சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, அக்டோபர் 14-18 தேதிகளில் விஜயவாடாவில் நடைபெற்றது. அக்டோபர் 15 அன்று நடைபெற்ற துவக்கவிழா மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:]
அன்பார்ந்த தோழர்களே!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு இதமான சகோதர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துவக்க விழா நிகழ்வுகளில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய தினம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக, இடதுசாரிக் கட்சிகளிடையே பரஸ்பரம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டிருப்பதற்காக இதர இடது சாரித் தலைவர்களையும் வாழ்த்துகிறேன்.
தோழர்களே, நண்பர்களே!
ஆந்திர மாநிலத்தின் அரசியல் மையமாக விளங்கும் விஜயவாடாவில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த மாநகரமானது பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர நடவடிக்கைகளில் மையமாக இருந்திருக்கிறது. அது இன்றளவும் தொடர்கிறது. நம் நாட்டில் நடைபெற்ற மிகவும் குறிப்பிடத்தக்க மாபெரும் மக்கள் போராட்டம் நடந்த இடங்களில், மிகவும் கொடூரமான நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரதாக விவசாயிகள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் நடந்த இடங்களில் ஒன்றாக விளங்கும் அரசியல் மையத்தில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த ஆயுதப் போராட்டம், 18 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று, சுமார் 30 லட்சம் விவசாயிகளை விடுவித்தது. 16 ஆயிரம் சதுர மைல்களில் அமைந்திருந்த மூவாயிரம் கிராமங்களில் பத்து லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்கு விநியோகித்தது.
இந்த ஆயுதப் போராட்டமும், இதேபோன்று கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் வங்கத்தில் நடைபெற்ற தேபாகா போராட்டம், கேரளாவில் நடைபெற்ற புன்னப்பரா-வயலார் போராட்டம், மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற ஓர்லி பழங்குடியினர் போராட்டம், அஸ்ஸாமில் சுர்மா பள்ளத்தாக்கில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள்தான் நாட்டிலிருந்த ஜமீன்தாரி அமைப்புமுறை ஒழிப்பு, பல்வேறு நிலச்சீர்திருத்தங்களை நாட்டின் மையத்திற்குக் கொண்டு வந்தது. இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கம் நடைபெற்ற பகுதிகள் அனைத்திலும் ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிரான போராட்டங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் இம்மாநாடு நடைபெறுவது கம்யூனிச செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்கும், இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கும் உதவிடும் என நான் நம்புகிறேன்.
தோழர்களே! நண்பர்களே!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, சுதந்திர இந்தியாவும் நம் மக்களும் அனைத்துவிதத்திலும் நெருக்கடிக்கு உள்ளாகி மிகப்பெரிய அளவில் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற நிலையில் நடந்துகொண்டிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பாஜக அரசாங்கம் பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை மிகவும் வெறித்தனமாகப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது. மதச் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களைக் குறிவைத்து, தன்னுடைய நச்சு வெறுப்புப் பிரச்சாரத்தையும் வன்முறை வெறியாட்டங்களையும் வெறித்தனமான முறையில் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் இந்தியக் குடியரசின் இன்றைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைத் தங்களின் சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதேசமயத்தில் பாஜக அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்களை, மதவெறி-கார்ப்பரேட் கள்ளப்பிணைப்பின் மூலமாக வலுப்படுத்தி, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து நாட்டின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது, அரசியலில் லஞ்ச ஊழலை சட்டபூர்வமாக்கி இருக்கிறது. ஜனநாயக உரிமைகளையும் குடிமை உரிமைகளையும் எதேச்சாதிகாரமுறையில் முழுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நண்பர்களே! தோழர்களே!
இந்தியக் குடியரசின் குணாம்சத்தை மாற்றுவதற்காக திட்டமிட்ட முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி அமைப்புமுறை, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகிய நான்கு அடிப்படைத் தூண்களும் இவர்களின் ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் வெறித்தனமான முறையில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார இறையாண்மையையே ஒழித்துக்கட்டும் விதத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சிகள் எல்லையில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளும் வாரிவழங்கப்பட்டு வருகின்றன.
அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள்கைகள் மீது கடும் தாக்குதல்கள். இவை அனைத்தும் மோடி அரசாங்கம், இந்தியாவை ஓர் இந்துத்துவா நாடாக மாற்றுவதற்காக மேற்கொண்டுள்ள எதார்த்த நடவடிக்கைகளின் சமிக்ஞைகளாகும்.
ஒன்றிய மோடி அரசாங்கமும், மாநிலங்களை ஆளும் பல்வேறு பாஜக அரசாங்கங்களும் மதவெறித் தீயை விசிறிவிடும் வேலைகளை நோக்கமாகக் கொண்டு சட்டங்களை இயற்றி இருக்கின்றன. இந்தச் சட்டங்கள் அப்பாவி சிறுபான்மையினரைக் குறிவைத்துப் பிரயோகிக்கப்படுகின்றன. அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத்துரோகக் குற்றப்பிரிவு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் முதலானவை வகைதொகையின்றி பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவுகள் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமல்ல, தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக்கூறும் இதழாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு எதிராகவும் ஏவப்படுகின்றன. தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறப்படுவதே, தேசத்துரோகம் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு கல்வி, அரசியல், சமூகம், கலாச்சாரம் மற்றும் நிதி போன்று பல முனைகளிலும் கூட்டாட்சி அமைப்புமுறையின்கீழ் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதைப் பார்த்தோம்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் செயல்பாடுகள் பாஜக-வின் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதையும் பார்க்கிறோம். அரசமைப்புச்சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவையும் பாஜக ஆட்சியாளர்களால் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அதிலும் குறிப்பாக அமலாக்கத் துறையும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து, ஆளும் கட்சியின் ஓர் அரசியல் அங்கமாகவே செயல்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஜோடனை செய்யப்பட்ட செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆட்சியாளர்களின் இந்துத்துவா மதவெறி சித்தாந்தம் அறிவியலுக்குப் புறம்பானது, வரலாற்றுக்குப் புறம்பானது, பகுத்தறிவற்றதாகும். இந்து புராணங்களின் பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளையும், கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளையும் உண்மையான வரலாறு எனக் கூறி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
தோழர்களே! நண்பர்களே!
மோடி அரசாங்கமானது இந்தியா காலங்காலமாகப் பின்பற்றிவந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. இந்தியா இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக தன்னைத் தரம் தாழ்த்திக்கொண்டுவிட்டது. இஸ்ரேலுடன் போர்த்தந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் நாம் காலங்காலமாக பாலஸ்தீன போராட்டத்திற்கு அளித்து வந்த ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா பிணைப்பு ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தியா, அமெரிக்காவுடன் தன் ராணுவ ஒப்பந்தங்களைக் கெட்டிப்படுத்தி இருக்கிறது. சீனாவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணியை (QUAD alliance) ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தோழர்களே! நண்பர்களே!
அரசாங்கம், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவிட்டோம் என்று என்னதான் தம்பட்டம் அடித்தபோதிலும், நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக அதலபாதாள நிலைமைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றைக் கையாள முடியாத கையாலாகத்தனத்தின் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. வேலையின்மை மிகவும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதிகரித்துவரும் பணவீக்கம் கோடிக்கணக்கான மக்களை வறுமை மற்றும் பசி-பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளும், அதிகரித்துவரும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளும், மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்களின் போராட்டங்கள் உக்கிரமடைந்திருக்கின்றன.
குடியுரிமைத் திருத்தத் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள், குறிப்பாக பெண்களும் இளைஞர்களும் பெரும் திரளாக அணிதிரண்டதைப் பார்த்தோம்.
ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், மிகவும் முரட்டுத்தனத்துடன் இருந்துவந்த மோடி அரசாங்கத்தை, படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்தது. மத்தியத் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதற்கு எதிராக அகில இந்திய வேலை நிறுத்தங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றன. சமீபத்தில் அவர்கள் மார்ச் 28-29 தேதிகளில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றது. சமீப காலங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நடத்திடும் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி பெற்று வருகின்றன.
மக்கள் போராட்டங்களை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றிட இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். அதன் அடிப்படையில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியுடன் ஒருங்கிணைத்திட வேண்டும்.
அதே சமயத்தில் இந்துத்துவா மதவெறியர்களின் தாக்குதல்களைத் தனிமைப்படுத்தி, முறியடித்திட மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்ட வேண்டியதும் அவசியமாகும்.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், தன்னுடைய மாற்று மக்கள் ஆதரவுக் கொள்கைகள் மூலமாக மக்களின் மத்தியில் நல்லாதரவைப் பெற்று, கேரளாவின் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அதன் சாதனைகள் காரணமாக கேரளம், நாட்டிலேயே மனிதவள வளர்ச்சி அட்டவணையில் உயர்ந்த இடத்தைப் பதிவு செய்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்திட ஆர்எஸ்எஸ்-உம், ஒன்றிய அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாயின. இடதுசாரி சக்திகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு இவர்களின் முயற்சிகளை முறியடித்திட வேண்டும்.
இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சக்திகளும் இணைந்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும், இந்திய மக்களின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம் சத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காக முன்னேறிச் செல்வதற்கும், நாட்டு மக்களை அணிதிரட்டுவதன் மூலம் இந்தக் கடமைகளை நிறைவேற்றிட முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்தை வீழ்த்திடுவோம்!
இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி, ஒருங்கிணைத்திடுவோம்!
மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டங்களில் இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒருங்கிணைத்திடுவோம்!
இந்துத்துவா மதவெறிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை விரிவான அளவில் அணிதிரட்டிடுவோம்!
மார்க்சிசம்-லெனினிசம் நீடூழி வாழ்க!