புவிநடனம் கவிதை – நவகவி
சூரிய சந்திரர் ஜோடித் தபேலா!
பிரபஞ்சம் இசைக்குது பார்வெகு நாளா!
கடல்அலைக் கரங்கள் பிடித்திட பதமே
காணுக புவித்தாய் நவரச நடமே!
ததோம் ததோம் என
தபே லாவின்இசை
ஒளியாய் வழியுது!
அதோ அதோ புவி
அன்னையின் நாட்டியம்!
அண்டம் மயங்குது!
(சூரிய)
மஞ்சு மேக உடை
பஞ்சு போல மலைக்
கொங்கை மீது படர,
ஓடும் கங்கைநதி
ஒட்டியா ணம்என
ஆகி வந்து தழுவ,
கோடி நட்சத்திரக் கண்ணால்
கண்டு இதை வானம்,
வியந்து வியப்பில்விரி வாகி
நீள்கிறது போலும்!
பருவ காலங்கள் ஆறும்
பக்கத் திரைச்சீலை ஆகும்!
துருவப் பனி இவளின்
முகத்தில் பூசும்அரி தாரம்.
(சூரிய)
மூங்கில் காடுகளை
புல்லாங் குழல்வனம்
ஆக்கித் துளை புகும் காற்றே!
ஆடு கின்ற புவி
அன்னை மேனியெங்கும்
பொழிக பொழிக இசை ஊற்றே!
சுழன்று சுழன்று இவள்
நடனம் பயில்கின்ற நேரம்,
நீரும் தீயுமிரு
நேத்திரங் களிலும் ஊறும்!
ஆயிரம் யுகம்யுக மாக
ஆதி நடம்இவள் ஆட, -இவள்
பாவம் யாவும் பல உயிரின்
பெருக்கமாய் மாற
(சூரிய)