அணையாத சுடர் விளக்கு அம்பேத்கர்…!!!!
**************************************************
இருட்டு
அறைக்குள் கிடக்கிறோம்
மெல்ல மெல்ல
எறிய தொடங்குகிறது மெழுகுவர்த்தி( அம்பேத்கர்),
மெழுகுவர்த்தியை
ஏற்றி வைத்தவன்
கூண்டுக்குள் கிடக்கிறான்,
மெழுகின் வெளிச்சம்
பள்ளிக்கூடம் வரை
ஒளியை வீசுகிறது
இருட்டிலிருந்து
வெளிச்சத்தை நோக்கி நகர்கிறோம்,
தோட்டி மகனின்
தோளில்
புத்தகப்பை தொங்குகிறது,
தோட்டியின்
கைகளில்
மாட்டுத் தோல் பறை,
வண்ணான் மகளின்
கைகளில் வண்ண
வண்ண புத்தகங்கள்
மெழுகுவர்த்தியின் உருகும்
வெளிச்சத்தில்,
இரவும் பகலும்
பாராமல்
வெளிச்சத்தை வீசுகிறது
இருட்டு அறைக்குள் கிடக்கிற
மக்களை வெளியேற்ற,
விறகுகளை
சுமந்த மகனின்
கைகளில் விலங்கியல்
புத்தகங்கள்
மெழுகுவர்த்தி ஒளியால்,
கழனியிலும் காடுகளிலும்
அலைந்து திரிந்த கூட்டம்
கூண்டுகளை
உடைத்துக்கொண்டு
மெல்ல மெல்ல நகர்கிறது
பள்ளிக்கூட வாசலை நோக்கி……!!!!
வெளிச்சம்வீசுகிறது
பட்டுப்போன
மரங்கள் துளிர்விடுகிறது
பூக்கள் பூக்க தொடங்குகின்றன
காய்கள் காய்க்க தொடங்குகின்றன
கல்லூரியின் வாசல் வரை
நீண்டுக்கொண்டே போகிறது
நீல மெழுகு வெளிச்சம்,
சுடுகாட்டில்வெந்துப்போன
வெட்டியான் மகனும்
கல்லூரி செல்கிறான்
எறிகிற பிணத்தின்
வெளிச்சத்தில்
புத்தகங்களை படித்தவாறு …!!!!!
நாங்கள் சாக்கடை மனிதர்கள்….!!!!!
*******************************************
கருப்பு நிற கயிற்றை
இடுப்பிலும் கழுத்திலும்
கட்டிக்கொண்டுகால் தவறி விழுகிறோம்
சாக்கடை குழியிலே,
பல நூற்றாண்டுகளாக
விழுகிறோம் விழுந்தவுடன்
விழுங்குகிறோம் மலக்குழியில்
மிதக்கும் மஞ்சள் நிற
படகுகளான கிழங்குகளை,
கழுத்தில் கட்டிய கருப்பு
கயிறு மெல்ல
மெல்ல
கழுத்தை இறுக்குகிறது
நீச்சல் தெரியாத
மீனை போல
கால்களை விசுறுகிறோம்,
நீர் இல்லாத
குளத்து மீனை
போல துடி துடித்து
இறந்து போகிறோம்,
மூத்திர
சாக்கடை நீருக்குள்ளே,
பத்து விரல்களிலும்
மஞ்சள் மோதிரங்களை
அணிந்து கொண்டு
சாலையை கடக்கிறோம் தெருவெங்கும்
வாசனை வீசுகிறது
மஞ்சள் நிற மோதிரங்களால் ,
அம்மனின்
மஞ்சள்தூள்
பொடிகளாக
நினைத்துக்கொண்டு
உடல் முழுவதும்
பூசிக்கொள்கிறோம்
பிறரால் எங்கள் உடல்
முழுவதும் பூசப்படுகிறது ,
அடைக்கப்பட்ட
சாக்கடைகுழிக்குள்
பிணங்களை
அடுக்கி வைக்கிறோம்
தீப்பிடித்து எறியாத
மஞ்சள் காகிதங்களை
படகுகளை
கையில் ஏந்தியவாறு,
சாக்கடை அடைப்பு
நீக்குகிறது
மூச்சடைப்பும்
நின்று விடுகிறது
சாலையோரம்
அனாதையான
சாக்கடை பிணங்களால்.
பிணம்
தின்னும் ஓநாய் கூட்டங்கள்
மஞ்சள் பூக்களை
முகர்ந்து
விட்டு ஓடுகின்றன
சாக்கடை விழுந்த மனித
பிணங்களின்
கழுத்தை குதறியவாறு
விவசாயிகளின் பிணங்கள்…!!!!
*************************************
தோளில் கிடந்த
பச்சை துண்டு
மரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தது
மீத்தேன் பறவையொன்று
தூக்கிக்கொண்டு போன
கோழிக்குஞ்சுகளான விவசாயிகள் ,
பயிரிடப்பட்ட நிலம்
முழுவதும் செழிப்பாக
வளர்ந்திருந்தது இறந்து போன
விவசாயிகளின் கல்லறைகள் ,
மண்வெட்டியும் கடப்பாறையும்
ஓய்வில்லாமல் குழிகளை
பறித்து கொண்டிருந்தது
ஆறடி விவசாய
மரமொன்றை புதைப்பதற்காக ,
நிலத்தில் தூவிய
உரத்தில் நஞ்சு
கலந்திருந்தது
தொண்டை அடைத்து விக்கி
செத்துக்கொண்டிருந்தார்
விவசாயியான அப்பா,
அமோக விளைச்சலை
ஏற்றுமதி செய்து
கொண்டிருந்தார் விவசாயி
கழுத்தளவு வளர்ந்திருந்தது
வட்டியும் கடனும் ,
விவசாய கிணறுகளில்
நீர் வழிந்து
வெளியேறி கொண்டிருந்தது
கார்ப்பரேட் காக்கைகள்
போட்டுக் கொண்டிருந்த
கற்களாக விவசாயிகள் பிணங்கள் ,
மாடுகள் உழுத
வயலில் கூட்டம் கூட்டமாக
கழுகுகளின் வருகை
விவசாயின் பிணங்களாக மண்புழுக்கள் ,
சுடுகாட்டு களத்தில்
அடுக்கி வைக்கப்பட்ட
நெல் மூட்டைகளாக
விவசாயிகளின்
பிணங்கள்
தூரத்தில் தெரிகிறது
வட்டியும் தகனமேடையும் ,
வற்றிப்போன மலட்டாற்றில்
திடிரென பெருக்கெடுத்து
பாய்கிறது வெள்ளம்
விவசாயிகளின் கண்ணீர்,
பூட்டிய மோட்டார்
அறையிலிருந்து வெளியேறும்
நாற்றம்
நாடாளுமன்ற வளாகம்
வரை வீசுகிறது
இறந்துபோன
விவசாயிகளின் மூச்சுக்காற்றாய் ,
நாங்கள் யார் மனிதர்களா…? விலங்குகளா…?
******************************************************
ஆடு மாடுகள் கூட நடந்து செல்லாத வழிகளில்
வழிகளை
ஏற்படுத்திக்கொண்டு நடக்கிறோம்
பல ஆண்டுகளாக,
பிணம் தின்னும் கழுகுகள்
எங்களின் தலையை
சுற்றியே வட்டமடிக்கின்றன
முட்புதர்களில்,
தலையை மறைத்து கொண்டே நடக்கிறோம்
ஆமைகளைப்போல,
எங்களின் கண்களை
கொத்தி தின்னுகின்றன
பல ஆண்டுகளாக
பயம் தெரியாத
அந்த கிழட்டு கழுகுகள்,
தலையில் ஏற்றிய
அரிசி,கோதுமை,
கம்பு,கேழ்வரகு,
தானியங்களை
கொத்தி தின்றவாறு
தரையில்
இறைக்கின்றன கழுகுகள்,
செருப்புகள்
இல்லாத எங்கள்
பாதங்களில்
சிவப்பு பொடிகளை
பதித்து செல்கின்றன
பாதைகள் இல்லாத சாலைகள்,
கைகள்
கட்டப்பட்ட பொம்மைகளாக தலைகள் தொங்கியபடி
தரைகளை
பார்த்தவாறே நடந்தே
செல்கிறோம்
மூட்டை முடிச்சுகளோடு,
தொண்டை தாகத்தின்
தண்ணீருக்காக
எங்களின்மூத்திரத்தையே
பிடித்துக் குடிக்கிறோம்,
சொட்டு
சொட்டாக விழுகின்றன
மூத்திரம்
பல ஆண்டுகளாக
தண்ணீரையே தேடி
அலைந்து நடந்து செல்வதால்,
பசியால் துடிக்கிறது
வயிறு ஆசான
வழியாக வெளியேறும்
மஞ்சள் பழங்களை
சாப்பிடுகிறோம்,
இரத்தமும்
கலந்தவாறு பழுத்திருக்கிறது மஞ்சள் பழம்,
மூன்று
வேளையும்
சாப்பிடாத
வயிற்று குடல்களால்,
நடக்கிறோம்
வீட்டுக்காக
நடக்கிறோம் நாட்டுக்காக
நடந்தே போகிறோம்
நாளை எங்களை
ஆளப்போகும்
மன்னர்களுக்காக ….!!!!
வேட்பாளர்
*************
எல்லா
கதாபாத்திரத்திலும்
நடித்து ஒத்திகை பார்த்து கொண்டிருந்த வேட்பாளர்
சாக்கடை அள்ளிக்கொண்டிருக்கும் துப்புரவு பணியாளர் கதாபாத்திரத்தில் மட்டும்
நடிக்க ஒத்திகை பார்க்காமல் ஒதுங்கியே நிற்கிறார்
மரணத்தோடு எப்படி
நடிக்க ஒத்திகை பார்க்க முடியுமென்று “………!!!!!!
மரணம்…..!!!!
*****************
“சிறிது தூரம்
நடந்து விட்டு
திரும்பி பார்க்கிறேன்
யாரோ
ஒருவரின் நிழல் மறைந்திருக்கிறது ”
அவளுடைய கவிதை
*************************
எனக்காக
கவிதை யொன்றை
எழுதுவாயா
என கேட்கிறேன்
எனது பெயரையே
எழுதிகொடுக்கிறாள்
ஆலமர நிழலில்,
பேனாவின்
மை தீருகிறது
உதட்டு சாயத்தினால்
எழுதுகிறாள்
ஏழு வரிகளை கொண்ட கவிதையொன்றை ,
எழுதிய
ஒவ்வொரு வரிகளை சுற்றி
வண்ணத்துப்பூச்சிகள்
வட்டமடிக்கிறது
கருப்பு பேனாவின்
மை அழகினில்,
ஆலமரத்தை
சுற்றி சுற்றியே வருகின்றன
மயில்களும் மான்குட்டிகளும்
அவளின் கையெழுத்தின்
அழகினை காண்பதற்கு,
அவளுடைய கவிதைகளை
படித்து விட்டு ஆலமர
கிளைகளை பிடித்து உலுக்குகின்றன
அனில்களும் ஆந்தைகளும்,
உதிரும் சருகுகள் அவளின்
தலையில் கொட்டுகிறது
தலைவன்
பூக்களை தெளிப்பது போல,
ஆலமரம் மெல்ல
காற்றை வெளியிடுகிறது
காற்றில் பறக்கிறது
கவிதை எழுதிய பேப்பரும் பேனாவும்
தலைவனின் காதல்
கோட்டையை நோக்கி,
மரக்கிளையில் அமர்ந்த
புறாக்கள் அவளுடைய
கவிதைகளை தூக்கி செல்கின்றன
பாதைகள் இல்லாத வானத்து
நிலவின்
அழகினில் ஒட்டிவைப்பதற்கு …….!!!