Muthangalai Parathal ShortStory By Kumaraguru. குமரகுருவின் முத்தங்களாய் பறத்தல் சிறுகதை

முத்தங்களாய் பறத்தல் சிறுகதை – குமரகுரு




அவன் முதல் முதலில் கடிதம் எழுதத் துவங்கியிருந்தான். எப்படி எழுத வேண்டுமென்று அவனுக்கு ஒன்றுமேப் புரியவில்லை. அவன் முன்னர் வெள்ளை காகிதம் படபடத்தபடி “எதையாவது எழுதி தொலையேன்?” என்று கெஞ்சி கொண்டிருந்தது.

கலக்கமில்லாத நதி நீரில் தெரியும் முகம் போல காகிதத்தில் அவன் எண்ணங்கள் பிரதிபலித்தன. ஆனால், அவனின் பேனா ஒரு புள்ளியைத் தாண்டி எழுத்துக்களை எழுதாமல் இன்னும் குழம்பி கொண்டிருந்தது.

கடிதமாக எழுதாமல் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடலாம் என்று தோன்றிய போதெல்லாம், அதற்கு ஏனோ அவன் மனம் ஒப்பவில்லை. திரும்ப திரும்ப, “கடிதமாக எழுது” என்று கட்டளையிட்டு அவனை ஒரு வழி செய்து கொண்டிருந்தது.

அவளை அவன் பார்த்ததிலிருந்து, அவனுக்குள் என்னென்னவோத் தோன்றின. அவற்றை எழுதிவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடுமோ என்று வேறு அஞ்சினான். கடிதம் ஒரு போத்தலைப் போலவும் அதில் மிட்டாய்களையிட்டு நிரப்புவதாகவும் நினைத்து கொண்டான். வண்ண வண்ண மிட்டாய்களை சுமந்த போத்தலின் மீது கண்ணாடியின் வழி விழும் ஒளிக்கீற்றுகள் எங்கெங்கும் சிதறித் தெறித்து கிடப்பதைப் போல அவனுக்குள் அன்பின் வெளிச்சம் சிதறி கொண்டிருந்தது.

சொற்களைப் பிடித்திழுத்து கொண்டு வந்து பேனா முனைக்குள் வைத்து நிறுத்தினாலும், கை எழுத மறுத்தது. பேச நினைத்து அருகில் சென்றால் நாதழதழுப்பதைப் போல, அவனின் உள்ளமெலாம் தழுதழுத்தது. அவனின் தடுமாற்றத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாத காகிதம், அவன் பேனா முனையிலிருந்து மையுறிந்து பெருவட்டமாய் பரவலைத் துவங்கியிருந்தது.

அந்த காகிதத்தையெடுத்து கசக்கியெறிந்ததும், அடுத்த காகிதத்தை எடுத்தான். கைகளால் மெல்ல தடவி,”உன்னை நம்பிதான் எழுத போகிறேன். எனக்கெதுவும் தொந்தரவின்றி, நான் எழுதியதை அப்படியே அவளிடம் காட்டுவாயா காகிதமே?” என்று அதனிடம் கட்டளையிட்டுவிட்டு, “அன்பே!” என்று எழுத துவங்கினான்.

ஏனோ? எதற்காகவோ? நதியில்லாத ஊரில் மண் மீது விழும் பழுத்த இலை போலவொரு துளி கண்ணீர் உகுந்து காகிதத்தின் மீது சொட்டியது. எதற்காக அழுகிறான் என்று யோசிக்க முடியாத நிலையில், அவனுக்குள்ளிருந்த பேரன்பு வெள்ளப்பெருக்கென அழுகையாக வெளியேறத் துவங்கிவிட்டது. அவனின் இயலாமையை எண்ணி வருந்தவும் முடியவில்லை.

அவசர அவசரமாக கண்களைத் துடைத்து கொண்டு கண்ணீரில் நனைந்த காகிதத்தைக் கசக்கி எறிந்த பின், இன்னொரு காகிதத்தை எடுத்து, “இனியாளே! உன் கண்கள் எப்போதும் போல் மின்னி கொண்டேயிருக்கின்றன, அவை என்னைப் பார்ப்பதைப் போலவே உணர்கிறேன். அவை என்னை காணும் போதெல்லாம் நான் குலை நடுங்கி போகிறேன். எனக்குள் பெரிய குமிழொன்று உருவாகி வெடிப்பதைப் போலிருத்கிறது. ஏன்? சில நேரம் நானே குமிழாகி உடைவதைப் போல உணர்கிறேன்.

என் மீது மட்டுமே பெருமழை பொழிவதைப் போலும் என்னைச் சுற்றிலும் அழகான பூந்தோட்டம் இருப்பதைப் போலவும் நான் நனையவே ஒரு அருவி உருவாகியிருப்பதாகவும் தோன்றுகிறது.

இவையெல்லாம் தற்தாலிகமானவைதான் என்று என் மனம் மீண்டும் மீண்டும் ஒரு உளி போல் தட்டி கொண்டேயிருந்தாலும், அந்த இன்பத்தில் மயங்கி மயங்கி, காதலாக-பேரன்பாக-பெருங்கருணையின் சிலையாக நீ உருவாகி விட்டாய்.

நடந்து செல்லும் வழி நெடுக நீயும் உன் முகமும் புன்சிரிப்பும் இனிய சொற்களும் என்னுடன் நடந்து வருவதைப் போன்ற மாயம் தொடர்ந்து நிகழ்கிறது. நம் கல்லூரி காலத்தில் உன்னோடு உரையாடிய பொழுதையெல்லாம் நினைத்து சிரித்து கொள்கிறேன். ஒரு முறையேனும் என் கண்களில் நீ காதலைக் கண்டாயா? அது முளைத்து பெருந்தருவாகி பூத்து குலுங்கி கொண்டிருப்பதைக் கண்டாயா?

உன்னிடம் சொல்லாமல் இருந்திருப்பேன். ஆனால், செடிக்கு நீரூற்றாமல் விட்டால் கருகி விடுவதைப் போல இல்லை இந்த பேரன்பு. சொல்லாமல் விட்டால் இன்னும் பெரிதாகிப் பெருங்கடலாகி உள்ளேயொரு சுனாமியே வந்து என்னை அள்ளிச் சுருட்டி விழுங்கி விடுமோ என்ற அச்சத்தில்தான் இப்போது இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

உன் மீதான பேரன்பின் துவக்கம் எதுவெனத் தேடியலைந்திருக்கிறேன். எல்லோரோடும் சகஜமாக உரையாடும் உனக்குள் எப்போதும் ஒரு துளி சோகம் சொட்டியபடியே இருப்பதை அறிந்திருக்கிறேன். எனக்கு தெரியும், உன்னால் கல்லூரிக்கு வந்து படிக்க முடிந்ததே ஒரு சாதனைதான் என்று.

மதம் தாண்டி , சாதி தாண்டி பல காரணங்கள் இருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் பள்ளி கல்லூரி என்று எங்கு சென்றாலும் அவர்களின் படிப்பைக் தடுக்கவென்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் தாண்டிதான் நீ கல்வி பயில வருகிறாய் என்று நான் அறிவேன். அதனால்தான் நம் கல்லூரி காலத்தில் நெருங்கியிருந்தாலும் தூரமாகவே இருந்தபடி உன்னை காதலித்து கொண்டிருந்தேன்.

எனக்கென்று எந்த குறிக்கோளும் இல்லை. ஆனால், நீ படிப்பில் ஆர்வமுள்ளவள், எப்படியாவது டாக்டராகி, பிரசவ மருத்தவராகி பல உயிர்களை வலியின்றி இவ்வுலகிற்கு அழைத்து வர வேண்டுமென்ற பெரும் அவா கொண்டவளென்று தெரியும்.

நான் டாக்டராகவே ஆசை கொள்ளவில்லை. என் பெற்றோர் இருவரும் டாக்டர்கள் என்பதாலும் பணம் அதிமாக வைத்திருந்தார்கள் என்பதால் காசு கொடுத்து என்னையும் டாக்டராக்க நீ படித்த கல்லூரியில் என்னையும் சேர்த்துவிட்டார்கள் என்றும் உன்னிடம் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

நாம் பேசி கொண்டிருக்கும் போது நீ எப்போதாவது என்னிடம் எதேனும் ஒரு வித்தியாசத்தை கண்டிருக்கிறாயா? ஆனால், என்னால் உணர முடிந்தது, நீ என்னருகில் இருந்தால் நான் அதிகம் சிரிப்பேன், அதிகம் பேசுவேன், மற்ற நண்பர்களே வியக்குமளவு அதிகமாக “விட்” அடிப்பேன்!! ஆனால், அவையெல்லாம் நீ என்னருகிலிருந்த மகிழ்ச்சியில்தானேயொழிய உன்னை மயக்கும் முயற்சியல்ல. ஆனால், நண்பர்கள் அதை கண்டுபிடித்துவிட்டார்கள். நீ கண்டுபிடித்தாயா என்றுதான் எனக்கு இன்னும் தெரியாது!

காலத்தின் கையில் இருக்கும் மந்திர கோலிடம் நமக்கான மாயம் இருப்பதை நான் அறிவேன். இல்லாத ஒன்றை இருப்பதாகவும். இருக்குமொன்றை மறைத்து வைப்பதும். காலத்தின் மந்திர விளையாட்டென்று நன்கறிவேன்.

இந்த கடிதம் ஒரு அம்பு போல் உனை நோக்கி வரலாம் அல்லது வண்ண நீர் நிரம்பிய பலூனைப் போல் அல்லது இலையின் நுனியிலிருந்து உதிர்ந்த துளி போல் அல்லது உயிர் பயத்தில் ஓடி வந்த மானாக அல்லது அரவணைப்பிற்காக ஏங்கி வரும் குழந்தையாக…

நீ என் பேரன்பை ஏற்று கொண்டாலும் இல்லையென்றாலும் இந்த கடிதத்தின் சொல் ஒவ்வொன்றும் உணர்ச்சிப் பெருக்கில் காதலின் போதையில் நான் வெளிப்படுத்தும் நம் ஐந்து வருட பழக்கத்தில் ஊறித் திளைத்த ஒயினைப் போன்றது. அதன்சுவையை உன்னோடு பகிராதிருத்தல் தரும் வலியை சுமக்க இயலாமல் நான் இதை பிரசவித்துவிட்டேன்.

உனக்கு இந்த கடிதத்தை அனுப்பும் தைரியமே இல்லாமல் மனதிலுள்ளதை அப்படியே எழுதி கொண்டிருக்கிறேன். எழுதத் துவங்கும் முன் சிறிது நேரம் அழுகையும் இப்போது மென்புன்னகையும் என மாறி மாறி உணர்ச்சியின் ததும்பலில் கரைபுரண்டு எழுதியபடியிருக்கிறேன்.

மலர் மலராய் தாவி அமர்ந்து தேனுறிஞ்சும் தேனீயாக கட்டிய இந்த தேன் கூட்டிலிருந்து தேனை மட்டும் எடுத்து கொள் அன்பே!! தேனீயைப் பற்றி கவலை கொள்ளாதே… அது அன்பில் எப்போதும் திளைத்து கிடக்கும்!!

உனக்காக,
நீ இல்லையென்றாலும்,
நன்றி”
என்று எழுதி முடித்தவனின் முகத்திலிருந்து பிரகாசமாய் படர்ந்தொளிர்ந்தது காதலின் வியர்வைத் துளிகள்!! அவன் இப்போது முழுதும் நிரம்பிய பலூனாக உணர்ந்தான்…

காகிதத்துக்கொரு முத்தம் கடிதத்துக்கொரு முத்தம் கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்துக்கொரு முத்தம் பேனாவுக்கும் விரல்களுக்குமொரு முத்தம் என்று முத்தங்களாய் பறந்து கொண்டிருந்தான்…