பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற மிகவும் குறைவான அடிமாட்டு விலை – இந்திய வாழ்வாதாரங்களைத் தகர்ப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை – பிரவீன் சக்ரவர்த்தி | தமிழில்: தா. சந்திரகுரு
கடந்த வாரம் மகாராஷ்டிராவில் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள தலோட் என்ற சிறிய நகரத்திலுள்ள உள்ளூர்க் கடையில் திடீரென்று மக்களால் தங்களுக்குத் தேவையான கோல்கேட் பற்பசையை வாங்க முடியாமல் போனது. கோல்கேட் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பது, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை தலோட்டில் உள்ள மளிகைக் கடைக்கு வழங்குவதில்லை என்று நந்துர்பார் மாவட்ட விநியோகஸ்தர் முடிவு செய்ததாலேயே அந்த நிலைமை உருவானது. நிறுவனங்களிடமிருந்து நிறுவனங்களுக்கு (B2B) விற்பனை செய்கின்ற ரிலையன்ஸின் ஜியோ மார்ட் மற்றும் உடான் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முற்றிலும் மாறாக கோல்கேட் நிறுவனம் தனது பாரம்பரியமான விநியோகஸ்தர்களை நியாயமற்ற முறையில் நடத்துகின்றது என்று கூறி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் பொருட்களின் விநியோகஸ்தர்களும் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இந்தியாவில் கோல்கேட் போன்ற நுகர்வோர் நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்குகின்ற ஏறக்குறைய ஐந்து லட்சம் விநியோகஸ்தர்கள் அவற்றை லட்சக்கணக்கான வர்த்தகர்கள் மற்றும் பிற இடைத்தரகர்களின் வலையமைப்பு மூலமாக நாடு முழுவதும் உள்ள ஏழு லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அமைந்துள்ள ஒரு கோடியே முப்பது லட்சம் உள்ளூர் சிறு கடைகளுக்கு வழங்கி வருகின்றனர். அந்த உள்ளூர்க் கடைகளுடன் பல்லாண்டுகளாக உறவுகளை வளர்த்து வந்திருக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களில் பெரும்பாலானோர் சிறு குடும்ப வணிக நிறுவனங்களையே நடத்தி வருகின்றனர்.
தலோட்டில் உள்ள அந்த மளிகைக்கடை நுகர்வோருக்கு நூறு கிராம் கோல்கேட் பற்பசையை அதிகபட்ச சில்லறை விலையான (எம்ஆர்பி) ஐம்பத்தி ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறது. பற்பசை உற்பத்தியாளரான கோல்கேட் நிறுவனம் தன்னுடைய விநியோகஸ்தருக்கு நாற்பது ரூபாய்க்கு பற்பசையை விற்கிறது. நந்துர்பார் விநியோகஸ்தர் அதனை தலோட்டில் உள்ள அந்த மளிகைக்கடைக்கு நாற்பத்தைந்து ரூபாய்க்கு கொடுத்து வருகிறார். நுகர்பொருள் தொடர்பான தயாரிப்புகளின் விநியோகச் சங்கிலி பொதுவாக இந்தியாவில் இவ்வாறாகவே இருந்து வருகிறது.
இடைத்தரகர்களைத் தவிர்த்து விட்டு தலோட்டில் உள்ள மளிகைக் கடையுடன் மொபைல் போன் செயலி மூலமாக தங்களை நேரடியாக இணைத்துக் கொள்கின்ற தொழில்நுட்பங்களை புதுயுகத்து B2B தொழில்நுட்பநிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. விநியோகஸ்தரின் நாற்பத்தைந்து ரூபாய் என்ற விற்பனை விலையைக் காட்டிலும் குறைவாக முப்பத்தைந்து ரூபாய்க்கு உள்ளூர்க் கடைகளுக்கு பற்பசையை அவை நேரடியாக வழங்கத் தொடங்கியுள்ளன. தலோட் மக்கள் உள்ளூர்க்கடைகளில் இதுபோன்ற குறைந்த விலையில் பொருளை வாங்கிப் பயனடைவார்கள் என்றே இதனை மேம்போக்காகப் பார்க்கும் போது தோன்றும்.
இத்தகைய மிகவும் குறைவான விலைகளுடன் போட்டியிட முடியாததால் தங்களுடைய வணிகத்தை இழந்து விடும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் விநியோகஸ்தர்கள் அவை நியாயமற்ற நடைமுறைகளாக இருப்பதாகக் கூறுகின்றனர். கோல்கேட் போன்ற உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை B2B தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்குவதை நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள கோல்கேட் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததால், விநியோகஸ்தர்கள் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர்.
மிகவும் அரிதான ‘ஆக்கப்பூர்வமான அழிவு’
ஏற்கனவே உள்ள செயல்முறையைக் குலைப்பதன் மூலம் நடைமுறையில் இருந்து வருபவற்றை பயனற்றவையாக்குகின்ற புது கண்டுபிடிப்புகள் ‘ஆக்கப்பூர்வமான அழிவு’ என அறியப்படுகின்றன. அந்தக் கண்டுபிடிப்புகள் ஆரோக்கியமான செயல்முறையாக இருப்பதாக ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஷம்பீட்டர் கூறுகிறார். ஆனால் அந்த ஆக்கப்பூர்வமான அழிவு என்பது புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் ஏற்படுவதாக இல்லாமல், வெறுமனே விலை நிர்ணய அதிகாரம் மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்றால், உண்மையிலேயே அது ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி எழுகின்றது.
இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளூர்க் கடைகளிடம் தாங்கள் விற்கின்ற ஒவ்வொரு கோல்கேட் பற்பசையிலும் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. பாரம்பரியமாக இருந்து வருகின்ற விநியோகஸ்தர்களிடமிருந்து விலகி உள்ளூர்க் கடைகள் தங்களை நோக்கி நேரடியாக வருகின்ற வகையில் வேண்டுமென்றே அடக்க விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு தங்களுடைய தயாரிப்புகளை அவை விற்கத் துவங்கியுள்ளன. மேலும் உள்ளூர்க் கடைகளுக்கு மிகவும் விரிவான கடன்களையும், நடப்பு மூலதனத்தையும் அவை வழங்கி வருகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களை வென்றெடுப்பதற்காக மொபைல் ஃபோன் செயலி என்ற புதுமையை மட்டுமல்லாது, மிக அதிக அளவிலான விலை தள்ளுபடி, மலிவான நிதியுதவி போன்றவற்றையும் நம்பியே இருக்கின்றன.
உடான் நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் மொத்தத்தில் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது. ஜியோமார்ட் நிறுவனம் இன்னும் கூடுதலான இழப்பை அறிவித்திருக்கிறது. ஏற்படுகின்ற பேரிழப்பை அதிக அளவில் பணம் கிடைப்பதால் இத்தகைய இந்திய நிறுவனங்களால் சமாளித்துக் கொள்ள முடிகிறது. இந்த நிறுவனங்களுக்கு பெரும்பாலும் அமெரிக்க ஓய்வூதிய நிதி மற்றும் பல்கலைக்கழக அறக்கட்டளைகளால் நிதியளிக்கப்படுகின்ற வெளிநாட்டு துணிகர மூலதன நிறுவனங்களின் நிதிகள் வந்து குவிகின்றன. வெளிப்படையாகச் சொல்வதென்றால் நந்துர்பார் விநியோகஸ்தரை கோல்கேட் நிறுவனம் வெளியேற்றி விடும் போது தலோட் கிராமவாசிக்கு அமெரிக்க மூத்த குடிமகன் ஒருவரே தள்ளுபடி விலையில் கோல்கேட் பற்பசையை வழங்குபவராக இருப்பார். அவர்கள் அதற்காக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்ற உலகளாவிய மூலதனப் பாய்ச்சல்களுக்கே நன்றி சொல்ல வேண்டியிருக்கும். அத்தகைய மூலதனப் பாய்ச்சல்களே புதுமையை வளர்த்தெடுத்து, நுகர்வோருக்கு மகத்தான பலன்களை அளிக்கின்றன என்பதே புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடாக இருந்து வருகிறது.
மறுபக்கத்தில் இந்தியாவின் லட்சக்கணக்கான விநியோகஸ்தர்கள் மற்றும் இடைத்தரகர்களால் அதுபோன்ற நிதியைப் பெற முடிவதில்லை. பொதுவாக அவர்கள் சிறிய அளவிலான வங்கிக் கடன்களுக்கு ஈடாக தங்கள் தனிப்பட்ட சொத்துக்களை அடமானமாக வைத்து கட்டமைக்கப்பட்ட சிறு வணிகங்களையே பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்த சிறு நிறுவனங்கள் புது யுகத்து ஸ்டார்ட்அப்கள் மற்றும் நன்கு நிறுவப்பட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் சுதந்திரமாக முடிவில்லாது பாய்கின்ற வெளிநாட்டுப் பணத்தின் பாய்ச்சலில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பெறுகின்ற பணத்தை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக மட்டுமல்லாமல், தங்களுடைய போட்டியாளர்களைக் குறைப்பது மற்றும் அவர்களுடைய சந்தைப் பங்கைத் திருடிக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்வது வெளிப்படையானது. அவர்களால் ஏற்கனவே சந்தையில் இருப்பவர்களை அழித்து தங்களுக்கென்று அதிக சந்தைப் பங்கைப் பெற்றுக் கொள்ளும் வரை தங்களுக்கு ஏற்படுகின்ற பேரிழப்புகளை பல ஆண்டுகளுக்குத் தக்க வைத்துக் கொள்ளவும் முடிகிறது. அந்த இழப்புகளுக்குப் பிறகு தங்களுக்கான லாபத்தை ஈட்டிக் கொள்வதற்காக அவர்கள் விலைகளை உயர்த்திக் கொள்ளக்கூடும். அது தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்திடம் இந்தியா பெற்ற அனுபவத்தை ஒத்திருக்கும்.
அடிமாட்டு விலை நிர்ணயம் என்று அழைக்கப்படுகின்ற இந்த கொள்ளை நடைமுறை இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் சட்டவிரோதமான செயலாகவே இருக்கிறது. ஆனாலும் ஸ்டார்ட்அப்கள் என்ற இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பின்னணியில் விலை நிர்ணய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்ற இருண்ட பக்கமும் இருந்தே வருகிறது. இதுதான் உண்மையான ‘ஆக்கப்பூர்வமான அழிவு’ என்பதாக இருக்கும் என்றால், ஒவ்வொரு விற்பனையிலும் இழப்பைச் சந்தித்து, மலிவான நிதியை வழங்குவதைக் காட்டிலும் இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தலோட்டிலுள்ள கடை உரிமையாளரை தங்கள் புதுமையான செயலி மற்றும் செயல்திறன் மூலமாக கவர்ந்திழுப்பவையாக மட்டுமே இருக்கும்.
மிகக் குறைந்த விலையால் நுகர்வோர்கள் பயன்பெறுகின்றார்கள் என்றாலும், இந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சமமான, எளிதான பணம் கிடைக்காத லட்சக்கணக்கான விநியோகஸ்தர்கள், வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் அதனால் பாதிக்கப்பட வேண்டுமா? நந்துர்பரில் உள்ள விநியோகஸ்தர், வர்த்தகர்கள் மற்றும் தலோட்டில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர் என்று அவர்கள் அனைவரும் ஒரே உள்ளூர்ச் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அவற்றில் சில குடும்பங்களைக் குழப்பத்திற்குள் தள்ளிவிடுவதால் அந்தச் சமூகத்திற்குள் நிச்சயமாக சமூகப் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
உலகளாவிய பிரச்சனை
இது இந்தியாவிற்கான பிரச்சனையாக மட்டுமல்லாது உலகளாவிய பிரச்சனையாகவே இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். கடைப்பிடிக்கின்ற வழிமுறைகளைப் பொருட்படுத்தாமல் குறைந்த விலை நிர்ணயம் என்பது தனித்த, தகுதியான நோக்கம் என்று வழக்கத்தில் இருந்து வருகின்ற பொருளாதாரக் கருத்து இப்போது கடுமையான சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் தயாரிப்புகளை ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் இலவசமாக வழங்கியும், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து நுகர்வோருக்குப் பெரும் பயனளித்து வருகின்றன என்றாலும் அவை மிகப்பெரிய சமூக மோதல்கள் மற்றும் வேற்றுமையை ஏற்படுத்தவே செய்கின்றன. இந்த விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தொழில்நுட்ப நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷனின் புதிய தலைவரான லினா கான், இதுபோன்ற போட்டிக்கு எதிரான நடத்தையைச் சரிசெய்வதற்கான புதிய விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார்.
இந்தியா எதிர்கொள்ளவிருப்பது
இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டு மூலதனப் பாய்ச்சலில் கூடுதல் சிக்கல் உள்ளது. அமெரிக்காவில் சுதந்திரமாக அச்சிடப்படுகின்ற பெரும் தொகை இந்தியாவின் பங்குச் சந்தை மற்றும் ஸ்டார்ட்அப் சந்தைகளுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. இந்திய வணிகங்களில் ஒரு சிறிய பகுதியினருக்கு மட்டுமே அந்த மூலதனத்தைப் பெறுவது சாத்தியமாகிறது. அதுபோன்றதொரு நிலைமையில் இந்த விநியோகஸ்தர்களைப் போல இருக்கின்ற லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் பெருமளவிலான வருமானம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவதாக இருக்கின்றது. சுதந்திரமான மூலதனப் பாய்ச்சலின் முன்னாள் வெற்றியாளர்கள்கூட அவற்றின் சமூக தாக்கங்கள் குறித்து இப்போது மிகவும் எச்சரிக்கையுடனே இருக்கின்றனர்.
இதுபோன்ற வாதம் இ-காமர்ஸ் அல்லது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு எதிரான – முன்னேற்றத்திற்கு எதிரான – லுடைட் வாதமாக இல்லை என்பது தெளிவு. சட்டவிரோதமான, கொள்ளையடிக்கின்ற அடிமாட்டு விலை நிர்ணயம், எளிதாக வெளிநாட்டுப் பணத்தைப் பெறுவதற்கான முன்னுரிமை மூலம் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையே இங்கே உண்மையான பிரச்சனைகளாகும்.
இந்தியாவில் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்களின் (சுமார் பத்து கோடி மக்கள்) வாழ்வாதாரம் நுகர்பொருட்கள் விநியோகச் சங்கிலியில் இடைத்தரகர்களையே சார்ந்துள்ளது என்று சில மதிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு திடீரென்று இந்தக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தனிமையில் விடப்படுமேயானால், அது நாட்டில் மிகப்பெரிய சமூகக் கொந்தளிப்பையே ஏற்படுத்தும். அமெரிக்கப் பணத்தால் தங்கள் சமூகத்தில் உள்ள சில குடும்பங்கள் துயரத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை உணருகின்ற தலோட்வாசிகள் சற்றே கூடுதலான விலையில் தங்கள் பற்பசையை வாங்கிக் கொள்ளக்கூட தயாராக இருக்கக் கூடும்.
https://www.thehindu.com/opinion/op-ed/predatory-pricing-is-prising-indian-livelihoods-apart/article38279438.ece
நன்றி: தி ஹிந்து
தமிழில்: தா.சந்திரகுரு