தீனதயாள் உபாத்தியாயா வெறுப்புகளின் பிறப்பிடம் கட்டுரை – மாதா

தீனதயாள் உபாத்தியாயா வெறுப்புகளின் பிறப்பிடம் கட்டுரை – மாதா




முஸ்லீம்களை பகைக்கவோ, விலக்கி வைக்கவோ வேண்டியதில்லை. ஆனால் அவர்களை தூய்மை படுத்த வேண்டும. பிஜேபி யின் முந்தைய அவதாரமான ஜனசங்கத்தின் கலாச்சார, அரசியல் வழிகாட்டியும், ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். அந்நியர்கள்; (முஸ்லீமகள்) முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று இங்குள்ள தேசிய (இந்து) இனத்தையும், அவர்களது கலாச்சாரத்தையும் சுவீகரித்து அதன்படி வாழவேண்டும். இரண்டு, தேசிய இனம் அனுமதிக்கும் வரை இங்கு வாழ்ந்துவிட்டு, பின்னர் தேச நலனுக்காக நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும். இந்துஸ்தானத்திலுள்ள அந்நிய மக்கள் இந்துக் கலாச்சாரத்தை, ஏற்றுக்கொண்டு, வேதங்களின் புனிதங்களைப் புரிந்துகொண்டு வாழவேண்டும். முஸ்லீம்களுக்கென்று தனி விழாக்கள் கிடையாது. இந்து தெய்வங்களை வழிபட்டு, அவர்களின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதோடு, தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தக் கூடாது. குடியுரிமையோ, அடிப்படை உரிமைகளோ, சிறுபான்மையினருக்கான முன்னுரிமையோ அவர்களுக்கு கிடையாது என்றார்.

தீனதயாள் உபாத்தியாயா உத்தர பிரதேசம் மதுராவில் 1916ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ம் நாள் பிறந்தார். 1937ல் அவர் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்து அரசியலில் நுழைந்தபோது அவருக்கு வயது இருபத்தொன்று. அப்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்க்கரின் போதனைகளாலும், தன்னுடைய வீரிய செயல்பாடுகளாலும் அமைப்பின் இரண்டாவது பெருந்தலைவராக உருவானார். இந்துக்கள் அல்லாதவர்களெல்லாம் அந்நியர்கள். அவர்கள் தூய்மைப்படுத்த வேண்டியவர்கள் என்று “நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசம்”; என்ற நூலில் கோல்வால்க்கர் கூறியுள்ளார். இறைச்சியை சிறுசிறு துண்டாக்கும் கூரிய கத்திபோல் வன்மத்துடன் வெறுப்பு வார்த்தைகளை எழுதியுள்ளார். உபாத்தியாயாவும் அவரைப் பின்பற்றியே செயல்பட்டு வந்தார். இந்துக்கள் தூய்மையான இனம் என்ற கோல்வால்க்கரின் கூற்று, ஜெர்மானிய இனம்தான் தூய்மையானது, அவர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள், மற்ற இனங்களெல்லாம் அடிமைப்படுத்தப்பட வேண்டியவை அல்லது அழிக்கப்பட வேண்டியவை என்று ஹிட்லர் கூறிய பயங்கரமான பாதையை நோக்கிச் சென்றது. ஜெர்மானியர்கள் உயர்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிபர் ஹிட்லர் தனக்குத்தானே வரையறுத்துக்கொண்டு, நாட்டில் இனத்தூய்மை செய்வதற்காக யூத இன மக்களை குவியல் குவியலாக உயிரோடு புதைத்தும், கொத்து கொத்தாக விஷ வாயு செலுத்தியும் லட்சக்கணக்கான மக்களை இன ஒழிப்பு செய்தார். அவருடைய இனத்தூய்மைவாதம் உலக மக்களை பெரும் அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால் இந்தியாவில் கோல்வால்க்கர் கூறும்போது, ஹிட்லரின் செயல்பாடுகள், இந்துஸ்தானத்தில் இனத்தூய்மை செய்து, ஒரே இனம் ஒரே நாடு என்று ஆக்குவதற்கு நமக்கு படிப்பினைகள் கிடைக்கின்றன. ஜெர்மானிய இனமும் கலாச்சாரமும் நமக்கு வேறுபாடாக இருந்தாலும், நம் தேசத்தில் நாம் ஒரே இனமாக ஒன்றுபடுத்துவதற்கு நாஜிகளின் நடைமுறைகள் நமக்கு பலன் தரும் வழிகாட்டுதலாக அமையும் என்றார்.

சமயச் சார்புள்ளவர்கள்கூட சகிக்க முடியாத, மனித குலத்துக்கு எதிரான நாஜி கொள்கைகள் கோல்வால்க்கரின் புத்தகத்தில் இருக்கிறது. விடுதலையடைந்த முதல் முப்பது ஆண்டுகளில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும், சோசலிசக் கருத்துக்களும் மேலோங்கி இருந்ததால், கோல்வால்க்கரை பொதுவெளியில் பெரிய தலைவராக அவர்களால் உருவாக்க முடியவில்;லை. ஆர்எஸ்எஸும் அப்புத்தகத்தைப் பற்றி அடக்கியே வாசித்தது. ஆனால் அதன் ஸ்தாபன அமைப்புக்குள் கோல்வால்க்கரின் கருத்துக்கள் தொடர்ந்து போதிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. தீனதயாள் உபாத்தியாயா பொறுப்புக்கு வந்தவுடன் இப்பிரச்சனையைக் கையிலெடுத்தார்; குருஜியின் சீடரான உபாத்தியாயா, மற்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போலில்லாமல் தனது வசீகரிக்கும் மொழியில் கோல்வால்க்கரின் சித்தாந்தங்களை மிக வீரியத்துடன் அரசியல் தளத்தில் புகுத்தினார். இந்திய வரலாற்றில் கடந்த பத்து நூற்றாண்டுகளாக முஸ்லீம்கள் தொடர்ந்து தொல்லையாக இருக்கிறார்கள். நாம் நாஜிகளிடமிருந்து உத்வேகம் பெற்று, பாரதத்திலுள்ள ஆறுகோடி(அன்று) இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோல்வால்க்கரின் கருத்துக்களிலிருந்து மாறுபடுகிறார். இதையே உபாத்தியாயா நளினமாக தன்னுடைய “அகண்ட பாரதம்”- நோக்கங்களும், அர்த்தங்களும் என்ற கட்டுரையில், முஸ்லீம்கள் அனைவரும் தங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்திக்கொண்டு, இந்து இனத்தோடு கரைந்துகொள்ள வேண்டும் என்று கூறியதோடு, இந்தியராக இருப்பதற்கு இவையே தகுதிகள் என்றார். அவர்களுடைய அகராதியில் இந்தியன், பாரதிய என்பதற்கு ஒரே அர்த்தம் இந்து என்பதே. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசியவாதத்திற்கு “பாரதிய” என்ற பெயர் சூட்டி, மற்றவர்கள் மீது திணித்து போலியான பெரும்பான்மையைக் காட்டுகிறார்கள். இந்து என்ற வார்த்தையை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விதைக்க வேண்டும். அதில்லாமல் சிவில் சமூகத்தை அணிதிரட்டி தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியாது. பாரதிய என்ற இந்து அடையாளத்தை ஒரு நாளும் மறக்கமாட்டேன். இது குருஜியிடமிருந்து நான் கற்ற பாடம் என்று தீனதயாள் கூறினாhர். இந்த அடிப்படையில்தான் அவர்கள் அமைத்த கட்சியின் பெயர்களான பாரதிய ஜனசங்கம் என்பது இந்து ஜனசங்க கட்சி என்றும், பாரதிய ஜனதா கட்சி என்பது இந்து ஜனதா கட்சி என்றும் பொருள்படுகிறது.

நாம் யார்? ஏன்ற கேள்வி எழுப்பி, அதற்கு தீனதயாள்ஜி பதிலளிக்கும்போது, நமது தேசியவாதம் என்பது இந்து தேசியவாதமே என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார். வெளியிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவி வந்தவர்கள் இந்து கலாச்சாரத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்து தேசியவாதத்தை ஏற்றுக்கொள்பவரே இந்தியக் குடிமகனாகக் கருதப்படுவார். உடலின் உஷ்ணத்தை அளவிடும் வெப்பமானி போல் இந்து என்ற உணர்வு இருக்க வேண்டும். வெப்ப அளவு குறைந்தால் உடல் நலக்குறைவு ஏற்படுவதுபோல் உணர்வின் அளவு குறையக் கூடாது. ஏனென்றால் இந்து கலாச்சாரத்தின் மீதுதான் நமது தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முஸ்லீம்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் அவர்கள் பாரம்பரியமான இந்து கலாச்சாரத்தை தழுவிக் கொள்ள வேண்டும். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. அவர்கள் இந்து பெருங்கலாச்சாரத்தில் கலந்து தங்களை தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றார். அவரவர் தெய்வங்களை வழிபட அனுமதித்தால் அவர்களை இந்திய தேசியத்திலோ, கலாச்சாரத்திலோ சேர்த்துக்கொள்ள முடியாது. பாரம்பரியமிக்க இந்தியக் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து ராமரையும், கிருஷ்ணரையும் வழிபடுபவர்கள் எவ்வாறு வெளிதேசத்திலிருந்து வந்தவர்களை தேசியவாதிகள் என்று அழைக்க முடியும்? எவரொருவர் இஸ்லாத்தைத் தழுவி இருக்கிறாறோ, அந்த வினாடியே அவர் நாட்டின் பாரம்பரியத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, அந்நியக் கலாச்சாரத்தோடு இணைந்து விடுகிறார். மேலும் அவர்கள் அமைப்பாய்த் திரண்டு, இந்தியக் கலாச்சாரத்தின் விழுமியங்களையும், மரபுகளையும், வழிபாட்டு தலங்களையும் அழிக்க நினைக்கிறார்கள் என்று முஸ்லீம் சமூகத்தின் மீது வெறுப்புகளையும், அவதூறுகளையும் அள்ளி வீசினார்.

1965ல் பாகிஸ்தானை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்தியாயா வெறியுட்டும் வகையில் உரையாற்றினார். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் அனைவரும் அந்நியர்கள். அக்பரை எதிர்த்து போர் செய்த ராணா பிராதாப்சிங்;, அவுரங்கசீப் மீது கொரிலா யுத்தம் நடத்திய சத்ரபதி சிவாஜி, மற்றும் சத்ராசல், துர்க்கா தேவி ஆகியோர் தேச பக்தர்கள் என்றார். அவுரங்கசீப் இங்கு வாழ்ந்து, ஆண்டு, வளங்களையும், செல்வங்களையும் அனுபவித்து கட்டாய மதமாற்றம் செய்த அவர் அந்நிய ஆட்சியாளர்தானே? அக்பர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவர் நம்மவர் இல்லை. அக்பர் சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் அனைவரும் அடிமைகளாகவே இருந்தோம். தற்போது பாஜக தலைவர்கள் தாஜ்மகாலுக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதை, உபாத்தியாயா அன்றே முகலாயச் சின்னங்கள் எல்லாம் அவமானங்கள் என்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் எல்லா மன்னர்களும் தங்களுக்குள் போர் செய்துகொண்டேதான் இருந்தார்கள். யுத்தம் இல்லாத குறுநிலமே இல்லை. அப்படியிருக்க உபாத்தியாயா வெறியைத் தூண்டிவிட்டு பேசினார். இந்து மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டு அழிந்துபோன சரித்திரத்தை சாதுர்யமாக மறைத்தார். அவர் வாதப்படி பார்த்தால் தங்களுக்குள் சண்டையிட்ட இந்து மன்னர்கள் எல்லாம் தேச விரோதிகளா? வரலாற்று உண்மைகளை மறைத்து, உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்பேற்றி, மக்கள் திரளில் வெறியேற்றுகின்ற செயலைச் செய்தார்.

பல வகையான தானியங்களையும், பருப்பு வகைகளையும் கலந்து உணவு தயாரிக்க முடியும். ஆனால் அதில் மண்ணும், கல்லும் சிறிய அளவில் கலந்திருந்தால் கூட ஒட்டு மொத்த உணவும் பாழாகிவிடும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் உடம்பின் வெப்பத்தை சீராக வைத்திருக்க வேண்டும்.அதில் சமரசம் செய்துகொண்டால் நோய்கள் உருவாகும். இதே கோட்பாடுகளைத்தான் வாழ்க்கையிலும், தேசத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். தானியங்களிலும், பருப்புகளிலும் கலந்துள்ள கல்லையும், மண்ணையும் களைய வேண்டும். தேசத்தின் தேகத்தில் வெப்பம் குறைந்துள்ளதால் அந்நிய நோய்கள் உருவாகின்றன. இந்துக்கள் தீய சக்திகளை அழித்தொழிக்கும் சிந்தனைகளிலிருந்து பின் வாங்கக் கூடாது. இஸ்லாமியர்களை தேசியவாதிகளாக்கி, பொருத்தமான இந்தியர்களாக்குவதுதான் இதற்கு தீர்வு என வாதிட்டார். அவர்கள் இந்துக் கலாச்சாரத்தைத் தழுவுவது என்றால், ராமரையும், கிருஷ்ணரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

அரசியலமைப்புச் சட்டம் வந்ததிலிருந்து இன்று வரை மதச்சார்பற்றவர்களும், ஜனநாயகவாதிகளும் உயர்த்திப் பிடிக்கின்ற “வேற்றுமையில் ஒற்றுமை” “கூட்டாட்சித் தத்துவம்”போன்ற உன்னதமான கோஷங்களை தீனதயாள் உபாத்தியாயா பகிரங்கமாக எதிர்த்துப் பேசினார். தேச ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஒரேவிதமான கலாச்சாரத்தின் மீதுதான் கட்டப்பட முடியும். நாட்டு மக்கள் வழிபாட்டு முறையிலும், உணவு, உடை பழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் ஒரே கலாச்சாரத்தோடு இணைந்து செயல்பட முடியும். ஆனால் தாய் நாட்டை வணங்குவதில் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என்றார். அவர் சொல்லுகிற தாய்நாடு என்பது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிற இந்தியா அல்ல. அவர்கள் நிர்மாணிக்க விரும்புகிற “இந்து ராஷ்ட்ரம்” என்பதாகும். காங்கிரஸ் கட்சியும், கம்யுனிஸ்ட்டுகளும் இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்று தவறான வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஒதுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை அரசியல் ஆதாயத்திற்கும், வாக்கு வங்கியாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்தத் தவறை இப்போது மட்டுமல்ல, சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே செய்து வருகிறார்கள் என்றார்.

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து புறப்பட்டு, கைபர், போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவில் ஊடுருவி தங்களை நிiநிறுத்திக் கொண்டார்கள் என்ற வரலாற்று உண்மையை இந்துத்துவவாதிகள் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் உயர்த்திப் பிடிக்கின்ற வேதங்களின் அடிப்படையிலான கலாச்சாரத்தை உருவாக்கிய ஆரியர்கள் அந்நிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே அவர்கள் கூறுகிற கலாச்சார தேசியம் என்பது அந்நிய கலாச்சாரமே.

முஸ்லீம்கள் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக இருக்கலாம். சிவாஜி படையிலும், பேஷ்வாக்கள் போர்செய்த போதும் முஸ்லீம் வீரர்கள் வெற்றி தேடித்தந்தார்கள். ஆனால் அவர்களெல்லாம் கோடிக்கணக்கான முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல. தனிநபருக்கும், சமூகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உபாத்தியாயா விளக்கினார். ஒருவர் தனிப்பட்ட வாழ்வில் சிறந்து விளங்கலாம். சமூகத்தில் அவர் தீயவராக இருக்கலாம். அதுபோல் சமுதாயத்தில் சிறந்த மனிதராக உள்ள ஒருவர் சுயவாழ்வில் மோசமானவராக இருக்கலாம். இங்கே நான் கூறக்கூடியது என்னவென்றால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு இந்து தீயவராக இருக்கலாம். அதே வேளையில் சமூகமாக திரளும் போது நல்லதையே நினைக்கிறார்கள். ஆனால் மறுபுறத்தில் தனிப்பட்ட வாழ்வில் நல்லவர்களாக இருக்கும் முஸ்லீம்கள் ஒன்று சேரும்போது, அவர்கள் தனித்திறன் மறைந்து தீயசெயல்களையே சிந்திக்கிறார்கள். இவைதான் நாள்தோறும் கிடைக்கிற அனுபவங்கள் என்றார்.

சாதி அடுக்குகள் பற்றி இங்கே பிரச்சனைகள் நடக்கின்றன. இவை மேலைநாட்டு சிந்தனைகளிலிருந்து வரக்கூடிய கருத்துக்கள். உள்ளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் இந்தியாவில் ஒரே கலாச்சாரமாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கே சாதிப் படிநிலைகள் தொடர்கின்றன. ஒரு சாதிக்கும் மற்றொரு சாதிக்கும் ஏற்படும் மோதலை நாம் ஏற்பதில்லை. நாம் ஏற்றுக்கொண்ட நான்கு வர்ணக் கொள்கைகளின்படி, படைப்புக் கடவுளாகிய பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள். தோள்களிலிருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள். வயிற்றிலிருந்து பிறந்தவர்கள் வைஸ்யர்கள். கால்களிலிருந்து பிறந்தவர்கள் சுத்திரர்கள்.(மனிதர்களுக்கு யாரும் பிறக்கவில்லையா?) எப்படி ஒரு உடலிலுள்ள தலை, தோள், வயிறு, கால்கள், எந்த பிரச்சனையும் இல்லாமல் தனித்து இயங்குகிறதோ, அதேபோல்தான் நால்வருணத்திலுள்ள சாதிகளும் முரண்பாடில்லாமல் அதனதன் போக்கிலேயே தனித்து செயல்பட வேண்டும். ஒரே உடம்பிலுள்ள பல்வேறு உறுப்புகளின் இயக்கத்தில் மோதல்களோ, முரண்பாடுகளோ இருப்பதில்லை. இந்த அடிப்படை கட்டமைப்புகளை மாற்ற விரும்புகிறவர்கள்தான் மோதலை உருவாக்குகிறார்கள் என்றார். வர்ணாசிரமக் கொள்கைகள் நாகரீக சமுதாயத்திற்கு எதிரானது என்பதை அவர் உணரவில்லை.

இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவித்திருப்பது பாரதத்தின் ஆன்மாவை சிதைப்பதாகும். மதச்சார்பற்ற நாட்டில் பாரம்பரியமும், கலாச்சாரமும் அழிக்கப்பட்டு, துயரங்களே தொடர்கின்றன என்று அலிகாரில் நடந்த கூட்டத்தில் பேசினார். மதச்சார்பின்மை கோட்பாடு அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதால் மட்டும் உபாத்யாயா எதிர்க்கவில்லை. அந்த சட்டத்தையே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் வரியில் குறிப்பிட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துகிற “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்” என்பதை உபாத்தியாயா முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாட்டு பிரிவினையை நோக்கி இட்டுச் செல்லும். இந்த சட்டம் பாரதத்தின் ஆன்மாவை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என்றார். நமது உள்ளார்ந்த லட்சியங்களும், தேசிய உணர்வுகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்க வேண்டும். கோட்பாடுகளில் நாம் ஒட்டு வேலை செய்து அந்நியர்களைத் திருப்தி படுத்திக்கொண்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை ஆங்கிலத்தில் தயார் செய்ததை தீனதயாள் உபாத்தியாயா ஏளனம் செய்தார். அரசியல் நிர்ணய சபையில் தேசவிரோத சக்திகள் புகுந்து சட்டத்தை ஆங்கிலத்தில் இயற்றி இருக்கிறார்கள். இந்தியில் எழுதியிருந்தால் அதன் சொற்களஞ்சியத்திலிருந்து உச்சரிக்கும் வார்த்தைகள் பாரதத்தின் வாழ்வு முறையை பிரதிபலித்திருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட சட்டம் இந்திய உணர்வுகளைவிட ஆங்கில மோகத்தையே பிரதிபலிக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறந்த ஆங்கிலக் குழந்தை. அது பரிசுத்தமான இந்தியா என்பதற்குப் பதில் ஆங்கிலோ இந்தியக் குணங்களோடு இருக்கிறது என்றார்.

தவறான வழிகாட்டுதலால் ஆவேசப்பட்டு வெள்ளையர்களை விரட்டிவிட்டு ஆட்சியில் அமர்ந்துகொண்டார்கள். சுதந்திரத்தின் உண்மையான பலன் நமக்கு கிடைக்கவில்லை. ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போராடுவது என்பது உண்மையான நாட்டுப் பற்று கிடையாது. தேசபக்திக்கு கலாச்சார தேசியத்தின் நேர்மறை உணர்வுகள் தேவைப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது அதன் தலைவர்கள் ஆங்கிலேயர்கள் மீது பலமான எதிர்ப்புக் கருத்துக்களைப் பரப்பினார்கள். மக்கள் மத்தியில் எதிர்மறையான சிந்தனைகளை விதைத்தார்கள். இதனால் பிரிட்டிஷாரை எதிர்ப்பவர்களெல்லாம் தேசபக்கதர்களென்று அழைக்கப்பட்டார்கள். இதுவா தேசபக்தி? தற்போது மக்கள் படுகின்ற துயரங்களுக்கெல்லாம் காரணம் அவர்கள்தான். போலியான தேசபக்தியைப் பரப்பி, உண்மையான தாய்நாட்டுப் பற்றை புறக்கணித்தார்கள். உண்மையான தேசியவாதம் என்பது இந்து கலாச்சார தேசியவாதம்தான். தன்மானமுள்ள இந்துக்கள் ஒருநாள் அந்நிய நகலான அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிவார்கள. பாரதத்தின் பண்பாடுகளையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய புதிய சட்டத்தை உருவாக்குவார்கள். உபாத்தியாயா விடுதலைப் போரில் பங்கேற்காதது மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் சித்தாந்தப்படி ஆங்கிலேயருக்கு சேவகம் செய்து சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக களமிறங்கினார். கோடிக்கணக்கான மக்கள் தியாகம் செய்து பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதை கேவலமாகப் பேசினார்.

இந்தியாவில் முஸ்லீம்களை அரசியல் ரதியாகத் தோற்கடிக்கும் வரை பாகிஸ்தான் பிரச்சனை தீராது. அவ்வாறு தோற்கடிக்கப்பட்ட பின்புதான் அவர்களை இந்துக் கலாச்சாரத்தோடு இணைக்க முடியும். தோல்விகள் அவர்களது சிந்தனையை மாற்றும். பின்னர் இந்துக் கலாச்சாரம்தான் தங்களுடையது என்றும், பாரத்மாதா தான் தங்களது தாய்நாடு என்பதையும் உணர்வார்கள்.

இந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்தி செயல்பட்டுக்கொண்டிருக்கிற காங்கிரஸ், கம்யுனிஸ்டுகளின் தேசபக்தி பொய்யானது. நாட்டை பிரிவினை செய்து சுதந்திரம் அடைவதற்கு முன்பே இத்தகைய குழுக்களுடன் சமரசம் செய்துகொள்ளும் அரசியல் இன்றுவரை தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் இந்த முயற்சி வெற்றிபெற முடியாது. ஏனென்றால் தேசபக்தியும், தேசவிரோதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று ஏளனம் செய்தார். முஸ்லீம்களை தேசியவாதிகளாக ஆக்குவதற்கு பாரதிய ஜனசங்க கட்சியில் செயல் திட்டம் வகுத்துள்ளோம். அத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் இஸ்லாம் துடைத்தெறியப்படும், கலாசசார ஒருமை மூலம் ஒழிக்கபபடும்; என்றார். அந்தோ! இறுதியில் உபாத்தியாயா உத்தர பிரதேச மாநிலம் மொகல்சாராய் ரயில் நிலையத்தில் 1968ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் நாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டு, பிரிட்டிஷாருக்கு சேவகம் செய்தவர் தீனதயாள் உபாத்தியாயா. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்கமுடியாது என்றும், தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றமுடியாது என்றும் பகிரங்கமாக அறிவித்த ஒருவருக்கு பிஜேபி அரசு உபாத்தியாயா பெயரில் ஏராளமான தேசிய நலத்திட்டங்களும், பல பல்கலைக்கழகங்களும், கல்வி நிலையங்களையும் ஆரம்பித்து உள்ளது. தங்களது வெறுப்பரசியல் மூலம் சிவில் சமூகத்தைக் கைப்பற்ற மிக விரைவாக செயல்பட்டு வருகிறார்கள். தீனதயாள் உபாத்தியாயாவின் சித்தாந்தங்கள் தற்போது அரசு அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. அவருடைய கொள்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தீனதயாள் உபாத்தியாயா பெயரில் பிஜேபி அரசு ஆரம்பித்துள்ள தேசிய நலத்திட்டங்கள்- கல்வி நிறுவனங்கள்.

* தீனதயாள் உபாத்தியாயா கிராம் ஜோதி யோஜனா.

* தீனதயாள் உபாத்தியாயா உன்னத் கிருஷி சிக்ஷா யோஜனா.

* தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா.

* தீனதயாள் அந்தோதயா யோஜனா.

* தீனதயாள் உபாத்தியாயா சௌபாக்யா யோஜனா.

* தீனதயாள் ஸபார்ஷ் யோஜனா.

* தீனதயாள் உபாத்தியாயா ஸ்வாலம்;பன் யோஜனா.

கல்வி நிறுவனங்கள்

* பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சேகாவதி பல்கலைக் கழகம்- சிகார்.

* பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பல்கலைக் கழகம் – கோரக்புர்.

* பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மருத்துவக் கல்லூரி – ராஜ்கோட்.

* பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக் கழகம் – ராய்சன்.

* தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் கல்லூரி – நொய்டா.

நினைவு மையங்கள்

* தீனதயாள் ரயில்வே ஸ்டேசன் – மொகல்சாராய்.

* தீனதயாள் மருத்துவமனை – அலிகார்.

* பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா நினைவு மையம், 63அடி உயர சிலை திறப்பு – வாரணாசி.

மாதா
சிபிஐ(எம்)தேனி மாவட்டக் குழு உறுப்பினர்

முகவரி:-
மாதா
மே-பா மா.தங்கராசு
75- கிழக்குதெரு
சக்கம்பட்டி, ஆண்டிபட்டி – அஞ்சல்
தேனி – மாவட்டம் 625512
செல் – 9442452505