லப்பர் பந்து - திரைப்பட விமர்சனம் | Lubber Pandhu Tamil Movie 2024 - review - Cricket - Attakathi Dinesh - Harish Kalyan - Tamizharasan Pachamuthu - https://bookday.in/

லப்பர் பந்து – திரைப்பட விமர்சனம்

லப்பர் பந்து - திரைப்பட விமர்சனம்   பலரின் விமர்சனங்களைப் படித்த பின்னரே இப்படம் பார்க்கப் போனேன். விமர்சனங்களைப் படிக்காமல் சென்றிருந்தால் இன்னும் வெகுவாக ரசித்திருக்கலாமோ என்ற எண்ணமே மேலிட்டது. இயக்குநருக்கு மிகப்பெரிய பாராட்டு. மிகச் சிறப்பான கதைக்களம். திரைக்கதை, வசனங்கள் அனைத்தும் மிக…
BJP’s Control of Cricket in India இந்திய கிரிக்கெட் பாஜகவின் கட்டுப்பாட்டில்

ஜெய்ஷாவின் ஆடுகளம் – இந்திய கிரிக்கெட் பாஜகவின் கட்டுப்பாட்டில் . . .

{ஒன்று} 2023ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் நாள் - இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான நான்காவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் நரேந்திர…
Cricketum Ulthurai Arasiyalum

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும்

 ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன் எடுக்க இயலாமல் போன சூப்பர் பேட்ஸ்மென் ரஞ்சித்((1780–1839)…
நூல் அறிமுகம்: அசோகமித்திரனின் ‘ஆடிய ஆட்டமென்ன’ சுரேஷ் வெங்கடாத்ரி

நூல் அறிமுகம்: அசோகமித்திரனின் ‘ஆடிய ஆட்டமென்ன’ சுரேஷ் வெங்கடாத்ரி




‘ காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ் பாரிஸ் நகரில் தெருவில் போகும் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டு தன்னையறியாமல் ‘மேஸ்ட்ரோ’ என்று கத்துகிறார். அவர் அப்படி கத்தியது, எர்னஸ்ட் ஹெமிங்வேயைப் பார்த்து. ஹெமிங்வே கையைத் தூக்கி அன்புடன் ஆனால் உறுதியுடன் ‘போய்வா நண்பனே ‘ என்கிறார்.’

‘ நான் ஜி.ஆர்.விஸ்வநாத்தைக் கண்டபோதும் அப்படித்தான் கத்தினேன்.நான் விஸ்வநாத்தை விட 15,20 ஆண்டுகளாவது மூத்தவன். ஆனால் அபிமானத்துக்கு வயது கிடையாதோ என்று நினைக்கிறேன்.”

மேலே இருக்கும் வரிகளை எழுதியிருப்பவர் அசோகமித்திரன். அவர் எழுதிய கிரிக்கெட் கட்டுரைகளைத் தொகுத்து வந்திருக்கும், ‘ஆடிய ஆட்டமென்ன’ என்ற ஒரு சிறு நூலில் ‘இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை’ என்ற கட்டுரையில் வருகிறது இது..

அசோகமித்திரனுக்கும் என்னைப் போலவே விஸ்வநாத்தைப் பிடிக்கும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றெல்லாம் காவஸ்கரா விஸ்வநாத்தா என்ற கோஷ்டி சண்டையில் நாங்கள் எப்போதுமே விஸ்வநாத் அணிதான்.(அப்புறம் காவஸ்கருக்கும் விசிறியானேன் என்பது வேறு விஷயம்.)

உண்மையில் நான் வாசித்த அசோகமித்திரனின் முதல் கதையே கிரிக்கெட் பற்றியதுதான். ஜாலி ரோவர்ஸ் ஆடுவதை ஒரு முறையாவது பார்து விட வேண்டுமென்று ஏங்கும் ஒரு பதின்ம வயதுப் பையனைப் பற்றிய கதை அது. அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பார்க்க முடியாமல், வேலைக்கு சென்று சேரும் நிர்ப்பந்தத்தில் இருப்பான் அவன் (நினைவிலிருந்து சொல்கிறேன்) ஆட்டத்தை பார்க்க முடியாது..அந்தக்கதையின் பெயர் நினைவில் இல்லை. எவ்வளவோ தேடிப் பார்த்தும் மீண்டும் ஒரு முறை அதைப் படிக்கவேயில்லை. இந்த நூலைப்பார்த்ததும் முதலில் அந்தக் கதை இருக்கிறதா என்றுதான் தேடினேன். அனால் இது அவர் எழுதிய கிரிக்கெட் கட்டுரைகளைக் கொண்டது என்று அப்புறம்தான் தெரிந்தது. அவரது 18 அட்சக் கோடு நாவலிலும் கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டுதான்.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும், 19 கட்டுரைகளும், 2006ம் ஆண்டு தினமணிக் கதிரில் அவர் தொடராக எழுதி வெளி வந்தவை. சிகந்திராபாத்தில் அவரது இள வயது கிரிக்கெட் ஆட்ட அனுபவங்களும், அவர் கேட்டு (ஆம் ரேடியோவில்) ரசித்த கிரிக்கெட் ஆட்டங்கள், ஆட்டக்காரர்கள் பற்றியக் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு. இரண்டுமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

ஜி.ஆர்.விஸ்வநாத்தைத் தவிர அசோகமித்திரனுக்கு பிடித்த மற்ற வீரர்கள் என்றால் பிராட்மன் விஜய் ஹசாரே குலாம் அஹ்மது, பூபதி எனும் ஹைதரபாத் ஆட்டக்காரர் என்று தெரிகிறது.மிகவும் நம்பிக்கையளிக்கும் துவக்கங்களைக் கொண்டிருந்த, ஆனால், பின்னாளில் பெரிதாகப் பிரகாசிக்க முடியாத சில ஆட்டக்காரர்களைப் பற்றிய சித்திரங்களும் இதில் உண்டு.

இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பற்றி , எழுதியிருக்கிறார். 1960ல் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் ‘டை’ டெஸ்டை நினைவு கூர்ந்திருக்கிறார். இடையிடையே சில கட்டுரைகளில் அவர் சந்தர்ப்பவசத்தால் தலைவனாக இருந்த தனது அணியின் சில மேட்சுகளைப் பற்றிய கட்டுரைகளும் உண்டு. அவற்றைப் படிக்கையில் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதாவின் கிரிக்கெட் கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன.

எப்போதுமே போதிய பொருளாதார பலமில்லாமல்,உடைந்த பேட் பிய்ந்து போன, தைக்கப்பட்ட கிரிக்கெட் பந்து, அரை மேட் (Mat ), ஆகியவற்றை வைத்து சமாளிக்கும், கீழ் மத்தியத் தரத்து பையன்கள் நடத்தும் கிரிக்கெட் அணியின் அத்தனை சிரமங்களையும் அனாயாசமாக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். முழுக்க முழுக்கக் கிரிக்கெட் விளையாட்டின் மிக லேசான மனநிலையை கொண்டிருக்கும் ஒரு கட்டுரையின் ஒரு வரியில் சட்டென்று ஒரு ஆழத்தையும் கனத்தையும், கொண்டு வந்துவிடுவது அவருக்கே உரித்தான முத்திரை. அப்படிப்பட்ட தருணங்கள் பல இருக்கின்றன இந்தக் கட்டுரைகளில். குறிப்பாக இரண்டாம் உலகப் போர் இந்த ஆட்டத்தையும் வீரர்களையும் பாதித்த விதம்..

இந்தியா ஒரு முறை ஆஸ்திரேலியாவில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தைப் பற்றி ஒருகட்டுரையில் வருத்தத்துடன் விவரிக்கிறார். நல்ல வேளையாக அதே ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்ததை பார்க்க அ .மி உயிருடன் இருக்கவில்லை. இங்கிலாந்தில் 42 ஆல் அவுட் ஆனது ஏனோ இதில் வரவில்லை. இன்று இந்தியக் கிரிக்கெட் அணிகள் வலுவானவையாக இருப்பதைப் பார்க்க அவரில்லையே என்றும் ஒரு ஏக்கம் படர்கிறது.

சென்ற நூற்றாண்டின் 40களிலிருந்து 70கள் வரையிலான பல இந்திய, சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரர்களான, ரங்காச்சாரி, பங்கஜ் ராய், வினு மங்கட் உம்ரிகர், சந்து சர்வாட்டே, ஜெயசிம்ஹா, சோபர்ஸ், கீத் மில்லர், ரே லிண்ட்வால், ஃப்ரெட் ட்ரூமன் இன்னும் பலரையும், அறிந்து கொள்ளக் கூட இந்தக் கட்டுரைகளை படிக்கலாம்., அசோகமித்திரனின் விசேஷமான பார்வையில் அவர்கள் இங்கே இதிலே ஜொலிக்கிறார்கள். டிராவிட் தோனியைப் பற்றியெல்லாம் கூட ஓரிரு வரிகளில் சொல்லி விடுகிறார். முக்கியமாக டிராவிட் அடிக்கடி ரன் அவுட் ஆவதையும் தோனியின் நீள முடியை முஷாரஃப் பாராட்டியது குறித்தும்கூட எழுதியிருக்கிறார். (முஷாராஃபின் காலமும் முடிந்து விட்டது). இவர்களைப் புகழ்வதில் எந்த மிகையும் இல்லை. அந்த ஜி.ஆர்.விஸ்வனாத் பற்றிய கட்டுரையில் கூட அப்படித்தான். மார்க்வெஸே மேஸ்ட்ரோ என்றழைத்த ஹெமிங்வே, 15-20 ஆண்டுகள் மூத்தவரான அசோகமித்திரன்
வியந்து பார்த்து, மேஸ்ட்ரோ என்று கத்திய விஸ்வநாத்.. அவ்வளவுதான்.. அது போதுமில்லையா..

என்னைப் போன்ற அசோகமித்திரன், கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ரசித்துப் படிக்கத் தக்க, படிக்க வேண்டிய அருமையான நூல்.

சுரேஷ். வெங்கடாத்ரி

நூல் : ஆடிய ஆட்டமென்ன
ஆசிரியர் : அசோகமித்திரன்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : காலச் சுவடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 – சுகந்தி நாடார்

மாணவர்களின் வல்லமை

மாணவர்களுக்கு நாம் எந்தப் பாடம் நடத்தினாலும், பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஒவ்வோரு தனி மாணவரும் சர்வ வல்லமை உடையவராக மாறக் கூடிய ஒரு அனுபவத்தையோ, அல்லது அப்படிப்பட்ட ஒரு தேடலுக்கான வழியையும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் என்ன மாதிரியான ஒரு மாணவர் சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று யோசித்துப் பார்ப்போம். இங்கே நான் சர்வ வல்லமை என்றச் சொல்லை, சமயம் சார்ந்த இறைமையைக் குறிப்பிடவில்லை. (கோவிலுக்கு போக வேண்டுமா? தேவலாயத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டுமா? தொழுகை செய்வதற்கு பழக்க வேண்டுமா என்று மதங்கள் சார்ந்து யோசித்து விட வேண்டாம். இங்கு சர்வ வல்லமை என்பது வாழ்க்கைக் கல்வி என்று சொல்லுக்கு ஒரு மறுபெயர் தான் என்று வைத்துக் கொள்ளுவோமே).

நம் பாடத்திட்டத்தின் அங்கம் நம் மாணவர் ஒருவரை சர்வத்திலும் வல்லுனராக ஆக்கக் கூடிய தகுதி பெற்றுள்ளதா என்பதை எப்படி சோதித்துப் பார்ப்பது? சோதித்துப் பார்த்தால் தானே நம் பாடத்திட்டம் வேலைசெய்கின்றதா இல்லையா என்று தெரியும்? 

மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா? அவர் வயதுக்கும் சூழ்நிலைக்கும் தேவையான திறமையையும் செயல்திறனையும் வளர்க்கும் விதத்தில் உள்ளதா? 

மாணவரது செயல்திறனையும் திறமையையும் ஊக்குவித்து, வளர்க்கும் வகையில் பாடப் பொருண்மையை வகுப்பில் அளிக்கக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளதா? ஒரே சூழ்நிலையிலும் வயதிலும் உள்ள மாணவர்களில் ஒரு மாணவர் முதல் எட்டு இடங்களில் வரக்கூடியவரா? ஒரு மாணவர் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் வகைகளை தன்முனைப்பில் தேடிசென்று, தன்னை வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தவரா?  என்ற வகையில் ஒரு பாடத்திட்டத்தின் ஒரு அங்கத்தையாவது நாம் சோதித்துப் பார்த்தால்தான் நம் மாணவர் ஒரு சர்வ வல்லமை படைத்தவராகக் வர முடியும்.

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

சரி வாழ்க்கைக் கல்வியை, ஏன் சர்வ வல்லுனர் என்று குறிப்பிட்டுச் சொல்கின்றேன் என்று முதலில் பார்ப்போம். பொதுவாக வாழ்க்கைக் கல்வி என்று சொன்னால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எண்ணத்தையும் தங்கள் செயல்முறைகளையும் மாற்றிக் கொள்ளும் பண்பு செய்யும் தொழிலின் அறம் காத்தல் கூட்டணியில் வேலை செய்தல் தகவல் தொடர்பு வல்லமை  என்று பலர் சொல்லுவர். இன்னும் சிலர் தொழில்நுட்ப அறிவு, கோட்பாடுகளை சார்ந்த கருத்துக்களை புரிந்து கொள்ளுதல் எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை தருக்கவியல் கருத்துக்களை உருவாக்குவதில் வல்லமை சிக்கலான தெளிவில்லாத விஷயங்களைப் புரிந்து கொன்டு அதை கோர்வைப்படுத்தப்பட்ட கருத்தாகக் கூறுதல் புத்தாக்க சிந்தனை மாற்றங்களை எதிர்பார்த்தல் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து எதிர்காலத்தைக் கணித்தல் என்று பட்டியலிடுவார்கள்.

மேற்கூறிய பட்டியலில் ஒரு மாணவரை வல்லவராக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை அதனால் தான் வாழ்க்கைக் கல்வி என்ற பதத்திற்கு பதிலாக சர்வ வல்லமை என்ற சொல்லை இங்கு பயன்படுத்துகின்றேன். நாம் கல்வி 4,0 பற்றி பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இடையில் கட்டுரை நின்று போயிருந்த காலக் கட்டத்தில் உக்ரேன் மேல் ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது, துக்கமான செய்தியாக இருந்தாலும். ஒரு மாணவன் சர்வத்திலும் வல்லவராக இருக்க வேண்டிய அவசியத்தை உக்ரேன் மக்கள் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். இராணுவப் பயிற்சி இல்லாத அனைவரும் நாட்டைக் காக்கும் வீரர்களாய் மாற வேண்டிய கட்டாயம். வீட்டுக்கு அரசியாக இருந்த பெண்கள் முதல் பல்வேறு தொழில் புரியும் அனைத்துப் பெண்களும் ஒரு நாளில் அடிப்படையே இல்லாத ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியக் கட்டாயம். சர்வ வல்லமையுடைய மாணவர் என்று சொல்லும் போது, all-rounder என்ற சொல்லைப் பொருத்திப் பார்க்கலாம். all – rounder என்றால் சகலத்துறையர் என்று பொருள். இங்கே சர்வவல்லமயம் என்பது சகலத் துறை அறிவு அனுபவம் பெற்றதோடு மட்டுமல்லாமால், அனைத்துத் துறையிலும் வல்லமை பெற்று இருப்பது.

ஒரு மாணவர் வல்லமை பெற்று இருக்கின்றார் என்பதை எந்த ஒரு அளவுகோலாலும் மதிப்பிட இயலாது. ஏன் எனில் ஒவ்வோரு மாணவரும் ஒரு விதம், மனிதனுக்கு முகம் எப்படி வேறுபடுகின்றதோ அப்படித்தான் மூளையும் வேறுபடும். அதனால் நம் திறமையும் சிந்தனைத் திறனும் செயல்திறனும் கண்டிப்பாக வேறுபடும். நம்முடைய முகம் நமது மூதாதையர் போல் இருந்தால் நமது முகம் மூதாதையரின் முகமாகிவிடாது. அது போலத்தான் ஒருவர் வல்லமைப் பெறுவதும். முகம் ஒன்று போல இருந்தாலும் மூளை (தலைமிதழ், தேகசாரம், பூமலி, மிதடு ஆகியவை மூளை என்ற சொல்லிற்கு இருக்கும் சிலச் சொற்கள் சின்னக் கொசுறுத் தகவல் – கூகுள் ஆண்டவருக்காக) என்பதன் திறன் கண்டிப்பாக வேறுபட்டுத்தான் இருக்கும். ஒரே முகம் கொண்ட இரட்டையரிடமும் சில வித்தியாச குணநலன்களைத் திறமைகளை நாம் காணலாம். எனவே சர்வ வல்லமை என்பதற்கு எந்த விதத்திலும் ஒரு அளவு கோலை வைக்க முடியாது. சர்வ வல்லமைத் திறனைத்தான் ஒரு மாணவனிடமிருந்து கல்வி 4.0 எதிர் பார்க்கின்றது.

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

All-rounder என்ற சொல்லுக்கு துடுப்பாட்டத்தை (cricket) ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்விளையாட்டில் ஒரு வீரர்,பந்தை அடிப்பது, பந்தை வீசுவது. மைதானத்தில் பந்தைக் கையாளுவது ஆகிய அனைத்துத் திறமைகளையும் காட்டினால் அவரை All-rounder அல்லது பன்முக வித்தகர் என்கின்றோம். அதே விளையாட்டுக்காரர், துடுப்பாட்டத்தை மட்டும் விளையாடாது அனைத்து விளையாட்டிலும் எந்த ஒரு பொறுப்பையும் எடுத்துச் செய்யக் கூடியவராக இருந்து, விளையாட்டைச் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தும் விதம், அவற்றை தயாரிக்கும் விதம், விளையாட்டின் வரலாறு என்று விளையாட்டுத் தொடர்புடைய அத்தனைத் தகவல்களையும் தெரிந்தவராகவும் இருந்தால் அவரை நாம் சர்வ வல்லமை படைத்தவர் என்று கூற முடியுமா? இல்லை. தான் விளையாடும் விளையாட்டைச் சார்ந்த அனைத்து செயல்களின் நல்விளைவையும், தீய விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்து நல்விளைவுகளைப் பெருக்கும் வகையையும் , தீய வளைவுகளைக் குறைக்கும் வகையையும் தெரிந்து அவற்றைச் செயலாற்ற கூடிய ஒருவரை நாம் சர்வ வல்லுநராக நாம் அடையாளம் காட்ட முடியும். இத்தகைய சர்வ வல்லுனர்களைக் கொண்ட சமுதாயம் நாளைய உலகிற்கு இப்போது தேவை. அப்படிப்பட்ட ஒருவர் உலகத்திலேயே இல்லை, இதில் எங்கிருந்து ஒரு சமுதாயத்தை உருவாக்க? இயலாத காரியம்.

இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்வி இருக்க அப்படி ஒருவரை மாற்றக் கூடிய இடம் கல்வி நிலையங்கள் தான். கல்வி நிலையங்களைச் சார்ந்தே, குடும்பம் பணிகள் பொருளாதாரம் உடல் நலம் அனைத்தும் இருக்கின்றன. கல்வி என்ற கட்டமைப்பை மேம் படுத்தி வலு பெறச்செய்வதே கல்வி 4.0. சர்வ வல்லுநராக ஒரு மாணவனை ஏன் தயார் படுத்த வேண்டும்? 

ஏன் எனில் அம்மாணவன் தனது செயல் முறைகளை நன்னெறிப் படுத்த முடியும். இன்றைய உலகிற்கும் நாளைய உலகிற்கும் இது அத்தியாவசிய, அவசரத் தேவை. அப்படி என்றால் கல்வி என்று நாம் அடையாளம் காட்டும் ஒன்றை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஏன்?

நன்னெறி என்றால் நீதிக்கதைகளா?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

Shane Warne Poem By Pichumani ஷேன் வார்னே கவிதை - பிச்சுமணி

ஷேன் வார்னே கவிதை – பிச்சுமணி

அப்போது கிரிக்ககெட்டில்
அவ்வளவு ஆர்வம்.
இந்தியா பெரும் போர் புரிந்து
வெற்றி தோல்வி கொள்வதாய்
எண்ணம்.

அது ஆஸ்திரேலியா-இந்தியா போட்டி
முதன் முதலில்
உன் பெயரைக் கேட்ட போது
உன்னை எவ்வளவு
பெரிய வில்லனாக அடையாளமானாயென
இன்னும் என் நினைவில் இருக்கிறது.

ஆனால் உன் விளையாட்டு
என்னை ஈர்த்தது
உன் சுழற் பந்துவீச்சில்
சிக்கிக்கொண்ட பலரில்
நானும் ஒருவனானேன்.
இந்தியா விளையாண்டால் மட்டும்
கிரிக்கெட் பார்த்த நான்
நீ விளையாடும் கிரிக்கெட்டின்
ரசிகனானேன்.

காலச் சுழற்சியில்
கிரிக்கெட் எனக்கு
பள்ளிக் காலத்தில் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருக்கும்
மயிலிறகானது‌..

இன்று..
உன் பெயரும் புகைப்படங்களும்
இணையத்தில் உலாவுகின்றன
மரணம் ஒரு சுழற்பந்தாகி
நீ மரித்த செய்தியை
என் மனசு ஏற்க மறுக்கிறது.
ஒளித்து வைத்த மயிலிறகை
லேசாகத் தடவிப் பார்க்கிறேன்.

Kamanam Movie directed By Sujana Rao Moviereview By Era. Ramanan திரை விமர்சனம்: கமனம் – பெரு வெள்ளத்தில் போகும் வாழ்க்கை - இரா. இரமணன்

திரை விமர்சனம்: கமனம் – பெரு வெள்ளத்தில் போகும் வாழ்க்கை – இரா. இரமணன்




டிசம்பர் 2021 இல் வெளிவந்துள்ள தெலுங்கு படம். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. சுஜானா ராவ் இயக்கியுள்ள முதல் படம். இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஷிரேயா சரண், சிவா கந்துகூரி, சாருஹாசன், பிரியங்கா ஜவால்கர், சுகாஸ் மற்றும் இரண்டு சிறார் நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஹைதராபாத் நகரத்தில் வாழும் மூன்று பேரின் வாழ்க்கையை ஒரு பெரு வெள்ளம் எவ்வாறு புரட்டிப் போடுகிறது என்பதே கதை. துபாய்க்கு சென்று இன்னொரு பெண்ணை மணந்துகொண்ட ஒருவனால் கைவிடப்பட்ட கமலா கேட்கும் திறன் குறைபாடு உடையவர். ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் தையல்  தொழிலாளி. கணவன் திரும்பி வந்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் கைக்குழந்தையுடன் போராட்ட வாழ்க்கை வாழ்பவர்.

கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற பெரு விருப்பத்துடன் இருப்பவன் அலி. அவன் சாரா என்கிற பெண்ணைக் காதலிக்கிறான். இருவரும் இஸ்லாமியர்கள்தான் என்றாலும் சாராவின்  தந்தை அந்தஸ்து பார்க்கிறவர். பெற்றோரை இழந்த அலியை அவனது தாத்தா வளர்க்கிறார். தாங்கள் இறக்கும்வரை குடும்ப கவுரவம் பாழாகாமல் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பவர்.

வீடில்லாமல் வடிகால் குழாய்க்குள் வசிக்கும் இரண்டு சிறுவர்கள். குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். கிடைப்பதை அன்புடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படுவதைப் பார்க்கிறார்கள். சிறியவனுக்கு பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாது.தாங்களும் கேக் வாங்கி சாப்பிட வேண்டும் என்று காசு சேர்க்கிறார்கள். அவர்களுக்கு அறிமுகமான நடைபாதை வியாபாரியிடம் அதைக் கொடுத்து அவர் விற்றுக் கொண்டிருக்கும் களிமண் பிள்ளையார் சிலைகளை  வாங்கிக் கொள்கிறார்கள்.அதன் மூலம் அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தை திரட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒரு நாள், நகரில் பெரு மழை கொட்டுகிறது. நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தொலைக்காட்சி செய்தியாளர்கள் அதிகாரிகளை நேர்காணும்போது ‘ஆற்றின் மீது பெரும் குடியிருப்புகளை கட்டினோம்.இப்போது ஆறு அதன் மீது செல்கிறது என்று நமக்குப் பழக்கமான வசனத்தைக் கூறுகிறார்கள். கமலா கைக்குழந்தையுடன் தன் சிறு வீட்டில் மாட்டிக் கொள்கிறார்.கதவை திறக்க முடியவில்லை. குழந்தையைக் காப்பாற்றவும் கதவை திறக்கவும்  போராடுகிறார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஜன்னலை உடைத்து குழந்தையும் அவளும் வெளியில் வருகிறார்கள்.  

இன்னொரு பக்கத்தில் சாராவின் தந்தை அலியின் தாத்தாவிடம் வந்து அலியும் சாராவும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி சண்டையிடுகிறார். குடும்ப கவுரவமே முக்கியம் என நினைக்கும் தாத்தா, அலியை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். விரக்தியில் அலைந்து கொண்டிருக்கும் அலி, வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பள்ளி மாணவர்களைக் கப்பாற்றுகிறான். அதில் தன் உயிரையும் இழக்கிறான்.

பிள்ளையார் பொம்மைகளை விற்கவும் முடியாமல் மழையில் அவை கரையாமல் காப்பாற்றவும் முடியாமல் சிறுவர்கள் இருவரும் போராடுகிறார்கள். சிலைகளை பாதுகாப்பதற்காக கிடைத்த  கித்தான் துணியை மழையில் ஆட்டோவில் பிரசவம் நடக்கும் ஒரு பெண்ணின் மறைப்பிற்கு கொடுத்து உதவுகிறார்கள்.

எளிய மனிதர்களின் போராட்டமான வாழ்க்கை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில்  அது மேலும் அழிவது, ஆணின் சந்தர்ப்பவாத மனப்போக்கு என சமுதாயத்தை மையமாகக் கொண்ட  படத்தை எடுத்ததற்குப் பாராட்டலாம்.ஆனால் சில இடங்கள் பலவீனமாகக் காட்டப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில்  மாணவர்கள் ஒரு வாகனத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் மாடியில் இருந்து கொண்டு அரற்றுகிறார்கள். யாரும் காப்பற்ற முயலுவதில்லை.அலி மட்டும் தனி ஒருவனாக அவர்களைக் காப்பாற்றுகிறான். நல்ல திரைப்படங்களை எடுப்பவர்கள் கூட இது போன்ற சினிமாத்தனங்களை விட முடிவதில்லை. வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் தனி ஆளாக பலரைக் காப்பாற்றிய உண்மை சம்பவங்களை பார்க்கிறோம். இருந்தாலும் இந்த திரைப்படத்தில் அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் சரியில்லை. 

காந்தியின் ‘வைஷ்ணவ ஜனதோ பாடலும் அதன் உண்மையான பொருளில் வாழ்ந்து காட்டுபவர்கள்  சாதாரண மனிதர்கள் என்று காட்டியிருப்பதும் சிறப்பு. ஷிரேயாவின் மற்றும் சிறுவர்களின்  நடிப்பும் சிறப்பாக உள்ளது.