ச. தமிழ்ச்செல்வன் -சாமிகளின் பிறப்பும் இறப்பும் |Tamilselvan-God's birth and death

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “சாமிகளின் பிறப்பும் இறப்பும்” – நூலறிமுகம்

வணக்கம் நண்பர்களே, நான் ரெம்பச் சின்ன வயசிலேலே கடவுள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். பகுத்தறிவின் படி வாழத் தொடங்கி விட்டேன். நீங்கள் எப்படி? என்னடா இது புதுக்கதையாக இருக்கிறதே என்று வாசிப்பு நண்பர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பேசுவார்கள் என நினைக்கிறேன்.…
நூல் அறிமுகம்: கே. தியாகராஜனின் “ மொழிபெயர்ப்பியல் பயணங்கள் பரிமாணங்கள் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: கே. தியாகராஜனின் “ மொழிபெயர்ப்பியல் பயணங்கள் பரிமாணங்கள் – பெ.விஜயகுமார்




மொழிபெயர்ப்பியல் குறித்த முழுமையான நூல் – ’மொழிபெயர்ப்பியல்: பயணங்கள், பரிமாணங்கள்
– பேரா.கே.தியாகராஜன்

மொழிபெயர்ப்புக் கலை இன்று நேற்று தோன்றிய கலை அல்ல. ஈராயிரம் ஆண்டு காலமாகத் தொடர்ந்து வருகின்ற கலையாகும். இருவேறு சமூகங்களை இணைக்கும் கருவியாக உள்ள இக்கலை அனைத்து மொழி வாசகர்களுக்கும் பயனுடையதாக இருக்கிறது. சமூகங்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றம் துல்லியமாக, தெளிவாநடந்திட வேண்டும் என்பதால் மொழிபெயர்ப்புச் செயல்பாடு தற்போது அறிவியலாகவே வகைமைப்படுத்தப்படுகிறது

அண்மைக்கால அறிவியல் தொழில்நுட்பப் பாய்ச்சலில் மொழிமாற்றம் செய்திட மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மென்பொருளை கணினியில் தரவிறக்கம் செய்து கணினி நிரல் வழி ஒரு மொழியிலிருந்து பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புப் பணியை நொடிப்பொழுதில் செய்திடும் மாயை நடக்கிறது. ஆயினும் தற்போது பரவலாகப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற கூகிள் மொழிபெயர்ப்பு சேவை ”At the outset, I take this opportumity to thank you for being a pillar of strength in the onerous endeavour that you have entrusted to me and my team members” என்ற வாசகத்தை ”ஆரம்பத்தில், எனக்கும் எனது குழு உறுப்பினர்களுக்கும் நீங்கள் ஒப்படைத்த கடினமான அனுப்புதலில் வலிமையின் தூணாக இருந்ததற்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்” என்று அபத்தமாக மொழிபெயர்த்துத் தருகிறது. 

ஒரு பனுவலை தருமொழியிலிருந்து பெறுமொழிக்கு மொழிமாற்றம் செய்யும் போது மூலத்தின் சாரம் குறையாமல் இருக்க வேண்டும். மூலப் பனுவல், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பனுவல் என்று இரண்டிற்கும் நியாயம் செய்திடுவதாக மொழிபெயர்ப்பு இருந்திடல் வேண்டும். மொழிபெயர்ப்பானது இரு மொழிகளின் இலக்கண அறிவும், சொல்லாட்சித் திறனும், பண்பாட்டு அறிவும் ஒருங்கே அமையப் பெற்றால் மட்டுமே தரமாக இருக்கும். மொழிபெயர்ப்பில் கிடைக்கும் வெற்றி மொழிபெயர்ப்பாளரின் நேர்மை, உழைப்பு, திறன், மெனக்கெடல் ஆகியவற்றிற்குள்ளேயே அடங்கியிருக்கிறது. இந்த அடிப்படியில் கூகிள் மொழிபெயர்ப்பு சேவை மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது.       

மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகள் குறித்து பீட்டர் நியூமார்க், ரோஜர் பெல், அண்டன் பொப்போவிக், யூஜின் நைடா போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் நூல்கள் வெளிவந்துள்ளன. கணபதிப்பிள்ளை (மொழிபெயர்ப்பும், சொல்லாக்கமும்-1967), சண்முகவேலாயுதம் (மொழிபெயர்ப்பியல்-1985), சிவசண்முகம்-தயாளன் (மொழிபெயர்ப்பியல்- 1989), சேதுமணி மணியன் (மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும், உத்திகளும்-1990),  ராஜேஸ்வரி (மொழிபெயர்ப்பியல் ஆய்வு-1992), முருகேசபாண்டியன் (மொழிபெயர்ப்பியல்-2008) ஆகியோர் தமிழில் எழுதி வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பியல் தொடர்பான நூல்கள் தமிழ்நாட்டு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக இடம் பெற்றிருக்கின்றன.     

அண்மையில் இவ்வகையில் மொழிபெயர்ப்பியல் குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ள பேரா.கே.தியாகராஜனின்மொழிபெயர்ப்பியல்பயணங்கள், பரிமாணங்கள்நூல் வெளிவந்துள்ளது. பேரா.கே.தியாகராஜன் ஆங்கிலப் பேராசிரியராக தமிழ்நாடு அரசு கல்லூரிகள், புதுவை, ஹொதைதா, ஏடன் பல்கைக்கழகங்கள் எனப் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் நாற்பதாண்டுக் காலம் பணியாற்றிய்வர். அறுபதுக்கும் மேற்பட்ட எம்.ஏ. எம்.ஃபில்., முனைவர் பட்ட ஆய்வுகளை வழிநடத்தியவர். பல ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகளில் பயிற்றுனராகப் பணியாற்றியவர். பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்களிப்புச் செய்தவர். மொழிபெயர்ப்பியலில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். நூலின் அணிந்துரையில் பேராசிரியர் பி.மருதநாயகம்மொழிபெயர்ப்புக் களத்தில் கடந்த ஐம்பதாண்டுக் காலச் சுயஅனுபவத்தில்மொழிபெயர்ப்பியல் பயணங்கள், பரிமாணங்கள்என்ற தலைப்புடன் பேராசிரியர் தியாகராஜன் எழுதியுள்ள இந்நூல் மொழிபெயர்ப்பியல் பற்றிய முதல் முழு நூல் என்று நான் கூறுவது உயர்வுநவிற்சியாகாது’ என்று குறிப்பிடுகிறார். ”ஒரு மொழிபெயர்ப்பாளர் செயல்படும்போது எவ்வகையில் எல்லாம் வாசகரை விட்டுவிலகிச் செல்கிறார், எவ்வாறு மூலப் பனுவலுக்குச் செய்ய வேண்டிய நியாயங்களைச் செய்யாது போகிறார் என்பனவற்றை உரைநடை இலக்கிய மொழிபெயர்ப்பு ஒன்றை முன்வைத்து பேரா.தியாகராஜன் இந்நூலில் விரிவாகத் திறனாய்வு செய்துள்ளார்” என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.இளங்கோ பாராட்டுகிறார்.

தியாகராஜன் எழுதியுள்ள இந்த நூல் நீண்ட முகவுரை, ’மொழியாக்கச் சிந்தனைகள் வரலாறு’, ’மொழியியல்’, ’கலாச்சாரம்’, ’இலக்கியம்’, ’நாடகம்’, ’உரைபெயர்ப்பியல்என்று ஆறு இயல்கள், நெடியதொரு முடிவுரை என்று விரிந்து செல்கிறது. மொழிபெயர்ப்பியலில் ஆழ்ந்த புரிதல் இல்லாதவர்களுக்கு நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள கலைச்சொல் விளக்கக் கோவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.   

முகவுரை: பேச்சு மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்து மொழிபெயர்ப்பு இரண்டிற்குமுள்ள வேறுபாடுகள், மொழிபெயர்ப்பின் பயன்கள் குறித்து நூலின்  முகவுரையில் பேசப்படுகிறது. ‘பொருளின் பொருள்என்று தலைப்பிடப்பட்ட பகுதியில் மொழிபெயர்ப்பில் கவனிக்கப்பட வேண்டிய தலையாய அம்சமாக பனுவலின் கருப்பொருள் அல்லது அர்த்தம் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பேசுபவரின் பார்வையில் ஒரு சொல்லிற்கு இருக்கின்ற பொருள், கேட்பவரின் பார்வையில் வேறொன்றாக வேறுபடுகிறது. உரையாடலின் சூழ்நிலைக்கேற்றவாறும் சொல்லின் பொருள் மாறுபடுகிறது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பது மொழிபெயர்ப்பாளனுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்க மறுக்கிறது. அவ்வாறாக மொழிபெயர்ப்பது அறிவியல், சட்டம், திருமறைகள் போன்றவற்றின் மொழிபெயர்ப்புக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதுபோன்ற மொழிபெயர்ப்பு இலக்கியப் பனுவலுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. 

மொழிபெயர்ப்பின் போது, பனுவலின்உள்ளடக்கம்அல்லதுவடிவம்’ ஆகியவற்றில் எது தலையாய அம்சம் என்ற விவாதம் எழுகிறதுமொழியாக்கச் செயல்முறையில் மொழியாக்கத்தின்அலகுஎது ன்ற  கேள்வியும் பிறக்கிறது. முழுப் பனுவலையும் கூர்ந்து வாசித்த பின்னரே மொழியாக்கத் துண்டுகளைப் பற்றிச் சிந்திப்பது நல்லது என்கிறார் நூலாசிரியர். அடுத்து மொழிபெயர்ப்பாளரைஒருங்கிணைப்பாளர்’, என்பதா அல்லது ’படைப்பாசிரியர்என்பதா என்ற கேள்வி எழுகிறது. மொழிபெயர்ப்பாளர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றால் தன்னுடைய சொந்த எண்ணங்கள், உணர்வுகளுக்கு இடந்தராது, தருமொழிப் பனுவலையும் அதன் ஆசிரியரையும் மட்டுமே அவர் முன்னிறுத்துவார்.. மொழிபெயர்ப்பாளர் படைப்பாசிரியராக இருக்கும் போது அவர் பெறுமொழி பனுவல் மற்றும் அதன் வாசகரை  முன்னிறுத்துவார். அப்போது அவர் தன்னுடைய சொந்த உணர்வுகள், எண்ணங்களுக்கு இடம் தருவார். முகவுரையில் மொழிபெயர்ப்பின் பல பரிமாணங்கள் குறித்து விரிவாக எழுதிச் செல்லும் நூலாசிரியர், தமிழ் மொழிபெயர்ப்புப் பணியில் ரண்டு அணுகுமுறைகள் நீடித்து வருவதைக் குறிப்பிடுகிறார். ஒருபுறம் மூலத்திலிருந்து சற்றும் பிறழாதசமனிஅணுகுமுறையும், மறுபுறம் வேண்டிய சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு செய்யும்தழுவல்அணுகுமுறையும் பல்லாண்டுகளாக நீடிக்கின்றன என்கிறார்.

மரபு வழுவாத நூலுக்கான இலக்கணம் சொல்லும் போது அதனைதொகுத்தல், விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே என்று தொல்காப்பியர் நான்காக வகைப்படுத்துகிறார். “மொழிபெயர்ப்பு செய்யும் போதுஅதர்ப்படசெய்ய வேண்டும். அதாவது மொழிபெயர்ப்பு நெறிகளைப் பின்பற்றிஉள்ளதை உள்ளபடியேதமிழில் தரவேண்டும் என்று  தொல்காப்பியத்தின் உரையாசிரியரான  பேராசிரியர் கூறுகிறார். தமிழ் மொழியாக்கச் சிந்தனை வரலாற்றில் பன்மொழி வித்தகர் A.K.ராமானுஜனைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ராமானுஜன் தேர்ந்தெடுக்கப்பட் சில அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கவிதையை கவிதையால்தான் மொழியாக்கம் செய்ய முடியும் என்ற வாதத்தை ராமானுஜன் ஆதரிக்கிறார். மொழியாக்கத்தில் கலாச்சாரத்தின் இடம், வாசகர்களின் பங்கு போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்

மொழியாக்கச் சிந்தனைகள் வரலாறு: அடுத்ததாக மேற்கத்திய மொழியாக்கச் சிந்தனைகள் வரலாறு குறித்து நூலாசிரியர் விரிவாகப் பேசுகிறார். பண்டைக்கால மொழியாக்கச் சிந்தனையாளர்களாசிசரோ, ஹோரஸ், க்விண்டில்யன், அகஸ்டின், ஜெரோம், பதினேழாம் நூற்றாண்டு பிரித்தானியர் ட்ரைடன், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆர்னால்டு ஆகியோரின் மொழியாக்கச் சிந்தனைகள் அனைத்தும் பாரம்பரிய இலக்கிய, இலக்கண, தத்துவத் துறைகளுக்குள் அடங்கியிருப்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மொழியாக்கத்தில் பாலின அரசியல் மற்றும் பெண்ணிய மொழியாக்கச் சவால்கள் குறித்துப் பேசும் இந்த இயலின் இறுதியில் மொழியாக்கச் சிந்தனை வரலாற்றின் வளர்ச்சியை விளக்கும் அட்டவணையை நூலாசிரியர் வழங்கியுள்ளார்.

மொழியியல்: மொழியியலுக்கும், மொழிபெயர்ப்பியலுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் இருப்பதைமொழியியல்எனும் தலைப்பிட்ட பகுதி விளக்குகிறது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று துணையாய் இருப்பது குறிப்பிடப்படுகிறது. எந்தவொரு பனுவலுக்கும் ஒரு கருப்பொருள் அல்லது பேசுபொருள் அல்லது தலைப்பு உள்ளது. முழுமையான பனுவல் வடிவம் பெறுவதற்குப் பல வாக்கியங்கள் தேவைப்படுகின்றன. அந்த வாக்கியங்கள் பனுவல் தன்மை பெற்றிட விரிந்த அர்த்தமட்டப் பின்னல் உதவுகிறது. ஒப்பிணைவு, விவரிப்பு, எடுத்துரைத்தல், தெளிவாக்கல், வேறுபடுத்துதல் போன்ற அர்த்த உறவுகள் வாக்கியங்களிடையே பிணைப்பை உண்டாக்கி சிறந்ததொரு பனுவலை உருவாக்குகின்றன. மொழிபெயர்ப்பாளருக்கு மொழியியல் தரும் தலையாய இரு கருத்தாக்கங்கள் உள்ளன. ஒன்று அதன் விரிந்தஅர்த்த ஆளுமை’. மற்றொன்றுமேலிருந்துகீழ் பிணைப்பு’. இவற்றை உள்வாங்கிச் செய்யப்படுகின்ற மொழியாக்கம் மேம்பட்டதாக, மிகுந்த பொலிவுன் அமைந்து விடுகிறது.  

கலாச்சாரம்: மொழிபெயர்ப்பியலுக்கு கலாச்சாரம் வழங்குகின்ற  பங்களிப்புகள், பார்வைகள், பயன்கள் பற்றிகலாச்சாரம்எனும் இயலில் நூலாசிரியர் பகிர்ந்து கொள்கிறார். குறிப்பிட்ட மனிதகுல மொழி குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அதற்கு உயிரோட்டம் தருவது அக்கலாச்சாரம் சார்ந்த மொழிப்பயனர்களே. மொழிபெயர்ப்பியலின் அணுகுமுறையில் 1980களில் மிகப் பெரியதொரு மாற்றம் தொடங்கியது. பனுவல் ஒன்றின் மொழியாக்கப் பணி தொடங்கிய உடனேயே அதன் ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்ற களம் மாறி விடுகிறது. தருமொழிபெறுமொழி ன்று இரு மொழிகள், இரு கலாச்சாரங்கள் என்ற புதிய களத்தில் பயணத்தைத் தொடங்கி விடுகின்றன. இக்கூட்டு வினையின் விளைபொருளே பெறுமொழி பனுவலாகப் பரிணமிக்கிறது. இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக கம்பன் எவ்வாறு வால்மீகி ராமாயணத்தில் பல மாற்றங்கள், நீக்கல்கள், சேர்க்கைகள் செய்து தமிழ்ச் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்புடைய வகையில் மொழியாக்கம் செய்து வெற்றி கண்டுள்ளான் என்பதை நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

இலக்கியம்: பனுவல்கள் கோடிக்கணக்கானவை. அவை தங்களுடைய உள்ளடக்கம், வடிவம், பயன்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. சமயம், தருக்கம், அரசியல், வணிகம், நுண்கலைகள், இலக்கியம், அறிவியல், மருத்துவம், சமையல் போன்ற பல துறைகளின் கீழ் அவை வகைப்படுத்தப்படுகின்றன. இலக்கியப் பனுவல் மற்ற அனைத்துப் பனுவல்களிலிருந்தும் வேறுபடுத்தப்படுகிறது. ஒரு மொழியில் படைக்கப்படுகின்ற உயர்ந்த இலக்கியப் பனுவல்களை பிற மொழி வாசகர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. இலக்கிய மொழியாக்கம் செய்வது சுகமானஆனால் சிரமமும், சோதனைகளும் நிறைந்ததொரு பயணம். இரு மொழிகளிலும் உள்ள இலக்கியத்துக்கான அனைத்து அம்சங்களையும் கண்டறிந்து இலக்கிய மொழியாக்கத்தில் அவற்றைச் சீரிய முறையில் கையாள வேண்டியுள்ளது.  

மொழிகளுக்குள்ளேயே செய்யப்படும் மொழிபெயர்ப்பு: ஒரு மொழியில் மிகவும் தொன்மை வாய்ந்த, பெரிதும் போற்றப்படும் இலக்கியப் பனுவல் இருக்கலாம். ந்தப் பனுவல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த மக்களுக்கு அதனைப் படித்துப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருந்திருக்காது. ஆனால் ஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பின் மொழியிலும், சமூககலாச்சார விழுமியங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன. பிற்காலங்களில் வரும் மக்கள் அந்தப் பனுவலை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு மொழியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பனுவலை அதே மொழியில் மீண்டும் எழுதுவதை சாதாரணமாக மொழிபெயர்ப்பு என்று நாம் சொல்வதில்லை. உரைநூல் என்றே நாம் அதனைக் குறிப்பிடுகிறோம். பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளுக்கு காலந்தோறும் பல உரைநூல்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. ஆனால் ரோமன் ஜேகப்சன் என்ற மொழியியல் அறிஞர் இதை ஒரு குறிப்பிட்ட மொழிக்குள்ளேயே செய்யப்படும் மொழிபெயர்ப்பு (Intra Lingual Translation) என்றே அதனை அழைக்கிறார்

செய்யுள் மொழியாக்கம்: இலக்கிய மொழியாக்கத்தில் செய்யுள் மொழியாக்கமே மிகுந்த விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. உரைநடை, நாவல், நாடகம், சிறுகதை போன்ற இலக்கிய வகைமைகள் குறித்து  இத்தகு விவாதங்கள் எழுவதில்லை. மேற்கத்திய செய்யுள் மொழிபெயர்ப்பில் ஆங்கிலக் கவிஞர் ஜான் ட்ரைடன் மிகவும் முக்கியமானவர். ட்ரைடன் மொழிபெயர்ப்பானது சொல்லுக்குச் சொல், பொருளுக்குப் பொருள், கட்டற்ற மொழிபெயர்ப்பு (metaphrase, paraphrase, imitation) என்று மூன்று வகைப்படும் என்கிறார். ”மொழிபெயர்ப்பில் எது தொலைக்கப்படுகிறதோ அதுதான் செய்யுள் (கவித்துவம்)” (Poetry is what gets lost in translation) என்று அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் கூறுவதிலிருந்து செய்யுள் மொழியாக்கம் எவ்வளவு கடினமானது என்பது புலப்படுகிறது. கவிஞர்களுக்கு மட்டுமே கைகூடுகின்ற செய்யுள் நடையில் சொற்கள் தனித்துவ முத்திரைப் பொருள்களை உணர்த்துகின்றன. இன்னும் பல காரணங்களால் செய்யுளின் நடை அலாதியாக, தனித்துவம் கொண்டிருக்கிறது. அது  எளிதில் மொழிபெயர்க்க முடியாததாக உள்ளது.  

உரைநடை மொழியாக்கம்: நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, கடிதங்கள், நாட்குறிப்புகள் ஆகியன உரைநடை இலக்கியங்கள் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் பதிப்புத் துறை கோலோச்சத் துவங்கிய பிறகு  பெரும்பாலான வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட நாவலும், சிறுகதையும் பதிப்புத் துறையில் பிரபலமாகின. புனைவிலக்கியங்கள் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டன. காப்புரிமைகள் மதிக்கப்பட்டன. காப்புரிமையில் மொழிபெயர்ப்பாளர்களின் பெயரைக் குறிப்பிடும் வழக்கம் வந்தது. மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மொழியாக்கங்களின் உரிமையாளர் ஆனார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் ராயல்டி பெற்றனர். மொழியாக்கம்தொழில்முறையானது. மொழிபெயர்ப்பாளர்களின் சமூக மரியாதை கூடியது. செய்யுள் இலக்கிய மொழிபெயர்ப்பில் இருக்கும் அளவிற்கு உரைநடை மொழிபெயர்ப்பிலும் சிரமங்கள் இருக்கவே செய்கின்றன. புதுமைப்பித்தனின்சாபவிமோசனம்சிறுகதையை கா..சு. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அந்த மொழிபெயர்ப்பைத் தன்னுடைய ஆய்வுக்கான  அடித்தளமாக்கி உரைநடை இலக்கிய மொழிபெயர்ப்பின் சிரமங்களை நூலாசிரியர் விளக்குகிறார்.  

நாடகம்: நாடக இலக்கியம்ஏட்டு நாடகம்’ ’மேடை நாடகம்(page play, stage play) என்று இரண்டு வகைப்படுகிறது. உரைநடை இலக்கியங்கள் போலவே ஏட்டு நாடகங்களும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. மேடை நாடகங்கள் மொழியாக்கம் செய்யப்படும்போது பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. நாடக மொழிபெயர்ப்பாளருக்கு மொழித்திறன் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அவருக்கு மேடை அமைப்பு, பின்புலச் சூழல் அமைப்பு, உச்சரிப்பு, உடல் மொழி போன்ற கூறுகளிலும் ஓரளவு புலமை தேவைப்படுகிறது. நூலாசிரியர் நாடக மொழியாக்கத்தில் நினைவில் கொள்ள வேண்டிய தலையாய சில அம்சங்களை பட்டியலிடுகிறார்

  1. மேடையில் பேசுவதற்கென்றே எழுதப்படுகிற நாடக உரையாடல் அன்றாட வாழ்க்கையில் மக்கள் இயற்கையாகப் பேசுவதைப் போல் இருப்பதில்லை. அடிப்படையில் நாடக உரையாடல் மிகவும் செயற்கையானது என்பதை மொழிபெயர்ப்பாளர் புரிந்து கொள்ள வேண்டும்.  
  2. முரண்பாடு, நகைச்சுவை, மறைமுகக் குறிப்பு, சொல்லாடல், கால முரண்பாடு, உச்சத்திருப்பம், அற்பநிலைத் திருப்பம் போன்ற பல நாடக உத்திகளை மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  3. நாடக அரங்கில் குழுமியுள்ள பார்வையாளர்கள் மேடை நிகழ்வுகளைத் தங்கள் ரத்த நாளங்களில் உணர்கிறார்கள். கதாபாத்திரம் அழும்போது அழுகிறார்கள். சிரிக்கும்போது சிரிக்கிறார்கள். எனவே நாடக மொழியாக்கம் அவையோர் ஏற்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
  4. மொழியாக்கம் மூல நாடகத்திற்கு நெருங்கி இருக்கலாம்; ஆனால் அதைத் தாண்டி மொழியாக்கம்தழுவல்நிலையை அடைந்து விடக் கூடாது. தயாரிப்புக் குழுவில் மொழிபெயர்ப்பாளரும் இடம் பெற்றால் நாடகம் இன்னும் சிறப்புறும்

உரைபெயர்ப்பியல்: மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகளின் வரலாறு தொன்றுதொட்டே இருந்து வருகிறது. ஆனால் உரைபெயர்ப்பு பற்றிய சிந்தனைகளின் வரலாறு 1950களில்தான் துவங்குகிறது. உரைபெயர்ப்புக்கு என்றே தனித்துவ அம்சங்களும், பிரச்சனைகளும் உள்ளன. கல்விப் புலங்களில் இது உரைபெயர்ப்பியல் (Interpreting Studies) என்றழைக்கப்படுகிறது. உரைபெயர்ப்புக்கு மட்டுமே உள்ள பிரச்சனைகளை இப்பகுதியில் நூலாசிரியர் வரிசைப்படுத்தியுள்ளார்.

கால அவகாசம்: உரைபெயர்ப்பு செய்வதற்குக் கிடைக்கும் கால அவகாசம் ஒரு சில விநாடிகளே ஆகும். தருமொழியில் தரப்படும் உரையை உடனுக்குடன் பெறுமொழியில் நேரடியாகத் தாமதமின்றித் தர வேண்டும். பிழைகள், சிதைவுகள், திரிபுகள் இல்லாமல் உரையாகவே தர வேண்டும்.

ஒலி வடிவிலான தருமொழி உரை: தருமொழி உரையானது உரைபெயர்ப்பாளருக்கு பகுதி பகுதியாகத்தான் கிடைக்கும். உடனே அது மறைந்தும் போகும். ஒவ்வொரு பகுதியும் ஒரு முறைதான் கிடைக்கும். பேசுபவர் பேச எடுத்துக் கொள்ளும் நேரம் மட்டுமே கிடைக்கும். உடனே மறைந்தும் போகும். அதற்குள் அந்த உரையை உள்வாங்கி உரைபெயர்ப்பாளர் நினைவில் நிறுத்த வேண்டும். நினைவில் நின்றதை மட்டுமே அவரால் உரைபெயர்க்க முடியும். பேச்சாளர் தொடர்ந்து பேசுவதற்கு ஏதுவாக உரைபெயர்ப்பை விரைந்து முடிக்க வேண்டும்.

திருத்தங்களுக்கு வாய்ப்பில்லாதது: உரைபெயர்ப்பாளர் பெறுமொழி உரையை முதல் முயற்சியிலேயே நிறைவுள்ளதாகத் தர வேண்டும். திருத்தங்களுக்கு வாய்ப்பில்லை என்பதால் குளறுபடிகள் இல்லாமல் இருக்க வேண்டும். பேச்சாளரின் பேச்சை உரைபெயர்ப்பாளர் மாற்றிச் சொல்லக்கூடாது.

ஆலோசனைகளுக்கும் வாய்ப்பில்லாதது: பெறுமொழி எழுத்தில் பனுவலாக்கம் முடிந்தபின் எழும் சந்தேகங்களுக்கு பிறரிடம் ஆலோசனை பெற்றிட வாய்ப்பிருக்கும். எனவே அவர் மேலும் திருத்தி அதனைச் செழுமை ஆக்கிடலாம். இத்தகைய வாய்ப்பு உரைபெயர்ப்பாளருக்குக் கிடைக்காது. உரைபெயர்ப்பு உடனுக்குடன் செய்ய வேண்டிய பணி என்பதால் மொழிபெயர்ப்பாளரைவிட உரைபெயர்ப்பாளருக்கு ஒருமுகப்பட்ட ஆழமான கவனம் தேவை. மின்னல் வேகத் துல்லிய நினைவாற்றல் அவசியம். விரைந்து குறிப்பெடுக்கும் திறமை வேண்டும்.

உரைபெயர்ப்பாளர்கள் கையாளும் உத்திகள்:            

  1. முன்கூட்டிய ஆயத்த உத்தி: உரைபெயர்ப்பாளர்கள் முன்கூட்டியே தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள். பேச்சாளர் பேசப்போகும்பொருள்குறித்த தகவல்களை முன்கூட்டியே திரட்டி வைத்துக் கொள்கிறார்கள். பேச்சாளரின் பேச்சு நடை, அடிக்கடி பயன்படுத்தும் மேடை உத்திகள் போன்ற தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள். இதனால் உரைபெயர்ப்பு வெற்றிகரமாகிறது.       
  2. சுருக்கும் உத்தி: பேச்சாளர் தன்னுடைய உரையில் தேவைக்கும் மேலான சொற்களை, வாக்கியங்களைப் பயன்படுத்தும் போது உரைபெயர்ப்பாளர் கருத்தின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டு மிகையான சொற்களையும், வாக்கியங்களையும் நீக்கி சுருக்கும் உத்தியைக் கையாளலாம்
  3. விட்டுவிடும் உத்தி: தருமொழிப் பேச்சில் உள்ள சில தகவல்களை உரைபெயர்ப்பில் சேர்க்காமல் விட்டுவிடும் உத்தியும் கையாளப்படுவது உண்டுபேச்சாளரின் பேச்சிலிருந்து எதை விட்டுவிடுவது என்பதில் உரைபெயர்ப்பாளர் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்றதை மட்டுமே விட்டுவிட வேண்டும்.  

முடிவுரை; மொழிபெயர்ப்பியல் குறித்து ஆழமாகவும் அகலமாகவும் 590 பக்கங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ள இந்நூல் நல்லதொரு முடிவுரையுடன் முற்றுப் பெறுகிறது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு முன்பாக பல பாதைகள் இருக்கின்றன. அவரவர் விருப்பப்படி தெரிவு செய்து தங்கள் மொழியாக்கப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஒருவர் ஒரே சமயத்தில் எல்லாத் திசைகளிலும் பயணிக்க முடியாது. அவ்வாறு முயல்வது எந்த இலக்கையும் அடைய உதவாது. ”எனவே தெளிவான ஒருமுகப்படுத்தப்பட்ட வரையறைக்குள் நின்று, ஒரு திசையில் பயணிக்கும் ஒருவர் அதனுடைய உன்னதங்களை எண்ணிப் பெருமிதம் கொள்ளலாம். அதன் உயர்வுகளைப் பேசி உள்ளம் மகிழலாம். ஆனால் வேறொரு திசையில் விரும்பிப் பயணிக்கும் ஒருவரை ஏளனத்துடன் பார்த்து எள்ளி நகையாடக் கூடாதுஎன்ற வேண்டுகோளுடன் நூலாசிரியர் கே.தியாகராஜன் நூலினை முடிக்கிறார்.  

மொழிபெயர்ப்பியலின் முழு பரிமாணங்களையும் விளக்கிடும் இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகிற்கு கிடைத்த அரியதொரு பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை. மொழிபெயர்ப்புப் பயணத்தில் இருப்பவர்களும். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மொழிபெயர்ப்பியலைப் பயிற்றுவிப்பவர்களும், பயில்பவர்களும் இந்நூலினைப் படித்துப் பயன்பெற வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களின் நூலகங்கள் அனைத்திலும் இந்நூல் தவறாது இடம்பெற வேண்டும்.  

பிழைகள் ஏதுமின்றி நூலினைப் பாங்குடன் கொண்டு வந்துள்ள காலச்சுவடு பதிப்பகம் பாராட்டத்தக்கது. மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகள் குறித்து தமிழில் வெளிவந்துள்ள இந்நூல் தருகின்ற  உத்வேகத்தில் இதுபோன்ற நல்ல நூல்கள் தொடர்ந்து வெளிவரும் என்று நம்பலாம்.

– பெ.விஜயகுமார். [email protected] 

மொழிபெயர்ப்பியல் பயணங்கள் பரிமாணங்கள்
கே.தியாகராஜன். email: [email protected]
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை:ரூ.675/-
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

நூல் அறிமுகம் : கரன் கார்க்கியின் சட்டைக்காரி நாவல் – முராநி

நூல் அறிமுகம் : கரன் கார்க்கியின் சட்டைக்காரி நாவல் – முராநி




நூல் : சட்டைக்காரி நாவல்
ஆசிரியர் : கரன் கார்க்கி
பதிப்பகம் : நீலம் பதிப்பகம்
விலை : 375

எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. மனிதர்களையெல்லாம் தன்பால் ஈர்க்கும் காந்த சக்தி கொண்ட எழில்மிகு நகரம். எல்லோரையும் வாழவைக்கும் புகழிடம். இந்த நகரின் பண்பாடு, கலாச்சாரம், மக்களின் வாழ்வியல் வழித்தடங்கள் இவைகளை சில பல கதாபாத்திரங்களைக் கொண்டு கருத்துப்புணைவுக்குள் கர்ப்பம் தரிக்கின்றார் கரன் கார்க்கி. மெட்ராஸின் வரலாற்று வழித்தடம் நீண்ட நெடிய அம்சங்களைக் கொண்டதாக விளங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனிகளின் வியாபார தலமாக மாறிய மெட்ராஸ் தனக்கான அபரிமிதமான வளர்ச்சியை தொடர்கிறது. பிழைப்பைத் தேடி வந்தவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக விளங்கிய இந்த மண் இங்கு வந்தவரை எல்லாம் வளம்மிக்கவராகவே மாற்றியது. ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களின் கதி என்னவானது. சொந்த மண்ணிலேயே அகதிகளைப் போல் வாழும் நிலைதானே ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு வெப்பச்சலனம் நிறைந்த நகரமாய் உருமாறி இருக்கிறது. பல்வேறு பகுதியிலிருந்து ஆட்சி செய்ய வந்தவர்கள், மொழிபெயர்ப்பாளராக வந்தவர்கள் மூலம் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம், போர்த்துக்கீஸ் போன்ற மொழிகளின் கலவையாய் ஒரு புது மொழி உச்சரிப்பையே உருவாக்கி, அதை எல்லோரும் வியந்து கேட்கும், நகைச்சுவை மிக்க மொழியாக மெட்ராஸ் பாஷை விளங்குகின்றது. இந்த பாஷையில், பண்பில் தான் ”சட்டைக்காரி” தனக்கே உரித்தான தனித்த தன்மைகளோடு நம் சிந்தனைக்கு உரம் சேர்க்கிறது. காதல், காமம், நட்பு, பாசம் இவை மனித வாழ்வியலின் அடிப்படை உணர்வுகள், இந்த அடிப்படை உணர்வுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு வடிக்கப்பட்ட காவியமாகவே சட்டைக்காரி விளங்குகிறது

என்னவாக இருக்கிறது.
மனிதன் எங்கோ தோன்றினான் எங்கேயோ, எப்படியோ கலந்தான். மனிதக் கலப்பு அழகான முகங்களையும், அறிவுசார் மனிதர்களையும் பிரசவித்துள்ளது. வரலாற்றுச் சம்பவங்களோடுதான் மனிதனின் வாழ்க்கையும் பயணப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் கரன் கார்க்கியின் சட்டைக்காரி நமக்கு சொல்லும் பாடம் இவைகள் தான்.

உடலும் உள்ளமும் பொறியியல் நிகழ்வுகள் போல் திரும்பத் திரும்ப அவனை காட்சிப்படுத்தி கொண்டிருந்தது. காதல் உணர்வை அறிவியல்பூர்வமாக சொல்லும் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தாழ மண்டியிட முடியாதபடி அவளுக்கு அடிவயிற்றில் வலி வழக்கத்தை மீறியதால் லேசாக முனங்கினாள். அவளது தொடையிடுக்கில் உதிரம் பிசுபிசுப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு பெண் நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேனோ, ஒவ்வொரு மாதமும் இந்த துயரம் தாங்கமுடியவில்லை. வெறுப்பும், நச்சரிப்பும் நிறைந்த மாதவிடாய்க் கால பெண்ணின் உடல் மொழியை, உணர்வுகளை ஒரு ஆணாக இருந்து சிறப்பாக நேர்த்தியாக சொல்லுகின்றார். நாவலில் வரும் பெண் கதை மாந்தர்களை எப்படி மாண்புடன் சித்தரித்துள்ளார் என்பதர்க்கு உதாரணம்.

உள்ளமும் உடலும் விழித்துக் கொள்ளும் தருணங்களில் பிரார்த்தனையால் அடக்கி அதை அமைதிப்படுத்த முடிகிறது. உணர்வுகளுக்கு நிரந்தர உறக்கத்தை தர முடியாதே. இப்போது அது விழித்துக்கொண்டது இன்று ஏனோ அவளது உள்ளத்துடன் சேர்ந்து உடலும் மலர்ந்து மணம் வீசுகின்றது. அவளில் வீசிய அந்த மணத்தை அவளே விரும்பினால். இந்த வரிகள் இயல்பான பெண்ணைப் பற்றிய வரிகள் அல்ல மாறாக கணவனை இழந்து 13 ஆண்டு தவ வாழ்கையின் கோரப்பிடியில் இருந்து மீளத் துடித்த இளம் விதவையின் உள்ள குமுறல்கள், உணர்ச்சிகளின் ஏக்கக்குரல். வாழ்வதற்கான அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நம்பிக்கை நிறைந்த அலங்காரக் கண்ணாடித் தொட்டிக்குள் அடைபட்டுள்ள அழகிய தங்கமீனின் விடுதலைக்கான ஏக்கங்கள்.

இந்த தங்க மீன் தான் நீந்திக் கொண்டிருந்த கண்ணாடி தொட்டியில் இருந்து இயேசுவின் அரவணைப்பிற்குள் அழகான காதல் இணையராய் சமுதாய சீர்திருத்த முன்மாதிரியாய் கதைக்களம் நெடுகிலும் வலம் வருகிறாள்.
அன்பு, பாசம், ஆசை, நட்பு, பகை, இன்பம், துன்பம், உறவு, பிரிவு, இறக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி போன்ற வார்த்தை தலங்களில் இருந்து எழும் கரன் கார்க்கியின் சிந்தனை மேகங்கள் வானம் முழுவதும் பரவி மேகமாய் உருமாறி, மின்னலாய் மின்னி, இடி முழங்கி மழையாய் நிலம் நனைத்து ஆறாய் ஓடி நதியாய் சேர்ந்து கடலாய் பரந்து விரிந்து நம் இதயத்தில் பல்வேறு சிந்தனைக் கீற்றுக்களை எழுப்புகின்றது. இருள் முகம் கிழித்து வெளிச்சம் பிரகாசிக்கிறது.

மன்னர்களுக்கும் மந்திரிகளுக்கு முதலாளிகளுக்கும் உயர் குடியினர்க்கு மட்டும்தான் காவியம் எழுத முடியுமா? சாதாரண விளிம்புநிலை மக்களின் தினசரி வாழ்க்கையை, அவர்கள் சந்திக்கும் இன்ப, துன்பங்களையும் சாதனைகளையும்காவியமாக படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தேவையை உணர்ந்து உருக்கமான உணர்வுகள் தெறிக்கும் புது புது வார்த்தை கோர்வைகளால் நம்மை கட்டிப் போடுகிறார். இவர் படைத்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் நிஜவாழ்க்கையில் பார்த்துப் பழகிய உறவுகளை போல் எண்ணத் தோன்றுகிறது. இயல்பான வசண நடை வரிகள் நம்மையே கதாபாத்திரத்திற்குள் மூழ்கடிக்கிறது.

சிலவேளைகளில் துயரங்களுக்கு மத்தியிலும் தப்பிப் பிழைக்கும் இதமான வாழ்வை காதலின் வழியே ஆணுக்கும் பெண்ணுக்கும் காலம் அடையாளம் காட்டவே செய்கிறது. என்ற கரன் கார்க்கியின் வாழ்வியல் தத்துவமே குர்ஷித்-கனி, ஐஸக் மற்றும் அவரின் இரண்டு மனைவிகள் இயேசு-லிண்டா, மூசாஸ்-ஸ்லெட்டா ஆகியோரின் காதல், குடும்ப வாழ்வியலை நாவல் முழுவதும் மென்மையான மயில் இறகால் நம் இதயத்தை வருடுகிறது. காதலை மாட்சிமை பொருத்தமாய் பயணிக்க செய்கிறார்.
வாழ்க்கை விளையாட்டைப் போலவே போட்டியும் பொறாமையும் வெற்றியும், தோல்வியுமாய் மாறி மாறி வருகிறது. கால்பந்தாட்ட விளையாட்டு வர்ணனைகள், விளையாட்டு வீரர்களுக்ககே உரித்தான போட்டி மனப்பான்மை, தன்நம்பிக்கை, தற்புகழ்ச்சி விளையாட்டு இவை அனைத்தையும் சாதுரியமாக கையாண்டுள்ளார் இந்த கால்பந்தாட்டத்தை போல் சுழன்று சுழன்று கோல் அடிக்க முயற்சிக்கிறார்கள். கருணா, ஜெயா, நிக்கோலஸ், மைக்கேல், பஷீர், மூசா என கதை மாந்தர்கள் அனைவரும் கதைக்களம் முழுவதும் தங்களின் தடத்தினை பதித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நமது பழைய வாழ்கையை நினைத்துப் பார்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாக நாவல் அமைந்துள்ளது. காட்சிகளை தத்ரூபமாக காட்டுவதில் உவமை நயத்துடன் சட்டைக்காரி தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறது. ததும்பிக் கொண்டிருந்த கடைசி குவளையை முகம் சுளிக்காமல் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போல் குடித்து காலியான குவளையின் கடைசிச் சொட்டையும் நுனிநாக்கில் சொட்டினான்.

உள்ளங்கையில் சுற்றும் பம்பரத்தை பார்ப்பதுபோல இயேசு தன் உள்ளங்கையை பார்த்துக் கொண்டிருந்தான்
முசாவின் கைகளில் உறுதியையும் ஸ்டெல்லாவின் கரங்களில் கடலின் குளிர்ச்சியையும் உணர்ந்த அலை பொங்கி ததும்புகிறது. மிக மிக அழகான நேர்த்தியான உவமை உவமேயம் கொண்ட அற்புதமான வரிகளை நாவல் நெடுகிலும் வறுமையின்றி வாரி வழங்கியுள்ளார்.
காலம் சின்ன சின்ன இடைவெளிகளில் மனிதர்களுக்கு எவ்வளவு பெரிய மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது.

நாவலை முழுமையாகப் படிக்கும் போது இந்த வரியை சாதாரணமாக நம்மால் கடந்து போக முடியாது கடைசி பத்து பக்கங்கள் முழுவதும் வாழ்வின் நினைவலைகள் நம் நிஜ உறவுகளை நினைவு படுத்துவதோடு கதைமாந்தர்களோடு வாழ்ந்த உணர்வையும் தந்து விடுகிறது
நீண்ட கதை களத்தில் பல கதாபத்திரத்தில் வரும் மாந்தர்களின் பிறப்பையும் இறப்பையும் மிகச் சுருக்கமாக கூறி கணநேரத்தில் நம் மனதை கனணமாக்கி சற்றுநேரத்தில் இலகுவாக்கும் மாயவித்தை கரன் கார்க்கியின் எழுத்தில் தென்படுகிறது. சுதந்திர இந்தியா கால, முன்னிட்டும், பின்னிட்டும் வரும் கதைக்காலம் அரசியல் பேசாது இருக்குமா? ஐசக் மிக நேர்த்தியான கௌரவமான கதாபாத்திரம் அனைத்துக் கதாபாத்திரங்களையும் மனித நேயத்துடன், மரியாதையுடன் கையாளுகின்றார். எப்படியாவது தன் இரண்டு மனைவிகள் மகளோடு வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற ஆசையின் நிமிர்த்தம் கடந்தகால, நிகழ் கால அரசியல் புரிதல் உள்ளவராக காட்டுவதோடு கதாபாத்திரம் வழியே மவுண்ட்பேட்டன் பிரபுவின் வருகை, செயல்பாடுகள், மதப் பழமைவாதிகளால் காந்தி கொள்ளப்படுவது, சாதி தொற்று, சனாதான வளர்ச்சி ஆங்கில இந்தியர்களின் எதிர்கால வாழ்க்கை போன்றவற்றை பேசுகின்றார்.

தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்களின் அரசியல் நிகழ்வுகள், பெரியார் பற்றிய செய்திகள், ராஜீவ் காந்தியின் கொலை போன்றவை கதைக்கள நகர்வுக்கும் காலத்தையும் கதாபாத்திரத்தின் முதிர்வு நிகழ்வையும் உணர்ந்து கொள்ள சரியாக பயன்படுத்தியுள்ளார்.
கரன் கார்க்கியின் அரசியல் ஞானத்திற்கு இந்த நாவலில் வரும் ஒரு வரியே சாட்சி இதோ அந்த வரி . . . ,
பெரும்பான்மையை வெறியூட்டி குளிர்காய நினைப்பவர்களால் சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து, சமகாலத்திய அரசியல் குளறுபடிகளும், கூறிய இட ஒதுக்கீடு பிரச்சினைகளும் நினைவுக்கு வருகிறது. கதைமாந்தர்களின் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினர், விளிம்பு நிலை சார்ந்தவர்களாகவே காட்டப்பட்டுள்ளனர்.
இந்த நாவல் காலம் காலமாக தெரிந்தும், தெரியாமலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடந்துவரும் இனக்கலப்பு பற்றி தெளிவாகப் பேசுகின்றது வெள்ளையர்கள் உலகெங்கும் போகிறார்கள் தங்களின் விதைகளின் வழியே மொழியையும் நிறத்தையும் தங்கள் சாதுரியத்தையும் பழக்கவழக்கங்களையும் முளைக்க வைக்கின்றனா். இந்த செய்தி நமக்கு எதை உணர்த்துகிறது.
சாதி, மதம், இனம், மொழி என உயர்த்தியும், தாழ்த்தியும் பேசும் மனிதனே உன்உடல் எந்த கலப்பினம் சார்ந்தது என்பதை உன்னால் அறுதியிட்டு சொல்லமுடியுமா? அறிவியல் துணை கொண்டு அறுதியிட்டால் நீ உண்மையாக நினைத்துக் கொண்டிருக்கும் உன் சாதியும், மதமும், மொழியும், இனமும் உன்னுடையது இல்லை என்பது தெரிந்து விடும். பொய்யான சாதியை மதத்தை, மொழியை, இனத்தை உரிமை கொண்டாட செய்யும் அரசியல் பொய் முகங்கள் கிழிந்து போகும். அதைத்தான் கரன் கார்க்கி எதிர் பார்க்கிறாறோ என எண்ணத் தோன்றுகிறது.

கதைமாந்தர்களின் வழியே இயல்பாக, யதார்த்தமாக சொல்லியிருக்கும் வார்த்தைகள் ஏழைகள் எப்போதும் எதையும் மறைத்து வைத்துக் கொள்வது வழக்கம் இல்லை அவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் உண்மையானதாக, வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒரே நேரத்தில் சமமாக கடக்கும் வாழ்வியல் தத்துவம் அறிந்தவர்கள் . இவர்களுக்கு இடையே நடக்கும் உறவு சண்டையும் நட்பு சண்டையும் நிரந்தரமானதல்ல. மெட்ராஸ் பாஷையில் வெளுத்து வாங்கும் கொச்சை வார்த்தைகள் நிறையவே இருக்கிறது என்றாலும் கொச்சையாக தென்படவில்லை. ஆக்ரோஷமான வசணங்கள், அளவுக்கு அதிகமான சாராய வாசனை மாமிச உணவு வகைகள் எதார்த்தமான நடைமுறை வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லியிருப்பது கரன் கார்க்கியின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு.
தற்போது வானுயர்ந்த கட்டிடங்களை தாங்கி நிற்கும் மெட்ராஸின் அந்தக்கால இயற்கை வளத்தை சொல்லி தற்போதைய நிலையை நினைத்து ஆதங்கப்படும் காட்சிப்படுத்துதல் மூலமாக பழைய நுகர்வு கலாச்சாரம் அக்கால பண்டிகை திருவிழா கொண்டாட்டம் அரசியல் நிகழ்வுகள் என அனைத்தையும் கண்முன் கொண்டு வருகிறார். கரன் கார்க்கி அவர்கள் இந்த சமூகத்தின் அறியாமை, மூட பழக்க வழக்கம் சாதி மத நம்பிக்கைகள் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சனாதானங்களை வேரறுப்பதற்கான சிந்தனை விதைகளை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பேசுகின்றார். இவை எதுவும் திட்டமிட்டதாக இல்லை. இயல்பாகவே விரிவடைகிறது. வாகன நெரிசல், எரிபொருள் மூச்சுக் காற்றில் உயிர் சுவாசிக்க திணறிக் கொண்டு, வானுயர்ந்த கட்டிடங்கள், வசதியான வாழ்க்கை முறைகளினால் ஊதிப் பெருத்துப் போன ஊளச்சதை நிறைந்த இன்றைய சென்னையின் பழைய சதுப்பு நிலங்கள், காடுகள், மலைக்குன்றுகள், கடற்கரைகள், தீவுகள், நதிகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் அபகரித்து, உருக்குலைந்து அழிக்கப்பட்டு காணாமல் ஆக்கியதற்கான பிறவிப் பலனை ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், சுனாமியால் அனுபவிக்கிறார்கள். இதில் ஐசக், மூசா, கர்ணா, ஜெயா போன்ற இந்த நாவலின் கதைமாந்தர்களின் வாரிசுகளும் இருக்கிறார்கள். அவர்களின் ஏக்கம், கோபம், பயம், விரக்தி மறு உருவாக்கம் செய்யவேண்டும் என்பதற்கான ஆர்வம், வேகம், நம்பிக்கை, உறுதி இவைதான் சட்டைக்காரி நாவல் மூலம் கரன் கார்க்கி எழுப்பும் விளிம்புநிலை மக்களின் ஒட்டுமொத்த கூக்குரல்.

சட்டைக்காரி – விளிம்பு நிலை மக்களின் சரித்திரம்

Ooradangu Utharavu Book By P.N.S.Pandiyan Bookreview Sa. Subbarao நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்

நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு – ச. சுப்பாராவ்



புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு

வரலாற்றை எழுதுவது மிகவும் சிரமமான வேலை. மிகப் பழங்காலத்து வரலாறு என்றால் அது குறித்து போதிய தகவல்கள் கிடைக்காது. கிடைக்கும் தகவல்களை எந்த அளவு நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதும் மற்றொரு பிரச்சனை. சமீபத்திய வரலாற்றை எழுதுவதில் வேறுவிதமான பிரச்சனை வரும். ஏராளமான தரவுகள் கிடைக்கும். எதை எடுத்துக் கொள்வது, எதை தள்ளுவது என்பது பிரச்சனையாக இருக்கும். மற்றொன்று சமீபத்திய வரலாறு எனும் போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே சிலர் இன்னும் நம்மிடையே இருக்கக் கூடும்.

நேரில் பார்த்தவர்கள், அது குறித்து படித்து அறிந்தவர்கள், சொல்லக் கேட்டவர்கள் என்று ஏராளமான ஆட்களின் நினைவுகளில் அந்த வரலாற்று நிகழ்வு பசுமையாகப் படிந்திருக்கும். அதை ஆவணப்படும் போது மிக மிக அதிகமான கவனம் தேவைப்படும். அப்படி மிகக் கவனம் எடுத்து ஆவணப்படுத்தும் வரலாற்று நூல்களே இன்றைய தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறைக்கும் வரலாற்றை எடுத்துச் சொல்லும் வாயில்களாக நிற்கின்றன. அத்தகையதொரு நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது ஒரு இனிய அனுபவம். செய்தியாளர் பி.என்.எஸ்.பாண்டியன் அவர்கள் எழுதிய ஊரடங்கு உத்தரவு என்ற நூல்தான் அது.

புதுச்சேரி தமிழகத்தோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டினருக்கு புதுச்சேரி என்றால் மிக மேலோட்டமாக பாரதியார், அரவிந்தர், மது, கேபரே என்று ஒரு சில விஷயங்கள் மட்டுமே நினைவிற்கு வரும். புதுச்சேரி பற்றி பெரிதாக அக்கறை காட்டாத தமிழர்களுக்கு இந்தப் புத்தகம் சொல்லும் வரலாற்றுச் செய்தி மிக வியப்பானதாகக் கூட இருக்கும்.

1979ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க விரும்புவதாக சொல்லப் போக, புதுச்சேரி முழுவதும் அரசியல் வேறுபாடு கடந்து அதற்கு எதிராகப் போராட்டம் நடக்கிறது. ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு என்று பெரிய அளவில் நடக்கும் போராட்டம் பத்து நாட்கள் கழித்து மொரார்ஜி தான் கூறியதைத் திரும்பப் பெற்றதோடு முடிகிறது.  இந்தப் போராட்ட வரலாற்றின் பதிவே இந்த 256 பக்க நூல்.

வெறும் பத்து நாட்களின் கதையாக இல்லாமல் புதுச்சேரியின் சுதந்திரப் போராட்ட வரலாறு,  அங்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர்ந்த விதம், புதுச்சேரிக்கும் பிரான்ஸிற்கும் உள்ள கலாச்சாரத் தொடர்பு, அதன் காரணமாக இன்றும் புதுச்சேரியில் நிலவும் ஒரு தனித் தன்மை கொண்ட கலாச்சாரம், அந்தக் கலாச்சாரம் குறித்து அந்த மக்களின் பெருமித உணர்வு, எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார் பாண்டியன்.

இந்த நூலின் மிகப் பெரிய பலமே, எந்த சார்பு நிலையும் எடுக்காது உள்ளது உள்ளபடி அப்படியே வரலாற்றைப் பதிவு செய்திருப்பதுதான்.  போராட்டக் களத்தில் நின்று போராடிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கூற்றுகள் அப்படியே பதிவாகி உள்ளன. புதுச்சேரி இணைப்பு தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடந்த விவாதங்கள், உள்துறை அமைச்சரின் பதில்கள் எல்லாம் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக உள்ள பிரெஞ்சிந்திய புதுச்சேரி – ஒரு பார்வை என்ற கட்டுரை மிக முக்கியமானது. பிரபஞ்சனின் முன்னுரையும், திருமாவேலனின் அணிந்துரையும் புத்தகத்திற்குள் நாம் நுழைய நம்மைத் தயார்படுத்துகின்றன.

நூலில் குறிப்பிடப்படும் இந்தப் போராட்டம் நடந்த காலத்தில் நூலாசிரியர் ஐந்து வயது சிறுவனாக இருந்திருக்கிறார். இந்தப் போராட்டம் குறித்து அவ்வப்போது கேள்விப்பட்டதை வைத்து மிக விரிவாக ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்துள்ளார்.  

ஒற்றைத் தலைமை, ஒற்றைக் கலாச்சாரம், இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மைகளை ஏற்க மறுப்பது போன்ற பல்வேறு மோசமான அம்சங்கள் தலைதூக்கும் இக்காலகட்டத்தில் இந்தியாவின் மிகச் சிறிய ஒரு யூனியன் பிரதேசத்தின் மக்கள் தமது தனித்தன்மைக்கு ஆபத்து வந்த போது அத்தனை வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு போராடி, ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கை மாற்றி, அதைப் பணியச் செய்த வரலாற்றைச் சொல்லும் இந்த நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

 எழுத்தாளர் பிரபஞ்சனின் இறுதிநாட்களில் அவர் கூடவே இருந்து கவனித்துக் கொண்டவரான சிறந்த இலக்கியவாதியான பி.என்.எஸ்.பாண்டியன் இந்த நூலின் வழியே ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளராகவும் உருவெடுத்திருக்கிறார். 

அவருக்கு எனது வாழ்த்துகள்.

நூல்: ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
ஆசிரியர்: பி.என்.எஸ்.பாண்டியன்
வெளியீடு: வெர்சா பேஜஸ் வெளியீடு.
விலை: ரூ200. 00
பக்கங்கள்: 256

தமிழ் பண்பாட்டில் கலைகள் | பேராசிரியர் காளிஸ்வரன் உரை

தமிழ் பண்பாட்டில் கலைகள் | பேராசிரியர் காளிஸ்வரன் உரை

44 ஆவது சென்னை புத்தகக் காட்சி - 2021 பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை கோலாகல புத்தக காட்சி நடைபெறுகிறது.  #BharathiPuthakalayam​​​ ​​| #ChennaiBookFair2021​​​ | #Culture LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow…
NEP – தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்கக்கூடியது | கனிமொழி கருணாநிதி

NEP – தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்கக்கூடியது | கனிமொழி கருணாநிதி

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about tamil…