தொலைந்தது எது? கவிதை – அகவி
உங்கள் செல்பேசி எண்
தொலைந்துவிட்டது
என் எண்ணும்
தொலைந்துவிட்டதா
இதோ எண் ……….
நமது எண்கள்
நம் இருவரின்
கையில் இருந்தும்
ஓராண்டாய்
பேசிக்கொள்ளாமல்
இருப்பதன் காரணம்
விளங்கவில்லை
தொலைந்தது
நாமா? எண்களா?
என் மரணச்செய்தியை
நானே சொல்லமுடியுமா?
ஆனால்
என் இருப்பை
நான்தான் வெளிப்படுத்த வேண்டும்
உங்கள் இருப்பை
உங்களைப் போல
வெளிப்படுத்த யாருளர்
உங்களைத் தவிர ?
முகவரியிலிருந்து
எப்போது மனிதன்
எண்களால் அடையாளப்பட்டானோ
அப்போதிருந்துதான்
தொடங்கியது
கழித்தல்!
வாசல் வழி
மனிதம் வெளியேறத்
தொடங்கியது
பாஸ்வேர்டை தொலைத்ததனால்
அடைந்த நட்டத்தால்
பைத்தியமானான்
மெத்தப்படித்த ஒருவன்!
நீங்களும்
நானும்
சித்த நலத்துடன் இருக்கிறோம் இதுபோதும்
இப்போதைக்கு
எண்களாய் மாறி
என்ன
கிழிக்கப்போகிறோம்?