இறுக்கம் கவிதை – இரா.கலையரசி

இறுக்கம் கவிதை – இரா.கலையரசி
கரகரத்த குரலெடுத்து
கக்கத்தில் துண்டை இடுக்கி
கசங்கிய முண்டாசின்
சுருக்கங்களை சரி செய்தபடி
“ஆத்துல போறத
அள்ளி தான் குடிக்கனும்”
கொரித்த கொய்யாபழத்தை
விட்டு ஓடிய அணிலை
பார்த்தபடி உதிர்ந்தன வார்த்தைகள்.!

ட்ரங்கு பெட்டி அதிராமல்
இலசா எடுத்த சீலை
அங்கம்மாவ இறுக்கமா கட்டிக்கிறுச்சு.
அப்பன் பேச்சு காலை கட்ட,
கருஞ்சாந்து இருட்டு கண்ணடிக்க,
களவாணி மனசு
சீக்கு வந்த கோழியா
சிக்கித் தவிக்குது.

தண்டால தள்ளிகிட்டு
தவதாயபட்டு வெளியேறி
தருசு காட்டுக்குள்ள
தனியா ஓடி களைக்கிறா!
செவத்த கெண்ட காலு
மண்ண மிதிச்சு சத்தமிட
திரும்பியவள இறுக்கிடுச்சு
தேக்கு மரக் கைகள்.

ஓங்கிய அரிவாள்
கருப்பசாமிய நெனவுபடுத்த,
செவந்த கண்ணுல
வழிஞ்சு ஓடுது ரத்தக்கோடுகள்
!ஓடுகாலி கால வெட்டுணே!
ஓங்கி ஒலிக்குது
உளவு பார்த்தவன் குரல்.

தூக்கின கைகளை
அழுத்தி பிடிச்சவள்
“அப்பா கொன்றுப்பா “ங்க
மவள மொதல்ல
தூக்கின நாள நெனச்சு
மண்ணுல சாஞ்சாரு விருமன்
“பொணமா”

– இரா.கலையரசி

கலையரசியின் கவிதைகள்

கலையரசியின் கவிதைகள்
இருள் காதலன்
*****************
இருட்டிற்கு ஒளி
தாங்கியபடி
ஒனிர்ந்துக் கொண்டிருந்தாள்.
கும்மிருட்டின் மேல்
அவளுக்கு
அப்படி ஒரு காதல்.
காதலனின் வருகைக்காக
பகலெல்லாம் தவமிருந்து
இருளைக் கை கோர்க்க
காத்திருக்கிறாள்.
இருள் காதலன்
இவளது காதலை
சட்டை செய்வதில்லை.
வருவான் போவான்.
அவ்வளவு தான்.!
ஏனோ! காத்துக்
கொண்டே இருக்கிறாள்
இருள் காதலுனுக்காக
“மின்மினி பூச்சி”

மணல் வீடு
**************
கடல் முத்தமிடும்
மணலைப் பார்த்துக்
கொண்டே இருப்பேன்.
சிறு பிள்ளைகள்
கூம்பு வடிவ
வீட்டை ஆசையாக
கட்டிக் கொண்டிருக்க.
“நைந்து வலியைப்
பொறுத்தபடியே
இருக்கும் என்
கைப்பைக்கு” ஓய்வு
அளித்திருந்தேன்.
மணல் வீட்டைக்
கட்டத் தொடங்கினேன்.
“ஈ.எம் ஐ” கட்ட வேண்டாம்.
“அஞ்சு பத்து”
கணக்கு பார்க்க வேண்டாம்..
வாழ்க்கையை அடமானம்
வைக்க வேண்டாம்.
இதெல்லாம் பணம்
உள்ளவர்களுக்கு.
இதோ மணல் வீட்டில்
சொந்த வீட்டு
ஆசையைப் பார்க்கிறேன்.!
கட்ட முடியாது என
தெரிந்தும்.!!

இரா.கலையரசி

புனிதனின்  கவிதைகள்

புனிதனின் கவிதைகள்
விபத்து
***********
எப்போதாவது
எதோ சொல்ல வந்தியே
என்னவென்று கேட்கிறாள்

எப்போதாவது
பலூன் வாங்கித் தரச் சொல்லும்
குழந்தையைப் போல்

அடம் பிடிக்கிறாள்

எப்போதாவது
ஜானி நாய்க்கு
என்னாச்சு என்பது போல்
அதிர்ச்சியாய் குறுக்கிடுகிறாள்

விபத்தில் இறந்த
அப்பாவின் நினைவில்
வாழும் அம்மா

நிறங்களின் உணர்ச்சி
******************************
பழைய சாதமும்
பச்சை மிளகாய் போலவும்
ஓவியம் கண்டதில்லை

குயிலின் ஓசையில்
மலர்கிறது
வண்ணப் பூக்கள்

ஒவ்வொரு கீரையும்
ஒவ்வொரு நிறம்

இருட்டின் ஞாபகம்
பகல்
வெளிச்சத்தின் மறதி
இரவு

என் இசையின் கவனம்
என்பது
மக்கிய சாணம் முளைத்த
புற்கள் வண்ணம்

தவளைகள்
மூடர் கூட்டத்தின் நிறமல்ல

முயல் இடும்
புழுக்கையின் நிறம்

கோடையில் பசுமையாகும்
கொக்கின் கண்கள்
வற்றிய குளத்தில்
சேத்து குரவை மீன்கள்

சிவந்த இளம்
கொடுக்காய் புலி காண்கையில்
துறவியின் உணர்ச்சி

ரொம்ப நாளைக்குப் பிறகு

ஒரு வண்ணத்தை
அரக்கு நிறமென
அறிமுகபடுத்தினார் குரு
உயிர் வாதையோடு
இறந்த மூட்டை பூச்சியின்
நசுக்கிய குருதி நிறமது

க. புனிதன்

துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி

துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி
அந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது
எச்சில்கள் துப்பப்பட்டன
யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது
மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து
புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின்
விருட்சத்தின் கிளையில்தான்
நீங்கள் அமர்ந்து யோசிக்கும் நாற்காலி உருவாகியுள்ளது…….

நித்திரை கலைந்த மொத்த இருளின்
யாரோ ஒருவரின் இருட்பசியை போக்கிட
சிறு விளக்கு வெளிச்சத்தில்
மொத்த மோகப்பெருவெளியில்
அடர்ந்த மேகமாய் சூழ்ந்த
மனிதப் பரப்பில் சிறு சிறு காயங்களைத் துடைத்தெறிந்த
அந்தவொரு மெல்லிய தேகத்தில்
சிலிர்த்து எழும்பி பறிபோகிறது ஒரு துளி குருதியில்
யாரோ ஒருவரின் அராஜக வேகமும்…மோகமும்……

கிளறிய மண்ணுக்குள்
தீ நுழைந்து நீங்கள் மரமாக வேண்டாம்
மண்புழு செரித்திடாத ஒரு பசித்தாவரமாய் இல்லாத
இறுகப்பற்றும் ஆல விழுதாய் மாறிடப்பழகுங்கள்…….

இந்த ஈர காற்றுவெளியில் ஏதோ சிலாகித்தலை
ஆழ்த்தும் அந்த ஏகாந்த நொடிகளைப் பற்றி
அகலும் உனது ஒட்டுமொத்த தேவைகளைப் பறித்துச் செல்லும் இடத்தில்
ஓர் அடி பின்னால் வைத்து உனது உரிமையை இழுக்கப் பழகுங்கள்……..

அனாதையில்லங்களின் வாசலில்
இரட்டை மரங்களிலிருந்து சிந்திய
தனியொரு அனாதை தென்னங்கீற்று பெருக்கெடுத்து
துயரம் பாய்ந்தாற்போல் ஒவ்வொரு கீற்றிலும்
சுத்தம் செய்யும்விரல்களாய்
உனது கரங்களை ஊன்றிடப் பழகுங்கள்…..

கண்ணீர்க் கடலில் கட்டுமரமும்
அலையுமான அனைத்து ஏற்ற இறக்கங்களில்
சிறு அலையெனத் துள்ளிடும்
மீனின் சிறு கடல் துளியாய்
நீ நீச்சலில் காதம் பற்றி பலதூரம் கடந்திடு
நித்தம் துயரிலும் விருட்சமாய் துளிர்விடு……

கவிஞர் சே.கார்கவி