வெ.நரேஷ் கவிதைகள்

வெ.நரேஷ் கவிதைகள்




1) முந்தான முடிச்சி ஒன்னு
மும்முரமா போகுது
முட்டாக்கு போட்டுக்கிட்டு
முன்னும் பின்னும் பாக்குது
நட்டநடு ராத்திரியில்
நாலாபுரம் தேடுது

அங்கம் ருசி கேட்டுத்தான
அங்கும் இங்கும் அலையுது
கற்பை மட்டும் களவாடி
கணாமப் போனது
பாவி புள்ள பாவி புள்ள
நீ
பொறந்ததுதான் சாபமா?
கற்பை மட்டும் களவாடி
அவன்
போனதுதான் நியாயமா?
**********

2) என்னை மிகவும் பிடிக்கும் என்றாய்
நான் வரும் பொழுது ரசிப்போம் என்றாய்
என் சத்தம் கேட்டு மகிழ்வேன் என்றாய்
என்னைப் பற்றிக் கவிதையாய் வர்ணித்தாய்
ஆனால் ஏனோ நான் உன்னைத் தேடி வந்தவுடன்
எதிரியாகவே பார்க்கிறாய்
இப்படிக்கு அடை மழை
*********

3) நெருங்கிய உறவாக இருந்தாலும்
தூரத்து உறவாக இருந்தாலும்
வாழ்த்து மடல் போல்
முடிகிறது
ஆழ்ந்த இரங்கலும் கூட !

– வெ. நரேஷ்

Nilaiyillatha kalathin varai padam Kavithai By Vasanthadheepan. நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை - வசந்ததீபன்

நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

கண்கள் தோட்டாக்களை
உமிழத் தயாராகிறது
இதயம் விசையை முடுக்க
தருணம் பார்க்கிறது
குறிக்குத் தப்ப
கனவுகள் முயல்கின்றன
நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள்
கிராமங்கள் கரைகின்றன
ஒளிய இடந்தேடுகின்றன பறவைகளும், மிருகங்களும்
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
புனைவாளனின் மூளை வெடிக்கிறது
புழுக்கள் பேசிக்கொண்டு வெளியேறுகின்றன
எவள் எவளோடவோ திரிந்தவன்
அவளோட சேர வந்திருக்கிறான்
அவனோடு இணைய
அவள் தயாரில்லை
கடந்து தான் செல்ல போகிறோம்
கசிந்து உருகித் தேங்காதே
காட்டாற்று வெள்ளமாய் பிரவகித்திடு
நொடி மணியாக விரைகிறது
மணி பெருகி நாளாய் வழிகிறது
நாள் கடந்து கடந்து
மரணமாய் முடிகிறது
நிறங்களின் உடைவில்
சிறகுகள் துளிர்க்கின்றன
விரிவோடுகிறது வானம்
பெருங்களிப்பின் உற்சவ சீழ்க்கையொலி தெறிக்கிறது.
நீலப்பளிங்காய் மிளிர்கிறது
நீருக்குள் கிடக்கும்
வாளாய் ஒளிர்கிறது
முப்பாட்டனின் முகச்செழுமையாய் மரக்கா மலை
உடைந்த நீர்க்குமிழியாக
மறைந்து போனது பால்யம்
தானியங்கள் கொழித்த
இறந்த காலங்கள்
பேரன்பின் சுடருள் கருமை படர்கிறது
நிலங்கள் வழியாக
வாழ்க்கை நகர்ந்தது
தாவரங்களாகவே மனிதர்கள்
வேரற்று காற்றோடு அலைபடுதல் இக்கால நீங்கா சாபம்.