Delhi Daryaganj Sunday Book Bazar (Kitab Bazar) Article By Writer Muthu Krishnan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

டெல்லி தரியாகஞ்ச் புத்தக சந்தை (Kitab Bazar) – எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்



20 வருடங்களாக டெல்லி சென்று வருகிறேன், எப்பொழுது டெல்லி சென்றாலும் நான் திரும்புவது ஞாயிறு இரவு ரயிலில் தான். இந்த ஞாயிறுக்காக பல நேரம் நான்கு ஐந்து நாட்கள் டெல்லியை சுற்றியலைந்து காத்திருந்ததும் உண்டு. யமுனைக்கரையில் ஷாஜகான்பாத் பகுதியில் பெரும் மதில் சுவர்கள் சூழ தரியாகஞ்ச் பகுதி அமைந்திருக்கும். ஞாயிறு காலை விடுமுறை நாள், அன்று வழக்கமான கடைகள் ஏதும் இருக்காது ஆனால் டெல்லி முழுவதும் இருந்து நுற்றுக்கணக்கான பழைய புத்தக வியாபாரிகள் இங்கு சாலையின் இருபுறமும் கடை போடுவார்கள்.
காலை 6 மணியில் இருந்தே மெல்ல மெல்ல வியாபாரிகள் வந்து தங்களின் புத்தகங்களை இறக்கி வைத்து கையில் தேநீர் கோப்பையுடன் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபடி இருப்பார்கள். மெல்ல மெல்ல பெரும் தார்பாய்கள் விரித்து விதவிதமான தினுசுகளில் புத்தகங்களை அடுக்கத் தொடங்குவார்கள். ஒரு கனிம சுரங்கத்தில் தங்கம், வைரம் கிடைப்பது போல் தரியாகஞ்சு கடைகளில் மூழ்கி எழுந்தால் நிச்சயம் உங்கள் விருப்பம் போல் ஒரு புதையல் காத்துக்கிடக்கும். புத்தகம் கிடைத்தவுடன் அடுத்த வேலை பேரம் பேசுவது தான். பொதுவாக காலையில் கொஞ்சம் கறார் விலைகளுடன் இருக்கும் வியாபாரிகள் மதியத்திற்கு மேல் நாம் கேட்கும் விலைக்கு சமயங்களில் கொடுக்கத் தொடங்குவார்கள். சில வியாபாரிகள் புத்தகங்களை எடை போட்டு விற்பனை செய்வார்கள்.
File:Sunday morning roadside second-hand book market at Daryaganj, Delhi  -1.jpg - Wikimedia Commons
உலகில் பதிப்பிக்கப்பட்ட எல்லாப் புத்தகங்களையும் நீங்கள் இங்கே காணலாம். புது தில்லியில் உலகின் எல்லா நாடுகளின் தூதரகங்களில் இருக்கும் நூலகங்களில் இருந்து வரும் பழைய புத்தகங்கள் என இங்கு நீங்கள் எதிர்பாராத விஷயங்களும் கொட்டிக் கிடக்கும். நேசனல் ஜியாகிரப்பியின் கடைசி இதழை கூட கொஞ்சம் தேடினால் எடுத்துவிடலாம்.
இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள் பலரை நான் இங்கு சந்தித்திருக்கிறேன், அப்படித்தான் ஒரு முறை குஷ்வந்த் சிங் அவரை சந்தித்து கை குலுக்கினேன். பல நேரங்களில் ஒருவர் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருப்பார் அவரை சுற்றி ஏ.கே 47 துப்பாக்கியுடன் நால்வர் நின்று கொண்டிருப்பார்கள். ராணுவ அதிகாரிகள், அரசதிகாரிகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஒரு லட்சம் பேர் கூடும் பழைய புத்தக சந்தை இது. ஆய்வு மாணவர்களின் எல்லா தேடுதல் வேட்டைகளும் தரியாகஞ்சில் தான் முடியும். என் ஒவ்வொரு பயணத்திலும் டெல்லியில் இருந்து பெரும் அட்டை பெட்டிகளில் புத்தகங்களுடனும், என் டெல்லி நண்பர்களிடம் கடன் பட்டும் தான் வீடு திரும்பியிருகிறேன்.
270 பழைய புத்தக வியாபாரிகள் என்றால் 300க்கும் மேற்பட்ட விதவிதமான இடைத்தீனி கடைகள் இந்த சாலையை அலங்கரிக்கும். வாரம் ஒரு முறை நடக்கும் இந்த பெரும் திருவிழாவை இனி நடக்கக்கூடாது என்று தடை செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். இந்த சந்தை அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது என்பதால் இந்த தடை உத்தரவு என்கிறது உயர் நீதிமன்றம்.
File:Sunday morning roadside second-hand book market at Daryaganj, Delhi  -3.jpg - Wikimedia Commons
இந்தச் செய்தியை வாசிக்கையில் என் கண்கள் குளமாயின, எத்தனை முட்டாள் தனமான உத்தரவு இது. இப்படி ஒரு கலாச்சார திருவிழா நடைபெறுகிறது என்றால் அன்றைய ஒரு நாள் அந்த சாலையை வாகனப் போக்குவரத்திற்கு தடை விதித்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது தானே அரசின் வேலை. எத்தனை சொரணையற்று செயல்படுகிறது போக்குவரத்து காவல்துறை மற்றும் நம் நீதிமன்றங்கள். உலகின் வளர்ந்த நாடுகளில் இப்படி ஒரு ஏற்பாடு எங்கு இருந்திருந்தாலும் இந்த இடத்தை அவர்களின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக அறிவித்திருப்பார்கள், வேண்டிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருப்பார்கள்.
50-60 ஆண்டுகளாக தாங்களாகவே ஒரு சுயவேலைவய்ப்பை ஏற்படுத்தி அதன் வழியே 1000 குடும்பங்கள் பிழைத்து வரும் ஒரு ஏற்பாட்டை ஒரு உத்தரவின் வழியே சிதைப்பது எந்த வகையில் ஞாயம். போக்குவரத்தை ஒழுங்கு செய்யலாம் அல்லது ஒரு பெரும் மைதானத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இவர்கள் பயண்படுத்த அரசு ஏற்பாடு செய்யலாம். ஏதோ ஒரு வகையில் இந்த சந்தை ரசவாதம் பெற்று மீண்டும் உயிர் பெற வேண்டும்.