Palai Paravaiyin Kural Kavithai By Vasanthadheepan பாலைப் பறவையின் குரல் கவிதை - வசந்ததீபன்

பாலைப் பறவையின் குரல் கவிதை

தப்பு நடக்குது தப்பு நடக்குது
பாதிக்கப்பட்டவர் புலம்புகிறார்
மற்றவர்கள்
போரடிக்கிறார் என்கிறார்கள்
படகின் இருமருங்கிலும்
அழியும் கோலங்களை
தூறல் போடுகிறது
கனிகள் கனிந்திருக்கின்றன
பசி தீர்ந்த பறவைகள்
விநோதங்களைப் பாடுகின்றன
வழிப்போக்கர்கள் செல்லும்
வழியில் அந்தமரம்
நட்டவர் யாரென்று தெரியவில்லை
பினாமிகள் சொகுசாய் வாழ்கிறார்கள்
எடுபிடிகள் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள்
அடுத்த வேளை உணவு உனக்கும் எனக்கும் உத்தரவாதம் இல்லை
உன் கோபம் எனக்கும் இருக்கிறது
உன் வன்மம்
என்னையும் ஆட்டிப்படைக்கிறது
வஞ்சகத்தை வேரறுக்க
காலம் கூராகிக் கொண்டிருக்கிறது
அன்பாயிருங்கள்
நதி தவழ்ந்து செல்லட்டும்
வனத்தில் சகல ஜீவராசிகளும் வாழ்ந்து பெருகட்டும்
வாலை ஆட்டியது மகிழ்ந்தேன்
காலை நக்கியது குளிர்ந்தேன்
கடிக்க விரட்டுகிறது
வைதபடி ஓடுகிறேன்
கனவை வரைய பணிக்கிறான் ராட்சசன்
பல் வண்ணங்கள்
குவிந்து கிடக்கின்றன
வெண் வண்ணத்தில் வரைய முனைகிறேன்
கனவுகளைப் பின்தொடர்கிறது பிரமிப்பு
அறியாத தேசத்தின்
கதவுகள் திறக்கின்றன
ஒளிர் துகில் அணிந்த
ஒருத்தி வரவேற்கிறாள்.

– வசந்ததீபன்

Kalla santhaiyil thamizh paadum vettukili poem By Pesum prabhakaran கள்ளச்சந்தையில் தமிழ் பாடும் வெட்டுக் கிளி கவிதை - பேசும் பிரபாகரன்

கள்ளச்சந்தையில் தமிழ் பாடும் வெட்டுக் கிளி கவிதை – பேசும் பிரபாகரன்




பச்சை சட்டை போட்டு
பச்சையை வெட்டுவதால்
நீ வெட்டுக் கிளியல்ல
நீ ஒரு வேட்டு கிழி

பாலைவனத்தில் வாழ்வதோடு நிறுத்திக்கொள்
பாலைவனத்தை உருவாக்க முயற்சிக்காதே
அதை மனிதர்கள் பார்த்துக்கொள்வார்கள்

நீ புகவேண்டிய இடம்
உழவர் சந்தையல்ல
கள்ளச்சந்தை
அங்கு நீ பாடவேண்டிய ராகம்
சுருட்டி அல்ல
செஞ்சுருட்டி
நீ நடக்க வேண்டிய நடை
மணிப்பிரவாளம் அல்ல
மணி பிறழ் வாழம்

உழைப்பவனுக்கு ஒரு காசு
அவனிடம் பெறுபவனுக்கு இரு காசு
மறைப்பவனுக்கு பல காசு
இந்த மந்தி போராட்டத்தினை
மறக்காமல் வெட்டுக்கிளி நீ பேசு

உருவாக்குபவனும் லாபமில்லை
உட்கொள்பவனுக்கும் மீதமில்லை
முதலில் பெறுபவனுக்கு ஒன்றுமில்லை
இடையில் மறைப்பவனுக்கு வெட்கமில்லை
இந்த துக்கத்தை தடுக்க யாருமில்லை
இந்த பக்கத்தை எடுத்து
வெட்டுக்கிளி நீ பக்குவமாக பேசு

கூட்டமாக பறந்து வா
கள்ள சந்தையை நோட்டமிட மிகுந்து வா
உழைப்பவன் பாட்டையெல்லாம் படிக்க வா
விலை ஏற்றத்தை குறைக்க வா
கறுப்பாட்டை கடிக்க வா
அந்த கைக்கூலிகளை ஓழிக்க வா
மறைத்து வைப்பவர்களை
மலைக்க வைக்க நீ வா
பொய்மை திணித்து விற்பவர்களின்
குரல் பறித்து வைக்க நீ வா
ஜென்மம் எடுத்து நிற்கும் பொருள் மறைப்பை
உரல் எடுத்து நசுக்க நீ வா

மக்களுக்காக நீ பேசு
வெட்டுக்கிளி
உன் மனதைத் திறந்து உரை வீசு

Pavalai Vanangal Poem By R Sivakumar பாவ(லை) வனங்கள் கவிதை - ரா. சிவக்குமார்

பாவ(லை) வனங்கள் கவிதை – ரா. சிவக்குமார்




கத்தியோடு ரத்தமின்றி
யுத்தமொன்று நடக்குது
காட்டில் மரங்கள்

உன்னை விட உயர்ந்தவன் என்பதால்
என் மீதும் வன்முறையா?
வெட்டப்பட்ட மரங்கள்.

நிராயுதபாணியாய் நிற்கின்றோம்
இருந்தும் எங்கள் மீதும் போரா?

நீங்கள் அறுப்பது
என் அடியல்ல
உன் தலைமுறை

என் நிழலில் அமர்ந்து கொண்டே
என்னை வெட்டத் திட்டம் தீட்டுகிறாய்.

நீயும் புத்தனாகு
போதி மரமென்று தப்பித்து கொள்வேன்.

என் சந்ததியின் அழிவில்
மீண்டும் வனமாவோம்.
பாவ வனமாவோம்.

எங்களுக்கும் குருதி இருந்திருந்தால்
சமுத்திரமும் சிவப்பாகிப்
போயிருக்கும்.

என் காட்டில் உன் காலடி தடம்
என் மரணத்தின் நாள் குறிக்கும்
காலனின் தடம்.

இதுவும் கடந்து போகும்
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் தான்.

Oliyindri Perisai Poem By Adhith Sakthivel ஆதித் சக்திவேலின் ஒலியின்றிப் பேரிசை கவிதை

ஒலியின்றிப் பேரிசை கவிதை – ஆதித் சக்திவேல்




காலம் பரிசளித்த பெட்டியைத்
திறந்து பார்த்தோம் ஆவலாய்
இருள் நிரம்பி வழிந்தது

“நீரைப் போல்
உன் நினைவுகளைத்
தேக்கிக் கொள்வேன் ” என்றாய்
“மேகங்கள் இன்றி வானம் அழும்” என்றேன்

“வசந்தத்தின் ஒளிரும் பச்சை
மேகங்களில் உலவும் சாம்பல்
மலர்களின் அந்தரங்க மகரந்தம்
நிலவின் குளிர்க் கிரணங்கள்

இவை இணைந்து மிதக்கும்
இசைக் கோர்வை ஒன்று உருவாக்கிக்
கடவுச் சொல்லைக் கொடு
பின்னர் பிரியலாம்

உயிரில் கலந்திடும்
இசையின் நேசம்
தீச்சுடராய் அதன் பிரகாசம்
நீ இல்லா பயணத்தில்
ஒளியூட்டும் வழித்துணையாய்
உன் நினைவுகளைக் கால வரிசையில்
கவிழ்த்துக் கொட்டி

சிந்தும் இசைத் துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கும் உன் உயிர்
என் நினைவுகளின் உயிராய்

வெப்பம் உமிழும் மணலாய்
என் பாலையின் பூக்கள் சுடாது
நீ தரும் தீரா இசையின் ஈரமாய்
இதழ்களில் நீ இருக்கும் வரை”
என்றாய் இறுதியில்

ஒலியற்றவற்றை
இசையாக்கக்
கற்றுக் கொடுத்த
உன் புன்னகையை
நீ சொன்னவற்றோடு
கலந்து வார்த்தேன்
உன் உயிரில் வழியும்

அப்பேரிசை
ஆதித் தேன் துளிகளாய்
கடலளவு அன்பை
சுண்டக் காய்ச்சியதில் திரண்ட
நீயே அதன் கடவுச் சொல்
மறப்பினும்
உன் வாசம் சூழ்ந்த
என் கல்லறையை
எளிதில் அடையாளம் கண்டு கொள்வாய்

Indian Love Poem By Navakavi. நவகவியின் இந்தியக் காதல்! கவிதை

இந்தியக் காதல்! கவிதை – நவகவி




கத்திமேல நடக்குதப்பா இந்தியக் காதல்- அது
பாலைவன வாழ்வில்சின்னஞ் சிறிய தூறல்!
சத்து அற்ற சவலைப் பிள்ளை!
நித்த நித்தம் அதற்குத் தொல்லை!
(கத்தி)
சாதி எனும் சுவர் மீது
காதல் எனும் பூனைஅது
எந்தப்பக்கம் தாண்டினாலும் சாக்கடை!
ஏதுங்க பாலடை?
ரொம்ப ரொம்ப எம்பி எம்பி
குதித்தால்தான் அதற்கு தம்பி
கிடைக்குது சிலநேரம் தேனடை!
தகருது மனத்தடை!
இந்தியக் காதல் ஒரு பேப்பர் ஜிகினா!
தங்க ஜிகினா இல்லை தகர ஜிகினா!
கோத்திர மூத்திரத்தில் சமைத்திடும் குருமா!
மூக்குல மோந்துபார்த்தா வாசனை வருமா!
சாதி-கூண்டுக்குள்ள
காதல்- மாட்டிக்கொள்ள
கூண்டினையே வானம்இன்னு நெனைக்கிறான்!
ஒட்டடையே நட்சத்திரமா மயங்குகிறான்!
கூமுட்டைய அடைகாத்தா
குஞ்சு பொரிக்குமா? நம்புறான்!
(கத்தி)
காலரா பேதி நோயும்
காலாவதி ஆகிப் போகும்!
ஜாதிபேதி மட்டும் இங்கே பெருக்குது!
சமத்துவம் சறுக்குது!
கழுத்துல மூணு முடிச்சு
கல்யாண தாலி முடிச்சு
தாலி முடிச்சு சாதிமுடிச்சா இறுக்குது!
சாதிபோட்ட சுருக்கிது!
ஒண்ணுரெண்டு சாதி மீறி கலியாணம்.
ஒழிவது எப்போஇந்த அவமானம்?
இந்தியக் காதல்மனம் சாதிமனம்.
கக்கூசில் கூட இருக்கு ஜாதிமலம்!
அட -பொய்யி நெல்ல
குத்தி- பொங்க வச்சி
சாஸ்திர சம்பிரதாய விருந்தடா!
சப்புக்கொட்டி சாப்பிடுறான் பாருடா!
ஊறுகாயா கூட அங்கே
உண்மைக் காதல் இல்லடா!
(கத்தி)