நூல் அறிமுகம்: ஏகாதசியின் ‘சைக்கிள்’ நாவல் – கருப்பு அன்பரசன்
நூல் : சைக்கிள் (நாவல்)
ஆசிரியர் : ஏகாதசி
விலை : ரூ.₹ 220/-
பக்கங்கள் : 212
வெளியீடு : சமம் வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
எங்களின் குடியிருப்பைச் சுற்றி கருப்பும் வெள்ளையுமாக, வெள்ளையும் செவுள் நிறமாக, கருப்பாகவும்.. கருப்பும் சாம்பல் நிறமாகவும் பூனை குட்டிகள் பார்க்கும் இடமெல்லாம் சுற்றிக் கொண்டிருக்கும். நான் அலுவலகம் கிளம்புவதற்கு முன் என்னுடைய இணையர் அதற்கு சாப்பிட ஏதாவது கொடுத்தே ஆக வேண்டும்.. கொடுக்கவில்லை என்றால் அலுவலகம் கிளம்பி வெளியே வரும் பொழுது குறுக்கும் மறுக்குமாக ஓடி தனக்குச் சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை என்று “கத்தி கத்தி” புகார் செய்யும் அந்தப் பூனைகள்.. புரிந்து கொண்ட நான், சாப்பாடு கொண்டு வந்து வைத்தால் மட்டும் தான் என்னை அலுவலகம் கிளம்ப விடும்..
மகன் பாரதியோடு விளையாட்டுச் சண்டை நடத்தும்.. அவன் நடப்பதே “தத்தகா பித்தகா” என்று.. அவனை நடக்க விடாமல் அவன் கால்களை சுற்றி சுற்றிவர, அவனை அருகில் இருக்கும் குச்சியை எடுக்க நடக்கவும் விடாது.. அவன் அவரது அம்மாவிடம் “அம்மா.. அம்மா..” என்று புகார் குரலில் கம்பளைண்ட் செய்ய.. அவர் வந்து விரட்டிய பிறகு பாரதி வெளியே நடக்க முடியும்.. குடியிருப்பில் இருக்கும் மற்ற ஆட்களிடம் விளையாடுவதை விட பூனைக் குட்டிகள் வீட்டுக்குள் வராமலேயே வெளியில் தனக்கான எல்லையைப் புரிந்து வகுத்துக் கொண்டு கொண்டு எங்கள் வீட்டில் இருப்பவர்களோடு எப்பொழுதும் விளையாடும்.. இப்படியான பூனைக்குட்டிகள் ஒரே நாளில் திடீரென்று குடியிருப்பின் ஒவ்வொரு பகுதியிலும் செத்துக் கிடந்தன. பூனைகளின் மரணத்தை வலிகளோடு பலர் பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு சிலர் மட்டும் அவர்களின் சிரிப்பின் பேச்சின் வழி, பூனைகளின் மேல் இருந்த வன்மத்தை கவனிக்க முடிந்தது அறிய முடிந்தது.. “எப்பவும் குறுக்கும் மறுக்காகவும் எதிரிலும் ஓடி வரும் சனியனுங்க தொலைஞ்சது” என்று. சிரிக்கத் தெரியாத உயிர்களின் மீது சிரிக்கத் தெரிந்த மனிதர்களின் மனங்களிலும் எண்ணங்களிலும் விஷம் வைத்துக் கொல்லும் வன்மம் வளர்ந்து கிடக்கக் காரணம் என்னவாக இருக்கப் போகிறது..?! அவர்கள் பார்த்து வளர்ந்த மனிதர்களிடம் அறிந்த.. அவர்களிடம் அவர் கண்ட ஒரு சில பழக்க வழக்கங்களுக்குத் தன்னைக் கொடுத்து தன்னை அப்படியாக வளர்த்துக் கொண்டதேவாகும். அந்தப் பூனைகளை கொண்டாடிய மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பில்தான் பூனைகளைக் கொன்று போட்ட மனித மனங்களும் வாழ்வதாக காண்பித்து கிடந்திருக்கிறது.
செயல்களும் வாழும் வாழ்க்கையே மனிதர்களை மற்றவர்களோடு இணைத்தும் அன்னியப்படுத்தியும் இருத்திடும். அவர்கள் வாழ்ந்திடும் வாழ்வுதான் அவர்களை மற்றவர்களோடு இணைத்துக் கொள்கிறது அல்லது இணைப்பை அறுக்கச் செய்கிறது. அந்த வாழ்க்கை மட்டுமே எல்லோருக்கும் அவர்களை அறிமுகப்படுத்தியும் வைக்கிறது எப்படியான மனிதர்கள் என்று.
உயிர்களிடம் அன்பு செலுத்தும் எண்ணற்ற மனிதர்களோடுதான் உயிர்களின் வலியைக் கொண்டாடும் பிறவிகளும் மறைந்து பயணித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் நம்மை சுற்றி பொய்யான கள்ளம் மிகுந்த சிரிப்பு சத்தத்தோடு நம்மை சுற்றியும். இயற்கை எல்லா மலர்களுக்கும் பாகுபாடு இன்றி நீரையும் வெளிச்சத்தையும் பொதுவாக்கி கொடுத்தாலும் அவைகள் வளரும் இடங்களை வைத்து தரம் பிரித்து இணைத்துக் கொள்ளும் பக்குவம் மிகுந்த மனிதர்கள் நிறைந்த மண் இது. அப்படியான பக்குவம் மிகுந்தவர்களாக நிறைய இதயங்கள் ஏகாதசியின் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கவிஞர், திரைப்பட பாடல் ஆசிரியர் ஏகாதசி அவர்களின் திரைப்பட பாடல்கள் மற்றும் கவிதைகளையும் கொண்டாடிய தமிழ்ச் சமூகம், அவர் முதலாவதாக எழுதியிருக்கும் சைக்கிள் நாவலுக்குள் வன்மம் கொண்ட மனிதர்களை விட நம்மைச் சுற்றி அழகும், பேரன்பானவர்களும், நேசம் மிகுந்தவர்களும் காதலை கொண்டாடுபவர்களும் பெருமளவில் இருப்பதை நாவலுக்குள் பதிந்திருக்கிறார்.
உடன் பிறந்த ஒருவன் அறிந்தே சொன்ன ஒரு ஒற்றைச் சொல்லின் வலி தாங்காமல் செத்துப்போன ஜெயலட்சுமி இன்னும் என்னுடைய மனதை விட்டு அகலவில்லை.. அப்படியான ஜெயலட்சுமிகள் இன்னும் நிறைய பேர் நம்மோடு பல ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள் உயிர்கள் அனைத்தையும் நேசிப்பவர்களாக.. மனிதர்கள் மேல் அக்கறை கொண்டவர்களாக.
“கௌரவம்” என்கிற ஏமாற்று வார்த்தைகளுக்குள் மனித மனங்களும் எண்ணங்களும் சிக்கிக் கொண்டு
பேய் ஆட்டத்தை நிகழ்த்தி காட்டத் தன்னை வழிநடத்தும் வேளையில் “நம்பிக்கை” என்கிற ஒற்றை வார்த்தையும் அதனோடு இணைந்து கொள்ளும் அந்தக் கணப்பொழுதில் மனிதன் தன்நிலை தவறி தன்மீது அன்பு கொண்டவர்களையும் .. தனது வாழ்வின் மீது அக்கறை கொண்டவர்களையும் அருத்தெறிந்து உணர்ச்சியின் ஆவேச மிகுந்த அழுக்காக தன்னை வெளி காட்டிக் கொண்டால்.. உணர்ச்சிக்கு தன்னை ஒப்புக் கொடுத்து விட்டால்
குடும்பங்களின் சொந்தங்களின் உறவுகளின் உற்றார்களின் வாழ்வு என்னவாகும் என்பதை இயக்குனருக்கே உரிய
காட்சிப்படுத்துதலை வார்த்தைகளை அடுக்கி வாசிப்பவருக்குள் கொண்டு வந்து நம்மை சுற்றி இருக்கும் அழுக்கில்லாத பண்பாளர்களை அழகு மிகுந்த மனிதர்களை நம் எண்ணங்களுக்குள் பதியச் செய்திருக்கிறார்.
நாவலின் மையமான பணியானில் மாரியம்மன் கோவில் திருவிழாவில்.. முளைப்பாரி கும்மி ஆட்டத்தில் இளவட்டப் பெண்களோடும் ஆண்களோடும் சேர்ந்து வாசிப்பவரையும் அவர்களுக்கு இணையானவர்களை பாவாடை தாவணியிலும் புது வேட்டிச் சட்டையிலும் தேடச் செய்கிறார். வாசிப்பவர்கள் நிச்சயம் மறந்து போனவர்களையும் உடன் இருப்பவர்களையும் கண்டுபிடிப்பார்கள்.
நானும் என் ராசாத்தியைக் கண்டெடுத்தேன் எனக்குப் பிடித்த கருப்புத் தாவணியில் அங்கு கும்மியடித்து சுழன்று ஆடியபோது . கோவில் திருவிழா என்றால் ஆட்டுக்கறி குழம்பு மணக்காமல் இருக்குமா என்ன.? நாவலில் திருவிழா பாகத்தை வாசிக்கும் போதே தொண்டைக் குழியில் ஆட்டு ஈரல் ஒன்று லாவகமாக இறங்கும்.. கறி மசாலா வாசனை நமைச் சுற்றி வீசும்..
பூமயில் மேல் கொண்ட காதலால் கணேசனுடன் சேர்ந்து நாமும் நாகமலையில் ராப்பொழுது முழுதும்
ஐந்து பாட்டில் சாராயத்தை ராவாக அடித்து இருப்போம். கணேசனையும் பூமயிலையும் சேர்த்து வைக்க துடித்திருப்போம்.
தனக்கான.. தன் மேல் பாசம் கொண்ட அக்கறை மிகுந்த அந்த நான்கு மனித உயிர்களின் சிவந்த பிசுபிசுக்கும் இளம் சூட்டு ரத்தம் பணியானின் மண்மேடுங்கும் தெறித்து விழ, ரத்தச் சகதியாக்கிய கொலைவெறியினை, உணர்ச்சியைத் தூண்டிய எண்ணமும்.. வார்த்தையும் எங்கிருந்து எதார்த்தமாகவும், சூழ்ச்சியாகவும் கிளப்பி விடப்பட்டது
கணேசனுக்குள் என்பதை, ஏகாதசியின் சைக்கிளை நீங்களும் மிதித்து ஓட்டும் போது, பயணிக்கும் பொழுது உணர முடியும்.
கொலையாகிப் போன அந்த நான்கு மனித உயிர்களுக்கும் பணியானின் சந்தை மேட்டுக்கும் அப்படி என்ன உறவு..? அந்த நால்வரும் யார்..? மாதம் ஒரு முறை ஏதேனும் நாள் ஒன்றில் அவர்களை அங்கு ஒன்று கூடச் செய்தது எது..?
ஏகாதசி சைக்கிளை வாங்கி ஒருமுறை மிதித்து சென்று வாருங்கள் நீங்களும் அறிந்து கொள்ள முடியும். உங்களுக்குள்ளும் அவர்களை நீங்கள் பார்க்கலாம்.
கடைசி அத்தியாயத்தில் 14 ஆண்டு காலம் சிறையில் இருந்து வெளிவந்து, வெவ்வேறு கிராமத்தில் இருக்கும் அந்த நால்வரின் வீட்டுக்கும் உடலின் சக்தி இழந்த மெய்யான நிஜம் அறிந்த கணேசனும் சைக்கிளும் சென்று நிற்கும் போதெல்லாம் சந்திக்கும் வேதனையை. நீங்களும் அனுபவித்தே ஆக வேண்டும். அந்த நால்வரின் பெயரையும் நீங்கள் நாவலை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளுங்கள்.
கடைசியாக அவன் சைக்கிள் செல்லும் தங்கையா வீட்டிற்குள் தன்னை கொன்று விடுங்கள் என கதறி அழும்பொழுது; ஒளி இழந்து கண்களை கொண்டத் தங்கையாவின் கிழவி பேசிடும் வார்த்தை
“ஏங் கெழவனுக்கு ஒன்னய
ரொம்ப பிடிக்குமுடா கணேசா அதான்”
என்று பேசி ஒரு கவளச் சோற்றை எடுத்து அவன் வாய் அருகில் கொண்டு செல்லும் பொழுது…
மனசன்யா ஏகாதசி நீங்க.!
நம்மை சுற்றி நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.. நல்ல இதயங்கள் இருக்கிறது என்கிற எண்ணங்களை மேல் எழுச் செய்கிறது உங்களின் சைக்கிள்.
“சைக்கிளில்” இருக்கும் கதை
212 பக்கத்தில் எழுத வேண்டியது இல்லை என்பது என் கருத்து. நாவலுக்குள் கொண்டு வர வேண்டிய கதையா இது? எனக்குச் சொல்லத் தெரியவில்லை.. கதை பதினாறாம் பாகத்தில் தொடங்கி முப்பத்தி இரண்டாம் பாகத்தில் முடிவடைந்து விடுகிறது. முதலில் இருக்கும் 16 பாகமும் வாசகரை நாவலுக்குள் கொண்டு செல்லும் நோக்கம் எதுவும் இன்றியே எழுதப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். நாவல் வாசகனை 32 பாகத்திற்குள்ளும் இழுத்துச் செல்ல வேண்டும் என்றால் அந்த வேலையை நாவல் ஆசிரியர் முதல் பாகத்திலேயே தொடங்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் நாவல் ஆசிரியர் பதினாறாம் பாகம் வரைக்கூட அதைச் செய்யவில்லை.
நாவல் ஆசிரியர் சினிமா இயக்குனர் என்பதால் சினிமாவிற்குள் இருக்கும் அத்தனை திடீர் திருப்பங்களும் நாவலுக்குள் கடைசி மூன்று அத்தியாயங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.. வாசகனை யூகிக்க முடியாத அளவிற்கு செய்திருக்கிறார்.
ஆனால் எதிர்பார்த்திருந்த கணேசனை நால்வரும் சந்திக்காமல் இருந்ததற்கான காரணத்தை இன்னும் வலுவாக தேடி இருக்கலாம் நாவலாசிரியர். சைக்கிளை நாவல் வகமைக்குள் கொண்டுவர முடியுமா என்கிற சந்தேகம் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
எளிமையான மொழி நடையும் மதுரை மக்களின் மண் சார்ந்த உரையாடல்களும் ஆசிரியருக்கு கைவந்திருக்கிறது அவரும் மதுரை மண் சார்ந்தவர் என்பதால். சைக்கிளின் ஓட்டம் முழுக்க முழுக்க மதுரையின் புறநகர் பகுதியிலேயே நான்கு கிராமத்து தெருக்களிலேயே பயணம் செய்திருக்கிறது.
கவிதைக்குள்ளும் பாடலுக்குள்ளும் தனி முத்திரை பதித்திருக்கிற ஏகாதசி அவர்கள்.. தன்னுடைய முதல் நாவலை கொண்டு வர போதிய மெனக்கடல் இல்லாமல் கட்டாயமாக ஒரு நாவலை கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணத்திலிருந்து வலிந்து எழுதப்பட்டதாகவே நான் உணர்கிறேன்.
நாவலுக்காக இன்னும் கூடுதல் மனக்கடல் தேவை கவிஞர் ஏகாதசி அவர்களே.
ஆனாலும் வாழ்த்துக்கள்.
கருப்பு அன்பரசன்.
