கொரோனா பொது முடக்க பெருந்துயரம்: பாஜகவின் சாதிய படிநிலை வெளிப்பாடு – நல்லதம்பி
குறும்பட விமர்சனம்: OBSESSED – பாரதிசந்திரன்
எப்பத்தான் இதையெல்லாம் விடப் போறீங்களோ?
– பாரதிசந்திரன்
கொரானா காலத்தில், ஒரு சராசரி குடும்பத்தின் நடவடிக்கைகளை அச்சுப் பிறழாமல் ஒளிந்திருந்து படம் எடுத்து இருக்கிறது இயக்குநர் நாதனின் கேமரா.
திரைக்கதை எழுதி நடிக்க வைத்து, வெட்டி ஒட்டிய வேலை அல்ல இது. மேடை நிகழ்ச்சி ஒன்றை, திருமண நிகழ்வு ஒன்றை, எப்படிக் கேமராக்கள் வலித்துத் துடைத்துப் பதிவு செய்யுமோ அது போல், மன உறுத்தலின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் இக்குறும்படம் அப்படியே பதிவு செய்துள்ளது.
தூரமாய் அல்லது மேலிருந்து வாழ்வைப் பெரும்பாலும் பலரும் அணுகுவதில்லை. உள்ளே கிடந்து உழன்று, சிலநேரம் மகிழ்ந்து, வெறுத்து, சிலாகித்து வாழ்வதாக ஒன்றையே பலரும் அணுகுகின்றனர். பூரணத்துவம் அறிவை உணர்ந்திடச் செய்வதிலிருந்து விலகியே இருக்கும் என்பது தான் தத்துவார்த்தமான உண்மை.
”பயம்’, ’பாசம்’, இவை மனம் அணுகும் இரு கூறுகள். எங்கும் இவை இரண்டும் உலக ஜீவராசிகளிடம் நெருங்கி இணைபாதையில் தொடர்ந்து வந்து தொல்லைகளை உச்சத்திற்கே கொண்டு செல்லும் என்பதை வாழ்ந்து உணர்ந்தவர்கள் புரிந்து இருப்பார்கள்.
பிறர் மேல் ”பாசம்” மிகுவதாலேயே தவறு ஏற்பட்டு, அவர் பாதிப்பாரோ என்கிற ”பயம்” அதோடு எழுகிறது. பாசம் இல்லாத எவற்றின் துன்பமும் நம்மை ஒன்றும் செய்வதில்லை.
வாழ்க்கை என்னும் மிகப்பெரும் கடலின் ஆழத்தை அதை நீந்தியே ஆகவேண்டும் என்கிற எழுதப்படாத விதியை வாழ்ந்து துன்பம் ஏற்று வாழ்ந்து மடிகிறவர்கள் தான் இவ்வுலகத்தில் அதிகம் என்பதைக் குறும்படத்தின் கதாநாயகனும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
குறும்படத்தின் கதை:
தலைவன், அவனது தாயார், மனைவி, மகன் மகள் என இரண்டு குழந்தைகள். இதுதான் குடும்பம். அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை. தன்னைச்சுற்றிக் கொரானாவால் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எனக் காற்றில் வரும் தொடர் செய்திகள்.
தொலைக்காட்சியைத் திறந்தால் நீலநிற மூட்டைகளாய் பிணங்களின் அணிவகுப்பு, மருத்துவர்களின் அதிபயங்கரப் பயமுறுத்தல்கள், சுடுகாட்டில் இடமின்மை என நீண்டு கொண்டே செல்லும் அச்சுறுத்தும் ஏவுகணைகள் நம் அனைவர் வீட்டிற்குள்ளும் வெடித்தன.
அரசாங்கத்தின் வழிநடத்தலில், பார்ப்பவையாவும் கொரானாபூதமாகவே இருந்தன. இதைத்தான் கதாநாயகன் அனுபவிக்கின்றான். வீட்டிற்குள் சிறை. யாரும் யாரையும் எதையும் தொடக்கூடாது. தொட்டால் உடனே கையைக் கழுவ வேண்டும்.
வீட்டின் கதவை யார் தட்டினாலும். பேசினாலும். அவர்கள் மூலம் நோய் நமக்கு வந்துவிடும் என்ற பேரச்சம். எனவே, கொடூரமான செயலாக அதைக் கருதுதல், அதற்கான முன்னேற்பாடுகள், பின்னேற்பாடுகள் எனப் பாதுகாப்பு வளையத்தைக் கொண்டு வருவது, என நடுக்கங்கள் ஒவ்வொன்றும் குறும்படத்திற்குள் கூறப்பட்டிருக்கின்றன.
பக்கத்து வீட்டிற்கு வந்த குரானா நம் வீட்டிற்குள்ளும் வந்துவிடும் என்கிற பயம். நோய் போய்விட்ட மேல் வீட்டு மாமா காலையில் கோவிலுக்குப் போய் வருகிறேன் என்று செல்லுதல், தொலைபேசியில் பேசிய மாமியிடம் பேசுதல், சோப்புக்குப் சோப்புப் போட்டுக் கழுவுதல், தண்ணீர் கேனைச் சுத்தம் செய்து, செய்து வைத்தல், கதவின் கைப்பிடியை மீண்டும் மீண்டும் கழுவுதல், வீட்டின் முன்புறக் காலடியை, கார்பெட்டைச் சுத்தம் செய்தல், காய்ச்சல் இருக்கிறதா எனப் பார்க்க வந்த அரசு ஊழியரிடம் கோபித்துக் கொள்ளுதல், மற்றும் சண்டை போடுதல் எனப் பயம் எதிலும் பயம். அதைவிட யாரையும் இயல்பாய் செயல்பட விடாமல் தடுத்தல் என்கிற பாசம்.
அடேயப்பா முழுநீளப்படம் போல் தோன்றுகிறது. படம் பார்த்து முடிக்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் நடந்து இருக்கும் நிகழ்வுகள் அவர்கள் மனதில் நீண்டு, வேறுவேறு சித்திரங்களையும் உணர்வுகளையும் படத்தோடு சேர்த்து நீட்டிக்க வைத்திருக்கின்றன.
ஆக, நாதன் அவர்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, இக்குறும்படத்தைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை அனுபவங்களும் வெளிப்பாடுகளும் படம் பார்க்கும் பொழுது அனைவருக்கும் அந்த அனுபவங்களோடு இக்குறும்படம் நீள்கிறது. இது ஒரு மாபெரும் சாதனைப் படம் தான். காட்சிகள் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காட்சியாகியிருக்கின்றன.
படம் பார்ப்பவர்களின் அனுபவங்களும், காட்சி நீட்டிப்பும், நீள்சதுரமாகி படத்துடன் இணையும் பொழுது அவர்களின் வாழ்வியல் படமாகவும் இது மாறிவிடுகிறது. எனவே, இயக்குனர் நாதன் அவர்களின் படம் மட்டுமல்ல இது யார் இதைப் பார்க்கிறார்களோ அவர்களே இயக்குனராகவும் இருக்கின்ற ஒரு படம்.
உளவியல் வெளிப்பாடுகள்:
நுணுக்கமாக இரண்டு மூன்று இடங்களில் உளவியல் வெளிப்பாடுகள் காட்சிகளாக ஆக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் நாமே நம் செயலைப் பார்த்து வெட்கப்படுவோம் அல்லது வேதனைப்படுவோம். இக்காரியத்தை நாம் சிறுபிள்ளை போல் செய்துள்ளோம் என்பதாக அந்தச் செயல் நடக்கும் பொழுதும் அல்லது அதற்குப் பிறகாவது நாம் உணர்வோம். இதைக் கதாநாயகனாக இயக்குனர் சில காட்சிகளில் தன் சிறுவயதுப் பிராந்தியத்தில் செய்வது போல மனதால் நினைத்துப் பார்ப்பது போல் காட்சி அமைத்துள்ளார். இது ஒரு உளவியல் பார்வை ஆகிறது.
இரண்டு குழந்தைகள் தான் இவருக்கு. இவரின் இளம் வயது போன்ற ஒரு கதாபாத்திரம் மூன்று இடங்களில் வந்துவிட்டுச் செல்லுகிறது. அது சிறு பிள்ளையாக நடந்து கொள்கிறோம் என்கிற இவரின் எண்ணத்தை வெளிப்படுத்தும் காட்சியாக அமைந்திருக்கிறது. இவர் அமர்ந்திருக்கும் இருக்கையில் திடீரென்று இவரைப் போன்ற ஒரு பையன் அமர்ந்து கொண்டு நெற்றியைத் தடவி கொண்டு அமர்ந்திருப்பதைக் கதாநாயகனின் தாய் ஒரு பார்வை பார்த்து விட்டுச் செல்லுவார்.”என்ன இது சின்னப் புள்ள தனமா இருக்கு”என்பதைப் போல் அவர் மனநிலை. அதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
அதேபோல் படத்தின் முடிவில், அப்பாவிடம் பையன் ”தரையில் கையூன்றிய அதை நினைவு படுத்திவிட்டேன். சாரி அப்பா, இப்படி உங்களை என்னால பார்க்க முடியல, நீங்க வெளில போயிட்டு வாங்கப்பா” எனக் கெஞ்சுவான் மனம்வாடி அவன் கூறும் வார்த்தைகள் உளவியலின் மிகச்சரியான வெளிப்பாட்டு வார்த்தைகளாகும். தந்தையை இப்படிக் காண முடியாத ஒரு குழந்தையின் இயக்கத்தை ஏக்கத்தை இந்த இடத்தில் நம்மால் உணர முடிகிறது.
தன் அண்ணனை மட்டும் அப்பா கட்டிப்பிடித்து நிற்கிறார். தன்னைக் கட்டிப் பிடிக்கவில்லை எனக் கோபம் கொண்டு தங்கை ஓடுவது, அவள் மனநிலையைப் பாசத்திற்காக ஏங்கும் தன் தந்தை தன்னை அணைக்க வேண்டும் என்ற ஏக்கத்தை மிக அழகாக அந்தக் காட்சி நமக்குத் தருகிறது. அவளைச் சமாதானப்படுத்த அவள் பின்னாலே ஓடுவதும் அவளை அழைப்பதும், உணர்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுகளாக அந்தக் காட்சிகள் நம் மனதை வாட்டி எடுக்கின்றன.
அப்பப்பா என்ன உணர்வுப்பெருக்கு இந்த இடங்களில். ”எப்பத்தான் இதையெல்லாம் விடப் போறீங்களோ” என்று கேட்கும் மனைவிக்கு, ”உங்க மேல இருக்கிற பாசத்தை விட்டுடேண்ணா இதை எல்லாம் போட்டுடுவேன். எல்லார் மேலேயும் இருக்கிற பாசம் தான் என்னை இப்படி இருக்கச் செய்கிறது”என்னும் வசனம் ஒன்றே போதும் தந்தையின் கடமை உணர்வையும், குடும்பத்தின் மேல் அவர் கொண்ட பாசத்தையும் வெகுவாக விளக்கிச் செல்கிறது.
நடிப்பில் யாரும் சோடை போகவில்லை. இடையிடையே கர்நாடக சங்கீதம் பாடும் பெண் குழந்தை, நடனத்தைப் பழகும் பையன். இவர்களின் திறமையையும் கதையோடு வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர். தந்தையின் அரவணைப்பை விரும்பும் மகளிடம் வெறுப்பைத் தந்தை காட்ட, தாயிடம் அக்குழந்தை செல்லுகிறது. தாய் அந்தப் பெண் குழந்தையைக் கட்டி அணைக்கக் கூடாது என்கிறார் தந்தை. இருந்தாலும் தாய், ”அவள் என்ன செய்வாள் நான் கட்டிப்பிடிப்பேன்” என்று கூறுவாள். அனைத்து நபர்களும் மிகையில்லாமல் இயல்பாய் இதுபோன்ற காட்சிகளில் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சில இடங்களில் மட்டும் இசை அற்புதமான மனநிலையை நெஞ்சில் உற்பத்தி செய்கிறது. எடிட்டிங் சரியாகக் கதையைப் பார்வையாளனுக்குத் தருகிறது.
ஒரு குடும்பமே ஒட்டுமொத்தக் கலைஞர்களாக வடிவம் எடுத்துள்ளனர் இக்குறும்படம் மூலமாக.
நிழலோவியம் கூடக் கவிதை பேசியிருக்கிறது. கணினி கூடக் கொரானா பாடம் எடுத்து இருக்கிறது. எல்லாவற்றையும் பேச வைத்திருக்கிற மாயாஜாலம் இக்குறும்படத்தில் நிகழ்ந்திருக்கிறது.
மொத்தத்தில் இதைவிடச் சிறந்த ஆவணப்படமான கலைப்படம் இக்காலத்தில் வேறொன்றும் இருக்காது என்பதை அடித்துச் சொல்லலாம்.
படக்குழு:
எழுத்து
ஒளிப்பதிவு
எடிட்டிங்
ஒலி வடிவமைப்பு
மற்றும்
இயக்கம்
நாதன். ஜி
இக்குறும்படம் குறித்த விமர்சனம் ஒன்று:
இந்தப் படம் இறந்த காலத்தில் கிடைத்த அதே உணர்வை மீண்டும் கிளறிவிட்டது. ஒரு நல்ல படம் அதைத்தான் செய்யும். நாதன் ஜி துல்லியமான காட்சி அமைப்புகள் மூலமாக கதையின் உள்ளீடு பார்வையாளரைச் சென்றடையும் படி உருவாக்கியிருக்கிறார். பொதுவாக புகைப்படக்காரனின் உளவியல் அசாதாரணமானது. சாதாரணமாக பாம்பினைப் பார்த்தால் பயத்தில் வெலவெலத்துப் போகிற ஒரு புகைப்படக்காரன், கையில் கேமராவோடு இருந்தால் நெருங்கி படமெடுக்கத் துவங்கிவிடுவான். அவனுக்குப் பயம் என்ற உணர்வே மறந்து போய்விடும்.
கொரோனா செய்திகளால் அரண்டு போயிருக்கும் இந்தப் படத்தின் நாயகனும் ஒரு புகைப்படக்காரனே! கேமராவிற்கு முன்னால் சானிடைசர் நிற்க முடியுமா,என்ன? தெளிவான, சுருக்கமான படைப்பு. வாழ்த்துக்கள் நாதன் ஜி”
இக்குறும்படத்தைக் காண: https://www.youtube.com/watch?v=DzDEkxzwOvg எனும் பக்கத்திற்குச் செல்லவும்.
பாரதிசந்திரன்.
9283275782
ராட்சதனாக உருவெடுத்திருக்கும் பைஜுஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலை சுற்ற வைக்கும் எழுச்சியின் மறுபக்கம் – நிகில் இனாம்தார் | தமிழில்: தா.சந்திரகுரு
தன்னுடைய பணத்தை பல மாதங்களாக இணையவழி பயிற்சி நிறுவனமும், உலகின் மிக உயர்ந்த மதிப்புள்ள கல்வி தொழில்நுட்ப (எட்டெக்) ஸ்டார்ட்-அப் நிறுவனமுமான பைஜுஸ் நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திகம்பர் சிங் கூறுகிறார். திகம்பர் சிங், ஒரு கணக்காளர். இரண்டு ஆண்டுகளுக்கு தனது மகனுக்கான கணிதம், அறிவியல் பாடங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பைஜுஸ் மூலம் கடன் பெற்றக் கொண்டதாகக் கூறுகின்ற திகம்பர் சிங் முன்பணமாக ஐயாயிரம் ரூபாயைச் செலுத்தி கூடுதலாக முப்பத்தையாயிரம் ரூபாயை கடனாகப் பெற்றுக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார். மேலும் கூறுகையில் பைஜுஸ் விற்பனை பிரதிநிதி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய மகனால் பதிலளிக்க முடியாத அனைத்து வகையான கடினமான கேள்விகளைக் கேட்டதாகவும், அவருடைய வருகைக்குப் பிறகு அவன் முற்றிலுமாக ஊக்கமிழந்து போனதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து அந்தப் பாடங்களைப் பெற்றுக் கொண்டது தங்களுக்கு அவமானமாக இருப்பதாக பிபிசியிடம் அவர் கூறினார். நேரடியான பயிற்சி, மகனின் முன்னேற்றம் குறித்து தன்னை அழைத்து தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய ஆலோசகர் ஒருவர் நியமனம் என்று தங்களிடம் பைஜுஸ் வாக்குறுதியளித்த சேவைகள் எதுவுமே தரப்படவில்லை என்பது மட்டுமல்லாது ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு பைஜுஸ் தன்னுடைய தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதையே நிறுத்திக் கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.
அடிப்படையற்றவை, உல்நோக்கம் கொண்டவை என்று அவரது குற்றச்சாட்டுகளை நிராகரித்த பைஜுஸ், தொடர் காலகட்டத்தில் தாங்கள் பலமுறை சிங்கிடம் பேசியதாக பிபிசியிடம் தெரிவித்தது. தங்கள் தயாரிப்புகளுக்கான பணத்தை பதினைந்து நாளில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கொள்கை மற்றும் தங்களின் சேவைகளுக்கான பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கொள்கையின்படி டேப்லெட்டுடன் கற்றலுக்கான பொருட்களைத் தேர்வு செய்து கொண்ட மாணவரிடம் கேள்விகள் எதுவும் கேட்கப்படாது என்று நிறுவனத்தினர் கூறினர்.
தங்களுடைய தயாரிப்பு அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிங் பணத்தைத் திரும்பக் கேட்டதாக கூறிய நிறுவனம், சிங்கின் குற்றச்சாட்டுகளை அவர்களுடைய கவனத்திற்கு பிபிசி கொண்டு சென்ற பிறகு சிங் கேட்ட பணத்தை அவருக்குத் திருப்பிக் கொடுத்தது.
இதுகுறித்து பிபிசி பல பெற்றோர்களிடம் பேசியது. ஒருவருக்கு ஒருவரே பயிற்சி அளித்தல், குழந்தைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு வழிகாட்டி நியமனம் போன்று அவர்கள் வாக்குறுதியளித்த சேவைகள் எதுவும் ஒருபோதும் தரப்படவில்லை. இந்திய நுகர்வோர் நீதிமன்றங்கள் பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் சேவைகளின் குறைபாடு தொடர்பான தகராறுகளில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு வழக்குகளில் பைஜுஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளன. இந்த வழக்குகளில் தாங்கள் ஒரு தீர்வை எட்டியிருப்பதாகவும், தங்களின் குறை தீர்க்கும் விகிதம் 98 சதவிகிதமாக இருக்கிறது என்றும் பைஜூஸ் பிபிசியிடம் கூறியது.
ஆனால் முன்னாள் பைஜுஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் மேற்கொண்ட நேர்காணலின் அடிப்படையில் பிபிசி நடத்திய விசாரணையில் பைஜுஸ் மீதான பல குற்றச்சாட்டுகள் வெளியில் வந்தன. பைஜுஸ் மீது அதிருப்தியடைந்த பெற்றோர்கள் பைஜுஸ் விற்பனை முகவர்களால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். அவசரத் தேவை என்று நம்பிய தங்களை அந்த ஒப்பந்தங்களை நோக்கி ஈர்த்த முகவர்கள் விற்பனை முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டதால் பணத்தைத் திரும்பப் பெறுவது கடினமாகியது என்றும் அவர்கள் கூறினர். பைஜூஸின் முன்னாள் ஊழியர் ஒருவர் விற்பனை முடிந்ததுமே முகவர்கள் அதனைப் பின்தொடர்வதற்கு குறைந்தபட்சமாகவே அக்கறை எடுத்துக் கொள்வார்கள் என்று கூறினார்.
மிக அதிகமான விற்பனை இலக்குகளை வலியுறுத்துகின்ற மேலாளர்களால் உயர் அழுத்தம் கொண்ட விற்பனைக் கலாச்சாரம் பைஜுஸில் இருந்து வருவதாக முன்னாள் ஊழியர்கள் கூறுகின்றனர். இணையவழி நுகர்வோர் மற்றும் ஊழியர் தளங்களில் பைஜுஸ் நிறுவனத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மிகவும் தீவிரமான விற்பனை யுக்திகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதை மறுத்த பைஜூஸ் நிறுவனம் ‘மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் எங்கள் தயாரிப்புகளின் மதிப்பைக் கண்டு அதன் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வாங்குவார்கள். எங்களுடைய ஊழியர் கலாச்சாரம் பெற்றோர்களிடம் தவறான அல்லது மோசமான நடத்தையை ஒருபோதும் அனுமதிக்காது. தவறான பயன்பாடுகள், இழிவாக நடந்து கொள்வதைத் தடுப்பதற்கென்று அனைத்து வகையான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தது.
பைஜு ரவீந்திரனால் 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பைஜூஸ் நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சான் ஜுக்கர்பெர்க் இனிசியேட்டிவ் மற்றும் டைகர் குளோபல், ஜெனரல் அட்லாண்டிக் போன்ற தனியார் பங்கு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு வருகிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தொற்றுநோய் கோடிக்கணக்கான இந்திய மாணவர்களை இணையவழி வகுப்புகளை நோக்கித் திருப்பி விட்டது. இவ்வாறான திடீர் மாற்றம் சிங் போன்ற பெற்றோர்களைக் கவலையடையச் செய்தது. கல்வியை தங்களை மேல்நோக்கி நகர்த்துவதற்கான இன்றியமையாத அனுமதிச்சீட்டாக பாரம்பரியமாகப் பார்த்து வருகின்ற அவரைப் போன்றவர்களே பைஜுஸ் சந்தையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
எனவே தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே அந்த நிறுவனத்தின் ஏற்றத்திற்கு எவ்விதக் குறைவுமில்லாமல் மிகப்பெரிய அளவில் இருந்தது. எண்பத்தைந்து சதவிகித புதுப்பித்தல் விகிதத்துடன், அறுபது லட்சத்திற்கும் அதிகமான பணம் செலுத்தும் பயனர்கள் தங்களிடம் சேர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
வெறுமனே மனப்பாடம் செய்வதை வழக்கமாகக் கொண்டு கற்று வருகின்ற நாட்டில் நுட்பமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிவேகமான, ஈர்க்கக்கூடிய பாடங்களை உருவாக்கியதாகப் புகழ் பெற்றிருக்கும் பைஜூஸின் கற்றல் உள்ளடக்கத்தின் தரத்திற்கு உறுதியளிக்கக் கூடிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரிடம் பிபிசி பேசியது. அந்த தொழில்துறையில் வாடிக்கையாளர் அனுபவத்தை அளவிடுவதாக, அதன் வணிக வளர்ச்சியை முன்னறிவிப்பதாக இருக்கின்ற மிக உயர்ந்த நிகர ஊக்குவிப்பாளர் மதிப்பெண்ணை (NPS) தான் கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
2020 மார்ச் முதல் நூறு கோடி டாலருக்கும் அதிகமான தொகையை திரட்டி, பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்களை வாங்கி தன் கீழ் வைத்திருக்கும் அந்த நிறுவனம் குறியீட்டு வகுப்புகள் முதல் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வரை அனைத்தையும் வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விளம்பரத் தூதராக அந்த நிறுவனத்தின் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதால், இந்திய தொலைக்காட்சிகளில் அதிகம் காணக்கூடிய ஒன்றாக அந்த நிறுவனம் இருக்கிறது.
ஆனால் பெற்றோர்களின் பாதுகாப்பின்மை உணர்வைப் பயன்படுத்தி அவர்களின் கடன் சுமையை அதிகரித்துக் கொண்ட தீவிரமான விற்பனை யுக்திகளின் விளைவாகவே அந்த நிறுவனத்தின் விரைவான வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதா என்ற கேள்வியை கல்வி வல்லுநர்கள் சிலர் எழுப்பியுள்ளனர். விற்பனைக்கான இடைவிடாத தொலைபேசி அழைப்புகள், தந்திரம் நிறைந்த பேச்சுகள் அவர்களுடைய யுக்திகளுக்குள் அடக்கம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். அவ்வாறான பேச்சுகள் ஒருவேளை பைஜுஸின் தயாரிப்புகளை வாங்க முடியாவிட்டால் தங்கள் குழந்தைகள் கல்வியில் பின்தங்கி விடுவர் என்று பெற்றோர்களை நம்ப வைப்பதாகவே இருக்கும்.
பைஜுஸ் வழங்குகின்ற அடிப்படையான படிப்புகள் கூட சுமார் ஐம்பது டாலர் (சுமார் நான்காயிரம் ரூபாய்) என்ற அளவிலே தொடங்குகின்றன. பெரும்பாலான இந்தியர்களுக்கு அந்தக் கட்டணம் கட்டுப்படியாகாது. குழந்தைகளுக்கு உண்மையிலேயே தேவையா அல்லது அவர்களுடைய குடும்பத்தால் அவற்றை வாங்கிக் கொடுக்க முடியுமா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் நிறுவனம் தனது தயாரிப்புகளை பெற்றோர்களிடம் தள்ளி விடுவதாக முன்னாள் ஊழியர் ஒருவர் கூறினார்.
‘அவர் ஒரு விவசாயி அல்லது ரிக்சா இழுப்பவராக இருந்தாலும் எங்களுக்குப் பிரச்சனையில்லை. ஒரே தயாரிப்பு பல விலைகளில் விற்கப்படுகிறது. பெற்றோரால் வாங்க முடியாது என்று எங்களுக்குத் தெரிந்தால், அந்த வரம்பில் உள்ள மிகக் குறைந்த விலையையே அவர்களிடம் வசூலிக்கப்படுகிறது’ என்று பைஜுஸின் முன்னாள் வணிக மேம்பாட்டு கூட்டாளியான நிதிஷ் ராய் பிபிசியிடம் கூறினார்.
வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் அவர்களிடமுள்ள வாங்கக்கூடிய திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு விலைப் புள்ளிகளில் வெவ்வேறு தயாரிப்புகள் தங்களிடம் இருப்பதாகவும், ஆனால் மேற்குறிப்பிட்ட முறையில் விலைகளை மாற்றுவதில்லை என்றும் பைஜுஸ் கூறியது. விற்பனை நிர்வாகிகளைப் பொறுத்தவரை விலை நிர்ணயம் மீது அவர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்றும் அது குறிப்பிட்டுக் கூறியது.
தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் பலரும் பெரும்பாலும் நம்பத்தகாத இலக்குகளை தாங்கள் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாகவே பிபிசியிடம் தெரிவித்தார்கள். தங்கள் இலக்குகளை அடையாதிருந்த விற்பனையாளர்களை அவமானப்படுத்திய மேலாளர்கள் இருந்ததைக் காட்டுகின்ற வகையிலே கடந்த ஆண்டின் பிற்பகுதியிலும், 2021 ஜனவரி மாதத்திலும் பதிவு செய்யப்பட்ட இரண்டு தொலைபேசி உரையாடல்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன.
அதுகுறித்து பேசிய பைஜுஸ் அந்த உரையாடல்கள் பதினெட்டு மாதங்களுக்கு முன்பு நடந்தவை என்றும் அதில் ஈடுபட்ட அந்த மேலாளர்களின் ஒப்பந்தத்தை நிறுத்துவது உட்பட நிலைமையைச் சரிசெய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் எடுத்ததாகவும் பிபிசியிடம் கூறியது. பிபிசிக்கு அது அளித்திருந்த அறிக்கையில் ‘எங்கள் நிறுவனத்தில் தவறான, புண்படுத்தும் நடத்தைகளுக்கு இடமே இல்லை. நீங்கள் குறிப்பிடுகின்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர் தொடர்ந்து இப்போதும் எங்களுடனே இருக்கிறார். நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றவராக அவர் இருந்து வருகிறார்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் விற்பனை செய்வதற்கான அழுத்தம் மிக அதிகமாக இருந்தது என்றும், தங்களுடைய மன ஆரோக்கியத்தை அது பாதித்தது என்றும் பல ஊழியர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பைஜுஸில் தான் பணிபுரிந்த ஆண்டில் தனக்கு பதட்டம் ஏற்பட்டதாகவும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரித்ததாகவும் விற்பனை நிர்வாகி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
தங்கள் வேலையின் வழக்கமான அம்சமாக 12-15 மணிநேர வேலை நாட்கள் இருந்தன என்றும், வாடிக்கையாளர்களுடன் 120 நிமிடங்கள் பேச்சு-நேரத்தில் ஈடுபட முடியாத ஊழியர்களின் பதிவேட்டில் ‘அன்றைய தினம் பணிக்கு வரவில்லை’ என்று குறிக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக அன்றைய நாளுக்கான ஊதிய இழப்பு தங்களுக்கு ஏற்பட்டது என்றும் பல ஊழியர்கள் கூறுகின்றனர். ‘வாரத்திற்கு இரண்டு முறையாவது எனக்கு அது போன்று நடந்திருக்கிறது. அவர்கள் தருகின்ற இலக்கை அடைவதற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான் இருநூறு அழைப்புகளைச் செய்ய வேண்டும்’ என்று முன்னாள் ஊழியர் ஒருவர் கூறினார். மேலும் அந்த இலக்கை அடைவது நம்பமுடியாத அளவிற்கு மிகக் கடினமாக இருந்தது என்று கூறிய அவர் தொடர்பு கொள்வதற்கான சில தடங்கள் வழங்கப்படும் என்றும் சராசரி அழைப்பு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் முதல் நிகழ்விலேயே இலக்கை அடையத் தவறினால் சம்பளம் குறைக்கப்படும் அல்லது அவர்கள் பணிக்கு வரவில்லை என்று குறிக்கப்படும் என்று சொல்வது தவறானது என்று தெரிவித்த பைஜுஸ் ‘அனைத்து நிறுவனங்களும் கடுமையான ஆனால் நியாயமான விற்பனை இலக்குகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. அதில் பைஜுஸ் மட்டும் தனித்து விதிவிலக்காக இருக்கவில்லை. ஆனாலும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வலுவான பயிற்சித் திட்டம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்தது. ‘எங்கள் குழும நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர், ஒரு முறை தவறு நடந்தால் கூட, உடனடியாக நாங்கள் அவற்றை மதிப்பீடு செய்து தவறான நடத்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்’ என்றும் கூறியது.
இப்போது மும்பை நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் அனாதைகளுக்கு கற்பித்து வருகின்ற ராய், அந்த நிறுவனம் இயங்குகிற விதம் தனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியதாலேயே இரண்டு மாத கால அவகாசத்திற்குப் பிறகு 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பைஜுஸை விட்டு தான் வெளியேறி விட்டதாகக் கூறுகிறார். ஒரு உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அது இப்போது வருவாய் ஈட்டும் இயந்திரமாக மாறி விட்டது’ என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் ஸ்டார்ட்-அப்கள் குறித்து விரிவாக அறிக்கை தருகின்ற ஊடகம் மற்றும் ஆய்வு நிறுவனமான மார்னிங் கான்டெக்ஸ்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதீப் சாஹா கூறுகையில் ‘துரிதமான வேகத்தில் வளர்ச்சியைத் தேடும் முயற்சிகளில் இதுபோன்று அதிகமாகவே நடைபெறுகிறது. அதுவொன்றும் பைஜுஸின் பிரச்சனையாக இருக்கவில்லை. அது ஒட்டுமொத்த எட்டெக் துறைக்குமானது’ என்றார். அதிக அளவில் விமர்சனங்கள் இருந்த போதிலும், எந்தவொரு மாற்றமும் வருவதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் அவர் ‘இந்தப் புகார்களில் பெரும்பாலானவை மேலோட்டமாகவே உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பொருட்படுத்தத் தக்கவையாக உள்ளன. இந்த ஸ்டார்ட்-அப்கள் ஈட்டுகின்ற வருமானத்திற்கு எதிராக இதுபோன்ற புகார்கள் வைக்கப்படும் போது, அவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை’ என்று கூறினார்.
ஆனாலும் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. டாக்டர் அனிருத்தா மல்பானி, மருத்துவர், ஏஞ்சல் முதலீட்டாளர் மற்றும் பைஜுஸின் வணிக மாடல் குறித்து எதிர்க்குரல் எழுப்பி வருகின்ற விமர்சகர். இந்தியாவில் எட்டெக் ஸ்டார்ட்-அப்களை பீஜிங் பாணியில் ஒடுக்குவதற்கான நேரம் கனிந்துள்ளது என்று அவர் பிபிசியிடம் கூறினார். சமீபத்தில் இணையவழி பயிற்சி நிறுவனங்கள் லாப நோக்கற்றதாக மாற வேண்டும் என்று சீனா கட்டளையிட்டுள்ளதகத் தெரிவித்தார்.
தீர்வு ஏற்கனவே இருக்கின்றது என்று நம்புகின்ற டாக்டர் மல்பானி வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச காலம் என்ற ஒன்று இல்லாத மாதாந்திர சந்தா மாடலைக் குறிப்பிடும் வகையில் ‘நெட்ஃபிளிக்ஸ் மாடலை’ இந்திய அரசாங்கம் இந்தத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கிட வேண்டும் என்று கூறுகிறார். ‘மாணவர்களைத் தொடர்ந்து மகிழ்விப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் இதனுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் அது உடனடியாகத் திருப்திப்படுத்தும்’ என்கிறார். இந்திய அரசாங்கம் இன்னும் அதற்குள் காலடி எடுத்து வைக்கவில்லை என்றாலும் பெற்றோரிடமிருந்து வருகின்ற குறைகள் அதிகரிக்கும் போது விரைவில் அது தேவைப்படலாம். இந்தத் துறையை அரசு முறைப்படுத்த வேண்டுமென்று கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு தயாராகி வருவதாக டாக்டர். மால்பானி கூறுகிறார்.
‘பல கோடி ரூபாய்கள் திரட்டப்பட்டுள்ளது… உலகின் மிக மதிப்புமிக்க எட்-டெக் ஸ்டார்ட் அப் என்று வெளியாகின்ற இந்த எண்கள் அனைத்தையும் பாருங்கள்… அவையனைத்தும் அர்த்தமற்ற தற்பெருமை அளவீடுகளாக மட்டுமே இருக்கின்றன’ என்று கூறிய டாக்டர் மல்பானி ‘சுகாதாரம் போன்று கல்வியும் பொது நலன் சார்ந்தது என்பதை நாம் ஒரு கட்டத்தில் மறந்துவிடக் கூடாது’ என்று ஆணித்தரமாக தன்னுடைய வாதத்தை இதுபோன்ற நிறுவனங்களுக்கு எதிராக முன்வைக்கிறார்.
https://www.bbc.com/news/world-asia-india-58951449
நன்றி: பிபிசி
தமிழில்: தா.சந்திரகுரு
கூடுதல் தகவல்களுக்கு:
இந்தியக் கல்வி அமைப்பில் பைஜுஸ் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது? எஸ்.அப்துல் மஜீத்
https://www.arunchol.com/abdul-majith-article-on-byjus-and-indian-education-arunchol Congress leader Karti Chidambaram takes jibe at BYJU’S
https://www.youtube.com/watch?v=Z6FW15d0zQo&t=9sIndia’s EdTech Firms Bypassing Regulations
https://finance.yahoo.com/video/chidambaram-indias-edtech-firms-bypassing-042041322.html
நல்ல அறிகுறியுடன் தொடங்கும் புத்தாண்டு – தமிழில்: ச.வீரமணி
[2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்களே நிறைந்திருந்தாலும், வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் விதத்தில் முடிவுற்றுள்ளது.]
விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தபோதிலும், மக்களுக்கு வெற்றிக்களிப்பை அளிக்கும் விதத்தில் முடிவுக்கு வந்தது.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மார்ச் – மே மாதங்களுக்கிடையே மக்களை நாசப்படுத்தியது. மோடியும் அவருடைய அரசாங்கமும் கொரோனா வைரஸ் தொற்றை வென்று விட்டோம் என்று தம்பட்டம் அடித்தபோதிலும், இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியபோது அதனை எதிர்கொள்ள நாடு தயாராக இல்லை. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர். இவற்றில் பல பதிவு செய்யப்படவேயில்லை. ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுத்திணறி இறந்த கொடுமையையும், ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதந்து சென்றதையும் உலகம் முழுதும் ஊடகங்களால் எடுத்துச்செல்லப்பட்டு நம் நாட்டின் அவலநிலையை உலகுக்குப் பறைசாற்றின. இவ்வளவு மோசமாக நாட்டு மக்களை நாசப்படுத்தியிருந்தபோதிலும்கூட இதற்காகப் பிரதமர் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இதேபோன்றுதான் தடுப்பூசிகள் சம்பந்தமாக, அவற்றைப் போதுமான அளவிற்குக் காலத்தில் கொள்முதல் செய்ததிலோ, நாட்டிற்குள்ளேயே உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவோ மற்றும் விரைவாக அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதிலோ ஏராளமான அளவில் குளறுபடிகள் செய்ததையும் பார்த்தோம். நாட்டில் முதன்முதலாக அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்கும் விலை வைத்து விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒன்றிய அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில், டிசம்பர் 31க்குள் (18 வயதுக்கு மேற்பட்ட) வயது வந்த அனைவருக்கும் இரு முறை தடுப்பூசிகள் (two doses of vaccines) முழுமையாகச் செலுத்தப்படும் என்று கூறியது. இது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிவோம். டிசம்பர் இறுதிக்குள், நாட்டிலுள்ள வயது வந்தவர்களில் 65 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் 35 சதவீதத்தினர் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்படாது விடப்பட்டுள்ளனர். நாட்டை விழுங்கப் போவதாக ஓமிக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் இத்தகைய அவலநிலை நீடிக்கிறது.
மோடி அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான அளவிற்குத் தடுப்பூசிகளைத் தயாரித்து, மக்களுக்குச் செலுத்துவதற்கான, திட்டமிடுதலிலும், தயாரிப்பு வேலைகளிலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்விதத்தில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துவதிலும் மோசமான முறையில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல, இவ்வாறு நாட்டில் நிலைமைகள் மோசமாக இருக்கும் காலத்தை, தன்னுடைய பிளவுவாத மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளவும் பயன்படுத்திக்கொண்டது.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தனியாருக்குத் தாரை வார்க்க இலக்கு அறிவிக்கப்பட்டதையும் பார்த்தோம். இதனைத்தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டமும் (monetization of the public sector assets) அறிவிக்கப்பட்டதைப் பார்த்தோம். இவ்வாறு சொத்துக்களை விற்று சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்போகிறார்கள். இது, நாட்டின் துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில்வே பாதைகள், நிலம் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரைவார்க்கும் செயலே தவிர வேறல்ல.
பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்கிறது. நிதித்துறையில் பொதுத்துறை வங்கிகளில் இரண்டு தனியாரிடம் தாரை வார்க்கப்பட இருக்கிறது. ஆயுள் இன்சூரன்ஸ் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
மோடி அரசாங்கம் அம்பானிக்கும், அதானிக்கும் அப்பட்டமான முறையில் சலுகைகள் அளித்ததன் மூலம், அவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில்கூட மக்களிடம் மிகவும் அசிங்கமானமுறையில் கொள்ளை லாபம் அடித்ததைக் காட்டின. அம்பானியின் நிகர சொத்தின் மதிப்பு 2021இல் 92.7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது. அதானியின் சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.
மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது மேலும் மேலும் சுமைகள் ஏற்றப்பட்டன. மிகவும் அதிகமான அளவில் நாசத்தை ஏற்படுத்திய கோவிட் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில், அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் மக்களுக்குச் சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருந்ததன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து மக்கள் வாங்கிவந்த சொற்ப வருமானங்களும் சரிந்து, பல லட்சக்கணக்கான மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளியது. மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளிய மற்றொரு காரணி, வேலைவாய்ப்பு சுருங்கியதால் வருமானங்கள் இழப்பு ஏற்பட்டதுமாகும். 2020-21 கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் கூடுதலாக வறுமைக் குழிக்குள் தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 7 முதல் 8 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்தபின், அதன் அடையாளத்தையே சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அந்தஸ்தைக் குறைக்கும் விதத்தில் அதன் சட்டமன்ற இடங்களும் சட்டமன்ற இடங்களுக்கான மறுசீரமைப்பில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற இடங்கள் இவ்வாறு மறுசீரமைக்கப்பட்டு குறைக்கப்படுவது, அதன் பின்னர் தேர்தல்கள் நடத்துவது, அதன்பின்புதான் மாநில அந்தஸ்து என்னும் வரிசைக்கிரமம் அமித் ஷாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், அங்கே மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கைவிடுவதற்கான எண்ணமோ, அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்திருப்பதை மீளவும் அளிப்பதற்கான எண்ணமோ இருப்பதாகத் தெரியவில்லை.
பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் ஆட்சி செய்வதைப்போலவே, இப்போது வட கிழக்கு மாநிலங்களிலும் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றனர். நாகாலாந்து மாநிலத்தில் ராணுவத்தினரால் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது, அங்கே ராணுவத்தின் ஆட்சி தொடர்வதற்காகவே வந்திருக்கிறது என்பதற்கான கடுமையான நினைவூட்டலாகும்.
இந்துத்துவா ஆட்சியாளர்களுக்கு, ஒரு வலுவான ராணுவ அரசை நிறுவுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களால் அந்நிய மற்றும் உள்நாட்டு எதிரிகளுடன் (external and internal enemies) போராட முடியும். உள்நாட்டில் அவர்கள் எதிரிகள் என்று கருதுவது முஸ்லீம்களைத்தான் என்பது தெளிவு. முஸ்லீம்களுக்கு எதிராக, வெறுப்பை உமிழ்ந்திடும் உரைகள், சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள், சிறுபான்மையினரைக் குறி வைத்து பாஜக தலைவர்கள் குரைத்தல் திட்டமிட்டு படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின்காரணமாக பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்த பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் சமீபத்தில் கர்நாடகாவிலும் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் ‘புனித ஜிகாத்’ (‘love jihad’)எனக் குற்றஞ்சாட்டி, மதக் கலப்புத் திருமணங்கள் செய்துகொள்ளும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில், கிறிஸ்தவர்கள் மீது கவனம் திருப்பப்பட்டிருக்கிறது.
மதவெறியர்களால் முஸ்லீம்கள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரங்கள்மீது தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இந்த ஆண்டில் கிறித்தவர்கள் மீதும் அவர்களுடைய தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் கூர்மையானமுறையில் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிந்தது. இத்தகைய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் அன்றும் நடந்திருக்கிறது. வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் அனுமதி வாங்கி நிதி வசூல் செய்துவந்த அன்னை தெரசா கருணை இல்லங்களுக்குக்கூட அவ்வாறு அளிக்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது.
மொத்தத்தில், இந்த ஆண்டு, ஒன்றிய அரசாங்கத்தால் கோவிட் பெருந்தொற்று மிக மோசமானமுறையில் கையாளப்பட்டதையும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள்மீதான சுமைகள் ஏற்றப்பட்டிருப்பதையும், சிறுபான்மையினர் மீது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதையும் பார்த்தது.
இவ்வாறு அடிமேல் அடிவாங்கிய மக்கள் இப்போது அவற்றை எதிர்த்துநின்று, திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாஜக, ஏப்ரலில் நடைபெற்ற ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் கடும் பின்னடைவுகளை எதிர்கொண்டது. அஸ்ஸாமில் மட்டும்தான் அது மிகவும் குறைவான பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகிக்கப்படும் சண்டிகார் மாநகராட்சிக்கு, இந்த ஆண்டு நடந்த சமீபத்திய தேர்தலில், பாஜக தன்னுடைய பணபலத்தையும் அதிகாரபலத்தையும் இறக்கிவிட்டிருந்தபோதிலும், இந்துத்துவா அடிப்படையிலான மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டபோதிலும், படுதோல்வி அடைந்தது. அங்கே, தனிப்பெரும் கட்சியாக மேலெழுந்துவந்துள்ள ஆம் ஆத்மி கட்சியிடம் மாநகராட்சியை இழந்தது.
மக்கள் மத்தியில் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் அதிகரித்துவரும் பின்னணியில் பாஜக இத்தகைய தேர்தல் தோல்விகளைச் சந்தித்தள்ளது. 2021ஆம் ஆண்டு முழுவதுமே விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் ஆதிக்கம் செலுத்தியது. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் வெகுஜனப் போராட்டங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி இருக்கிறது. தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓராண்டு காலத்திற்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் எவ்விதத்தொய்வுமின்றிக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தி வந்த பின்னர், மோடி அரசாங்கம் இறங்கிவந்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருக்கிறது. விவசாயிகளின் உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தின்முன்னே ஒன்றிய அரசாங்கத்தை சரணாகதி அடைய வைத்துள்ளது. இந்த வெற்றியானது உழைக்கும் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் ஒன்றுபட்டுப் போராடினால், வெற்றி பெறுவது திண்ணம் என்பதேயாகும்.
விவசாய இயக்கம், கூட்டு நடவடிக்கைகளின்போது, தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமை வளர்ந்துகொண்டிருப்பதையும் பார்த்தது. இது எதிர்காலப் போராட்டங்களுக்கும், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க்களத்திற்கும் அடிப்படையாக அமைந்திடும். புத்தாண்டு இத்தகைய நல்லதொரு அறிகுறியுடன் துவங்குகிறது.
(டிசம்பர் 29, 2021)
நன்றி:பீப்பிள்ஸ் டெமாக்ரசி
கோவிட்-19 தடுப்பூசி பயனாளிகளுக்குத் தெரியாமலேயே தனித்துவ சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன – சஹத் ரானா | தமிழில்: தா.சந்திரகுரு
இருபத்தி ஒன்பது வயதான சுவேதா சுந்தர் 2021 மே ஆரம்பத்தில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மூவருடன் தெற்கு தில்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் தவணையைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்றிருந்தார். தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் பயனாளிகள் தங்களுடைய அடையாளங்களுக்காக ஆறு வகையான அரசு ஆவணங்களை அளிக்கலாம் என்று அரசு வழங்கிய வழிகாட்டுதல்கள் இருந்து வருகின்றது. ஆனாலும் அந்த தடுப்பூசி மையத்தில் இருந்த ஊழியர்கள் அவர்களுடைய அடையாளங்களைச் சரிபார்ப்பதற்காக ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்த நேரத்தில் அவர்கள் சொன்னபடியே தான் செய்ததாகக் கூறிய சுவேதா சுந்தர் ஆதார் தகவல்களைக் கேட்பது பற்றி அப்போது தான் அதிகம் யோசிக்கவில்லை என்றார்.
நொய்டாவில் உள்ள அரசு சுகாதார மையம் ஒன்றில் 2021 ஆகஸ்ட் 3 அன்று கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்த போது பெண் ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை
அதிகாரியிடம் காட்டுகிறார்
வீடு திரும்பிய அவர் தன்னுடைய தடுப்பூசி சான்றிதழில் பயனாளி குறித்த எண்ணுக்கு மேலே இன்னுமொரு தனித்துவ சுகாதார அடையாள (UHID) எண் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்தார். முதலில் அந்த அடையாள எண் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை. ஆதார் தகவல்களை வழங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட அவரது குடும்பத்தினர் மூவருக்கும் அதுபோன்று சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த சுகாதார அடையாள எண் பற்றியோ அல்லது அவ்வாறான ஒன்றை தங்களுக்கு வழங்கியிருப்பது பற்றியோ அங்கிருந்தவர்கள் எதுவுமே சொல்லவில்லை என்று கூறிய சுவேதா ‘எங்களுக்கிடையே அந்த எண் குறித்து எந்தவொரு உரையாடலும் இருக்கவில்லை. அந்த அடையாள எண் வழங்குவதற்கான ஒப்புதலைக் கேட்கும் செயல்முறை எதுவும் அங்கே இல்லை. ஒருவேளை அப்படியே என்னிடம் ஒப்புதல் கேட்கப்பட்டிருந்தாலும் சுகாதார அடையாள எண் என்றால் என்னவென்றே தெரியாத போது அதற்கு எப்படி என்னால் ஒப்புதல் வழங்கியிருக்க முடியும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
சுவேதாவும், அவரது குடும்பத்தினரும் தங்களுடைய தடுப்பூசி சான்றிதழ்களில் பார்த்த அந்த தனித்துவ சுகாதார அடையாள எண்ணானது தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் (NDHM) கீழ் உருவாக்கப்பட்ட தனித்துவ அடையாளக் குறியீடாகும். சிறந்த சுகாதார நலன்களை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துகின்ற குறிக்கோளுடன் 2020 ஆகஸ்டில் அரசாங்கம் அந்தப் பணியைத் துவங்கியிருந்தது. தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்ற அரசு அமைப்பான தேசிய சுகாதார ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் அந்தப் பணி குறித்து ‘நாட்டின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பிற்குத் தேவையான முக்கிய ஆதாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்று விவரிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்டவர்களின் சுகாதாரப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது, இணையவெளி மருந்தகங்கள், தொலை மருத்துவம் வழங்குநர்களின் சேவைகள் உள்ளிட்ட சுகாதார சேவைகளை அவர்களுக்கு கிடைக்கச் செய்வது போன்ற டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் பல கூறுகளுடன் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளையும் இணைத்து வைக்க இந்த தனித்துவ சுகாதார அடையாள எண் பயன்படும் என நம்பப்படுகின்றது.
இந்த தனித்துவ சுகாதார அடையாள எண்கள் பயனாளிகளின் ஆய்வக அறிக்கைகள், மருந்துகள், மருத்துவமனை விடுவிப்பு சுருக்க அறிக்கைகள், பிற தனிப்பட்ட சுகாதாரத் தகவல்கள் என்று தங்களின் சுகாதாரம் குறித்த பதிவுகள் அனைத்தையும் பயனாளிகள் பெற்றுக் கொள்வவதற்கு உதவும். தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கீழ் இவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற மிகவும் முக்கியமான சுகாதாரத் தரவுகளைப் பாதுகாத்து வைப்பதற்கென்று தேசிய சுகாதார ஆணையத்தின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கென்று இன்னும் தரவுப் பாதுகாப்புச் சட்டம் எதுவும் இல்லாத நிலையில் இத்தகைய தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது பற்றி பலத்த சந்தேகங்கள் இருந்து வருகின்றன. தனித்துவ சுகாதார அடையாள எண்ணை உருவாக்கி அதன் மூலம் தேர்வு செய்து உள்ளே செல்வது, தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்திலிருந்து தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் நீக்கி விடக் கோரி அதிலிருந்து வெளியேறுவது போன்ற செயல்பாடுகள் அனைத்துமே பயனாளிகளின் விருப்பத்திற்குட்பட்டவையாகவே இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுவேதா சுந்தர் போன்ற பலருக்கும் ஏற்கெனவே அவர்களுடைய அனுமதியைப் பெறாமலேயே தனித்துவ சுகாதார அடையாள எண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
செப்டம்பர் 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்றழைக்கப்படும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை காணொலி கூட்டம் மூலமாக அறிவித்தார். அதற்கு முன்பாக தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் சண்டிகர், லடாக், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய ஆறு யூனியன் பிரதேசங்களில் முன்னோடித் திட்டம் என்ற அளவிலே செயல்படுத்தப்பட்டிருந்தது. சுகாதார ஊழியர்களை தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு சண்டிகர் நிர்வாகம் கட்டாயப்படுத்தியது பற்றி 2020 செப்டம்பரிலும், மற்றவர்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான முயற்சிகள் பற்றி 2020 டிசம்பரிலும் கேரவன் இதழ் செய்திகளை வெளியிட்டிருந்தது.
2020 ஆகஸ்ட் மாதம் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்திற்கான முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2021 செப்டம்பர் இறுதியில் நாடு முழுவதும் அந்தப் பணி தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வரையிலும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்ட இணையதளத்தில் யூனியன் பிரதேசங்களுக்கு வெளியே வசித்து வந்தவர்களால் சுகாதார அடையாள எண்களை உருவாக்க முடியாத நிலைமையே இருந்து வந்தது. இருப்பினும் யூனியன் பிரதேசங்களுக்கு அப்பாற்பட்டு வசித்து வந்த ஆறு பேரிடம் அந்த திட்டம் குறித்து கேரவன் இதழ் பேசியது. தேசிய அளவில் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான அடையாள சரிபார்ப்பின் போது அந்த ஆறு பேருக்கும் தனித்துவ சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த ஆறு பேரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக தங்கள் ஆதார் அட்டையை தங்களுடைய அடையாளத்திற்கான சான்றாகப் பயன்படுத்தியிருந்தனர். அந்த ஆறு பேரில் இருவர் ஆதார் அட்டையை அடையாள ஆதாரமாகத் தரச் சொல்லி தடுப்பூசி மையங்கள் வலியுறுத்தியதாகக் கூறினர். மற்ற ஆவணங்களை ஆதாரமாக வழங்கலாம் என்று தனக்குத் தெரியாது என்று ஒருவரும், தங்கள் ஆதார் விவரங்களை தாங்களாகவே தர முன்வந்ததாக மற்ற மூவரும் கூறினர்.
தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவிற்கு தன்னையும் தனது பங்குதாரரையும் தங்களுடைய நிரந்தர கணக்கு எண்கள் (பான் அட்டை) மூலம் மே மாதம் இணையவழியில் பதிவு செய்து கொண்டிருந்தார். ஆயினும் தனியார் மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற அவரது பங்குதாரர் சென்ற போது அங்கிருந்த ஊழியர்கள் அவரது பான் கார்டை சரியான அடையாளம் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த ஊழியர்களிடம் தன்னுடைய ஆதார் விவரங்களைக் கொடுக்க விரும்பாத பங்குதாரர் மணிக்கணக்கில் அங்கிருந்த ஊழியர்களால் காத்திருக்க வைக்கப்பட்டார். தாங்கள் இருவரும் ஆதார் விவரங்கள் மிகவும் முக்கியமான தகவல்கள் என்பதை அறிந்தவர்கள் என்பதால், அதைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று கூறிய அந்தப் பொறியாளர் ‘ஆனால் இறுதியில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள விரும்பியதால் என்னுடைய பங்குதாரர் தன்னுடைய ஆதார் விவரங்களைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவருக்கு தடுப்பூசி சான்றிதழுடன் சுகாதார அடையாள எண்ணும் சேர்த்தே வழங்கப்பட்டது. அந்த ஊழியர்கள் அவ்வாறு வழங்கப்பட்டது பற்றி அவரிடம் எதுவுமே சொல்லவில்லை!’ என்றார்.
ஆதார் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆதார் அட்டை அல்லது எண்ணைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக மட்டுமே எந்தவொரு நபருக்கும் மக்கள் நலத்திட்டத்தின் பலன்களை மறுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக 2020 டிசம்பரில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள ஆதார் விவரங்கள் கட்டாயமில்லை என்று தடுப்பூசிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டது. தேசிய சுகாதார ஆணையமும் தனித்துவ சுகாதார அடையாள எண்களை உருவாக்க ஆதார் விவரங்கள் தேவையில்லை என்றே தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதார அடையாள எண்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் தங்களுடைய தொலைபேசி எண்களைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோவின் இணையதளத்தில் தானாக அல்லது வேறு விதத்தில் தங்களுடைய அடையாளத்திற்கு ஆதாரமாக ஆதார் தகவல்களைக் கொடுத்திருந்த பலரும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் தன்னிச்சையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனித்துவ சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவின் இணையவழி தளம் கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவைப் பதிவு செய்து கொள்வதைத் திட்டமிட்டுக் கொள்ள பயனாளிகளை அனுமதிக்கிறது. பயனாளிகளின் விவரங்களை நிரப்பவும், தடுப்பூசி மையங்களில் பயனாளிகளின் அடையாளங்களை அங்கீகரிக்கவும் அந்த தளம் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுகிறது. ஆதார் விவரங்களைச் சமர்ப்பித்தவர்கள் எவ்வாறு கோவின் தளத்தில் தனித்துவ சுகாதார அடையாள எண்ணிற்காக பதிவு செய்யப்பட்டார்கள் என்பதை தடுப்பூசி செலுத்துகின்ற பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் விளக்கினார்கள்.
தெற்கு தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசிக்கு பொறுப்பான முக்கிய அதிகாரியாக இருக்கின்ற மருத்துவர் ஒருவர் ‘முதலில் கோவின் தளத்தில் தன்னுடைய அடையாள சரிபார்ப்புக்காக ஆதார் அல்லது வேறு ஏதேனும் புகைப்பட அடையாளம் இவற்றில் பயனாளர் எதைப் பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நாங்கள் தேர்வு செய்கிறோம்’ என்று கூறினார். ‘பயனாளிகள் ஆதார் விவரங்களைக் கொடுத்தால் அவர் தனித்துவ சுகாதார அடையாள எண்ணிற்காகப் பதிவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார் என்றிருக்கின்ற மற்றொரு தேர்விற்குச் செல்கின்றோம். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் பயனாளிகளுடைய ஒப்புதலைப் பெறாமல் தாங்களாகவே அந்த முடிவைத் தேர்வு செய்து விடுகிறார்கள்’ என்றார்.
அந்த சுகாதார அடையாள எண் குறித்து தடுப்பூசி போட வருகின்ற மக்களுக்கும், சுகாதாரப் பணியாளகளுக்கும் இடையே எந்தவொரு உரையாடலும் இருப்பதில்லை என்று பெயர் சொல்ல விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறுகிறார். பெரும்பாலான ஊழியர்களும் சுகாதார அடையாள எண் என்றால் என்னவென்றே தெரியாமலேயே இருக்கிறார்கள். ‘அந்த முடிவை நாங்கள் தேர்வு செய்யும் போது, தொழில்நுட்ப ரீதியாக பயனாளிகளின் ஒப்புதல் வழங்கப்பட்டது என்றிருப்பதால் அதற்காக அரசாங்கமோ அல்லது சுகாதாரப் பணியாளர்களோ தொழில்நுட்ப ரீதியாக ஒருபோதும் சிக்கலில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் உண்மையில் களத்தில் பயனாளிகளின் ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்முறை என்பது இருக்கவே இல்லை’ என்று அவர் கூறினார்.
தடுப்பூசி போடுவதற்காகச் சென்று தங்களுடைய ஆதார் தகவல்களைச் சமர்ப்பித்த அனைவருக்குமே இதுபோன்று தனித்துவ சுகாதார அடையாள எண் வழங்கப்படவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் கோவின் தளத்தில் பயனாளியின் ஒப்புதலை உறுதிப்படுத்துகின்ற தேர்வை பதிவு செய்தே சுகாதார அடையாள எண்ணை உருவாக்கிட வேண்டும் என்று கூறுகின்ற தில்லி தனியார் மருத்துவமனை மருத்துவ அதிகாரி அடையாள எண்ணுக்கான ஒப்புதலை வழங்குவதற்கான தேர்வை மேற்கொள்வதற்குத் தேவையான குறிப்பிட்ட வழிமுறைகளை தான் பணி புரிகின்ற மருத்துவமனை போன்ற சில தடுப்பூசி மையங்கள் கொண்டிருந்தன என்கிறார். ‘ஆரம்பத்தில் கோவின் தளத்தில் பயனாளிகளை எவ்வாறு அங்கீகரிப்பது, பதிவு செய்வது என்று எங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு அதிகாரிகளே பயிற்சி அளித்தனர்’ என்று கூறிய அந்த மருத்துவர் ‘சுகாதார அடையாள எண்ணுக்காக தங்கள் ஆதார் விவரங்களைத் தருவதற்கு பயனாளிகள் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கும் முடிவைத் தேர்வு செய்யுமாறு பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். தங்களுக்கு முன்பாக அந்தப் பணியில் இருந்தவர்களிடமிருந்து அதை எப்படி செய்வது என்பதை இப்போது சுகாதாரப் பணியாளர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.
அடையாள சரிபார்ப்புக்காக மற்ற புகைப்பட அடையாளச் சான்றுகளைக் காட்டிலும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஊக்கமளிக்கும் வகையிலேயே கோவின் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார். ‘ஆதார் அட்டைகளை பயனாளிகள் பயன்படுத்தும் போது நாங்கள் ஆதார் எண்ணை மட்டும் உள்ளிட்டால் போதும்’ என்று கூறிய மருத்துவர் ‘ஆனால் அது வேறு ஏதேனும் அடையாள அட்டையாக இருந்தால் பயனாளியின் படத்தையும் அவர்களுடைய வேறு புகைப்பட அடையாள அட்டையின் படத்தையும் எடுத்து கோவின் தளத்தில் பதிவேற்றிட வேண்டும். அது மிகவும் கடினமான செயல்’ என்றார்.
தடுப்பூசி பணியில் ஒரு மாதம் கழித்த தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் நவநீத் சிந்து தங்களுடைய மருத்துவமனை தடுப்பூசி அடையாள சரிபார்ப்பு செயல்முறைக்கு ஆதார் அட்டைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். சிந்து, அவரது சகாக்களிடம் ஆதாரை மட்டுமே ஏற்குமாறு மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் கூறியிருந்தனர். ‘அது எங்களுக்குத் தரப்பட்ட அறிவுறுத்தலாக மட்டுமே இருந்தது என்றாலும் நாங்கள் பயனாளிகள் ஆதாரைக் கொண்டு வர வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறோம். வேறெந்த புகைப்பட அடையாள அட்டையையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை’ என்று கூறினார். மேலும் ‘பயனாளிகளும் ஆதார் விவரங்களைத் தரவே விரும்புகிறார்கள். எனக்குத் தெரிந்தவரை மற்ற தடுப்பூசி மையங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் இதையே செய்து வருகிறார்கள்’ என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான தடுப்பூசி இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் சுகாதார அடையாள எண்களை உருவாக்கித் தர வேண்டும் என்று உத்தரவுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக தெற்கு தில்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பொறுப்பில் இருந்த அந்த முக்கிய அதிகாரி கூறினார். ஜனவரி தொடக்கத்தில், அவரும் மற்ற தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி அதிகாரிகளும் தென்கிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்ததாக கூறிய அவர், அந்த மாவட்ட ஆட்சியர் முடிந்தவரை தடுப்பூசி பயனாளிகள் பலரை தனித்துவ சுகாதார அடையாள எண்களுக்காகப் பதிவு செய்யுமாறு தங்களிடம் கூறியதாகத் தெரிவித்தார். ‘தென்கிழக்கு தில்லியின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து அந்த உத்தரவு வந்தது. நாங்கள் உருவாக்க வேண்டிய சுகாதார அடையாள எண்களுக்கான இலக்கு எங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதனாலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்’ என்று அவர் கூறினார். தனித்துவ சுகாதார அடையாள எண்களைக் கட்டாயம் உருவாக்க வேண்டும் என்று வெளிப்படையான உத்தரவு இல்லை என்றாலும் பெரும்பாலான ஊழியர்கள் அவ்வாறே செய்து வந்துள்ளனர். அது சொல்லப்படாது செய்கின்ற விஷயமாகி விட்டது. தங்களுடைய ஆதார் விவரங்களை யாராவது தருவார்கள் என்றால் அவர்களுக்கு சுகதார அடையாள எண்ணை உருவாக்குவதற்கான முடிவை நாங்களாகவே தேர்வு செய்து கொள்கிறோம்’ என்று அந்த மருத்துவ அதிகாரி கூறினார். கேரவன் இதழ் மருத்துவர்களுடன் நடந்த அந்த கூட்டம், தடுப்பூசி பொறுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகள் குறித்த தகவல்களைக் கேட்டு தென்கிழக்கு தில்லியின் மாவட்ட ஆட்சியர் விஸ்வேந்திராவுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்தது. ஆனால் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
உலகெங்கிலும் உள்ள மக்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாக்கும் லாப நோக்கற்ற அமைப்பான அக்ஸஸ் நவ் என்ற நிறுவனத்தின் ஆசிய கொள்கை இயக்குநரும், மூத்த ஆலோசகருமான ராமன் ஜித் சிங் சிமா ‘சுகாதார அடையாள எண்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமலேயே எப்படி அவற்றை உருவாக்கித் தரலாம்?’ என்று கேள்வியெழுப்புகிறார். தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்திற்கான சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கையை 2020 ஆகஸ்ட் மாதத்தில் தேசிய சுகாதார ஆணையம் உருவாக்கியது. அந்தக் கொள்கை தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் இணையும் குடிமக்கள் வழங்குகின்ற ஒப்புதலை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பொதுமக்களின் ஆலோசனைக்காக 2020 டிசம்பர் வரை வைக்கப்பட்டிருந்த அந்த வரைவுக் கொள்கை அதற்குப் பிறகு ஒன்றிய அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் தரவு முன்னுரிமையாளர் (டேட்டா பிரின்சிபால்) என்று குறிப்பிடப்படுகிற பயனாளியால் வழங்கப்படுகின்ற ஒப்புதலானது, அவருக்கு ஏற்கனவே தகவல் மற்றும் தனியுரிமை அறிவிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அந்த தனியுரிமை அறிவிப்பில் ஒப்புதல் மேலாண்மை குறித்த விரிவான தகவல்களும், தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தரவைப் பகிர்வது குறித்த தரவு முன்னுரிமையாளரின் உரிமைகளும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவு பாதுகாப்பு சட்டம் எதுவுமில்லாமல் டிஜிட்டல் சுகாதார அடையாள எண்ணிற்காக மக்களை அரசாங்கம் பதிவு செய்யத் தொடங்கியிருப்பது குறித்து சிமா வருத்தமடைந்துள்ளார். அவர் ‘எவ்விதமான மேற்பார்வையோ அல்லது குடிமக்களின் தரவு மற்றும் தனியுரிமை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளோ இருக்கவில்லை. சாத்தியமான புகார்களைக் களைவதற்கான எந்தவொரு தன்னாட்சி அமைப்பும் இருக்கவில்லை’ என்று கூறுகிறார். குடிமக்களின் தனியுரிமை, தரவு உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட தரவு பாதுகாப்பு மசோதா 2019 டிசம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றாலும் இன்று வரையிலும் அது சட்டமாக அங்கீகரிக்கப்படவே இல்லை.
குடிமக்களின் தரவு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்குப் போதுமானதாக சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை ஆவணம் இருக்கவில்லை என்றும் சிமா கூறுகின்றார். ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷனுக்கு 2020 செப்டம்பரில் அக்சஸ் நவ் சமர்ப்பித்த கடிதத்தில் ‘இந்த ஆவணம் பயனாளிகளின் ஒப்புதலை நிர்வகிப்பது குறித்து அரசாங்கத்திற்கு பொதுவான வழியை வழங்கும் என்றாலும், பயனாளிகளின் உரிமைகளுக்கான வலுவான தீர்வுகளைக் கொண்ட தேவையான சட்டங்களும் வழங்கப்பட வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கடிதத்தில் பயனாளிகளின் முக்கிய சுகாதார தரவுகளைப் பாதுகாக்கும், நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் தேசிய சுகாதார ஆணையம் ஒரு நிர்வாக உத்தரவின் மூலமாகவே அமைக்கப்பட்டுள்ளது என்றும், நாட்டின் அரசியலமைப்பு விதிகளைப் பொறுத்தவரையில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தை இயக்குதல் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசிப்பவர்களின் சுகாதாரம் குறித்த தகவல்களைச் சேகரிப்பது, பயன்படுத்துவது, ஒழுங்குமுறைப்படுத்துவது போன்றவற்றை நிர்வகிப்பதில் உள்ள சட்ட அதிகாரம் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கவனிக்கத்தக்கதாகவே கருதப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொற்றுநோய் காரணமாக மோசமான சூழ்நிலைகள் இருந்து வருகின்ற நேரத்தில் சுகாதார அடையாள எண்களை உருவாக்கி தேசிய டிஜிட்டல் சுகாதார திட்ட சுற்றுச்சூழல் அமைப்புடன் குடிமக்களை இணைப்பதற்கு அரசாங்கம் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என்று வழக்கறிஞர்களும், தரவு உரிமை ஆர்வலர்களும் கேள்விகளை எழுப்புகின்றனர். தரவு, நிர்வாகம் மற்றும் இணையம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற தனிப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கோடாலி அரசின் இந்த அவசரம் பொது நலன்களை விட தனியார் நலன்களால் தூண்டப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார். அவர் ‘இந்த திட்டம் உண்மையிலேயே குடிமக்களுக்கு நன்மை பயக்கும் என்றால், பயனாளிகளுக்கு அதன் விதிகளை விளக்குவதற்கான நேரத்தை அரசு ஒதுக்கி இருக்கலாம். சுகாதார அடையாள எண்களை உருவாக்கிடுவதற்காக, பயனாளிகளின் ஒப்புதலை நெறிமுறையற்ற வழிமுறைகள் மூலமாகப் பெறுவதற்காக அரசு இந்த அளவிற்கு குடிமக்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டியதில்லை’ என்கிறார். இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு குடிமக்களின் சுகாதாரத் தரவுகள் முக்கிய ஆதாரமாக மாறிவிட்டன என்று கூறும் கோடாலி ‘டிஜிட்டல் சுகாதார அமைப்பை உருவாக்குவது தனியார் நிறுவனங்களும், இவ்வளவு பெரிய தரவுத்தளங்களிலிருந்து பயனடையக்கூடிய காப்பீட்டாளர்களும் அந்தத் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதையே அனுமதிக்கும்’ என்கிறார்.
தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கீழ் சுகாதாரம் தொடர்பான தரவுகளின் ‘இயங்குதிறன்’ பற்றி பல சந்தர்ப்பங்களில் தேசிய சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளதால், தனியார் நிறுவனங்களிடம் இந்தத் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற கவலைகள் எழுகின்றன. இயங்குதிறன் என்பது பல்வேறு சாதனங்கள், மென்பொருள்கள், தகவல் அமைப்புகள் போன்றவை தரவுகளை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். தேசிய சுகாதார ஆணையம் தனித்துவ சுகாதார அடையாள எண்ணை வைத்திருப்பவர்கள் சிறந்த சுகாதாரப் பாதுகாப்பிற்கான வெவ்வேறு சேவைகளைப் பெறுவதற்கு அந்த இயங்குதிறன் உதவும் என்று கூறியுள்ளது. ஒருங்கிணைந்த சுகாதார இடைத்தளம் குறித்த தன்னுடைய கலந்தாய்வுக் கட்டுரையில் ‘தற்போதைய தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கூறுகள் சுகாதாரம் தொடர்பான தரவுகளின் தடையற்ற இயங்குதிறனை உறுதி செய்கின்ற முதன்மை குறிக்கோளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. தேசிய டிஜிட்டல் சுகாதார திட்ட செயலி நிரலாக்க இடைத்தளத்தை சுகாதாரப் பதிவுகள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்ள, பகிர, சரிபார்க்க என்று இந்த சூழல் அமைப்பில் உள்ள பங்குதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சுகாதார அடையாளம் குறித்த கலந்தாய்வில் தனது கருத்துகளை சமர்ப்பித்த அக்சஸ் நவ் பயனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு இல்லாமல் அவர்களின் நலன்களை அமைப்பின் மையத்தில் வைப்பதால் இயங்குதிறன் என்பது பேரழிவிற்கான செய்முறையாகிறது என்று குறிப்பிட்டிருந்தது.
தன்னுடைய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை அரசு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் நிலையில் தடுப்பூசிகளைப் பெற வந்த மக்களுக்கே தெரியாமலும், அவர்களுடைய சம்மதம் இல்லாமலும் தனித்துவ சுகாதார அடையாள எண்களை வழங்கியுள்ள நிகழ்வுகள் ஒருவரின் தனியுரிமை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
‘தொற்றுநோயின் பெயரால் தடுப்பூசி போன்ற அத்தியாவசியப் பொருளை முன்னிறுத்திக் கொண்டு தன்னுடைய திட்டத்தை மிகவும் தீவிரமாக அரசாங்கம் இவ்வாறு அமல்படுத்துவது முற்றிலும் ஒழுக்கக்கேடான, நெறிமுறையற்ற செயலாகும்’ என்று சிமா குற்றம் சாட்டுகிறார்.
இந்தக் கட்டுரை தாக்கூர் குடும்ப அறக்கட்டளையின் மானிய உதவியால் தயாரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் உள்ளடக்கம் மீது தாக்கூர் குடும்ப அறக்கட்டளை எந்தவொரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
https://caravanmagazine.in/health/covid-19-vaccine-beneficiaries-were-assigned-unique-health-ids-without-their-consent
நன்றி: கேரவான் இதழ்
தமுஎகச: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்றது *பாசிட்டிவ் பயம்* – விஜயராணி மீனாட்சி
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. நேற்று மதியம் கூட அவர் என்னிடம் பேசினார். இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. என் மனதின் வதையைத் தணிக்க தண்ணீர் குடித்தேன். தொண்டைவழியாக இறங்குகிற தண்ணீரின் க்ளக் க்ளக் … சத்தம் என் மௌனத்தை உடைத்துக் கொண்டிருந்தது.
தினம் தினம் இப்படி வரும் மரணச் செய்திகளைக் கேட்டுக்கேட்டு பயத்தின் உச்சிக்குச் சென்று நடுங்கும் மனதை எப்படி மீட்டுக் கொண்டுவருவது? நிம்மதியாக இறந்தவர்களின் செய்தியும் நம்மை மட்டும் கலங்கடித்துவிடுகிறது. பயத்தின் இறுக்கமே மூச்சுமுட்டுகிறது இதில் இந்த மாஸ்கு வேற…. அதிலும் ரெண்டு மாஸ்க போடணும், அப்படி போடணும் இப்படி போடணும் எதத் தான் ஃபாலோ பண்ண? எல்லாம் ஒரே குழப்பமாவே இருக்கு. யார் பக்கத்துல வந்தாலும் அல்லது தற்செயலா தும்மினாலும் ஒரே பதட்டமா பயமாகிடுது. இயல்பான இருமலு தும்மலு இதெல்லாம் இவ்வளவு பயமுறுத்தும்னு நெனெச்சிப் பார்த்திருப்போமா? சாதாரண ஜலதோஷத்துக்கே கொரொனாவா இருக்குமோன்ற பயம் வந்திருது.
இன்னைக்கு செத்துப்போன சுதாகர் சாரும் நானும் போன வாரம் வரைக்கும் ஒண்ணாத்தான் சுத்திக்கிட்டு இருந்தோம். திடீர்னு போன் பண்ணி எனக்கு கோவிட் பாசிடிவ் நீ எதுக்கும் செக் பண்ணிடுனு சொன்னதில் இருந்து திக்திக்குனு இருக்கு. அவர ஆஸ்பத்திரீல சேர்த்ததுல இருந்து கேட்ட செய்தி எதுவும் சொல்ற மாதிரியில்ல. அத்தனை லட்சம் செலவு பண்ணியும் கொஞ்சங்கூட ஈவு எரக்கமில்லாம அந்த டாக்ட.ருங்க நடந்துகிட்டத மத்தவங்க சொல்லிக் கேட்டபோது தூக்கிவாரிப்போட்டுச்சு. அதநான் ஏம்வாயால சொன்னா நீங்களும் பயப்படுவீக. இதோ இன்னைக்கு அவரு செத்தும் போய்ட்டாரு. அதேநேரம் நல்லாக்கவனிச்சு பொழைக்க வைக்கிற டாக்டருகளும் இருக்காக. காசு காசுன்னு அலையறவங்களும் இருக்காக.
ஒரு மனுஷனோட வாழ்க்கை அவ்ளோதானா?. இதுக்கா இத்தன ஆட்டம். இங்கு எல்லோரும் மனதளவில் சரிந்துதான் போய்ட்டாங்க. ஏன்னா அவ்வளவு வெறுமை இப்படி ஒரு வெறுமை யாரும் அனுபவிக்கக்கூடாது.
ஆனா எனக்குத் தெரிஞ்சு எல்லோரும் அவர் அவரின் அளவில் வெறுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில் இத்தனை புழுக்கத்திற்கு இடையிலும் நான் வாழ்ந்தாக வேண்டும் மற்ற மனிதர்களிடம் இருந்து என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். இப்ப தான் புரியுது சிறைச்சாலையில் தனி அறையில் பூட்டி வைக்கப் பட்டிருக்கும் கைதிக்கான தண்டனையை அனுபவிப்பதன் ரணம். ஆனா காந்தி மண்டேலால்லாம் புஸ்தகம் படிச்சு தனிமையப் போக்கிக்கிட்டாங்களாம். ஆமா அவங்களுக்கு நோய் பயமோ உசுரு பயமோ இல்ல. நாட்டுக்காக விடுதலைக்காக சிறைல இருந்தவங்க.
மனசு கண்ட கண்டத நினைச்சி குழம்பி, பயந்து பதட்டத்தோட தவிக்குது. போன மார்ச்ல இருந்து கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருஷம் ஆகிபோச்சு வேலையில்லை, கையில் காசு இல்ல, ஆனா எப்படியோ இந்த வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. பயம் மட்டும் குறையவேயில்லை. என்னை நான் என்னிடமிருந்தே சகித்துக் கொண்டு, தப்பித்து பிழைக்க அருவருப்பா இருக்கு. ஆனாலும் இப்ப எனக்கு ஜுரம் வரமாதிரி இருக்கு. வந்துடுமோனு ரொம்ப பயமாவுமிருக்கு. வந்துட்டா எப்படி சமாளிக்கறது. உடல் முழுக்க வலி பின்னுது உடம்போட ஒவ்வொரு செல்லையும் ஊசி வச்சி குத்தற மாதிரி வலிக்குது. மூச்சுக்காத்து எனக்குள்ள வந்து போறது நல்லாத் தெரியுது. சட்டையில் வெள்ளை வெள்ளையாக வேர்வையின் உப்பு பூத்திருக்கிறது. மிதமாக தொண்டை கரகரக்கிறது. ஆனால் மல்லிப்பூவின் வாசனை நல்லா மணக்குது. கொரோனா வந்தா வாசனை தெரியாது. ஆனா எனக்கு நல்லா வாசனை தெரியுதே. “So, Be positive”
சுதாகர் சாரு செத்துடாருனு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல. அது வேற எதாவது சுதாகர் சாரா இருப்பாங்க. சீ…. வேற யாரா இருந்தாலும் ஒரு மரணத்த எப்படி உன்னால சாதாரணமா கடக்க முடியுது? அந்த அளவுக்கு இந்த சூழல் நம்மை மாத்திடுச்சா? ஃபேஸ்புக்கில் அவரோட profile போய் பாக்கும் போது அவரோட போட்டோவ போட்டு ” ஆழ்ந்த இரங்கல்”னு வர பதிவ பாத்துட்டு எளிதில் கடக்க முடியல. என் கண்கள் என்னை அறியாம அழுதிடிச்சி. என்னால என்ன பண்ண முடியும் இன்னும் நல்லா அழ முடியும் இல்ல sad சிம்பலை அழுத்திவிட்டு ஆழ்ந்த இரங்கல்னு comment பண்ணத்தான் முடியும்.
கொரோனா காலத்தில் எத்தனை பேருக்கு பசியப் போக்கியிருப்பாரு. எல்லாத்தையும் கடந்து வந்துடுவோம்னு சோர்ந்து போனபோதெல்லம் நம்பிக்கைய கொடுத்த அந்த வார்த்தை இனி கிடைக்காது. கடைசியா முகத்தக்கூட பாக்க முடியல. எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது. பசியுமெடுக்கிறது.
ஒருவரின் இறப்புச் செய்தியால் அதிர்ந்திருக்கிறேன். எனக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்துடனுமிருக்கிறேன். பசியுமெடுக்கிறது. இந்த மூன்றின் உணர்வும் என்னை சிதைத்துக் கொண்டிருக்கிறது. பயம் பசியைவிட பலம் வாய்ந்தது. பயம் பசியைமட்டும் அல்ல என்னையும் சேர்த்துத் தின்று கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த வெறுமையின் மௌனத்தில் என் மூச்சுக் காற்று மட்டும் என்னுள் வந்து வெளிவருவதை அறியமுடிந்தது. அதையும் மீறி வெளியே எங்கோ இருமும் சத்தம் என் காதில் கேட்டவுடன் கைகள் அனிச்சையாக சானிடைசரை எடுத்து கைகளுக்கு தெளித்து தேய்த்துக் கொண்டதில் கைகள் சில்லிட்டது, சானிடைசரின் வாசனையை என்னால் உணர முடிந்ததில் அப்பாடா என்ற பெருமூச்சின் வேகம் மாஸ்கை வெளித்தள்ளி அழுத்தியது.
காலராவுக்கு பிறகு எல்லோரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கினோம், இப்ப கொரோனாவிற்கு பிறகு காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துட்டோம்னு சுதாகர் சார் சொன்னது சம்பந்தம் இல்லாம இப்ப ஞாபகத்துக்கு வருகிறது.
வாழ்க்கை நாம நினைக்கிற மாதிரி நேர்கோட்டில் பயணிக்கறது இல்ல. அது இழுத்த இழுப்புக்கு நாம ஓடிட்டு இருக்கோம். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சகிச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க எல்லாருக்குள்ளயும் எதோ ஒரு நாள் நாம செத்துடுவோம்ங்கற எண்ணம் நிச்சயம் வந்திருக்கும் அத எல்லாத்தையும் தாண்டி நாம வாழ்ந்தே ஆகணும். இதுக்குப் பேரு தப்பிப்பிழைக்கறதில்ல வாழ்க்கைய வென்று ஜெயிக்கறதுனு
சொல்லிட்டு இப்படி பொட்டுனு போய்ட்டாரு..
அமைதியான சூழ்நிலையில் அவரின் நினைவுகள் எனக்குள்ள மயக்க ஊசி போல படிப்படியா இறங்குது. மனசு மறத்துப்போகாம கனத்துப் போகுது விம்மி அழுததில் தான் மூச்சு திணறுகிறது மத்தபடி நான் பயப்பட வேண்டாம்.
மூச்சு முட்டுகிறது உடல் முழுக்க வெப்பம் மிகுந்து கண்களின் வழியேவும் மூக்கின் வழியேவும் வெப்பம் கொப்பளிக்கிறது. தொண்டை வறண்டு வாய் கசக்கிறது. உடலின் எல்லா பக்கமும் வியர்வை சுரந்து உடையை நனைத்து பிசுபிசுக்கிறது.
எலும்புகளின் இணைவில் ஊசியை வைத்து சுருக்கென்று குத்துவதைப் போல வலிக்கிறது. உடல் அனிச்சையாகப் போராடிக் கொண்டிருக்கிறது மனம்மட்டும் பயந்து எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. கொரோனா என்னுள்ளும் இருக்கிறது. எனக்கும் நாளை யாராவது முகநூலில் என் புகைப்படத்துடன் பதிவு போடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. பாழாப்போன டெஸ்ட் ரிசல்ட் வரும்வரைக்கும் இந்த மனசு பயந்தே செத்துப்போய்டும் போல. நீ தைரியமா இரு என்று எனக்கு நானே தைரியமூட்டிக் கொண்டேன்.
எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு. ஆயிரக்கணக்கான தூரம் குழந்தை குட்டியோட நடந்துபோற அளவுக்கு வறுமையில் இல்லனாலும். எல்லாத்தையும் சந்தேகத்துடன் அணுகவே பதைபதைப்பா இருக்கு. எல்லாத்தையும் தலைகீழா மாத்திடிச்சி கண்ணுக்கு தெரியாத ஒன்னு. பிழைச்சா வாழ்ந்திடலாம்னு வந்து நிக்கறோம்.
யாரும் இல்லாத என்னுடைய அறையே எனக்கான ஆறுதல். அறை நண்பர்கள் எல்லாருமே லாக்டவுன் போட்டவுடனே ஊருக்கு கிளம்பிடாங்க. ஒருவகையில் அவங்க எல்லாரும் தப்பிச்சிட்டாங்க.
நான் மட்டும் தான் மாட்டிகிட்டேனா.? இப்படி எனக்கு நானே பேசிட்டு இருக்கேன்
என்னோட தனிமை என்னுடைய சுயரூபத்தை எனக்கு காட்டிக் கொடுக்குது. மரணத்தவிடக் கொடும இந்த பயம் ..சீ.. செத்துப் போய்டலாம்.
இன்னைக்குள்ள மேசேஜ் வந்தா கொரோனா பாசிடிவ் வரலனா நெகடிவ் கருமம் புடிச்சவனுங்க சீக்கிரம் சொல்லித் தொலைக்க மாட்டாங்களா.
நேரம் நகர நகர பதட்டமும் பயமும் அதிகமாகுது. என்னோட நெஞ்சு துடிக்கிறது எனக்கே கேக்குது. சம்மந்தமே இல்லாம இடது தொடையின் சதை துடிக்குது. பல்லிவிழும் பலன் போல தொடையின் சதை துடிப்பதற்கு எதும் காரணம் இருக்குமா என காலண்டரின் பின் அட்டையை தேடியது கண்கள். தண்ணிய வேற அதிகமா குடிச்சதால மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது வழக்கமா இருப்பதைவிட அடர் மஞ்சள் வண்ணத்தில் எரிச்சலுடன் சிறுநீர் வந்தது. உன்மையிலே உடலுக்கு பிரச்சனை தான் போல அதான் இப்படி வருது என்று பயத்துக்கு பல காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தது. எச்சிலை கூட்டி முழுங்கினாலும் கசக்குது, கசாயத்த குடிக்கறதால வாய் கசக்குதா இல்ல எதனால? ஆனா இப்ப எல்லாம் முன்ன போல கசாயம் கசக்கறதில்ல, ஒருவேளை தினமும் குடிக்கறதால பழகிப்போச்சா.?
பொறுத்தது போதும் நாமே கால் பண்ணி கேட்டுடுவோம்னு கால் பண்ணா அவரும் கால் அட்டன் பண்ணவேயில்ல.. எப்படியும் பாத்துட்டு அவரே கூப்பிடுவாரு.. அதுகுள்ள நம்ம ஆவி பிடிச்சிடுவோம்னு
கொதித்த தண்ணிரில் “Eucalyptus” மாத்திரையை கிள்ளிப் போட்டவுடன் நீராவியும் யூகலிப்டஸ் வாசனையும் இணைந்து நெடியைக் கிளப்பி இருமச் செய்தது சூடான காற்று என் மூக்கின் வழியாக என் உடலுக்குள் செல்கிறது. மழை நின்ற பிறகு இலையில் துளி துளியாக சொட்டிக் கொண்டிருப்பதைப் போல வேர்வை துளிகள் என் முகத்திலிருந்து சொட்டிக் கொண்டிருந்தது. வேர்வை துளி சுடுநீரில் விழும் சத்தமும் கடிகாரத்தில் சிறிய முள் நகரும் சத்தமும் இணைந்தே கேட்டுக்கொண்டிருந்தது. போனில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்டவுடன் போர்வையை விலக்கிப் பார்த்தால் “விநாயகர் ஒரு?A)கடவுள்B)பாடகர்.A/B WINRs.500RC” என்று வந்திருந்தது.
நொந்து பற்களை கடித்துக் கொண்டு, அவருக்கு மீண்டும் கால் செய்தேன்.
செல்போனின் மணியுடன் என் இதய துடிப்பும் சேர்த்தே ஒலித்தது இவ்வளவு நேரம் காத்திருப்பதைவிடவும் அவர் போன் எடுக்கும் வரையில் காத்திருப்பது மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.
ஹலோ..
சார் வணக்கம்.
என்னோட கோவிட் ரிசல்ட்…
நேத்தே அனுப்பிட்டனே
நீங்க பாக்கலையா…
இல்ல சார் எதும் வரலையே..
அப்படியா ..
உங்களுக்கு நெகடிவ் சார் ..
கொரோனா இல்ல..
இருந்தாலும் கவனமா இருங்க…
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.
தீநுண்மியை வெல்வோம் – கௌதமன் நீல்ராஜ்
தீநுண்மியை வெல்வோம்…
திக்கெட்டும் சூழ்ந்திருக்கும் தீநுண்மியின் அச்சுறுத்தல்
திராவகமாய் முழ்கடிக்கும் திங்களெல்லாம் உனைமுடக்கும்…
பனையெட்டும் பால்நிலவை பாவையாய்க் கண்டவனும்
தனைமட்டும் காப்பதற்காய் நாவடக்கி நாணுகிறான்…
பெருந்துயர் எவையெனினும் பேரிடர் தோன்றிடினும்
நெடுந்துயர் களைந்திடவே கடுந்தவம் புரிவோமா…?
இருந்துங்கெடல் இழுக்காம் தமிழ்க்குடி தமைஈன்ற
அருந்தழல் அரசான்ட ஆதியவளாம் தமிழன்னைக்கு…
கொடும்பிணியோ அஞ்சோம் கொலைவாளோ அஞ்சோம்
கடும்பனியோ அஞ்சோம் மலைமுகடாய் நெஞ்சம்…
பொறுத்தல் முறையே தமை வருத்தல் பிழையே இவை
மறுத்தல் குறையே இனி ஒருத்தல் நிலையே அவையும் ஒறுத்தல் மலையே…!
விடும்பகை யொழித்தல் மரபே கடுஞ்சொல் மழித்தல் அறமே
கெடுவினை யழித்தல் தரவே யார்மாட்டும் மடுமலர் கொய்தல் திறனே…!
திறம்பட யெழுதல் இனிதே அதனினும் தமிழ்ச் சுவைதனைச் சொரிதல் இதமே அதனிடைப்
பெறுஞ்சுனை வேய்தல் அரிதே அதிலும் மிதமாய் கொய்தல் வலிதே…!
சுற்றமெலாம் ஆற்றுங்கால் வீருகொண்டே தொடருங்கால்
நற்றமிழே வாழியெனும் நாவாறச் சொல்லுங்கால்…
ஆற்றிடுவோம் செயல்கள்தனை கலைந்திடுவோம் மடமைதனை
நாற்றங்கால் பயிர்போலே நாமிருக்க ஊன்றிடுவோம் உடனெழுவாய் தமிழாளா…!
– கௌதமன் நீல்ராஜ்
நூல் அறிமுகம்: கோவிட் 19 நெருக்கடியும் சூறையாடலும் – கி. ரமேஷ்
கோவிட் 19 என்ற கரோனா கடந்த இரண்டாண்டுகளாக உலகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கான இறப்புகள், ஊரடங்கு என நாம் முன்பின் பார்த்தறியாதவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் இந்தியாவில் லட்சக்கணக்கான சிறுகுறு தொழில்கள் மூடப்பட்டதையும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து குழந்தை குட்டிகளுடன் தமது ஊரை நோக்கி நடந்ததையும் பார்த்தோம். ஆனால் இதே சமயத்தில், உலக அளவிலும், இந்திய அளவிலும் பெருமுதலாளிகள் தமது செல்வத்தை பலமடங்கு அதிகரித்துக் கொண்டதை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அது மட்டுமின்றி, இந்திய அரசு இந்த ஊரடங்கு காலத்தையும், தொழிலாளர்கள் எதிர்க்க முடியாதபடி இருக்கும் நிலையையும் பயன்படுத்திக் கொண்டு மக்கள் விரோத, தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி வேகவேகமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.
இந்தப் போக்கு எதோ இப்போது இருக்கும் அரசுக்குத்தான் சொந்தம் என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால் இது தொடங்கப்பட்ட ஆண்டு 1991. 1991, ஏப்ரல் 5 அன்று காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தப் பேரழிவுக்கு வித்திட்டவர் முன்னாள் பிரதமரும், அப்போதைய நிதியமைச்சருமான ’பேரறிஞர்’, பொருளாதார நிபுணர் திரு.மன்மோகன்சிங். அப்போதே இந்தப் பேரழிவைக் கணித்த தொழிற்சங்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன. 29, நவம்பர் 1991இல் தொடங்கி இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக 18 அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. பல கோடித் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 1991இல் இந்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு யானையைக் கட்டவிழ்த்து விடுவது போல் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த யானை இப்போது மதம் பிடித்து மக்களையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது. மாவுத்தர்களான முதலாளிகள் பெரும்பயன் பெற்று வருகிறார்கள். இந்தக் கொள்கையை ஐ.மு.கூ 1 அரசு தவிர மற்ற அரசுகள் தொடர்ந்து அமல்படுத்தின. ஐ.மு.கூ 1 அரசில் 62 இடதுசாரி மக்களவை உறுப்பினர்கள் இருந்ததால் அந்த அரசால் இதனைக் கடுமையாக அமல்படுத்த முடியவில்லை. அவ்வளவுதான்.
சரி, இந்தக் கொள்கைகள் இவ்வளவு மோசமானவை என்பது இந்தப் பேரறிஞர்களுக்குத் தெரியாதா என்றால், தெரியும். ஆனால் அவர்கள் அதுதான் முன்னேற்றம் என்று முழுமையாக நம்புகிறார்கள். தொழிலாளர்களுக்கு எப்படி மார்க்சியம் இருக்கிறதோ, அப்படியே இவர்களுக்கு முதலாளித்துவம் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சாதாரணமான நம்மைப் போன்றவர்களால் இந்தக் கொள்கைகளைப் புரிந்து கொள்ள முடியுமா என்றால், முடியும் என்று கூறி எளிய முறையில் விளக்கி இப்போது சிந்தன் புக்ஸ் வெளியிட்டிருக்கும் கோவிட் 19 – நெருக்கடியும், சூறையாடலும் நிரூபிக்கிறது. அந்தப் புத்தகத்தை நான் இங்கு அறிமுகம் செய்கிறேன்.
இந்தப் புத்தகம் ஒரு ஆய்வுப் புத்தகம். ஆனால் ஒரு ஆய்வுப் புத்தகம் போலல்லாமல், எளிய முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதுதான் அதன் சிறப்பு. ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ளது அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக் குழு – Research Unit for political economy. எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில், எளிய தமிழில் தோழர் பிரவீன்ராஜ் மொழிபெயர்த்துள்ளார். ஆய்வுக்குழுவுக்கும், பிரவீன்ராஜுக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிவிட்டு புத்தகத்துக்குள் செல்கிறேன்.
புத்தகம் எட்டு அத்தியாயங்களையும், மூன்று பிற்சேர்க்கைகளையும் கொண்டுள்ளது. கரோனாவானது, ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வந்த பொருளாதாரத்தை மேலும் எதிர்மறை நிலைக்குக் கொண்டு சென்றது. இந்த நிலையிலும், அதை மீட்க வழி செய்யாது, மேலும் வீழ்ச்சியடையும் கொள்கைகளை இந்திய அரசு ஆக்ரோஷமாக அமல்படுத்துகிறது. சரிவைச் சரி செய்யும் வழியை அது தேர்ந்தெடுக்கவில்லை. ஏன்? இந்த விஷயத்தில் அவர்களது ஒரு கூற்றை நினைவில் கொள்ளுங்கள். “முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுதல்” என்ற சொல்லை அவர்கள் அடிக்கடி சொல்லுகிறார்கள். ஆக, இந்தியாவின் நிலை அன்னிய முதலீட்டாளர்களைச் சார்ந்து வீழ்ந்து விட்டது. அது ஏன் என்ற விவரத்தை இந்த அத்தியாயம் விளக்குகிறது.
இரண்டாவது அத்தியாயம் பொருளாதார நெருக்கடி முன்பே எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. முக்கியத் துறைகளான விவசாயத்தையும், தொழிலையும் அழித்து சேவைத்துறை வளர்ந்துள்ளது. அதன் காரணம் என்ன என்பதெல்லாம் விளக்குகிறது இது. அடுத்த இயல் பொதுமுடக்கத்தின் தாக்கம். இந்த நிலையிலும் அரசு ஏன் மக்களுக்காகச் செலவழிக்க மறுக்கிறது, மாறாக பெருமுதலாளிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்கிறது என்பது அடுத்த இயல். அப்படியே செலவு செய்யவேண்டுமென நினைத்தாலும் அதனை ஏன் அன்னிய மூலதனம் தடுக்கிறது? உண்மையில் உள்ளூர் சந்தை வளர்ச்சியடைந்தால் அவர்களுக்கு நல்லதுதானே? இந்த முரண்பாட்டை விளக்குகிறது அடுத்த அத்தியாயம்.
இந்த கோவிட் நிலையை இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகள் எதிர்கொண்ட முறை, அமெரிக்க இதைப் பயன்படுத்தி சீனாவை அழிக்க முயல்வது போன்ற பல விவரங்கள் அடுத்த அத்தியாயம். உலகமே வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அதே சமயத்தில் சீன அதிபர் ஜின்சிங் சீனா அதிதீவீர வறுமையிலிருந்து விடுபட்டது என்று அறிவித்ததை இங்கு நினைவு கூர வேண்டும்.
அடுத்த கடைசி அத்தியாயத்தில் இந்தியப் பொருளாதாரமும், அதன் முன்னுள்ள பாதையும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் ஒரு வருடம் முன் செய்யப்பட்டவை என்பதால் அதிலுள்ள விவரங்கள் சற்றுப் பழையதாக இருக்கலாம். ஆனால் அதில் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பழையவை அல்ல. குறிப்பாகத் தொழிற்சங்கத்திலுள்ள தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, படித்து விவாதிக்க வேண்டிய விவரங்கள். இவை தெரிந்தால்தான் நாம் நமது எதிர்காலத் திட்டங்களை வகுக்க உதவிகரமாக இருக்கும். எனவே அனைத்துத் தொழிற்சங்கங்களும் இந்தப் புத்தகத்தை வாங்கவும், படித்து விவாதிக்கவும் அனைத்துத் தொண்டர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் மிகவும் தேவையான இந்தப் புத்தகத்தை வெளியிட்டு சிந்தன் புக்ஸ் ஒரு வரலாற்றுத் தேவையை நிறைவேற்றி உள்ளது. தோழர் மாதவுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த ஆய்வு மேற்கொண்டு புத்தகமாக வெளியிட்ட அரசியல் பொருளாதாராத்துக்கான ஆய்வுக்குழு ரூபேவுக்கும், தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் தோழர் பிரவீன்ராஜூக்கும் எனது வாழ்த்துக்கள்.
கி.ரமேஷ்
கோவிட் 19 – நெருக்கடியும் சூறையாடலும்
வெளியீடு – சிந்தன் புக்ஸ்
பக்கங்கள்: 354
விலை: 350/-
தொடர்புக்கு: 94451 23164