தொடர் 22: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
மேற்கு ஐரோப்பிய சினிமா
துருக்கிய சினிமா மிகவும் அறிவு ஜீவித்தனமாயிருக்கிறது. மிக மிக எளிமையாகத் தோற்றமளிக்கும் துருக்கிய திரைப்படங்கள் சில மிக மிக ஆழமான பொருள் பொதிந்தவை. மனிதனின் வாழ்வியல் பிரச்சினைகளையும் அவற்றின் கேள்விகளையும் உள்ளிட்ட கதையாடல்கள் ஊடே அவற்றுக்கான பதில்களை தாமாகவே மிகவும் சாவதானமான நடையில் தேடிக் கொண்டவையாக இருப்பவை. யோசிக்கும்போது, ஒரு வித “ மணிகவுல் ” தனமான சினிமாவாக சில துருக்கித் திரைப்படங்கள் படுகின்றன. அப்படியிருப்பதுவே அவற்றின் மேன்மை. துருக்கிய சினிமாவின் அரிதான திரைப்படங்கள் சிலதைத் தயாரித்து இயக்கி நடித்து, சர்வதேச அளவில் பெயரும் பாராட்டும் புகழும் பெற்றவர் நூரி பில்கெ சீலான் (NURI BILGE CEYLAN). இவரது மனைவி எப்ரு சீலானும் (EBRU CEYLAN) இவரோடு இவரது படங்களில் நடித்து வருபவர்.
நூரி துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் 1959 – ல் பிறந்தவர். பொறியியல் பட்டப் படிப்பை முடீத்த இவர் இஸ்தான் புல் நகரின் மிமர் செரியன் (MIMAR SERIAN ) பல்கலைக்கழகத்தில் இரு ஆண்டுகள் திரைப்பட ஆக்கத்துக்கான படிப்பை முடித்துத் தேறியவர். இவரது மனைவி எப்ருவும் அதே சர்வ கலா சாலையில் திரைப்படிப்பு படித்து தேறியவர். நூரி 1995-ல் எடுத்த “ கோஸோ ” ( KOZO ) எனும் குறும்படம் புகழ்பெற்றது. பிறது இவர் கசபா ( KASABA – 1997 ), மாயிஸ் சிகின்டிஸி ( MAYIS SIKIN – NAYIS SIKINTISI – 1999 ), உஸக் (UZAK – 2002 ) க்ளைமேட் (IKLIMLER – 2006 ) ஆகிய திரைப்படங்களைச் செய்திருப்பவர். உளிக் படத்தில் முயன்ற தனித்தன்மைகளை நூரி, க்ளைமேட் படத்தில் தான் முழுமையாகவும் நிறைவாகவும் செய்திருக்கிறார்.
துருக்கிய மொழியில் IKLIMLER என்று சொல்லப்படம் CLIMATES நவீன உலக சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. இப்படம் ஆக்கப்பட்ட விதம் குறித்தான சிறிய ஆவணப்படம் ஒன்றில், படத்தின் வெவ்வேறு மூன்று காட்சி நிகழ்வுகளை தூரி படமாக்கி இயக்கும் விதத்தைக் காண்கையில், அவர் ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு நடிப்பு அசைவையும் எவ்வளவுக்கு எளிதாகவும் அதே சமயம் கால விரயமின்றி கச்சிதமாயும், காட்சி அரங்கேறும் சமயம் – எதிர்பாராத சிறு குறுக்கீடுகளை சமாளிக்கும் விதமும் துல்லியமாக தெரிபவை.
“ க்ளைமேட்ஸ் ” ஓர் இத்தாலியல் ( EXISTENTIALIST ) கோட்பாட்டை உட்கொண்டு உள்ளடக்கிய காவியம். துருக்கியின் புற நகர்ப் பகுதியின் கோடை, மழை, குளிர் – பனிக்காலமென்ற மூன்று பருவ காலங்களின் போது நிகழும் ஓர் ஆண் – பெண் உறவின் சிதறலையும் அது ஒன்று சேருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் கதையைக் கொண்டிருப்பது. தங்களுக்கு கிடைத்து பிறகு விலகிச் செல்லும் வாழ்க்கையின் பத்தை மீண்டும் தக்க வைக்கும் முயற்சியில் மனப்போராட்டம் கொண்ட ஓர் ஆண் – பெண் உறவைப் பற்றிய அரிய படம் க்ளைமேட்ஸ். மிக உயரிய நடிப்பாற்றலின் வெளிப்பாடும் திகைக்க வைக்கும் காமிரா கோணங்களும் இக்கதையை நகர்த்துகின்றன.
இஸா ( ISA ) வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் கல்லூரி போதகரும், உயர்பட்டப் படிப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு காஸ் ( KAS ) எனும் நகரில் இருப்பவன். இவனது பெற்றோர்கள் சற்று தொலைவிலுள்ள இடத்தில் வசிப்பவர்கள். இவனது காதலி பஹார் ( BAHAR ) . இவள் தொலைக்காட்சிப் படத் தயாரிப்பு நிறுவனமொன்றில் கலை இயக்குனராக பணியிலிருப்பவள். காஸ் நகரில் இஸா ஒரு விடுதியிலிருக்கையில் பஹார் அவனைச் சந்திக்க வருகிறாள். அது நல்ல கோடைகாலம். வெயில் அதிகம். நகரின் புறப்பகுதியிலிருக்கும் மிகப் பழைமையான அசீரிய – பர்ஷிய நகர எச்சமாய் நிற்கும் கட்டிடத்தின் பிரம்மாண்ட தூண்களை இஸா காமிராவில் படமெடுக்கிறான். பஹார் கவனித்தபடி அலுப்பால் பொறுமையிழந்து கொண்டிருக்கிறாள். ஆனால் தனக்கு அலுப்பு எதுவுமில்லை என கூறிவிட்டு தூரமாய் போய் நிற்கிறாள்.
பிறகு அவர்கள் ஸ்கூட்டரில் வெகு தூரத்திலுள்ள அவ்வூர் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள். இஸா கடலில் நீராட, பஹார் மணலில் அரை நிர்வாணத்தில் சூரிய குளியல் எடுத்த நிலையில் கண்மூடி மல்லாந்து படுத்திருக்கிறாள். இஸா அவளை நெருங்கி, தன் கை கால்களில் படிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு அன்போடு அழைத்து முத்தமிடுகிறான். அவள் தன்னை மறந்து கிடக்கையில், இஸா விளையாட்டாக மணலை அள்ளி அவளை கழுத்து வரை மூடுகிறான். அவளும் அவனது விளையாட்டை ரசித்தபடி கண் மூடிக் கிடக்கிறாள். திடீரென்று அவன் மணலையள்ளி அவளது மூக்கு வாய் தலை முழுவதையும் மூடி மணல் சமாதி கட்டி விட, பஹார் அலறித் துடித்து எழுந்து விடுகிறாள். இதை, வெறும் விளையாட்டா, அல்லது வினையாவென்று அவளாலும் எடுத்துக் கொள்ள முடியவில்லை நம்மாலும் நினைக்க முடியவில்லை.
அடுத்து அவர்கள் கடற்கரையிலிருந்து விடுதியை நோக்கி மலைப் பாதையில் ஸ்கூட்டரில் வேகமாய் வந்து கொண்டிருக்கையில், பின்னால் உட்கார்ந்து வரும் பஹார், சட்டென்று இஸாவின் கண்களை இறுகப் பொத்துகிறாள். அவன் அலறியடித்து ஸ்கூட்டரை பாலன்ஸ் இழந்து கன்னா பின்னாவென திருப்பியோட்ட அது, “ ஸ்கிட் ” டாகி விழுகிறது. அவன் எழுந்து அவளைத் திட்டி அடிக்கிறான். அவளது அந்த செய்கையால் இருவருமே இறந்து போயிருக்க வேண்டியவர்கள் என்று திட்டுகிறான். அவளைத் தூக்கி கடலில் அமுக்கப் போகிறான். பஹாரும் பதிலுக்கு அவனை அடித்தும் காலால் உதைத்தும் வைக்கிறாள். பிறகு மௌனமாக நடந்தே போகிறாள். அவனிடமிருந்து அவள் பிரிந்து தன் ஊருக்குப் போய் விடுகிறாள். ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவர்கள் உறவில் அது மேலும் பெரிதாகிறது.
இதையெல்லாம் பொருட்படுத்தாது இஸா புத்தகக் கடையொன்றில் தன் நண்பன் குய்வன் (GIJVEN ) எனும் பத்திரிகையாளனையும் அவனது கவர்ச்சியான காதலி செராப்பை (SERAP) யும் சந்திக்கிறான். பஹாரையும் அவர்கள் அறிந்தவர்களே. பஹாருக்கும் இஸாவுக்குமான உறவு பற்றியும் பேசுகின்றனர். தான் பத்திரிகை வேலையாய் அன்று வெளியூருக்குப் போக இருப்பதை குய்வன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட இஸா, அன்றிரவு செராப்பின் வீட்டுக்குப் போய் அவளது விருப்பத்துக்கு எதிராக நுழைகிறான். பஹாருக்கும் அவனுக்குமிடையில் உறவு விரிசலடைந்திருப்பது குறித்து மீண்டும் செராப் கேட்கிறாள். ஆண் பெண்ணுக்கிடையில் உருவாகும் அந்தரங்க உறவு விரிசலை அறிவதில் தனக்கு ஆர்வமதிகம் என்கிறாள் செராப். இஸா அவளை நெருங்குகிறான். அவளது பலத்த எதிர்ப்பையும், முறியடிப்பையும் மீறி, இஸா செராப்புடன் வல்லுடலுறவு கொள்ளுகிறான். இஸா தன் பெற்றோர்களிடம் போகையில், “ சீக்கிரம் பஹாரை மணந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள் ” , என்கிறாள் அம்மா.
இஸாப்பிற்கு செராப்பிடமிருந்து தொலைப்பேசியழைப்பு வரவும், அவன் அவளிடம் போகிறான். நேற்று அவனால் வல்லுறவுக்கு உட்பட்ட செராப் இன்று தானாக முன் வந்து அவனையழைக்கிறாள். இஸா வேண்டா வெறுப்பாக இருக்கிறான்.
அதன் பிறகு இஸா காஸ் நகரை விட்டு பழைமையான இஷக்பாஷா ( ISHAKPASHA ) எனும் நகரையடைந்து புகைப்படமெடுக்கிறான். மழைக் காலம் போய் குளிர்மிக்க பனிக்காலம் வந்திருக்கிறது. தான் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியில் பார்க்கையில் பனி மூடிய சூழலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை படமாக்க வண்டியில் வந்து இறங்கும் பஹாரைப் பார்க்கிறான் இஸா. அவன் மனம் முற்றிலும் மாறுகிறது. அவளுக்காக இளகுகிறது. அவள் வந்த பஸ் புறப்படத் தயாராகும்போது இவன் பஸ்ஸில் நுழைந்து அவளருகில் உட்காருகிறான். அவள் திடீரென விசும்பி அழுகிறாள்.
அவளை சமாதானப்படுத்திவிட்டு, இனி இருவரும் முன்பு மாதிரி இருக்கலாமென்றும், இஸ்தான் புல்லுக்குப் போய் திருமணம் செய்து கொண்டு குழந்தைப் பெற்றுக் கொண்டு வாழலாமென்கிறான். அவள் மேற்கொண்டு தனக்கு டெலிபோன் செய்ய வேண்டாமென கூறிவிட, பஸ் புறப்படத் தயாராகிறது. இசா போய் விடுகிறான். ஆனால் இரவு அவனது விடுதியறைக்கு பஹார் வருகிறாள். அவர்கள் உறவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இஸாவாக தூரியும், பஹாராக அவன் மனைவி எப்ருவும் சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் மிகச் சிறப்பான ஒளிப்பதிவை காமிரா கலைஞர் கோகன் துயாகி ( GOKHAN TUYAKI ) பாராட்டும்படி செய்திருக்கிறார்.
துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் ஒருவித தார்மீக எரிச்சல், பொறாமை சண்டையெல்லாம் நிலவி வந்திருக்கிறது. கிரேக்க – ரோமானிய கலை வடிவங்களின் ஆதி கட்டுமான சிதிலங்கள் துருக்கியின் பெருமை வாய்ந்த தொல்லியல் சான்றுகளாய் நிற்பவை.
கிரேக்க சினிமாவின் நன்கறியப்பட்ட ஓரிரண்டு திரைப்படக் கலைஞர்களில் ஒருவர் மைகேல் ககோயானிஸ் ( MICHAEL CACOYANNIS ). ககோயானிஸ் செய்த இரு கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் நவீன கிரேக்க சினிமாவிற்கு பெருமை சேர்த்தவை. அவற்றில் ஒன்று, “ கருப்பு உடையில் ஒரு பெண் ” . ( A GIRL IN BLACK ). ககோயானிஸ் தமது முதல் கிரேக்கப் படம், A WINDFALL IN ATHENS “ – ஐ 1954 – ல் தயாரித்து இயக்கினார். அதன் பிறகு இயக்கி 1956 – ல் வெளிவந்த கருப்பு உடையில் ஒரு பெண் – படம் உலகுக்கு அவரை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு கிரேக்க சினிமாவையும் மைகேல் ககோயானிஸ்ஸையும், அதில் தகாநாயகியாய் நடித்த எல்லி லாம்பட்டி ( ELLI LAMBETTI ) யையும் சர்வதேச கவனம் பெறச் செய்தது. இப்படத்தின் சில சிறப்புகளில் ஒன்று இதன் படமாக்கல் முறை. இதன் கதை, இயக்குனர் ககோயானிஸை தொடர்ந்து சில காலத்துக்கு அலைக் கழித்துக் கொண்டிருந்திருக்கும் என்பது அடுத்து அவர் செய்த ஓரிரண்டு படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.
பாவ்லோ ( PAVLO ) திறமையான எழுத்தாளனாயிருந்தும் அதிர்ஷ்டமற்ற இளைஞன். அந்தோனி நடுத்தர வயதான கட்டிட பொறியியல் வல்லுனன். இருவரும் நண்பர்கள். கிரேக்கம், நிறைய சிறு சிறு தீவுகளைக் கொண்டிருப்பது. ஒவ்வொரு தீவும் தனித்துவம் கொண்டதென்றாலும், மக்களின் சிந்தனை, வாழ்வுமுறை என்பவை தீவுக்குத் தீவு எவ்வித வேறுபாடும் கொண்டிருக்கவில்லை. தீவுகளைச் சென்றடைய அழகிய பயணிகள் கப்பல்களுண்டு. அப்படியான கப்பல் ஒன்றில் பாவ்லோவும் அண்டோனியும் ஹைட்ரா ( HYDRA ) எனும் தீவுக்கு பயணித்து போய் ஒரு வாரத்துக்கு தங்கி கழிக்க விரும்பி புறப்படுகிறார்கள். தீவில் இறங்கினதுமே கூலியொருவன் அறிமுகமாகி இவர்களின் ஜங்கமங்களை தூக்கிக் கொண்டவன். அவர்கள் விருப்பப்படி பழைய வீடு ஒன்றில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்கிறான்.
அந்த வீடு ஃப்ரோசோ ( PHROSO ) என்ற நடுத்தர வயது விதவைக்குச் சொந்தமானது. அவளுடைய அழகிய இளம் பெண் மரினா ( MARINA), அவளுக்கு இளையவன் மிட்சோ ( MITSO ). அந்த பழுதடைந்த கிரேக்க வீடு போலவே, அந்த குடும்பமும் தத்தளிக்கிறது. பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும். பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும். இந்த நிலையில் அம்மாகாரி ஃப்ரோசோவுக்கும் பனாகிஸ் ( PANAGIS ) என்பவனுக்குமான கள்ள உறவு புதர் மறைவில் நடப்பதை சிறுவர்கள் பார்த்துவிட, அம்பலமாகிறது. கோபமுற்ற மகன் மிட்சோ, அம்மாவை தெருவில் வைத்து அடிக்கிறான். குடும்பப் பெயர் கெட்டதால், அக்காவும் தம்பியும் வெளியில் தலைகாட்டவும் முடியவில்லை.
இதையெல்லாம் பாவ்லோவும் அண்டோனியும் கவனிக்கின்றனர். அதே சமயம் பாவ்லோ மரினாவை நேசிக்கிறான். அவளும் அவன் காதலை ஏற்கிறாள். ஆனால் அண்டோனி இதை விரும்பவில்லை. ஊருக்குப் புறப்படும்படி வற்புறுத்துகிறான். மரினா பேரில் ஒருதலைக் காதல் கொண்ட அவ்வூர் இளைஞன் கிறிஸ்டோ வன்முறைக்குத் தயாரா கையில் மரினாவின் தம்பி மிட்ஸோ சண்டை வலித்து ரவுடிகளால் தாக்கப்படுகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை வம்புக்கிழுத்தபடியே இருக்கிறான். பாவ்லோ மரினாவைத் தன்னோடு ஏதென்சுக்கு வந்து விட கேட்கிறான். அண்டோனி, பாவ்லோ புறப்படாததால் தான் மட்டும் புறப்பட்டுப் போகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறான்.
பாவ்லோவ் படகுச் சவாரி செய்ய படகு ஒன்றை வேண்டுகிறான். கிறிஸ்டோ தனது மீன்பிடிக்கும் படகை தர முன் வருவதோடு அதனுள் கடல் நீர் புகும்படி செய்து விடுகிறான். படகு மூழ்கட்டும் என்ற எண்ணம். பாவ்லோ படகை கிளப்புகையில், கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் – பெண் குழந்தைகள் ஓடி வந்து தங்களையும் ஏற்றிச் செல்லுமாறு கேட்க பாவ்லோ சம்மதித்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு படகு வலிக்கிறான். சிறிது தூரம் போனதும் தண்ணீர் படகினுள் புகுந்து அது மூழ்கத் தொடங்குகிறது.
குழந்தைகளில் ஒரு சிறுமி கிறிஸ்டோவின் தங்கை. நிறைய குழந்தைகள் நீரில் மூழ்கி மாண்டு போகின்றன. பாவ்லோவை போலீஸ் கைது செய்து சிறையிலிடுகிறது. அவன் மீது கொலைக் குற்றம் பதிவாகிறது. மரினா கிறிஸ்டோவை கட்டாயப்படுத்தி உண்மையைக் கேட்டறிவதோடு, போலீசில் உண்மையைச் சொல்ல மிரட்டுகிறாள். குற்றமனப்பான்மை தாக்க, அவன் போலீசில் உண்மையைக் கூறி சரணடைகிறான். விடுதலையடைந்த பாவ்லோ கடற்கரையில் இவனுக்காக நிற்கும் மரினாவை எதிர்பார்ப்போடு சந்திக்கிறான்.
இந்தப் படத்தின் கதை வசனம் நடிப்பு எல்லாமே எளிமையானது. ஆனால் படமாக்கப்பட்ட முறை இசை, ஒளிப்பதிவு என்பவை பிரமிப்பூட்டுபவை. பாவ்லோவாக டிமிட்ரி ஹான் ( DIMITRI HORN) என்பவரும் மரினாவாக எல்லி லாம்பெட்டி என்பவரும் ( ELLI LAMBETTI ) சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவை காமிரா நிபுணர் வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) செய்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் எட்டே எட்டு வாரங்களில் ஒரே ஒரு காமிராவைக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது கருப்பு உடையில் ஒரு பெண்.
ககோயான்னிஸ் இயக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க கிரேக்கப் படம் “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இப்படம் ஆங்கிலமாக்கப்பட்டு சென்னை ஓடியன் தியேட்டரில் திரையிடப்பட்டது. இப்படம் 1964-ல் வெளிவந்தது. இந்தப் படத்தில் “ க்ரேட் “ ( CRETE ) என்ற கிரேக்கத் தீவின் பொது மக்களே உதிரிபாகங்களில் வியப்பூட்டும்படி நடித்திருக்கிறார்கள்.
நிகோஸ் கஸாண்ட்ஸகிஸ் ( NIKOS KAZANTZAKIS ) கிரேக்க மொழி இலக்கியத்தின் தாஸ்தாயெவ்ஸ்கி என போற்றப்படுபவர். கஸாண்ட்ஸகியின் அமர நாவல், “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இந்நாவலை திரைப்படமாக்கிய தயாரிப்பாளருள் ஒருவர், அதில் ஜோர்பாவாக நடித்த உலகப் புகழ் பெற்ற குணசித்திர நடிகர் ஆந்தனி க்வின். ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN) ஏற்கனவே “ THE VISIT “ போன்ற அற்புதமான திரைப்படங்கள் தயாரிப்பிலும் பொறுப்பேற்று நடித்த மிக உயரிய நடிகர்.
கிரேக்க தேசத்தின் பல சிறு தீவுகளில் ஒன்று க்ரேட்.. இதில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் ஒன்று தூரீந்து செயல்பாடின்றி கிடக்கிறது. க்ரேட் மோசமான வறுமையில் கிடக்கிறது. அச் சுரங்கத்தின் உரிமையாளரின் மகன் இங்கிலாந்து கப்பலில் ஏதென்ஸ் வந்து அங்கிருந்து க்ரேட் தீவுக்கு வருகிறான். கவிதை, கட்டுரைகள் எழுதும் புத்தகப் புழு அவன். நடுவழியில் சரியான மழையில் நரைத்த முடியும் மழிக்காத முகமுமாய் ஒருவன் அறிமுகமாகிறான்.
“ நான் ஜோர்பா. அலெக்சிஸ் ஜோர்பா.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் சுரங்க வேலையில் அனுபவமிக்கவன் என்பதால் இருவரும் நண்பர்களாகின்றனர். இளைஞன் இங்கிலாந்தில் வளர்ந்த கிரேக்கன். ஜோர்பா தன்னையும் சேர்த்துக் கொள்ள கேட்டு உடன் புறப்படுகிறான். இவர்கள் தீவின் நகரை நோக்கி வாடககைக் காரில் வருவதைப் பார்க்கும் ஓர் அரை லூசு “ அமெரிக்கன் வருகிறான் ” , என்று வீடு வீடாகச் சொல்லுகிறான். வறுமையில் வாடும் அந்த ஜனங்கள், அமெரிக்கன் என்றால் பணக்காரன் என்று எண்ணத்தில் “ கஞ்சிவரதப்பா ”, என்றதும், “ எங்கே வருதப்பா ” , என்று அலை பாய்கின்றனர்.
தீவில் சிறு விடுதி வைத்து நடத்தும் ஹார்டென்ஸ் ( HARTENSE ) என்ற வயதான ஃபிரெஞ்சுக்காரி ஒருத்திக்கு அறிமுகமாகி அவளது இடத்தில் தங்குகின்றனர். இளமையில் பாரிஸில் காபரே நடனக்காரியாக இருந்த அந்த பணக்காரிக்கு நிறைய ஆண் உறவு இருந்தது. எல்லாம் கப்பல் தலைவர்கள். கடைசியாக ஒரு கப்பல்காரன் அவளை விதவையாக்கி இந்தத் தீவில் விட்டுவிட்டு இறந்து போனான். ஹார்டென்சுக்கு துணையாக அரை லூசும், மாலுமி விட்டுச் சென்ற “ காணவரோ ” ( CANAVARO ) என்ற கூண்டுக் கிளியுமிருந்தனர். ஊரில் லோலா என்ற ஓர் அழகிய இளம் விதவை. லோலாபேரில் ஊரில் பலருக்கும் காம இச்சையுண்டு. இளைஞனின் சுரங்கம், நில புலன்களை மாவ்ரண்டோனி என்பவன் பார்த்துக் கொள்ளுகிறான். இவனது மகன் பாவ்லோவுக்கு லோலா மீது பயங்கர காதல். ஆனால் அவள் இவனை விரும்பவில்லை.
ஹார்டென்சுக்கு அந்த வயதிலும் ஓர் ஆண் துணை தேவைப்படுகிறது. அதை, ஜோர்பா பூர்த்தி செய்கிறான். தூர்ந்து சரிந்து பாழாகிக் கிடக்கும் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் புத்தியிர் பெற உள் கட்டுமானத்துக்கு ஏராளமான மரங்கள் தேவைப்பட்டன. அருகிலுள்ள மலையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவை அவ்வூர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உரியவை. சுரங்கம் மீண்டும் உயிர் பெற்றால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி ஜோர்பாவும், குட்டி முதலாளியும் அனுமதி பெற்று மரங்களைக் கீழே இறக்க திட்டமிடுகின்றனர்.
இதனிடையில் குட்டி முதலாளிக்கும் விதவை லோலாவுக்கும் காதல் உறவு ஏற்படுகிறது. அவளை நெருங்கும்படி ஜோர்பாவும் முதலாளிக்குத் தூபமிடுகிறான்.
முதல் கட்டமாய் கொஞ்சம் பேர் சுரங்கத்துள் இறங்குகிறார்கள். சுரங்கம் மீண்டும் குமுறி சரிகிறது. இதனால் மிகவும் மனம் தளர்ந்த முதலாளியை உற்சாகப்படுத்தும் பொருட்டு ஜோர்பா நடனமாடுகிறான். இந் நடனமும் அதன் பின் ஒலிக்கும் ஸ்பானிஷ் கிட்டார் வாத்திளய இசையும் மிக மிக ரம்மியமானது மட்டுமல்ல, முக்கியமும் ஆகும். படத்தின் ஜீவன் போன்றது. ZORBA என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதுகெலும்பு போன்றது இந் நடனமும் இசைவும். அதற்கான கிரேக்க நாடோடி கிட்டாரின் பெயர் “ சந்தூரி ” ( SANTOURI ) என்பது என்று கூறுகிறான் ஜோர்பா. எப்போதெல்லாம் தன் மனத்தில் தொய்வும், சோர்வும், தோல்வி மனப்பான்மையும் சோகமும் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தான் நடனமாடுவதாக கூறுகிறான் ஜோர்பா.
“ என் மனைவி இறந்தாள், முதல் மகனும் இறந்தான். அப்போது நான் நடனமாடினேன். அதனால் இன்று நன்றாக இருக்கிறேன் “, என்கிறான்.
அன்றிரவு முதலாளி இளைஞனை லோலாவிடம் அனுப்பி வைக்கிறான்.
மறுநாள் அதைக் கொண்டாடும் விதமாக ரம் குடிக்க வைக்கிறான்.
“ ஜோர்பா, உன்னை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் ” என்கிறான் இளைஞன். உடனே சட்டென்று தொடர்கிறான் ஜோர்பா.
“ சாத்தானும் கூட, பாஸ் ” , “ நாம் செய்யும் காரியங்களில் சாத்தான்தனமும் கலந்திருக்கு “ , என்கிறான்.
மரங்களை வெட்டி மலையிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு ஒரு திட்டம் வகுத்து முதலாளியின் ஒப்புதலைப் பெற்ற அவள் ஏதென்சுக்குப் போய் சில முக்கிய உபகரணங்களை வாங்கி வரப் போகிறான். திரும்பி வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. லோலா பேரில் அடங்காத காம இச்சை கொண்ட பாவ்லோ அவளோடு முதலாளி இளைஞன் இருப்பதை பார்த்துவிட்டு மனமுடைந்து கடலில் விழுந்து சாகிறான். இது பெரிய விஷயமாகிறது. தேவாலயத்துக்கு எல்லோரும் போகிற நேரம், லோலாவும் புறப்படுகிறாள். இறந்துபோன மகனுக்கு பழி வாங்க அவனது அப்பா முடிவெடுத்து ஊரார் முன்னிலையில், அவளைக் குத்திக் கொன்று விடுகிறான்.
மழை கடுமையான நிலையில் நனைத்தபடி ஃபிரெஞ்சுக்காரி ஹார்டென்ஸ் இறந்து போகிறாள் நாதியற்ற அயல்நாட்டுப் பணக்காரியான அவளது வீட்டுக்குள் அத் தீவின் பஞ்சத்திலடிபட்ட ஆண் பெண்கள் புகுந்து அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு போகின்றனர். அரசாங்கம் அவற்றை வசப்படுத்து முன் நாமே எடுத்துக் கொள்ளலாமென்று கத்தியபடியே அவர்கள் சூரையாடுகிறார்கள். இந்தக் காட்சியும் லோலாவின் படுகொலைக் காட்சியும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
கடைசி முயற்சியாக, மரங்களை வெட்டி கீழே கொண்டு வருவதைப் பார்க்க தேவாலயப் பாதிரியார் முதல் ஊரே கூடியிருக்கையில், அந்த முயற்சியும் பெருத்த தோல்வியில் முடிகிறது. ஊருக்கே திரும்பி விடுவதாய் முதலாளி இளைஞன் கூறுகிறான். ஜோர்பா மீண்டும் தனியனாய் நிற்கிறான். முதல் முறையாக தனக்கு நடனம் கற்றுத் தருமாறு ஜோர்பாவை முதலாளி கேட்கிறான். நடனமாடுதென்பது, தோல்வி, இழப்பு, மரணம் என்பதன்போது அத்துயரை மறக்கதான் செய்யும் காரியம் என்பான் ஜோர்பா. இப்போது அவன் இளைஞனுக்கு கடற்கரையில் நடனமாட ஒவ்வொரு அடியெடுத்து கற்றுத் தருகிறான்.
ஜோர்பாவாக ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN ) மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகள் பரிந்துறைக்கப்பட்டவர். இளைஞனாக ALAN BATES –ம், லோலாவாக IRNE PAPA – வும் நிறைவாக செய்திருக்கின்றனர். இதன் இனிய இசையை மிகிஸ் ( MIKIS THEODU RAKIS) தியோடோராகிஸும், ஒளிப்பதிவை வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) யும் செய்திருக்கின்றனர்.
நவீன கிரேக்க சினிமாவின் மிக முக்கிய குறியீடாக பரந்துபட்ட பார்வையில் பேசப்படுபவர் தியோடோரோஸ் ஆஞ்செலோ பௌலோஸ் ( THEUDOROS ANGELO POULOS ). இவருடையது பிரமிப்பூட்டும் திரைப் படங்கள்.
தியோ ஆஞ்செலோ பௌலோஸ் ஏதென்சில் 1935-ல் பிறந்தவர். ஏதென்ஸ் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து விட்டு, ஃபிரெஞ்சு திரைப்பட பள்ளியான IDHEC – ல் திரைப்படக் கலையை கற்றவர். பிரான்சிலிருந்து 1964-ல் ஏதென்சுக்கு திரும்பியவர். ‘’ DIMOKRATIKI ALLAGI “ என்ற கிரேக்க தினசரி இதழில் 1967 வரை சினிமா விமர்சகராகப் பணியாற்றியவர். 1965-ல் இவர் திரைப்படமெடுக்கத் தொடங்கினார். 1968-ல் “ BROAD CAST “ என்ற குறும்படத்தை இயக்கினார். 1975-ல் இவரது “ THE TRAVELLING PLAYERS “ என்ற படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1988-ல் வெளியான இவரது “ LANDSCAPE IN THE MIST ”, 1991-ல் வெளியான ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “. GAZE 1996-ல் எடுத்த “ ULYSSES GAZE “ ஆகிய மூன்று திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டும் பரிசும் பெற்றவை.
சமகால உலக சினிமாவில் இவரது கிரேக்கத் திரைப்படங்கள் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியவை. அதே சமயம் இவரும் வேறொரு உலக சினிமா ஆளுமை – மேதையின் திரைப்படங்களால் பாதிப்பு பெற்றவர். இவரது முக்கிய பேட்டியைக் கொண்ட ஆவணப்படம் ஒன்று மிக முக்கியமானது. அந்த நேர்காணலில் அவர் இசையைப் பற்றி மிக விரிவாக பேசுகிறார். சத்யஜித் ரே தம் படங்களுக்கான இசை குறித்து பேசியதற்கு இணையானது தியோ ஆஞ்செலோபௌலோசின் இசைக் குறித்த கருத்துக்கள். இவரது படங்களில் இசைக் கோர்வை ரம்மியமாய், எடுப்பாய் சிலிர்க்க வைக்கும்.
இந்த நேர்காணலில் இவர், உலக சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான ரஷ்ய திரைப்பட மேதை, ஆண்ட்ரீ தார்காவ்ஸ்கி குறித்து நிறைய சிலாகிக்கிறார். அவரோடு ஃபிரான்சில் கழித்த நாட்களை பெருமையோடு நினைவு கூர்கிறார். தார்க்காவ்ஸ்கியின் பாதிப்பு தியோவின் பல படங்களில் தெரிகிறது. ஆரம்பத்தில் தாம் ஜெர்மானிய தத்துவ நாடக மேதை BERTOLT BRECHT – ன் ஆளுமையால் முழுக்கவே பாதிக்கப்பட்டிருந்ததாயும் பிறகு அதிலிருந்து வெளியில் வந்து கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடிலின் மரணம் குறித்த கருத்துக்கு நேரெதிரான வழியில் படம் எடுத்ததாயும் கூறுகிறார்.
தியோ ஆஞ்செலோ பௌலோசின் ‘’ ALEXANDER THE GREAT “ 1980-ல் வெளி வந்தது. படம் தொடங்கும்போது ஒரு சிறு வாசகம் : கிரேக்க நாட்டை அந்நியர் படையெடுத்து தாக்க வருகையில் , மாசிடோனிய வீரர்களோடு அலெக்சாண்டர் என்ற வீர இளைஞன் போரிட்டு முறியடித்துத் துரத்தினான். அதன் பின் அவன் ஆசியாவின் பகுதிக்குள் நுழைந்து போரிட்டு, சிறைபட்டிருந்தவர்களை மீட்டான். நிறைய நாடுகளை வென்று மகா அலெக்ஸாண்டர் என்றானான்.
இதையடுத்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெறும் கோச்சு வண்டிகளும் குதிரைச் சவாரியுமாயிருந்த காலத்து கிரேக்கம். கிராமங்கள் பலதின் அப்பாவி மக்களுக்குச் சொந்தமான நிலபுலன்களை அங்குள்ள பிரபுக்கள் ஆக்கிரமித்தும் பிடுங்கியும் சொந்தமாக்கிக் கொண்டதை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்களை நியாயம் வேண்டி குரல் கொடுத்தவர்களை அரசியல் குற்றவாளிகளாய் அரசு சிறையிலடைத்திருந்தது. அவர்கள் ஒருநாள் சிறையிலிருந்து தப்பி காட்டுக்குள் நுழைகின்றனர்.
ஓரிடத்தில் வெள்ளைக் குதிரையொன்றும் நட்டு வைத்த வாளும், வாள் மீது பண்டைய கால கிரேக்க போர்வீரர் தரிக்கும் தலைக் கவசமும் இருக்கிறது. தப்பி வந்தவர்களில் தலைவனாயிருந்தவன் இவற்றை எடுத்து குதிரைமேல் ஏறி பயணமாகிறான். அவன் அலெக்ஸாண்டர் என எல்லாராலும் அழைக்கப்படுகிறான். அவனைத் தொடர்ந்து தப்பி வந்தவர்களும் அவனோடு இணைந்து ஒரு படையாக உருவாகிறார்கள். கிராமம் கிராமமாக அலெக்ஸாண்டர், அந்த ஹெல்மட் அணிந்து போர்வாளை இடையில் செருகி வெள்ளைக் குதிரைமீதமர்ந்து, தன் படையினர் முன்னும் பின்னும் நடந்து வர பயணித்து கிராமங்கள் தோறும் அறிமுகமாகிறான்.
போலீஸ் நிலையங்களில் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடித்துக் கொள்ளுகிறார்கள். ஏழெட்டு பிரபுக்களையும், சமாட்டிகளையும் கடத்தி வந்து பணயக் கைதியாய் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசுடன் பேரம் பேசுகிறான் அலெக்ஸாண்டர். தன்னிடமிருக்கும் சீமான்களையும் சீமாட்டிகளையும் விடுவிக்க, கிராம வாசிகளிடமிருந்து அபரிக்கப்பட்ட நிலங்களைப் பிடுஙகி உரியவர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டும். அலெக்ஸாண்டர் மீதும், அவனது படையினர் மீதும் விதிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ரத்தாகி, பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் நிபந்தனைகள் நிராகரிக்கப்படுகின்றன. இடையிடையே அலெக்ஸாண்டருக்கு காக்கய் வலிப்பு வந்து விடும். உடனே அங்குள்ள எல்லோரையும் திரும்பி நின்று முதுகைக் காட்ட கட்டளையிடுவார்கள் காப்டனின் வலிப்பு அவஸ்தை யாருக்கும் தெரிந்து விடலாகாது. ( ஜுலியஸ் சீசரின் விஷயமும் கூட ? ) இந்த அலெக்ஸாண்டர் என்பவன் முழு வழுக்கைத் தலையும் அதை சமன்படுத்தும் விதமாய் பின் சிகையை ஏராளமாய் வளரவிட்டும், தாடியை நீண்டு பறக்க விட்ட தலையைக் கொண்டவன். மனைவி கிடையாது. ஒரே ஒரு மகள், கிராமத்திலுள்ள பழைய வீட்டிலிருக்கிறாள். அலெக்ஸாண்டர் தன் படையுடன் தன் சொந்த ஊருக்கு, பணயக் கைதிகளையும் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறான்.
இவனுடைய படையைச் சேர்ந்த ஒருவன் பணயக் கைதிகளிலிருக்கும் அழகிய சீமாட்டி ஒருத்தியை கற்பழிக்க முயற்சிக்கையில் பிடிபட்டு அலெக்ஸாண்டரால் தூக்கிலிடப்படுவதோடு பெண் பயணக் கைதிகளை விடுவித்து விரட்டி விடுகிறான். அவனுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பணயக் கைதிகளைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். அச்சமயத்தில் அரசு உயரதிகாரி நிறுத்தக் கோரி நிபந்தனைகள் ஏற்கப்படுவதாய்க் கூறுகிறார். ஆனால் விரைவில் அரசு இராணுவம் கிராமத்தைச் சுற்றி வளைக்கிறது.
தன்னை எதிர்த்து எதிர் புரட்சி செய்தவர்களைச் சுட உத்தரவிடுகையில் அலெக்ஸாண்டரின் மகளே தன் தாயின் திருமண உடை தரித்து சுடப்படுபவர்களோடு சேர்ந்து நின்று, “ நானும் அவர்களில் ஒருத்தியே ” என்கிறாள். அவளையும் சேர்த்து சுட்டுக் கொல்லுகிறார்கள். இதனிடையில் அலெக்ஸாண்டர் என்ற பெயர் கொண்ட சிறுவன் ஒருவனும் அவனது ஆசிரியர் ஒருவரும் படத்தின் முக்கிய பாத்திரங்களாய் வருகிறார்கள். ஆசிரியர்தான் எதிர் புரட்சியாளர்கள் உருவானதுக்கு பொறுப்பானவர் என்பதால் அவரும் சுடப்பட்டுச் சாகிறார்.
இராணுவம் அலெக்ஸாண்டரின் படையினரைச் சுட்டு காலி செய்த நிலையில் மகா அலெக்ஸாண்டரும் இறந்து கீழே சாய்கிறான். அடுத்த காட்சியில் கிரேக்க யுத்த ஹெல்மட்டணிந்த அவனது தலையளவு வெள்ளைக் கற்சிற்பம் தரையில் கிடக்கிறது. இராணுவத் தலைவன் பயந்து அதை நெருங்குகையில் குதிரைக் குளம்பொலி கேட்டு பயந்து ஓடிவிடுகிறான். சிறுவன் அலெக்ஸாண்டர் மட்டக் குதிரை மீதமர்ந்து போகிறான். அவன் மலை மீதிருந்து பார்க்க, நவீன மயமான கிரேக்க நகரம், அதன் பல மாடி கட்டிடங்களோடு தெரிகிறது. இப்படத்தின் கதையோட்டத்தின் வழியே ஆஞ்செலோ பௌலோசியின் அரசியல் சார்பும் தெரிய வருகிறது.
1991-ல் இவர் எடுத்த ‘’ SUSPENDED STEP OF A STORK “ என்ற அரிய படம், தேசத்துக்க தேசம் கொண்ட எல்லை, போர் நிமித்தம் ஏற்படும் அகதிகள் வருகை, அதன் காரணமான பிரச்சினைகள் உள்ளிட்டது. உலகப் போரின் போதே ரஷ்யாவிலிருந்த ஏராளமான கிரேக்கர்கள் அகதிகளாக கிரீஸுக்கு திரும்பி வந்து பிரச்சினைகள் ஏற்படுத்திய வரலாற்றை இப்படம் ஓர் உரையாடலில் தெரிவிக்கிறது. துருக்கியும் அல்பேனியாவும் கிரேக்கத்துக்கு அண்டை நாடுகள். சற்று தள்ளி இத்தாலிவுமிருப்பதால் இங்கேற்படும் போர்களின் போது பீதியில் மக்கள் அகதிகளாக கிரேக்க பூமிக்குள் நுழைவது வழக்கம்.
சமீபத்தில் நடந்த துருக்கி, சிரியா போர்களின்போது அகதிகளின் வருகை பெருகியது. இந்த பின்னணியில் கிரேக்க அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் எவ்வித காரணமுமின்றி மறைந்து விடுகிறார். கொலைக் காட்சி ஊடகம் ஒன்று, அகதிகள், அவர்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகளை பதிவு செய்ய வருகிறது. அதன் முக்கிய மைய இயக்குனரான இளைஞன் ஒருவனுக்கு மறைந்து போன அரசசியல்வாதியைக் கண்டுபிடிப்பதும் ஒரு சவாலாகிறது. அந்த அரசியல்வாதியை அறிந்தவர்களும் கூட அறியாதவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
அவரோடு நன்கு பழகி உறவு கொண்ட அயல்நாட்டுப் பெய் ( தனக்கு கிரேக்கமொழி தெரியாது என்று சொல்லிக் கொண்டவள் ) தொலைக்காட்சிக்காரனுக்கு அறிமுகமாகி சிலவற்றைக் கூறுகிறாள். உபயோகமற்று ரெயில்வே வெளியில் நிற்கும் நிறைய ரயில்பெட்டிகள் அகதிகள் தங்குமிடங்களாயிருக்கின்றன. அகதிகள் வருகையும் தொடர்ந்து அதிகரித்து கிரேக்கம் ஊதிப் பெருக்கும்போது, அவர்களின் வருகைக்கு தடை விதிக்கிறது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டு அந்தந்த எல்லையில் அந்தந்த நாட்டு ராணுவம் காவல் புரிகிறது. டி.வி.காரன் தன் கிரேக்க ராணுவ கர்னலின் உதவியுடன் தைரியமாக சுற்றுகிறான்.
ஒருமுறை எல்லைக்கு அழைத்துச் சென்று, கிரேக்க எல்லைக் கோடான நீல நிறக் கோட்டைக் காட்டி கூறுகிறார். “ இந்தக் கோட்டைத் தாண்டி சும்மா, ஓர் அடி வைத்து விடமுடியாது. வச்சா ? ” என்று கூறி வலதுகாலை உயர்த்துகையிலேயே, அடுத்த நாட்டு இராணுவ அதிகாரி துப்பாக்கியுடன் விரைந்து வருவது தெரிகிறது. அடுத்து என்னவேண்டுமாகிலும் நடக்கலாம். அதுவே இப்படத்தின் தலைப்பாகவும் ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “ என்பது.
அவன் பனிமழையில் ஒரு ரயில் பெட்டிக்குள் நுழைய கூடவே ஒரு மனிதன் வருகிறான். அம்மனிதனின் அனுமதியின்றி நுழைந்ததற்கு மன்னிப்பு கோரி பனிக்காக அண்டுகிறான் டி.வி.காரன். அந்த அகதியின் தோற்றமும் முகமும் டி.வி.காரனக்கு சந்தேகத்தையும் நம்பிக்கையையும், ஆர்வத்தையுமூட்டுகிறது. ஒரு பையன் ஓடி வந்து ரொட்டி வினியோகம் செய்து விட்டு, “ காற்றாடி பற்றி கதை சொல்லு ” என்று அகதியைக் கேட்க, அகதி, காற்றாடி ( பட்டம் )யிலிருந்து, ராக்கெட், அதிலிருந்து வான எல்லை, நாடுகளின் எல்லைகள் வரை சொல்லி விட்டு, மேற்கொண்டு இன்னொரு நாள் பேசலாமென்கிறான்.
டி.வி.குழு ரெயில்வே பெட்டிகளை, அங்கு வசிக்கும் ஏராளமான – கணக்கில் வராத அகதிகளைப் படமாக்குகிறது. அறைக்கு வந்து T.V. இளைஞன் பழைய படம் ஒன்றைப் போட்டு, மறைந்துபோன கிரேக்க வம்சாவளி மந்திரியின் பேச்சையும், முகத்தையும் ZOOM செய்து கவனிக்கிறான். அவன் சந்தேகம் தீருகிறது. ரயில்பெட்டியில் பார்த்த நபரேதான். டி.வி.காரனும் அவனது குழுவும் வருகை தரும் உணவு விடுதியில் ஓர் இளம்பெண் இவனையே உற்று கவனிக்கிறாள். இவனது அறை வரை வந்து விட்டு, தான் போக வேண்டுமென்று கூறி போய் விடுகிறாள். அந்த இளம் கிரேக்க வம்சாவளி அகதிப் பெண் டி.வி.காரனின் மற்றொரு கேள்விக்குறி.
ஒருநாள் அவளிறியாது பின் தொடர்ந்து அகதிக் குடியிருப்பிலுள்ள அவளுடைய இடத்தையடைகிறான். தனக்கு இளைய குழந்தைகள் இரண்டைப் படுக்க வைத்து விட்டு கூறுகிறாள். பிரம்மாண்டமாய் ஓடும் ஆற்றுக்கு அப்பாலிருந்து அகதிகளாய் வந்ததையும், அம்மா இறந்ததையும், அப்பா டெலிஃபோன் பழுது பார்ப்பவராய் வேலை பார்ப்பதாய் கூறுகிறாள். மோசமான பருவநிலையால் டெலிபோன்கள் நிறைய பழுதடைந்ததால் இராப்பகலாக மஞ்சள் சீருடையில் டெலிபோன் பணியாளர்கள் மழையில் வேலை செய்கிறார்கள். அப்பெண்ணின் அப்பா வருகிறார். டி.வி.காரனுக்கு மேலும் ஒரு திடுக்கிடல். வந்தவர், அகதிகள் ரயிலில் பார்த்த அதே ஆள். தங்களோடு உணவருந்த அழைக்கிறார்.
இரண்டொரு நாட்களில் ஆற்றுக்கு மறுபுறமுள்ள தேசத்திலிருக்கும் இளைஞனுக்கும், இங்குள்ள டெலிபோன்காரரின் பெண்ணுக்கும் சோகமான கல்யாணம் நடக்கிறது.மறுகரையில் மணமகனும் அவனைச் சேர்ந்தவர்களுமாய் நிற்க, இக் கரையில் மணப் பெண்ணும் அவள் தந்தையும், மற்ற அகதிகளும் நிற்க, பாதிரியார் சைக்கிளில் வந்து ஆணும் பெண்ணும் அகதிகளால் ஆறு பிரிக்க விலகி நிற்கும் நிலையிலேயே திருமணச் சடங்கை முடித்தவராய்ப் போகிறார்.
“ என் கணவன் ஒருநாள் ஆற்றைக் கடந்து வந்து என்னை அழைத்துப் போகப் போகிறான் ” , என்று மணப்பெண் கூறுகிறாள்.
” நீங்கள் எனக்கு காற்றாடி கதையை சொல்லி முடிக்கவில்லையே ” என்று கேட்கிறான் ரொட்டி வினியோகிக்கும் பையன்.
” நீயே முடிவை அனுமானித்துக் கொள் ”, என்கிறார். மணப்பெண்ணின் தந்தையும் டெலிபோன் பணியாளருமான அகதி. டி.வி.கார இளைஞனைப் பொறுத்தளவு அவனும், கிரேக்க மக்களும் தேடும் மறைந்துபோன மந்திரியும் அவராகத் தானிருக்க வேண்டும் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. டி.வி.குழு புறப்படுகிறது.
இப்படத்தில் காணாமற்போன மந்திரியாகவும், அகதியாக டெலிபோன் பணியாளராக வரும் மிகச் சிறந்த இத்தாலி நடிகரும், சர்வதேச அளவில் புகழும் பரிசும் பெற்ற மார்செல்லோ மாஸ்ட்ராயினி நடிக்கிறார். தியோ ஆஞ்செலோபௌலசின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்
தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்
தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்
தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்
தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்