ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பன்முக ஏழ்மைக் குறியீடு – தமிழில்: இரா. இரமணன்
அண்மையில் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பன்முக ஏழ்மைக் குறியீட்டில் (NITI Aayog’s first Multidimensional Poverty Index (MPI) report) கேரளா, தமிழ்நாடு ,பஞ்சாப் போன்ற முற்போக்கான மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதும் பிஜேபி ஆளும் மாநிலங்களான பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்கள் பின்தங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கதுதான். இடதுசாரிகள் ஆளும் கேரளா மாநிலம் முதல் இடத்தில் இருப்பது பாராட்டத்தக்கது. எனினும் இந்தக் குறியீடு தயாரிக்கபப்ட்ட விதத்தைப் பார்த்தால் உண்மையான நிலவரம் இன்னமும் மோசமாக இருக்கும் என்று தெரிகிறது. இது குறித்து டிரை கான்டினெண்டல்(Tricontinental) என்கிற சர்வதேச நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் சுபன் டென்னிஸ் என்பவரின் கருத்துகள் நாம் கவனிக்கத்தக்கவை.
நிதிஆயோக் தனது அறிக்கைக்கு எடுத்துக்கொண்ட சில அடிப்படைக் குறியீடுகள்.
1.ஒரு குடும்பத்தில் கை பேசியும் சைக்கிளும் இருந்தால் அந்தக் குடும்பம் ஏழ்மையின் கீழ் வராது.
2.வீட்டைப் பொறுத்த வரையில் அதன் தரை, சுவர்கள், கூரை ஆகியவை களிமண், மணல், மண் அல்லது சாணத்தால் செய்யப்படவில்லை என்றால் அது நலிந்த பிரிவில் வராது. வீட்டின் பரப்பு எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. வசதியாகப் போச்சு; இல்லையா?
3.குடும்பத்தின் வருமானம் ஒரு குறியீடே இல்லையாம். வங்கிக் கணக்கோ அஞ்சல் அலுவலகக் கணக்கோ இருந்தால் போதுமாம். அந்தக் கணக்குகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது பிரச்சினையே இல்லை. மிகவும் வசதியாகப் போச்சு.
இந்த அறிக்கையின்படி ஒரு குடும்பத்தை ஏழ்மைப் பிரிவில் சேர்த்துக் கொள்வதற்கு நலிவுறு குறியீடு(deprivation score) 0.33 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்தக் கட்டுரையாளர்(சுபன் டென்னிஸ்) வசித்து வந்த டெல்லிப் பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகள் அவறது குடியிருப்புக்கு அண்மையிலேயே இருந்தன. அவர்கள் எந்த அளவு நெரிசலிலும் ஏழ்மையிலும் வாழ்ந்தார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.ஆனால் நிதி ஆயோக்கின் குறியீடுகள் அடிப்படையில் அவர்கள் 0.28 அல்லது 0.20 மதிப்பெண்களுக்குள்ளேயே வருவார்கள். அதாவது ஏழ்மைக் குறியீட்டிற்கு வெளியே இருப்பார்கள். எனவே இந்த அறிக்கையின்படி டெல்லி மக்களில் 4.79% பகுதியினரே பன்முக ஏழ்மைப் பிரிவினராக இருப்பதில் ஆச்சரியமில்லை. நமது நாட்டின் ஏழ்மையின் பரப்பை வெளிக்கொணர்வதில் நிதி ஆயோக்கின் அறிக்கை எவ்வளவு குறைபாடு உடையது என்பதற்கு டெல்லி ஒரு எடுத்துக்காட்டே.
ஜேஎன்யூ பேராசிரியர் சிராஸ்ரீ தாஸ் குப்தா கூறுவது போல ‘இந்தியாவில் ஏழ்மை சீரோ என்று காட்டும்வரை அதற்குத் தகுந்தாற்போல் குறியீடுகளை மறு வரையறை செய்து கொண்டே இருப்பார்கள்.’
சோபியா என்கிற டுவிட்டர் பதிவாளர் பதிவு நெத்தியடியாக உள்ளது. ‘2011இல் திட்டக் கமிஷன் நகர்ப்புற ஏழ்மைக்கு ரூ 32/ என வரையறையாகக் கொண்டது நினைவிருக்கிறதா? நிதி ஆயோக்கின் அறிக்கையும் அதே வகை பிதற்றலே. ஆனால் இந்த முறை அது பன்முகத் தன்மையாக இருக்கிறது.’