நூல் விமர்சனம்: ச.தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி – பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்.
நூல் விமர்சனம்: தெய்வமே சாட்சி
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 2022
விலை: ரூபாய் 150
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
குற்றச் செயல் ஓன்றைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சாமனிய மனிதன் ஒருவன் , தான் குற்றமற்றவன் என்பதற்கு சாட்சிகளை முன் நிறுத்துவான்.இது போன்றே துன்புறுத்தலுக்கு
ஆளானவனும் தன் மீது இழைக்கப்பட்ட இன்னல்களை இழைத்தவர்கள் யார் என்று சுட்டிக்காட்டி அதை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சிகளை முன் நிறுத்துவான். இங்கு அறுபதுக்கும்
மேற்பட்ட பெண்தெய்வங்கள் தோன்றிய அல்லது உருப்பெற்ற வரலாறைக் கூறும் இந்நூல் தெய்வமே சாட்சியம் என்கிற்து. எதற்காகத் தெய்வங்களை சாட்சி கூற இந்நூல் அழைக்கிறது?
இவர்கள் அளிக்கும் சாட்சியம்தான் என்ன என்று படித்தால் ஆசிரியர் ஒரு கதை சொல்லியாக மாறி, ஒவ்வொரு பெண் தெய்வத் தின் வரலாறையும் கதையாகக் கூறிச் செல்கிறார்.
இ டை யி டையே க தை யில் இ டம்பெ று ம். பாத்திரங்களை அவ்வப்போது பேசவிடுகிறார். நமது புராணங்களில் பெரும்பாலானவை தெய்வங்களின் பிறப்பு வளர்ப்பு, போர்ச் செயல்கள்,அருட்செயல்கள் என்பனவற்றைத்தானே கூறுகின்றன. இந்நிகழ்வுகள் உண்மை என்று நம்புபவர்கள் வரலாறு என்பார்கள்.நம்பாதவர்கள் புராணக் கதை என்பார்கள் அவ்வளவுதான். புராண ஆய்வாளர்கள் இவ்வகைக் கதைகளைத் தோற்றப் புராணம் (Orgin Myth) என்பார்கள்.அப்படியானல் நம் தோழரின் இந்நூலில் இடம் பெறும் கதைகளையும்
தோற்றப் புராணக் கதைகள் எனலாமா என்றால் ஒரு சிக்கல் எழுகிறது.
புராணங்கள் நிகழும் காலம் நினைவுக் கெட்டாத நெடுங்காலமாக அமையும். பாதாளலோகம், பூலோகம், விண்ணுலகம் எனபன நிகழிடமாகவும், கதை மாந்தர்கள் பூவுலகினராக மட்டுமின்றி பாதாள உலகினராகவோ விண்ணுலகத்தாராகவோ இருப்பர். அத்துடன் மீவியற்கை (இயற்கை பிறழ்ந்த)நிகழ்ச்சிகள் மிகுந்திருக்கும். ஆனால் இந்நூலில் இடம் பெறும் இக்கதைகள் இவ்வரையரையில் இருந்து சற்று விலகி நிற்கின்றன. அப்படி என்றால் இவற்றை எப்படி வகைப்படுத்துவது?
இதற்கு நாட்டார் வழக்காற்றியல் அறிவுத்துறை விடையளிக்கிறது. மீவியற்கைத்தன்மை அதிகமின்றி உண்மையும் கற்பனையும் கலந்து, நடப்பியல் கூறுகள் கொண்டதாய், மனிதர்களையும் கதைமாந்தர்களாகக் கொண்டு , இவ்வுலகம், அண்மைக் காலம் என்பன மிகுந்து காணப்படும் கதைகள் பழமரபுக் கதைகள்(legend) என்ற வகைமையைச் சாரும். இவ்வகையில் இந்நூல் வெளிப்படுத்தும் கதைகள் பழமரபுக் கதைகள் என்ற வகைமையில் அடங்கும் தன்மையன. தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகமாகியுள்ள சைவ வைணவ
சமயங்களின் புராணங்கள் எழுத்துவடிவம் பெற்றவை.ஒரு குறிப்பிட்ட ஆசிரியரால் எழுதப்பட்டு பரந்த தளத்தில் வாசிக்கப்படுபவை. ஆனால் நாட்டார் தெயவங்களை மையமாகக் கொண்டு உருவான பழமரபுக்கதைகள் எழுத்து வடிவம் பெறாது குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்குபவை. ஆயினும் வில்லுப்பாட்டு, கணியான் கூத்து , உடுக்கைப்பாட்டு போன்ற
நாட்டார் நிகழ்த்துக் கலைகளை நாட்டார் தெய்வக் கோயில்களில் நிகழ்த்தும் கலைஞர்கள் தம் சொந்தப் பயனபாட்டிற்காக எழுததுவடிவிலான பனுவல்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
இப்பனுவல்கள் மக்களிடம் பரவலாகச் செல்லவில்லை. இவற்றின் உள்ளடக்கம் மட்டுமே நிகழ்த்துக்கலைகளின் வழி மக்களைச் சென்றடைந்தது. கலைஞர்களின் சொந்தப் பயன்பாட்டிற்கு உரியதாகவே நீண்டகாலமாக இவை இருந்துவந்தன. நிகழ்த்துகலைகள் நிகழாத கோயில்களில் எழுத்துப் பனுவலின் தேவை இல்லாது போயிற்று இருப்பினும் வாய்மொழி வழக்காறுகளாக
நாட்டார் தெய்வங்களின் தோற்றம்(orgin myth)குறித்த கதைகள் வழங்கிவந்தன. இவை வாய்மொழிப் பனுவல்களாக அமைந்து கடந்த கால உண்மை நிகழ்வொன்றை கற்பனையுடனும் மீவியற்கை நிகழ்வுகளுடனும் இணைத்து ஒரு குறிப்பிட்ட வட்டார மக்களுக்கு நினைவூட்டி வந்தன .
பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்.