Corona lockdown tragedy | கொரோனா பொது முடக்க பெருந்துயரம்

கொரோனா பொது முடக்க பெருந்துயரம்: பாஜகவின் சாதிய படிநிலை வெளிப்பாடு – நல்லதம்பி

  திடீர் என பொது முடக்கம். ஆங்காங்கே உலகம் முழுவதும் பொது முடக்கம் போடப்பட்டது. ஆனால், வீட்டுக்குள் சென்றவர் வெளியே வருவதற்குள் கதவை இழுத்து சாத்தி அடைத்தாகிவிட்டது. ஆங்காங்கே ஏதேதோ வேலை செய்து பிழைத்துக் கொண்டிருந்த மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி,…
சீனாவின் கோவிட் நிலவரம் – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

சீனாவின் கோவிட் நிலவரம் – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா




விளக்கம்

சீனாவில் தற்போது கோவிட் தொற்று முன்னெப்போதும் இல்லாத அதிகரித்திருப்பதாகவும் மேலதிகமான மரணங்கள் நடந்து வருவதாகவும் மருத்துவமனைகளில் மூச்சுத்திணறலுடன் செயற்கை சுவாசக் கருவிகளில் நோயர்கள் படுத்திருப்பதையும் மரணித்தவர்கள் சவக்கிடங்குகளில் கிடத்தி வைத்திருப்பதையும் காணொளிகளாகப் பகிரப்படுகின்றன.

இந்தக் காணொளிகள் எந்த கால இடைவெளியில் எடுக்கப்பட்டவை, எந்த நகரில் எடுக்கப்பட்டவை என்பது குறித்த அதிகாரப்பூர்வ கருத்துகள் இல்லை. இந்தக் காணொளிகளை சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை ஆயினும் தற்போதைய சீனத்தின் கோவிட் நிலையை வெளிக்கொணரும் வகையில் இந்த காணொளிகளை ட்விட்டரில் அமெரிக்காவைச் சேர்ந்த கொள்ளைநோயியல் மருத்துவர் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளிகள் நம்மிடையே மீண்டும் PTSD எனும் POST TRAUMATIC STRESS DISORDER விபத்துக்கு பின்னால் மீண்டும் அந்த விபத்தை நியாபகப்படுத்தும் விசயங்கள் தோன்றினால் மீண்டும் அதே வலி, பதட்டம், உறக்கமின்மை போன்றவை ஏற்படும்.

இதனால் பலரும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டமையால் விளக்கம் அளிப்பது கடமையாகிறது.

சீன நாடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கோவிட் பெருந்தொற்றைப் பொருத்தவரை
“பூஜ்ய கோவிட் கொள்கை” ZERO COVID POLICY

கோவிட் தொற்று எங்கு காணப்பட்டாலும் அங்கிருந்து வேறெங்கும் பரவாத வண்ணம்
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் கொரோனா பரிசோதனைகள் எடுப்பது
மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து அலுவல்களுக்கு அனுமதிப்பது

அறிகுறிகளற்ற தொற்றாக இருந்தாலும் சரி கண்டிப்பான முறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

அந்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் என்று அனைவரும் கட்டாயத் தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்

ஒரு நகரில்
ஊரில் தொற்றுப் பரவல் நடக்கிறது என்றால் தொடர்ந்து லாக்டவுன் போடப்படும்.

இப்படியாக மூன்று வருடங்களாக
ஜீரோ கோவிட் பாலிசியை கடைபிடித்து வந்தது சீனா.

இதனால் மக்கள் விரக்தி அடைந்து பேதலித்து அடக்குமுறைக்கு எதிராக ஆங்காங்கே கண்டனக்குரல் எழுப்பியதாகத் தெரிகிறது
கூடவே அந்நாட்டின் உற்பத்தி பொருளாதாரமும் சுணக்கம் காணத் தொடங்க இனியும் மக்களை முடக்கி வைப்பது சரியன்று என்ற முடிவை சீனா எடுத்தது.

பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைப் போல அனைத்தையும் திறந்து விட்டது.
பரிசோதனைகள் இனி அவசியமில்லை என்றும் கூறிவிட்டது.

சில நகரங்களில் சாதாரண அறிகுறிகள் இருந்தாலும் வேலைகளுக்கு வரலாம் என்று கூட அறிவிப்புகள் வந்தன.

இதன் விளைவாக கொரோனா வைரஸின் ஓமைக்ரான் உருமாற்றம் அங்கே வேகமெடுத்துப் பரவி வருகிறது.

பெருந்தொற்று தொடங்கியது முதல் இப்போது வரை
வைரஸின் எந்த அலையையும் சந்திக்காத சீனாவில் முதல் கொரோனா அலை தற்போது அடித்து வருகிறது.

ஓமைக்ரான் உருமாற்றம் என்பது
முந்தைய உருமாற்றங்களை விட வேகமெடுத்துப் பரவக் கூடியது
ஆயினும் முந்தியவைகளை விட வீரியம் குறைவானது என்று அறியப்பட்டுள்ளது.

இந்த வேரியண்ட் மூலம் இந்தியாவில் மூன்றாவது அலையில் ( டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை) தொற்றடைந்தவர்களில் முதியோர்கள், பல்வேறு இணை நோய்களுடன் இருந்தவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகினர்.

சீனாவிலும் அதே நிலை இப்போது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

எனினும் இந்தியா சந்தித்த ஓமைக்ரான் அலைக்கும்
சீனா சந்திக்கும் ஓமைக்ரான் அலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் யாதெனில்

இந்தியா ஓமைக்ரான் அலையை சந்திக்கும் முன்பு
ஆல்பா வேரியண்ட் மூலம் முதல் அலையை 2020இன் மத்தியிலும்
டெல்ட்டா வேரியண்ட் மூலம் இரண்டாம் அலையை 2021இன் மத்தியிலும் சந்தித்து இருந்தது

கூடவே இரண்டாம் அலைக்குப் பிறகு 90% க்கு மேல் மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தனர்.
தடுப்பூசி பெற்றவர்களில் 90% பேர் கோவிஷீல்டும் 10% பேர் கோவேக்சின் பெற்றனர்.

2022 ஜனவரி மாதம் முதல் மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் சீனாவில் நிலை – இதுவரை அங்கு தொற்றுப் பரவல் அலையாக ஏற்படவே இல்லை.
மேலும் சைனோவேக் / சைனோபார்ம் ஆகிய செயலிழக்கச்செய்யப்பட்ட வைரஸ் தொழில்நுட்ப தடுப்பூசிகள் 2021 ஆம் வருடம் போடப்பட்டது. அதன் மூலம் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களுக்கு பின் குன்றக்கூடிய நிலையை ஆய்வுகள் சான்று பகர்கின்றன.

இந்நிலையில் 90% சீன மக்களுக்கு நேரடி தொற்றின் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் இல்லை

தடுப்பூசிகள் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் குன்றியுள்ளது

இதுவே இந்தியாவின் நிலை யாதெனில்
முதல் அலை முடிவில் 20% பேருக்கு தொற்று மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது
இரண்டாம் அலை முடிவில் 60%க்கு மேல் தொற்றின் மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது
மூன்றாம் அலை முடிவில் 80-90% பேருக்கு தொற்று+ தடுப்பூசி மூலம் கூட்டு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.

எனினும் புதிதாக வேரியண்ட்கள் உருவாகும் போது அவை நம்மிடையே தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு நம்மிடையே இருக்க வேண்டும்.

இப்போது சீனா சந்தித்து வரும் பிரச்சனைகளை நாம் 2020 ,2021 ஆண்டுகளில் சந்தித்து மீண்டு வந்திருக்கிறோம்.

மேலும் ஓமைக்ரான் வேரியண்ட் நமது மக்களில் பெரும்பான்மையினருக்குத் தொற்றை கடந்த ஓராண்டில் ஏற்படுத்தி அதன் மூலம் நேரடி எதிர்ப்பு சக்தியை சம்பாதித்து வைத்துள்ளோம்.

எனவே ஓமைக்ரான் மூலம் புதிய தொல்லை நமக்கு நேருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே கணிக்கிறேன்.

ஆயினும் சீனாவில் ஓமைக்ரான் கட்டுக்கடங்காமல் பரவும் போது வைரஸில் பாதகமான இடங்களில் உருமாற்றம் நிகழ்ந்தால் ( நிகழ்வதற்கு வாய்ப்பு குறைவு) புதிய பிரச்சனைக்குரிய வேரியண்ட் தோன்றலாம்.

சீனாவின் தற்போதைய அலை என்பது நமக்கு முன்பு நடந்தது இப்போது அவர்களுக்கு காலம்தள்ளி நடக்கிறது என்றே கொள்ள வேண்டும்

இதற்கான காரணம் அவர்கள் கடைபிடித்த ஜீரோ கோவிட் பாலிசி என்றும் கொள்ளலாம்

அந்த கொள்கையால் அவர்கள் அடைந்த சாதகங்கள்

1. வீரியமிக்க கொரோனாவின் வேரியண்ட்களான ஆல்பா/ பீட்டா/ டெல்ட்டா ஆகியவற்றால் அலையை சந்திக்காமல் பலம் குன்றிய ஓமைக்ரான் மூலம் அலையைச் சந்திக்கின்றனர். இதன் மூலம் ஏனைய நாடுகளை விட குறைவான உயிரிழப்புகளை சந்திக்கும் வாய்ப்பு.

2. தடுப்பூசிகள் மூலம் அவர்களது நாட்டினருக்கு எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திய பின்பு அலையைச் சந்திக்கின்றனர்

3. கடந்த மூன்று ஆண்டுகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தேவையான ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்திடக் கிடைத்த அவகாசம்

இந்தக் கொள்கையால் அவர்கள் அடைந்த பாதகங்கள்

1. மூன்று ஆண்டுகளாக மக்களை லாக் டவுன் / பரிசோதனைகள் என்று சுதந்திரத்தை வதைத்தது. இதனால் மக்கள் விரக்தி நிலையை அடைந்திருக்கக்கூடும்

2. உற்பத்தி பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொய்வு மந்தநிலை

3. சில முன்னணி நிறுவனங்கள் இந்த கொள்கையால் சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பது

4. மூன்று ஆண்டுகள் ஆகியும் தாங்கள் நினைத்தவாறு கொரோனாவினால் பாதிப்பே இல்லாத நிலையை உருவாக்க இயலாமை

இவ்வாறாக தற்போது சீனாவிலும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலை
மூலம் நாம் செய்ய வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள்

– மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியலாம்

– கூட்டமான இடங்களிலேனும் முகக்கவசம் அணியலாம்

– குறிப்பாக முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் முகக்கவசம் அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம்

– கைகளை சோப் போட்டுக் கழுவும் பழக்கம் எப்போதும் நல்ல பழக்கமே.

– காய்ச்சலுடன் சளி/இருமல் இருப்பவர்கள் அறிகுறிகள் நீங்குமட்டும் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

– இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வது குறித்து சிந்தித்து முடிவு செய்யலாம்.

– ப்ளூ தொற்றுக்கு எதிராக வருடாந்திர தடுப்பூசி முறை இருப்பது போல கொரோனா வைரஸுக்கு வேரியண்ட்டுக்கு ஏற்றாற் போல அப்டேட்டட் தடுப்பூசி வருடந்தோறும் கிடைத்தால் முதியோர் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் / சுகாதாரப்பணியாளர்கள் பயன்பெறுவர்.

முடிவுரை

சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை என்று வரும் காணொளிகளைப் பார்த்து நாம் தற்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை

நாம் 2020இலும் 2021இலும் சந்தித்தவைகளைத் தான் சீனா அதன் கொள்கையால் காலந்தாழ்த்தி சந்திக்கிறது

நமக்குத் தேவை எச்சரிக்கை உணர்வேயன்றி
அச்சமன்று

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

லூலா வெற்றியின் முக்கியத்துவம் கட்டுரை – தமிழில் ச.வீரமணி

லூலா வெற்றியின் முக்கியத்துவம் கட்டுரை – தமிழில் ச.வீரமணி




பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் லூயிஸ் இனாசியா லூலா (Luiz Inacio ‘Lula’ da Silva) வெற்றி பெற்றிருப்பது, உலகம் முழுவதும் ஒருவிதமான நிவாரணப் பெருமூச்சுடன் வரவேற்கப்பட்டிருக்கிறது. அதிதீவிர வலதுசாரியான ஜெயிர் போல்சனாரோ (Jair Bolsonaro)வைத் தோற்கடித்து பிரேசில் ஜனாதிபதியாக அவர் வென்றிருப்பது, பிரேசிலின் எதிர்காலத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2022 அக்டோபர் 30 அன்று நடைபெற்ற தேர்தலில், லூலா, (PT) எனப்படும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற போல்சனாரோவிற்கு 49.1 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. 1980களில் ஜனநாயகம் மீளவும் புதுப்பித்து சீரமைக்கப்பட்ட பின்னர் இப்போது நடந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே 21,25,334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பதவியிலிருந்த ஒரு ஜனாதிபதி தேர்தலில் தோற்பது என்பதும் இதுவே முதல் தடவையாகும்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதே லூலா எளிதாக வெற்றிபெற்றுவிடுவார் என்று தேர்தல் கணிப்பாளர்கள் பலர் முன்கூட்டியே ஊகித்திருந்தார்கள். அதேபோன்றே பல்வேறு ஆய்வுகளும், போல்சனாரோவைவிட லூலா இரண்டு இலக்க புள்ளிகள் முன்னணியில் இருப்பார் என்று காட்டின. எனினும், இக்கணிப்புகள் அனைத்தும் அக்டோபர் 2 அன்று நடைபெற்ற முதல் சுற்று முடிவின்போது தவறு என்று மெய்ப்பிக்கப்பட்டன. செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கையில் போல்சானாரோ 43.20 விழுக்காடு வாக்குகளே பெற்றிருந்த அதே சமயத்தில், லூலா 48.43 விழுக்காடு பெற்று வென்றார். வெற்றி பெறும் வேட்பாளர் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் தோல்வியடைந்ததால், இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் லூலா 50.9வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

லூலா 2003க்கும் 2010க்கும் இடையே இரு தடவை பிரேசில் ஜனாதிபதியாக இருந்தார். இது அவருக்கு மூன்றாவது தடவை. இந்தத் தடவை அவருக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. ஏனெனில் இந்தக் காலகட்டத்தில் பிரேசில் கணிசமான அளவிற்கு மாறியிருக்கிறது.

லூலா முதல் தடவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பண்டங்கள் சந்தையில் ஓர் ஏற்றம் இருந்தது. இதன் காரணமாகத் தொழிலாளர் கட்சி அரசாங்கம் சமூக நலத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்து, பல லட்சக்கணக்கான பிரேசில் மக்களை, வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீட்டது. 2014 இறுதிக்குள், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலாவும் அவரைத் தொடர்ந்து அவருக்குப் பின்னே வந்த டில்மா ரூசூஃப் (Dilma Rousseff)-உம் சேர்ந்து பிரேசில் பசி-பட்டினிக் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகப் பிரகடனம் செய்தனர்.

இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. உணவு மற்றும் சத்துணவு இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீதான பிரேசிலியன் ஆய்வு வலைப்பின்னல் (Brazilian Research Network on Food and Nutritional Sovereignty and Security) ஒன்றின்படி, 3 கோடியே 31 லட்சம் மக்கள் தற்போது பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள், இது சென்ற ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும் என்றும் தெரிவிக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில் பிரேசிலில் சுமார் 7 லட்சம் மக்கள் இறந்துவிட்டார்கள். இதற்கு ஆட்சிபுரிந்த போல்சனாரோவின் நிர்வாகச் சீர்கேடே காரணமாகும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற கூற்றையே போல்சனாரோ ஏற்க மறுத்தார். அதனால் அது பரவுவதைப்பற்றி அவர் கிஞ்சிற்றும் கவலைப்படாது இருந்தார். இதனால் நாட்டில் சுகாதார நெருக்கடியைக் கையாள முடியாத நிலை இயற்கையாகவே ஏற்பட்டது. அறிவியலை மறுத்த போக்கும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக சுகாதாரச் செலவினங்களில் வெட்டை ஏற்படுத்தியதும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை அதிகரித்தது. அந்த சமயத்தில் தடுப்பூசிகள் உற்பத்தியிலும், அவற்றை விநியோகிப்பதிலும் நடைபெற்ற ஊழல்கள், அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற குணத்தைத் தோலுரித்துக் காட்டின.

போல்சனாரோ பகுத்தறிவற்ற, அறிவியலற்ற நபர் மட்டுமல்ல, புவி வெப்பமயமாதலை மறுக்கின்ற நபராகவும் இருந்தார். இந்தப் பார்வைகளும் இதனுடன் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாடும் பிரேசிலின் பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்த இட்டுச் சென்றன, மழை பெய்துவந்த அமேசான் காடுகள் பெரிய அளவில் எரியத் தொடங்கின. நடைபெறும் ஆபத்தை சூழலியல்வாதிகளும் (environmentalists), பசுமை செயற்பாட்டாளர்களும் (green activisits) விரிவான அளவில் எடுத்துச் சொல்லி இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தபோதிலும், இந்த நபர் அவற்றை யெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இந்த நிலங்கள் பெரும் வேளாண்-வர்த்தகக் கார்ப்பரேஷன்களுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும் விவசாயத்திற்காகத் திறந்து விடப்பட்டிருக்கின்றன.

அரசியல் அரங்கில், போல்சனாரோ ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை ஏவினார். பிரேசிலில் முன்பிருந்தவந்த ராணுவ மற்றும் எதேச்சாதிகார ஆட்சிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவினைத் தெரிவித்தார். தன்னுடைய பாசிஸ்ட் ஆதரவு கொள்கைகளை வெட்கமேதுமின்றி வெளிப்படையாகவே பறைசாற்றத் தொடங்கினார், தொழிற்சங்கங்களையும், பூர்வகுடி மக்களையும், பெண்களையும், பெரும்பான்மை இன மக்களிடமிருந்து வித்தியாசமான பாலியல் நடைமுறைகளைக் கடைப்பிடித்திடும் சிறுபான்மையினரையும் (sexual minorities) கடுமையாகத் தாக்கினார். கம்யூனிச விரோத, இடதுசாரிகள் விரோத சிந்தனைகளைக் கொண்டாடினார்.

இவருடைய அறிவியலற்ற, பகுத்தறிவற்ற, சிறுபான்மையினருக்கு எதிரான, கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடுகளின் காரணமாக இவர் சுவிசேஷ கிறித்தவர்களின் ஆதரவினைப் பெற்றிருந்தார். இவர்கள்தான் இவருடைய முக்கியமான ஆதரவு தளமாகும். பிரேசிலியன் அரசியலிலும் சமூகத்திலும் வலுவான பிற்போக்கு சக்தியாக விளங்கும் சுவிசேஷ கிறித்தவ போதகர்கள், போல்சனாரோவிற்குப் பின்னர் அணிதிரண்டிருந்தனர், அவருடைய அறநெறி நிலைப்பாடுகளுக்கு ஆதரவு அளித்தனர். இத்தகைய மதஞ்சார்ந்த வலதுசாரிகள் இடதுசாரிகளுக்கு எதிராகத் தீவிரமாக போதனைகள் செய்து வந்தார்கள். ‘லூலா ஆட்சிக்கு வந்தால் தேவாலயங்களையெல்லாம் மூடிவிடுவார்’ என்று கூறி வந்தார்கள். இந்தவகையில்தான் போல்சனாரோ வலதுசாரி சிந்தனாவாதிகளை அணிதிரட்டினார். அதன்மூலம் சமூகப் பிரிவுகளை ஆழமானமுறையில் ஏற்படுத்தி வந்தார்.

போல்சனாரோவின் ஆதரவுத் தளமாக சுவிசேஷ கிறித்தவர்கள் இருப்பதோடு அல்லாமல், நவீன தாராளமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக ஆதரித்திடும் உயர் வர்க்கத்தினர், வர்த்தகப் புள்ளிகள் மற்றும் பெரு முதலாளிகள் வர்க்கத்தினரும் அவரை ஆதரித்து வந்தார்கள். வேளாண கார்ப்பரேஷன்கள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களும் இவருடன் இருந்தனர். இவ்வாறு போல்சனாரோவின் பின்னால் அனைத்துத் தீவிரவாத வலதுசாரிகளும் அணிவகுத்திருந்தனர். இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் ஆதரவு போல்சனாரோவிற்கு இருந்ததன் காரணமாகத்தான் இவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் இவருக்கு ஆதரவாக இருந்தன. இவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு, பொய் மூட்டைகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பினர்.

இதற்கு நேரெதிராக, லூலாவிற்கோ சமூகத்தின் வறிய பிரிவினர் முழுமையாக ஆதரவு அளித்தனர். இவ்வாறு ஏழை மக்கள் முழுமையாக லூலாவுடன் இருப்பதால் பயந்துபோன போல்சனாரோ, குறைந்த வருமானம் ஈட்டும் குடிமக்களுக்கு நேரடியாக பணம் அளிக்கும் ஒரு சமூக நலத் திட்டத்தை ஆக்சிலியோ பிரேசில் (Auxilio Brasil) என்ற பெயரில் கொண்டுவந்து அவர்களை வென்றெடுத்திட முயற்சித்தார். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் போல்சனாரோவின் அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்து, அனைத்துத்தரப்பினராலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஒரு குறுகியகாலத் திட்டமாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்தத் திட்டமானது மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று ஏழை மக்கள் மத்தியில் இருந்த லூலாவின் ஆதரவு தளத்தில் சற்றே சரிவை ஏற்படுத்தியதால், போல்சனாரோ இத்திட்டத்தைத் தொடர்ந்தார்.

இவ்வாறான அனைத்து முயற்சிகளின் விளைவாகவும், போல்சனாரோ லூலாவிற்கு கடும் போட்டியை இப்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் அளித்தார். மேலும் போல்சனாரோ வலதுசாரி சக்திகள் மற்றும் மத்தியக் கட்சிகளின் (centre parties) ஆதரவுடன் நாடாளுமன்றத்திலும் (Congress), ஆளுநர்களுக்கான தேர்தல்களிலும் (governorships) மற்றும் பிராந்திய அளவிலான சட்டமன்றங்களிலும் (regional assemblies) (இவை அனைத்துக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலுடன், முதல் சுற்றுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.) பெரும்பான்மை பெறவும் இட்டுச் சென்றது. போல்சனாரோ மொத்தம் உள்ள 27 மாநிலங்களில் 14இல் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் (Congress) வலதுசாரிக் கட்சிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை (மொத்தம் உள்ள 513 இடங்களில்) 249 இடங்களை (இது பாதிக்குச் சற்றே குறைவு) அதிகரித்துக்கொண்டுள்ளன. லூலாவின் தொழிலாளர் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 141 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இவ்வாறு வலதுசாரிகள் பிரதிநிதித்துவம் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் வலுவாக உள்ளதால் லூலா தன் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதை சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றன. இவர் ஆட்சி புரியும் காலத்தில் இவர்களுடன் சில சமரசங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.

லூலா வெற்றி பெறுவதற்காக ஏற்கனவே சில சமரசங்களைச் செய்துகொண்டிருக்கிறார். இவர் தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும்போது சுவிசேஷங்களில் உள்ள போதனைகளிலிருந்தும், கடவுள் குறித்தும் சுவிசேஷ கிறித்துவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் சில வேண்டுகோள்களை விடுக்க முயற்சித்தார். இவருடைய துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர், ஜெரால்டோ அல்க்மின் (Geraldo Alckmin), இவருடைய முன்னாள் போட்டியாளர் மற்றும் மத்தியக் கட்சியின் (Centre Party) தலைவர். லூலாவின் கூட்டணி, கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், தாராள-முதலாளிகள் (liberal-bourgeois) என அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், வலதுசாரிகள் வளர்ச்சியை முறியடிப்போம், அமேசான் காடுகளைப் பாதுகாப்போம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்கிற ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்துள்ளனர்.

லூலாவின் வெற்றி பிரேசில் முழுவதும் உள்ள ஏழை மக்களால், ‘சுதந்திரமும் ஜனநாயகமும் மீளவும் கிடைத்துவிட்டது’ என்கிற உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரே, இந்த வெற்றியை ஜனநாயக இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியிருக்கிறார். அவர், வறுமை, பசி-பட்டினிக் கொடுமை, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல் மற்றும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து அதனைப் பாதுகாத்தல் ஆகிய பிரச்சனைகள் உடனடியாக கவனம் செலுத்தப்படும் என்று உறுதிமொழியை அளித்திருக்கிறார்.

லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரித் தலைவர்களின் ஆட்சி அதிகரித்துக் கொண்டிருப்பது, உலகத் தலைவர்களை ஜனாதிபதி லூலாவை வாழ்த்துவதற்கு இட்டுச் சென்றுள்ளன. இவருடைய வெற்றி நிச்சயமாக ‘பிரிக்ஸ்’ (‘BRICS’), (இதில் இந்தியாவும் ஓர் அங்கம்) மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள ‘செலாக்’ (CELAC) போன்ற பன்னாட்டுக்குழுக்களுக்கும் புதியதொரு நம்பிக்கையைக் கொண்டுவரும்.

இப்போது நடைபெற்ற தேர்தல்களில் போல்சனாரோ தோற்கடிக்கப்பட்டபோதிலும், அவர் பெற்றுள்ள வாக்குகளிலிருந்து சாமானிய மக்கள் மத்தியில் வலதுசாரி சித்தாந்தம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. லூலா நிர்வாகம், தான் அளித்திட்ட தேர்தல் உறுதிமொழிகளை அமல்படுத்தத் தவறினால், ஜனநாயகத்தை மீட்டெடுக்கத் தவறினால், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கத் தவறினால், பசி-பட்டினிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், வலதுசாரிகள் மீளவும் தலைதூக்குவதற்கு இருக்கின்ற அச்சுறுத்தலைத் தடுக்க முடியாது.

(நவம்பர் 2, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

மாறிவரும் உலகத்திற்கு சீனாவின் பங்களிப்பு கட்டுரை – அ.பாக்கியம்

மாறிவரும் உலகத்திற்கு சீனாவின் பங்களிப்பு கட்டுரை – அ.பாக்கியம்




சீனாவின் வளர்ச்சி மாதிரியை மற்ற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யாது, மற்ற நாடுகளிலிருந்து மாதிரிகளை இறக்குமதி செய்யாது; மற்ற நாடுகள் தங்கள் மாதிரிகளை சீனா மீது திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்; ஒவ்வொரு நாடும் அதன் சொந்த சூழ்நிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கலுக்கு அதன் சொந்த வழியை ஆராய வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சன் யெலி கூறினார்.

சீன நவீனமயமாக்கல் என்பது அமைதியான வளர்ச்சியின் நவீனமயமாக்கலாகும். நாங்கள் போர், காலனித்துவம் மற்றும் கொள்ளை போன்ற பழைய பாதையில் நடக்கவில்லை. ஆனால் அமைதி, வளர்ச்சி மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாங்கள் நடந்து கொள்கிறோம்,” என்று சன் கூறினார், ஒவ்வொரு நாடும் அமைதியான வளர்ச்சி மாதிரியை தொடர முடியும் என்று சீனா நம்புகிறது.

உலகம் கோவிட்-19, பொருளாதார மந்தநிலை மற்றும் மோதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. வளர்ந்து வரும் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் பின்னணியில், சீனா உலகத்துடனான தனது உறவுகளை மேம்படுத்தி வருகிறது.

“மனிதகுலத்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க சீன மக்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் கைகோர்த்துச் செயல்பட தயாராக உள்ளனர்” என்று ஜி கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய மொத்த நாடுகளின் எண்ணிக்கை172 லிருந்து 181 ஆக அதிகரித்துள்ளது.

“நாங்கள் 113 நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளை நிறுவியுள்ளோம்.உலகம் முழுவதும் நண்பர்களை உருவாக்கி, உலகளாவிய கூட்டாண்மை வலையமைப்பை ஏற்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஐந்து கண்டங்களில் உள்ள 69 நாடுகளுக்கு 42 முறை விஜயம் செய்து, 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்களை உள்நாட்டில் சந்தித்து சீனாவின் கூட்டாண்மைக்கு ஒரு பெரிய அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்.

சீனாவால் முன்மொழியப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) ஒரு சர்வதேச பொது முன்முயற்சியாகவும், உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான தளமாகவும் மாறியுள்ளது.

தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின்படி, ஜூலை 2022 இறுதிக்குள், சீனா 149 நாடுகள் மற்றும் 32 சர்வதேச அமைப்புகளுடன் 200க்கும் மேற்பட்ட BRI ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

உலக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ஒரு வருடத்திற்கு முன்பு முன்வைத்த Global Development Initiative (GDI) ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோயால் உலகளவில் ஏற்பட்ட பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கு செப்டம்பர் 21, 2021 அன்று ஐநா பொதுச் சபையில் மெய்நிகர் உரையில் சீன அதிபர் ஜி முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். ஜி தனது அறிக்கையில் உறுதியளித்தது போல், “நாம் பொருளாதாரத்தைப் புத்துயிர் பெற வேண்டும் மற்றும் மிகவும் வலுவான, பசுமையான மற்றும் சமநிலையான உலகளாவிய வளர்ச்சியை தொடர வேண்டும்.”

நிலையான வளர்ச்சிக்கான ஐநா சபையால் முன்மொழியாக்கப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்த உதவும் முதன்மை முயற்சியாக, சீனா முன்வைத்த உலக வளர்ச்சிக்கான முயற்சி என்ற திட்டம் உதவி செய்யும். முன்னுரிமைப் பகுதிகளில் வறுமைக் குறைப்பு, உணவுப் பாதுகாப்பு, COVID-19 தடுப்பூசிகள், வளர்ச்சிக்கான நிதி, காலநிலை மாற்றம் மற்றும் பசுமை மேம்பாடு, தொழில்மயமாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.

GDI ஆரம்பம் முதல் சர்வதேச சமூகத்தால் அன்புடன் வரவேற்கப்படுகிறது. 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த முயற்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. அதே நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோர் ஜனவரி 2022 இல் ஐநாவில் சீனாவால் தொடங்கப்பட்ட GDI நண்பர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.

சீனாவும், சர்வதேச பங்காளிகளும் இணைந்து விவசாயம், கல்வி, கோவிட்-19 எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் பலதரப்பு ஒத்துழைப்பிற்காக நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு, செப்டம்பர் 21, 2022 அன்று, நியூயார்க்கில் ஐநா பொதுச் சபை அமர்வை ஒட்டி நடைபெற்ற GDI நண்பர்கள் குழுக்களின் அமைச்சர்கள் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மேலும் ஏழு நடைமுறை நடவடிக்கைகளை அறிவித்து வெளியிட்டார். GDI திட்டக் குழுவின் முதல் பட்டியல், 50 உறுதியான ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் 1000 மேலும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்படுகின்றன.

– அ.பாக்கியம்

மோடியின் கோவிட் குளறுபடி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

மோடியின் கோவிட் குளறுபடி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பீடித்துள்ள நாடுகளில்,  இந்தியா, ஜூலை 5 தேதியன்று உலகில் மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து உலகில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் நாடாக இந்தியா வந்துவிட்டது. இம்மூன்று…