2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “ஊழல்”
2024 நாடாளுமன்றத் தேர்தல் மக்கள் களம் – “வேலையின்மை”
மக்கள் களம் – “இந்துத்துவ வகுப்புவாதம்”
மக்கள் களம்…
கவிதை : மநுவின் போர்வை – கு.தென்னவன்
தேர்தலின் முன்னிரவு கவிதை
இந்தியக் குடியரசு
இமாலயக் கட்டமைப்பு !
மேடு பள்ளம் நிறவல்
மேன்மை குறிக்கோள்
நிறம் அகற்றல்
நியாயம் உணர்த்தல்
அறிவுப் பெருக்கம்
அகிலம் குறிக்கோள்!
மேன்மக்கள்
மெத்தப் படித்தோர்
மாதா தேசம்
மனமெலாம் வாசம்!
தேச பந்துக்களின்
தெய்வீக எண்ணம்!
தம்மைப் போலே
தம்மின மக்கள்
தாய்நாடுயர
தருவார் தியாகம்!
நம்பினர்
நாசமாய்ப் போன நம்மை!
கொள்ளையடிப்பதற்கு
முன் பணம் கொடுக்க
திருடர் போலே…
திரை மறைந்து வரும்
வேட்பாள!
அந்தக் கட்சிக்காரன்
வந்து விட்டான்…
இந்தக் கட்சிக்காரன்
என்ன ஆனான்?
சிகப்பு விளக்கேற்றி
வைத்து விட்டு….
சீ… சீ….
பல்லிளிக்கும் பாவிகள்!
விடியாத ராத்திரி
வீதியெங்கும் விலை மாதர்!
கொஞ்சிக் கொடுப்பவனும்
குழைந்துப் பெறுபவனும்
அஞ்சிடாமல் செய்யும்
அநியாயக் காமம்!
வந்தவன் கொடுப்பதுதான்
வாடிக்கை;
அது இந்த இரவிலும்….!
என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. கவிதை – து.பா.பரமேஸ்வரி
என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்..
ஒருமுகமானோம் ஜனநாயக ஐக்கியத்தில்
முகவரிப் பெற்றோம் ஒற்று சார்நிலையற்ற குடியிருப்பில்
பேரரசுகளின் இறங்கல்
பிரிவினை சாம்ராஜ்யத்தின் சறுக்கல்
ஒழியப் பெற்றோம்…
அன்னியரின் ஆதிக்கத்தில்
ஓய்ந்துப் போனோம்..
சர்வாதிகார அகோரப் பிடியில்..
ஏர் பிடித்த மக்களாட்சி மாண்டு
கையூட்டாய் ஜனித்தது..
கார்பரேட் கலாச்சார ஒன்றிய ஆட்சி..
தலை தூக்கிய எட்டப்பர் எடுபிடி வாதம்
நிர்மூலமாகிய ஜனநாயக தனியுரிமம்..
நிலைகுலைந்தோம்..
நின்ற மேனிக்கே குறுகினோம்..
பின்னலிட்ட பிரிவினை தான் எத்தனை..
மதங் கொண்டு பின்னிய மதத்தீவினை தான் அத்துனை..
சாதிசிடுக்குகளில் சிதைந்துப் போனோம்..
சாமான்ய சமத்துவம் கூட அற்று சரிந்தே கிடக்கோம்..
வேற்றுமையிலும் ஒற்றுமை உண்டோம்..
இன்றோ..
ஓர்மையிலும் ஒன்றியத்தில் ஒடுக்கப்பட்டோம்…
எங்கு நோக்கினும் சகோதரம் தழைத்தோங்கியது
இன்றோ..
சகோதரனிடமும் சாணாக்கியம் இழைந்தோடுகிறது…
கொஞ்சிக் குலவிய சாமாண்யர் கூட
விஞ்சி மிஞ்சி மிதந்து
அரசியல் சக்கரத்தின் செக்குருட்டுகளாய் செதுக்கி நிற்கின்றனர்..
பொருள் ஊழி வாதம்
அடிமை சாசனவாதம்
பிரிவு தொற்று வாதம்
மத ஆழிசூழ் வாதம்
ஆதிக்க அரசியல்வாதம்
வாதம் யாவும்
மனிதவாதத்தை முடக்கி
மானுடர் மதியை மசக்கையாக்கி
மக்கிச் செய்தன..
குடியுரிமைக்குக் கூவ
குரல்வளை கருவிப்போயின..
குலப் பெருமை பாராட்ட மனித குலத்தை மசியலாக்கின..
இனப்பெருக்கத்தை புறந்தள்ளி
இனச்சரிவிற்கு இயைந்து போகும் மனிதரானோம்..
எங்கு தொலைத்தோம் நம் குடியை..
எங்கோ தொலைந்தோம் ஆதியறிவை..
து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778
சென்னை.
நூல் அறிமுகம் : தங்க. முருகேசனின் “வெப்பம் பூக்கும் பெருநிலம்” மானுடத்தின் பெருங்குரலக ஒலிக்கும் கவிதைகள் – கவிஞர் கோவை காமு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் தங்க. முருகேசனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘’வெப்பம் பூக்கும் பெருநிலம்’’ வெளிவந்திருக்கிறது. இவரது முதல் கவிதை நூலான ’’தழும்புகளின் விசாரணை’’ வெளிவந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டன. இருப்பினும் இவர் மானிடவியல், இலக்கியம், இயக்கம் என பெருவானம் விரித்து பறந்துகொண்டிருப்பவர்.
இவருடைய கவிதைகளில் நுட்பமான சமூக உணர்வும் , விமர்சனமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எல்லாக் கவிதைகளிலும் அரசியல் இருக்கிறது. அதுவும் வெற்றுக் கோஷமாக இல்லாமல் கவிதைக்குரிய அழகியலோடு இருப்பது தனிச்சிறப்பு.
தேர்தல் ஜனநாயகம் பற்றிய ‘நிகழ்வு’ என்று ஒரு கவிதை, கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறவில்லை ; கவலைகள் தீரவில்லை என்பதைச் சொல்லும் கவிஞர் ,
எத்தனை முறைதான்
வரிசையில் நிற்பது
கைவிரல் கரும்புள்ளிக்காக…
என்று பேசுகிறார். தேர்தல் விபரீதம் இப்படி இருக்கும் அதே நேரத்தில், அதே கவிதையில் வேறு ஒரு ஆபத்தையும்,
சலசலப்பின் ஊடே
சத்தம் இல்லாமல்
இந்தியப் பெருங்கடலில்
நவீனக் கப்பல்
நகர்ந்து வருகிறது
என்று சுட்டிக்காட்டி எச்சரிக்கவும் செய்கிறார்.
இவருடைய கவிதைகளில், ஆங்காங்கே பகடியும் எள்ளலும் கைகோர்த்து வருகிறது. பருவம் தப்பிப்போன மழையை இப்படிச் சொல்கிறார் :
மழையே
நீ தென்னாட்டைத் திரும்பிப் பார்க்காத
மத்திய அரசா
தெற்கே வர மறுக்கிற
பிரதமர் பதவியா ?
கவிதையில் சரியான முறையில் வெளிப்படும் இது போன்ற பகடியும், எள்ளலும் வாசிப்பு சுவையைக் கூட்டுகின்றன.
இப்போதெல்லாம், ஆண்ட பரம்பரை என்னும் அலட்டல்கள் ஆங்காங்கே கேட்கின்றன. இதை இப்படிப் பகடி செய்கிறார்.
ஆண்ட பரம்பரைகள் அனைத்தும்
ஆரியச் சூத்திரத்தில்
அடங்கிக் கிடக்கிறது.
ஐயோ, பாவம் !
இவர் கவிதைகளில் நேரடித் தன்மை இருக்கிறது. சொற்சேர்க்கையின் கட்டமைப்பு, வாசிக்க எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிற அதேநேரத்தில், வரிகளைத் தாண்டியும் மனம் வேறு வேறு சிந்தனைத் தளங்களில் பயணிக்க வைக்கிறது. அதுதான் இவருடைய கவிதையின் நுட்பம்.
பாலியல் தொழிலாளியின் மகன் படும் மன அவஸ்தைகளை ‘பகலின் மறுபக்கம்’ என்று ஒரு கவிதை இப்படி பேசுகிறது.
ஏதேதோ மொழியில்
சரளமாகப் பேசுகிறாய்
தாயே !
எனக்குத் தந்தை மொழி உண்டா ?
என்று கேட்கும் போது இனம் புரியாத சோகம் நெஞ்சைக் கவ்வுகிறது. அதனுடைய உச்சம் இந்த வரிகளில் வெளிப்படுகிறது.
இப்படி மனிதப் பாடுகளை விதவிதமான அவதானிப்பில் கவிதைகள் ஆக்கியிருக்கிறார் தங்க. முருகேசன். கவிஞர் தன்னுடைய அரசியல் உணர்வுகளை , பார்வையை வெகு நுட்பமாக பதிவு செய்கிறார். தன் கருத்தியலை கவிதைப் போக்கிலேயே கதாபாத்திரங்களின் உணர்வுகளாக கட்டமைப்பதில் வல்லவர் என்பதைப் பல கவிதைகளில் உணர முடிகிறது.
படைப்பாற்றலும் , தெளிவான சமூக சிந்தனையும், மனித நேயமும் கொண்ட கவிஞர் தங்க. முருகேசனின் ’’ வெப்பம் பூக்கும் பெருநிலம் ’’ எனும் கவிதைத் தொகுப்பு மானுடத்தின் காலக் குரலாக ஓங்கி ஒலிக்கிறது.
– கவிஞர் கோவை காமு
நூல் : வெப்பம் பூக்கும் பெருநிலம்
ஆசிரியர் : தங்க. முருகேசன்
விலை : ₹ 70
வெளியீடு : கயல் வெளியீட்டகம்
24 எ, ராமச்சந்திரா நகர்,
எண் : 4 வீரபாண்டி,
கோவை – 641019.
8838882414