அரசமைப்புச்சட்டம் எதிர்கொள்ளும் சவால்கள் கட்டுரை – தமிழில்: ச. வீரமணி
எச்.என். நாகமோகன் தாஸ்,
ஓய்வூபெற்ற நீதிபதி
(தமிழில்: ச. வீரமணி)
சுதந்திரம் பெற்ற நாடுகள் அனைத்தும் குடியரசு நாடுகள் அல்ல. ஆனால் அனைத்துக் குடியரசுகளும் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும். ஒரு சுதந்திர நாடு எழுத்துபூர்வமாக ஓர் அரசமைப்புச்சட்டத்தை நிறைவேற்றும்போது, பின் அது குடியரசு நாடாக மாறுகிறது. இந்தியா 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர நாடாக மாறியது. ஆயினும் இந்தியா, அது 1950 ஜனவரி 26 அன்று உலகின் மிகப்பெரிய அரசமைப்புச்சட்டத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, அன்றுமுதல் குடியரசு நாடாக மாறியது. எனவே, இந்தியா என்பது சுதந்திர நாடுமாகும், குடியரசு நாடுமாகும்.
நம் அரசமைப்புச்சட்டத்தில் என்ன இருக்கிறது?
நம் இந்திய அரசமைப்புச்சட்டம் 22 பாகங்களையும் (parts) 12 அட்டவணைகளையும் (schedules) 448 பிரிவுகளையும் (articles) உள்ளடக்கியதாகும். இந்திய அரசமைப்புச்சட்டத்தின் சிறப்பு அம்சம் அதன் முகப்புரையாகும். முகப்புரையானது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றும் நாடாளுமன்ற அமைப்பு முறையைக் கொண்டுள்ள இறையாண்மை, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசுடன் உள்ள அரசாங்க அமைப்பு முறையைக் கொண்டுள்ளது என்றும் விவரிக்கிறது. அரசமைப்புச்சட்டம் உணர்வில் ஒன்றுபட்டும், அதே சமயத்தில் ஒரு கூட்டாட்சி அமைப்புமுறையையும் நிறுவுகிறது. அரசமைப்புச்சட்டமானது நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள்(legislative), ஆட்சிபுரிவோர் (executive) மற்றும் நீதித்துறை(judiciary) என்று அழைக்கப்படும் மூன்று அங்கங்களுக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நீதி வழங்குவதற்கான பொறுப்பையும், அவர்களுக்குச் சிந்தனை சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும், எந்தக் கடவுளையும் நம்பும் சுதந்திரத்தையும், வணங்கும் சுதந்திரத்தையும், அந்தஸ்திலும், வாய்ப்பிலும் சமத்துவத்தையும், அவர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை மேம்படுத்திடவும், தனிநபர் கண்ணியத்தை எய்திடவும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்திடும் பொறுப்பையும் கூட்டாக அளித்திருக்கிறது. அரசமைப்புச்சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும், தனியாகவும், கூட்டாகவும் சில அடிப்படை சுதந்திரங்களையும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சம அளவில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் பொது வேலை வாய்ப்பில் சம அளவில் வாய்ப்புகள் அளிக்கிறது.
அரசமைப்புச்சட்டம் மதத்தின் பேராலும், இனத்தின் பேராலும், சாதியின் பேராலும், பாலினத்தின் பேராலும், பிறப்பிடத்தின் பேராலும் பாகுபாடு காட்டப்படுவதற்குத் தடை விதிக்கிறது. பேச்சுரிமை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் வைக்கும் உரிமை, எந்தத் தொழிலையும் மேற்கொள்ளும் உரிமை அளிக்கிறது. சுரண்டலுக்கு எதிராக உரிமை அளிக்கிறது. அனைத்துவிதமான கட்டாய ஓய்வுக்கும், குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும், பெண்டிர் பரத்தமையில் ஈடுபடுத்தப்படுவதற்கும் தடை விதிக்கிறது. மனசாட்சி சுதந்திரம் அளிக்கிறது, எவரும் எம்மதத்தையும் பின்பற்ற, பிரச்சாரம் செய்திட சுதந்திரம் அளிக்கிறது. குடிமக்கள் தங்கள் கலாச்சாரத்தை, மொழியை மற்றும் எழுத்துக்களைப் பேணிப்பாதுகாத்திட உரிமை அளிக்கிறது.
அரசமைப்புச்சட்டத்தின் 42ஆவது திருத்தத்தின்கீழ் நாம் அரசமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைப் பின்பற்றி நடக்கவும், நம் சுதந்திரப் போராட்டத்திற்கு நமக்கு உத்வேகம் அளித்திட்ட உயர்ந்த சிந்தனைகளைப் பின்பற்றவும், நம் நாட்டைப் பாதுகாத்திடவும், நாடு கோரும் பட்சத்தில் நாட்டிற்குச் சேவை செய்திடவும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைப் பேணவும், சகோதர உணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு மதத்தினரிடையேயும், மொழியினரிடையேயும், பிராந்திய மக்களிடையேயும் உள்ள வேறுபாடுகளையெல்லாம் கடந்த அவர்களிடையே அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிடவும் வகை செய்கிறது.
மாநில அரசாங்கம், தன்னுடைய கொள்கையை அனைத்து மக்களுக்கும் போதுமான அளவிற்கு வாழ்வாதாரங்களை அளிக்கக்கூடிய விதத்திலும், சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கக்கூடிய விதத்திலும் கொள்கைகளை வகுத்திடக்கூடிய விதத்திலும் அரசமைப்புச்சட்டம் அமைந்திருக்கிறது. மேலும் தனக்கிருக்கின்ற பொருளாதாரத் திறனுக்கேற்ப மாநில அரசாங்கம் அனைவருக்கும் வேலை உரிமையைப் பெற்றுத்தரவும், வேலையின்மை, வயது முதிர்ச்சி, நலிவடைதல், இயலாமை மற்றும் தகுதியற்ற தேவை (undeserved want) போன்ற சமயங்களிலும், அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுத்தர வலுவான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய விதத்திலும் அரசமைப்புச்சட்டம் கொள்கைகளை வகுத்திருக்கிறது. மேலும் மாநில அரசாங்கங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம் (living wage) பெற்றுத்தரவும், வேலைபுரியும் இடங்களில் மனிதர்கள் வாழக்கூடிய விதத்தில் நிலைமைகளை உருவாக்கித்தருவதற்கும் மற்றும் நாகரிகமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதற்கும் அரசாங்கங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசமைப்புச்சட்டம் கூறுகிறது.
நாட்டின் சொத்துக்கள் அனைத்துக் குடிமக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் விதத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள் இருந்திட வேண்டும் என்றும் கூறுகிறது. நாட்டின் செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் பொதுவாகத் தீங்கு பயக்கக்கூடிய விதத்தில் ஒருசிலரிடம் குவிவதற்கும் வழிவகுக்கக்கூடாது என்றும் கூறுகிறது.
அரசமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள மற்றும் சில முக்கியமான கட்டளைகள், குழந்தைகளின் சுகாதார வளர்ச்சிக்கு வசதியும் வாய்ப்பும் அளித்திட வேண்டும் என்றும், 14 வயது வரையிலும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றும், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் நலிவடைந்த இதர பிரிவினருக்கான கல்வி மற்றும் பொருளாதார நலன்களையும் மேம்படுத்திட வேண்டும் என்றும் கூறுகின்றன.
அரசமைப்புச் சட்டத்தில், அரசமைப்புச்சட்டத்தின் மேலாதிக்கம் (supremacy of the constitution), நாட்டின் இறையாண்மை, நாடாளுமன்ற ஜனநாயகம், க்ஷேமநல அரசு (welfare state), மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற சில அடிப்படை அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
சாதனைகள் (achievements)
இந்தியக் குடியரசு சில சாதனைகளையும் ஈட்டி இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவும் ஒரே அரசியல் ஆட்சியின் கீழ் எப்போதுமே கொண்டுவரப்படவில்லை. அது குப்தர்களின் இந்தியாவாக இருந்தாலும் சரி, மௌர்யர்களின் இந்தியாவாக இருந்தாலும் சரி, மொகலாயர்களின் இந்தியாவாக இருந்தாலும் சரி அல்லது பிரிட்டிஷ் இந்தியாவாக இருந்தாலும் சரி. நாம் சுதந்திரம் பெற்ற சமயத்திலும் கூட, இந்தியாவில் சுமார் 600 மன்னர் சமஸ்தானங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆட்சி செய்து வந்தன. சுதந்திரம் பெற்றபின் நாம் மன்னராட்சியை, நிலப்பிரபுத்துவத்தை மற்றும் காலனித்துவ ஆட்சியை ஒழித்துக்கட்டியிருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மக்களையும் ஒரே அரசியல் ஆட்சியின் கீழ், ஒரே எல்லைக்குள், ஒரே அரசமைப்புச்சட்டத்திற்குள், ஒரே தேசிய கீதத்தின்கீழ், ஒரே தேசியக் கொடியின் கீழ், ஒரே தேசிய அடையாளத்தின்கீழ் கொண்டு வந்திருக்கிறோம். அரசமைப்புச்சட்டம் வந்தபின்னர்தான் உண்மையான இந்தியா அமலுக்கு வந்திருக்கிறது.
நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டியபின்னர் நாம் ஒன்றியத்தின்கீழ் மக்களவை மற்றும் மாநிலங்களவை போன்ற ஜனநாயக அமைப்புகளையும், மாநிலங்களில் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவைகளையும், குடியரசுத் தலைவர், ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள், வட்ட/வட்டாரப் பஞ்சாயத்துக்கள், கிராமப் பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் வட்ட அளவிலான நீதிமன்றங்கள் போன்று நீதித்துறை அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறோம்.
நாம், நிலச் சீர்திருத்தங்கள், வேளாண் சீர்திருத்தங்கள், தொழில்துறை சீர்திருத்தங்கள், கல்வி சீர்திருத்தங்கள், சுகாதார சீர்திருத்தங்கள் போன்று எண்ணற்ற சீர்திருத்தங்களையும் கொண்டு வந்திருக்கிறோம்.
நாம் 1947இல் சுதந்திரம் பெற்ற சமயத்தில் எழுத்தறிவு விகிதம் என்பது வெறும் 15 முதல் 16 விழுக்காடு அளவிற்கே இருந்தது. இதனை இப்போது சுமார் 79 விழுக்காடு அளவிற்கு மேம்படுத்தி இருக்கிறோம். சுமார் 70 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தார்கள். இதனை இப்போது 21 விழுக்காட்டிற்குக் கீழ் என்ற அளவிற்குக் கொண்டுவந்திருக்கிறோம். மக்களின் சராசரி ஆயுள் என்பது 32 வயதாக இருந்ததை இப்போது சுமார் 69 வயதாக உயர்த்தி இருக்கிறோம். ஆண்டின் உணவு உற்பத்தி 50 மில்லியன் டன்களாக இருந்ததை இன்றைய தினம் 295 மில்லியன் டன்களாக உயர்த்தி இருக்கிறோம். வேலைவாய்ப்பு, தங்குமிடம், சுகாதாரம், குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. வறுமை, பசி-பட்டினி, பஞ்சம், வெள்ளம் மற்றும் தொத்துநோய்கள் முதலானவை மிக விரிவான அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. விண்வெளி தொழில்நுட்பத்திலும், தகவல் தொழில்நுட்பத்திலும், அணுமின் எரிசக்தி, சேவைத் துறை முதலானவற்றில் இந்தியா உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக மிளிர்கிறது.
பெண்கள், பிற்பட்டோர், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் வாழ்நிலைமைகளில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்பிரிவினர் இப்போது நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள், அரசு எந்திரம் மற்றும் நீதித்துறையிலும் நுழைந்திருக்கிறார்கள். கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், விளையாட்டு, இதழியல் முதலான துறைகளிலும் அவர்கள் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்கள்.
நாட்டில் பல்வேறு மாறுபட்ட மதங்கள், சாதிகள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் இருந்தபோதிலும், பல்வேறு அணுகுமுறைகளுடனான, பல்வேறு சிந்தனைகளுடனான பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கிவந்தாலும், நம் அரசமைப்புச்சட்டத்தின் உதவியுடன் அரசாங்கங்கள் அமைத்து, செயல்பட்டு வருகிறோம், குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் நடத்தி அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களையும் செய்து வருகிறோம்.
தொடரும் பிரச்சனைகள்
இவ்வாறு எண்ணற்ற சாதனைகளை நாம் பெற்றிருந்தபோதிலும், இப்போதும் நாம் எழுத்தறிவற்றவர்களாக, வேலையில்லாதவர்களாக, வீடற்றவர்களாக மற்றும் ஆதரவற்றர்களாக ஒருசிலரைப் பெற்றிருக்கிறோம். சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதிகள், மின்சாரம் போன்றவற்றை இன்னமும் அனைவருக்கும் வழங்கமுடியாத நிலை இருந்து வருகிறது. நாடு வேளாண்மை மற்றும் தொழில் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நான் ஒரு அவநம்பிக்கையுள்ள நபர் (pessimistic) அல்ல, நான் ஒரு நம்பிக்கைவாதி (optimistic) தான். நம் கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இன்னும் சற்றே உழைத்தோமானால், நவீன அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளைப் பயன்படுத்தி ஆட்சி புரிந்து, சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தோமானால், நாம் ஒருசில ஆண்டுகளிலேயே நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.
எதிர்கொண்டிருக்கும் சவால்கள்
ஆனாலும், இன்றையதினம் நம் முன் எண்ணற்ற சவால்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். இந்த சவால்களை நாம் எதிர்த்து நின்று முறியடிக்காவிட்டால், நாம் நம் அரசமைப்புச்சட்டத்தைக் காப்பாற்றுவது என்பது சாத்தியமில்லை. எனவே, இந்த சவால்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சிறிதுகாலத்திற்கு முன் நான், அரசியலற்றமயமாக்கல் (depoliticalisation), பயங்கரவாதம், மதவெறி/மதவாதம்/வகுப்புவாதம் (communalism), கிரிமினல்மயம் (criminalisation), ஊழல் (corruption), வணிகமயம்(commercialisation), கலாச்சாரச் சீரழிவு (cultural degeration) போன்ற முக்கிய சவால்களை எழுதியிருந்தேன். இப்போதும்கூட இந்தச் சவால்கள் நம்மை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. இப்போது நாம் புதிய சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். இவற்றை நாம் சரிசெய்யாவிட்டால், பின் நம் ஒட்டுமொத்த நாடும் அழிந்துவிடும்.
அவையாவன:
தேர்தல்கள்:
இன்றையதினம் ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் வரையிலும் வாக்களிப்பவர்கள் மதம், சாதி, பண பலம், புஜ பலம் போன்றவற்றிற்கு இறையாகும் பாதிப்புகள் அதிகமாகி இருக்கின்றன. பண பலமும், மிகவும் கொடூரமான கிரிமினல் குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் கூட பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதும், நேர்மையான, உண்மையான வேட்பாளர்கள் தங்கள் பிணைத்தொகையைக் கூட இழப்பது என்பதும் சர்வசாதாரணமாகி விட்டன. பண பலம் மிக்கவர்களும், கிரிமினல்களும் வெற்றி பெறும் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் கல்வியாளர்கள், நன்னெறி மிக்கவர்கள், வல்லுநர்கள், மதிப்புமிக்கவர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுவது என்பது குறைந்துகொண்டிருக்கிறது. கிரிமினல் பேர்வழிகளும், அரசியல்வாதிகளின் குழந்தைகளும், உறவினர்களும், வர்த்தகர்களும், ரியல் எஸ்டேட் பேர்வழிகளும் தேர்தல் களத்திற்கு வருவது அதிகமாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் சட்டமுன்வடிவுகள் எவ்விதமான விவாதமுமின்றி நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை மதியாதிருக்கும் போக்கு, சகிப்பின்மை, ஊழல், மோதல்கள் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் நாளும் நடைபெறும் சங்கதிகளாக மாறியிருக்கின்றன. நாடு சம்பந்தப்பட்ட அல்லது சாமானியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மீது விவாதம் நடைபெறுவது என்பது அநேகமாக இல்லை. சில சமயங்களில் சாமானிய மக்களின் கோடானுகோடி ரூபாய் வரிப் பணம் வீணாவதுடன், நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த அமர்வே எவ்வித விவாதமும் இன்றி முடிந்துவிடுகின்றன.
அரசமைப்புச்சட்டம் என்னதான் நல்லவிதமானதாக இருந்தபோதிலும், அதனை அமல்படுத்திட வேண்டியவர்கள் மோசமானவர்களாக இருந்தாட்ல அதுவும் மோசமாகிவிடும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறிய எச்சரிக்கையை நினைவு கூர்வது அவசியமாகும்.
உரிமைகள் நசுக்கப்படுதல்
இன்றையதினம் நாம் கடந்த 75 ஆண்டுகளாக அனுபவித்து வந்த உரிமைகளை இழந்து கொண்டிருக்கும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அரசாங்கங்கள் தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணி போன்ற பொது ஊடகங்களைத் தங்களின் ஊதுகுழல்களாக மாற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கின்றன. தனியார் ஊடகங்களுக்கு விளம்பரங்களை வாரி இறைப்பதன் மூலம் அவற்றையும் தங்கள் செல்வாக்கிற்குக் கீழ் கொண்டுவந்துள்ளன. அரசாங்கம் தன்னுடைய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து புத்தகங்களை, சினிமாக்களை, ஓவியங்களை, இசை நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றன. கலைஞர்களை, சமூகச் செயற்பாட்டாளர்களை, மாணவர்களை, எழுத்தாளர்களை, இதழாளர்களை தேசத் துரோகக் குற்றப்பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தடுப்புக் காவல் சட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்து கைது செய்து, சிறையில் தள்ளுகின்றனர். ஜனநாயகரீதியாக போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடித்துத்தரைமட்டமாக்குகின்றனர். இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் ஒரு கடுமையான சவாலாக மாறி இருக்கின்றன.
சட்டத்தின் ஆட்சியே நெருக்கடியில்
நாட்டின் குடிமக்கள் அனைவருமே இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்திற்கும், நாட்டின் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர்களாவார்கள். எவரும் நம் அரசமைப்புச்சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. அதாவது ராஜா சட்டமாக இருக்க முடியாது. ஆனால் சட்டம்தான் ராஜாவாகும். (King is not law, law is the King.)
இன்றையதினம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் குண்டர்களின் மாஃபியா கும்பல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சந்தையில் காய்கறிகளுக்கு ஒருவர் விலை நிர்ணயிப்பதுபோல் இந்த மாஃபியா கும்பல் கிரிமினல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றன. இவ்வாறு விலை நிர்ணயம் செய்வதில் ஒளிவுமறைவு என்பதே கிடையாது. இவற்றை இக்கும்பல்கள் ஒரு தொழிலாகவே செய்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் சட்டத்தின் ஆட்சிக்கு என்ன வேலை இருக்கிறது?
தேசியக் குற்றஆவணப் பணியகம் (NCRB-National Crime Records Bureau), வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் தீண்டத்தகாதவர்கள் மீது 27 கொடுமைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தீண்டத்தகாதவர்களின் ஐந்து வீடுகள் தீக்கிரையாகின்றன, மூன்று பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர், 11 பேர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும் தீண்டத்தகாதவர்களில் 13 பேர் கொல்லப்படுகின்றனர் என்றும், அவர்களுக்கெதிராக நூற்றுக்கணக்கான கொடுமைகள் புரியப்படுகின்றன என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கொடுமைகளில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படுவதே இல்லை. இதன்காரணமாக இவற்றைச் செய்த கயவர்கள் தண்டிக்கப்படுவதுமில்லை.
தேசியக் குற்றஆவணப் பணியகத்தின் 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஒரு பெண் 77 நிமிடங்களுக்கொரு முறை சித்திரவதைக்கு ஆளாகிறாள், ஆறு மணி நேரத்திற்கொருமுறை உயிருடன் கொளுத்தப்படுகிறாள் அல்லது அடித்தே கொல்லப்படுகிறாள், திருமணம் செய்யப்பட்ட நூறு பெண்களில் 20 பேர் கணவனாலோ அல்லது அவனுடைய குடும்பத்தினராலோ தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். 47 நிமிடங்களுக்கொருமுறை பாலியல்ரீதியாக பலியாகிறார். சராசரியாக பெண் தொழிலாளர்களில் 96 விழுக்காட்டினர் தங்கள் வாழ்நாளில் ஒருதடவையாவது பாலியல் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள், சிறுமிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதும், அமில தாக்குதலுக்கு (acid attack) ஆளாவதும், அவர்கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும் கொடுமைக்கு உள்ளாவதும், மற்றும் இதுபோன்ற கொடுமைகளுக்கு உள்ளாவதும் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் பல நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை.
காவல்நிலையங்களில் லாக்-அப் மரணங்கள் என்பவை அநேகமாக நாளும் நடக்கும் செய்திகளாகும். தேசியக் குற்றஆவணப் பணியகத்தின் 2013, 2014, 2015, 2016 அறிக்கைகள் முறையே 118, 93, 97, 93 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாகக் கூறுகின்றன. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும்கூட சித்திரவதை மற்றும் பல்வேறு காரணங்களால் இறந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வேலியே பயிரை மேயும் நிலை இருக்கிறது. சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகள் அனைத்தும் விடுமறை எடுத்துக்கொண்டிருப்பதுபோன்றே தோன்றுகிறது.
ஜனநாயகபூர்வமான அமைப்புகளின் சுதந்திரம் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது
சமீபகாலத்தில் ஏற்பட்ட சில நிகழ்ச்சிப் போக்குகள் நீதித்துறையின் சுதந்திரத்திலும் ஓர் ஆழமான பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒன்றிய அரசாங்கத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நீதிபதிகள் நியமனம், மாற்றல் மற்றும் பதவி உயர்வு போன்றவை சம்பந்தமாக முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. நீதித்துறையின் மீது ஆதிக்கம் செலுத்த ஆட்சியாளர்கள் அனைத்துவிதமான முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். நீதிபதிகள் நியமனம் தொடர்பாகவுள்ள அனைத்து ஒழுங்குமுறைகளையும் ஒன்றிய அரசாங்கம் உதாசீனம் செய்துவிட்டு, உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளின் பட்டியலையே திருப்பி அனுப்பியது. சில சமயங்களில் எவ்விதமான முகாந்திரமும் இல்லாமல் தாமதம் செய்தது. உச்சநீதிமன்றத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசாங்கம் நேரடியாகவே தலையிடுகிறது. தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியமைக்காக நீதிபதிகள் ஓய்வுபெற்றபின் நன்கு கவனிக்கப்படுகிறார்கள். தங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் மாற்றல் செய்யப்படும் அச்சுறுத்தல்களும் மேற்கொள்ளப்படுகிறது. இவையனைத்தும் நீதித்துறையின் சுதந்திரத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி, குற்றப் புலனாய்வுக் கழகம், தேர்தல் ஆணையம், பல்கலைக் கழகங்கள், அமலாக்கத்துறை, திரைப்படத் தணிக்கைத்துறை போன்ற சுயேச்சையான அமைப்புகளின் விவகாரங்களிலும் ஊடுருவுவதன் மூலம் இந்நிறுவனங்களின் சுயாட்சித்தன்மையையும் ஒன்றிய அரசாங்கம் நாசம் செய்து கொண்டிருக்கிறது.
மதவெறி மற்றும் அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கி இருக்கின்றன
சமீபநாட்களில் மத அடிப்படைவாதமும், மதவெறியும் மிகவும் சிக்கலான வழிகளில் தலைதூக்கி இருக்கின்றன. இந்த சக்திகள் மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன. இவை மக்களிடையே சுவர்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றன, அவநம்பிக்கை, சந்தேகம், பொறாமை மற்றும் வன்முறை உணர்வுகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. மிகவும் சங்கடத்தை உண்டாக்கும் விஷயம் என்னவென்றால் இந்த சக்திகள், அதாவது அரசியல், நிர்வாகம், கல்வி, காவல்துறை, சினிமா, விளையாட்டு, இசை, கலை போன்று அனைத்திலும் ஊடுருவியிருக்கின்றன. இந்த சக்திகள் அநேகமாக நம்முடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், அதாவது நாம் என்ன உண்ண வேண்டும், நாம் என்ன உடுத்த வேண்டும், நான் என்ன பேச வேண்டும், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், நாம் யாரைக் காதலிக்க வேண்டும், நாம் யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், நாம் யாருடன் பரிவர்த்தனைகள் செய்துகொள்ள வேண்டும், நாம் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கட்டளையிடுவதன் மூலம் நம் பன்முகக் கலாச்சாரத்தை அழித்திட முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. பல சாமியார்கள் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அரசியல் அதிகாரம் மதத்தலைவர்களின் கைகளுக்கு மாறிக்கொண்டிருப்பது ஓர் ஆபத்தான அடையாளமாகும். இந்த சக்திகள் மதச்சார்பின்மைக்கும் பன்முகக் கலாச்சாரத்திற்கும் ஓர் ஆழமான அச்சுறுத்தலாகும். இதன் விளைவாக, நாட்டின் அமைதி சங்கடத்திற்குள்ளாகி இருக்கிறது, நாட்டின் முன்னேற்றம் முடங்கிக் கொண்டிருக்கிறது.
சேமநல அரசு (welfare state) காணாமல் போய்க்கொண்டிருக்கிறது
சேமநல அரசு (welfare state) என்பதன் பொருள் அரசாங்கம் மக்களுக்கு உணவு, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு முதலான அடிப்படை வசதிகளை அளித்திடும் பொறுப்புக்களை தங்கள் தோள்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும். ஆனால் இன்றைய அரசாங்கங்கள் இவ்வாறான அரசமைப்புச்சட்டக் கடப்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் வேலைகளில் இறங்கியிருக்கின்றன. அரசாங்கங்கள் மக்களுக்குக் குடிநீர் வசதி செய்து கொடுத்தல், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு முதலானவற்றைத் தனியார் கைகளில் சரண் செய்துகொண்டிருக்கின்றன.
இன்றைய இந்தியா முன்னிருந்ததைக் காட்டிலும் செல்வாதாரமான ஒன்றாகும். ஆனாலும், இந்த செல்வாதாரங்களை வைத்திருப்போர் யார் என்பதுதான் கேள்வி. நம் நாட்டின் மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டினர் நம் நாட்டின் செல்வாதாரங்களில் 60 விழுக்காட்டை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகையில் 9 விழுக்காட்டினர் நாட்டின் செல்வாதாரங்களில் 20 விழுக்காட்டைத் தங்கள் வசம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகையில் மீதம் உள்ள 90 விழுக்காட்டினர் வசம் வெறும் 20 விழுக்காடு செல்வாதாரமே மிஞ்சி இருக்கின்றன. இவ்வாறு செல்வ விநியோகம் சமமின்றி விநியோகிக்கப்பட்டிருப்பது மக்களில் பெரும்பகுதியினரை பசி-பட்டினி, வறுமை, எழுத்தறிவின்மை, மருத்துவ வசதி கிடைக்காத நிலைமை, வேலையின்மை, பாதுகாப்பின்மை போன்றவற்றிற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது.
சமூக நீதி பொருத்தமின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது
நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் மாபெரும் பங்களிப்புகளில் ஒன்று நம் சமூகநீதிக் கொள்கையாகும். சமூக நீதி என்பதன் பொருள் அனைத்து அம்சங்களிலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவதாகும். சமூகநீதி என்பதன் பொருள் பாகுபாடற்ற வளச்சி என்பதாகும். இதன் பொருள் வளர்ச்சியின் பயன்கள் இதுநாள்வரையிலும் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த சமூகத்தினருக்கும் சென்றடையக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என்பதாகும். இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியின் ஒரு சிறிய அங்கமேயாகும். இட ஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியாகிவிடாது.
ஒன்றிய அரசாங்கத்தின் கீழும் மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கீழும் 60 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய அரசாங்கங்களின் கொள்கை, பொதுத்துறையை இல்லாமல் செய்வது என்பதாகும். முதலீடுகளை விலக்கிக்கொள்ளுதல் என்னும் கொள்கை (policy of disinvestment) இப்போது பணமாற்றுக் கொள்கை (monetisation) என்று அழைக்கப்படுகிறது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைக் குறைத்திடும். கொஞ்ச காலத்தில் வேலைகளையே இல்லாது ஒழித்துக்கட்டும். முதலீடுகளை விலக்கிக்கொள்ளுதல் என்னும் கொள்கை காரணமாக பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக சமூக நீதி என்பதே நம் சமூகத்தில் பொருத்தமற்ற ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.
சமூக நீதியின் விழுமியங்களுக்கு ஊறு விளைவித்திடும் மற்றொரு நிகழ்ச்சிப்போக்கு, ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்புமுறை மற்றும் அவுட்சோர்சிங் (outsourcing) முறைகளாகும். தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் இன்றைய முறையில், இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டன.
கூட்டாட்சி அமைப்புமுறைக்கு அச்சுறுத்தல்
உச்சநீதிமன்றம், கேசவானந்தா பாரதி வழக்கில், கூட்டாட்சி அமைப்புமுறை நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று என்கிற தீர்முடிவினை அளித்திருக்கிறது. மேலும் நீதிமன்றம், இந்த அடிப்படைக் கட்டமைப்பு திருத்தப்பட முடியாதது (unamendable) என்றும் தீர்முடிவினைச் செய்திருக்கிறது. இன்றைய தினம் இந்தக் கூட்டாட்சி அமைப்புமுறை ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே வரி என்ற பெயரில் ஜிஎஸ்டி அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பொருளாதார அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிந்துகொண்டிருக்கிறது. மாநில அரசாங்கங்கள் இப்போது நகராட்சிகளின் நிலைக்கு சுருக்கப்பட்டிருக்கின்றன. மாநில அரசாங்கங்கள் இப்போது ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அரசியல் அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற/சட்டமன்ற பிரதிநிதிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து வேறு அரசியல் கட்சிகளுக்குத் தாவுவது என்பது நாளும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறி இருக்கின்றன. பெரும்பான்மையாக இருந்த அரசாங்கங்கள் சிறுபான்மை அரசாங்கமாக குறைக்கப்பட்டிருக்கின்றன, சிறுபான்மையாக இருந்த அரசியல் கட்சிகள் இவ்வாறான கட்சித் தாவல்கள் மூலம் பெரும்பான்மையாக மாறியிருக்கின்றன. கட்சித் தாவல்கள் என்பதும் ராஜினாமாக்கள் செய்வதென்பதும் நாட்டில் பல மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்களின் அதிகாரவரம்பெல்லைகளுக்குள் மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்கள், திருத்தப்பட்ட பண மோசடித் தடைச்சட்டம், தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மின்சாரத் திருத்தச் சட்டம் முதலானவை சில எடுத்துக்காட்டுகளாகும். மாநில அரசாங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, ஒன்றிய அரசாங்கம் மாநிலங்களின் அரசாங்க அதிகாரிகளுக்கு நேரடியாகவே அறிவுறுத்தல்களைக் கூறுவது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான மற்றுமொரு அச்சுறுத்தலாகும்.
சில ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் முகவர்களாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்ட்ரா, கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் போன்று மாநிலங்களில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்ச்சிப்போக்குகள் இதனை வெளிப்படுத்துகின்றன. மாநில அரசாங்கங்களுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் போக்குகள் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரே நாட்டினம் என்ற பெயரில், நாட்டின் பன்முகத்தன்மை அச்சுறுத்தப் பட்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மின்சாரம் (grid), ஒரே மதம் போன்று மதவெறி சக்திகளால் எழுப்பப்படும் சில முழக்கங்கள் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது ஏவப்பட்டுள்ள மற்றுமொரு அச்சுறுத்தலாகும். இந்த சவால்களை எதிர்த்துநின்று நாம் முறியடிக்காதுபோனால், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைந்திடும்.
முடிவுரை
நம் அரசமைப்புச்சட்டமானது, நாட்டிலுள்ள பல்வேறு மதநம்பிக்கையாளர்களையும், சாதியினரையும், கலாச்சாரங்களைப் பின்பற்றுவோரையும், பல்வேறு மொழி பேசுவோரையும், பல்வேறுவிதமான நம்பிக்கையுடையவர்களையும், பழக்கவழக்கங்கள் உள்ளவர்களையும், சிந்தனாவாதிகளையும், உணவுப் பழக்கங்கள் உள்ளவர்களையும், ஒருங்கிணைத்து, ஒன்றுபட்டு முன்னேற வழிவகுத்துத் தந்திருக்கிறது. இந்த அரசமைப்புச்சட்டம்தான் நாம் அனைவரும் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி என்றழைக்கப்படும் சித்தாந்தங்களை வேரூன்றச் செய்து, வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசமைப்புச்சட்டம்தான் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதத்தை அளித்திருக்கிறது.
நம் இந்திய அரசமைப்புச்சட்டம் மதம், இனம், சாதி, பாலினம், மொழி அல்லது பிறப்பிடம் என்னும் அடிப்படையிலான அனைத்துப் பாகுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு நாட்டிலுள்ள அனைவருக்கும் சம அளவில் பாதுகாப்பையும், சம அளவில் வாய்ப்புகளையும் உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. எனவே, நமக்கும் நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உன்னதக் கொள்கைகளை வகுத்துத்தந்துள்ள நம் அரசமைப்புச் சட்டத்தை நாம் பேணிப் பாதுகாத்திட வேண்டும்.
(கட்டுரையாளர், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி)
தமிழில்: ச. வீரமணி