கல்வியை காவிமயமாக்குவதை நோக்கி (தமிழில்: ச.வீரமணி)

கல்வியை காவிமயமாக்குவதை நோக்கி (தமிழில்: ச.வீரமணி)




தமிழில்: ச.வீரமணி

ஒன்றிய ஆட்சியாளர்கள் மதவெறி அடிப்படையில் சமூகத்தை எப்படியெல்லாம் காவிமயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது இந்தூரில் அரசினர் புது சட்டக் கல்லூரி மற்றும் சில இடங்களில் நடந்துள்ள விஷயங்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றன. இவை மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்தூர் புது சட்டக் கல்லுரியில் ஆசிரியர் பணியிடங்களில் முஸ்லீம்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற விதத்தில் மதவெறியர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகவும் மோசமான நிகழ்வாகும். ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கிவரும் ஏபிவிபி என்னும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் இக்கல்லூரிப் பிரிவானது அங்கே பணிபுரிந்துவரும் முஸ்லீம் ஆசிரியர்களுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்தக் கல்லுரியில், முஸ்லீம் ஆசிரியர்கள், “மத அடிப்படைவாத சிந்தனைகளைப்” பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறி அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இக்கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம் ஆசிரியர்கள் இருப்பதாகவும் கூறி இதனை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். உண்மையில் அக்கல்லூரியில் மொத்தம் பணியாற்றும் 28 ஆசிரியர்களில், நான்கு பேர் மட்டுமே முஸ்லீம்களாகும்.

ஏபிவிபி-யின் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில், முஸ்லீம் ஆசிரியர்கள், வளாகத்திற்குள் “முஸ்லீம் மற்றும் இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும் முஸ்லீம் ஆசிரியர்கள், மாணவிகளை உணவுவிடுதிகளுக்கும் (restaurants), சிற்றுண்டி விடுதிகளுக்கும் (pub) அழைத்துச் சென்று, “ஜிகாத் காதலையும்” (“Love Jihad”) தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அபத்தமான முறையில் கூறியிருக்கிறார்.

கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் இனமூர் ரஹ்மான், (இவரும் ஒரு முஸ்லீம்தான்), இந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ள நான்கு முஸ்லீம் ஆசிரியர்கள் மீதும் மற்றும் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களை ஐந்து நாட்களுக்கு ஆசிரியப் பணிக்கு வர வேண்டாம் என்று கூறியிருப்பதுடன், புகாரின்மீது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

இந்த நடவடிக்கையுடன் இவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. இப்போது புதிய குற்றச்சாட்டுகளை ஏபிவிபி மாணவர்கள் வீசி எறிந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்த முஸ்லீம் முதல்வர்மீதும் இப்போது குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இவர், டாக்டர் ஃபர்கட் கான் (Dr. Farhat Khan) என்பவர் எழுதிய “வன்முறையின் தொகுப்பு மற்றும் கிரிமினல் நீதிபரிபாலன அமைப்புமுறை” (“Collective Violence and Criminal Justice System”) என்னும் புத்தகத்தை வைத்திருக்கிறார் என்று கூறி குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இந்தப் புத்தகமானது ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறியிருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். தான் கல்லூரியில் முதல்வர் பொறுப்பை 2019இல் ஏற்பதற்கு முன்பே, 2014இலேயே இந்தப் புத்தகமானது கல்லூரியின் நூலகத்திற்கு வாங்கப்பட்டிருக்கிறது என்று அவர் விளக்கம் அளித்தபோதிலும்கூட, கிளர்ச்சியாளர்கள் அதனையெல்லாம் கண்டுகொள்ள விரும்பவில்லை. அவர் தன் பதவியை ராஜினாமா செய்வது வரையிலும் கிளர்ச்சிகளைத் தொடர இருக்கிறார்கள்.

ஏபிவிபி-யின் முறையீடுகளும், கிளர்ச்சியும் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர், நரோத்தம் மிஷ்ரா, அவர்களால் ஆதரிக்கப்பட்டுவருகிறது என்பதும், அவர்தான் காவல்துறையினரை அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறார் என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இதனை அடுத்து உள்ளூர் காவல்துறையினர் கல்லூரி முதல்வர் மீதும், மற்றொரு ஆசிரியரான மிர்சா மொஜி மற்றும் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 153-ஏ (இரு மதத்தினருக்கு எதிராக பகைமையை வளர்த்தல்), 295-ஏ (மத நம்பிக்கைகளை துவேஷத்துடன் நிந்தித்தல்) உட்பட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், மேற்படி புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் ஃபர்ஹட் கான் மற்றும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உட்பட மூவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் அளிக்க மறுத்ததால் அவர்களைக் கைது செய்திடக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இவ்வாறு, ஒருசில நாட்களிலேயே, முதல்வர் உட்பட அனைத்து முஸ்லீம் ஆசிரியர்களும், தாங்கள் வகித்தப் பொறுப்புகளிலிருந்து வலுவான முறையில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசாங்கத்தின் மறைமுக ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏபிவிபி-யினர் அளித்திடும் புகார்களின் அடிப்படையில் மதத் தீவிரவாதம் மற்றும் அதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக என்றே உயர் கல்வி இயக்குநரகத்தில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மதச்சிறுபான்மை ஆசிரியர்கள் குறி வைத்து நீக்கப்படும் வேறு சில நிகழ்வுகளும் உண்டு. பஜ்ரங் தள உறுப்பினர்கள் அளித்த எண்ணற்ற புகார்களை அடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடிசா (Vidisha) என்னுமிடத்தில் உள்ள ஒரு பள்ளியில் முஸ்லீம் முதல்வராக இருந்த திருமதி ஷைனா ஃபிர்டுவாஸ் (Shaina Firdous) என்பவர் நீக்கப்பட்டார். குணா மாவட்டத்தில் கிறித்தவ மிஷனரி பள்ளிக்கூடம் ஒன்றில் ஜஸ்டின் மற்றும் ஜாஸ்மினா காட்டூன் (Justin and Jasmina Khatoon) என்கிற இரு ஆசிரியர்கள், ஒரு மாணவர் அளித்திட்ட புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லீம் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு எதிரோக மதவெறி நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முஸ்லீம் மாணவர் ஒருவரின் பெயர் “கசாப் போன்று இருப்பதாகக்” கூறி அவருடைய ஆசிரியரால் அந்த மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு, கேலி செய்யப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் பார்னர் என்னும் ஊரில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் ஓர் ஆசிரியர், வகுப்பில் பயின்ற ஒரேயொரு முஸ்லீம் மாணவியைச் சுற்றி வளைத்துக்கொண்டு, நச்சு முஸ்லீம் எதிர்ப்பு கருத்துக்களை வீசியிருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர்களுக்கு புராதன பாரம்பர்யப் பெருமைகளைப் பறைசாற்றுகிறோம் என்ற பெயரில் கல்வியை காவிமயப்படுத்துவது என்பதும் மோடி அரசாங்கத்தின் இலக்குகளில் ஒன்றாகும். இவ்வாறு காவிமயப்படுத்துவதன் நடவடிக்கைகளில் உடனடியாக இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது சிறுபான்மை முஸ்லீம் ஆசிரியர்களும் மாணவர்களுமாவார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரபூர்வமாகவே இவை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பனவற்றை, கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்துவரும் முஸ்லீம் மாணவிகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்லூரிகளுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டதிலிருந்தும், மத்தியப் பிரதேசத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் சட்டக் கல்லூரிகளில் முஸ்லீம் ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதிலிருந்தும், அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதிலிருந்தும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு நாட்டின் பொதுக் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகத் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியா, 2023இல் ஜி.20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ‘ஒரே உலகம்-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம்’ என்னும் முழக்கத்துடன் அதிகாரபூர்வமாக ஏற்க இருக்கிறது. “மனிதகுலம் முழுமையும் ஒரே குடும்பமாக நல்லிணக்கத்துடன் மேம்பாடு அடைந்திடும் விதத்தில் இந்தியா இருந்திடும்” (“India stands for promoting harmony within the human family”) என்று மோடி படாடோபமாகப் பறைசாற்றியிருக்கிறார். ஆனால், இந்தியாவிற்குள் உள்ள பல்வேறு மதத்தினருக்கிடையேயும் மதவெறி அடிப்படையில் பிரித்தாளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒன்றிய அரசாங்கம் ஜி.20ஐ ஒட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் எண்ணற்ற கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. இதில் ஒரு நிகழ்வு இந்தூரிலும் நடைபெறவிருக்கிறது. இதே இந்தூரில்தான் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் முனவர் ஃபரூக்கி, அவருடைய நிகழ்ச்சிகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக ஓர் இந்துத்துவா சங்கி கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். இதே இந்தூரில்தான் சென்ற ஆண்டு வளையல் வியாபாரி ஒருவரான தஸ்லீம் அலி என்பவர் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் வளையல் விற்றார் என்று கூறி மிகவும் மோசமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு 107 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த இந்தூர் நகரில்தான் இப்போது கண்ணியம் மிக்க சட்ட வல்லுநர்களும், ஆசிரியர்களும் அவர்கள் முஸ்லீம் என்ற காரணத்தாலேயே வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி.20 நிகழ்வு இந்தூரில் நடைபெறும் சமயத்தில், இந்துத்துவா ஆட்சியாளர்களின் உண்மை சொரூபமும், ‘அனைவரும் ஒரே குடும்பம்’ (‘வாசுதைவ குடும்பகம்’) என்னும் பாசாங்குத்தனமான பிரகடனமும் தோலுரித்துக் காட்டப்படும்.

(டிசம்பர் 7, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

ஹிஜாப் வழக்கு தமிழில் ம.கதிரேசன்

ஹிஜாப் வழக்கு தமிழில் ம.கதிரேசன்




ஸ்ரீராம் பஞ்சு
———————————————————–
கட்டுரையாளர் ஸ்ரீராம் பஞ்சு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்.
சாமுவேல் பட்லர் என்பவர்19 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து இலக்கிய ஆளுமையாவார். எரவான் (EREWHON) என்பது அவரது புதுமையான நாவல். எரவான் என்பது உண்மையில் இல்லாத ஒரு கற்பனை தேசம். அந்த நாவலில் அவரது காலமான விக்டோரியா காலச் சமூகத்தை சாமுவேல் பட்லர் எள்ளி நகையாடி இருப்பார். எரவான் ஒரு பகடி இலக்கியம்.

இந்த இலக்கிய முறையை பின்பற்றி கட்டுரையாளர் ஸ்ரீ ராம் பஞ்சு ஒரு கற்பனையான நீதிமன்றத்தில், கற்பனையான நீதிபதிகளால், ஒரு உண்மையான பிரச்சனையின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பைக் கூறுகிறார். அதுவே சமூகத்தின் மனசாட்சியாக இருப்பதை காண்கிறோம்.
நீதிமன்றங்களின் சமூகப் பொறுப்பின்மையை சாடுகிறார்.
———————————————————-
ஹிஜாப் மனுதாரர்களின் வாதம்
———————————————————–
கர்நாடக மாநிலப் பள்ளி வாரியத்தின் பள்ளிகளுக்கான சீருடை விதிகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த சீருடைநெறிமுறைகளை அமல்படுத்துவதால் முஸ்லிம் மாணவிகள் தலையை துணியால் மறைக்கும் ஹிஜாப் அணிய முடியவில்லை; ஹிஜாப் அணிவது தடுக்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஹிஜாப் அணிய விரும்பினால் பள்ளிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் மூலமாக அவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது என்பது மனுதாரர்களின் வாதமாகும்.

இந்த மனு மீது பத்து நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று பள்ளி நிர்வாகத்திற்கு குறுகிய கால அவகாச நோட்டீஸ் நீதிபதிகளாகிய நாங்கள் பிறப்பித்தோம்..

சீருடை குறித்த அடிப்படை ஒழுங்கு நெறிமுறைகள் பற்றி ஆய்வு செய்தோம். அது மாணவர்கள் கட்டாயம் அணிந்து வர வேண்டிய உடைகளை பற்றிக் கூறுகிறது. அதில் தலையில் அணியும் துணி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

ஹிஜாப் என்பது தலையின் பின் பகுதியையும், கழுத்தையும் மறைக்கும் ஒரு சிறிய துணி. அது முஸ்லிம் பெண்கள் அனைவரும் அறிந்த உடை; அணியும் உடை. அது மத நடைமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.

ஹிஜாப்பிற்கு தடை விதிக்க கல்வி நிறுவனத்திற்கு உரிமை உள்ளதா?
———————————————————–
கல்வி நிறுவனங்கள் ஹிஜாப் அணிய விரும்பும் பெண்களை அதை அணிவதில் இருந்து தடுப்பதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதே எங்கள் அன்பு எழும் முக்கிய கேள்வியாகும்.

சீருடை
—————-
சீருடை என்பது சமச்சீரான தன்மையைக் குறிக்கிறது என்பவர்களின் கருத்தை நாங்களும் ஏற்கிறோம். சீருடை என்பது அனைத்து மாணவ மாணவியரும் அணியும் உடை என்றே பொருள்படும்.

இதன் மூலம் பல்வேறு சமூக அடுக்கைச் சேர்ந்தவர்களின் வித்தியாசங்கள் சரிப்படுத்தப்படும் என்பது இதில் உள்ள சாதக அம்சம். அனைத்து மாணவர்களுக்குமான ஒற்றுமையான சூழலை சீருடை வழங்குகிறது. இதன் மூலம் அனைவரும் சமம் என்று உணர வைக்க முடியும். இவை யாவும் குழந்தைகள் கல்வி கற்க உதவுகிறது.

நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும்
முக்கிய அம்சம்
———————————————————–
இவையெல்லாம் இருப்பினும் கூட,
சும்மா ஒரு வகுப்பறையும், எளிய சீருடை செட்டும் மட்டுமல்ல எங்கள் முன்புள்ள பிரச்சனை.
இந்துக்கள்,முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் பல்வேறு மதங்களை உள்ளடக்கியது தான் எனது நாடு என்பது பற்றி தான் எங்களது அக்கறை மிகுந்துள்ளது. இதுதான் முக்கியமான பிரச்சினை. இந்திய அரசியல் சட்டத்தால் நாம் அனைவரும் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளோம். அது சமத்துவம் ,சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை நமக்கு வழங்கியுள்ளது. அது சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் உள்ளடக்கியுள்ளது.மதச்சார்பற்ற பார்வை மற்றும் நடைமுறைகளை கட்டாயமாக்குகிறது. நமது சமூகக் கட்டமைப்பில் சகிப்புத் தன்மையை வலியுறுத்துகிறது. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையிலிருந்து வரும் சகிப்புத்தன்மை பற்றியே பேசுகிறேன். இவ்வாறு தான், நமது அரசியல்சட்ட அமைப்பு விழுமியங்களை நாங்கள் விளக்குகிறோம்.

கர்நாடக அரசு வழக்கறிஞரிடம் முன்வைத்த கேள்விகள்
—————————————————
ஒரு பிரச்சினையில் உண்மையை கண்டறிவதற்கான கேள்விகளை முன் வைப்பது நீதிபதியின் சிறப்புரிமையாகும். அதன்படி, கர்நாடக மாநில அரசு வழக்கறிஞரிடம் எங்களின் சில வாதங்களை முன் வைத்தோம்.

(1) பல வருடங்களாக குழந்தைகள் பள்ளிகளுக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். சீருடை அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஹிஜாபை திடீரென தடை செய்வதற்கான அவசியம் என்ன வந்தது?

(2)நீங்கள் பரிந்துரைத்த சீருடையில் தலையில் அணியும் முக்காடு ஒன்றுதான் பிரச்சனையா? அது எந்த வகையில் குழந்தைகளின் கல்வியில் குறுக்கிடும்?
அது கற்றலின் போது, மாணவிகள் கேட்பதையோ, பார்ப்பதையோ அல்லது கவனிப்பதையோ தடுக்குமா?

(3) உடல் சுமக்கும் அனைத்து வகையான மத அடையாளங்களையும் பட்டியலெடுத்து விட்டீர்களா? மார்பில் அணியும் பூணூல், கையில் கட்டும் கயிறுகள், நெற்றியிலிடும் திலகம், நெற்றியில் பூசும் திருநீறு, மணிக்கட்டில் அணியும் உலோக வளையங்கள், தலையில் அணியும் டர்பன் இவைகள் யாவும் உடலில் தரிக்கப்படும் மத அடையாளங்கள் தானே! இதுபோன்று விரிவான பட்டியல் எடுக்கப்பட்டிருந்தால் அதை எங்களிடம் காட்டுங்களேன் பார்ப்போம்!

பதில் அளிக்காத கர்நாடக
அரசு வழக்கறிஞர்
————————————————————
ஒரு வழக்கு இவ்வளவு மோசமாக தகர்ந்து போவதை நாங்கள் இதுவரையில் பார்த்தது கிடையாது. நாங்கள் கேட்ட முதல் இரண்டாம் கேள்விகளுக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞரிடம் இருந்து பதில் இல்லை. அரசு வழக்கறிஞர் ஓடி ஒளிந்து கொண்டார். தான் பள்ளி வாரியத்தில் இருந்து சீருடைக்கான இது போன்ற அறிவுறுத்தல்கள், நெறிமுறைகளை பெற முடியவில்லை. பள்ளி வாரியத்திற்கு இதற்கான பதில்களை வழங்க விருப்பமும் இல்லை என்பதே அரசு வழக்கறிஞரின் பதிலாக இருந்தது.

இரண்டு எளிய சோதனைகள்
————————————————————
இரண்டே இரண்டு விசயங்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று பாகுபாடு. ஒரே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே குறி வைப்பதில் இருந்தே மாநில அரசின் பாகுபாடு அப்பட்டமாக தெரிகிறது. அன்வர் அலி சர்க்கார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி விவியன் போஸ் (1950 களில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய புகழ்பெற்ற நீதிபதி) வழங்கிய புனிதமான தீர்ப்பைத்தான் அடிக்கடி மேற்கோளாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அரசின் பொது நிர்வாகம் கெட்ட நோக்கத்துடனும் , சமத்துவமற்ற கைகளுடனும் நிர்வாகம் செய்யக்கூடாது என்ற அவரின் சொல்லாடல் தான் நினைவுக்கு வருகிறது.

இரண்டாவது விசயம் நியாயத்தன்மை மற்றும் பகுத்தறிவான செயல்பாடு.
ஏன் எடுத்த எடுப்பிலேயே கல்வி வாரியம் ஹிஜாபை தடை செய்ய வேண்டி வந்தது? கல்வி வாரியத்தின் நெறிமுறைகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளதா?

எங்களைப் பொறுத்தவரையில் வரையில் ஹிஜாப் முஸ்லிம் மத நம்பிக்கைகளில் அடிப்படையானதா என்பதெல்லாம் பொருத்தமற்ற கேள்விகள். அது முஸ்லிம் மத நம்பிக்கையில் ஒரு பகுதி என்பதே எங்களுக்கு போதுமானது.

நீதிமன்றச் சுவர்களில் மத அடையாளங்களுடன் நீதித்துறை ஆளுமைகளின் படங்கள்
————————————————————–
மரியாதைக்குரிய நீதிமன்ற அறைகளை சுற்றி எங்களின் கண்கள் வட்டமிட்டன. புகழ் பெற்ற நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள் அவரவர் மதங்களுக்குரிய
மத அடையாளங்கள் ஆன தலையில் அணியும் உடைகளை அணிந்திருக்கும் படங்கள் நீதிமன்றச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர்களும் தங்களின் தொழிலுக்குரிய சட்டங்களால் ஆளப்படுகிறவர்கள்தானே!
ஆனாலும் நீதிமன்ற வாசலில் நுழையும் முன்பு தலைகளில் அணியப்படும் மத அடையாளங்களை களைந்து விட்டு வாருங்கள் என்று கேட்பதற்கு ஒருவருக்கும் தோன்றவில்லையே!
ஏன்? அப்படி கேட்பது அவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகிவிடும் அல்லவா!

பரந்த பார்வை
—————————-
ஹிஜாப் போன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்கும் போது-நாம் எவ்வாறு அரசியல் சட்டத்தை புரிந்து கொள்கிறோம்; எவ்வாறு அதை அமல் படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதிகளாக நாங்களெல்லாம் எங்கள் முன்பு குவிக்கப்பட்டுள்ள வழக்குக் கட்டுகளில் எங்களது குறுகிய பார்வை குறுக்கிட்டு விடக்கூடாது.
விரிந்து பரந்த பார்வையை
கிட்டப்பார்வை தடுப்பதற்கு அனுமதித்து விடக்கூடாது.

நீதிபதிகளின் வார்த்தைகள் ஆண்கள், பெண்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துகிறது. நீதிபதிகளின் வார்த்தைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் வலிமையை கொண்டுள்ளது.

சிறுபான்மையினர் மீதான அடக்கு முறையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
—————————————————————–
சமீப காலங்களில் சிறுபான்மையினர்,அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் தங்களின் மதத்திற்காகவே
சமூகவிலக்கம், வன்முறை போன்றவற்றை எதிர்கொண்டுள்ளன. இந்த குற்றங்களை செய்யும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சி நிர்வாகம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதில்லை என்பது யாரும் அறியாத ரகசியம் ஒன்றும் அல்ல.

ஒரு சமூகம் பாதுகாப்பின்மையை உணர்ந்தால் அது எதிர்வினையாற்றும். அந்த எதிர்வினையானது எளிதில் புலப்படும் ஒரு வடிவத்தின் வழியாக வெளிப்படும். அதை ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு இயக்கத்தின் வழியாக வெளிப்படும். ஹிஜாப் போன்ற எளியில் புலப்படும் ஒரு வடிவத்தின் வழியாகவும் வெளிப்படும்.

கல்வி நிர்வாகம் ஹிஜாப் போன்ற மத அடையாளங்கள் மீது கவனம் செலுத்தக் கூடாது. முஸ்லிம் சமூகத்தினருக்கு பாதுகாப்புணர்வை வழங்க வேண்டியது முக்கியமாகும். அது அனைவரின் பிறப்புரிமையாகும்.

கர்நாடகம் தமிழகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்
———————————————–
கர்நாடகம் தனது பக்கத்து மாநிலமான தமிழகத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான எந்த விதமான வன்முறைகளும் இன்றி இயங்க அந்த மாநிலம் போராடுகிறது. அங்கே சில இடங்களில் கல்வி நிர்வாகம் ஹிஜாபை தடை செய்வதாக அறிந்தவுடன், அரசின் கரங்கள் விரைவாக செயல்பட்டு கல்வி நிர்வாக முயற்சிகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தன. அங்கு ஹிஜாப் என்பது ஒரு பிரச்சனையே அல்ல. ஹிஜாப் அணிவதும் அணியாததும் அவரவர் தேர்வு. ஹிஜாப் பிரச்சனைக்கு பின்னர் தமிழ்நாட்டில் ஹிஜாப் அணியும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இல்லை.ஒரு விசயத்தில் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தி பிரச்சினையாக்க கூடாது என்பதே தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

கவனம் செலுத்த வேண்டியது தலைக்குள் தான்- தலைக்கு வெளியில் அல்ல
—————————————————–
ஒரு தேசத்தில் ஒரு சிறிய துண்டு துக்காணி துணிதான் முக்கியமான பிரச்சனையா? அதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்குமா?
நமது சுதந்திரமும் ,வாழ்க்கையும் ஒரு துண்டு துக்காணி துணி தீர்மானித்து விடுவதை நிச்சயமாக நமது தலைவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
எங்கள் நம்பிக்கைக்கு எதிராக மெல்லிய எதிர்ப்புக்குரல் எழுவதை நாஙங மறுக்கவில்லை
. அந்த எதிர்ப்புக் குரலும் மட்டுப்படுத்தப்படும் என்றும் நம்புகிறோம்.

கல்வி வாரியம் மாணவர்களின் தலையின் மீது என்ன அணியப்பட்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாணவர்களின் தலைக்குள் என்ன செல்கிறது என்பதன்மீது தான் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அவர்களின் வேலை.

வரலாற்றை திருத்தி எழுதுதல், மதிப்புக்குரிய தேசத் தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் போன்ற செயல்பாடுகளில் கல்வி வாரியம் ஆர்வம் காட்டக்கூடாது. அரசியல் சட்டப்படி ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலாச்சாரம், வரலாற்றை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு திருத்தி எழுதுவதில் ஆர்வம் காட்டக்கூடாது.

பாதுகாப்பற்ற உலகத்தில் கூடுதல் பாதுகாப்பின்மையை உருவாக்கக் கூடாது
———————————————————–
மாணவர்களுக்கு நல்ல கல்வி அளிப்பதும், தங்களின் வாழ்க்கைப் பாதையை அவர்களே அமைத்துக் கொள்ளும் வண்ணம் அவர்களை தயார் செய்வதும் தான் கல்வி நிர்வாகங்களுக்குரிய கட்டாய கடமையாகும்.
நாம் உருவாக்கிய இன்றைய உலகமானது இளைஞர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளது. கல்வி கற்பிப்பவர்கள் மாணவர்களுக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பின்மையை உருவாக்கி விடக்கூடாது.

மதப் பிரச்சனையை கொதி நிலைக்கு கொண்டுவர உதவக்கூடாது நீதிமன்றம்
————————————————————-
ஏன் இந்த வழக்கை சில வாரங்களுக்குள்ளாகவே விரைவாக முடித்துவிட்டோம் தெரியுமா? அதற்கான
காரணங்களை விளக்குகிறோம்.
மதங்களுக்கு இடையில் சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என்று எண்ணும் ஒரு சிலரின் ரகசிய விருப்பத்தை மோப்பம் பிடித்து விட்டோம். நீதிமன்றமானது இந்த வழக்கை கொதிநிலையிலேயே நீண்ட காலம் வைத்திருந்தால் சமூகத்தை பிளக்கும் தினசரி தலைப்புச் செய்திகள், பொறுப்பற்ற வாக்குமூலங்கள் குவிந்துவிடும்.
அது நமது சமூகக் கட்டமைப்பைத் தாக்கி சுக்குநூறாக்கிவிடும். அது தொலைக்காட்சிகளுக்கு பெருந்தீனியாகிவிடும். தொலைக்காட்சி தொகுப்பாளர்களின், செய்தியாளர்களின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும். அதை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம். அதற்கு நாங்கள் பங்குதாரராக இருக்க மாட்டோம்.

நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள்
———————————————————
இது போன்ற பிரச்சனைகள் எந்த அளவுக்கு கடுமையாக கையாளப்படுகிறதோ அந்த அளவுக்கு நாட்டுக்கு நல்லது.

எங்கள் கருத்துக்களை சுருக்கி இறுதியாகச் சொல்வதென்றால்-
அரசியலமைப்புச் சட்டமும் சட்டங்களும் மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்காகத்தான் இருக்கின்றன. அதை உறுதிப்படுத்துவதே எங்களின் பணி. ஆடை அணிதல் போன்ற பிரச்சனைகளில் திசை திருப்பப்படுவதை விட நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பணிகள் ஏராளம் உள்ளன.

தண்டனை சட்டத்தின் படி, விசாரணை இல்லாமலேயே ஏராளமானோர் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பிரச்சனை பற்றி கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
—————————————————————–
நன்றி- பிரண்ட் லைன்
நவம்பர்,18,2022
—————————————————————–
தமிழில் ம.கதிரேசன்

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துக கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துக கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




தமிழில்:ச.வீரமணி

உலகில் ஒவ்வொரு 11 நிமிடங்களில் ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ தன்னுடைய நெருங்கிய நபரால் (intimate partner) அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார் என்கிற அதிர்ச்சி அளிக்கும் உண்மைத் தகவலை, ஐ.நா.செக்ரடரி ஜெனரல் அந்தோனியோ குத்தரேசு (Antonio Guterres) தாக்கல் செய்தது, மிகவும் விரிவான அளவில் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. நவம்பர் 25 அன்று “பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை ஒழித்துக் கட்டுவதற்காக” சர்வதேச தினமாக அனுசரித்திட வேண்டும் என்று ஐ.நா.மன்றம் அறைவவல் விடுத்தது. உலகம் முழுதும் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அந்தோனியோ குத்தரேசு தெரிவித்துள்ளார்.

வழக்கமாக நடைபெறும் யுத்தங்களில் மக்கள் பலியாவதைக் காட்டிலும் அதிகமான அளவில் குடும்ப வன்முறை நிகழ்வுகளில் பெண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு குடும்ப வன்முறை நிகழ்வுகள், பெண்களுக்கு எதிரான அறிவிக்கப்படாத யுத்தமாக நடந்துகொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் குவி மையமாக இருக்கின்ற, நன்கு வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படக்கூடிய நாடுகளில்கூட, பெண்களுக்கு எதிரான பதிவுகள் மிகவும் மோசமாக இருப்பதாகவே, ஐ.நா. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த நாடுகளின் தரவுகளிலிருந்து தெரிய வருகிறது.

இந்தியாவிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. சராசரியாக, ஒவ்வொரு நாளும் 86 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று 2021 தேசியங்க குற்றப் பதிவேடு (National Crime Bureau) வெளியிட்டுள்ள தரவிலிருந்து தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மணி நேரத்தில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 49 பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் வரதட்சணை தொடர்பான குடும்ப வன்முறை காரணமாக சராசரியாக 18 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரே ஆண்டில் மட்டும் 6,589 வரதட்சணைச் சாவுகள் பதிவாகி இருக்கின்றன. வரதட்சணைக் கொடுமைகளிலிருந்து தப்பி உயிர் பிழைத்திருப்பவர்களிடம் ஆய்வு செய்தபோது, இவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், குடும்ப அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகியதாகக் கூறியதாக தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 காட்டுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் எந்தவொரு அரசாங்கத்தையும் வெட்கத்தால் தலைகுனியச் செய்யும். ஆனால் இந்தியாவில் இவை தொடர்பாக ஒரு வார்த்தைகூட ஆளும் அரசாங்கத்திடமிருந்து வெளிவரவில்லை. சிலர் இதனை பெருந்தொற்று (pandemic) என்றே சித்தரிக்கிறார்கள். உண்மையில், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது நம் சமூக அமைப்பில் தோன்றியிருக்கும் நோய் ஆகும். மூர்க்கத்தனமான சாதிய நடைமுறைகளால் தலித் பெண்கள் மிக மோசமான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், பெண்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு தண்டனை என்பது அநேகமாக இல்லை என்பதேயாகும். சாதிய மற்றும் ஆணாதிக்க சமூக அமைப்பு முறை காரணமாக, பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களில் 75 விழுக்காட்டினர் தண்டிக்கப்படுவதில்லை. இவ்வாறு தண்டனை என்பது மிகவும் குறைவாக இருப்பதற்கு, குற்றம் நடந்ததற்குப்பின்னர் விசாரணையில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ஏற்படும் சறுக்கல்களாகும். காவல்துறையினர் முறையாக விசாரிப்பதில்லை, நீதிமன்றத்திலும் நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கப்படுவது, வன்முறைக்கு ஆளான பெண்கள் மீது சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிக்கப்படுவது ஆகியவையே குறைந்த தண்டனைக்குக் காரணமாகும்.

கணவனால் அல்லது உறவினர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறையுடன் ஒத்துப்போகக்கூடிய பெண்ணே உதாரண மனுஷி (ideal woman), என்கிற சிந்தனைப்போக்கு புதிய ஆட்சியாளர்களின் கீழ் புதிய வாழ்க்கையாக பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. திருமணமான பெண் கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் (marital rape) அதனைக் கிரிமினல் குற்றமாகக் கருத அரசாங்கம் மறுத்துவிட்டது. ஏனெனில் அது குடும்பத்தைச் சீர்குலைத்துவிடுமாம். இதுதான் அவர்கள் மனநிலையின் பிரதிபலிப்பாகும். மனுவாதி கலாச்சாரம், குடும்ப உறவுகளை ஜனநாயகப்படுத்துவதற்கும், பெண்களை சமத்துவத்துடன் பாதுகாப்பதற்கும் பெரும் தடையாக இருக்கிறது.

மேலும் ஒவ்வொரு பாலியல் வன்புணர்வுக் குற்றமும், பலியானவரின் மதம் மற்றும் குற்றம் செய்த நபரின் மதத்தைச் சார்ந்தும் பார்க்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. பில்கிஸ் பானோ வழக்கில், பாலியல் வன்புணர்வை ஏற்படுத்திய மற்றும் கொலைகளைச் செய்திட்ட கயவர்கள், விடுதலை செய்யப்படுவதற்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார். அதே சமயத்தில் முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டப்படும்போது, ஆளும் கட்சியினரும் அதன் அமைப்புகளும் பெண்களுக்கு நீதி வேண்டும் என்று கோருவது, தற்செயலான நிகழ்வு அல்ல.

இதற்கு மிகவும் சரியான எடுத்துக்காட்டு, சமீபத்தில் அஸ்ஸாம் முதல் அமைச்சர், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஷ்ரத்தா வாக்கர் (Shraddha Walkar) வழக்கு தொடர்பாக உதிர்த்துள்ள வார்த்தைகளாகும். அவர் கூறியிருந்ததாவது: “ஒவ்வொரு நகரத்திலும் அஃப்லாப் போன்றவர்களைத் தடுக்க மோடி போன்ற இரும்பு மனிதரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.” ஷ்ரத்தாவைக் கொடூரமான முறையில் கொலை செய்தது அவள் உறவு வைத்திருந்த முஸ்லீம் நபர். எனவேதான் இதனை ‘லவ் ஜிகாத்’ என்று கூறி மிகவும் வெறித்தனமான முறையில் மதவெறி நச்சுப்பிரச்சாரத்தை மேற்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற அதே சமயத்தில் இதேபோன்று மற்றொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அசம்கார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இளம் பெண் ஒருவர் அவளுடைய முன்னாள் ஆண் நண்பனால் (boy friend), கொல்லப்பட்டு ஆறு துண்டுகளாக்கப்பட்டார். சிதாபூர் மாவட்இடத்தில் இதேபோன்று மற்றொரு பெண் அவருடைய கணவனால் கொல்லப்பட்டு துண்டு துண்டுகளாக்கி வயலில் தூக்கி எறியப்பட்டிருந்தார். ஆனால் பாஜக தலைவர்கள் இவை குறித்தெல்லாம் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. காரணம், பலியானவரும், கொலை செய்தவனும் இந்துக்கள். இதேபோன்றே தலித் பெண்கள் உயர் சாதியினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, ஒரு வார்த்தைகூட இவர்கள் உதிர்ப்பதில்லை. இவ்வாறு பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளை மதவெறி அடிப்படையில் பார்க்கும் போக்கு மிகவும் ஆபத்தாகும். இது நீதிமன்ற நடைமுறைகளையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும் அநேகமாக ஒழித்துக்கட்டிவிடும்.

முதலாளித்துவமும், அதன் சமூகக் கட்டமைப்புகளும் ஆணாதிக்க சமூகப் பழக்க வழக்கங்களுக்கு உதவுகின்றன. இதுதான் உலகம் முழுதும் உள்ள நிலையாகும். முதலாளித்துவம் பெண்களை குறைந்த கூலிக்கு அமர்த்த வேண்டும் என்பதற்காகவே அவர்களின் கீழ்நிலையில் உள்ள சமூக அந்தஸ்தையும், கலாச்சார முறையையும் அப்படியே வைத்துக்கொள்ள விரும்புகின்றன. முதலாளித்துவ உலகம் பெண்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், வன்முறையைப் பிரயோகிப்பதற்கும் அடிப்படை இதுதான். இந்தியாவிலும் வலதுசாரி இந்துத்துவா பேர்வழிகள் மனுஸ்மிருதியையும் சாதியக் கட்டமைப்பையும் தூக்கிப்பிடிப்பதன் மூலமும், பெண்வெறுப்பு மற்றும் ஆணாதிக்க மனோபாவம் மீளவும் வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இது, சிறுபான்மையினர் மத்தியில் உள்ள பிற்போக்கு சக்திகளுக்கும் வலுவை அளித்து, அவர்களும் பெண்களைத் தங்களுக்குக் கீழ் தள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள்.

அரசமைப்புச்சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான சட்டங்களைக் கறாராக அமல்படுத்தக் கோரியும், போராட்டங்களை முன்னிலும் பன்மடங்கு வீர்யத்துடன் நடத்திட வேண்டும். இடது மற்றும் ஜனநாயக சக்திகள் தங்களுடைய போராட்ட நடவடிக்கைகளில் இதனையும் ஒரு முக்கியமான அங்கமாக இணைத்துக்கொள்ள வேண்டும்.

(நவம்பர் 23, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

திரிவேணி சம்சார சங்கமம்!! சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

திரிவேணி சம்சார சங்கமம்!! சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா




கர்ணா… !
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி..ஆம்புலன்ஸ் ஊர்தியில் பேச்சு மூச்சற்று.. கிடக்க… அதன் சைரன் மரண ஓலத்தின் இடையே…அவன் வீட்டு எண்ணுக்கு?? (அவன் பர்ஸில் இருந்து எடுத்த விசிட்டிங் கார்டில்  இருந்தது) .. அலைபேசி அழைப்பு பறக்கிறது… போனை எடுத்த அந்த பெண்

“எஸ் “சுசர்மி” ஸ்பீக்கிங்! என்னது.. விபத்தா ? யாருக்கு.?. என்ன..மலர் மருத்துவமனையில சேத்திற்கீங்களா? ஓ அப்டியா..! சரி சரி அதுக்கு என்ன இப்போ?? இங்க ஏன் கூப்புர்ரீங்க ? ஃபீசோ.. பில்லோ..எதுவும் எங்களால கட்ட முடியாது. அவன் ஒரு வெப்பாட்டி வச்சிருக்கானே “பானு” ன்னு அவளை கூப்ட்டு சேதி சொல்லுங்க..!

எனக்கும் அவனுக்கும் பந்தம் அறுந்து பல வருசம் ஆச்சி…அவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன? என்ன? அவளோட போன் நம்பரா.. அதெல்லாம்  எனக்கு தெரியாது” என கூறி பட்டென்று ஆத்திரத்துடன் போனை கட்பண்ண… அவள் பேச்சில் வன்மம், வஞ்சனை, வக்கிரம் அதிகமாக… இல்லை மிக மிக அதிகமாகவே கலந்திருந்தது! அவளுள்  வெற்றி களிப்புடன்.. ஒரு புன்சிரிப்பு பூத்து மறைந்தது!

ஹிஸ்ட்ரி புக் படித்துக்கொண்டே, இதை கேட்டுக்கொண்டிருந்த.. அவள் 14 வயது மகள் “அம்பை”..கண்ணில் முட்டிய நீருடன் தாயின் முகம் தவிர்த்து..  அழுகையை அடக்க அரும்பாடுபட… அவளோ சட்டென்று மகள் பக்கம் திரும்பி “என்னடீ! அப்பன் பாசம் அதிகமாகி.. அப்டியே பொங்கி வழியுதோ?” என அவளை ஒரு கொடூர முகத்துடனும் தீர்க்கமாய் முறைக்க… அதன் உஷ்ணம் தாங்காமல்…. டக்கென… டாய்லட்டுக்குள் நுழைந்து  தந்தையை நினைத்து , சத்தம் காட்டாமல் விம்மி விம்மி கண்ணீர் சிந்துகிறாள்! அவள் அப்பாவி அப்பாவின்… நினைவுகள் அவளை மேலும் மேலும்  வருத்த …வாய்விட்டு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது அம்பைக்கு!

தனக்கு 8 வயதிருக்கும்போது திடீர் என்று … தொடர்ந்து., நிற்காமல் வயிற்று வலியுடன் ,வாந்தி எடுக்க… அப்பா அவளை பூப்போல் வாரி அணைத்து, மருத்துவ மனைக்கு கொண்டு சென்று, “உயிரை காக்க உடனே “அப்பெண்டிக்ஸ்” அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என டாக்டர்கள் அறிவுறுத்த… ‘ஊசி போடவே பயந்து அழுது அடம் பிடிக்கும், என் மகள் இதை எப்படி தாங்குவாள்?’ என்ற நினைவால்… திகிலுற்று…மகளை தேற்றி ஆறுதல் கூறி …
அவள் பூரண குணம் அடையும் வரை …அன்ன ஆகாரம் இன்றி, தூக்கமின்றி… தன்னை அணைத்தபடியே இருந்து… சிரிப்பு காட்டி! கதைகள் சொல்லி! தன்னை
காப்பாற்றிய அப்பாவை !!…

அவளை திட்டாமல் அடிக்காமல், பாடம் கற்பித்து ..அனைத்து போட்டிகளிலும் அவளுக்கே..முதல் பரிசுகள் பெற்றுத்தந்து.. ஏதோ தானே ஜெயித்ததுபோல்.. மகளை தலையில் தூக்கி… தட்டா மாலை சுற்றி… மகிழும் தன் அப்பாவை!!… அரை மார்க்கு ..விட்டுபோனாலும் மிஸ்ஸிடம் சண்டைப்பிடித்து… அதை வாங்கி கொடுத்து…முதல் ரேங்க் பெற்று தரும்… தன்னை உயிரினும் மேலாய் நேசித்த தன் ஆருயிர் அப்பாவை!!…

நினைத்து நினைத்து!! அழுகிறாள்! 5 ஆண்டுளாய் பிரிந்திருக்கும்… தன் அப்பாவின், சாந்தமான சிரித்த முகம் அவள் கண்முன் தோன்ற…
அவள் கேவல் சத்தம், கட்டுக்கு அடங்காமல் போயிற்று…!

“எய் சனியனே! என்னடீ பண்ணின்றிக்க பாத் ரூம்ல!” என்ற தாயின் அதட்டல் கேட்டு, அத்தனை சோகத்தையும் கூட்டி விழுங்கி.. முகம் கழுவி “இதோ வந்துட்டேம்மா!” என்று குரல் மாற்றி, சகஜ நிலைக்கு திரும்ப, பிரம்ம பிரயர்த்தனம் பண்ணினாள்… அந்த அபலை சிறுமி… “இன்னா அழுதையா?” என முறைத்த தாயிடம்.. “இல்லம்மா” என ஈனஸ்வரத்தில் கூற. “சரி சரி!அப்பா கூட போய் .. நேற்று தைக்க கொடுத்த யூனிபார்ம வாங்கிண்டு வா!” என ஆணையிட்டாள் !
“இந்த தடியன் எனக்கு அப்பாவா.. ?அவன் மூஞ்சும் மொகரகட்டையும்.. !அவன் என் எதிரிலேயே என் அம்மாவை கட்டி அணைத்து முத்தம் கொஞ்சுவதை பார்த்தால் எனக்கு வெறுப்பும் அழுகையும் வரும்!அவன் என்ன கண்ட கண்ட எடத்ல தொட்ரத .. இந்த ராட்சஸி கிட்ட சொன்னா.. “பாசண்டி! அன்புடி..!”என்பாள்.. இந்த விவஸ்த கெட்டவ.. .. அதையும் மீறி எதிர்த்து பேசினால்.. மிருகத்தனமா தாக்குதல் நடத்துவா.. !சே! இந்த நரகத்ல இருக்கர்த விட செத்துபோறதே மேல்!” என நினக்கும் தருணங்களில்…

தன் தந்தை என்றாவது ஒருநாள் நிச்சயம் வந்து தன்னை கூட்டிசெல்வார்- என்ற திடமான நம்பிக்கை கொண்டு ,அவள் தன் மனதை மாற்றி கொள்வாள்.!
அவள்  தன் நினவுகளை.. மேலும் சிலபல ஆண்டுகள் பின்னோக்கி செலுத்தினாள்! தன் மகிழ்ச்சி ,எழுச்சி ,அன்பு, பாசம், நேசம் கனவு அனைத்தும், 5ஆண்டுகளுக்கு முன் ….. குடும்பநல நீதிபதியான அந்த வயதான அம்மையாரிடம் , அவள் “எனக்கு அப்பாதான் வேணும்! அம்மா வேணாம்.!!.. என்ன எங்க அப்பாகிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க. பிளீஸ் பிளீஸ்” எனகெஞ்சி கூத்தாடி அழுது புரண்டு, தன் அப்பாவின் கால்களை அழுத்தமாக கட்டி பிடிச்சி கதறி அடம்பிடித்தவளை….

ஈவிரக்கமின்றி வலுக்கட்டாயமாக பிரிச்சி… “பெண் குழந்தைகள்… அவர்கள் மேஜர் ஆகும் வரை தாயிடம் வளர்வதே சாலச்சிறந்தது!” என்று அந்த நீதியரசர்(அரசி)
தத்துவம் பேசி உத்தரவு பிறப்பித்த அந்த நொடியில், எல்லாமே … வானவில்  வண்ணங்கள் போல்  அந்த பிஞ்சு மனதில் இருந்து மறைஞ்சு போச்சி….!

ஒருநாள்…. அவளுக்கு 9வயது இருக்கும்போது, தன் டேடி(அப்பாவை டேடி, என்று செல்லமாக அழைப்பது அவள் வழக்கம்) அவர் கல்லூரி தோழி “பானு “வை .. அகஸ்மாத்தாக சந்தித்ததை, தன் தாயிடம் “அப்பா, நானு, அப்பா கிளாஸ் மேட் ஆண்டி… மூணு பேரும் சரவண பவன் ஓட்டலில், டிஃபன் சாப்பிட்டோம் அம்மா”என வெள்ளந்தியாய் ஒரு நாள் சொல்லப் போய்… அன்று ஆரம்பித்தது, அவர்களுக்குள் சந்தேக பிணக்கு …. அது நாளொரு சண்டையும் பொழுதொரு சச்சரவுமாய், காட்டுதீ …போல் அதிகரித்து! அதிகரித்து! இறுதியில் விவகாரத்தில் சோகமாய் முடிந்தது,..! இதை அம்மாவிடம் ஏன்தான் சொன்னோமோ..? என ஒவ்வொரு நாளும் வருந்தி வருந்தி! தன்னை தானே நொந்து கொள்வாள்..,. அவள்!

சுசர்மி …..
ஆத்திரம் ,அகங்காரம் அச்சமின்மை.. மிக மிகஅதிகம் கொண்டவள்…. பணக்கார தந்தையின் ஒரே மகளாய் பிறந்து, சமாதானம்,சகிப்புதன்மை, மறத்தல், மன்னித்தல் போன்ற சொற்களின் அர்த்தத்தை. சற்றும் விளங்கிகொள்ள, சந்தர்ப்பமே கிட்டாத… ஒரு வாழ்க்கை சூழலில் வளர்ந்த அவளால்,.. ஒரு சிறு ஏமாற்றத்தை கூட தாங்கிக்கொள்ள இயலாத… சுயநல சந்தேக பிராணியாய் மாறியதில் , எந்தவித வியப்பும் இல்லை.!

கர்ணா..
அவளிடம்..”தன் கல்லூரி தோழியான பானுதான் தன்னை விரும்பியதாகவும் ! தான் அவளிடம் அந்த கண்ணோட்டத்தில், என்றுமே பழகியதில்லை! எனும் உண்மையை, எவ்வளவு சொல்லியும்.. .. எத்தனை தெய்வங்கள் மேல் சத்தியம் செய்து கொடுத்தும்… அவள் கேட்காமல்.. அவனை நம்பாமல் ,அலட்சியம் செய்து… அவனிடம் இருந்து விவாகரத்தை தன் தந்தையின் உதவியுடன்  வலுக்கட்டாயமாக வாங்கி கொண்டு விட்டாள்…! ஒரிரு மாதங்களில் தன்னுடன் பணிபுரிந்த “அர்ஜுன்” என்பவனை மறுமணம் செய்து கொண்டு…. கர்ணாவை…பழிக்கு பழி வாங்கிவிட்டது போல் பெருமிதம் கொண்டாள்…!! பாவம். .. ஏதும் அறியாத, அந்த அப்பாவி சிறுமியையும், ஒழுக்கத்தில் சொக்க தங்கமான கர்ணா வையும்… பிரித்து , அவர்களை ஒரு சேர.. சோகக்கடலில் மூழ்கடித்தாள்!

மாதம் ஒருமறை மகளிடம் பேச அனுமதி அளித்து , கோர்ட் உத்தரவிட்டு இருந்தும்.. அதை அலட்சியம் செய்து… நிரந்தரமாக அப்பனையும் மகளையும் பிரித்து களிப்புற்றாள்! கர்ணா தன் மகளை காண்பதற்கு எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளையும் முறியடித்து, அவனை  கெட்டவார்தைகளால் வைதும், ஸ்பஷ்ட்டமாய் முகத்தில் காரித்துப்பியும்.. அவமானப்படுத்தி அகமகிழ்ந்தாள்.. பாவம் மெத்தாதி மனம் கொண்ட சாதுவான கர்ணா.. துயரமே உருவாய் மெலிந்து களையிழந்து ஒடுங்கிபோக.. அவன் போராதகாலம் இன்று விபத்தில் வேறு சிக்கி… உயிருக்கு எமனுடன் போராடி கொண்டிருந்தான்.

அம்பை…
இரவெல்லாம் தூக்கமின்றி தந்தை நினைவில்… அவன் இறந்துவிடுவது போலவும் , அவன் உடலை ஊர்வலமாக எடுத்து செல்வது போலவும்.. கெட்ட கெட்ட கனவுகள் பல கண்டு… விழித்து கொண்டு வெகுநேரம் அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்…. மறுநாள் காலையில் … ‘மலர் மருத்துவ மனைக்கு சென்று தன் தந்தையை கண்டே தீருவது’ என முடிவு செய்து..

பள்ளிக்கு செல்வது போல் டிமிக்கி காட்டிவிட்டு..அந்த மருத்துவ மனைக்கு ,தன் உற்ற தோழி “வத்சலா” வுடன் சென்று.. அவசர சிகிச்சை அரையில்… தாடிமீசையுடன், ஒல்லியாய் கிழிந்த துணி போல் துவண்டு, பேச்சு மூச்சற்று  களையிழந்து.. பல மருத்துவ உபகரணங்கள் உதவியோடு எமனுடன் போராடிக்கொண்டு இருந்த..

தன் அப்பாவின் முகத்தை கண்டு ஓவென்று கதறியழ,…  அவர் மகள் என்று அறிந்த வார்டு  நர்ஸ்…இவளை தேற்றி ஆறுதல் கூறி… “ஏனம்மா இவரை தேடி யாருமே இதுவரை வரவில்லை! இன்னும் 24 மணி நேரம் கழித்து தான் எதையும்  உறுதியாக சொல்ல முடியும்! உன் அம்மாவை கூட்டிகொண்டு வா..  பில் பணம் வேறு கட்டவேண்டியிருக்கு..! நானும் உனக்காக சேசுவிடம் பிரார்த்தனை செய்கிறேன்! நிச்சயம் அவரை, பரமபிதா! கைவிடவே மாட்டார்!!”என்று ஜபம் செய்து சிலுவை இட்டு, அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்ப…

உடனே அவள் …
அப்பாவின் கல்லூரி தோழி “பானு”பற்றியும்…! அவள் வீட்டு விலாசம் பற்றியும் !அப்பா அரசல் புரசலாக சொல்லியிருந்ததை நினைவில் வைத்து, எப்படியோ விசாரித்து அங்கு சென்று… அவளிடம் நிலமையை எடுத்து கூற…. பானு அழுது புரண்டு உடனே உதவிக்கு வருகிறாள்.. அன்றிரவு முழுதும் அம்பையும், பானுவும் செய்த பிரார்த்தனை வீண்போகவில்லை… அடுத்த நாள் கர்ணன் கண்விழித்தான்!

அவன் விழிகள்..  சுசர்மியையும்.. மகளையும்  ஏக்கதுடன் எதிர்பார்த்து தேடியது….  ஆனால் அவன் கண்டதோ பானுவைதான்!! ஒருதலை காதலால் இன்றுவரை மணம் செய்யாமல் தனித்து, துன்பித்து, சோகமாய் நின்ற அவளை பரிதாபமாய் நோக்கினான்…. !!

தன் தந்தை “காதல் ஒரு மாயை..அதை நம்பி நாசமாய் போகாதே…! இன்று உன்னை காதலித்தவள் .. நாளை உன்னை விட அழகான வசதியான
வேறொருவனை காதலிக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?.. வேண்டாம் அப்பா காதல்! நான் நன்கு விசாரித்து நம் சொந்தத்தில் நல்ல பெண்ணாய் பார்த்து உனக்கு கட்டி வைக்கிறேன் !”என்ற அவர் அறிவுரையை கேட்டு அதை ஏற்றுக்கொண்டான்!

அவள் காதலை அலட்சிய படுத்தி “பானு…,! பிளீஸ்…காதல் எல்லாம் வேண்டாம்.. நாம் நல்ல நண்பர்களாய் இருப்போமே”என்று அவளை சமாதானப்படுத்த..
அவளோ “நான் உன்னை மட்டுமே இறுதிவரை நேசிப்பேன்! இது சத்தியம்!”என்று கலங்கிய விழிகளுடன் சூளுரைத்து, விடுவிடுவென சென்று விடுகிறாள்..
இன்று அதை நினைத்துப்பார்த்து … அவளை ஏற்காததால் கடவுள் தனக்கு விதித்த கொடும் தண்டனையை எண்ணி.. அவன் கண்கள் கலங்கின.. சற்று நேரத்தில் அங்கு வந்த அம்பை.. தந்தையை கண்டு ஓவென்று அழுதபடி”அப்பா! இந்த  ஆன்ட்டிதான்ப்பா, உங்களை நன்கு கவனிச்சு, உங்கள காப்பாத்தி மொத்த பில்லையும்  “பே” பண்ணிட்டாங்கப்பா!

அவங்க இல்லன்னா நீங்க பொழச்சே இருக்க மாட்டீங்கப்பா! பாவம்ப்பா அந்த ஆன்ட்டி..!  இனிமே நான் உங்க கூடவே இருக்கேன்பா! என்னை விட்டுட்டு எங்கேயும் போய்டாதீங்கப்பா! பிளீஸ்! பிளீஸ்! பிளீஸ்!” என அழுகையுடன் கெஞ்ச… வார்டு நர்ஸ் அவளை அதட்டி  ஆறுதல் சொல்லி  வெளியேற்றினாள்…! அவன் பார்வை நன்றியொழுக,. பானுவின் விழிகளின் மேல் “குற்ற” உணர்ச்சியுடன் பதிந்து… சாஹர சங்கமம் போல் இரண்டற கலந்தது..

ஒரிரு மாதங்களில்…  அவன் உடல்நலம் நன்கு தேறி.. மீண்டும், குடும்ப நல நீதிமன்றத்தில் “மகளை தன்னுடன் சேர்த்துவைக்குமாறு” மேல்முறையீடு செய்கிறான்.. !இம்முறை வழக்கை விசாரித்ததோ.. ஒரு இளம் பெண் நீதிபதி…. சுசர்மியின், பிரபல வக்கீலோ, கோர்ட்டில் சிம்ம கர்ஜனை செய்ய… தந்தையும் மகளும் தாரை தாரையாக கண்ணீர் வடித்தபடி… பெண் நீதிபதி தங்களுக்கு சாதகமாய் தீர்ப்பு அளிப்பது.. சாத்தியமற்றதே..என நம்பிக்கை இழந்து நின்றனர் … !!

நீதிபதி அம்மையார்.. அம்பையை அருகில் அழைத்து.. “பாப்பா! நீ என்ன கூற விரும்புறியோ! அதை பயப்படாம தைரியமா சொல்”என கூறியதும் … அம்பை தன் அழுகையை அடக்கியபடி உரத்த குரலில் தெளிவாய்.. நீதிபதியை பார்த்து,”ஜட்ஜ் மேடம்… உங்க அப்பாவ உங்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ..? அதுமாரி ,கோடி மடங்கு எனக்கு என் அப்பாவ பிடிக்கும்…!! யாரோ ஒருவர என் அப்பாவா! என்னால் ஏத்துக்கவே முடியாது,.. அவர் சீண்டலும் செய்கையும் எனக்கு அருவருப்பான சங்கடம் தருது..!. அவர் நிச்சயமா நல்லவரில்ல…. என்னையும் எங்கப்பவையும்  பிரிச்சிடாதீங்க… எனக்கு என் அப்பா தான் வேணும் .. ! எனக்கு என் அப்பாதான் வேணும்…!

அம்மா எனக்கு தேவையே இல்லை! பிளீஸ்! பிளீஸ் !”என தேம்பி தேம்பி அழுதபடி. சட்டென்று தன் தந்தையிடம் ஓடி சென்று அவர் கால்களை அழுந்த
கட்டிகொண்டு… “அப்பா! அப்பா! யார் என்ன சொன்னாலும் என்னை விட்டுட்டு போய்டாதீங்கப்பா…!” என காண்போர் நெஞ்சை பதரவைத்த காட்சியால்
நீதிமன்றமே ஒரு மயான சோகத்தின் நிசப்தத்துள் மூழ்கியது… எதிர் கட்சி வக்கீல் “ஐ அப்ஜெக்ட் யுவர் ஹானர்!” என கடும் ஆட்ஷேபத்துடன் எழுந்து நிற்க.. நீதிபதி அம்மையார் “அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்! நீங்கள் அமரலாம்!”என அதிகார சாட்டையை சொடுக்க.. அவர் பொட்டி பாம்பாய் அடங்கிபோனார்! எங்கும் நிசப்தம் நிலவியது!

அந்த அமைதியை கலைத்து நீதிபதி தன் தீர்ப்பை வாசித்தார், ” இந்த பிஞ்சு உள்ளத்தின் மனநிலையை கருத்தில் கொண்டும்.. மேலும் சுசர்மி இரண்டாம் திருமணம் செய்து கொண்டபடியாலும்.., அந்த ஆணின் நெருக்கம் குழந்தையின் நிம்மதியை குலைப்பதாலும்…

அவள் தந்தையாகிய கர்ணாவிடமே குழந்தையை ஒப்படைத்து.. அவர் பராமரிப்பில் வாழ்ந்து வளர ..இந்த கோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.!. இனி குழந்தையின் விருப்பத்தின் பேரில் மட்டுமே அவள் தாய் அவளை சந்திக்க இயலும்.. விவாகரத்து எனும் சமூக அவலத்தால்.. இங்கு நிகழ்ந்த கொடுமை.. வேறு எவருக்கும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் சகிப்பு தன்மையை வளர்க்க வேண்டும் என் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்! “என தன் நீண்ட தீர்ப்பை வாசிக்க..

“கோர்ட்” என்றும் தயங்காமல், அங்கு குழுமி இருந்தவர்களின் கைதட்டல் ஒலி வானை பிளந்தது…!அன்பு வென்றது… தந்தை பாசம் ஜெய்த்தது!!

அம்பை.. சற்று தொலைவில் அழுது கொண்டிருந்த பானுவிடம்.. மெல்ல நடந்து சென்று அவள் கண்களை துடைத்து, கரம் பற்றி.. “அம்மா! நம்ம வீட்டுக்கு போகலாம் வாங்கம்மா!” என அழைக்க..
கர்ணா இன்பத்தால் பேச்சற்று  மௌனமானான்!  அந்த மூன்று உயிர்களும் “திரிவேணி சங்கமம்” போல், சம்சார சாகரத்தில்… அன்பால் கலந்தன! இனி எந்த சக்தியாலும் அவர்களை பிரிக்க இயலாது!!

(முற்றும்)

Dr.K.BALASUBRAMANIAN.MD

11,ARUNAGIRI ST
WEST KAMAKOTI NAGAR
VALASARAVAKAM.
CHENNAI-600087.
MOBILE: 9382876968.

வீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம்? நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன்

வீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம்? நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன்

வீடுகளில் பெண்கள் செய்கிற வேலைகளுக்கு பண ஈடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் கூறியுள்ள கருத்து ஒரு விவாத அலையை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் திரைப்பட நட்சத்திரமுமான கமல்ஹாசன் சென்ற மாதம் தனது தேர்தல் பரப்புரைப்…