனால் இதனைத் தக்கவைக்க அடுத்து வரும் காலங்களிலும் வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை இருந்தது.
– பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 11 ஐக்கிய முன்னணி அரசும் (எச்.டி.தேவ கௌடா, ஐ.கே.குஜரால்) வேளாண்மையும் பேரா.பு.அன்பழகன்
1996ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியினைக் கண்டது. பாஜகவிற்கு 191 இடங்களும், காங்கிரஸ் கட்சி 140 இடங்களும், ஜனதா தளம் 46 இடங்களும், இடதுசாரிகளுக்கு 44 இடங்களும் மற்ற கட்சிகள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்ததால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றது ஆனால் அரசுக்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் 13 நாட்கள் மட்டுமே வாஜ்பாய் பிரதம மந்திரியாக நீடித்தார். இதனை அடுத்து 13 கட்சிகளின் கூட்டுடன் ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததன் அடிப்படையில் இந்தியாவின் 11வது பிரதம மந்திரியாக எச்.டி.தேவ கௌடா ஜூன் 1, 1996ல் பதவி ஏற்றார்.
அன்றிலிருந்து ஏப்ரல் 21,1997 வரை 324 நாட்கள் இவர் பிரதமர் பதவியில் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற சீதாராம் கேசரி அரசியல் காரணங்களுக்காகத் தேவ கௌடா அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இதனை அடுத்து ஐக்கிய முன்னணியின் சார்பில் ஐ.கே.குஜரால் பிரதமரானர். காங்கிரஸ் கட்சி இவருக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. இவருடைய ஆட்சி பிப்ரவரி 1998வரையில் நீடித்தது (Amitab Tiwari 2016). மொத்தமாக ஐக்கிய முன்னணி அரசானது 17 மாதம் 21 நாட்கள் ஆட்சியில் இருந்தது.
தேவ கௌடா தன்னை ஒரு சாதாரண விவசாயி என அழைத்துக் கொண்டவர். 1991ல் பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் தாக்கல் செய்த வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மைக்கான மானியம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதனை எதிர்த்து தேவ கௌடா “நான் ஒரு விவசாயி, உழவன் மகன், இதை நான் அனுமதிக்க மாட்டேன், நான் தர்ணாவில் அமர்வேன், நான் இந்த நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியே செல்ல மாட்டேன், இதை விளம்பரத்துக்காக நான் அப்படிச் சொல்ல வில்லை” என்றார். தேவ கௌடா தன்னுடைய வாழ்நாளை விவசாயிகளுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 1996-97ல் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கானதாக இருந்தது. பின்னால் அவர் பதவியிலிருந்து வெளியேறிய பின்பு பஞ்சாப் விவசாயிகள் அம்மாநிலத்தில் பயன்படுத்திய புதிய தரமான நெல் விதை ரகத்திற்குத் தேவ கௌடா என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். இந்த ரகம் பத்தாண்டுகளுக்கு மேலாக மிகவும் அறியப்பட்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விவசாயிகளின் தலைவராக அறியப்படும் மகேந்திர சிங் திகாயத், தேவ கௌடாவை தென்னிந்தியாவின் சவுதிரி சரண் சிங் என்று அழைத்தார் (Outlook web dest, 12.12.2021).
1991ல் புதிய பொருளாதாரக் கொள்கையானது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது ஆனால் 1996ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் நிலையற்ற அரசியல் நிலைப்பாட்டினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படத் தொடங்கியது. 1996-97ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 5 விழுக்காடாகக் குறைந்தது. 1998-99ல் ஏற்றுமதி வளர்ச்சியானது எதிர்மறையாக இருந்தது. தொழில் வளர்ச்சியும் குறைத் தொடங்கியது. வெளிநாட்டு மூலதனங்களான அந்நிய நேரடி முதலீடு மற்றும் போர்ட்ஃபோலியோ முதலீடுகளின் வரத்து அதிக அளவில் குறையத் தொடங்கியது. இது 1998-99ல் எதிர்மறையாகவும் இருந்தது. முதன்மை பற்றாக்குறையானது (Primary deficit) 1996-97ல் 0.6 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 1.3 விழுக்காடாக அதிகரித்தது. மேலும் 1997ல் கிழக்கு ஆசியா நாடுகளின் ஏற்பட்ட பங்கு முதலீடு தொடர்பான நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்தது. இதே நேரம் இந்தியாவுடன் வர்த்தக உறவுடன் இருந்த நாடுகளான ரஷ்யா, பிரேசிலும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவந்தது, இது இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியினை உருவாக்கியது. 1998ல் உலகப் பொருளாதார வளர்ச்சியும் குறையத் தொடங்கியது. இவை அனைத்தும் பகுதி அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது பாதிப்பினை ஏற்படுத்தியது. 1991ல் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் பின்னிலையில் இருந்தது. இதன்பொருட்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தின் விளைவுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் இடர்பாடுகள் தோன்றியது. எனவேதான் அடல் பீஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அரசியலில் நிலையற்ற தன்மை, சந்தர்ப்பவாத கூட்டாட்சி, அரசின் இரட்டை நிலைப்பாடு (சுதேசி, புதிய பொருளாதார சீர்திருத்தம்) ஆகியன 1990களின் கடைசி காலகட்டங்களில் பொருளாதாரச் சரிவிற்கு முக்கிய காரணமாக அறியப்படுகிறது. அதே சமயம் புதிய பொருளாதாரக் கொள்கையினால் தொடர் வளர்ச்சி, தொழில் மயமாக்கல், சுயச்சார்பு, வறுமை ஒழிப்பு போன்ற தளங்களில் சிறப்பான வெளிப்பாட்டைக் காண முடிந்தது. இந்தியா அதுவரை கடைபிடித்து வந்த சோசியலிச கொள்கையானது கைவிடப்பட்டு புதியதான உலகமயமாக்கல் என்பதை இந்தியா உள்வாங்கிக்கொள்ளத் தொடங்கியது. கடந்த 40 ஆண்டுகளில் சுயச்சார்பு, தொழில் வளர்ச்சிக்கு இறக்குமதி மானியம் தேவைப்பட்டது ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கையினால் மூலதனம், தொழில்நுட்பங்களும் தருவிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட இந்தியாவில் உள்ள கட்சிகள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையினைப் பொறுத்தவரையில் தேவை என்பதை உணர்ந்தன (Bipian Chandra et al 2008).
பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்த இடதுசாரி கட்சிகள் அடுத்து ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் பங்கெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் தனியார் மயமாக்கலைக் கடுமையாக எதிர்த்தனர், மானியங்களைக் குறைப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த சதுரானன் மிஸ்ரா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்) அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளைத் தடுக்கிறார் என்று குற்றம்சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார். ஐ.கே.குஜரால் பிரதமராக இருந்தபோது மின்சார துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையினைப் பின்பற்றி மாநில மின்சாரக் கழகங்களை வலுப்படுத்த வேண்டுமென்றார். ஐக்கிய முன்னணி அரசானது இறக்குமதியினை தாராளமயமாக்கியது. இதன்படி படிப்படியாகத் தடை செய்யப்பட்ட இறக்குமதியினைச் சிறப்பு இறக்குமதி பட்டியலுக்குக் கொண்டுசென்றது பின்னர் அதனைத் தடையற்ற இறக்குமதி பிரிவில் சேர்க்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப்பின் நிலக்கரி மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டு முற்றுரிமை நிலையிலிருந்ததை முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஐக்கிய முன்னணி அரசானது உலக வரத்தக அமைப்புக் கூட்டம் பிப்ரவரி 1997ல் ஜனிவாவில் நடந்ததில் கலந்துகொண்டு தொலைத்தொடர்பு உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தகவல் தொழில்நுட்பம் உலகமயமாக்கலுக்கு உலக வர்த்தக அமைப்பின் அமைச்சரவை அளவிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு அதில் கொண்டுவந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தொழிலாளர் நிலை தொடர்பாக இந்தியா பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் நடைமுறையினை ஏற்றுக்கொண்டு உலக வர்த்தக அமைப்பு நிலையினை நிராகரித்தது (Singh 2001).
மன்மோகன் சிங் 1991ல் தன்னுடைய முதல் நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தபோது இந்தியப் பொருளாதாரம் மிகவும் தீவிர பொருளாதார நெருக்கடியினை (அந்நியச் செலாவணி கையிருப்பு வற்றியிருந்தது, செலுத்து நிலை இருப்பில் மோசமான நிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் கடும் சரிவு, தொழில் துறை வீழ்ச்சி, உச்ச அளவில் பணவீக்கம், இந்தியா மீது பன்னாட்டு நிதிச் சந்தையில் நம்பிக்கை இழந்த நிலை) சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணம். ஆனால் 1996ல் ஒட்டு மொத்த பேரியல் பொருளாதார நிலைமை சிறப்பான இருந்த நிலையில் (பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடு, தொழில் துறை வளர்ச்சி 12 விழுக்காடு, பணவீக்கம் 4.5 விழுக்காடு, அந்நியச் செலாவணி கையிருப்பு 17 மில்லியன் டாலருக்கு மேல்) அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது முதல் நிதி நிலை அறிக்கையினைச் சமர்ப்பித்தார். இதில் முக்கியமானது மன்மோகன் சிங்கிக்குப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ப.சிதம்பரம் பங்கேற்றிருந்த அரசானது 13 கட்சிகளின் கூட்டணியாக இருந்ததால் தன்னிச்சையாகச் செயல்பட இயலாத நிலையிருந்தது.
1996-97ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையானது நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பொருளாதாரச் சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டும், பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையின் நோக்கங்கள் 1) பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து முடுக்கிவிடப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது, 2) குறைந்தபட்ச சேவைகளை வழங்கி வறுமையை ஒழிப்பது, 3) அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகைகளைக் காண்பது, 4) நிதி மற்றும் பேரியல் பொருளாதார நிலைப்பாட்டை உருவாக்குவது, 5) உள்கட்டமைப்பின் மீது முதலீடு செய்வது, 6) மனித மூலதன வளர்ச்சியினை மேம்படுத்துவது, 7) செலுத்து நிலை இருப்பினை இயல்பான நிலைக்குக் கொண்டுவருவது போன்றவை ஆகும்.
வேளாண்மை முன்னேற்றத்திற்காகச் சிறப்பு நடவடிக்கையினை எடுக்க நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது முதலில் ரூ.500 கோடியும், பின்பு ரூ.1000 கோடியாகவும் செலுத்தப்பட்ட மூலதனம் அளித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் இது ரூ.2000 கோடியாக அதிகரிக்க உத்தேசித்தது, கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு ரூ.2500 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விரைவாக நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. பெரிய நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. குறிப்பாகப் பெரிய விவசாயிகள் பயன்பெறும் விதமாக டிராக்டர், எந்திரக் கலப்பை (பவர் டில்லர்) போன்றவற்றை வாங்க நேரடி மானியம் வழங்கப்பட்டது. இதைத் தவிற்று உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி நிறுவனம் ரூ.5000 கோடியில் உருவாக்கப்பட்டது. இதன்படி போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு, சாலை போன்றவற்றைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது (Bakul H Dhalakia 1996).
ஐக்கிய முன்னணி பல கட்சிகளின் கூட்டணியாக இருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்கியது. இதன்படி 100 விழுக்காடு பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்குதல், ஆரம்பச் சுகாதார மைய வசதியினை ஏற்படுத்தித் தருதல், அனைவருக்கும் தொடக்கக் கல்வி, வீடற்ற ஏழைகளுக்கு வீட்டு வசதி, மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல், அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பை உறுதி செய்தல், பொது விநியோக முறையை வலுப்படுத்துதல் போன்றவை ஆகும். இதற்காக ரூ.2466 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1997-98ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பாராளுமன்றத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் போது, 1995-96ல் வேளாண்மையின் வளர்ச்சியானது 0.1 விழுக்காடாக இருந்தது, 1996-97ல் 3.7 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியதாகக் குறிப்பிட்டார். உணவு தானிய உற்பத்தியானது 191 மில்லியன் டன் அதிகரித்ததாகவும் ஆனால் மின்சாரத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்றும், ஏற்றுமதியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டது. வறுமையை ஒழிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டதால், பிரதம மந்திரி அடிப்படைக் குறைந்தபட்ச சேவை திட்டத்திற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதுபோல் நீர்ப்பாசன பயன்பாட்டுத் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. கங்கா கல்யாண் யோஜனா என்ற திட்டமானது நிலத்தடி நீர் மற்றும் சமதளப் பகுதிகளின் நீரைத் திறம்படப் பயன்படுத்த மானியமும், கடனும் வழங்கப்பட்டது. இது போன்றே குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் வழியாக வேளாண்மை மற்றும் வேளாண் சார் தொழில்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்கு அதிக அளவில் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி சிறப்பாகச் செயல்படுத்த முதல் கட்ட திட்டங்களுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கியினை வலுப்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. உணவு தானியங்கள், சர்க்கரைக்கு மானியம் அதிகரிக்கப்பட்டது மொத்தத்தில் இந்த நிதி ஆண்டிற்கான செயல் திட்டங்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது (Government of India 1997). 1996-97ல் உரத்துக்கான மானியம் ரூ.6093 கோடியாக இருந்தது 1997-98ல் ரூ.10026 கோடியாக அதிகரித்தது (Government of India 1999). மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைக்கான இடுபொருட்களின் விழுக்காட்டு அளவு 1996-97ல் 8.9 விழுக்காடாக இருந்தது 1997-98ல் 9.0 விழுக்காடாக அதிகரித்தது. இது ஒரு ஹெக்டேருக்கு ரூ.497.3 லிருந்து ரூ.509.4ஆக இவ் ஆண்டுகளில் அதிகரித்தது (Shovan Ray 2007).
1997-98ல் வேளாண் உற்பத்தி 6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது ஆனால் 1998-99ல் இது 3.9 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டில் உணவு தானிய உற்பத்தியானது 192.26 மில்லியன் டன்னாக இருந்தது 203.61 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உற்பத்தித் திறனானது ஒரு ஹெக்டேருக்கு 1552 கிலோவாக இருந்தது 1627 கிலோவாக அதிகரித்தது. நெல், கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, சிறு தானியங்கள் போன்றவை உற்பத்தியில் நேர்மறை வளர்ச்சியடைந்தது (Shovan Ray 2007). இக்கால கட்டத்தில் இந்தியாவில் பருவ மழை சாதகமான நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1995-96ல் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் வேளாண்மைத் துறையின் பங்கு 19.8 விழுக்காடாக இருந்தது 1996-97ல் 20.4 விழுக்காடாக அதிகரித்தது, 1998-99ல் 18.8 விழுக்காடாகவும் குறைந்தது. 1950களில் உணவு தானிய உற்பத்தியானது ஆண்டுக்கு 3.22 விழுக்காடாக இருந்து 1960களில் ஆண்டுக்கு 1.72 விழுக்காடாகவும், 1970களில் ஆண்டுக்கு 3.08 விழுக்காடாகவும், 1980களில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடாகவும், 1990களில் 1.7 விழுக்காடாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது (Government of India 1999).
1990களின் மத்தியில் வேளாண் வளர்ச்சி சரியத் தொடங்கியது (1980களில் ஆண்டுக்கு 3.5 விழுக்காடு என்றிருந்தது 1990களில் 2.7 விழுக்காடாகக் குறைந்தது). 1992-1997ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 4.7 விழுக்காடு என்ற சராசரி வேளாண் வளர்ச்சி இருந்தது ஆனால் இது 1997-2001ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 1.2 விழுக்காடு என்ற அளவில் இருந்தது (Shankar Achary et al 2003). இதனால் வேளாண்மையைச் சார்ந்து வாழ்ந்த வேளாண் குடிகள் அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டனர். வேளாண் சார் துறைகளான கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, போன்றவை மீதும் பாதிப்பினை உண்டாக்கியது. இதற்கு முக்கியக் காரணம் நீர்ப்பாசனம், வெள்ளத் தடுப்பு, ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், போன்றவை மீதான அரசின் முதலீடுகள் குறைந்ததாகும். பொதுத் துறை முதலீடு வேளாண்மையில் 1970கள் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது ஆனால் 1980களில் இது குறையத் தொடங்கியது. பொதுத் துறை முதலீடு உண்மை நிலையில் 1980-81ல் ரூ.1793 கோடியாக இருந்தது 1990-91வட ரூ.1154 கோடியாகவும், 1996-97ல் இது ரூ.1132 கோடியாகவும் குறைந்தது. ஆனால் தனியார்த் துறை முதலீடு வேளாண் துறை மீது அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது (Government of India 1999). வேளாண் வர்த்தகத்தில் தாராளமயமாக்கப்பட்டதின் விளைவு பன்னாட்டுச் சந்தையில் அதிகம் தேவையான வேளாண் விளைபொருட்கள் பயிரிடப்பட்டன. இதன் விளைவு அதிக அளவிற்கான வேளாண் உற்பத்தியினால் பன்னாட்டுச் சந்தையில் இப்பொருட்களின் விலையில் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்டது. இந்தியா வர்த்தக கட்டுப்பாட்டை நீக்கியது, சுங்க வரியினைக் குறைத்தது. 1990களின் இடையில் பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்கள் விலை குறைந்தது போன்ற நிலைகளினால் விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்தித்தனர்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பொருளாதாரச் சீரதிருத்ததிற்குப் பிந்தைய காலங்களில் குறைவான வேளாண் வளர்ச்சியினை அடைந்தது. வேளாண் வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சியினை அடைந்திருந்தபோதும் அதற்கு ஈடாக வேளாண் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் ஆற்றல் (Labour force) குறையவில்லை இது ஒரு முக்கிய முரண்பாடாகக் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தின் விளைவால் அடைந்த உயர் பொருளாதார வளர்ச்சியானது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரவில்லை எனவே வேளாண்மையிலிருந்து அதிகமாக வேளாண்மையில் சுய-தொழில் ஈடுபட்டிருந்தவர்களும், தொழிலாளர்களும் வெளியேறினார்கள். குறைவான வேளாண் உற்பத்தித் திறன், குறைந்த அளவிலான வேளாண் விளைபொருட்களின் விலை, வேளாண் பொருட்களின் தேவையில் வீழ்ச்சி, வேளாண்மைக்கு வெளியே தேவையான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தராத நிலை, இவை அனைத்தும் வேளாண்மை 1990களின் கடைசி காலகட்டத்தில் எதிர்கொண்ட முக்கியப் பிரச்சனைகளாகும். நீர்ப்பாசனம் மீது பொதுத் துறையின் முதலீடு குறைந்து வந்தது. 1980களுக்கும் 1990களுக்கும் இடையே நீர்ப்பாசன சாகுபடி பரப்பானது ஆண்டுக்கு 0.8 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்தது. ஆனால் இது பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஆண்டுக்கு 2.5 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதுபோல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருந்தது. நிறுவனம் சார் அளிப்பும் குறைந்து வந்தது. இதன் பங்கு மொத்த நிறுவனம் சார் கடனில் ஆண்டுக்கு 10-11 விழுக்காடு மட்டுமே இருந்தது. பெரும்பான்மையான விவசாயிகள் முறைசார ஆதாரங்கள் வழியாகக் கடன் பெற்றிருந்தனர், இதற்கு 30 விழுக்காட்டுக்குமேல் வட்டியாகச் செலுத்திவந்தனர். தொடர்ந்து வேளாண்மையில் லாமற்ற தன்மை, வேளாண்மை வணிகமயமாதல், அதிகரித்த கடன் சுமை போன்ற காரணங்களினால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருந்தது (Narasimha Reddy et al 2009).
அட்டவணை: ஒப்பீட்டு அளவிலான துறைவாரியான செயல்திறன் (விழுக்காடு)
துறைகள் | ஆண்டு வளர்ச்சி வீதம் | பொருளாதார பங்களிப்பு | |||
1981-1990 | 1991-1999 | 1980 | 1990 | 1999 | |
வேளாண்மை | 3.6 | 3.0 | 39.7 | 32.2 | 25.2 |
தொழில் துறை | 7.1 | 5.6 | 23.7 | 27.2 | 26.7 |
சேவைத் துறை | 6.7 | 7.8 | 36.6 | 40.6 | 48.1 |
Source: Shankar Achary et al 2003.
அட்டவணை: வேளாண் உற்பத்தி, உற்பத்தித் திறன் வளர்ச்சி (விழுக்காட்டில் ஆண்டுக்கு)
உற்பத்தி | உற்பத்தி | உற்பத்தி திறன் | ||
1980-81முதல் 1989-90வரை | 1990-91முதல் 2000-01வரை | 1980-81முதல் 1989-90வரை | 1990-91முதல் 2000-01வரை | |
உணவு தானியங்கள் | 2.85 | 1.66 | 2.74 | 1.34 |
உணவல்லா விளைபொருட்கள் | 3.77 | 1.86 | 2.31 | 0.59 |
அனைத்து விளைபொருட்கள் | 3.19 | 1.73 | 2.56 | 1.02 |
Source: Shankar Achary et al 2003
1980களின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ 1990களில் அமைந்த ஆட்சிகளே காணமாக இருந்தது. இவ்வாட்சிகள் சிறுபான்மை அரசாகவும், கூட்டணி அரசாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட சித்தாந்தங்களின் கூட்டாக இவ்வாட்சிகள் இருந்தாலும் நாட்டின் நலன் கருதி அவ்வப்போது எடுக்கப்பட்ட உத்திகள் பெருமளவிற்குக் கருத்தொற்றுமையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது (Singh 2001).
ஜி.எஸ்.பல்லா மற்றும் குர்மாயில் சிங்கின் ஆய்வுக் கட்டுரையில் பொருளாதாரச் சீர்திருத்தின் விளைவானது 1990-93 முதல் 2003-06ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் வளர்ச்சியானது அதிக அளவில் வீழ்ச்சியடைந்தது. இக்கால கட்டங்களில் ஆண்டுக்கு 1.74 விழுக்காடு வேளாண் உற்பத்தி வளர்ச்சி இருந்தது இது 1980-83 முதல் 1990-93ஆம் ஆண்டுகளுக்கிடையே பதிவான வளர்ச்சியைவிட (ஆண்டுக்கு 3.37 விழுக்காடு) மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைக்கான முக்கியக் காரணம் கிராமப்புற உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை, வேளாண் ஆராய்ச்சி மீதான முதலீடுகள் குறைந்தது எனச் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய விளைவாகச் சாகுபடி செய்யும் பயிர்களில் மாற்றம் ஏற்பட்டது. உணவு தானியச் சாகுபடியிலிருந்து விலகி உணவல்லா பயிர்களை (குறிப்பாக மதிப்பு மிக்க பயிர்கள்) நோக்கி விவசாயிகள் பயணிக்கத் தொடங்கினர். புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபின் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு போன்றவற்றின் உற்பத்தித் திறன் வளர்ச்சியானது அதிக அளவிற்குக் குறைந்தது. தனியார் நிறுவனங்கள் வேளாண்மையில் ஊடுருவி உணவல்லா விளைபொருட்களை விளைவிக்க நிதி வழங்கியது. இதனால் பெருமளவிற்கான விவசாயிகள் வேளாண் சாகுபடி பயிர் வகைகளில் மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இவர்களில் பெருமளவிற்குப் பெரிய, நடுத்தர விவசாயிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990-93ல் உணவு தானிய உற்பத்தியானது மொத்தப் பயிரிடும் பரப்பில் 73 விழுக்காடாக இருந்தது 2003-06ல் 68.9 விழுக்காடாகக் குறைந்தது. உணவு தானிய உற்பத்தியானது மொத்த உற்பத்தியின் மதிப்பில் 52.7 விழுக்காடாக இருந்தது 49.6 விழுக்காடாக இக்கால கட்டத்தில் குறைந்தது (Bhalla et al 2009). முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குச் சார்பானதாக இருந்தது. வேளாண்மைக்கான மானியங்கள் குறைக்கப்பட்டது, தடையற்ற வர்த்தகம் போன்றவை அதிகமாக வேளாண்மையைப் பாதித்தது. எனவே ஐக்கிய முன்னணி அரசு காலத்தில் வேளாண்மையினை முன்னிறுத்தி இரண்டாம் கட்ட சீர்திருத்தங்கள் (இடுபொருட்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை, வறண்ட சாகுபடிக்கு உகந்த பகுதிகளில் பசுமைப் புரட்சி விரிவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல்) தொடங்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஏற்பட்ட நிலையற்ற போக்கினாலும், அழுத்தங்களினாலும் பல திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினாலும் வேளாண்துறையின் வளர்ச்சியினை பெருமளவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தியது. பொதுவாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின் வேளாண்மையின் போக்குச் சரியத் தொடங்கியது.
– பேரா.பு.அன்பழகன்
காந்திஜியின் தத்துப்பெண் அம்புஜம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா
வரலாறு எப்போதும் வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவதாகவே இருக்கிறது. இந்திய வரலாற்றையும், விடுதலைப் போராட்ட பதிவுகளையும் எழுதியவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலேயர்களே. இவர்கள் எப்படி சுதந்திரத்தில் ஈடுபட்ட தமிழக பெண் வீராங்கனைகள் பற்றி எழுதுவார்கள்.
யார் இந்த அம்புஜம் ?
இம்முறை நாம் சந்திக்கப் போகும் மறக்க முடியாத, ஆனால் வரலாற்றுப் பதிவில் அதிகம் பேசப்படாத பெண் ” பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள்”தான். இவர் சோதனைகளை அதிகம் சந்தித்த தமிழ்நாட்டுப் பெண்மணி. அம்புஜத்தம்மாள் (சனவரி 8, 1899 -1983) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண் ஆவார். எல்லோரும் அவரை அம்புஜம்மாள் என்றழைத்தாலும் மகாத்மா காந்திஜி மட்டும் ‘அம்புஜம்’ என்றே அன்புடன் அழைப்பார். தமிழின் தொடக்க காலப் பெண் எழுத்தாளர்களில் அம்புஜம்மாளும் ஒருவர். குறிப்பிடத்தகுந்த நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். காந்தியவாதி. சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியில் ஈடுபட்ட தமிழ் நாட்டுப்பெண்.
மகாத்மா காந்தியின் தத்துப்பெண்
காந்திஜியின் அன்புக்கு மிகவும் பாத்திரமாய் இருந்தவர் அம்புஜம்மாள். இளமைப் பருவத்தில் அவருக்கு அத்தனை அன்பு கிடைக்கவில்லை. பிறந்ததுமே உற்றார், உறவினர்களால் தூற்றப்பட்ட பெண்தான் அம்புஜம். காரணம் அன்றைய மூடநம்பிக்கையும், பெண்ணின் நிலைமையும்தான். காந்தியுடனான இவரின் நினைவுகளை ‘மகாத்மா காந்தி நினைவு மாலை’ என்ற நூலாக எழுதினார். எஸ்.அம்புஜத்தம்மாள் காந்திக்கு எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. தன் இறுதிக்காலம் வரை சமூகசேவைகளில் ஈடுபட்டார்.
அம்புஜம்மாள் பிறப்பு
அம்புஜம்மாள் 1899-ம்ஆண்டு, ஜனவரி மாதம் 8ம் நாள், சென்னையில் வசித்த, எஸ். சீனிவாச ஐயங்கார், ரங்கநாயகி அம்மாள் என்ற இணையருக்கு மகளாகப் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அம்புஜவல்லி. இவர்கள் குடும்பத்தில் முதல் இரண்டும் பெண்ணாக ,இருந்ததால், அம்புஜம்மாள் பிறந்ததும் , குடும்பத்தாருக்கு அவர் மீது ஏராளமான வெறுப்பு ஏற்பட்டது. மூன்றும் பெண் குழந்தையாகி விட்டதே என்பதால்தான். சமூகத்தில் அப்போது அதிகம் முற்போக்காக எண்ணங்கள் வளராத காலகட்டம். இவரது தந்தை சென்னையின் புகழ் பெற்ற வழக்குரைஞர்களுள் ஒருவர். தாய்வழித் தாத்தா பாஷ்யம் ஐயங்கார் உயர் நீதிமன்ற நீதிபதி. அது மட்டுமல்ல, அந்த காலத்தில் ஆங்கிலேயர் அல்லாத முதல் அட்வகேட் ஜெனரல் அவர்தான். அம்புஜம்மாள் பிறந்தது ஒருவசதியான குடும்பம்தான்.
பிறந்ததும் தூற்றப்பட்ட அம்புஜவல்லி
இத்தனை பாரம்பரியம், பின்னணி இருந்தும், இளமையில் அம்புஜம்மாளிடம், குவிந்த பிரச்னைகள்ஏராளம். அவர் பிறந்த சில தினங்களிலேயே அம்புஜவல்லிக்கு தோல்வியாதி வந்தது. எனவே பார்க்கவே சகிக்காமல் மிக அசிங்கமாக இருந்தார். மற்ற குழந்தைகளைப் பாசத்துடன் கொஞ்சுபவர்கள்கூட, குழந்தை அம்புஜவல்லியை நெருங்கவே பயந்தனர். அப்போது, அம்புஜம்மாளின் அக்காவும் இறந்துவிட்டார். அவரின் இறப்புக்கு அம்புஜம்தான் காரணம் என எல்லோரும் சொன்னார்கள். அந்த ஊரில், குடும்பத்தில், சமூகத்தில், மூட நம்பிக்கைகள் அதிகம் இருந்ததால், அனைவரும், அம்புஜம்மாளின் அக்கா இறப்பிற்கு, அம்புஜம்மாவின், ‘பிறந்த ராசிதான் காரணம் என்றும், அக்காவை சாப்பிட்டுட்டா’ என்றும் ஏசினார்கள்; அவரை ஒதுக்கினார்கள்.
குழந்தையிலேயே தனிமை
சென்னை வெயில் ஒத்துக்கொள்ளாததால்தான், குழந்தைக்கு தோல் வியாதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அம்புஜவல்லியை பெங்களூரில் உறவினர் இல்லத்தில் கொண்டு விட்டனர். அங்குதான் அதன்பின்னர் அம்புஜம்மாள் வளர்ந்தார். தோல்நோய் குணமாகியதும் சென்னைக்கு வந்தார். இதற்கிடையே, அவரின் அன்னை ரங்கநாயகிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஷம். அம்புஜம்மாளுக்கும் தம்பி வந்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. அவருக்கு கால் ஊனம். இருப்பினும் ஆண் குழந்தையை எல்லோரும் கொண்டாடினர் . அம்புஜம்மாளை யாரும் சீண்டக்கூட இல்லை. அம்புஜம்மாள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஆண்பெண் பாகுபாடு
படித்தவர்கள், உயர் வகுப்பினர் என்றாலும் அங்கும் ஆண் பெண் பாகுபாடு இருந்தது. மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை திட்டமிட்டு மறந்து விடுவார்கள். அம்புஜவல்லி சிறிய வயதில் குதிரைச் சவாரி செய்திருக்கிறார்.. குதிரையின் மேல் லேடீஸ் சேணம் பூட்டி உட்கார்ந்து கொண்டு, லகானை பிடித்துக் கொண்டு செல்வார். குதிரையை வேகமாக ஓட்டிச் சவாரி செய்ததில்லை.
இளமைக்காலம்
அம்புஜம்மாளுக்குப் பிறகு பிறந்த தம்பி பார்த்தசாரதிக்கு ஏழு வயதாகும்போது, அவனை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால், மூத்தவள் அம்புஜம்மாளை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். அது அவரை மிகவும் பாதித்து விட்டது. ஆனால் அக்கால வழக்கப்படி அம்புஜம்மாளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அம்புஜம்மாள் தான் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோரை நச்சரித்தார். இவரை பள்ளிக்கு பெற்றோர் அனுப்புவே இல்லை. ஆனால் அதற்குப் பதிலாக இந்திய கிறிஸ்துவ சங்கத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியரைக் கொண்டு வீட்டிலேயே அம்புஜத்திற்கு கற்பிக்க ஏற்பாடு செய்தனர். ஆனாலும் அவர் கொடுத்த கல்வியில், கல்வியை விட மத போதனையே அதிகமாக இருந்தது. மேலும் அவர் ஐரோப்பியர்களின் நாகரிக பழக்க வழக்கங்களையும் ஆசிரியர் அவருக்கு கற்பித்தார். அவருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாத்தியாரம்மா மாறி விடுவார். புது வாத்தியாரம்மா வந்ததும், பழைய வாத்தியாரம்மா கற்றுக் கொடுத்த பாடங்கள் சரியில்லை என்று கூறி, மறுபடியும் முதல் வகுப்புப் பாடப் புத்தகத்தையே சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பார். அத்துடன் தனித்தனியான ஆசிரியர்கள் மூலம் அம்புஜத்திற்கு தமிழ், ஹிந்தி ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருதத்தில் கல்வி போதிக்கப்பட்டது. அம்புஜம்மாளுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. எனவே அவரது பெற்றோர் அவருக்கு இசைப் பயிற்சியும் அளித்தனர். அம்புஜம் வீணை வாசிப்பதிலும் திறமையும் தேர்ச்சியும் பெற்றார்.
திருமணம்
அம்புஜம்மாளுக்கு 11 வயது ஆனதும், அந்த கால வழக்கப்படி, ஒரு திறமையான மொழியியலாளர். எஸ். தேசிகாச்சாரி என்ற வழக்கறிஞரை, 1910 ம் ஆண்டு, திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். அம்புஜம்மாளின் கணவர் தேசிகாச்சாரி, அவரது தந்தை சீனிவாச ஐயங்காரிடம் உதவி வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். திருமணத்துக்குப் பின் அம்புஜம்மாள் கணவர் வீட்டில் சென்று வாழவில்லை. கணவருடன் தாய் வீட்டிலேயே இருந்தார்.சீனிவாசா ஐயங்கார் காங்கிரஸ் அபிமானி; ராஜாஜியுடன் நெருங்கி பழகியவர். அவரது திறமையும் பல துறைகளில் அவர் செயல்பாடுகளையும் கண்ட, உயர்ந்த பிரிட்டிஷ்அரசு அவருக்கு அட்வகேட் ஜெனரல் பதவி அளித்துச் சிறப்பித்தது.
வீட்டில் மூட நம்பிக்கை
அம்புஜம்மாளின் தந்தை சீனிவாச அய்யங்கார் காங்கிரஸ் தலைவர்களிடம் நெருங்கிப் பழகுபவர். ஒருமுறை ராஜாஜி இங்கிலாந்து சென்று திரும்பினார். அவருக்கு ஒரு விருந்துக் கொடுத்தார் சீனிவாச அய்யங்கார். இதையறிந்த அம்புஜம்மாளின் பாட்டிக்குக் கோபம். ‘கடல் கடந்து போய் வந்தவருக்கு விருந்தா? நம் ஆச்சாரமே போச்சு. இனி நான் இந்த வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்’ என்று கோபித்துக் கொண்டு வெளி ஊருக்கு கிளம்பிப்போய்விட்டார். இது அம்புஜம்மாளின் மனதில் பெரிய தாக்கத்தையும் காயத்தையும் ஏற்படுத்தியது. வீணான மூட நம்பிக்கைகள் மீதும் பழக்க வழக்கங்கள் மீதும் கடுமையான கோபம் ஏற்பட்டது அம்புஜம்மாளுக்கு. தனது வாழ்க்கையும் இவர்களைப் போல் அமைந்து விடக் கூடாது என்று எண்ணினார், விரும்பினார்.
காந்தி சென்னை வருகையும், அம்புஜம் அரசியல் திருப்பமும்,
இந்த நிலையில் தான் காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்திருந்தார். அவரது இல்லத்தில் காந்திக்கு சிறந்த வரவேற்பு ஒன்றை அளித்தார் சீனிவாச ஐயங்கார். காந்தியையும் கஸ்தூரிபாயையும் நேரில் சந்தித்தார் அம்புஜம்மாள். அவர்களின் எளிமையைப் பார்த்து மிகவும் வியந்தார். அவர்கள் சேவைகளை கண்டு, தாமும் அவர்களைப் போல ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்மூலம் தேசிய உணர்வை அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து அவர்களுடன் இணைந்து,உலகப்போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு சென்னையிலிருந்து மருந்துகள், துணிகள் சேகரித்து அனுப்பினார். நிதியும் திரட்டிக் கொடுத்தனர். அப்போது அம்புஜம்மாளுக்கு பதினைந்துதான்.
ஆசையைத் துறந்த அம்புஜம்மாள்
புத்தர் பெருமான் உலகின் துன்பங்களைக் கண்டு மனம் கலங்கி முடி அரசைத் துறந்தார். தென்னாட்டிலேஸ்ரீ மான், ஸ்ரீனிவாச ஐயங்காருடைய செல்லப்பெண் அம்புஜவல்லி, அலங்கார வல்லியாக இருந்து, சிறுமி தன்னுடைய பாட்டி நகைகளைக் கூட ஆசைப்பட்டுக் கேட்ட பெண், பின்னால் அன்னை கஸ்தூரிபா, காந்தியைச் சந்திக்கிறார், அன்னையின் கைகளில் இருந்தன இரும்பு வளையல்கள். இந்தத் தோற்றம் அம்புஜம்மாளின் மனதையே மாற்றி அணிகலன்களுக்குப் பதில் அன்பை, தேசபக்தியை, தெய்வபக்தியை, சமூகநலப்பணியை எல்லாம் சேர்த்து ஆபரணங்களாக அணிந்திருக்கிறார். பின்னர் அம்புஜம்மாள் கதர் உடையணிந்து, கழுத்தில் மணிகளின் இழையைத் தவிர வேறெதுவும் அணிந்ததில்லை.
அம்புஜம்மாளின் உடல் நலம் பாதிப்பு
அம்புஜம்மாள் தேசிகாச்சாரி தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போது அம்புஜம்மாளுக்கு வயது 25. இடையில் கணவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மன நலப் பிரச்சனையும் அம்புஜத்தமாளைப் பெரிதும் பாதித்தன.அம்புஜம்மாளுக்கும் காச நோய் ஏற்பட்டது. தாயாரின் உடல் நலமும் குன்றியது. தாத்தாவும் மறைந்தார். தம்பிக்கும் காலில் பாதிப்பு ஏற்பட்டது. இல்லற வாழ்க்கையின் பிரச்சனைகளை, தந்தையின் உறுதுணையுடன் எதிர்கொண்டார்.
அன்னிபெசன்ட் சுயாட்சி இயக்கம்.
அப்போது சென்னையில் ‘இந்தியர்களுக்கு சுயாட்சி’ என்ற இயக்கத்தை துவக்கினார் அன்னிபெசன்ட் அம்மையார். அந்தக் கூட்டங்களுக்கு தந்தைக்குத் தெரியாமல் அம்புஜம்மாளும்,அவரின் சித்தி ஜானம்மாளும் சென்று வந்தார்கள். தந்தை சீனிவாச அய்யங்காருக்கு அன்னிபெசன்ட் அம்மையாரைக் கண்டாலே பிடிக்காது.அன்னிபெசன்ட் இங்கிலாந்து அரசுக்கு விரோதமாக செயல்படுவதாலும் , அப்போது இந்தியாவில் ஆங்கிலேய அரசு ஆடசி செய்ததாலும், இந்திய அரசு அன்னிபெசன்ட்டைக் கைது செய்ய உத்தரவிட்டது. ‘கைது வேண்டாம். ஊட்டியில் வீட்டுக் காவலில் வைக்கலாம்’ என்று அரசுக்கு யோசனை சொன்னார் அட்வகேட் ஜெனரலாக இருந்த சீனிவாச அய்யங்கார். இது அம்புஜம்மாளுக்குப் பிடிக்காமல் மன வேதனையுற்றார்.
அம்புஜத்தின் பணி
அம்புஜம்மாள் பின்னர் ஆசிரியராக தகுதி பெற்று, ‘சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளி’யில், பகுதி நேரமாக கற்பித்தார். 1929 முதல் 1936 வரை, சாரதா மகளிர் சங்கத்தின் குழு உறுப்பினராக இருந்தார். சகோதரி சுப்புலட்சுமியுடன் மிக நெருக்கமாக வேலை செய்தார். 1929 ஆம் ஆண்டில், சென்னை மகளிர் சுதேசி லீக்கின் பொருளாளரானார். இந்த லீக், காங்கிரசின் அரசியல் சாராத பிரிவாக இருந்தது, காந்திஜியின் சமூக மற்றும் பொருளாதார திட்டங்களை செயல் படுத்தியது.
பாரதியார் பாடல் மூலம் சுதந்திர தாகம் ஊட்டுதல்
முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் ஆங்கிலேய அரசு சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத் தடையுத்தரவு போட்டிருந்தது. அம்புஜம்மாளும் அவரது பெண்கள் சங்கமும் மார்கழி மாத பக்தி பாடல்கள் என்று சொல்லி, நாட்டுப்பற்று பாடல்களையும், இந்திய தேச உரிமை கீதங்களையும் பாடிக்கொண்டு ,சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றிவருவார்கள். முதலில் அவர்களைக் கொண்டு கொள்ளாத, கண்டுபிடிக்காத காவல்துறை, பின்னர் கண்டுபிடித்துப் பெண்கள் சங்கத்தினரைக் கைது செய்தார்கள். இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
தீவிர அரசியலில் அம்புஜம்மாள்
இரண்டாவது முறையாக காந்தி சென்னை வந்தார். அப்போதும் அவர் சீனிவாச ஐயங்கார் வீட்டில் தங்கினார். அப்போதுதான், “இந்தியப் பெண்களில் படித்தவர்கள் வெகு சிலரே. அவர்களும் குடும்பக் கடமைகளில் மூழ்கி விடுகிறார்கள். அந்தக் குறையைத் தீர்ப்பது உன்னைப் போன்ற படித்த பெண்களின் கடமை.” என்று காந்தி அறிவுறுத்தினார். அம்புஜம்மாள் அது முதல் தீவிரமாகப் பொதுச் சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தெருவெங்கும் கதர்த் துணிகளைச் சுமந்து சென்று விற்பனை செய்தார். பின்னர் அவர் ருக்மணிலட்சுமிபதி, துர்காபாய் தேஷ்முக், வை.மு.கோதைநாயகி போன்றோருடன் இணைந்து காந்திஜியின் அறிவிப்பின்படி வெள்ளையர்களுக்கு எதிராக அகிம்சை வழியில் பல போராட்டங்களில் ஈடுபட்டார். தடை செய்யப்பட்டிருந்த பாரதியின் பாடல்களைப் பொதுவெளியில் உறக்கப் பாடி ஊர்வலம் சென்றார். அந்நியத் துணிகளை எதிர்த்துப் போராட்டம், கள்ளுக்கடை மறியல் எனப் பல போராட்டங்களில் அம்புஜம்மாள் கலந்துகொண்டார்..
கள்ளுக்கடை மறியல், கைது
ஒரு சமயம் அம்புஜம்மாள் அவரது தோழிகளுடன் சேர்ந்துகொண்டு, சென்னையில் அந்நிய துணி புறக்கணிப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவருடன் போராட்டம் செய்தவர்களை கைது செய்த காவல்துறை, அம்புஜம்மாளைக் கைது செய்யவில்லை. காரணம் இவர் அட்வகேட் ஜெனரலின் மகள் என்பதுதான், ஆனால் அம்புஜம்மாள், இதனை போராட்டத்தை மேலும் தீர்மானத்துடன் தொடர்ந்து நடத்த கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதினார். எனவே அம்புஜம்மாள் 10 நாட்கள் தொடர்ந்து சைனா பஜாரில் அந்நிய துணிகள் இருக்கும் கடைகள் முன்பு போராட்டம் நடத்தினார். இந்தியாவில் மற்றும் தமிழ் நாட்டில், தேசப்பற்று உள்ள எல்லோரும் கள்ளுக் கடை மறியல், அந்நிய துணிக் கடை மறியல்,அந்நிய துணி பகிஷ்கரிப்பு என்று1932ம் ஆண்டு, தேசம் காக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு பலர் சிறைக்குச் சென்றனர். இவருடன் இவரது சித்தியான ஜானம்மாளும் கலந்து கொண்டார். இதனைத் தடுப்பதற்காக, காவல் துறையினர், இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடை தண்ணீரை பீச்சி அடித்தனர். ஆனாலும் அச்சம் இல்லாமல் அருவருப்பில்லாமல் இருவரும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்புஜம்மாளின் சிறை வாழ்க்கை.
அந்நியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்புஜம்மாள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர், கல்வி அறிவில்லாத பெண்களுக்கு தமிழும், தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொடுத்தார். பெண்கள் சுயமாக நிற்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தையல், பூ வேலை போன்ற கைத் தொழில்களைப் பயிற்றுவித்தார்.
சரோஜினி வரதப்பனுக்கு ஆசான்
தமிழக முதலமைச்சரான எம்.பக்தவத்சலத்தின் மகளும், சமூக ஆர்வலருமான சரோஜினி வரதப்பனுக்கு, அம்புஜம்மாள் வழிகாட்டியாக இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு சென்னை, இராணிப்பேட்டை ஹை ரோடில், ஒரு சிறிய அறையில், இருவரும் இலவச இந்தி வகுப்புகளை, நடத்தினர். 1934 முதல் 1938 வரை இந்தி பிரச்சார சபாவின் நிர்வாகக் குழுவில், அம்புஜம்மாள் இருந்தார். இந்திக்காக நிறைய பிரச்சார வேலைகளை செய்தார். இந்தி பிரச்சார சபாவுடனான அவரது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 1934 இல், பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார்
காந்தியின் தத்துப்பெண்
சிறையிலிருந்து விடுதலையான பின், அம்புஜம்மாளும், அவரின் சித்தி ஜானம்மாளும், மீண்டும் கதர் விற்பனை, காங்கிரஸ் கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர் . வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர் அம்புஜம்மாள். அதன் பின்னர் அம்புஜம்மாள், மும்பை காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று காந்திஜியைக் கண்டு மகிழ்ந்தார். இவர் “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்பட்டார்.
காந்தியின் கடிதம்
காந்திஜி, அம்புஜம்மாவிடம்,”உங்கள் கடிதத்தைப் படித்ததில், நான் மகிழ்ச்சி அடைந்தேன். நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் கடிதத்தைப் பார்த்தது, ஒரு தந்தை தனது மகளைப் பார்த்த போது அனுபவித்த மகிழ்ச்சியை எனக்கு அளித்தது…. ஏன் உங்கள் மனம் கவலைப் படுகிறது. எனக்கு எழுதுங்கள்” பாபுவின் ஆசீர்வாதம்…காந்திஜியிடமிருந்து, இந்தக் கடிதத்தைப் பெற்ற போது, அம்புஜம்மாள் வயது 36..
அதன்பின்னர் அம்புஜம்மாள் , காந்திஜிக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது அவரின் பெயர் அம்புஜவல்லி என்ற பெயர் நீளமாக இருப்பதாகக் கூறி, அம்புஜம் என சுருக்கி அன்போடு காந்திஜி அழைக்கத் துவங்கினார். காந்திஜியின் அருகில் அமர்ந்து கொண்டு அவருக்கு விசிறிக் கொண்டிருப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதிலும், அம்புஜம்மாளுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. நமது தேசம் சுதந்திரம் அடைய மகாத்மா எடுத்த கடைசி ஆயுதமான “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பரவிக் கொண்டிருந்த காலம் 1942-ல் தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட புயல் வீசியது.
வார்தா ஆசிரமம்
காந்திஜியின் இணையர் அன்னை கஸ்தூரிபாவின் எளிமையான் தோற்றத்தால் கவரப்பட்டு, காங்கிரஸ் மாநாடு முடிந்த பின்னா, அம்புஜம்மாள் சென்னை திரும்பும் போது, நவம்பர் 1_ஆம் தேதி ‘வார்தா’ ஆசிரமத்திற்கு வர முடியுமா? என்று காந்திஜி அம்புஜம்மாளிடம் கேட்டார். அதற்கு அம்புஜம்மாள் கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘ஓ கட்டாயம் வருகிறேன்’ என்று கூறிவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தவுடன், காந்திஜி வார்தா ஆசிரமத்துக்கு அழைத்ததை அம்புஜம்மாள் தந்தையிடம் அனுமதி கேட்டபோது, தந்தையார் பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் அம்புஜம்மாள் தன வீட்டுக்குள்ளேயே,மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதன்பின்னர்தான் அவரது பிறகு பெற்றோர் சம்மதித்தனர் . பிறகு அம்புஜம்மாள் வார்தா ஆசிரமத்துக்குச் சென்றார். பின் தந்தையார் மறைந்த போது மட்டுமே சென்னை திரும்பினார்.
அம்புஜம்மாளின் திறமை.. புலமை
அம்புஜம்மாள் பள்ளியில் சேர்ந்து நன்கு படித்து முறையாகத் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கூட, தமது சொந்த முயற்சியாலும், மீளா ஆர்வத்தினாலும், தானாகவே படித்து புலமை பெற்று விளங்கினார். அம்புஜம்மாள் பல இந்தி கதைகளை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, துளசி ராமாயணத்தை இசையுடன் பாடக் கற்றுக் கொண்டு, அனைவருக்கும் பாடி மகிழ்வித்தார். வடநாட்டு கிராம மக்களிடையே, பேச்சு வழக்காக உலவி வந்த, பிரபலமாகியிருந்த துளசி ராமாயணப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி அம்புஜம்மாளிடம் கூறியிருந்தார் காந்திஜி. அவர் சொன்னபடி துளசி ராமாயணத்தின் முதல் இரண்டு காண்டங்களை வசன நடையில் மொழி பெயர்த்தார் அம்புஜம்மாள்.
பதவிகள் பலப்பல
அம்புஜம்மாள், 1939 முதல் 1942 வரை செயலாளராகவும், 1939 முதல் 1947 வரை பொருளாளர் பதவியையும் வகித்து, மகளிர் இந்திய சங்கத்தின் (டபிள்யூ.ஐ.ஏ), குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில், அவர் பேசிய பிரச்சினைகள்: குழந்தை திருமணம் ஒழிப்பு, பலதார மணம் ஒழிப்பு,தேவதாசி அமைப்பு ஒழிப்பு , பெண்களின் உரிமைகளையும் அவர்களின் சொத்து உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வருதல்
தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம்
வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தை பிரபலபடுத்த, அவருடன் தமிழ்நாட்டில், 1956 இல் சுற்றுப் பயணம் செய்தார், அம்புஜம்மாள். கிராம தன்னிறைவு மாதிரியை நம்பினார். அதனை பரிந்துரைத்த படி, 1930ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப் பட்டார். 1957 முதல் 1962 வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், 1957 முதல் 1964 வரை மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.
மகளிர் இந்திய சங்கத்தின் சார்பில், சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப் பட்டார். 1947 ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மகளிர் மாநாட்டின் போது, வரவேற்புக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டார்
கல்வி நிலையம்
காந்திஜி விரும்பியபடி அம்புஜம்மாள், சென்னையில் பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார். பின் அதற்காக ஏற்கெனவே தமது சொந்த செலவில் தமது சகோதரனின் மனையில் ரூ.15,000 செலவில் கட்டி முடித்தார். தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார். அது இன்றுவரை தொடர்ந்து பணியாற்றுகிறது.
பதவிகள்
இந்திய சுதந்திரத்துக்கு பின் அம்புஜம்மாள் காங்கிரஸிலும் காங்கிரஸ் அரசியலிலும் பதவிகள் வகித்தார். 1955 ஆம் ஆண்டு, சென்னை, ஆவடியில் நடைபெற்ற சிறப்புமிக்க காங்கிரஸ் மாநாட்டின் செயலாளராக இருந்து அம்புஜம் அம்மையார் அரும்பாடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநிலத் துணை தலைவர் – தமிழ்நாடு காங்கிரஸ் குழு (1957 – 1962)
மாநில சமூக நல வாரியம் (சேர்மன்) (1957 – 1964)
எழுத்தாளர் அம்புஜம்மாள்
அம்புஜம்மாளின் முதல் படைப்பான ‘அவர் எங்கே இருப்பார்?’ எனும் சிறுகதை 1940-ல் கலைமகள் இதழில் வெளியானது. குறிப்பிடத்தகுந்த நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதிகம் சிறுகதை எழுதியதில்லை.
அம்புஜம்மாள் வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க துளசி ராமாயணத்தின் முதல் இரண்டு காண்டங்களைத் தமிழில் வசன நடையில் மொழி பெயர்த்தார். இதுவே இவரது முதல் மொழிபெயர்ப்பு முயற்சி. கே.எம் முன்ஷி எழுதிய நூலை ‘வேதவித்தகர் வியாசர்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். அம்புஜம்மாள் ‘சேவாசதன்’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். அது பின்னர் திரைப்படமாகவும் வெளியாகிப் புகழ் பெற்றது. இதில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்தார்.
மகாத்மா காந்தி நினைவு மாலை என்ற நூல்
கலைமகள், கல்கி, பாரதமணி போன்ற இதழ்களுக்குப் பல கட்டுரைகளை எழுதினார். அம்புஜம்மாளின் கதைகள் நேரடியான கருத்துரைப்புத் தன்மை கொண்டவை. தமிழில் காந்தியை நேரடியாக அணுகி அறிந்து எழுதப்பட்ட ஒரு சில நூல்களேஉள்ளன. அவற்றில் அம்புஜம்மாள் எழுதிய மகாத்மா காந்தி நினைவுமாலை முக்கியமானது.. காந்தி அம்புஜம்மாளுக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. தனது குருநாதரான காரைச்சித்தர் பற்றிய வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.
அம்புஜம்மாள் தன் தந்தையார் பற்றி, ‘என் தந்தையார்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். தன் வாழ்க்கை அனுபவங்களைத் தனது எழுபதாம் வயதில் “நான் கண்ட பாரதம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார். அம்புஜம்மாள் தினமணி காரியாலயம் வெளியிட்டு வந்த இலக்கிய நூல்களுக்கு ஆலோசனையாளராகப் பணிபுரிந்தார்.
விருதுகள்
* இந்திய அரசு அம்புஜம்மாளுக்கு 1964-ல் ‘பத்மஸ்ரீ’ பட்டம் வழங்கியது.
* தமிழகஅரசு சென்னையில் உள்ள சாலை ஒன்றிற்கு அம்புஜம்மாள் பெயரைச் சூட்டியுள்ளது.
மறைவு
தன் இறுதிக் காலம் வரை தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்புஜம்மாள், 1983-ல், தனது 82-ஆம் வயதில் காலமானார்.
நூல்கள் பட்டியல்
- என் தந்தையார்
- மகாத்மா காந்தி நினைவு மாலை
- நான் கண்ட பாரதம்
- மொழிபெயர்ப்பு
- வேதவித்தகர் வியாசர்
- சேவாசதன்
- சிறுகதைகள்
- அவர் எங்கே இருப்பார்?
- இவரைப்பற்றிய நூல்:அம்புஜம்மாளின் வாழ்க்கையை எழுத்தாளர் வசுமதி ராமசாமி எழுதியுள்ளார்.
Ref:
- https://ta.wikipedia.org/wiki
- https://en.wikipedia.org/wiki/Ambujammal
- https://www.tnpscjob.com/tnpsc-tamil-ambujathammal/
- https://bookwomb.com/naan-kanda-bharatham.html
- https://mediyaan.com/ambujammal-freedom-fighter/
- https://thecommunemag.com/ambujammal-the-ardent-swadeshi-buried-in-the-pages-of-history/
- http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12647
- https://tamil.wiki/wiki
- https://www.dinamani.com/specials/kalvimani/2014/nov/23/TNPSC-IV1017719.html
- http://tnpsctamilnotes.blogspot.com/2014/08/blog-post_97.html
- https://brightzoom.blogspot.com/2018/08/blog-post_54.html
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 9 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 1 பேரா.பு.அன்பழகன்
இந்தியாவில் 1960களிலே பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் சீர்திருத்தங்கள் முழு வீச்சில் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்திரா காந்தி பிரதமரானதும் தொழில் தொடங்க உரிமம் பெறும் கட்டுப்பாடுகளையும், தொழில் முற்றுரிமை கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். அடுத்து பிரதமராகப் பதவி வகித்த ராஜீவ் காந்தி தொழில் துறையின் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது, செலாவணி மாற்றில் இணக்கத் தன்மை, இறக்குமதி மீதான பகுதி அளவில் கட்டுப்பாடுகளை நீக்கியது எனப் பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. போபர்ஸ் உழல் பிரச்சனை எழுந்ததன் காரணமாக ராஜீவ் காந்தியின் சீர்திருத்தங்ளுக்குப் போதுமான சாதகமான சூழல் காணப்படவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் நிலையற்ற அரசியல் மற்றும் குழப்ப நிலையினால் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இவருடைய காலகட்டங்களில் முன்பு எப்போதும் கண்டிராத அளவிற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் வற்றிய நிலையிலிருந்தது. இதனை எதிர்கொள்ள அடுத்துப் பிரதமராகப் பதவி ஏற்ற நரசிம்ம ராவ் பல்வேறு பொருளாதார சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டார். சீனா, 33 ஆண்டுகளுக்கு முன்பு (1978ல்) பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. சோவியத் யூனியன் 1980களின் மத்தியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. ஆனால் இந்தியா இச்சீர்திருத்தங்களை மேற்கொள்ள காலதாமதமானது. மேற்கண்ட நாடுகள் போன்ற அரசியல் முறையை இந்தியா பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேருவின் சோசியலிச சித்தாந்த முறையை இந்தியா நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தது. ஒரு நிலையில் உலக நாடுகள் பலவும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை பின்பற்றத் தொடங்கியது. எனவே இந்தியா இந்த முறைக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகியது. இந்தியா சுதந்திரம் அடைந்து 44 ஆண்டுகள் கடந்த நிலையில் சந்தைச் சீர்திருத்தங்கள் 1991ல் நடைமுறை படுத்தப்பட்டது.
மே 1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இத் தேர்தலில் காங்கிரஸ் 232 இடங்களில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரையில் பிரதம மந்திரியாக பதவியிலிருந்தார். நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றபோது இந்தியாவின் வெளிநாட்டு கடன் அரசுக்கு பெரும் சுமையாக இருந்தது. இந்தியாவின் கடன் 1991ல் 70 பில்லியன் டாலராக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு அடுத்து வந்த இருவாரங்களுக்கே போதுமானதாக இருந்தது. இதைத் தவிற்று வளைகுடா போரினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்ததால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு உயர்ந்தது. பணவீக்கம் மிகவும் அதிக அளவிலிருந்தது. இந்தியாவில் நிலையற்ற அரசு நடைபெற்றதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள தொடங்கினர். இது மேலும் சிக்கலை உருவாக்கியது. எனவே இந்த நிலையினை எதிர்கொள்ள அனுபவம் மிக்கப் பொருளியல் அறிஞரான மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்த இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது (அரசியல் ரீதியான சவால்களை நரசிம்ம ராவ் எதிர்கொண்டார்). இதன் அடிப்படையில் அதிக வெளிப்படைத்தன்மையும், குறைவான பொருளாதாரக் கட்டுப்பாடும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை மன்மோகன் சிங் முன்னெடுத்தார். முதல் முயற்சியாக இரு முறை பண மதிப்பு குறைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி முக்கிய வெளிநாட்டுச் செலாவணியுடன் இந்தியப் பணத்தின் மதிப்பை 9 விழுக்காடு குறைப்பினை ஜூலை 1, 1991அன்றும், மேலும் 11 விழுக்காடு மதிப்புக்கு குறைப்பினை ஜூலை 3, 1991அன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக இந்தியாவின் ஏற்றுமதியினை அதிகரிப்பதாக இருந்தது. ஜூலை 4-18, 1991ல் நான்கு கட்டங்களாக இந்தியா, இங்கிலாந்து வங்கியில் தங்கத்தை அடைமானம் வைத்து 400 மில்லியன் டாலர் கடன் பெற்றது. இதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வர்த்தக கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி உரிமம் பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. தேவையற்ற பொருட்கள் இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்க பணமதிப்பினைக் குறைத்தது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்பட்டது. இறக்குமதிக்கான ஒதுக்கீட்டு அளவு (quotas) விலக்கிக்கொள்ளப்பட்டது, சுங்க வரி குறைக்கப்பட்டு ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, அந்நிய நேரடி முதலீடு வரவேற்கப்பட்டது. இதன்படி 51 விழுக்காடுவரை தங்குதடையற்ற முதலீட்டிற்கான ஒப்புதலுக்கு வழி வகுத்தது. இதுபோன்று உள்நாட்டில் உரிமம் பெறும் நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுத்துறை விரிவாக்கம் ஊக்குவிக்கப்படவில்லை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விழுக்காடு அளவிற்கு நிதிப் பற்றாக்குறையாக இருந்தது இதனைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிறுவன வரியை 45 விழுக்காடு அதிகரித்தது. சமையல் எரிவாயு உருளை, உரம், பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது, சர்க்கரைக்கு அளிக்கப்பட்ட மானியம் விலக்கிக் கொள்ளப்பட்டது (Ramya Nair 2021).
1991 ஜூலை புதிய தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தொழில் உரிமம் பெறும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் சில குறிப்பிட்ட தொழில்களுக்கு விதிவிலக்கு இருந்தது. முற்றுரிமை வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை சட்டத்தில் தளர்வு அளிக்கப்பட்டது. பொதுத்துறை முற்றுரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது போல் தனியார்த் துறை முற்றுரிமைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது (Ramya Nair 2021). 1991வது தொழிற் கொள்கையானது இந்தியாவில் எளிமையாக வாணிபம் செய்ய வழிவகை செய்தது. பணித்துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. காப்பீட்டுத் துறை, வங்கி, தகவல் தொடர்பு, வான்வழிப் போக்குவரத்து, போன்றவை மீது தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. அதே சமயம் தொழிலாளர்ச் சட்டங்கள் வளைந்து கொடுக்கும் நிலை உருவானது. அரசியல் ரீதியாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குக்கா கட்சிக்கு உள்ளேயும், வெளியிலும் கடுமையான எதிர்ப்பு உருவானது. ஆனால் இவற்றைத் திறமையாக நரசிம்ம ராவ் எதிர்கொண்டார். சுருக்கமாகக் குறிப்பிட்டால் இந்து வளர்ச்சி வீதம் (3.5 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள பொருளாதார வளர்ச்சி) என்ற நிலையினை 1950களிலிருந்து – 1970கள் வரை காணப்பட்டது. இதனை மீட்டெடுக்க 1980களில் வர்த்தக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டது. 1990களில் சந்தைச் சார்பான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் 2000ஆம் ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது (Ramachandra Guha 2017).
அட்டவணை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு)
ஆண்டு | மொத்த உள்நாட்டு உற்பத்தி | தாலாவருமனாம் |
1972-1982 | 3.5 | 1.2 |
1982-1992 | 5.2 | 3.0 |
1992-2002 | 6.0 | 3.9 |
Source: Ramachandra Guha (2017): “India After Gandhi,” Macmillan, New Delhi.
1991ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது நிதி அமைச்சரான மன்மோகன் சிங் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதற்கான முக்கியக் காரணம் சோவியத் ஒன்றியதில் மிக்கைல் கோர்பச்சோவ் கொண்டுவந்த பெரெஸ்த்ரோயிக்கா என்ற மறுசீரமைப்பு கொள்கையினைப் பின்பற்றி இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தில் 1991ன் படி 80 விழுக்காடு தேசிய உற்பத்தியில் தனியாரிடமிருந்து பெறப்படுகிறது ஆனால் இது சோவியத் ரஷ்யாவில் காணப்படவில்லை. எனவே இந்தியா தனி அடையாளக் கொள்கையினை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நிய முதலீடுகள் தேவைப்பட்டது எனவே இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவில் பெரும் தொழில் நிறுவனங்களை ஒழுங்கு படுத்த MRTP சட்டம் 1969ல் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான அனுமதி பெறுவது நீக்கப்பட்டது. இந்தியா உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் நுழைவதற்காக சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்பட்டது, நடப்பு கணக்கு பரிமாற்றம், வர்த்தக நிலையினைத் தீர்மானிக்க சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. அந்நிய நேரடி முதலீடு, போர்ட்ஃபோலியோ முதலீடுகள் வருவதற்கு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. சந்தை அடிப்படையில் செலாவணி மாற்று செயல்படுத்தப்பட்டது, வர்த்தகம் தாராளமயமாக்கப்பட்டது, தொழிற்சாலைகளுக்கு தேவையானதைத் தடையற்ற முறையில் இறக்குமதி செய்துகொள்ளுதல், தொழில் உரிமம் ரத்து செய்தல், பொதுத் துறையில் சீர்திருத்தம், மூலதனச் சந்தை மற்றும் நிதித் துறையில் சீர்திருத்தம், பன்னாட்டு நிறுவனம் மற்றும் அந்நிய முதலீடு பெறுவதிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் ஒட்டுமொத்த நோக்கம் இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுப்பதாகும்.
பொருளாதாரம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் விதிவிலக்காக ரயில்வே, துறைமுகம், பாதுகாப்பு மற்றும் அணு ஆற்றல் இருந்தது. நுகர்வோர்களுக்குச் சாத்தியப்படக்கூடிய நன்மைகள் கிடைக்கச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டு சீர்திருத்தமானது உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க முற்றிலுமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பகுதியாக அந்நியச் செலாவணி பொதுச் சந்தையில் மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. லாபம் தரும் மூலதன வரவு கட்டுப்படுத்தப்பட்டது. அதேசமயம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை. உலக வர்த்தக அமைப்பின் கீழ் வந்த நடைமுறையில் வர்த்தக அளவு கட்டுப்பாட்டு முறை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்தியா உலக அளவிலான தாராளப் பொருளாதார மயமாக்கலின் கொள்கையின் ஒரு பகுதியாகச் செயல்பட்டது. இதன் விளைவு இந்தியா மிகவும் திறனுடன் வேகமான வளர்ச்சியினை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு, இந்திய பொருளாதாரம் விரைவாக மீண்டெழுந்தது. 1991-92ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.8 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது 1992-93ல் 5.5 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியது, 1993-94ல் 6.2 விழுக்காடு என மேலும் அதிகரித்தது. எட்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியினை கண்டது. முதலீடு, தொழில் துறை, வேளாண்மை, பணித்துறை போன்றவை வளர்ச்சிப் பாதையில் சென்றது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97களுக்கிடையே ஆண்டுக்குச் சராசரியாக 3 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது. ஆனால் இது தொழில் மற்றும் பணித் துறையினை ஒப்பிடும் போது குறைவான அளவிற்கே பதிவாகியிருந்தது. 1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே நேரடி அந்நியச் செலாவணி முதலீடானது 100 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1992-93க்கு முன்பு இந்தியாவின் சில பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாகக் கிராமப்புறங்களில் வறுமை அதிகரித்திருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே வறுமையின் அளவு 6 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்திருந்தது. 1993-1998ஆம் ஆண்டுகளுக்கிடையே சமூகச் செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் வேளாண் கூலியானது 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதே ஆண்டுகளில் இந்தியாவின் வேலைவாய்ப்பானது ஆண்டுக்கு 6.3 மில்லியன் அதிகரித்தது. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றபோது பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது ஆனால் பணக் கொள்கைகள் மற்றும் நிதி சீர்திருத்தங்களினால் 1996ல் 5 விழுக்காடாக்க குறைக்கப்பட்டது. உணவுப் பொருட்களுக்கான மானியம் 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.14 மில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35 பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் பயிர்செய்யும் நிலங்கள் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயனடைந்தனர்.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் 2003-04 முதல் 2008-09 முடிய இந்தியா இதுவரைக் கண்டிராத வளர்ச்சியினை எட்டியது (10 விழுக்காடு). சேவைத்துறையானது மற்றத் துறைகளைக் காட்டிலும் அபரீதமான வளர்ச்சியினைக் கண்டது. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிற் கொள்கையானது சேவைத்துறையினை வேகமான வளர்ச்சியினை எட்டுவதற்கு உதவியது. 2008க்கு பின்பு உற்பத்தித் துறையின் வளர்ச்சி மிகவும் குறைவான அளவிலிருந்தது. வேளாண்மைத் துறையினை பொருத்தமட்டில் ஏற்றத்தாழ்வுடனான வளர்ச்சி பதிவாகியிருந்தது. உணவு உறுதியானது மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உணவு கையிருப்பு குறைந்திருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையானது சேவை மற்றும் தொழிற் துறைகளுக்குச் சாதகமாகவும் வேளாண்மைத் துறைக்கு எதிராகவும் இருந்தது. அதே சமயம் வர்த்தக, தொழிற்கொள்கைகளின் சீர்திருத்தத்தினால் வர்த்தக நிலை மேம்படுத்துவதாகவும், இது வேளாண்மையினை நோக்கியதாக இருந்தது. இதனால் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையினை இந்தியா தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிலைகளில் பெருமளவிற்கு நன்மைகளை உண்டாக்கியிருந்தது. இதன் விளைவு வேளாண் வளர்ச்சியானது 1991லிருந்து சீரற்ற போக்கு காணப்படுகிறது. சராசரி உற்பத்தியானது மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இல்லை. உலகளவில் தலா உணவு நுகர்ச்சி அளவினைவிடக் குறைவாக உள்ளது. குடும்பங்களின் சராசரியாக உணவிற்குச் செலவிடுவது உலக அளவில் உள்ள பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகரித்து பணவீக்கத்திற்கான காரணமாக உருவெடுத்தது. இது ஏழை மக்கள் அதிகமாக பாதிப்பிற்கு உண்டாக்கியது. தற்போது வருமையினைக் கணக்கிடுவதில் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உணவு மட்டுமல்லாமல் சமூகக் காரணிகளும் (கல்வி, சுகாதாரம்) கணக்கில் கொண்டு வறுமையினை அன்மைக் காலமாக அளவிடப்படுகிறது. இதனைக்கொண்டு பார்க்கும்போது, வறுமையில் வாழ்ந்தவர்கள் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பெரும் ஏற்றத் தாழ்வுடன் உள்ளது என்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்துகிறன. பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் சமுதாயத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே பயன் பெற்றுள்ளனர். அதேசமயம், மக்களிடையே பெரும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகிறது (Thomas Piketty). சில பொருளியல் அறிஞர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு 1991லிருந்து வறுமையானது அதிக அளவில் குறையத் தொடங்கியது என்று குறிப்பிடுகின்றனர்.
(தொடரும் ……)
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 7 ராஜீவ் காந்தியும் மஞ்சள் புரட்சியும் – பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ராஜீவ் காந்தி ஆவார். அக்டோபர் 31, 1984ல் இந்திரா காந்தி இறந்ததை அடுத்து பிரதமராகப் பொறுப்பேற்றார். ராஜீவ் காந்தி அமெரிக்கக் காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போது “நான் இளைஞன், எனக்கு ஒரு கனவு உண்டு, அது இந்தியாவை வலுவான, சுதந்திரமான தன்னம்பிக்கை அடிப்படையில் வளர்ந்து உலக நாடுகளில் முன்வரிசைக்குக் கொண்டு செல்வதற்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்” என்றார். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியினை அடைய அனைத்து துறைகளின் மேம்பாட்டின் அவசியம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உண்டாக்கவேண்டும் என்றார். ராஜீவ் காந்திக்கு முன்பாக 35 ஆண்டுகளாக இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த பெரிய மாற்றமும் அடையவில்லை. எனவே மக்களின் அடிப்படைத் தேவைகளை அளிக்கத் தொழில்நுட்ப மாற்றங்கள் வழியாக இவற்றை அளிக்க முற்பட்டார். தகவல் தொழில்நுட்பம் இவற்றிற்கான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி, தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் மென்பொருள், அணுக்கரு வளர்ச்சி, பாதுகாப்பு, ஆயுத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பயங்கர வாதத்தை ஒழிப்பது, ஏழை-பணக்காரர் பேதத்தை அகற்றுதல், அமைதியான வாழ்வினை உறுதி செய்தல், கல்வி மேம்பாடு, சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், வேளாண் வளர்ச்சி, தொழில் மேம்பாடு, சுயச்சார்பு இந்தியாவினை உருவாக்குதல், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு, நீதி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்தினார். இதற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நாட்டின் இறையாண்மையையும் நல்லிணக்கத்தையும் காக்கக் கல்வி அவசியம் என்று உணர்ந்த ராஜீவ் காந்தி புதிய கல்வி முறையினைக் கட்டமைத்தார். இனம், ஜாதி, பிறப்பு வருணம், பாலினம், செல்வம், போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி சமூக நீதியினை நிலைநாட்ட ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘நம்முடைய முதன்மைக் குறிக்கோள் வறுமையினை ஒழிப்பது, சமூக நீதி மற்றும் சுயச்சார்பினை தோற்றுவிப்பதாகும்”. என்றார். பட்டியல் இனத்தவர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்து பெண்களுக்கான அதிகாரம் அளிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது (Shasi Skumar shingh 2021).
ராஜீவ் காந்தி பிரதம மந்திரியானதும் வி.பி.சிங்கை நிதி அமைச்சராக்கினார். மார்சு 1985ல் தாக்கல்செய்யப்பட்ட நிதி அறிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கினார், வர்த்தகத்தில் இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, இயந்திரத் தளவாடங்கள் உற்பத்தி, நூற்பாலைகள், கணினி உற்பத்தி, மருந்து உற்பத்தி போன்றவற்றை பெருக்க எளிமையான உரிம முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தனிநபர் வரி, நிறுவன வரி குறைக்கப்பட்டது. இம்முயற்சியினால் நாட்டின் உற்பத்தி பெருகியது. நடுத்தர மக்களும், வணிகர்களும் இதனால் அதிகம் பயனடைந்தனர். ஆனால் இடதுசாரி இயக்கங்கள் அரசின் முயற்சிகள் பணக்காரர்களுக்குச் சாதகமானது என்று குறிப்பிட்டது. அரசின் புதிய முயற்சியினால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் நுகர்வுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையானது. தொழில் துறை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் ராஜீவ் காந்தி ஆட்சியில் பயனடைந்தனர். வறுமை பெருமளவிற்குக் குறைந்தது. அதேசமயம் நாட்டின் சில பகுதிகளில் மழை பொய்த்ததன் காரணமாக வேளாண்மை தோல்வியைக் கண்டு பட்டினி சாவுகள் காணப்பட்டது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாட்டின் முக்கிய விவசாயத் தொழிற்சங்கங்களான ஷேத்காரி சங்கதனா (மகாராஷ்டிரா மாநிலம்), இந்திய விவசாயச் சங்கம் (பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள்) துவக்கப்பட்டது (Ramachandra Guha 2017).
கணினி தொழில்நுட்ப வளர்ச்சியினை ஏற்படுத்த அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டு அடிப்படையில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டைச் சென்றடையச் செய்தார். 1984ல் கணினி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி, மென்பொருள் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியது. 1986ல் கணினி மென்பொருள் ஏற்றுமதி, வளர்ச்சி மற்றும் பயிற்சி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன் விளைவு இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியானது ரூ.100 கோடியாக 1988ல் அதிகரித்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மென்பொருளின் பங்களிப்பு அதிகரித்தது. 1990களில் தகவல் தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் பரந்து வளர்ந்தது. ராஜீவ் காந்தி இதனால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தந்தையாகக் கருதப்படுகிறார்.
நடுத்தர மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியா இதற்கு முன்பு மகாலநோபிசின் உத்திகளை அடிப்படையகாகக் கொண்டு மூலதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கிலே இருந்தது. நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி செய்வதற்கு எந்தவிதத்திலும் ஊக்கமளிக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்யத் தனியார் துறை சிறந்ததாக இருக்கும் என்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டது. தனியார் முதலீடுகள் கொண்டுவர அதற்கான சூழலை உருவாக்கினார். இதற்காக வரிகள் குறைக்கப்பட்டது, முதல் முயற்சியாக இடுபொருட்களின் மீதான மறைமுக வரியும் குறைக்கப்பட்டது. தொழில் தொடங்க உரிமம் பெறும் முறை ரத்து செய்யப்பட்டது. 1987ல் இந்தியப் பத்திரங்கள் மற்றும் மாற்றுக் கழகம் உருவாக்கப்பட்டது. பங்குச் சந்தை முறைப்படுத்தப்பட்டது. தகவல் தொடர்பு அனைவருக்கும் குறிப்பாகக் கிராமப்புறங்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதற்காகத் தனியார்த் துறை முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. இதனால் வேளாண்மைத் துறை பயன் அடைந்தது.
இந்தியாவை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய முதலீடு தேவையின் அவசியத்தை உணர்ந்தவர், இறக்குமதி மீதான காட்டுப்பாட்டை விலக்கிக்கொண்டார். இந்தியாவின் முக்கியத் துறையான வேளாண்மையினை வேகமாகவும் சீராகவும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகப் பசுமைப் புரட்சியினை மழைமறைவுப் பகுதிகளில் விரிவாக்கம் செய்தார். இதற்காக எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியினை மேம்படுத்தத் தொழில்நுட்ப இயக்கம், பருப்பு வகைகளை உற்பத்தி செய்யத் தேசிய திட்டத்தை முன்னெடுத்தார்.
ராஜீவ் காந்தி காலத்தின் முக்கியமாக வறுமை, பசியின்மை, ஆகியவற்றினை போக்க மாநிலங்களுக்கு இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட வலியுறுத்தப்பட்டது. வறுமையில் வாழ்பவர்களுக்குக் குடியிருக்க வீடு கட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகத்தில் பொருளாதார அளவில் நலிவுற்றவர்களுக்கு வீடுகட்டித்தருதல், குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவு நீர் வெளியேற்றம், குளியல் அறை, கழிப்பறை, சாலை விளக்குகள், போன்ற வசதிகள் செய்து தரப்பட்டது (Prabhaakaran 2008). இதற்கு அடித்தளமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு வங்கிக் கடன், இறக்குமதித் தீர்வையை குறைத்தல், மென்பொருள் ஏற்றுமதி, தொழில் தொடங்க அனுமதி ரத்து, அயல் நாட்டு நிறுவனங்களைத் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது, கணினி ஏற்றுமதிக்குச் சிறப்பு மண்டலங்களை அமைப்பது போன்றவற்றை முன்னெடுத்தார்.
ராஜீவ் காந்தி இந்திய அரசின் அதிகாரிகள் சாமானிய மக்களுக்கு எதிராகவும் பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள் போன்றவர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் எனவே இவர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது என்ற கருத்திலிருந்தார். இந்த நிலையினைப் போக்க அதிகாரத்தைப் பரவலாக்கக் குறிப்பாகக் கிராமப்புறங்கள் மேம்பாடு அடைய உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.
வேளாண்மையின் வளர்ச்சிக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1980களில் முதன் முதலாக இந்தியாவில் வறுமை குறையத் தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் அடைந்த உயர் வளர்ச்சியாகும். 1991க்கு பிறகு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வர்த்தகம், தொழில், நிதி துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை மூன்றும் நகர்ப்புறங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதனால் 1991க்கு பிறகு நகர்ப்புற வறுமை குறையத் தொடங்கியது. கிராமப்புறங்களில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு (வேளாண் விளைபொருட்கள் உட்பட) நர்புறங்களில் இதற்கான தேவையை அதிகரித்தது இது கிராமப்புற மக்களின் வருவாயினை உயர்த்தி வறுமையின் தீவிரத் தன்மையினைக் குறைந்ததது. 2004-05 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புற வறுமை 15 விழுக்காடு குறைந்தது இது நகர்ப்புறங்களில் 5 விழுக்காடாகக் காணப்பட்டது (Pulapare Balakrishna 2022). இதற்கான அடித்தளத்தை ராஜீவ் காந்தியால் வித்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டவணை: வேளாண் உற்பத்தி வளர்ச்சி
வேளாண் பயிர் | 1950-60 | 1960-70 | 1970-80 | 1980-90 |
நெல் | 4.53 | 2.12 | 1.73 | 4.08 |
கோதுமை | 5.79 | 7.73 | 4.15 | 4.29 |
சோளம் | 7.84 | 3.90 | 0.64 | 3.20 |
பருப்பு | 3.80 | -0.47 | -1.18 | 2.45 |
மொத்த உணவு தானியங்கள் | 4.35 | 2.63 | 1.76 | 3.31 |
எண்ணெய் வித்துகள் | 3.05 | 2.41 | 1.34 | 6.01 |
கரும்பு | 5.62 | 2.54 | 2.27 | 4.38 |
பருத்தி | 4.54 | 2.03 | 2.69 | 3.23 |
சணல் | 5.60 | 0.32 | 2.13 | 1.28 |
Source: GoI (2004): “Agricultural Statistics at a Glance,” Government of India.
1980களில் வேளாண் துறையில் அனைத்து பகுதிகளிலும் வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி சாதகமாகக் காணப்பட்டது. தென்னிந்திய மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளில் பிரதான உணவான அரிசியானது 1980களில் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இதற்கு முக்கியமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தனியார் துறை நிறுவனங்கள் குறைவான விலையில் தண்ணீர் குழாய்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், ஆழ்துளைக் கிணறுகள், குழாய் நீர்ப் பாசனம் பெருமளவிற்குப் பயன் பாட்டிற்கு வந்தது, விவசாயிகள் பாரம்பரிய ரகங்களிலிருந்து நவீன ரகங்கள் பயிர்செய்யத் தொடங்கியது, ஒன்றுக்கு மேற்பட்ட சாகுபடி போகங்கள் செய்யப்பட்டது போன்றவை உணவு உற்பத்தியினை 1980களில் அதிகரிக்க முக்கியக் காரணமாக விளங்கியது. இதன் விளைவு கிராமப்புறங்களில் விவசாயக் கூலி அதிகரித்து கிராமப்புற வறுமை குறையத் தொடங்கியது. இது இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது (Koichi FUJITA ue.org/files/events/Fujita_green_rev_in_india.pdf).
பசுமைப் புரட்சியின் விளைவால் நெல், கோதுமை உற்பத்தி பெருமளவிற்கு அதிகரித்தது ஆனால், சமையல் எண்ணெய்யின் தேவை அதிகரித்த அளவிற்கு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆண்டுக்குச் சராசரியாக 125 லட்சம் டன் சமையல் எண்ணெய் தேவை இருந்தது ஆனால் இந்தியாவில் 75 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் இந்தியா அர்ஜெண்டினா, மலேசியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தது. சமையல் எண்ணெய்க்காகச் சூரியகாந்தி, கடுகு, நிலக்கடலை, ஆமணக்கு, நைஜர், ஆளிவிதை போன்ற பயிர்களிலிருந்து சமையலுக்கான எண்ணெய் பெறப்பட்டது. இவ்விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் குறையும். எனவே ராஜீவ் காந்தி மஞ்சள் புரட்சிக்கான அடித்தளத்தினை அமைத்தார். இதன் முக்கிய நோக்கம் புதிய வகை எண்ணெய் வித்து ரகங்களைப் பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தியினை அதிகரிப்பதாகும். எண்ணெய் வித்து தொழில்நுட்ப இயக்கம் 1986ல் துவக்கப்பட்டது. இதனால் 1985-86ல் 10.8 மில்லியன் டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது 1998-99ல் 24.7 மில்லியன் டன்னாக அதிகரித்தது. 1985ல் எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு 19.0 மில்லியன் ஹெக்டேராக இருந்தது 1996ல் 26.0 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. இதன்படி 36 விழுக்காடு சாகுபடி பரப்பும், 125 விழுக்காடு உற்பத்தியும் இக்கால கட்டத்தில் அதிகரித்தது. அதிக விளைச்சல் தரும் உயர் ரக விதைகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பொன்ற அடிப்படையில் சாகுபடி செய்ததால் இக்கால கட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 570 கிலோவாக இருந்தது 926 கிலோவாக அதிகரித்துக் காணப்பட்டது. இத்துடன் 200 மேற்பட்ட விதை ரகங்கள் பயிரிடப்பட்டது. இதனால் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியானது 1985ல் ரூ.700 கோடி மதிப்பிற்குச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது 1995-96ல் ரூ.300 கோடியாகக் குறைந்தது (ICAR 2022). எண்ணெய் வித்து தொழில்நுட்ப இயக்கம் துவக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் இந்தியா அதிக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது 1993-94ல் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்த நாடாக மாற்றமடைந்தது. 1993-94ல் இந்தியா தனக்குத் தேவையான சமையில் எண்ணெய்யில் 97 விழுக்காடு இந்தியாவிலேயே உற்பத்தி செய்துகொண்டது, 3 விழுக்காடு மட்டுமே இறக்குமதி செய்தது. எண்ணெய் வித்துக்களின் வளர்ச்சியானது 1980களில் மற்ற உணவு உற்பத்தியினை விட அதிக அளவிற்குப் பதிவாகியுள்ளது.
ராஜீவ் காந்தி ஆட்சியில் வேளாண் வளர்ச்சிக்காக 1985ல் ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது, 1988ல் SAFAL என்கிற அமைப்பு பழம் மற்றும் காய்கறிகள் சில்லறை விலையில் விற்பனை செய்யத் துவக்கப்பட்டது. 1990ல் தேசிய வேளாண்மை அறிவியல் கழகம் தொடங்கப்பட்டது. 1989ல் ஐ.ஆர் 64 என்ற நெல் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதுபோல் பாசுமதி நெல் ரகமான புசா பாசுமதி-1 அறிமுகப்படுத்தப்பட்டது.
அட்டவணை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு – ஆண்டிற்கு)
பொருளாதாரம் | 1950-1964 | 1965-1979 | 1980-1990 |
ஓட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி | 3.7 | 2.9 | 5.8 |
தொழில துறை | 7.4 | 3.8 | 6.5 |
வேளாண் துறை | 3.1 | 2.3 | 3.9 |
மொத்த முதலீடுஃஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி | 13.0 | 18.0 | 22.8 |
Source: https://www.princeton.edu/~kohli/docs/PEGI_PartI.pdf
– பேரா.பு.அன்பழகன்
மோடிக்கு முதல் பரிசு கட்டுரை – அ.பாக்கியம்
1991 முதல் அனைத்து பொதுத்துறை விற்பனையில் 72% மோடியின் ஆட்சியில் நடைபெற்று உள்ளது.
1991 மற்றும் 1999 க்கு இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் பொதுத்துறை விற்பனை மூலம் ரூ. 17,557 கோடி (இன்றைய நிலையில் சுமார் ரூ. 91,800 கோடி) மட்டுமே ஈட்டப்பட்டது.”
“வாஜ்பாய் அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை விற்பனையை மீண்டும் முடுக்கிவிட்டது. வெறும் ஐந்தாண்டுகளில் (1999-2004) ரூ. 27,599 கோடி (இன்று சுமார் ரூ. 93,300 கோடி) சம்பாதித்தது.”
“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தின் முதல் பதவிக்காலம் (2004 முதல் 2009 வரை) இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்தது,
முதலீட்டுத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதன் விளைவாக, இந்தக் காலகட்டத்தில் பங்கு விலக்கல் வருவாய் வெறும் ரூ.11,591 கோடி மட்டுமே. இன்றைய மதிப்பில் வெறும் 32,000 கோடி ரூபாய்.
“UPA-II-ல் (2009-14), காங்கிரஸ் மிகவும் வலுவான நிலைப்பாட்டில் இருந்தது,
பொதுத்துறை விற்பதில் இன்னும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த காலகட்டத்தில், அரசாங்கம் ரூ. 1.2 லட்சம் கோடியை (ரூ. இன்று 2.4 லட்சம் கோடி) வெறும் ஐந்தாண்டுகளில் விற்பனை செய்தது.
“மொத்தத்தில், UPA தனது 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ. 1.32 லட்சம் கோடிக்கு விற்பனை செய்தது – இன்றைய நிலையில் ரூ. 2.74 லட்சம் கோடிக்கு சமம்.”
“மோடி அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலத்தில் மட்டும் (2014-19), பங்கு விலக்கல் மூலம் மொத்தமாக ரூ. 3.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது, அது இன்று ரூ. 4.7 லட்சம் கோடியாகும்.
தொற்று நோய் காலத்திலும் மோடி மொத்தம் ரூ. 1.26 லட்சம் கோடி பொதுத்துறையை விற்பனை செய்துள்ளார். இன்றைய மதிப்பில் ரூ. 1.48 லட்சம் கோடி ஆகும்.
மொத்தத்தில் 1991ஆம் ஆண்டிலிருந்து பொதுத்துறை விற்பனை செய்ததில் 72 சதவீதத்தை மோடி ஆட்சியில் மட்டுமே நடந்துள்ளது.
– அ.பாக்கியம்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 6 ஜனதா அரசும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்
ஜன சங்கம், பாரதிய லோக் தளம், சோசியலிஸ்ட் கட்சி, மொரார்ஜி தேசாயின் பழைய காங்கிரஸ் ஒன்றிணைந்து 23.1.1977ல் ஜனதா கட்சியினைத் துவக்கி 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இத்துடன் பாபு ஜகஜீவன் ராமின் ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் இயக்கமும் ஒன்று சேர்ந்தது. 22.03.1977ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் ஜனதா கட்சி 298 இடங்களைப் பெற்று மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். இது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகச் சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதா கட்சியானது வடஇந்திய மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் வெற்றியினைப் பெற்றிருந்தது ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொரார்ஜி அமைச்சரவையில் பாபு ஜகஜீவன் ராம், அடல் பிஹாரி வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ், எச்.எம்.பட்டேல், சரண் சிங், மது தன்டவதே போன்ற முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். இதன்பின் பல மாநிலங்களில் ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தது. மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி ஆட்சியானது நிலச் சீர்திருத்தத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இதன்படி உழவர்களுக்கு நிலம் சொந்தம், நிலக் குத்தகையை 50 விழகாட்டிலிருந்து 25 விழுக்காடாகக் குறைத்தல் உட்பட பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு ஒரு மில்லினுக்கு மேற்பட்ட ஏழை, நிலமற்ற விவசாயிகள் இம்மாநிலத்தில் பயனடைந்தனர்.
மார்சு 1977லிருந்து ஜூலை 1979முடிய 20 மாதங்கள் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தது. வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது, உண்மையான சமூக நீதியினை செயல்படுத்துவது, செயல்படாமல் அல்லது முடங்கியிருந்த நிர்வாகத்தைச் செயல்பட வைப்பது என்ற அடிப்படையில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. பின்னால் சில நாட்கள் சரண் சிங் பிரதம மந்திரியாகப் பதவியிலிருந்தார். பல்வேறு சித்தங்களின் கூட்டு ஆட்சியாக (ஜனதா, ஜன சங்கம், சோசலிஸ்ட் கட்சி, இளம் துருக்கியர்கள், காங்கிரஸின் ஜனநாயக போராளிகள்) இது அமைந்தது. மொரார்ஜி தேசாய் காந்திய நெறியில் பயணித்தவராக இருந்தாலும் முதலாளித்துவச் சார்புடையவர், சரண் சிங் விவசாயிகள் சார்புடையவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான மனப்பான்மை உடையவர், ராஜ் நாராயண் கிராமப்புறத் தொழில் சார்ந்த நிலைப்பாடு உடையவர், ஜன சங்கத்தினர் உயர் ஜாதி ஆதரவாளர்கள் இவ்வாறு கலவையான சித்தாந்தத்தைக் கொண்டுள்ளவர் ஒன்று சேர்ந்து ஆட்சியினை நடத்தினர். மேலும் ஜனதா கட்சி வடஇந்தியாவில் அதிக செல்வாக்குடனும், தென்னிந்தியாவில் செல்வாக்கற்ற நிலையிலும் இருந்தது. பெரும் நிலக்கிழார்கள், நகர்ப்புற உயர் ஜாதியினர், இடைப்பட்ட ஜாதியினரின் ஆதரவு என ஜனதா கட்சிக்குக் காணப்பட்டது. இதனால் கிராமப்புறங்களில் சமூகப் பதற்றம், ஏழை, பட்டியல் இன மக்கள் மீதான அடக்குமுறை இருந்தது. கிராமப்புறங்களில் ஏழைகள், நிலமற்ற விவசாயிகள், பட்டியல் இனத்தவர்கள் தங்களின் உரிமைக்காகப் போராடினர். நெருக்கடிக் காலங்களில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்த லேவாதேவியர்களால் கொடுத்த கடனைத் திரும்பப் பெற இயலவில்லை எனவே ஜனதா ஆட்சிக் காலத்தில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் விவசாயிகளிடையேவும், ஏழை மக்களிடமும் பதற்றம் நிலவியது. இது ஜாதி மோதலை உருவாக்கியது. பல வடமாநிலங்களில் கலவரம் ஏற்பட்டு பட்டியலினத்தவர்கள் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்ட செல்வங்களை ஒழிப்பதற்காக ஜனதா அரசு ரூ.1000, ரூ.5000, ரூ.10000 செலாவணியினை செல்லத்தக்கதல்ல என்று அறிவித்தது. நெருக்கடிக் காலத்தில் போராட்டம் சட்டப்பூர்வமானது இல்லை என்ற நிலையினை திரும்பப் பெறப்பட்டது. அந்நிய முதலீடு உச்ச அளவாக 40 விழுக்காட்டுக்கு மிகக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதிக்கும் கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் இயங்க தடை விதிக்கப்பட்டது. இதுபோல் ஐபிஎம் நிறுவனமும் தடைசெய்யப்பட்டது (Mint 2019). இரயில்வே துறை அமைச்சராக இருந்த மது தன்டவதே ஏழை மக்கள் பயணிக்கவும், துறையினை நவீனப்படுத்தவும் பல்வேறு சீர்திருத்தங்களை அத்துறையில் கொண்டுவந்தார்.
ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது காந்தியவாதிகள் மகிழ்ச்சியடைந்தனர். வேளாண்மையிலும், தொழில் துறையிலும் காந்திய சித்தாந்தம் பின்பற்றப்பட்டது. கிராமப்புறம் சுயச்சார்பினை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. துரிதமான வேளாண் உற்பத்தியினை அடையச் செய்தல் என்பது உணவு பற்றாக்குறையினை தீர்ப்பதற்கானதாக மட்டுமல்ல தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கும் சக்தியையும் உண்டாக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டது (Georger Cristoffel Lieten 1980). அடிப்படையில் பல்வேறு சித்தாந்தங்களில் கூட்டாக இருந்தாலும் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஜனதா அரசின் முதன்மையான சித்தாந்தமாக முறைசாரா சிறு மற்றும் பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எனவே ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1978-1983) வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறு மற்றும் பாரம்பரியத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சுயச்சார்பினை அடையவும், உள்நாட்டுத் தொழில்களை உருவாக்கவும் உத்திகள் வகுக்கப்பட்டது.
ஜனதா அரசு பொறுப்பேற்றபோது வேலையின்மையும் வறுமையும் முக்கிய அறைகூவல்களாக இருந்தது. இந்த நிலை பொதுவாகக் கிராமப்புறங்களைச் சார்ந்ததாக இருந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் முயற்சியால் திட்டக்குழுவில் தொழில்துறையினை சார்ந்த வல்லுநர்கள் உறுப்பினர்களா இருந்த நிலையினை மாற்றி வேளாண் துறையினைச் சார்ந்த வல்லுநர்களை உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். இதனால் கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டமிடுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நவம்பர் 1977ல் கங்கை நதி நீரைப் பகிர்வு செய்வதற்கு இந்திய-பங்ளாதேஷ்க்குமிடையே வற்று காலங்களில் (Lean season) 20500 கன அடி தண்ணீரும் மற்ற காலங்களில் 34500 கன அடி தண்ணீர் பெற ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மையினை மேம்படுத்த உதவியது (Ramachandra Guha 2017).
வேளாண் இடுபொருட்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன, குறைந்தபட்ச ஆதார விலை வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்டது. இவ்விரண்டையும் பெரிய விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெற்றனர். இதனால் மானியம் 1977-78ல் ரூ.4500 மில்லியனாக இருந்தது 1979-80ல் ரூ.5700 மில்லியனாக உயர்ந்தது. உணவுப் பொருட்களின் கையிருப்பு அதிகரித்திருந்தது. இதனால் 1971ல் கிராமப்புற வறுமை 49 விழுக்காடாகவும் நகர்ப்புற வறுமை 56 விழுக்காடாகவும் இருந்தது குறையத் தொடங்கியது. எனவே உபரியாக இருந்த உணவு உற்பத்தியினை ஏற்றுமதி செய்ய ஜனதா அரசு வல்லுநர்களைக் கொண்ட பணிக் குழுவினை அமைத்தது. இக்குழு பாரம்பரிய வணிகப் பயிர்கள் மற்றும் உணவுப் பயிர்களை ஏற்றுமதி செய்யப் பற்றாக்குறை நிலவும் நிலையினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று ஜனதா கட்சி ஆட்சியில் நிதி அமைச்சராகவும் இருந்த சரண் சிங் குறிப்பிட்டார். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புறங்களில் வாழும் மேல்தட்டு வர்க்கம் நீண்ட காலமாகவே கிராமப்புற வெகுஜனங்களைச் சுரண்டி வாழ்ந்துவந்தனர் என்றும் அவர்கள் பொருளாதார வளர்ச்சியினைத் தங்கள் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டுள்ளனர் என்று சரண் சிங் குறிப்பிட்டார். இத்துடன் தொழில் துறையும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் கூட்டாகக் கிராம மக்களைச் சுரண்டுகின்றனர் என்றார். இதனால் காலம் காலமாக நிலமற்ற விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் தொடர்ந்து தங்களின் பொருளாதார நிலையினை இழந்து வந்தனர் என்றார். எனவே ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1978-79ன் வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மைக்கு ரூ.10270 மில்லியன் ஒதுக்கப்பட்டது இது காங்கிரஸ் ஆட்சியில் 1975-76ல் ரூ.7270 மில்லியனா இருந்தது. ஜனதா ஆட்சிக்கு முந்தைய 20 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சியானது 20 விழுக்காடாக இருந்தது 1978-79ல் 1 – 2 விழுக்காடு அளவிற்கே வளர்ச்சி காணப்பட்டது. இது நெருக்கடிக் கால கட்டத்திலிருந்ததைவிட (8 விழுக்காடு) குறைவாகவே இருந்தது ஆனால் தொழில் துறை வளர்ச்சியானது 7 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது (துயல னுரடியளாi 2014). பல்வேறு முயற்சிகள் ஜனதா அரசினால் முன்னெடுக்கப்பட்டாலும் கிராமப்புற ஏழைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தனர் எனவே அமைப்பு ரீதியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1978-79ல் சுவிஸ் நாட்டுப் பொருளியல் அறிஞரான கில்பர்ட் எட்டியன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியக் கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டார். இவ்வாய்வானது, வேளாண்மைக்கான நீர்ப்பாசன வசதியினை மேம்படுத்தியதால் வேளாண் உற்பத்தித் திறன் அதிகரித்ததாகவும், இனால் கிராமப்புற வருமானம், வாழ்க்கைத் தரம் உயர்ந்தது என்று குறிப்பிடுகிறார். பசுமைப் புரட்சியின் விளைவினால் ரசாயன உரப் பயன்பாடானது நான்கு மடங்கு அதிகரித்தது. வெண்மைப் புரட்சியின் விளைவால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதனால் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளில் அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாந்திருந்ததினால் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடைந்தது. இதனால் அரசியல் ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கினர். 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 36 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களாக இருந்ததால் கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக திட்டங்களைக் கொண்டுவர அழுத்தம் கொடுத்தனர். இதனால் நகர-கிராமப்புற போராட்டங்கள் அதிகரித்தது, விவசாய-தொழில் துறை போட்டிகள் உருவானது. ஜனதா கட்சி கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் பிற்பட்ட மக்களின் குரலாக இது பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. எனவே இதனைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை பெற பி.பி.மண்டல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது (Ramachandra Guha 2017).
காங்கிரஸ் கட்சி போன்றே ஜனதா கட்சியின் சித்தாந்தமும் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வாக நிலச் சீர்திருத்தம் அவசியமானது என்று கருதப்பட்டது. எனவே ஜனதா அரசு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் நிலச் சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்துதல் மற்றும் நிலப் பகிர்வினை செயல்படுத்துதலை முன்னிறுத்தியது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கண்ட தோல்வியை ஜனதா அரசும் எதிர்கொண்டது. நிலச் சீர்திருத்தம், நிலப் பகிர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் விவசாயச் சங்கங்களின் தொடர் போராட்டமும் அரசியல் கட்சிகளின் அழுத்தமும் ஆகும்.
அட்ல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி தலைவர்களாக் கொண்ட பாரதீய ஜன சங்கமானது, இந்து-முஸ்லீம்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஜனதா கட்சியிலிருந்து வெளியேறியது. இதனால் மொரார்ஜி தேசாய் அரசானது கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து சரண் சிங் 28.07.1979ல் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறது என்ற அடிப்படையில் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். ஆனால் பாராளும்மன்றத்தில் காங்கிரஸ் ஆதரவாக இல்லாத நிலையில் சரண் சிங் 20.8.1979ல் பதவியினை ராஜினாமா செய்தார். சரண் சிங் 23 நாட்கள் மட்டுமே பிரதம மந்திரியாக இருந்தார். ஆனால் 14.01.1980வரை காபந்து பிரதம மந்திரியாகப் பதவி வகித்தார். சரண் சிங் இந்திய அரசியலில் விவசாயிகளின் முகமாகவே பார்க்கப்பட்ட முக்கிய தலைவர் ஆவார். சரண் சிங் விவசாயிகளின் நலனையும், வாழ்வினையும் மேம்படுத்துவது மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர். உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக பதவி வகித்தபோது நிலச் சீர்திருத்தத்திற்கான முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். ஜமீன்தார் ஒழிப்பிற்கான சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் இதனால் இவரை இடைத் தரகர்களின் ஒழிப்பிற்கான வடிவமைப்பாளராகக் காண முடிகிறது. விவசாயிகள் முறைசாரக் கடனாக வட்டிக்காரர்களிடம் பணம் பெற்றுப் படும் துயரத்தினை ஒழிக்கச் சட்டம் கொண்டுவந்தார், நிலப் பயன்பட்டு சட்டம், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம், குத்தகைச் சட்டம், போன்ற சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். 1959ல் நேருவினால் கொண்டுவரப்பட்ட கூட்டுறவு விவசாய முறையினை கடுமையாக எதிர்த்தார்
(https://theprint.in/theprint-profile/chaudhary-charan-singh-prime-minister).
அட்டவணை: ஜனதா அரசில் வேளாண்மையின் போக்கு (1980-81 விலையின்படி)
ஆண்டு | வேளாண் உற்பத்தி (ரூ.கோடியில்) | GDPயில் வேளாண் உற்பத்தியின் பங்கு |
1977 | 37323 | 35.1 |
1978 | 41994 | 36.8 |
1979 | 63327 | 28.1 |
1980 | 37108 | 32.5 |
Source: Kalirajan et al 2001.
ஜனதா அரசிலிருந்த சரண் சிங் வேளாண்மையை ஊக்குவித்தாலும் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்குச் சாதகமான போக்கே இவ்வாட்சியில் காணப்பட்டது. வேளாண் இடுபொருட்களான ரசாயன உரம், உயர் விளைச்சல் தரும் விதைகள், வேளாண் இயந்திரங்கள், வங்கிக் கடன் போன்றவை வேளாண் சார்ந்ததாக இருந்தாலும் தொழில் வளர்ச்சிக்குப் பெருமளவிற்கு உதவியது. விவசாயிகளில் குறைந்த அளவிற்கே கடன் பெறும் நம்பிக்கை நிலையிலிருந்தனர். இவர்கள் வாணிப பயிர்களான ரப்பர், பழவகைகள், கரும்பு போன்றவை பயிர் செய்தனர். குறைந்த அளவிற்கு உணவு உற்பத்தியில் ஈடுபட்டனர். எனவே உணவு கையிருப்பானது குறைந்தது. அதேசமயம் உயர் ரக உணவு தானிய உற்பத்தியில் ஈடுபட்டு அதனை உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தைகளில் விற்று லாபம் பெற்றனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய விவசாயிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய விவசாயிகள் பாரம்பரிய பயிர் சாகுபடி முறையினை பின்பற்றியதால் பசுமைப் புரட்சிக்கு வெகு தொலைவிலிருந்தனர். ஆனால் பன்னாட்டு வேளாண் வாணிபம் என்ற சரண் சிங்கின் திட்டமானது இந்திய விவசாயிகளை புதிய தளத்திற்கு அழைத்துச் சென்றது (Georges Kristoffel Lieten 1980). ஜனதா அரசினை அன்றைய காங்கிரஸ் ஆட்சியினை ஒப்பிடும்போது வேளாண்மையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை ஆனால் கிராமப்புற மேம்பாட்டில் நேர்மறை மாற்றம் கண்டது என்பது மறுப்பதற்கில்லை.
– பேரா.பு.அன்பழகன்