அஜய் குமார் மிஸ்ரா மீது ஆதாரங்களுடன் அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் – ஜதீந்தர் கவுர் தூர் | தமிழில்: தா.சந்திரகுரு
பட்டப் பகலில் படுகொலை, சாட்சிகளை மிரட்டியது, கைதாகாமல் தவிர்த்தது: ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மீது ஆதாரங்களுடன் அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள்
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள டிகுனியா காவல் நிலையத்தில் சந்தோஷ் குப்தா என்பவர் ‘சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தல் தொடர்பாக என்னுடைய மகன் பிரபாத் குப்தாவுடன் அஜய் மிஸ்ரா என்ற டேனி விரோதம் கொண்டிருந்தார்’ என்று 2000ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று புகார் அளித்திருந்தார்.
ராஜு என்றும் அழைக்கப்படுகிற பிரபாத், சந்தோஷ் குப்தாவின் மூத்த மகன் ஆவார். அன்றைய தினம் மாலை மூன்று மணியளவில் பட்டப்பகலில் பிரபாத்தின் சகோதரர்களில் ஒருவரான சஞ்சீவ் குப்தா உட்பட பலர் முன்னிலையில் அங்கிருந்த பிரதான சாலையில் தன்னுடைய மகனை அவனுடைய நெற்றிப்பொட்டில் சுட்டு அஜய் மிஸ்ரா கொலை செய்தார் என்று சந்தோஷ் புகார் அளித்திருந்தார். சந்தோஷ் அளித்த அந்தப் புகாரில் ‘சுபாஷ் என்பவர் அப்போது என்னுடைய மகனின் வயிற்றுக்கும், மார்புக்கும் இடையில் சுட்டார். அதில் எனது மூத்த மகன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ‘இங்கிருந்து ராஜு உயிருடன் போய் விடக் கூடாது’ என்று அஜய் மிஸ்ரா மற்றும் மேலும் மூன்று பேர் தங்கள் துப்பாக்கிகளைக் காற்றில் வீசியவாறு கூறினார்கள்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏறக்குறைய சரியாக அந்தச் சம்பவம் நடந்து இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஜூலை 7 அன்று மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசில் உள்துறை இணையமைச்சராக அஜய் குமார் மிஸ்ரா பதவியேற்றுக் கொண்டார்.மூன்று மாதங்களுக்குப் பிறகு அவருடன் வந்த கார் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகளை மோதித் தள்ளிய போது அஜய் மிஸ்ரா அனைவரின் கவனத்திற்குள்ளானார். அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அங்கே நடந்த வன்முறைக்குத் தலைமை தாங்கியதாக சம்பவ இடத்தில் இருந்த போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். மாநிலக் காவல்துறை அக்டோபர் 4 அன்று அந்தச் சம்பவம் குறித்து தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் ஆஷிஷ் மற்றும் பதினைந்து முதல் இருபது அடையாளம் தெரியாத நபர்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அமைச்சரின் மகனை அவர்கள் கைது செய்வதற்கு ஐந்து நாட்கள் ஆனது. லக்கிம்பூர் கேரியில் வசிப்பவர்கள் தந்தை, மகன் இருவரையும் குண்டர்கள் என்பதாக விவரித்த பல கதைகள் அதற்குப் பிறகு வெளிவரத் துவங்கின.
2000ஆம் ஆண்டு பிரபாத் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக அவருடைய அந்த செல்வாக்குதான் அஜய் மிஸ்ராவிற்கு வழிவகுத்துக் கொடுத்தது. சந்தோஷ், சஞ்சீவ் மற்றும் மூன்றாவது சாட்சி ஒருவர் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் ‘அவர்கள் குண்டர்கள் என்பதாலும், தன் மீது அஜய் மிஸ்ரா உருவாக்கி வைத்திருந்த பயம் காரணமாகவும் சரியான உண்மையைச் சொல்வதற்கான தைரியம் கொண்டவர்களாக அப்பகுதியிலிருந்த யாரும் இருக்கவில்லை’ என்று காவல்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறையின் குற்றப்பத்திரிகை சுருக்கத்தில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு உண்மையானது என்று கூறப்பட்டிருந்தது என்றாலும் அஜய் மிஸ்ரா பல மாதங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து, ஓரிரவைக் கூட சிறையில் கழிக்காதவராகவே இருந்து வந்தார். 2001 ஜூன் மாதம் அவர் பெற்றுக் கொண்ட பிணை சட்டம் மற்றும் நீதித்துறை செயல்முறைகளுக்கு எதிரானது என்றும், அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதிக்கு கடிதம் ஒன்றை மாவட்ட அரசு வழக்கறிஞர் எழுதினார். இறுதியில் 2004 மார்ச் மாதம் அஜய் மிஸ்ரா அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். நிரபராதி என்று அஜய் மிஸ்ரா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து புகார்தாரர் மற்றும் மாநில அரசு செய்த மேல்முறையீடுகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.
லக்கிம்பூர் கேரியின் நிகாசன் தொகுதியில் உள்ள பன்வீர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறுபத்தியொரு வயதான அமைச்சர் அஜய் மிஸ்ரா. பிரபாத் கொலை குறித்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அவருக்கு எதிரான முதலாவது குற்றவியல் குற்றச்சாட்டாக இருக்கவில்லை. அவர் மீது 1996ஆம் ஆண்டே டிகுனியா காவல் நிலையத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் சில மாதங்களிலேயே அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அனைவருமே பன்வீர்பூர் பகுதியில் மிக நெருக்கமாக வாழ்ந்து வந்தவர்கள். பிரபாத் இறக்கும் போது இருபத்தியிரண்டு வயதில் இருந்த அவரது இளைய சகோதரர் ராஜீவ் குப்தா ‘எனது சகோதரர் சுடப்பட்ட இடம் எங்கள் வீட்டிலிருந்து 100 – 120 மீட்டர் தொலைவிலே இருந்தது’ என்றார். அஜய் மிஸ்ராவின் வீடு தங்கள் வீட்டிலிருந்து இருபத்தைந்து மீட்டர் தொலைவில் இருப்பதாகவும், அந்தக் கொலைச் சம்பவம் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரின் வீட்டிற்கு முன்பாக நடந்ததாகவும் ராஜீவ் தெரிவித்தார். இந்த ஆண்டு அஜய் மிஸ்ராவுடன் வந்தவர்களின் கார் விவசாயிகள் மீது மோதிய இடத்திலிருந்து தன்னுடைய வீடு வெறும் 200-250 மீட்டர் தொலைவிற்குள்ளாகவே இருக்கிறது என்றும் ராஜீவ் கூறினார்.
அதிகரித்துக் கொண்டு வந்த பிரபாத்தின் அரசியல் செல்வாக்கால் அஜய் மிஸ்ரா அச்சமடைந்திருந்ததாக பிரபாத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இருபத்தொன்பது வயதான பிரபாத் இறக்கும் போது லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்தார். ‘லக்னோ பல்கலைக்கழகத்தில் மிகப் பிரபலமான மாணவர் தலைவராக இருந்ததுடன், சமாஜ்வாதி யுவஜன் சபாவின் – சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் பிரிவு – மாநிலச் செயலாளராகவும் எனது சகோதரர் பிரபாத் இருந்தார்’ என்று கூறிய ராஜீவ் மேலும் ‘2000ஆம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். பாஜகவிலும், மாவட்ட கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராகவும் இருந்த அஜய் மிஸ்ரா, வேகமாகச் சரிந்து வருகின்ற தன்னுடைய புகழ், தன் மீதான நல்லெண்ணம் ஆகியவற்றின் மீது விழுந்த அடியாகவே அதைக் கருதினார்’ என்று ராஜீவ் தெரிவித்தார்.
‘பிரபாத் கொலை செய்யப்படுவதற்கு முன்பாகவே இப்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்களால் ஏற்கனவே இரண்டு முறை மிரட்டப்பட்டிருந்தார். அஜய் மிஸ்ரா என்னுடைய சகோதரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருந்தார்’ என்று கூறிய ராஜீவ் சுபாஷும் அஜய் மிஸ்ராவை அழைத்து பிரபாத்தைக் கொன்று விடப் போவதாக மிரட்டியதாக அவர் கூறினார்.
அஜய் மிஸ்ரா மற்றும் மாமா என்று அழைக்கப்படுகின்ற சுபாஷ் ஆகியோரைத் தவிர, தாலு என்கிற ராகேஷ், பிங்கி என்கிற சஷி பூஷன் என்று இருவர் மீதும் அந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிரபாத் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகை 2000 டிசம்பர் 13 அன்று தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையுடன் சந்தோஷ், சஞ்சீவ் மற்றும் மற்றொரு சாட்சி அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் ‘விசாரணையின் விவரங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட காவல்துறை ஆவணம் இணைக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் அந்த ஆவணத்தில் ராஜீவ் கூறியதைப் போன்ற கருத்துகளே இருந்தன. அதில் ‘சமாஜ்வாதி கட்சியில் பதவி ஏற்றதும் அதிகரித்த ராஜுவின் பிம்பம் அஜய் மிஸ்ராவை மிகமோசமாகப் பாதித்தது. அது அஜய் மிஸ்ரா தனக்கிருந்த ஆதரவுதளத்தை இழக்கவும் வழியேற்படுத்திக் கொடுத்தது. தன்னுடைய ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தன்னுடைய வழியிலிருந்து அகற்றப்படுவதற்காகவே ராஜு என்றழைக்கப்படும் பிரபாத் குமார் குப்தாவை அஜய் மிஸ்ரா படுகொலை செய்தார்’ என்பதாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அந்த காவல்துறை ஆவணம் வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் மீது தன்னுடைய செல்வாக்கைச் செலுத்தியதாக அஜய் மிஸ்ரா மீது குற்றம் சாட்டியிருந்தது. அந்த ஆவணத்தில் ‘அஜய் மிஸ்ராவிற்கு ஆதரவாக இருந்த சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் அஜய் மிஸ்ராவின் செல்வாக்காச்ல் மிகப் பலவீனமானவர்களாலேயே அளிக்கப்பட்டிருந்தன. கொலைச் சம்பவத்தின் போது அந்த இடத்தில் இல்லாத சிலரையும் சாட்சிகளாக வாக்குமூலங்களை வழங்குமாறு அவர் அழுத்தம் கொடுத்திருந்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக தலைவர் என்பதைத் தவிர, உள்ளூர் எம்எல்ஏவுமாக அஜய் மிஸ்ரா அப்போது இருந்தார். உத்தரப்பிரதேச அரசின் முன்னாள் அமைச்சரான ராம்குமார் வர்மாவின் நெருங்கிய உதவியாளராகவும் அவர் அறியப்பட்டிருந்தார். ‘அஜய் மிஸ்ரா பலவந்தப்படுத்தி சாட்சிகளைத் தவறாக பயன்படுத்திக் கொண்டார். அஜய் மிஸ்ரா மற்றும் பிறருக்கு எதிராகத் தங்கள் குரலை எழுப்ப யாரும் துணிய முடியாது என்பதையே அது நிரூபித்தது’ என்றும் அந்த காவல்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் அறிக்கைகள், பிரேத பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை போன்ற ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள்… பிரபாத்தை சுட்டுக் கொன்றிருப்பது தெரிய வந்தது’ என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘இந்திய தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் நடந்த கொலை மற்றும் கொலை குற்றச்சாட்டு உண்மை எனக் கண்டறியப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையில் ‘குற்றம் சாட்டப்பட்டவர் தந்த அழுத்தத்தின் காரணமாக பிரமாணப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை எனவும் கண்டறியப்பட்டுள்ளது’ என்றும் இருந்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் இருந்தது.
சாட்சிகள் மட்டுமல்லாது வழக்கைத் தொடர்ந்து நடத்துவதால் தாங்களும் அச்சுறுத்தப்பட்டதாக பிரபாத் குடும்பத்தினர் கூறுகின்றனர். தங்களுடைய குடும்பத்தினர் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தை எதிர்கொள்வதாக நான்கு நாட்களுக்கு முன்பாக ராஜீவ் தனக்கு எழுதியிருந்த கடிதம் குறித்து முதல்வரின் தலைமைச் செயலர் 2000ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று உள்துறை முதன்மைச் செயலருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த வழக்கில் பயனுள்ள விசாரணையை உடனடியாக உறுதி செய்யுமாறும், குப்தாவின் குடும்பத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குமாறும் உள்துறை அமைச்சகத்தை தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டிருந்தார்.
பிரபாத்தின் குடும்பத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட இரண்டு நிகழ்வுகள் குறித்து அந்த நேரத்தில் லக்கிம்பூர் கேரியின் மாவட்ட அரசு ஆலோசகராக இருந்த முகமது அஜீஸ் சித்திக் 2001ஆகஸ்ட் 2 அன்று மாவட்ட நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் விரிவாக எழுதியிருந்தார். ‘ஒரு கடையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சஞ்சீவை அவரது உயிர், உடைமைகள் குறித்து அஜய் மிஸ்ராவின் உதவியாளர்கள் இருவர் மிரட்டினர். அது குறித்து டிகுனியா காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார்’ என்று கடிதத்தில் எழுதியிருந்த சித்திக் ‘சந்தோஷ் குப்தா அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதை நிறுத்த வேண்டும் அல்லது அவரது மகனைப் போலவே அவரது ஒட்டுமொத்த குடும்பமும் கொல்லப்படும் என்று மிரட்டுகின்ற உள்நாட்டு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது’ என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். பிப்ரவரி 24 அன்று சாட்சி ஒருவரை ராகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து, வெற்று முத்திரைத் தாளில் அவரது கட்டைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்ய வைத்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்’ என்று தனது கடிதத்தில் பதிவு செய்திருந்த சித்திக் அந்தச் சம்பவம் தொடர்பாக டிகுனியா காவல் நிலையத்தில் அந்தச் சாட்சியும் புகார் அளித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து 2001ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பாக, லக்கிம்பூர் கேரியின் அமர்வு நீதிபதி மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக தன்னுடைய தந்தை மனு தாக்கல் செய்ததாக சந்தோஷ் கூறினார். அந்த ஆண்டு மே 10 அன்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில் ‘கோப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மூன்றாம் எதிரி காவலில் எடுக்கப்படவில்லை என்றும், வழக்கைத் தாமதப்படுத்துகின்ற உத்திகளை மூன்றாம் எதிரி தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். தன்னைக் காவலில் எடுப்பதைத் தவிர்க்க அவர் விலக்கு கோரி வருகிறார்’ என்று கூறப்பட்டிருந்தது. 2005ஆம் ஆண்டில் சந்தோஷ் இறந்த போது, அந்த வழக்கில் மூன்றாம் எதிரி என்பது அஜய் மிஸ்ராவையே குறிப்பிடுவதாக ராஜீவ் கூறினார். லக்கிம்பூர் கேரியின் முதன்மை அமர்வு நீதிபதி அந்தக் கோப்பை தனக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டுமென்றும், சட்டத்தின்படி அந்த வழக்கைத் தொடர வேண்டுமென்றும், மூன்றாம் எதிரியைக் காவலில் எடுத்து ஆஜர்படுத்துவதில் சட்டப்பூர்வமான நடைமுறையில் எவ்வித தாமதத்தையும் அனுமதிக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆயினும் சித்திக் தனது கடிதத்தில் தெரிவித்திருந்ததைப் போல் வழக்கில் பிரதான குற்றவாளியாக அஜய் மிஸ்ரா இருந்த போதிலும், பிரபாத் கொல்லப்பட்டு பதினோரு மாதங்களுக்குப் பிறகும் அவர் கைது செய்யப்படவில்லை. ஏதாவதொரு காரணத்தைக் கூறி கைது செய்யப்படுவதைத் தொடர்ந்து அவர் தவிர்த்து வந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 82-83இன் கீழ் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்குமாறு புலனாய்வு அதிகாரி நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு 2001 பிப்ரவரி 27 அன்று அஜய் மிஸ்ராவிடம் 2001 மார்ச் 28 அன்று நீதிமன்றத்தின் முன்பாக சரணடையுமாறு கூறிய கேரியின் நீதித்துறை நடுவர், அவ்வாறு சரணடையவில்லையென்றால் அவருக்கு எதிராக நீதிமன்றம் தன்னுடைய தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்று சித்திக் தெரிவித்திருந்தார்.
ஆயினும் மார்ச் 28 அன்று அஜய் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று எழுதியிருந்த சித்திக் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை மன்னிக்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகும் நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதலின்படி அஜய் மிஸ்ராவைக் கைது செய்ய வலுவான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் 2001 ஏப்ரல் 27 அன்றும்கூட அஜய் மிஸ்ரா நீதிமன்றத்தில் சரணடையவில்லை.
‘மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரிட் மனுக்களை தாக்கல் செய்த அஜய் மிஸ்ரா லக்னோ உயர்நீதிமன்ற அமர்வு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482ஐப் பின்பற்றி கைது செய்வதைத் தவிர்த்து வந்தார்’ என்று தனது கடிதத்தில் குறிப்பிட்ட சித்திக் ‘அது தொடர்பாக, பொய்யான அறிக்கைகளை – அது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது – வழங்கினார் என்று உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக அறிவிக்கை ஒன்றை அனுப்பியது’ என்றார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 482வது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் அடிக்கடி தாக்கல் செய்யப்பட்டு வந்தன.
‘பிணை மனுக்களைத் தாக்கல் செய்வதற்கும், சரணடைவதற்கும் தனக்குப் பொருத்தமான நேரத்திற்காக அஜய் மிஸ்ரா காத்திருந்தார். மாவட்ட நீதிபதி கோடை விடுமுறையில் இருந்த போது, 2021 ஜூன் 25 அன்று பிணை வேண்டியும், நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜராவதற்குமான கோரிக்கைகளை குற்றம் சாட்டப்பட்ட அஜய் மிஸ்ரா முன்வைத்தார். அன்றைய தினமே மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் பிணை மனுவை அவர் தாக்கல் செய்தார். நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பிற்பகல் 1 மணிக்கு பிணை மனு மீதான விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பிணை மனு பிற்பகல் 12 மணிக்குள் முடித்து வைக்கப்பட்டது. ஒரே நாளில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவரது பிணை மனுவை விசாரித்தது எப்படி?’ என்று சித்திக் கேல்வியெழுப்பியிருந்தார்.
மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தவற்றை ‘தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு வழக்கறிஞர் பிற்பகல் மூன்று மணிக்கு அழைக்கப்பட்டார். அரசு வழக்கறிஞர் அதற்கு மறுத்த பிறகு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அவருக்கு ஓரிரவு காலஅவகாசத்தை வழங்கினார். அடுத்த நாள் 2001 ஜூன் 26 அன்று காலை 11 மணிக்குள் பதிலைத் தாக்கல் செய்யுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும் அஜய் மிஸ்ராவை சிறைச்சாலைக்கு அனுப்பக் கூடாது, அதற்குப் பதிலாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த நாள் நடந்த வாதங்களுக்குப் பிறகு, அஜய் மிஸ்ராவிற்கு பிணை வழங்கப்பட்டது. ஒரு விஐபியைப் போல, நீதிமன்றக் காவலுக்கு செல்லாமலேயே அஜய் மிஸ்ரா பிணையில் வெளியே வந்தார். அது சட்டம் மற்றும் நீதித்துறை செயல்முறைகளுக்கு எதிரானது, நியாயப்படுத்த முடியாதது என்பதே என்னுடைய கருத்து’ என்று சித்திக் தனது கடிதத்தில் விவரித்திருந்தார்.
அஜய் மிஸ்ராவின் பிணையை ரத்து செய்யும் வகையில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் ராஜீவ் கோரிக்கை வைத்தார். பிணைக்கு எதிராக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யக் கோரி பலமுறை மாநில அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ராஜீவ் கூறினார்.
அஜய் மிஸ்ராவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2004 மார்ச் 29 அன்று விடுதலை செய்தது. அந்த தீர்ப்பின் நகலை எங்களால் பெற முடியவில்லை. விடுதலைக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீட்டின் சில பகுதிகளை ராஜீவ் பகிர்ந்து கொண்டார். மாவட்ட அமர்வு நீதிமன்றம் அஜய் மிஸ்ராவை விடுவித்ததன் அடிப்படையில் அதில் சில விவரங்கள் இருந்தன.
அஜய் மிஸ்ராவை விடுதலை செய்த அந்த தீர்ப்பில் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாக மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரபாத் வெவ்வேறு துப்பாக்கிகளால் இரண்டு முறை சுடப்பட்டு பாதிக்கப்பட்டார் என்று புகார்தாரர் கூறியுள்ளதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு முறையும் சுபாஷ்தான் சுட்டார் என்று சாட்சி ஒருவர் கூறியதாகவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டிருந்த விசாரணையின் விவரங்கள் என்ற தலைப்பிலான ஆவணம், அந்த சாட்சியின் வாக்குமூலங்கள் மற்றும் சஞ்சீவ், சந்தோஷ் ஆகியோரின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த சாட்சி பின்னர் பிறழ் சாட்சியாக மாறிவிட்டதாகவும், இரண்டு காயங்களின் அளவுகளும் வேறுபட்டவையாக இருந்தன என்றும் அரசின் மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முக்கியமான புள்ளிகள் தொடர்பான சாட்சிகள் அளித்த சாட்சியங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் அரசின் மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் கொலையாளிகள் தப்பிச் சென்றதாக சந்தோஷ் கூறிய போது, குற்றம் நடந்த இடத்தில் இருந்த மற்றவர்கள் கூறியிருந்தது அந்த முரண்பாட்டில் அடங்குவதாக இருந்தது. சஞ்சீவ் உட்பட மற்ற மூன்று சாட்சிகள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடினார்கள் என்று கூறியுள்ளனர். மேல்முறையீட்டில் அந்த வழக்கில் சஞ்சீவ் அல்லது மற்றொரு சாட்சி பொய் சொல்கிறார்கள் என்று நீதிபதி முடிவு செய்தார். விஷயங்களை உணரும் திறன் ஒவ்வொருவரிடமும் வேறுபட்டிருக்கும் என்ற வாதத்தை முன்வைத்து அதை மேல்முறையீடு எதிர்த்தது. ‘ஒரு சம்பவம் நடக்கும் போது இருந்த நால்வரிடம் வெவ்வேறு நிகழ்வுகள் அல்லது விவரங்களைப் பற்றி விசாரித்தால் அவர்கள் அனைவரின் விவரங்களும் நிச்சயமாக ஒரே மாதிரியாக இருக்காது. முரண்பாடுகளுடனே அவை இருக்கும்’ என்று மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அஜய் மிஸ்ராவை விடுதலை செய்த தீர்ப்பில் வழக்கின் முதல் தகவல் அறிக்கை கொலை நடந்த நாளில் பிரபாத்துடன் வேறு யாரேனும் இருந்தார்களா, சஞ்சீவ் பிரபாத்தின் உண்மையான சகோதரர் என்பது போன்ற சில விவரங்கள் தவிர்க்கப்பட்டு விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசின் மேல்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது புகார்தாரருக்குச் சாதகமாக வழக்கைக் கொண்டு செல்வதற்கான முயற்சியாகவே இருந்தது என்று தீர்ப்பில் உள்ளதாகவும் மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் தகவல் அறிக்கையில் ஒவ்வொரு சிறிய விஷயமும் குறிப்பிடப்படவில்லை என்பதாலேயே, புகார்தாரர் சொல்வது சந்தேகத்திற்குரியது என்று அர்த்தமில்லை என்றும் அரசின் மேல்முறையீட்டில் கூறப்பட்டிருந்தது.
மாநில அரசு அஜய் மிஸ்ராவின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தாலும், அது மிகவும் தாமதமாகவே நடந்திருந்தது. அம்மாநில ஆளுநர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யுமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியிருந்தார் என்று 2004 ஜூன் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச அரசின் சிறப்புச் செயலாளரான ஏ.கே.ஸ்ரீவஸ்தவ் அரசு தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசு தலைமை வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்ட ஸ்ரீவஸ்தவ், மேல்முறையீடு செய்வதற்கு ஜூலை 4 கடைசி நாள் என்றும் குறிப்பிட்டிருந்தார். லக்கிம்பூர் கேரியின் மாவட்ட ஆட்சியரான எஸ்.பி.எஸ்.சோலங்கி மாவட்ட வழக்கறிஞரான திரேஷ் குமார் அவஸ்திக்கு அஜய் மிஸ்ராவிற்கு எதிரான வழக்குடன் மற்றொரு வழக்கான அரசு எதிர் சாந்தி தேவி வழக்கு பற்றியும் 2004 ஜூன் 8 அன்று எழுதியிருந்தார்.
‘கீழே குறிப்பிடப்பட்ட வழக்குகளில் மேல்முறையீடு செய்யுமாறு உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது’ என்று எழுதியிருந்த சோலங்கி ‘ஆயினும் நீங்கள் என்னுடைய உத்தரவுகளைப் புறக்கணித்திருக்கிறீர்கள். நீங்கள் மேல்முறையீட்டைத் தயாரித்து சமர்ப்பிக்கவில்லை. அதன் காரணமாக மூத்த வழக்குரைஞரைக் கொண்டு நானே மேல்முறையீட்டை தயார் செய்ய வேண்டியிருந்தது. உங்களுடைய நடவடிக்கை நிர்வாகப் பணிக்கு இடையூறாக இருப்பதாகவே தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாவட்ட வழக்கறிஞர் (குற்றப்பிரிவு) யோகேஷ் பாண்டியாவிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு அவஸ்தியிடம் தெரிவிக்கப்பட்டது.
அஜய் மிஸ்ராவின் விடுதலைக்கு எதிராக 2004 ஜூன் 18 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. அதே ஆண்டில் சந்தோஷ் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மேல்முறையீட்டையும் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அஜய் மிஸ்ரா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.
நீதிமன்ற ஆவணங்களிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக அஜய் மிஸ்ரா தங்களை மிரட்டி வந்ததாக பிரபாத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருப்பது தெரிய வருகிறது. உயர்நீதிமன்றம் 2012 செப்டம்பர் 11 அன்று வழங்கிய உத்தரவில் ‘குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகளில் ஒருவர் எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்’ என்று சந்தோஷின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் அஜய் மிஸ்ரா மட்டுமே 2012இல் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அந்த இரண்டு மேல்முறையீடுகளும் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. நீதிமன்ற இணையதளத்தில் அரசு 2018 மார்ச் 12 அன்று தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது என்ற தகவல் கிடைக்கிறது. இருப்பினும் இணையத்தில் உள்ள பதிவுகள் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்றே காட்டுகின்றன.
அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் அலுவலகத்திற்கு 2000 நவம்பர் 24 அன்று கடிதம் எழுதியதாக ராஜீவ் கூறினார். அந்தக் கடிதத்தின் நகல் ராஜீவிடம் இல்லையென்றாலும், பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் பெற்றுக் கொண்டதற்காக வந்திருந்த பதிலை அவர் காட்டினார். அந்தப் பதிலில் ராஜீவ் எழுதிய கடிதம் உரிய நடவடிக்கைக்காக உத்தரபிரதேச அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் தனது செல்வாக்கு காரணமாக அஜய் மிஸ்ரா தொடர்ந்து சுதந்திரமாகத் திரிந்து வந்தார் என்கிறார் ராஜீவ்.
அஜய் மிஸ்ராவிற்கு எதிரான மேல்முறையீடுகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் 2021 அக்டோபரில் நடைபெற்ற லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்குப் பிறகு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் துப்பாக்கி ஏந்திய இருவரைத் தனக்கு பாதுகாப்பிற்காக வழங்க வேண்டுமென்று மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜீவ் மனு தாக்கல் செய்தார். பத்து சதவிகித செலவினத்தைச் செலுத்திய பிறகு துப்பாக்கி ஏந்திய ஒருவரின் பாதுகாப்பு 2021 செப்டம்பர் 16 அன்று கேரி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து மனுதாரருக்கு வழங்கப்பட்டது என்று அவரது மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2021 செப்டம்பரில் நடைபெற்றதொரு நிகழ்ச்சியில் அஜய் மிஸ்ரா ஆற்றிய உரையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் வீடியோ அக்டோபரில் லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமானது. ‘உங்கள் வழிகளைச் சரிசெய்து கொள்ளுங்கள் அல்லது நான் உங்களைச் சரி செய்வேன். அதற்கு எனக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே போதும். நான் ஒரு அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு நான் யார் என்பதை அறிந்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். ஒருபோதும் சவாலிலிருந்து நான் தப்பி ஓட மாட்டேன்’ என்று அந்த நிகழ்வில் அஜய் மிஸ்ரா பேசியிருந்தார். அந்தப் பேச்சின் உண்மையான பொருள் என்ன என்பதை அஜய் மிஸ்ரா குறிப்பிடவில்லை. ‘அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நாளில், பாலியா, லக்கிம்பூரிலிருந்து அவர்கள் ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்றும் அஜய் மிஸ்ரா அங்கே பேசியிருந்தார்.
அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ், அவரது ஆட்கள் விவசாயிகள் மீது தங்கள் கார்களை மோதி ஏற்றியதாக அக்டோபர் 3 அன்று சம்பவ இடத்தில் இருந்த போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்கள் மீது மோதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் நான்கு விவசாயிகள், இரண்டு பாஜகவினர், கார் டிரைவர் ஒருவர், பத்திரிகையாளர் ஒருவர் என்று மொத்தத்தில் எட்டு பேர் இறந்தனர்.அந்த சம்பவம் குறித்து அக்டோபர் 4 அன்று முதல் தகவல் அறிக்கையை மாநிலக் காவல்துறை பதிவு செய்தது. ஆஷிஷ் அதில் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார். அலட்சியத்தால் ஏற்படுத்தப்படும் மரணம் தொடர்பான இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302 மற்றும் பிரிவு 304-ஏ உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் அந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. சாட்சிகளின் வருகை குறித்ததாக இருக்கின்ற குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 160 இன் கீழ், அக்டோபர் 7 அன்று மறுநாள் டிகுனியா காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்று ஆஷிஷுக்கு காவல்துறை அறிவிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது. ஆனால் அன்றைய தினம் ஆஷிஷ் வரவில்லை. அக்டோபர் 8 அன்று மீண்டும் அதேபோன்ற அறிவிக்கையைப் பிறப்பித்த காவல்துறை, அடுத்த நாள் ஆஜராகுமாறு ஆஷிஷிற்குத் தகவல் அளித்தது. காவல்துறை அதிகாரிகள் பலரின் துணையுடன் டிகுனியா காவல் நிலையத்திற்கு அக்டோபர் 9 அன்று ஆஷிஷ் காவல்துரை விசாரணைக்காக வந்தார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆஷிஷும் அவருடன் இருந்த மற்றவர்களும் தங்களுடைய துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதாகவும், விவசாயிகளில் ஒருவரை அவர்கள் சுட்டுக் கொன்றதாகவும் போராடிய விவசாயிகள் கூறினர். ‘குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து நான்கு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் அதில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு சொந்தமான துப்பாக்கி, ரிவால்வர் ஆகியவையும் அடங்கும் என்று லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான ஆதாரங்களுடன் அவை இருந்ததாக தடவியல் அறிவியல் ஆய்வகத்தின் (எஃப்எஸ்எல்) அறிக்கை கூறுகிறது’ என்று மாவட்ட அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.ஆயினும் அஜய் மிஸ்ரா குற்றம் நடந்த இடத்தில் தனது மகன் இருக்கவில்லை என்றே கூறி வந்தார். ‘நான் அவ்வளவு பலவீனமானவன் இல்லை. இது எனது குடும்பத்திற்கு எதிராக நடத்தப்படுகின்ற சதி’ என்று இந்தியா டுடே நேர்காணலின் போது அவர் கூறியிருந்தார். அடிக்கடி குற்றச் செயல் புரிபவராக இருப்பது குறித்து அஜய் மிஸ்ராவிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது, ‘இது எனக்கு எதிரான சதியின் ஒரு பகுதி. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் எனக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் என் மீது வழக்கை பதிவு செய்துள்ளார். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு என் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. காவல்துறையின் காவலில் இதுவரை நான் இருந்ததில்லை. சிறையில் அடைக்கப்பட்டதும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் என் மீதுள்ள துவேஷம் காரணமாக என் மீது வழக்குப் பதிவு செய்யத் தொடங்கினர். எனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். 2005ஆம் ஆண்டில் யாரும் பெற்றிராத அளவிலே அதிக வாக்குகளைப் பெற்று மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரானேன்’ என்று அஜய் மிஸ்ரா கூறியிருந்தார்.
நிகாசன் பகுதிக்கு அடுத்துள்ள நேபாளத்தில் இருந்து வர்த்தகம் மற்றும் கடத்தலில் அஜய் மிஸ்ரா ஈடுபட்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்றாலும் 2000ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்த சாட்சிகள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ‘நேபாள நாடு அருகமையில் இருப்பதால், கடத்தலில் ஈடுபட்ட அவரது நிதி நிலைமை மிகவும் நன்றாக இருந்தது என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1980 முதல் லக்கிம்பூர் கேரியில் வசித்து வருகின்ற, பெயர் குறிப்பிட விரும்பாத, அஜய் மிஸ்ராவைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் மூத்த கல்வியாளர் ஒருவர் ‘நேபாளத்திலிருந்து கொண்டு வரப்படும் மலிவான மசாலாப் பொருட்களை அவர்கள் இந்தியாவில் அதிக விலைக்கு விற்று வந்தனர். யூரியா மற்றும் காய்கறிகளை அவர்கள் எல்லை தாண்டி அனுப்பியும் வந்தார்கள்’ என்று கூறினார். (பிரபாத் கொலைவழக்கின் தீர்ப்பு பற்றிக் குறிப்பிடுகையில் மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்).
அதே போன்ற கருத்துக்களையே மேற்கு உத்தரபிரதேசத்தில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள விவசாயிகள் தலைவரான ராகேஷ் திகாயத்தும் அக்டோபர் 26 அன்று தெரிவித்திருந்தார். லக்கிம்பூர் கேரி வன்முறையில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசிய போது, அஜய் மிஸ்ரா சந்தனக்கட்டை கடத்துபவர் என்றும் கருப்பு மிளகு, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை நேபாளத்திற்கு கடத்துவது அவருடைய வழக்கம் என்றும் திகாயத் கூறினார். அமைச்சரவையில் சேர்ப்பதற்கு முன்பாக அஜய் மிஸ்ரா குண்டராக இருந்தார் என்றும் திகாயத் கூறினார். மேலும் கூறுகையில் ‘இன்று, இவ்வளவு மோசமான சம்பவம் நடந்திருந்தாலும், அவருக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த அளவிற்கு மக்களிடம் அவர் ஏற்பத்தியிருக்கும் அச்சம் இருக்கிறது’ என்றார் திகாயத்.
அஜய் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேரவன் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் கேள்விகளை அவருக்கு அனுப்பி வைத்தது. ஆயினும் அஜய் மிஸ்ரா பதில் எதுவும் அளிக்கவில்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களை கேரவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
https://caravanmagazine.in/crime/the-many-allegations-against-ajay-mishra-teni-lakhimpur-kheri
நன்றி: கேரவான் இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு